Jump to content

பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack)


Recommended Posts

நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் நீரிணை (Cook Strait) என்பார்கள்.

உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம். 

குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல்.

ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Indo Pacific Humpbacked Dolphin),  கிண்கிணி ஓங்கல், கண்டா ஓங்கல் (Risso), வலவம் ஓங்கல் (Pilot Whale) என ஓங்கல்களில் பலப்பல ரகம். 

இந்தநிலையில் குக் நீரிணைப்பகுதியில் கப்பல்களுக்கு வழிகாட்டியாக ஒரு கண்டா ஓங்கல் 1888ஆம் ஆண்டு திடீரெனத் தோன்றியது. நியூசிலாந்தின் தலைநகரமான வெலிங்டனில் இருந்து தெற்குத் தீவில் உள்ள நெல்சனுக்குப் பயணம் செய்த பிரிண்டில் என்ற கப்பலுக்கு அது வழிகாட்டியது. பாறைகளில் கப்பல் மோதிவிடாமல், சரியான வழியைக் காட்டியபடி கப்பலின் கூடவே அது பாந்தமாக பவனி வந்தது.

ஏறத்தாழ 13 அடி (4 மீட்டர்) நீளமுள்ள ஓங்கல் அது. வெள்ளையில் சாம்பல் நிற வரிகளுடன் காணப்பட்ட அந்த ஓங்கல் ஆணா பெண்ணா என்பது கூட தெரிய வில்லை. ஆனால் கண்டா ஓங்கல்களில் ஆண் ஓங்கல்கள் மட்டுமே 4 மீட்டர் நீளம் வரை வளரும். ஆகவே, இந்த வழிகாட்டி ஓங்கல் ஆண் ஓங்கல்தான் என்ற முடிவுக்கு கப்பல்மாலுமிகள் வந்தார்கள்.

பிரிண்டில் கப்பலுக்கு மட்டுமல்ல, அடுத்த 24 ஆண்டுகளில் நாள்தோறும் இரவும் பகலும் அந்த கண்டா ஓங்கல் அந்த வழியே வரும் அனைத்துக் கப்பல்களுக்கு வழிகாட்ட ஆரம்பித்தது. கட்டணமில்லா சேவை.

அந்த கண்டா ஓங்கலுக்கு ‘பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack) என்று பெயர் சூட்டப்பட்டது. பெலோரஸ் ஜேக் என்பது ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனத்தின் பெயர். அந்த நடனத்தில் ஆடுபவர்களைப் போலவே நமது கண்டா ஓங்கலும் சுற்றிச்சுழன்று திருநடனம் புரிந்ததால் பெலோரஸ் ஜேக் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெலோரஸ் ஜேக், ஒவ்வொரு கப்பலுடன் அரைமணிநேரம் வரை கூடவே வந்து வழிகாட்டும். சிலவேளைகளில் குக் நீரிணைப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் பெலோரஸ் ஜேக்குக்காகவே காத்திருக்கும். சில கப்பல் கேப்டன்கள் பெலோரஸ் ஜேக் வராமல் குக் நீரிணையில் பயணப்பட மாட்டார்கள்.

பெலோரஸ் ஜேக் சிலவேளைகளில் கப்பல்களுடன் 8 கிலோ மீட்டர் தொலைவு வரை கூடவே வரும். கப்பலில் இருந்து எழும் அலைகளில் சறுக்கி விளையாடும். ஆனால், குக் நீரிணையில் உள்ள பிரெஞ்சு பாஸ் என்ற பகுதிக்குள் மட்டும் அது நுழையாது. பிரெஞ்சு பாஸ் பகுதி வந்ததும் நின்று கொள்ளும். அங்கிருந்து திரும்பி வரும் கப்பல்களுக்கு மீண்டும் வழிகாட்டும்.

பெலோரஸ் ஜேக்கின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்க நாளிதழ்களில் அதுபற்றி செய்திகள் குவிந்தன. அஞ்சல்அட்டைகளில் பெலோரஸ் ஜேக்கின் படம் இடம்பெற்றது. பெலோரஸ் ஜேக்கைக் காண சுற்றுலாப்பயணிகள் நியூசிலாந்தில் குவியத் தொடங்கினர்.

ஒருமுறை பெங்குவின் என்ற பயணிகள் கப்பலைச் சேர்ந்த குடிகார மாலுமி ஒருவர் பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் கண்டு கடுப்பாகி, கப்பலின் மேற்தளத்தில் இருந்து அதை துப்பாக்கியால் சுட்டார். நல்லவேளை, பெலோரஸ் ஜேக் நீரில் மூழ்கி தப்பி விட்டது. அந்த குடிகார மாலுமியை மடக்கிப்பிடித்த சுற்றுலாப்பயணிகள் கரை வந்து சேர்ந்ததும் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த தகவல் இதற்குள் காட்டுத்தீயாகப் பரவ, நியூசிலாந்து நாட்டு நாடாளுமன்றம் கூடி, பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் காப்பாற்ற சட்டம் பிறப்பித்தது. அந்த ஓங்கல் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் 100 பவுண்ட் வரை தண்டம் என்று அரசு அறிவித்தது. உலக அளவில் தனியொரு கடலுயிரை பாதுகாக்க ஒரு நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் பிறப்பித்தது அதுவே முதல்முறை.

இதற்கிடையே இன்னொரு வியப்பூட்டும் சங்கதி நடைபெற்றது. குக் நீரிணைக்குவரும் அனைத்துக் கப்பல்களுக்கும் வழிகாட்டி வந்த பெலோரஸ் ஜேக், தன்னைச் சுட முயன்ற கப்பலான பெங்குவினுக்கு மட்டும் அதன்பிறகு வழிகாட்டவேயில்லை. இந்தநிலையில் ஒருநாள் குக் நீரிணைப் பகுதியில் கடற்பாறையில் மோதி பெங்குவின் கப்பல் உடைந்தது. அதில் 75 பேர் வரை பலியானார்கள்.

இதற்கிடையே பெலோரஸ் ஜேக்குக்கு வயதாகத் தொடங்கியது. கண்டா ஓங்கல்கள் 24 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. இந்தநிலையில், 24 ஆண்டுகள் இடைவிடாமல் வழிகாட்டி பணிபுரிந்த பெலோரஸ் ஜேக், அதன் ஓய்வு வயதை எட்டத் தொடங்கியது.
வயதாகி விட்டதால் அதன் வேகம் குறையத் தொடங்கியது. அதற்கேற்ப நீராவிக் கப்பல்களும் பெலோரஸ் ஜேக்குக்கு ஏற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அதை பின்தொடர ஆரம்பித்தன. 

இதற்கிடையே தனது பணி தனக்குப்பிறகும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக நாய்ச்சுறா ஒன்றுடன் பெலோரஸ் ஜேக் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாய்ச்சுறாவை தனக்கு மாற்றாக களமிறக்க முயன்றதாகக்கூட ஒரு கதை உண்டு.
எது எப்படியோ? கடைசியாக 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெலோரஸ் ஜேக் ஒரு கப்பல் மாலுமியின் கண்ணில் பட்டது. அதன்பிறகு அதைக் காணவில்லை. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குக் நீரிணைப்பகுதியில் நங்கூரமிட்டு நின்ற நார்வே நாட்டு திமிங்கில வேட்டைக்கப்பல் ஒன்று பெலோரஸ் ஜேக்கை வேட்டையாடி விட்டதாக நம்பப்பட்டது. 

ஆனால், குக் நீரிணை பகுதியில் கடலோர விளக்குகளை பராமரித்து வந்த சார்லி மொய்லர் என்பவர் பெலோரஸ் ஜேக் போன்ற ஒரு கண்டா ஓங்கல் இறந்து கரை ஒதுங்கியதாகக் கூறினார். அந்த ஓங்கலின் உடல் துணுக்குகளை ஆய்வு செய்ததில் அது 24 முதல் 30 வயதான ஓங்கல் எனத் தெரிய வந்தது. அது பெலோரஸ் ஜேக்கின் உடல்தான். முதுமை காரணமாக பெலோரஸ் ஜேக் இயற்கை மரணம் அடைந்து விட்டது என கருதப்பட்டது.

உலக அளவில் பெலோரஸ் ஜேக்கைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. ஒரு சாக்லெட்டுக்கு பெலோரஸ் ஜேக்கின் பெயர் சூட்டப்பட்டது. நியூசிலாந்தில் பெலோரஸ் ஜேக்கின் மிகப்பெரிய வெண்கலசிலை நிறுவப்பட்டது. 

இதற்கிடையே பெலோரஸ் ஜேக்கை பிடிக்காத சிலரும் அப்போது இருந்தார்கள். ‘பெலோரஸ் ஜேக் ஒன்றும் கப்பல்களுக்கு வழிகாட்டவில்லை. அது கப்பல்களால் உருவாகும் அலைகளைப் பயன்படுத்தி அலைச்சறுக்கு செய்யத்தான் கப்பல்களுடன் பயணித்தது‘  என்பது அவர்களது கருத்தாக இருந்த து.

எது எப்படியோ? பெலோரஸ் ஜேக் இருந்த வரை, குக் நீரிணைப் பகுதியில் அது வழிகாட்டிய எந்த ஒரு கப்பலும் விபத்தில் சிக்கவில்லை. ஆனால், பெலோரஸ் ஜேக்கின் மறைவுக்குப்பிறகு கப்பல் விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

பதிவு (தேடலின் திடல்)FB
ஐயா  மோகன ரூபன்

Link ; https://theculturetrip.com/pacific/new-zealand/articles/the-truth-behind-the-new-zealand-legend-of-this-heroic-dol

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.