Jump to content

கொரொணாக் காலத்தில் விமர்சனக் குரல்களின் முக்கியத்துவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

979-7.jpg

 

இன்று பூமிப்பந்து ஒரு நோய்த்தொற்றினைச் சுமந்தவாறு உருண்டு கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கவனிப்புக் கிடைக்காத நிலையில் உலகின் பல பாகங்களிலும் இளையவர்களும், முதியவர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களையும், வாழ்வாதாரங்களினையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலே ஓர் உணவு நெருக்கடி ஏற்கனவே தோன்றிவிட்டது. இப்போது நாங்கள் கண்ணுற்றுக் கொண்டிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவ ரீதியிலான நெருக்கடியோ அதே அளவுக்கு அது ஒரு சமூகப் பொருளாதார ரீதியிலான நெருக்கடியாகவும் அமைகிறது.

எம்மை வேறுபடுத்திப் பார்க்காது, கண்ணை மூடியபடி, பொத்தாம் பொதுவாகத் தனது பீடிப்பினை எம் எல்லோர் மீதும் மேற்கொள்ளுவதற்கு வைரஸினால் முடியாது. ஏனெனில் அது நுழைந்திருக்கும் உலகிலே சிலர் ஏனையவர்களை விட அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கூடிய நிர்ப்பீடனத்தினை உடையவர்களாக இருக்கின்றனர். இந்த நிர்ப்பீடனம் ஒருவர் உட்கொள்ளும் உணவு, அவருக்குக் கிடைக்கும் ஓய்வின் அளவு மற்றும் தரம், அவர் வாழும் இடங்களில் இருக்கும் சுகாதார நிலைமை, அவருக்கு இதுவரை இருந்த‌ மருத்துவப் பாதுகாப்பு எனப் பல வழிகளிலே அவரின் மருத்துவ ரீதியிலான நிர்ப்பீடனத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்துகிறது. தேச அரசுகளினாலும், நவதாராளவாத உலகமயமாக்கலினாலும், சமூக ரீதியிலான புறமொதுக்களினாலும் உருவாக்கப்படும் இந்த மருத்துவ‍ சமூக நிர்ப்பீடனம் உலகில் அதிகாரம் மிக்கவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும், அவரவர்க்குரிய ‘சரியான’ நிலங்களில் வாழ்பவர்களுக்கும், குறித்த இடங்களிலே ‘சரியான’ கடவுளரை வழிபடுபவர்களுக்கும், ‘சரியான’ மொழிகளைப் பேசுபவர்களுக்கும் வைரசில் இருந்து பாதுகாப்பு வழங்கும் கவசமாக அமைகிறது. எனவே இந்த நெருக்கடிக்கான மருத்துவ ரீதியிலான தீர்வுகளினை இந்த நெருக்கடி எம்மைத் தேடுமாறு பணித்திருக்கும் சமூகப் பொருளாதார மாற்றுக்களில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. இந்த நெருக்கடிக்கான தீர்வுகளை  மருத்துவ ரீதியிலான தீர்வுகள் உள்ளடங்கலாக நாம் சமூகப் பொருளாதார மட்டங்களில் வைத்தும் நோக்குவது அவசியம்.

இந்த நோய்த் தொற்றின் தாக்கத்தினை உலகெங்கும் வாழும் புறமொதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான முறையில் அனுபவிப்பதற்குக் காரணமாக அமையும் கட்டமைப்புசார் அசமத்துவங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவது, கொரொணாக் காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு செயன்முறை. ஜனநாயகம், சகவாழ்வு, சமூகநீதி போன்ற மிகவும் முக்கியமான கேள்விகளை நாம் முன்வைப்பதிலிருந்து ஒரு வைரஸ் எம்மைத் தடுப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் இந்த விழுமியங்களினை நாம் கடந்த காலங்களிலே இதயசுத்தியுடனும் முன்னிறுத்தத் தவறியமையே, இன்றைய நெருக்கடியானது எல்லா நாடுகளிலும் விளிம்பு நிலையில் வாழும் மக்களினை மோசமாகப் பாதிப்பதற்கு வழிகோலியிருக்கிறது. ஒவ்வொரு பிரதேசத்திலும் கட்டமைப்பு ரீதியிலான புறமொதுக்கல்கள் எவ்வாறான வகைகளிலே இந்த நோய்த் தொற்றின் பாதைகளினை ஒழுங்குபடுத்துகின்றன என்பதனையும், அங்கெல்லாம் நாம் எவ்வாறான மாற்றுக்களைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதனையும், நாம் விளங்குவதற்கான‌ ஒரு செயன்முறையாகவே ‘விமர்சனக் குரல்’ என்ற கருத்தினை நான் இப்பதிவிலே முன்னிறுத்துகிறேன். நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசினால் வழங்கப்படும் நியாயமான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டிய அதேவேளையில், எதிர்ப்புக் குரல்களை எதற்காக மையத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு போதுமான காரணமாகவும் அமைகிறது.

களைப்பினை ஊட்டும் இன்றைய‌ தருணத்திலே, எவ்வாறான எதிர்ப்புக் குரல்கள் எம்மத்தியிலே உருவாக வேண்டும் என்பதனை, இந்த நோய்த் தொற்று இலங்கையில் ஆரம்பித்ததன் பின்னர் நான் அவதானித்து வருகின்ற சமூக, அரசியல் சம்பவங்களினை விளங்க முற்படுவதன் மூலமாக இங்கு பதிவு செய்ய எத்தனிக்கிறேன். ஒவ்வொரு நாட்டினையும், அல்லது ஒவ்வொரு பிரதேசத்தினையும் கொரொணா வைரஸ் எவ்வாறு பாதிக்கிறது என்பது அங்கு இருக்கக் கூடிய சமூக அரசியல்சார் விடயங்களிலே தங்கியிருந்தாலும், அதேபோல ஒவ்வொரு பிரதேசத்தில் உருவாகும் எதிர்ப்புக் குரல்களுக்கும் என ஒரு தனித்துவம் இருப்பினும், உலகின் பல பாகங்களிலும் இருக்கும் மக்களின் அனுபவங்களைப் பொதுவான தளங்களுக்குக் கொண்டுவரும் செயன்முறைகள் ஒவ்வொருவரும், மற்றையவரின் நிலைமையில் இருந்து சில விடயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதுடன், தற்போதைய நெருக்கடியினையும், அது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆழமான கட்டமைப்புசார் வெடிப்புக்களினைக் கொண்ட சமூகங்களையும், அரசுகளையும் சீர்செய்வதற்கு எமக்கு எவ்வாறான கூட்டுச் செயன்முறைகள் தேவை என்பதனைக் கண்டுபிடிக்கவும் உதவும்.

980-17-300x225.jpgமுதலாவதாக எமது எதிர்ப்புக் குரல் இந்த உலகளாவிய நோய்த்தொற்றினை முகாமை செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் — குறிப்பாக அரசினால் வெளியிடப்பட்டிருக்கும் — மருத்துவ மற்றும் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்கள் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களும் நெறிப்படுத்தல்களும் ஒரு வெறுமையான தளத்திலே இயங்குவதில்லை. பதிலாக அவற்றின் தாக்கமானது நாட்டின் பிரசைகளின் சமூகப் பொருளாதார நிலையத்துக்கு ஏற்ப வேறுபடுகிறது. இலங்கையினைப் பொறுத்தவரை, பொதுச் சுகாதாரத் துறையிலே அரசு போதியளவு நிதியினை முதலிடாமை, உள்ளூர் மற்றும் சிறு அளவிலான வியாபாரங்களின் நலனினை அரசு கருத்திலே கொள்ளத் தவறியமை, கிராமியப் பொருளாதாரம் குறித்து அரசு போதியளவு அக்கறை காட்டாமை, தொழிலாளர்களின் வாழ்க்கையினைச் சூழ்ந்திருக்கும் அபாயகரமான நிலைமைகள் போன்ற வைரசுக்கு முற்பட்ட பல காரணிகள் இந்தத் தாக்கத்தினை வெவ்வேறு வழிகளிலே ஒழுங்குபடுத்துகின்றன. கொரொணாவினை அடுத்து, நாடு முழுவதற்கும் சமச்சீரான முறையிலே அமுல்படுத்தப்படும் வகையில் தான் முன்னெடுப்பதாக அரசு சொல்லிக் கொள்ளும் மருத்துவ மற்றும் சட்ட நெறிப்படுத்தல்கள், இந்த வைரசுக்கு முந்தைய‌ காரணங்களினால் பக்கச்சாய்வானவையாகவும், ஏற்றத்தாழ்வுகளை மேலும் கூர்மைப்படுதுவனவாகவும் மாறிவிடுகின்றன.

 

ஒரு மருத்துவ நோக்கில் இருந்து இந்தப் பிரச்சினைகளை விளங்க முற்படுகையிலே, இந்த நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் கூடியளவு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற விடயம் அண்மையில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இலங்கை தனது மருத்துவப் பரிசோதனை நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் இவ்வாறான பரிசோதனை நிலையங்கள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்படல் வேண்டும். இதன் மூலம் கிராமங்களிலே வாழும் மக்கள் நீண்ட தூரம் பயணித்து நகரங்களில் இருக்கும் பரிசோதனை நிலையங்களை நாட வேண்டிய தேவை ஏற்படாது.

இந்த நோய்த் தொற்றினுடைய பொருளாதார விளைவுகள் இலங்கையிலே வறியவர்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும் மோசமாகப் பாதித்துள்ளன. கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால், திறந்த வர்த்தக வலயத்தில் பணி புரியும் பல தொழிலாளர்கள் நாட்டின் வேறு பகுதிகளில் இருக்கும் தமது வீடுகளுக்கு மிகக் குறைந்த அளவு பணத்துடன் அல்லது கையிலே எந்தக் காசும் இல்லாது சென்று சேர்ந்திருக்கிறார்கள். இவர்களிலே பலர் பெண்களாகவும் இருக்கின்றனர். பெருந்தோட்டங்களிலே பணிபுரிவோர் திடமான பொருளாதார உதவிகள் இன்றி கஷ்டங்களை எதிர்கொள்ளுகின்றனர். வீடுகளிலே பணி புரிந்த‌ தொழிலாளர்களும் கூடத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஊரடங்கு மற்றும் சமூகத் தூரப்படுத்தல் போன்ற செயன்முறைகள் காரணாமகக் கிராமியப் பொருளாதாரத்தின் இயக்கு விசைகளாக அமையும் விவசாயிகள், மீனவர்கள், சீவல் தொழில் செய்பவர்கள் போன்றோர் தமது வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில், அவர்களால் தமது நாளாந்தப் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாதிருக்கின்றது. இவ்வாறான சமூகங்களை அரசு கைவிடும் நிலைமையினை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த விடயங்கள் தொடர்பிலே, மாற்றங்களை உருவாக்கக் கூடிய வகையிலான, அரசின் உடனடித் தலையீடுகளைக் கோருவதாக எமது எதிர்ப்புக் குரல்கள் அமைவது அவசியம்.

கோத்தபாயா ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகிக் கிட்டத்தட்ட நான்கு மாத காலப் பகுதிக்குள் இந்த நோய்த் தொற்று இலங்கையினுள் நுழைந்துள்ளது. சிங்கள பௌத்தர்களின் நாயகன், நாட்டின் இராணுவத்தினரின் காவலன் என்ற விம்பங்களுடன், கடந்த அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டு மக்கள் மத்தியிலே அதிருப்தி நிலவிய ஒரு சூழலிலே, கோத்தபாய ராஜபக்ஷ கடந்த நவம்பரிலே இலங்கையின் ஜனாதிபதியாகினார். அவருடைய பதவியேற்புக்குப் பின்னர் புதிய அரசாங்கம் நாட்டினை மேலும் இராணுவ மயமாக்கும் முயற்சிகளிலே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. உலகளாவிய நோய்த்தொற்றினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பொதுவாக இராணுவத்தினரின் பார்வையின் கீழ் வராத பல துறைகளும், பொறுப்புக்களும் தற்போது இராணுவத்தின் நேரடித் தலையீட்டுக்குள் வரும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன‌. அண்மையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தோரின் நடமாட்டங்களைக் கண்காணித்தல், மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் போன்ற பொறுப்புக்களை இப்போது இராணுவமும் மேற்கொண்டு வருகிறது.

எட்டுத் தமிழ்ப் பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக நாட்டின் நீதிக்கட்டமைப்பினால் தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் ஒருவருக்கு இந்த நெருக்கடிச் சூழலினைப் பயன்படுத்தி நாட்டின் ஜனாதிபதி விசேட மன்னிப்பினை வழங்கியிருக்கிறார். நோய்த்தொற்றின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது மேலும் விரிவாக்கப்பட்ட அரசினுடைய‌ கண்காணிப்புக் கட்டமைப்புக்கள் நோய்த்தொற்றின் முடிவின் பின்னரும் கூடத் தொடரலாம். அவை எதிர்காலத்தில் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குவதற்குக் கூடப் பயன்படுத்தப்படலாம். ஜனநாயகத்தினைத் தக்கவைப்பதற்கு அல்லது ஜனநாயகம் என்ற விடயத்தினைக் குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் மட்டத்திலாயினும் இந்த நெருக்கடிக் காலப்பகுதியிலே பாதுகாப்பதற்கு, இந்தப் போக்குகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் குரல்கள் மிகவும் அவசியம். இன்று இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மேற்சொன்னவாறான பொறிமுறைகளிலே பல அவசியமானவையாக இருப்பினும், அவற்றின் உடனடி மற்றும் எதிர்கால வகிபங்கு குறித்து நாம் அரசினைப் பொறுப்புக்கூறலுக்கு உடபடுத்துவது மிகவும் அவசியம்.

 

இலங்கையின் தென்பகுதியில் தொழிற்படும் சிங்கள தேசியவாத சக்திகளும், வட இலங்கையிலே இருக்கும் பிற்போக்குத் தன்மை மிக்க‌ இந்து/சைவக் கருத்தியலினை முன்வைக்கும் சில‌ சக்திகளும் முறையே முஸ்லிம்களும், கிறீஸ்தவர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டும் வகையில், இந்த இரு சிறுபான்மைச் சமூகங்களையும் ஒட்டுமொத்தமாகக் குறைகூறும் வெறுப்புப் பிரசாரங்களிலே ஈடுபட்டு வருகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு எதிரான வகையிலே, அரசு இந்த வைரஸ் தொற்றின் காரணமாக இறந்த முஸ்லிம் நபர் ஒருவரின் உடலினை அடக்கம் செய்வதற்கான உரிமையினை மறுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றினால் இறந்த யாவரினதும் உடலங்கள், அவர்களது மத நம்பிக்கைகளைப் பற்றிக் கருத்திலெடுக்காத வகையிலே, கட்டாயமாகத் தகனம் செய்யப்பட வேண்டும் என அரசு ஒரு சுற்றுநிருபத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளது.

சிறுபானமைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களிலே அரசினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் போதிய அளவிலோ அல்லது முற்று முழுதுமாகவோ கிடைக்கவில்லை என்ற முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல்லினங்களும் வாழும் வட பகுதியிலே அரசின் இந்தப் புறக்கணிப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் பதில் நடவடிக்கைகளில் ஒரு பகுதி தமிழ்த் தேசிய ரீதியிலானதாக அமைகின்றது. தமிழ் மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தும் இந்த மாற்று நடவடிக்கைகள், வடக்கில் சிறுபான்மையாக வாழும் தமிழரல்லாத மக்களினையும் இந்த நோய்த்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி பாதித்திருக்கிறது என்பதனைக் கவனிக்கத் தவறுகின்றன. இவ்வாறான பெரும்பான்மைவாதப் போக்குகள் இந்த நோய்த்தொற்று இன, மத ரீதியிலே மக்களைப் பிளவுபடுத்துகின்ற ஒரு நெருக்கடியாக இலங்கையிலே உருவாகுவதற்கு வழிசெய்திருக்கின்றன‌. இவ்வாறான சூழலிலே எமது எதிர்ப்புக் குரல்கள் இந்த நெருக்கடியினைப் பயன்படுத்தித் தமது குறுகிய, பிளவூட்டும் இலக்குகளை எய்தும் வகையில் அரசினாலும், அரச சார்பற்ற தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கேள்விக்குட்படுத்தவனவாக அமைவது அவசியம்.

 

இந்த உலகளாவிய நோய்த் தொற்றுப் போன்ற நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் அவற்றினை மேலும் பலமான‌ முறையில் எதிர்கொள்ளுவதற்கு அவசியமான மாற்றுக் கட்டமைப்புக்களைப் பற்றி சிந்திப்பதற்கும் கூட‌ விமர்சனக் குரல்களும், மாற்றுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் இன்றைய தருணத்திலே அவசியமாகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளிலே பொருளாதார ரீதியிலே ஒடுக்கப்பட்ட மக்களையும், தொழிலாளர்களையும், ஆவணங்கள் அற்ற நிலையில் வாழும் புலம்பெயர்ந்தவர்களையும் இந்த வைரஸ் தாக்கம் மோசமாகப் பாதிப்பதற்கு, நவதாராளவாத உலகமயமாக்கலினை அடிப்படையாகக் கொண்ட‌ பொருளாதாரமும், பிறநாட்டவர்கள் மீதான வெறுப்பினை உருவாக்கும் குடியுரிமைச் சட்டங்களும் பிரதான காரணங்களாக அமைகின்றன. இவ்வாறான மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசு காலங்காலமாக மறுத்து வந்திருக்கின்றது.

மறுபுறத்தில் பூகோளமயத்துடன் தொடர்புபட்ட‌ எந்த விடயத்தினையும் சந்தேகத்துடன் வெறுப்புடனும் பார்க்கின்ற ஒரு நிலைமை, இந்த நோய்த் தொற்றினை அடுத்து, இலங்கை உள்ளடங்கலான‌ பல நாடுகளிலே ஏற்பட்டிருக்கின்றது. உள்ளூர்வாசிகளாக மாற வேண்டும், உள்ளூர்ப் பொருளாதார முறைகளையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பு இன்று பலர் மத்தியிலே அவதானிக்கப்படுகின்றது. விளிம்புநிலை மக்களின் இருப்புப் பறிபோவதற்குக் காரணமாக இருக்கின்ற சுரண்டுகின்ற தன்மை மிக்க உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு மாற்றாக பொருளாதார ரீதியிலான தன்னிறைவு மற்றும் சுயதேவைப் பொருளாதாரம் போன்ற சிந்தனைகள் இன்று முன்னிறுத்தப்படுகின்றன. உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குவது மூலமும், விவசாயப் பொருளாதாரத்தினைப் புத்துயிர்ப்புச் செய்வதுவும் மிகவும் நன்மை பயக்கக் கூடிய விடயங்களாக இருக்கின்றன.

ஆனால் தன்னிறைவுப் பொருளாதாரம், சுயதேவைப் பொருளாதாரம் போன்ற கருத்தியல்கள் இலகுவில் புறமொதுக்கும் சக்திகளாகவும், குறுகிய தேசியவாத, கலாசாரவாதச் சிந்தனைகளாகவும் மாறக் கூடிய அபாயங்களையும் இன்று நாம் எதிர்கொள்ளுகிறோம். சுயத்தினையும், தன்னிலையினையும் நாம் இறைமையற்றவையாகவும், பகிர்வு என்ற அடிப்படையில் நோக்கும் போதும், அவற்றினைக் கலாசார, மத, இன மொழி ரீதியிலான பன்மைத்துவங்களுக்கு இடம்கொடுக்கும் ஒரு நிலையங்களாக‌ நோக்கும் போதும், வரலாற்றினை விளங்கிக்கொள்ளாது பிற்போக்குவாதிகளினால் உருவாக்கப்படும் தூய்மைவாதங்களில் இருந்து விடுதலை செய்யும் போதும் மாத்திரமே தன்னிறைவு, சுயதேவைப் பொருளாதாரம் போன்ற விடயங்கள் விடுதலைக்குரிய மாற்றுக்காளாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பலம் சேர்ப்பனவாகவும் அமையும். தன்னிறைவில் இருக்கும் தன்னிலை என்பது புலம்பெயர்ந்தோருக்கும், சிறுபான்மையினருக்கும், தேச மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து சென்று பல்வேறு இடங்களுக்கும் சென்று உழைக்கும் மக்களுக்கும் எதிரான உணர்வுகளையும், மனநிலையினையும் எம்மத்தியிலே உருவாக்கும் ஒரு கருத்தியலாக அமையுமாயின், தன்னிறைவு என்ற சிந்தனை இவ்வுலகில் வாழும் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பயன்படாத ஒரு தோல்வியடைந்த சிந்தனையாகவே அமையும்.

இன்று இருக்கும் சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்புக்கான மாற்றானது ஏற்கனவே பலமாக‌ இருக்கும் சுரண்டல் தன்மைமிக்க நாடுகடந்த முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும், தன்னிறைவு என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் குறுகிய சுதேசவாத மாற்றுக்களுக்கு எதிர்வினையாற்றக் கூடியதாகவும் அமைவது அவசியம். பல்வேறு அசமத்துவங்களுக்கு மத்தியிலும், எமது தப்பிப் பிழைத்தலுக்காக நாம் தனிநபர்களாகவும், சமூகங்களாகவும் மற்றவர்களிலே தங்கியிருக்கிறோம் என்பதனைக் கொரொணா வைரஸும் அதனால் ஏற்பட்ட நெருக்கடியும் எமக்குக் கற்பித்துள்ளன. எதிர்காலம் குறித்துச் சிந்திக்கையிலே, கியூபா நாட்டு மருத்துவர்கள் இத்தாலியின் மருத்துவத் துறைக்கு இந்த நெருக்கடியான காலத்திலே உதவிகளை வழங்கியமை போன்ற அரசுகளுக்கு இடையிலான முற்போக்கான‌ ஒத்துழைப்புக்களையும், கூட்டுச் செயற்பாடுகளையும் கூட நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நோய்த்தொற்றினை அடுத்து உலகின் பல பாகங்களில் இருந்தும் ஓங்கி ஒலிக்கும் ஒரு முற்போக்கான‌ குரலானது, இந்த உலகம் பூராவும் அனைவருக்கும் இலவசமான முறையில் மருத்துவ வசதிகள் கிடைக்கும்படியான கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. இலங்கையினைப் பொறுத்தவரை இங்கு இருக்கும் இலவச அரச மருத்துவத் துறையானது இந்த நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலே அதனை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளும் ஒரு மனப்பக்குவத்தினை நாட்டு மக்களுக்கும், மருத்துவத் துறையிலே பணியாற்றுவோருக்கும் வழங்கியிருக்கிறது. எனினும், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்திலே எமது மருத்துவக் கட்டமைப்புப் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடும் என்ற எதிர்வுகூறல், இலங்கையின் அரசு நாட்டின் இலவச மருத்துவத் துறையினை மேலும் விருத்தி செய்யும் நடவடிக்கைகளிலே எதிர்காலத்திலே ஈடுபட வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த உலகத்தின் ஆரோக்கியத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், வளங்களையும், செல்வங்களையும், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நன்மைகளைக் கருத்திலே கொண்டு மீள்பகிருவது அவசியம் என்பதனை இந்த நோயினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி எமக்கு வலியுறுத்துகிறது. இன்னொரு வகையிலே சொல்லப் போனால், பகிருதல், ஒருவரை ஒருவர் கவனித்தல், பராமரித்தல், மற்றும் மீள்பங்கீடு செய்தல் போன்ற கூட்டுச் செயன்முறைகளின் மூலமாக ஒரு புதிய உலக ஒழுங்கினைக் கட்டியெழுப்புவது முதன்மைப்படுத்தப்படல் வேண்டும். இந்த மாற்று உலகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு மாற்றுக் கருத்துக்களும், ஆரோக்கியமான விமர்சனங்களும், எதிர்ப்புக் குரல்களும், ஜனநாய வெளிகளும் இந்தக் கொரொணாக் காலத்திலும் கூடத் தேவைபபடுகின்றன.

How to Dissent During a Pandemic: Reflections From Sri Lanka என்ற தலைப்பில் இந்தியாவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் த வயர் என்ற இணைய ஊடகத்திலே கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று வெளியாகி இருந்த கட்டுரையின் தமிழாக்கம்.

மகேந்திரன் திருவரங்கன் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஆங்கிலத் துறை விரிவுரையாளராக இருக்கிறார்.

 

http://thinakkural.lk/article/38821

 
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.