Jump to content

திரு கந்தையா ஆனந்தநடேசன- மிருதங்க ஆசிரியர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, fire, night and text

திரு கந்தையா ஆனந்தநடேசன(London) இன்று 16/04/20 எம்மை எல்லாம் விட்டு கொடிய கொரோனா வைரஸால்  இறைவனடி சேர்ந்துவிடடார் மிகவும் சிறந்த மிருதங்க ஆசிரியராக எண்ணற்ற நல்ல மாணவர்களை
உருவாக்கிய மனிதநேயம் மிக்க மாஸ்டரின் இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. எல்லோருடனும் அன்பாக பழகும் பண்பாளர். அன்னாரது புனித ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . அவரது குடும்பத்தார்,மாணவர்கள், பெற்றோர், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரை பற்றிய சிறு குறிப்புகள் முக புத்தகத்தில் இருந்து: 

Mano Sinnathurai எழுதியது
தூங்காத கண்ணென்று ஒன்று..
*****************************************
ஆனந்தனிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. அது எல்லோரையும் கவர்ந்தது. ஆனந்தனிடம் குறும்புத்தனம் இருந்தது. அது எல்லோரையும் ரசிக்கவைத்தது. ஆனந்தனிடம் கலை இருந்தது. அது எல்லோரையும் அவன்பால் ஈரத்தது.
அவன் ஒரு கலைஞன். அவன் பேச்சில் கலை இருந்தது. அவன் கரகரத்த ஆனால், ஆளுமையான குரலில் சிரிக்கும்போது அந்த கபடமில்லாத சிரிப்பு எல்லோரையும் தொற்றிக்கொண்டது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தான். அவனுக்குச் சிரிக்கமட்டுமே தெரிந்திருந்தது. அவன், ஆடினான், பாடினான், நடித்தான். அவன் எல்லாமுமானான்.
பள்ளிக்காலத்தில் எங்கள் நாயகன் அவன். அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருந்தது - அவனது நகைச்சுவைப்பேச்சை ரசிப்பதற்காக.
அவன் மேசையில் மேளமடித்தபோது நாங்கள் பாடினோம். அவனது விரல்கள் எங்களை பாடவைத்தன. அவன் படம்பார்த்துவிட்டு அடுத்த நாள் எங்களுக்கு படக்கதை சொன்னான். ஒரு காட்சிகூட தவறாது. நாங்கள் படம் பார்த்த லயிப்பில் மூழ்கினோம்.
அவனுக்கு பல சாப்பாட்டுக்கடைகளில் கொப்பி இருந்தது. நாங்களும் வயிராற உண்டோம். அவனுடைய அண்ணா லண்டனிலிருந்து பணம் அனுப்பினார். அவன் கொப்பிக் கடன்களை நேர்த்தியாக தீர்த்தபடி தொடர்ந்தான்.
எங்கள் வகுப்பு குழப்படிகார வகுப்பு என்று பெயரெடுத்திருந்தது. குழப்படிகள் பல ரகங்களில் இருந்தன. ஒரு தடவை எங்கள் வகுப்பில் முழுப்பேரும் சேர்ந்து மொட்டை அடித்தோம். ஆனந்தனின் மொட்டை அழகாக இருந்தது. அப்போது அவன் சிரேஷ்ட மாணவ தலைவனாகவும் இருந்தான்.
எங்கள் வகுப்பில் ஒருசிலரே மதியச்சாப்பாட்டை கொணர்ந்தார்கள். அதில் அநேகம் பெண்கள்தான். அநேகமாக இரண்டாம் பாடம் முடியமுன்னரே சாப்பாட்டுப்பார்சல்கள் திருடித் தீர்க்கப்பட்டன. மதியம் ஆனந்தன் எல்லோருக்கும் பட்டர் பாண் வாங்கிக்கொடுத்தான்.
ஆசிரியர் இல்லாத வேளைகளில் தும்புத்தடிகளை தூக்கிப்பிடித்தபடி கிற்றார் வாசித்தோம். அதிபர் கனக்ஸ் பின்னால் வந்து பிடரியில் நாலு போட்டார். அதற்கும் ஆனந்தன் சிரித்தான். மாறி மாறிச்சிரித்தோம். கனக்ஸ் களைக்கும் மட்டும் அடித்தார்.
பாடசாலைக்காலம் முடிந்த பின்பும் நட்புகள் தொடர்ந்தன. பழைய படங்களை தேடித் தேடிப்பாரத்தோம். பார்மகளே பார், அவள் பறந்து போனாளே பாட்டுகள் எல்லோராலும் ரசிக்கப்ட்டன.
ஆனந்தன் காதலித்தான். தூங்காத கண்ணென்று ஒன்று என்ற பாடல் அவனது காதல் தூதாக இருந்தது. பாடசாலைக் காலம் முடிய அவன் கச்சேரிகள் செய்யத் தொடங்கியிருந்தான்.
பாடித்திரிந்த பறவைகள் திக்கொன்றாய் சிதிறின. உலகப்பந்தின் ஒவ்வொரு மூலைகளில் ஒவ்வொன்றாய் சிதறினோம். ஆனந்தன் லண்டன் வந்தான். படித்தான். கணக்காளரானான். மிருதங்கம் அவன் வாழ்விற்கு ஒரு அர்த்தம் கொடுத்தது. அவன் அரவணைப்பில் கலைஞர்கள் உருவானார்கள். அவன் தன் பிள்ளைகளையும் அத்துறையில் நாட்டமுறச் செய்தான். நாமும் பெருமை கொண்டோம்.
இலத்திரனியல் தொழில்நுட்பம் தந்த வரத்தால் நாங்கள் மீண்டும் இணைந்தோம்.
எங்கள் வகுப்புத் தோழர்கள் எங்கள் குழுவுக்கு 'பனங்கொட்டைகள்' என்று பெயரிட்டோம். சிலர் முகம் சுழித்தனர். ஆனாலும் பலர் உறுதியாய் இருந்தோம். பனங்கொட்டைகள் என்பதை
பலரும் இழிவாக பார்க்க நாங்கள் பெருமையாய் போரத்திக்கொண்டோம்.
எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் மில்க்வைற் கனகராஜா அவர்களுக்காக பனங்கொட்டைகள் பொறுக்கிக் கொடுத்தோம். எங்கள் குழு ஏழாயிரம் பனங்கொட்டைகள் சேர்த்துக் கொடுத்தது. எங்கள் குழுவில் ஆனந்தனும் இருந்தான். எங்களுக்கு பனங்கொட்டைகள் பொறுக்குவது சுகமான சுவையாக இருந்தது. அம்பனைக்குளம், சேற்றில் வழுவழுத்தது. அதற்குள் இறங்கி நாங்கள் பொறுக்கியபோது வழுக்கி வழுக்கி விழுந்தோம். ஆனந்தன் அந்தச் சேற்றுக்குள் நின்று ஆடிய நடனமும் அழகாகத்தானிருந்தது.
லண்டனில் எங்கள் ஒன்றுகூடலுக்கு 'பனங்கூடல்' என்று பெயர் வைத்தோம். நாங்கள் நாற்பதுபேர் ஒன்றாய் கூடினோம். ஆனந்தன் மிருதங்கம் வாசி;த்தான். குண்டுமணி வயலின் வாசித்தான். நாங்கள் மீண்டும் பாடினோம், நடித்தோம். கிரிக்கெற் விளையாடினோம்.
நான் வேகமாய் அடித்த பந்தொன்று எதிர்பாராதவிதமாய் ஆனந்தன் கையுக்கள் சிக்கியது.
அவன் திடுக்கிட்டான். திடீறென்று மகிழ்ச்சியில் ஆனந்த நடனமொன்றாடினான். அந்தக்காட்சி இப்போதும் கண்ணுக்குள் விரிகிறது.
ஆனந்தனின் வரலாறு நீளமானது. ஆனந்தனின் நட்பு வட்டம் அகலமானது. ஆனந்தனை நாங்கள் கந்தையன் என்றே அன்பாக அவனது அப்பாவின் பெயரால் அழைத்தோம். ஆனந்தன் வாழ்ந்தான். இறுதிவரை வாழ்ந்தான். அவன் கலைஞனாக அல்ல. கலையாய் வாழ்ந்தான்.
ஆனந்தா! எங்களை நீ எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தியே வைத்திருந்தாய்!
ஆனால், இப்போது??

 

 

16.4.2020

அடுத்து Shiva D Siva என்று ஆனந்தனுடன் சேர்ந்து குழப்படிகள் செய்து பின் பேராசிரியரான சிவாவின் எழுத்துக்கள். நான் அவர்களின் இரசிகனாகத்தான் இருந்தேன்

ஆனந்தநடேசன் (ஆனந்தன்) -- ஒரு நண்பனின் மீள்பார்வை
ஆனந்தன் என்று பலராலும், மிருதங்க ஆசிரியர் (Master), மற்றும் வித்துவான் என்று புலம்பெயர் சமூகத்திரராலும், அழைக்கப்படும் திரு ஆனந்தநடேசன் அவர்கள், நண்பரின் மத்தியில் "கந்தையன்" என்று அவரின் தகப்பனாரின் பெயரின் நகைச்சுவையான இடுகுறிப் பெயரினால் தான் அறியப்படுவார்.

அந்தக்காலத்தில் (ஏன் இக்காலத்திலும் கூட) தந்தையர் பெயரினை சுருக்கி பிள்ளைகளை அழைப்பது சாதாரணமான ஒன்று. அவ் வழியில் கந்தையா மாஸ்டரின் மகன் ஆனந்தன் "கந்தையன்" ஆனான். அது போல் சுப்ரமணியத்தின் மகன் நான் "சுப்பன்" ஆனேன்!
வலிகாமம் வடக்கு பிரதேச மாணவர்களுக்கு அன்றும் இன்றும் இரண்டு கற்பகவிருட்ஷங்கள் பாடசாலைகளாக இருந்தன.
முதலாவது யா/யூனியன் கல்லூரி, மற்றயது யா/மகாஜனக்கல்லூரி.

இவை இரண்டிலும் படித்தோம் என்று பெருமை பேசிக்கொள்ள ஒரு சிலரே இருந்தோம், இருக்கிறோம். நான் இவனை முதலில் கண்டது 1969ம் ஆண்டு மூன்றாம் வகுப்பில்! யூனியன் கல்லுரியில் அந்தக் காலத்தில் படித்தவர் இப்பவும் நினைவு வைத்திருக்கும் ஒரு கட்டிடம் "மலேயன் ப்ளாக் (Malayan block), கல்லூரியின் மேற்க்கு மூலையில் 2ம் விளையாட்டு அரங்கு (2nd playground)க்கு போகும் வழியில் இடதுபுறமாக இருக்கும் 3A வகுப்பு. அதில் தான் நாம் நண்பர்கள் ஆனோம்.

செல்வி சங்கரப்பிள்ளை அவர்களின் வகுப்பு, மிகவும் கண்டிப்பான ஆசிரியை. அவரிடம் அதிகம் அடி வாங்கிய இரு மாணவர்களில், என்னைத் தவிர்த்து, ஆனந்தனும் ஒருவன். குறும்புகள் செய்வதில் இருவருக்கும் வேறு நிகரில்லை.

"இந்த கந்தையனையும் சுப்பனையும் சேர்த்து விட்டால் களை கட்டும்" என்ற வாக்கியங்களை பல முறை நாம் ஒன்றாகக் கேட்டு இரசித்திருக்கிறோம்!.
இப்படியாகத் தொடங்கிய எம் நட்பு 1975ம் ஆண்டு எமது 9ம் வகுப்பு வரை யூனியன் கல்லூரியில் நீண்டது, அக்காலத்தில் நாம் கதிரைஆண்டி, நவரத்தினம், சிவலிங்கம், சின்னத்தம்பி, சங்கரப்பிள்ளை (Principal) போன்ற பல மாஸ்ட்டர்களிடம் படித்தோம் (என்று சொல்வதிலும் பார்க்க அடி வாங்கினோம் என்று சொல்வதே சாலச்சிறந்தது.)

பாடசாலையில் சங்கீதத்தினை ஒரு பாடமாக எடுத்த ஒரு சில மாணவர்களில் நாங்களும் இருவர். ஆனாலும் ஆனந்தன் அந்தச் சிறு பருவத்திலேயே மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொண்டான். அதை மேசைகளில் அடித்து மாணவ மாணவியரின் கவனத்தினையும், அதனால் ஆசிரியர்களின் அடிகளையும் வாங்கியிருக்கிறான்.

பின் 9ம் வகுப்பில் அவன் மஹாஜனக்கல்லூரிக்கு இடம் மாறிச் சென்றுவிட்டடான்.
NCGE எனப்படும் புதிய கல்வித்திடத்தில் முதல் மாணவர் பிரிவில் நான் யூனியன் கல்லுரியிலும், அவன் மகாஜனக்கல்லூரியிலும் கல்வி தராதர சாதாரண பரீடசைக்கு தோன்றினோம். பின் HNCEக்கு நான் என் நண்பனை நாடி மகாஜனக்கல்லூரிக்குச் சென்றேன். அந்தக் காலத்தில், எனக்கு ஒரு நல்ல, நண்பனாக, அண்ணனாக, அறிவுரையாளனாக இருந்தான். ஒன்றாகவே படித்தோம், அவன் கணித வகுப்பு, நான் உயிரியல் வகுப்பு, இரண்டுக்கும் நடுவே ஒரு தகரத்தினாலான பிரிப்புத்தடை (divider).

அந்த தடையில் ஒரு ஓட்டை போட்டு எமது நட்ப்பு மேம்பட்டது. பாடசாலையில் படித்துக்கொண்டே இன்ன பிற விளையாட்டுக்களான கராத்தே, கபடி என்று பல விளையாடியிருக்கிறோம். அதை இன்று நினைத்தாலும் சந்தோசமே! நட்ப்பினை மதிப்பது ஆனந்தனின் ஒப்பற்ற பண்பு, தன் உயிரினைக் கொடுத்தாவது நண்பர்களை பாதுகாப்பவன் அவன். அன்றும் சரி, இன்றும் சரி. புலம் பெயர்ந்து உலகளாவிய புகழ் அடைந்த போதிலும் அவன் நட்ப்பினை மதித்தான். நகைசுவை உணர்வுடன் எல்லாரையும் சிரிக்க வைத்தபடியே இருப்பவன்.

நீண்ட நாட்களின் பின் 2018ம் ஆண்டு NCGE ஒன்றுகூடலில் ஒரு வாரம் அவனுடன் தங்க கிடைக்கப்பெற்றது ஒரு பேராந்தம்.

இன்று அவனில்லை! எதற்கும் வசியப்படாத அவனை ஒரு சிறு வைரஸ் காவு கொண்டு சென்றுவிட்டது. சென்று வா நண்பனே! மீண்டும் ஒரு முறை உன்னைச் சந்திப்பேன்.....அது சொர்க்கமாக இருந்தாலென்ன, நரகமாக இருந்தாலென்ன! நம் இருவரின் சேருமிட இலக்கு ஒன்றாகதானிருக்கும் உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
உனது பால்ய நண்பன்!
சுப்பன்!

Image may contain: 1 person

https://www.facebook.com/kandiah.anandanadesan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது மனைவி  எம்முடன் இந்தியாவில் படித்தார். மிகவும் அமைதியான சுபாவம். அவரது கண்களில் எப்போதும் ஒரு சோகம் தெரியும். ஏனென்றால் அவவின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து போனதால் சொந்தக்காரர், நண்பர்கள் ஆதரவில் அவாவும் அக்காவும் வளர்ந்தார்கள். அக்கா திருமணமாகி இந்தியாவில் இருக்கும் வேளை எதிர்பாரா விதமாக இருந்து விட்டா. கடைசியில் அவவுக்கு இருந்த ஒரே ஆதரவு கணவன் மற்றும் பிள்ளைகளே. செய்தி கேள்விப்பட்டு நாம் எல்லோரும் மிகவும் கவலை பட்டோம். இன்னும் போனில் கதைக்கவில்லை. கொஞ்ச நாள் கழித்து கதைக்கலாம் என்று இருக்கிறேன். வாழ்க்கை சிலரை மிகவும் சோதிக்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.