Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்!… முருகபூபதி.

அஞ்சலிக்குறிப்பு:

ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு

முருகபூபதி

.thumbnail_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.

சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன்.

பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய நண்பர்களிடம் ரகுநாதன் குறித்தும் விசாரிக்கத்தவறுவதில்லை.

காரணம், அவர் கடந்த சிலவருடங்களாக சிறுநீரக உபாதையினால் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தவர். கடந்த சில நாட்களாக நான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருந்த நண்பர் ரகுநாதனும் தற்போது நிரந்தரமாக நினைவுகளாகிவிட்டார் என்பதை கனத்த மனதுடன் உள்வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

அன்றைய தினம் எம்முடன் மனோகரனின் நண்பர் ஶ்ரீபாஸ்கரனும் உடன்வந்தார்.

அன்று, ரகுநாதன் எம்மைக்கண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் தான் சம்பந்தப்பட்ட நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்களில் ஒலித்த பாடல்களை பாடத்தொடங்கிவிட்டார்.

நண்பர்களைக்கண்டதும் அவர் உற்சாகமுற்றார். அவுஸ்திரேலியா சிட்னியில் கவிஞர் அம்பியின் 90 வயது விழா நடக்கவிருப்பது பற்றிச்சொன்னதும், பல விடயங்களை நனவிடை தோய்ந்தார்.

சிறுநீரக சிகிச்சைக்காக அடிக்கடி அவர் மருத்துவமனை சென்று வருகிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். நண்பர்களைக்கண்டதும் அவருக்கு வந்த உற்சாகத்தை எவ்வாறு வர்ணிப்பது? முதுமையிலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்புத்தான் சிறந்த ஊக்கமாத்திரை!

அண்மையில் நான் எழுதிய உள்ளார்ந்த ஆற்றலுக்கு முதுமை தடையில்லை என்ற ஆக்கத்திலும் நண்பர் ரகுநாதன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதனை அவர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். வயதும் மூப்பினால் வரும் பிணிகளும் அவரை முடங்கியிருக்கச்செய்தாலும், நினைவாற்றலுடன் பல சம்பவங்களை அன்றைய தினம் நினைவுகூர்ந்தார்.

அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் அம்பியின் 90 விழா மலருக்கும் அவர் ஒரு ஆக்கம் எழுதியதும் அவரது துணைவியாரின் துணையினால் என்பதை பின்னர்தான் அறிந்தேன்.

கலைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரகுநாதன், கொழும்பில் ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் பணியிலிருந்தார். ஒரு நாள் மதியம் நண்பர் மு.கனகராஜன் என்னையும் அழைத்துக்கொண்டு ரகுநாதனிடம் வந்தார். அங்கே கலைஞர் டீன்குமாரும் இன்னும் சிலரும் அச்சமயம் இலங்கையில் வெளியான ஒரு தமிழ்த்திரைப்படக்காட்சிகள் தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கே டீன்குமார்தான் அதிகமாகப்பேசினார். குறிப்பிட்ட படத்தைப்பற்றிய தமது கடுமையான விமர்சனங்களை மிகவும் கேலியாக முன்வைத்துக்கொண்டிருந்தார்.

ரகுநாதன் தமது ஆசனத்தில் அமர்ந்தவாறே மிகவும் அமைதியாகச்சொன்னார்:-

“ நண்பர்களே எங்கள் நாட்டில் இன்னமும் தமிழ்த்திரைப்படத்துறையானது நாம் எதிர்பார்த்தவிதமாக வளர்ச்சியடையவில்லை என்பது உண்மைதான். அதற்கு தென்னிந்திய

தமிழ்ப்படங்களின் வருகையும் ஒரு காரணம். எனினும் நாம் மேலும் மேலும் கடுமையாக இந்தத்துறையில் உழைக்கவேண்டும். அத்துடன் நாமும் தென்னிந்தியப்பாணியிலேயே படம் தயாரிப்பதை விடுத்து எமது நாட்டின் சூழலையும் எமது மக்களின் ஆத்மாவையும் பிரதிபலிக்கும் கதைகளை தெரிவுசெய்து தரமான படங்களை தயாரிக்கவேண்டும். தோட்டக்காரி இங்கு வெளியான முதலாவது தமிழ்த்திரைப்படம். இந்த நாட்டிலும் தமிழ்ப்படங்களை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டிய படம். எனவே இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு நாம் தீவிரமாக உழைக்கவேண்டும்”

அந்தச்சந்திப்பில் நான் எதுவுமே பேசவில்லை. அக்காலப்பகுதியில்தான் நான் எழுதத்தொடங்கியிருந்தேன். ரகுநாதனின் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது நான் நண்பர் கனகராஜனிடம் சொன்னேன்:- “ ரகுநாதனை இலங்கை கலையுலகம் காப்பாற்றவேண்டும். அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.”

ஆனால், எனது விருப்பம் நிறைவேறவே இல்லை.

உள்ளார்ந்த கலை – இலக்கிய படைப்பாற்றல் மிக்க ஒருவர் இந்த பூமிப்பந்தின் எந்தத் திக்கிற்குச்சென்றாலும் தமது ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார் என்பதற்கும் ரகுநாதன் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

அவரது நிர்மலா படத்தை நான் பார்த்திருக்கவில்லை. ஆனால் அதில் ஒலித்த ‘கண்மணி…ஆடவா.. ‘ என்ற பாடலும் அதற்கு அமைக்கப்பட்ட இசையும் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. அவரது ‘தெய்வம் தந்த வீடு’ படத்தை கொழும்பில் செல்லமஹால் திரையரங்கில் பார்த்தேன். இந்தப்படத்திற்காகவே அந்த நிறுவனம் சினிமாஸ்கோப் (அகலத்திரை) திரையை உருவாக்கியிருந்தது. ஒரு இலங்கைப்படத்திற்காக பல திரையரங்குகளில் அவ்வாறு அகலத்திரைகள் உருவாக்கப்பட்டதும் அதுதான் முதல் தடவை என நினைக்கின்றேன்.

அன்றைய காலகட்டத்தில், இலங்கையில் தமிழ்ப்படங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தயாரித்து வெளியிடும்போது பல திரையரங்குகளில் தமிழக முன்னணி நடிகர்களான சிவாஜி அல்லது எம்.ஜி.ஆரின் படங்களைத்திரையிட்டு எமது கலைஞர்களின் உழைப்பில் உருவான படங்களை ஓரம்கட்டிவிடும் கலாசாரம் இருந்தது.

அதுமட்டுமல்ல சிலோன் தியேட்டர்ஸ், மற்றும் சினிமாஸ் லிமிட்டட் , எஸ்.பி. எம். சவுண்ட் ஸ்ரூடியோ முதலான ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் ( செல்லமுத்து, குணரட்ணம், எஸ். பி. முத்தையா ) தமிழர்களாக இருந்தும் அவர்கள் தயாரித்து வெளியிட்ட படங்கள் சிங்களப்படங்களே.

இவ்வாறு சிங்களத் திரைப்பட ரஸிகர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்த வர்க்கம், மறுபுறத்தில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை தருவித்து போட்டிபோட்டுக்கொண்டு வருவாய் தேடியது. இலங்கையில் திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றும் வரையில் அந்த முதலைகள்தான் கொடிகட்டிப்பறந்தன.

சரி, திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றிய பிறகாவது இலங்கையில் தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டதா? அதுவும் நடக்கவில்லை.

இன்று திருட்டு வி.ஸி.டி யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதற்கு எதிராக உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும் மம்முட்டியும் மோகன்லாலும் அமிதாப்பச்சனுட்பட விஜய், சூரியா, அஜித், விவேக், வடிவேலு உட்பட பலரும் குரல்கொடுத்து வருகிறார்கள். ஆனால், அன்று இலங்கை தமிழ்த்திரைப்படத்தின் வளர்ச்சிக்காக யார்தான் குரல்கொடுத்தார்கள்?

அன்று தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்று சத்தம்போட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியினர் கூட குரல் கொடுக்கவில்லை. இந்தத்துறையை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சி குறித்தும் அக்கறைப்படாதவர்களாகத்தான் இருந்தார்கள்.

இந்தப்பின்னணிகளுடன்தான் நாம் கலைஞர் ரகுநாதனின் உழைப்பையும் அவரது கலைத்தாகத்தையும் பார்க்கவேண்டும்.

1974 இல் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டை கொழும்பில் நடத்தியபோது அதற்கு முன்னோடியாக நாடுதழுவிய ரீதியில் பல சந்திப்புக்கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. அச்சமயம் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் கலைஞர்களுடனான ஒரு சந்திப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் கலைஞர் ரகுநாதன்.

thumbnail_%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0

அவருக்கு இலங்கை தமிழ்த்தேசியத்திலும் நம்பிக்கை இருந்தது அதேசமயம் தேசிய ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கை இருந்தது. ஒரு நல்ல கலைஞன் சிறந்த படைப்பாளி அப்படித்தான் இருப்பான். பலரும் இச்சந்திப்பில் உரையாற்றினார்கள். ரகுநாதன் இலங்கையின் அனைத்து இனக்கலைஞர்களின் சார்பிலும் அதேசமயம் அவர்களின்

அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும் உரையாற்றினார். எமது குரல்கள் எப்படித்தான் ஒலித்தபோதிலும் அவை அரசின் காதுகளுக்கோ அதிகார வர்க்கங்களுக்கோ எட்டுவதில்லை. அல்லது எட்டுவதற்கு தாமதமாகலாம். எனினும் கலைஞர்களும் படைப்பாளிகளும் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்தே வந்திருக்கின்றனர்.

1983 ஜூலை கலவரத்தின்போது கொல்லப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் வெங்கட் பிறப்பால் தமிழராக இருந்தபோதிலும் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சிங்கள திரைப்படங்களே. சினிமாஸ் லிமிட்டட் ஸ்தபானத்தின் உரிமையாளர் குணரட்ணம் அவர்களின் வத்தளை ஹெந்தளையிலிருந்த விஜயா ஸ்ரூடியோ சிங்கள தீயசக்திகளினால் தீயிட்டு கொளுத்தப்பட்டபோது அங்கே இருந்த எண்ணிலடங்கா திரைப்படச்சுருள் பெட்டிகளும் எரிந்து சாம்பராகியது. இதனை அறிந்த சிங்கள திரைப்பட கலைஞரும் தமிழர்களின் அபிமானம் பெற்ற அரசியல் வாதியுமான விஜயகுமாரணதுங்கா வீட்டிலிருந்து உடுத்த உடையுடன் (சாரத்துடன்) விஜயா ஸ்ரூடியோவுக்கு ஓடிச்சென்றார். ஆனால் அந்தத் திரைப்படச்சுருள்களை அவரால் காப்பாற்ற முடியாதுபோய்விட்டது. அதிலே பல ஈழத்து சிங்கள, தமிழ்ப்படங்கள் உட்பட தென்னிந்தியப்படங்களும் தகனமாகி சாம்பராகிவிட்டன.

இந்தப்பின்னணிகளுடனும் ரகுநாதனின் வாழ்வையும் பணிகளையும் நாம் பார்க்கவேண்டும்.

1980 களில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ரகுநாதனின் கலைப்பணியைப்பாராட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது அவருடனான எனது இரண்டாவது சந்திப்பு. அப்பொழுதும் அவருடன் விரிவாக உரையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பின்னாட்களில் அவர் தமிழ்நாட்டுக்கும் அதன்பிறகு அய்ரோப்பிய நாடொன்றுக்கும் சென்றுவிட்டதாக அறிந்தேன். ஆனால், தொடர்புகள் இருக்கவில்லை. கலைத்தாகத்துடன் ஒரு நாடோடியாக தமிழகம் – ஐரோப்பா என அவர் அலைந்தபோதிலும் தமிழ்ப்படங்கள், குறும்படங்கள் தயாரிக்கவேண்டும் என்ற அந்தத் தாகம் மட்டும் அவரிடம் தணியவே இல்லை.

தமது கலைத்தாகத்தை வற்றச்செய்யாமல் திரைப்படங்கள், குறும்படங்கள் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டிருந்தேன்.

கலையரசு சொர்ணலிங்கத்தின் பிரதம சீடராகவும் அவர் விளங்கினார். அதனை நன்றியுணர்வோடு என்றென்றும் நினைவுகூர்ந்தபடி இருப்பவர்தான் ரகுநாதன். தமது தெய்வம் தந்த

வீடு படத்திலும் கலையரசு அவர்களை ஒரு காட்சியில் நடிக்கவைத்திருந்தார்.

இறுதியாக 2009 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த குறும்படவிழாவுக்கு வருகைதந்த அவர், குறிப்பிட்ட குறும்பட அரங்கு நிகழ்ந்த மண்டபத்தில் என்னை நீண்ட காலத்துக்குப்பின்னர் சந்தித்து மார்போடு அணைத்துக்கொண்டார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா.?

அப்பொழுது அவர் தமது மானசீக குரு கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைப்பற்றிய விரிவான நூலொன்றையும் எனக்குத்தந்தார். உலகின் எந்த திக்கிற்குச்சென்றாலும் தமது குருவை மறக்காமல்தான் தமது ஒவ்வொரு பணிகளையும் ரகுநாதன் தொடருகிறார் என்பதும் பலருக்கும் முன்மாதிரியானது.

ரகுநாதனை எனக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் மு.கனகராஜன் அதற்குச் சில வருடங்களுக்கு முன்னர் மஹரகம மருத்துவமனையில் மரணப்படுக்கையிலிருந்துகொண்டு தமது மனைவி அசுந்தாவிடம் ஒரு சிறிய காகிதத்தை கொடுத்திருக்கிறார். தாம் மரணித்தவுடன் தகவல் அனுப்புமாறு இரண்டு பேருடைய பெயர்களை அதில் எழுதியிருக்கிறார். அதில் ஓன்று ரகுநாதனுடையது. மற்றது எனது பெயர். குறிப்பிட்ட சிறுதுண்டு காகிதத்தை திருமதி அசுந்தா கனகராஜன் எனக்கு அனுப்பியிருந்தர். இந்தத்தகவலை அன்றைய மெல்பன் சந்திப்பின்போது ரகுநாதனுக்குச்சொன்னேன். அவர் கனத்துப்போன மனதுடன் கண்கலங்க இந்தச்சோகமான தகவலை ஏற்றுக்கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவான் ஜெயகாந்தன் தமிழ்த்திரைப்படத்துறையின் தரத்தை சற்று உயர்த்த முயற்சித்தார். தமது உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர், யாருக்காக அழுதான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காவல் தெய்வம் முதலான படங்களின் மூலம் அவர் தரமுயர்த்தப்பாடுபட்டார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தவாறு தமிழ்த் திரையுலகம் இருக்கவில்லை. தமிழ்த்திரையுலகம் எதிர்பார்த்தவாறு அவர் இருக்கவிலை. அதனால் கௌரவமாகவே இந்தத்துறையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால், எமது கலைஞர் ரகுநாதனோ எத்தனையோ சோதனைகள், தடைகள், நட்டங்களை எதிர்நோக்கியவாறும் தொடர்ச்சியாக எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே வாழ்ந்தவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கவிஞர் அம்பியின் 90 ஆவது வயது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் ரகுநாதன் எழுதியிருக்கிறார்.

பிரான்ஸிலும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்ததும் நானும் அம்பியும் ரகுநாதன் பற்றியே அடிக்கடி பேசக்கொண்டிருந்தோம்..

thumbnail_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

நண்பர்கள் ‘ஓசை’ ‘ மனோகரன் , ஐ.பி.சி. வானொலி எஸ்.கே. ராஜன், கனடா தமிழர் தகவல் எஸ். திருச்செல்வம் ஆகியோருடன் பேசும்போதும் ரகுநாதன் பற்றி கேட்டறியத்தவறவில்லை.

“ இனிமேல் யாரிடமும் என்னை விசாரிக்காதே “ எனச்சொல்லிவிட்டு, எனது நீண்ட கால நண்பர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.

அன்னாரின் மறைவினால் வாடும் அவரது அன்புத்துணைவியார், மற்றும் குடும்பத்தினர் கலை, இலக்கிய நண்பர்களின் ஆழ்ந்த துயரத்தில் நானும் பங்கெடுக்கின்றேன்.

 

https://akkinikkunchu.com/கலைஞர்-ஏ-ரகுநாதன்-மறைந்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து நாடக கலைஞர். ஏ.ரகுநாதன்!….முல்லைஅமுதன்.

ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.

வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது.

நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில் மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது.

சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’ கலைஞர் (அமரர்)நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில் தன் அரச பதவியே இராஜினாமச் செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகங்களை அரங்கேறிய அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் லிபர்ட்டி பிலிம்ஸாரின் ‘உறங்காத உள்ளங்கள்’ திரைப்படத்தை ஆரம்பித்து அதற்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்ட சூழலில் அது தொடரமுடியாது போனது.

ஏற்கனவே கடமையின் எல்லை,நிர்மலா,நெஞ்சுக்கு நீதி,தெய்வம் தந்த வீடு, புதிய காற்று போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தாலும் நாடகமே தன் மூச்சு என அடிக்கடி சொல்வார்.

கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுடனும்,பயிற்சியுடனும் ‘தேரோட்டி மகன் உட்பட பல நாடகங்களில் நடித்தார்..தேரோட்டி மகன், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, அவனைக் கொன்றவள் நீ, சலோமியின் சபதம், பார்வதி பரமசிவம், ஆராவமுதா அசடா எனப் பல நாடகங்கள் பலரின் பாராட்டைப் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1966இல் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்திற்குப் பிறகு 1968இல் நண்பர்களுடன் இணைந்து ‘நிர்மலா எனும் திரைப்படத்தைத் தயாரித்தார்.தமிழக திரைப்படங்களின் அனுபவம் மிக்க இவரின் நண்பரின் கைவண்ணமும் இணைய நல்லதொரு படமாக வெளிவந்தது.நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தாலும் நம்மவர்களின் தென்னிந்திய சினிமாமோகம் தயாரிப்பாளரின் கையைச் சுட்டுக்கொள்ளும் நிலைமை வந்தது.ஆனாலும் ரகுநாதனின் உற்சாகம் அதிகமாகவே ஏற்பட முனைப்புடன் செயல்பட்டார்.அதன் தொடர்ச்சியாகவே வி கே டி பொன்னுச்சாமியின் தயாரிப்பில் இலங்கையில் முதன் முதலில் சினிமாஸ்கோப் வடிவில் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு திரைப்படத்தை 1978இல் வெளியிட்டார்.ஆர்வமுள்ளவர்களை,அனுபவம் மிக்கவர்களை தேடிச்சென்று ஊக்கம் கொடுப்பதுடன்,தன்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தியவர்.

பலதிரைப்படங்கள் வெளிவரவிருந்த சூழல்,பல ஆரம்ப பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் எனச் சிறப்பான வெளிச்சம் வரவிருந்த சூழலில் தான் 83 ஜூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது.வாழமுடியாத சூழலிலே புலம்பெயர்ந்தார். தமிழகத்தில் இருந்த காலங்களிலும் தன கலை முயற்சியை விடவில்லை.

பின்,பாரிஸ் வந்துசேரவே,கலைகள்,கலைஞர்கள் சங்கமிக்கும் நாடாக பாரீஸ் இவருக்காகியமையினால்,நாடகம்,குறும்படங்கள்,திரைப்படங்கள் எனத் தொடர்ந்தார். அவற்றுள் இன்னுமொரு பெண், முகத்தார் வீடு, பேர்த்தி,நினைவு முகம், மௌனம்,தயவுடன் வழிவிடுங்கள், தீராநதி,மீளுதல்,தொடரும்,முள்ளும் மலராகும்,மாறுதடம்,பூப்பெய்தும் காலம்,தொடரும், அழியாத கவிதை,இனியவளே காத்திருப்பேன்(2012), WITNESS IN HEAVEN சாட்சிகள் சுவர்க்கத்தில் (2018)குறிப்பிடத்தக்கன.

எனது வீட்டுக்கு வந்தபோது நிறையப் பேசிய பொழுதுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது கலைஞர்களை ஒன்றிணைத்து நீண்டது திரைத் தொடரை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார்.லண்டன் ஈழவர் திரைக்கலை மன்றம்/ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் அமைப்பினரும் இணைந்து செயல்பட்டதால் அங்கும் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.2009இற்குப் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழலினால் ஈழவர் திரைக்கலை மன்ற செயல்பாடுகள் பற்றிச் சரிவரத்தெரியாததினால் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.ஆனால் இடையே தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேசுவதுண்டு எனினும் பிரான்ஸ் செல்லும் காலங்களிலும் சந்திக்கும் சூழலும் ஏற்படவில்லை.

எழுத்தாளர் விபரத்திரட்டு ஒன்றினை வெளியிடும் ஆர்வத்தில் தொடர்புகொண்டு சில தகவலைப் பெற்றுக்கொண்டேன்.

ஈழத்து நூல் கண்காட்சியினை ஆரம்பிக்கவென ஆயத்தங்களில் இறங்கியபோது முதலாவது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.அதனையொட்டி ஆரம்பிக்கப்பட்ட காற்றுவெளியில் அவரின் நேர்காணலை வெளியிடவேண்டும் என்கிற ஆதங்கத்தைச் சொல்லியிருந்தேன். முடியாதுபோயிற்று. இலங்கையிலிருந்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதே போலவே பழகினார்.காற்றுவெளி பற்றிப் பேசிய போதே இலங்கையில் நிழல்(1968) சஞ்சிகை நடத்தியதாகச் சொன்னார்.இதனை அறிந்திருக்கவில்லை.புனிதலிங்கத்தின் ‘திரை’ சஞ்சிகையே ஓரளவு திரையுலக செய்திகளைத் தந்ததாக அறிவேன்.இன்னும் வந்திருக்கலாம்.

பாரீஸ் வந்தபின் ‘பாரிஸ் முரசு’பத்திரிகைக்கு ஆசிரியாராக இருந்தததாகச் சொன்னார்.சில இதழ்களையும் பார்த்திருக்கிறேன் .பல அனுபவங்களைப் பெற்றவரான ரகுநாதனிடம் வழமையாக எல்லோரிடமும் கேட்பது போல அவ்வனுபவங்களைக் கொண்டு நாவலாக எழுதலாமே எனக் கேட்டிருந்தேன். பார்ப்போம் என்றார்.எனினும் ’ தமிழன்’ இதழில் கலை அனுபவங்களை ‘ஒரு ஒப்பனை இல்லாத முகம்’ எனும் பெயரில் எழுதியாகச் சொன்னார். அதே போல’எனக்காகப் பூக்கும்(1999)’ நாவலையும் தந்தார். திரைப்படத்திற்காக நினைத்திருந்ததை நாவலாக்கியதாவும் சொன்னார்.இன்னும் எழுதக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருந்தவரால் எழுதமுடியவில்லை என்றே நினைக்கிறேன். சிறுகதைகளும்,கவிதைகளும் எழுதியிருப்பாதாக அறியும் பட்சத்தில் அவரின் படைப்புக்களைத் தேடும் முயற்சியும் படைப்பாளர்களின் கைகளுக்கு வருகின்றது.

.ஐரோப்பிய கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் ‘எந்தையும் தாயும்’,’தூண்டில்காரன்’ போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார்.

பறாளையூர் பிறேமகாந்தனின் ரோஜாப்பூ இதழுடனும் தொடர்பில் இருந்தார்.தனது பங்களிப்பு இல்லையெனினும் அது நாடகமெனினும்,திரைப்படமெனினும் அதன் வெளியீட்டிற்கு உதவியாக இருந்திருக்கிறார் என அறியமுடிகிறது.வாடைக்காற்று திரைப்படத்திற்கும் அவ்வாறே உதவியவர் என அறியமுடிகிறது.

நல்ல வாசிப்பாளரும் கூட.ஆனாலும் நாவல்களை,சிறுகதைகளைப் படமாக்கும் ஆர்வம் இல்லாதவராக இருப்பினும்,திரைக்கேற்ப கதைகள் இருப்பின் படமாகலாம் என்றும் சொல்லியிருந்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நிர்மலாவின் புதிய பிரதியை மாணவர்களுக்காக திரையிட்டார். நாடகத்திற்கான நடிப்பு,காட்சியமைப்பு,அதன் கட்டமைப்பு வேறு..திரைப்படத்திற்கான நடிப்பு,வடிவமைப்பு வேறு.அதனைக் கற்றுணர்ந்தவனே நல்ல நடிகனாக பிரகாசிக்க முடியும் என்பார்.

எனது நாடக முயற்சிக்கெல்லாம் ஆலோசனை தந்தவர்களில் பா.சத்தியசீலன்,வி.ரி.ஏ.விஷ்வா இவர்களுடன் கலைஞர்.ஏ.ரகுநாதனும் ஒருவர்.எழுத்தாளர்.அப்பச்சி மகாலிங்கம் அவர்களையும் அறிமுகம் செய்து தந்தார்.

இன்று இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம் எனினும் இவர்களிடமிருந்து பெற்ற அனுபவமே கடந்துவந்த பாதைகளின் சுவடுகளாய் அமைந்தன என்பேன்.

வாழ்நாள் சாதனையாளரான கலைஞர்.ஏ.ரகுநாதன் இன்று நம்மிடையே இல்லை என்பது நெஞ்சம் கனக்கின்ற நாளாய் ஆகின்றது.வயதின் எல்லைகளும்,நோய்களும் உடலை அலைக்கழிக்கும் போது கனவுகளுக்கான ஆயுளும் குறைந்தே போகுமோ?

எவ்வளவுதான் சாதித்திருந்தாலும்,எத்தனை உயரத்தின் உச்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் நிறைவடையாத கனவுகளும் இருந்திருக்கும்.

எனினும்,

கலைஞர்.ஏ.ரகுநாதன் நமது ஈழத்துக் கலை உலகின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதே உண்மை.

கலையுலகின் வரலாற்றை இவர் பதிவுசெய்திருந்தார்.இவரின் வரலாற்றைக் காலம் பதிவு செய்யும்.ஈழத்தின் நாடக,திரைப்பட கலைஞர்களை மறந்துவிட்டதுபோல ரகுநாதனின் பணியை கலைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.

முல்லைஅமுதன்

22/04/2020

 

https://akkinikkunchu.com/ஈழத்து-நாடக-கலைஞர்-ஏ-ரகுந/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.