Sign in to follow this  
உடையார்

திரும்பிப் பார்க்க வைக்கும் ஊட்டி காந்தல் பகுதி

Recommended Posts

பகைமையை மறக்கடித்த கரோனா: திரும்பிப் பார்க்க வைக்கும் ஊட்டி காந்தல் பகுதி

corona-solved-crisis

 

கரோனா காலத்தில் நீலகிரி மாவட்டத்திலேயே மிகுந்த பரபரப்புக்கு உள்ளான பகுதி காந்தல். நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தின் முதல் கரோனா தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதில் மூவர் கோவையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். அதனால் இப்பகுதி மார்ச் 29 அன்று மூடப்பட்டது. இந்நிலையில், இங்கு பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, உதவிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளைத் தன்னார்வலர்கள் சிறப்பாக மேற்கொண்டுவருகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை மொத்தம் 9 பேர் கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் ஊட்டி காந்தலைச் சேர்ந்தவர்.

நீலகிரியில் மற்ற இடங்களில் கரோனா வந்து ‘ரெட் அலர்ட்’ என தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக மட்டுமல்ல, சுறுசுறுப்பான பகுதியாக விளங்குவது காந்தல் மட்டும்தான்.

எப்படி?
ஊட்டியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவே உள்ள இந்த காந்தல் பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஊட்டியின் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளும் இங்கேதான் உள்ளன. மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம்கூட இங்கேதான். நகரின் தூய்மைப் பணியாளர்கள் 350 பேர் காந்தல் பகுதியின் முக்கோணம், திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். காலையும், மாலையும் இவர்கள் நகராட்சி அலுவலகம் மற்றும் வார்டு அலுவலகங்களுக்குச் சென்று கையெழுத்திட்டுவிட்டுத் துப்புரவுப் பணி செய்யப் புறப்பட்டால்தான் நகரின் 36 வார்டுகளும் சுத்தமாகும்.

இப்படியான சூழலில் இந்தப் பகுதியின் 3 கிலோ மீட்டர் சுற்றளவு ஊரடங்கு தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதால், நிலைமையைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுத்தது.

ஒவ்வொரு நாளும் மாவட்ட ஆட்சியரே முன்னின்று இங்கு செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனை தந்து வந்தார். அதன் விளைவாக, இங்கே மக்களுக்குப் பொருட்கள் வாங்கித்தர, உணவுப் பொருட்கள், காய்கனிகளைச் சேர்க்க என 45 பேர் கொண்ட தன்னார்வலர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்களின் செல்போன் எண்கள் இங்குள்ள அனைத்துக் குடியிருப்புவாசிகளுக்கும் அளிக்கப்பட்டன. அவர்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க இந்தத் தன்னார்வலர்களை அழைக்கலாம். தன்னார்வலர்கள் தேவையான பொருட்களை வாங்கி வந்து வீட்டு வாசலில் சேர்த்துவிடுவர். அதற்குரிய பணத்தை வாங்கி கடைக்காரர்களிடம் சேர்ப்பிப்பதும் இவர்கள் பொறுப்புதான்.

காந்தல் பகுதியில் மட்டும் சுமார் 45 மளிகைக் கடைகள் இருக்கின்றன. அவை ரெட் அலர்ட் காரணமாக மூடப்பட்டுவிட்டன. எனினும், அந்தக் கடைகளுக்குப் பின்புறம் உள்ள கதவு வழியே இந்தத் தன்னார்வலர்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோரின் செல்போன் எண்கள் தன்னார்வலர்கள் வசம் அளிக்கப்பட்டன. இங்கே காய்கறி, மளிகைப் பொருட்கள் வேண்டும் என்றால் இவர்களைத் தொடர்புகொண்டு கேட்கலாம்.

இந்தத் தன்னார்வலர்களுக்கு உதவும் வகையில் பல விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்த பீட்ரூட், கேரட், கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வெங்காயம் என பலவற்றையும் இலவசமாகவே லாரியில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள். அவை காந்தலின் முகப்பில் வந்து இறங்க, தன்னார்வலர்கள் அவற்றைப் பொறுப்பாக வாங்கி, ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு கிலோ, அரை கிலோ அளவுக்குப் பொருட்களை அடைத்து வீடு வீடாக விநியோகிக்கிறார்கள். அதுவும் இலவசமாக!

கூடவே, ‘இங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் வெளியே நகரப் பகுதிகளுக்கு போய், கிருமிநாசினி அடிக்க வேண்டும், நகரைச் சுத்தம் செய்ய வேண்டுமே. என்ன செய்வது’ என்று யோசித்தவர்கள் அதற்கும் விடை கண்டார்கள். அதாவது காந்தலுக்கு வெளியே உள்ள தாவரவியல் பூங்கா அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் அரசு விடுதிகளில் பெண் பணியாளர்களையும், மெயின் பஜாரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆண் பணியாளர்களையும் தங்க வைத்துள்ளனர். இங்கிருந்தபடி அன்றாடம் நகரின் துப்புரவுப் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உணவு, இதர வசதிகள் அனைத்தையும் நகராட்சி நிர்வாகம் வழங்கிவருகிறது.

முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ள காந்தல் பகுதியில், இரவு பகல் பாராமல் பணியாற்றும் 45 தன்னார்வலர்களுக்குக் காலை, மதியம் உணவு தயாரிக்கும் பணியும் சுறுசுறுப்பாக நடக்கிறது. இதற்கான செலவுகளை, ஓரளவு வசதி படைத்த காந்தல்வாசிகளே தினம் ஒருவராக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதில் ஆச்சரியமான விஷயம், இங்கே சமைத்துப் போடும் பொறுப்பை ஏற்றுள்ள தன்னார்வலர் செல்லக்குமார் அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர் என்பதுதான்.

அவரிடம் பேசினோம். “எனக்குச் சின்ன வயசிலிருந்தே சமையலில் ஆர்வம். கேட்டரிங் படிச்ச பசங்களோட சேர்ந்து அப்பப்ப சமைக்கப் போயிடுவேன். வீட்டில் பத்துப் பதினைந்து பேருக்கு மட்டுமல்ல, விசேஷ காலங்களில் 200 பேர் வரை கூட சமைச்சிருக்கேன். கரோனா காரணமா எங்க ஏரியா பூட்டப்பட்டதும் நாங்க 45 பேர் தன்னார்வலர்களா வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. உடனடியா அந்தப் பணிகள்ல இறங்கிட்டோம்.

முதல் நாள் காலையில நம்ம சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு யோசனை வந்துச்சு. நாங்களே ஆளாளுக்குக் காசு போட்டு ரவை வாங்கி உப்புமா செஞ்சோம். ஒரு வீட்டுக்காரர்கிட்ட பேசி அங்கேயே சமையல் அடுப்பு வச்சுட்டோம். அப்புறம் மத்தியானமும் 40-50 பேருக்குச் சமைக்க வேண்டியதா போச்சு. அதைப் பார்த்த பெரியவர் ஒருவர், ‘எங்களுக்காகப் பாடுபடற நீங்க சொந்தக்காசு போட்டு சாப்பாடு செய்யறதா?’ன்னு சொல்லி ஒரு நாள் செலவை ஏத்துக்கிட்டார்.

அபு்புறம் தன்னார்வலர்கள் சைடுல இருந்தே பல குடும்பங்களிலிருந்து ஸ்பான்சர் வருது. ஒரு நாளைக்கு 2 வேளை எங்களுக்கு சமைக்க 800 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை செலவாகுது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருத்தர் இந்தச் செலவை ஏத்துக்கிறார். நேற்று ஒருத்தர் கோழியே வாங்கி சப்ளை செஞ்சுட்டார். இந்தப் பணி எனக்கு மட்டுமல்ல, எங்களைச் சார்ந்த ஆட்களுக்கும் உற்சாகமாக இருக்கு. அத்தனை பேரும் அண்ணன் தம்பிகளாகவே ஆகிட்டோம். ஊரடங்கு முடிஞ்சு நிலைமை சரியாகும் வரை இந்தப் பணிகளைத் தொடர்வேன்” என்று உறுதியாகச் சொல்கிறார் செல்லக்குமார்.

இப்பகுதியில் தன்னார்வலராகப் பணியாற்றும் மதி பேசும்போது, “நெருக்கடியான ஒரு காலகட்டத்துல மக்கள்கிட்ட எவ்வளவு நல்ல பண்பு வெளிப்படும்னு அனுபவபூர்வமா உணர்ந்துகிட்டேன். காய்கனி வேணும்னு கேட்டா, உங்களுக்கு இல்லாததான்னு லாரி, வேன் நிறைய ஏத்தி அனுப்பி, பணம் வாங்க மாட்டேன்னு சொன்ன விவசாயிகள் நிறைய. அதனால நாங்க காய் கனி சப்ளைய பைசா வாங்காம இங்குள்ள குடியிருப்புகளுக்குத் தொடர்ந்து செய்ய முடிஞ்சுது.

நிறையப் பேர் இந்தப் பகுதியிலேயே சின்னச் சின்ன சண்டையில் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தனர். அவர்களைக்கூட இந்த ஊரடங்கு ஒன்றுசேர்த்துவிட்டது. லாரிகளில் வரும் காய் கனிகளை இறக்குவதும், வீட்டுக்குப் பேக் பண்ணிக் கொடுக்க ஓடுவதும், சமையல் வேலைக்கு உதவியாக இருப்பதும்னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காதவங்களே இல்லை. சில பேர் நாம எதுக்குப் பேசாம இருந்தோம். ஏன் சண்டை புடிச்சுட்டோம்னு கூட மறந்திருந்தாங்கன்னா பார்த்துக்குங்க” என்றார்.

மொத்தத்தில், கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மனிதாபிமானத்தின் மேன்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் காந்தல்வாசிகள்.

https://www.hindutamil.in/news/tamilnadu/551221-corona-solved-crisis-4.html

 

 

Share this post


Link to post
Share on other sites

கரோனா தன்னார்வலர்களுக்கு நளபாகம்: 42 நாட்கள் தொடர் சமையல் சேவை புரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்

bus-driver-cooked-for-corona-volunteers  

“வெங்காயத்தைப் பெருசா நறுக்கு... இஞ்சி, பூண்டு கூட கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மைய அரைச்சிடு…”- நெற்றியில் திருநீற்றுப் பட்டை. கூடவே சந்தனம் குங்குமம். படபடக்கும் குரலில் சமையல்காரராகத் தன் உதவியாளர்களை ஏவியபடி இருந்த ‘செல்லா’ என்கிற செல்லக்குமார், ஊட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநர். காந்தல் பகுதியில் கரோனா தன்னார்வலர்களுக்கு 42 நாட்களாகச் சமையல் சேவை செய்து அசத்தியிருக்கிறார் இவர்.

30 ஆயிரம் பேர் வசிக்கும் காந்தலில், கடந்த மாதம் 9 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதி சிவப்பு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் தெருவை விட்டு வெளியில் வர முடியாத சூழல். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கனி, மளிகை உணவு, மருந்து, பால் பொருட்களை வாங்கிக் கொடுக்க 45 தன்னார்வலர்கள் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் காலை, மதியம், மாலை உணவு சமைக்கும் பணிகளைச் செய்தவர் செல்லக்குமார். அவரிடம் பேசினேன்

காந்தல்ல எப்போ இந்த சமையல் வேலைய ஆரம்பிச்சீங்க?
ஏப்ரல் 2-ம் தேதி ஆரம்பிச்சோம். 42 நாள் இப்படியே ஓடியிருக்கு. காலையில கிச்சடி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம். இதுக்கு எப்படியும் நாலஞ்சு கிலோ அரிசி போடுவேன். மதிய சாப்பாட்டுக்கு 8 கிலோ அரிசி. குழம்பு, ரசம். கூட்டுப் பொரியல். மதிய சாப்பாட்டுக்கு 50, 55 பேர் ஆயிடுவாங்க. காலையிலயிருந்து பொழுது வரைக்கும் வேற யாரையும் சமைக்க விடமாட்டோம். எல்லா வேலையும் இந்த 45 பேர்தான். அதனால யாருக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உருவாகலை.

ஏற்கெனவே சமையல் வேலை செஞ்சிருக்கீங்களா?
சின்ன வயசுலயிருந்து சமையல்ல ரொம்ப ஆர்வம். வீட்ல விருந்தினர்கள் வந்துட்டா, ஸ்பெஷல் அயிட்டம் எல்லாம் நான்தான் சமைப்பேன். சொந்தக்காரங்க வீட்ல விசேஷம்னாலும் சமையல்கட்டுலதான் என் வாசம். மாரியாத்தா கோயில் விசேஷத்துல சமைச்சிருக்கேன். 200 பேர் வரைக்கும் சமைச்சுப் போட்டிருக்கேன். யாருகிட்டவும் பைசா வாங்கிக்க மாட்டேன்.

இங்கே சமையல்காரரா மாறுனது எப்படி?
இதே காந்தல்லதான் என் வீடும் இருக்கு. ஜனங்க கஷ்டப்படறதைப் பார்த்தவுடனே தன்னார்வலர்களோட நானும் சேர்ந்துட்டேன். எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தாங்க. நம்ம என்ன செய்யறதுன்னு பார்த்தேன். இப்படி உழைக்கிற தன்னார்வலர்களுக்குச் சமைச்சுப்போடறதே நம் பாக்கியம்னு இறங்கிட்டேன். ரெண்டு மூணு நண்பர்களைச் சேர்த்துட்டேன். ஒருத்தர் இங்கிருந்து சமையல் கான்ட்ராக்ட் எடுத்து வெளியே உணவு சப்ளை செஞ்சவர். இன்னொருத்தர் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடறவர். விஷயத்தைச் சொல்லி அவங்ககிட்ட பாத்திரங்கள் கேட்டோம். உடனே ஸ்பான்சர் கொடுத்துட்டாங்க. கேஸ் அடிஷனல் சிலிண்டர் என் நண்பர் கொடுத்தார். அதை மாத்தி எடுத்துட்டோம். என் நண்பர் வீடு ஒண்ணு காலியாக் கிடந்தது. சமையல் செய்யக் கேட்டதும் கொடுத்துட்டார்.

சாப்பாட்டுக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீங்க?
ஒரு நாள் மட்டும்தான் சொந்த செலவுல பொருள் வாங்கிச் சமைச்சோம். அதைப் பார்த்துட்டு ஊருக்குள்ளேயே சில பேர் ஒவ்வொரு நாள் செலவை (தினம் சுமார் ரூ.3500) ஒவ்வொருத்தர் ஏத்துக்கிட்டாங்க. ஒரு ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியாளர் ஒருத்தர் 8 கிலோ சிக்கன் வாங்கிக் கொடுத்தார். அதைப் பார்த்து அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆளாளுக்கு சிக்கன் வாங்கித் தர ஆரம்பிச்சுட்டாங்க. இந்தச் செய்தி தெரிஞ்சு திருப்பூர்ல இருக்கும் என் உறவினர் ஒருவர் என் அக்கவுன்ட்ல ரூ.3,000 போட்டுவிட்டார்.

42 நாள் தொடர்ச்சியா 50 பேருக்கு மூணு வேளையும் சமைச்சிருக்கீங்க… சோர்வு தட்டலையா?
எதுக்கு சோர்வு வருது? நமக்குப் பிடிச்ச வேலை. மக்கள் கஷ்டப்படறபோது செய்றோம். இது மாதிரி நிறைவு, வேற ஏதாவதுல கிடைக்குமா? இப்ப இந்தப் பகுதிக்கு குவாரன்டைன் பீரியடு முடியுது. அவங்கவங்க அவங்கவங்க வேலைய கவனிக்கப் போயிருவோம். அதை நினைக்கும்போதே ஏதோ இழந்த மாதிரி ஃபீலிங் வருது.

பஸ் டிரைவர் பணியையும், சமையல் சேவையையும் எப்படிப் பார்க்கறீங்க?
அது சம்பளம் வாங்கிட்டுச் செய்றோம். இதைச் சம்பளம் வாங்காம செய்றோம். ஆனா, ரெண்டுமே மக்களுக்கான பணி. உயிர்ப் பாதுகாப்புக்கான பணி. இன்னும் சொல்லப்போனா இந்தப் பணியைக் கூட நான் சம்பளம் வாங்காம செஞ்சேன்னு சொல்ல முடியாது. ஏன்னா, இந்த மாசம் பஸ் ஓட்டாமலே ஆபீஸ்ல எனக்கு சம்பளம் போட்டுட்டாங்க!

https://www.hindutamil.in/news/tamilnadu/554315-bus-driver-cooked-for-corona-volunteers-1.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this