Jump to content

அழியும் கடல்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகள்! வழிகாட்டும் ஆய்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழியும் கடல்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகள்! வழிகாட்டும் ஆய்வுகள்

கடலியல் ஆய்வு

எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாதுகாப்பான, எதிர்த்திறன் மிகுந்த வளம்மிக்க கடல்களை விட்டுச்செல்லப்போகிறோமா அல்லது மீட்டெடுக்கவே முடியாத மோசமான நிலையில் அவற்றைப் போட்டுவிட்டு போகப்போகிறோமா?

காலநிலை அவசரமும் அதனால் வேகமாகும் புவி வெப்பமயமாதலும், முதலில் பாதிப்பது பூமியின் கடல் பகுதிகளையும் கடல்வாழ் உயிரினங்களையும்தான். அந்தப் பாதிப்பிலிருந்து கடலையும் கடலின் சூழலியல் சமநிலையையும் 2050-ம் ஆண்டுக்குள்ளாகவே மீட்டெடுக்க முடியும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

நம்மிடம் தகவல்கள் இருக்கின்றன. அறிவு இருக்கிறது. தேவையான கருவிகளும் இருக்கின்றன. செயல்படவேண்டியது மட்டுமே பாக்கி...
பேராசிரியரும் ஆய்வாளருமான கார்லோஸ் டுவார்டே, ஆய்வுக்குவின் துணைத்தலைவர்
எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாதுகாப்பான, எதிர்த்திறன் மிகுந்த வளம்மிக்க கடல்களை விட்டுச்செல்லப்போகிறோமா அல்லது மீட்டெடுக்கவே முடியாத மோசமான நிலையில் அவற்றைப் போட்டுவிட்டு போகப்போகிறோமா என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யவே வழியின்றி நாம் விழிபிதுங்கிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் பெருநிறுவனங்களும் மேற்கத்திய நாட்டு மக்களும் கடல் பகுதிகளை மேன்மேலும் சீரழித்துக்கொண்டேயிருக்கின்றனர். இந்நிலையில்தான், இவை அனைத்திலிருந்தும் பெருங்கடல்களைக் காப்பாற்ற இந்த சர்வதேச ஆய்வாளர்கள் குழு திட்டம் தீட்டியுள்ளது. ஆனால், அதற்கு சில கடுமையான, நீண்டகாலத்திற்கான செயல்திட்டம் அவசியம் என்றும் கூறுகிறார்.

 

இந்த செயல்திட்டத்தை உருவாக்க உதவியது, ஹம்ப்பேக் என்றழைக்கப்படும் ஒரு திமிங்கில வகை. 1960-களில் கிட்டத்தட்ட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பின்னர் பல்வேறு கடினமான பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பிறகு, 2015-ம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது. ஓர் உயிரினத்தைப் பாதுகாப்பது, அதன் வாழ்விடத்தை மீட்டுருவாக்குவது, மாசுபாட்டைக் குறைப்பது, பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டைக் குறைத்து, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற மிகப்பெரிய வேலைகள் நம்முன் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் திட்டமிட்டு ஒவ்வொன்றாகச் செய்தாக வேண்டும்.

 

ஹம்ப்பேக் திமிங்கிலம்

 

"உலக நாடுகளின் ஒற்றுமையான செயல்பாடுகளும் பொருளாதார வளங்களை நீண்டகாலத்திற்கான நிலைத்தன்மையோடு பயன்படுத்துவதும்தான் நமக்கு வெற்றியைப் பரிசளிக்கும்!"
என்ற எச்சரிக்கையோடு அந்த ஆய்வுக்கட்டுரையை முடித்துள்ளனர்.
பெருங்கடல்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்காக, ஆண்டுக்கு 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்று கணக்கிட்டுள்ளனர். இவ்வளவு செலவு இருந்தாலும்கூட, இதில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்குமே 10 டாலர்கள் திரும்பக் கிடைக்கும் என்பதையும் ஆய்வுக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

"நம்முடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு ஆரோக்கியமான கடல் மற்றும் கடல் சூழலியலை வழங்க நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது. நம்மிடம் தகவல்கள் இருக்கின்றன. அறிவு இருக்கிறது. தேவையான கருவிகளும் இருக்கின்றன. செயல்படவேண்டியது மட்டுமே பாக்கி..." என்று குறிப்பிட்டுள்ளார், ஆய்வுக்குழுவின் துணைத்தலைவரான கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆய்வாளருமான சவுதி அரேபியாவைச் சேர்ந்த கார்லோஸ் டுவார்டே.

கார்லோஸ் டுவார்டே சொல்வதுபோல், நம் எதிர்காலத் தலைமுறைகளுக்காக கடல் சூழலியலைப் பாதுகாக்கத் தேவையான செயல்திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்தாமல், அவர்களுக்கு தரமற்ற, மோசமான நிலையில் கடல்களைக் கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நேச்சர் இதழில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, பூமியின் கடல் வாழ்வியலை 2050-க்குள் மீட்டுருவாக்க, அழிந்துகொண்டிருப்பதை மீட்டெடுக்க என்னென்ன நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கூறுகின்றது.

கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை, அவற்றின் வாழ்விடம், சுழலியல் அமைப்பு, கடந்தகாலச் சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகள், நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் போன்றவற்றை அந்த ஆய்வுக்கட்டுரை பட்டியலிட்டுள்ளது. மனிதர்கள், கடந்த சில பத்தாண்டுகளாக, கடல் வாழ்வியலின் மோசமான அளவில் தலையிட்டு மாற்றியமைத்திருக்கிறோம். இருப்பினும்கூட, கடலின் சூழலியல் அதற்கு எதிராகக் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்த்தும் செயலாற்றியிருக்கின்றன என்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. 124 கடல்வாழ் பாலூட்டி வகைகளின் எண்ணிக்கை 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 20-ம் நூற்றாண்டில், பூமி கடல்வாழ் உயிரினங்களை இழந்துகொண்டிருந்த வேகம், தற்போது மட்டுப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து சில உயிரினங்கள், சில சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

உதாரணம்... 1960-களில் அழிவின் விளிம்பிலிருந்து, 2015-ம் ஆண்டின்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஹம்ப்பேக் திமிங்கிலம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளும் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கான சட்டமும் சில நூறுகளில் இருந்த இந்தத் திமிங்கிலத்தின் எண்ணிகையைத் தற்போது, பல ஆயிரங்களாக உயர உதவி புரிந்தன. அன்டார்டிகாவிலிருந்து கிழக்கு ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து வரும் ஹம்ப்பேக் திமிங்கிலங்களின் அளவு, ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 1968-ம் ஆண்டின்போது அப்படி இடம்பெயர்ந்து சில நூறு திமிங்கிலங்களே வந்தன. தற்போது, சுமார் 40,000 திமிங்கிலங்கள் வருகின்றன.

வடக்கு நீர்நாய்கள் (Northern elephant seals), அவற்றிலிருந்து கிடைக்கின்ற இயற்கை எரிவாயுவிற்காகத் தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்து, வெறும் 20 வடக்கு நீர்நாய்களே எஞ்சியிருந்தன. பலகட்டப் பாதுகாப்பு முயற்சிகளினால், தற்போது அவற்றின் எண்ணிக்கை 2,00,000 ஆக உயர்ந்துள்ளது. கடலின் சூழலியல் அமைப்பும் வாழ்வியலும் இப்படி மீட்டெடுக்கப்படுவதை சற்று மேலும் துரிதப்படுத்தினால், அடுத்த 30 ஆண்டுகளில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கடல் சூழலியலில் காணமுடியும் என்று ஆய்வுக்குழுவினர் வலியுறுத்துகின்றனர். உப்பளங்கள், அலையாத்திக்காடுகள், கடல் புற்கள், பவளப்பாறைகள், சிப்பிப் பாறைகள்,கடல் பாசிகள், மீன்வளம், கடல்வாழ் பேருயிர்கள் மற்றும் ஆழ்கடல் வளம் ஆகியவற்றை மீட்டெடுக்கவும் மீட்டுருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், கடல் பகுதிகளை நாம் மீட்டுருவாக்கிவிட முடியும்.

 

இவற்றை மீட்டெடுக்க, சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவை, புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு கடல் தாவரங்களை அறுவடைசெய்தல், அவற்றுக்குத் தேவையான இடத்தை ஒதுக்கிப் பாதுகாத்தல், வாழ்விடங்களை மீட்டுருவாக்குதல், மாசுபாட்டைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டைக் குறைத்தல். கடல் வாழ்வியலை, அதன் சூழலியல் சமநிலையை மீண்டும் கட்டமைப்பது என்பது, மனித இனத்தின் முன் நிற்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சவால்தான். ஆனாலும், சாத்தியமற்ற காரியம் கிடையாது. நிலைத்தன்மையுடைய எதிர்காலத்திற்கான புத்திசாலித்தனமானதொரு பொருளாதாரத் திட்டமாகவும் இதை நாம் கருதலாம். அத்தகைய பலன்களை இந்த மீட்டுருவாக்கம் நமக்கு எதிர்காலத்தில் கொடுக்கும்.

பவளப்பாறைகள்

 

இந்த நடவடிக்கைகளை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பாக, நலன்களாக வடிவமைக்க வேண்டும். இதன்மூலம், பூமிக்கும் மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும். திட்டமிட்டபடி, இந்த நடவடிக்கைகளை மக்களின் உதவியோடு முன்னெடுத்தால், ஏற்பட்டிருக்கும் சேதங்களை, கடல் வாழ்வியலை ஒரேயொரு மனிதத் தலைமுறைக்குள்ளாகவே, அதாவது அடுத்த 30 ஆண்டுகளுக்கு உள்ளாகவே நம்மால் சரி செய்துவிட முடியும். வெப்பமண்டலங்களில் அமைந்துள்ள பவளங்களை மீட்டெடுப்பதில் தற்போதைய காலநிலை மாற்றம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அவற்றை முற்றிலுமாகச் சரிசெய்ய முடியாமல் திணறுகிறோம். இந்நிலையில், இந்த செயல்திட்டத்தை சாத்தியப்படுத்த வேண்டுமெனில், நாம் இன்னொரு சிக்கலையும் சரிசெய்தாக வேண்டும். நேச்சர் ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச செயல்திட்டம் சாத்தியப்பட வேண்டுமெனில், அதற்கு நாம் பாரீஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைந்தாக வேண்டும். அப்போதுதான் இது சாத்தியப்படும்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, சர்வதேச அளவில் இந்தப் பாரீஸ் உடன்படிக்கை, 2015-ம் ஆண்டு முதன்முதலில் கையெழுத்திடப்பட்டது. புவியின் தட்பவெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்ஷியஸுக்கும் மேலாக அதிகரிக்காமல் தடுக்க வேண்டுமென்று முடிவுசெய்தது. அதேநேரம், இருக்கின்ற வெப்பநிலையை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு உள்ளாகவே வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரண்டாவது பெரிய பசுமைஇல்ல வாயு வெளியீட்டாளரான அமெரிக்கா-பாரீஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி சமீபத்திய மாநாடுகளில் புவி 1.5 டிகிரியைக் கடந்து வெப்பமடைந்துகொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியின் 25 சதவிகிதப் பகுதிகளில் வெப்பநிலை வேகமாக அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

 

அழியும் கடல் சூழலியல்

 

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நான்கு இலக்குகளை பாரீஸ் உடன்படிக்கை நிர்ணயித்தது.

புவியின் வெப்பநிலை 2 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது.

வெப்பநிலை 1.5 டிகிரிக்கும் கீழே குறைய, கட்டுப்படுத்த செயல்பட வேண்டும். அதுவே, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை, இழப்புகளைக் குறைக்கும் என்று கூறப்பட்டது.

அதைச் சாத்தியப்படுத்த, அரசுகள் சர்வதேச அளவிலான பசுமை இல்ல வாயு வெளியீட்டை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். இதற்கு, சில காலம் தேவைப்படும் என்றாலும், செய்வோம் என்று பாரீஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன.

அதேநேரம், விரைவாக வெப்பநிலையைக் குறைக்க என்னென்ன செய்ய வேண்டுமென்று கண்டுபிடிக்கத் தேவையான காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த இலக்குகளில் ஒன்றைக்கூட முழுமையாக உலக நாடுகள் பின்பற்றவில்லை. கரிம வெளியீடு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கடல் அமிலமயமாதல் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. புவியின் வெப்பநிலை, நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த, பாரீஸ் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட ஒரேயொரு இலக்கையாவது முழுமையாக சாத்தியப்படுத்தினாலே கிட்டத்தட்ட போதுமானது. பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை இயன்ற அளவுக்குக் குறைத்தாலே, வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்போது, கடல் சூழலியலை மீட்டுருவாக்க, சர்வதேச ஆய்வுக்குழு அமைத்துக்கொடுத்துள்ள இந்தச் செயல்திட்ட வடிவமும் முழுவீச்சில் பலன் கொடுக்கும்.

உலக நாடுகளும் அதில் வாழும் மக்களும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஒற்றுமையாக ஓடினால் மட்டுமே இதில் வெற்றி கிடைக்கும். அத்தகைய இலக்காக முதலில் இருக்கவேண்டியது பாரீஸ் உடன்படிக்கைதான். அதற்கு, போதுமான பொருளாதார வளங்களும் தேவைப்படுகிறது. சூழலியல், பொருளாதார, சமூக நலன்களை உள்ளடக்கிய திட்டத்தை அதற்கு வடிவமைக்க வேண்டியது அவசியம். அதுவே, பொருளாதாரப் பலன்களை நல்குவதோடு, சமூக மற்றும் சூழலியல் நன்மைகளையும் செய்யும். அதன்மூலம் சுற்றுச்சூழலும் மீட்டுருவாக்கப்படும், அதைச் சார்ந்து வாழும் மக்கள் சமூகங்களும் பலனடையும்.

இந்த ஆய்வு, 4 கண்டங்களில் ஆய்வு செய்துகொண்டிருந்த, 10 நாடுகளைச் சேர்ந்த உலகின் மிக முக்கியமான கடலியல் ஆய்வாளர்களை ஒன்றிணைத்தது. அதையே உலக அரசுகள் மத்தியிலும் செய்யும் என்று நம்புவோம்.

https://www.vikatan.com/government-and-politics/environment/its-not-too-late-for-us-to-save-the-oceans-says-scientists?artfrm=v3

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.