Jump to content

சயந்தன் – நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் – நேர்காணல்

May 4, 2020
Capture1-3.jpg

நேர்கண்டவர் : அகர முதல்வன்

மகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர்.”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“(தமிழினி பதிப்பகம்)  ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரைஎன்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது தன்னுடைய மூன்றாவது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது 

நாம் மீண்டும் மீண்டும் தமிழ் (தமிழக) அறிவுலகச் சூழலை மட்டுமே சுழன்று வருவதாக எனக்குத் தோன்றுகிறது. புலம்பெயர்ந்து நீங்கள் வசித்துவரும் நாட்டின் அறிவார்ந்த தரப்பினரோடு உங்களுக்கு கலைவழித் தொடர்புகள் ஏதேனும் உண்டா? உங்களுடைய ‘ஆதிரை’ நாவலை அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கலாம் அல்லவா?

மொழி ஒரு முதல் சிக்கல். ஆங்கிலப் பரிச்சயம் இருந்தது. ஆனால் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் அவ்வாறல்ல. அவற்றைக் காதால்கூட முன்னர் கேட்டதில்லை. அதனாலேயே அவற்றில் நுழைய நிறையச் சிரமம் இருந்தது. அதிலும் புலம்பெயர்ந்தவுடனேயே எதிர்கொள்கின்ற தஞ்சக் கோரிக்கை இழுபறிகள், வேலைப்பளு, அசட்டை போன்றவற்றாலும் மொழியில் ஆழமாகக் காலூன்ற முடியவில்லை. அன்றாடச் சீவியத்திற்குப் போதுமான அளவிலேயே ஜெர்மன் மொழியை அறிந்து வைத்திருக்கிறேன். அதிலும் வாசிப்பென்பது இலவசப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைப் படிப்பதோடு முடிந்து விடுகிறது. ஜெர்மனிய இலக்கியம், ஜெர்மனிய எழுத்தாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்தத் ‘தெரியாமை’ தனியே இலக்கியத்திற்கு மட்டுமென்றில்லை. புலம்பெயர்ந்த நாட்டின் சமூக, அரசியல் விவகாரங்களில்கூட எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இங்கே நடைபெறுகிற ஒரு கூட்டாட்சி அரச தேர்தலை விடவும் இலங்கையிலும், இந்தியாவிலும் நடைபெறுகிற உள்ளூராட்சித் தேர்தலில் ஆர்வமாயிருக்கிறேன். இலங்கையாவது நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்தியத் தேர்தலை எதற்காகக் கவனிக்கிறேன் என்பது இன்னமும் புரியவில்லை. இவ்வாறாகத்தான் புலம்பெயர்ந்த முதல் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள்.

இலக்கியத்தில் நாங்கள் தமிழகச் சூழலைச் சுற்றி வருகிறோம் என்கிறீர்கள். ஒரு கவனிப்பு உள்ளதென்பது உண்மைதான். அது எழுத்திற்கா அல்லது ‘ஈழத்தமிழருக்கா’ என்பதை உரையாடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. 2009இற்குப் பிறகு ‘இரக்கத்துக்கு உரியவர்கள்’ என்ற பரிவின் கீழ் ஈழ எழுத்துக்கள் தமிழகத்தில் கவனிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இலக்கியத்திற்கு கறாரான மதிப்பீடுகள் அவசியம் என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு நாம் வியக்கின்ற இலக்கியங்களை அவ்வாறான மதிப்பீடுகளின் வழியேதான் கண்டடைந்தோம். மதிப்பீடுகளின் கடுமையை ‘பாவப்பட்ட சனங்கள்’ என்று கருதித் தணிக்க வேண்டியதில்லை. பாவப்பட்ட சனமாயிருப்பதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. இதேவேளை தமிழகத்திற்குள் நுழைந்துதான் பின்னர் அதற்கு வெளியே போகவேண்டிய ‘கள நிலவரத்தை’யும் பதிவு செய்கிறேன். ஷோபா சக்தியை எனக்கு சாரு நிவேதாதான் கோணல் பக்கங்களில் அறிமுகம் செய்தார். தமிழ்நதியை பிரபஞ்சன் அடையாளம் காட்டினார். தமிழகம் வியந்த பிறகே ஈழம் தன்னுடைய பிள்ளைகளைக் கவனிக்கிறது என்பது என்னுடைய ‘மனப்பிராந்தியாக’ இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே. 

ஆதிரை மொழிபெயர்ப்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது ஆறாவடுவுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு தற்செயல் நிகழ்வாக. எவெலின் மாசிலாமணி என்பவர் தமிழிலிருந்து ஜெர்மனுக்கு மொழியாக்கம் செய்பவர். சுவிற்செர்லாந்தைச் சேர்ந்தவர். காத்தவராயன் கூத்திலிருந்து ஜெயமோகன் வரை மொழியாக்கம் செய்துள்ளார். அவர் ஆறாவடுவை மொழிபெயர்க்க முன்வந்தார். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்தன. ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்தித்தேன். கீழைத்தேய பகைப்புலத்தை மேற்கிற்குத் தருவதில் எழுகிற சிக்கல்களையெல்லாம் அனுபவித்தேன். இறுதியில் என்னால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத ஆனால் என்னுடைய பிரதியை கைகளில் வைத்துப் பார்க்கின்ற அனுபவம் அலாதியாகத்தான் இருந்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாக வேண்டியது. கோவிட் 19 சற்றுத் தள்ளிவைக்கக் கூடும். ஆறாவடு ஜெர்மனில் வெளியான பிறகு ஆதிரையை மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ஈழப் படைப்பாளிகளின் சமகால இலக்கியத்தில் ‘ஆதிரை’ நாவலும் மிக முக்கியமானது. அந்த நாவலை எழுதிய காலங்களில் நினைவுகளின் வழியாக தாயகத்திற்கு மீளத்திரும்பும் வாதையை கண்டிப்பாக அனுபவித்து இருப்பீர்கள். ஒரு புலம்பெயர் படைப்பாளியாக அந்த வாதை இரத்தத்தை காயப்பண்ணும் அளவிற்கு கொடூரமானது. எப்படியான உணர்வுகளும் கொந்தளிப்புகளும் உள வீழ்ச்சிகளும் அந்த நாட்களில் இருந்தன?

1_OT0PNQaYhqguCRhGJcpeyQ.jpeg

ஈழப்போரில் என்னுடைய குற்ற உணர்ச்சியே ஆதிரை நாவல். கடைசி நாட்களில் ‘கைவிடப்பட்ட சனங்கள் யார்’ என்ற கேள்வி என்னில் குமுறியபடியே இருந்தது. அதுவோர் எரிமலைக் கொதிநிலை. எல்லோருக்குமான விடுதலைப்போரின் இறுதிமுடிவில் அதன் வெம்மையை, கருகிய எரிவை, இரத்த வெடுக்கை ‘ஏழைகளும் நலிந்தோரும்’ மட்டுமே அனுபவிக்க நேர்ந்ததை ஒரு தற்செயல் நிகழ்வென்று சமாதானமாக இயலவில்லை. சமூக, பொருளாதார படிநிலைகள் ‘போருக்குள் விளையாடிய’ உண்மை அறைந்து கொண்டேயிருந்தது. குரூரமாகப் பல் இளித்தது. இறுதி யுத்தத்தில் அகப்பட்டவர்களில் இந்திய வம்சாவழியினரான மலையக மக்கள் நாற்பது வீதத்தினர் என்று புள்ளிவிபரம் சொல்கிறது. அட்டை உறிஞ்சிய பிறகு மீந்த இரத்தத்தை தமிழீழ விடுதலைக்காக எங்களுடைய நிலங்களில் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாய்ச்சியதை அரசியலிலும், இலக்கியத்திலும் யாரும் கவனப்படுத்தவில்லை என்பதை ‘தவறுதலாக நிகழ்ந்துவிட்டது’ என்றா கூறமுடியும். இல்லை. விடுதலையின் முழுமையான ‘கிரெடிட்’ஐ தன்னுடையது என்று சொல்ல ஆசைப்பட்ட ஒரு சமூக மனநிலையே இதற்குக் காரணம். இது குற்றம் சுமத்தப்பட வேண்டிய மனநிலை. இது கேலி செய்யப்பட வேண்டிய மனநிலை. தாழாக் குற்ற உணர்வும், ஆயிரம் கேள்விகளும், சுய கேலியுமே ஆதிரை ஆனது. ஆதிரையை ஒரு புலம்பெயர்ந்த மனோநிலையோடு நான் எழுதவில்லை. அது எழுதப்படுகின்ற போதே மூன்று தடவைகள் அந்த நிலங்களுக்குச் சென்றிருந்தேன். கதை மாந்தரோடு பேசியிருக்கிறேன். அவ்வாறு ‘விடுப்புக்’ கேட்பதுவே குற்ற உணர்வு மிகுந்த அனுபவம்.

ஆதிரையை நிறைவு செய்யும்போது என்னைப் பீடித்திருந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியேறுவேன் என்று நினைத்திருந்த போதும், ‘குருதிச்சேறில் நனைந்திருந்த கழுத்திலிருந்து ஆதிரை சயனைட் குப்பியை இழுத்தாள்’ என்ற இறுதி வரியை எழுதி முடித்தபோது முப்பது ஆண்டுகளாக என்னோடிருந்த சனங்களை மறுபடியும் கைவிட்டு வந்த உணர்வே என்னை ஆட்கொண்டது.   

புலம்பெயர்ந்து வாழும் சனங்களிடையே கடுமையான சாதிய மனோபாவங்கள் தலையெடுப்பதாக அறிய முடிகிறது. தாயகத்திலும் தான். மேற்கத்திய கலாச்சாரச் சூழலோடு தம்மை இணைத்துக் கொண்டாலும் இவ்வாறான சாதியை மனநோயை விட்டு ஏன் விலக மறுக்கிறார்கள்? உங்களுடைய அனுபவத்தில் இதனை எவ்வாறு எண்ணுகிறீர்கள்?

நிலத்தை மாற்றிக் கொள்வதால் தமிழ்ச்சமூக மனதில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்ப்பது வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்பதைப் போன்றது. இரண்டாயிரம் வருடங்களாக நிலங்களையும், மதங்களையும், பண்பாட்டு மாற்றங்களையும் சந்தித்து வந்தபோதும் ஒரு சின்னக் கீறு தன்னும் படாமல் காவி வந்த சாதிய மனோபாவத்தை ஒரு புலம்பெயர்வு அழித்து விடாது. தாய் நிலத்தில் சாதி என்ன நிலவரத்தில் உள்ளதோ அதேதான் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உண்டு. அதை சாதி மேற்கத்திய வெர்சன் 2.0 என்று பெயரிடலாம். சக மனிதர்களிடம் ஒரு சமூக அதிகாரப் படிநிலையை அனிச்சையாக உணரும் சாதிய மனோநிலையோடு இங்கு நிறைய மனிதர்கள் உலாவுகிறார்கள். இதற்காக வெட்கித்து, குற்ற உணர்வு கொண்டு இதிலிருந்து வெளியேற சமூக அறிவை வளர்த்துக் கொள்ளும் கூர்மையையும் அவர்களிடம் நான் காணவில்லை. பெரியாரை உள்ளே அனுமதிக்காதே.. அம்பேத்கரை வெளியே அனுப்பு. தலித்தியத்தை எதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கூச்சல்கள்தான் அதிகமாயிருக்கின்றன. ஒரு தர்க்கத்திற்காக தேசியம் என்ற எண்ணக்கருவை மேற்கில் இருந்துதான் பெற்றோம் என்று வாதாடினால்… வாதாடி என்ன ஆகப்போகிறது.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.. 

தமிழ் தேசியம் தொடர்பான உங்களுடைய நிலைப்பாடு என்ன? அதனை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

ஓர் அடையாள அரசியலாகவே தமிழ் தேசியத்தை உள்வாங்கினேன். எந்த அடையாளத்தின் பொருட்டு தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கு முறைக்கு உள்ளானார்களோ அதே அடையாளத்தை ஒரு கூட்டுச்சக்தியாக, கூட்டு எதிர்ப்பாக முன்வைக்க வேண்டியிருந்தது. இன்றைக்கும் அதைச் சார்ந்தே நிற்கின்றேன். அதற்குள் நின்றே பின்வருவனவற்றைப் பேசுகின்றேன். இங்கே தமிழ் தேசியத்தையும் பழைய ஆண்ட பரம்பரைக் கனவுகளையும் ‘ஒண்டடி மண்டடியாகக்’ குழப்பிக்கொள்வோரே அநேகம். அடக்குமுறைக்கு எதிராக ஆதிக்க உணர்வால் போராட முடியாது. நான் ஒடுக்குமுறைக்கு எதிரான திரள் வடிவம் என்ற வகையிலேதான் தலித்தியம், பெண்ணியம் போன்ற அரசியல் சிந்தனைகளையும் புரிந்து கொள்கிறேன். அவற்றைக் ‘கருவியாகப்’ பயன்படுத்துகிற தரப்புக்களில் கேள்விகள் உண்டு. உதாரணமாக 2010இல் ஈழ வடபுலத்தில் தலித்தியச் சிந்தனைகளுக்கூடாக மக்களைத் திரட்டி மகிந்த ராஜபக்சவுக்கு ஓட்டுச் சேர்க்க முயற்சித்தார்கள். அவர்களுக்கு புலி வெறுப்பின் உச்சத்தில் அதற்கொரு வடிகாலாக மகிந்த ஆதரவு இருந்ததேயன்றி வேறு காரணங்கள் இருக்கவில்லை. இப்படியானவர்களில் சந்தேகங்கள் உண்டே தவிர தலித்தியச் சிந்தனைகளில் ஒரு சிறு சந்தேகமும் இல்லை. இவை தமிழ் தேசியத்தின் சமாந்தரமான பயணிகள். ஒன்றுக்கொன்று நட்பு முரணோடு இயங்க வேண்டியவை. ஆனால் தமிழ் தேசிய இனத்திற்குள் நடக்கின்ற சமூக, பால், வர்க்க அசமத்துவங்களில் தமிழ் தேசியம் கள்ள மௌனம் சாதிக்கின்றது. மௌனத்தினால், உள்ளிருக்கும் ஒடுக்குமுறையாளர்களின் பக்கத்தில் நிற்கிறது. அது ஒடுக்கப்பட்டவர்களுடைய அருகில் ஓர்மத்தோடு குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசையை தேசியத்தைக் குலைக்க நினைக்கும் சதி என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு பொது எதிரிக்கு முன்னால் இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிறார்கள்..

தமிழ் தேசியமும் தலித்தியமும் சமாந்தரமான பயணிகள் என்றேன். அவற்றை எதிர் எதிர் துருவங்களுக்குத் தள்ளிவிடும் சக்திகளில் அவதானத்தோடு இருக்க வேண்டும். ‘ஈழத்தின்’ தமிழ் தேசியப் பயணத்தில் எல்லோருடைய வியர்வையும் உண்டு. எல்லோருடைய இரத்தமும் உண்டு. ஒருநாளைக்கு தமிழ் தேசியப் பலம் ‘தீர்வை’ கண்டடைகிற போது அது எல்லோருக்கும் உரியது.. இந்நிலையில் முன்னரே ‘தரப்புகளை’ வெளியேற்றுவது தமிழ் தேசியத்தின் ‘உள்ளிருக்கும் மேலாதிக்க மனநிலைக்கே’ சார்பாகி விடும். கவனம் தேவை.  

தமிழ்தேசியம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி பொத்தாம் பொதுவாக வரையறை செய்யமுடியாதென கருதுகிறேன். தேசியம் என்பதே முழு ஜனநாயகமும்,சமத்துவமும் கொண்டதுதான். ஈழத்தில் இருக்கும் தமிழ் தேசியமானது ஆக்கிரமிப்பிற்கு எதிரானது. நீங்கள் இப்போதிருக்கும் (புலிகளுக்கு பின்னரான காலம்)  தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய அமைப்பாக கருதி இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்களா?

%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%

தேசிய எண்ணக்கரு ஜனநாயகத்தை உள்ளடக்கியது. அதனால்தான் தமிழ்ச் சூழலில் அநேகம் பேருக்கு தேசியம் புரிவதேயில்லை என்கிறேன். நம்மில் பலர் தமிழ் தேசியம் என்பதை சிங்கள ஆமியைச் சுடுவது என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்வதுண்டு. ஈழத்தில் தமிழ் தேசியம் ஆக்கிரமிப்பிற்கு எதிரானது என்கிறீர்கள். ஆம். அது சிங்கள பேரினவாதச் சிந்தனைக்கு எதிராக தூலமான முறையில் போராடியிருக்கிறது. எதிர்த்து நின்றிருக்கிறது. நன்று. ஆனால் தனக்குள் நிகழும், சமூக, பால், வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியிருக்கிறதா.. குரல் உயர்த்தியிருக்கிறதா.. மகளிர் தின நிகழ்வுகளையும் மே தின நிகழ்வுகளையும் சான்றாகச் சொல்லாதீர்கள்.. அவை வெறும் சடங்குகளாகி நாளாகிவிட்டன. சென்ற வருடம் வடபுலத்தில் வரணியில் ஒரு கோவிலில் வெளிப்படையாக சாதி அடிப்படையில் ஒரு பிரச்சனை வெடித்தது. தாழ்த்தப்பட்டோர் தேர் இழுக்கக்கூடாதென்று இயந்திரத்தை வைத்து இழுத்தார்கள். இது செய்தியாகிய போது தமிழ் தேசியக் குரல்கள் ஓர் அலையாக நியாயம் பேசவில்லை. அப்போது தமிழ் தேசியம் யாருடைய குரல் என்று சந்தேகம் எழுமல்லவா… அல்லது யாருக்கோ அச்சப்படுகிற குரல் என்று தோன்றுமல்லவா.. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மட்டும் முன்வைத்து இதைப் பேசவில்லை, மொத்த சமூக வெளியையும் அவதானிக்கிறேன். புலிகளுக்குப் பிறகான பத்தாண்டுகளில் தமிழ்த்தேசியம் தன்னை முற்போக்காக வெளிப்படுத்தவேயில்லை. அவ்வாறானால் புலிகளுடைய காலம் எப்படியிருந்ததென்று ஒரு கேள்வி உருவாகும். சாதிக்கெதிரான ஒரு கருத்தியல் அறிவூட்டலை புலிகள் முன்னெடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர்கள் வேண்டுமென்றே தங்களுடைய அதிகாரத்தை மட்டுப்படுத்திக் கொண்டார்கள் என்று புலப்படுகிறது. ஆயினும் சாதிய வன்முறைகளை, சாதிய ஒடுக்குமுறைகளை அவர்கள் கடும் குற்றங்களாக சட்டத்தில் பிரகடனப்படுத்தியிருந்தார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அவை முன்னரே குற்றச்செயல்கள் என்றாலும்கூட புலிகள் அதை மிகத்தீவிரமாக அணுகினார்கள். மேற்சொன்னதைப் போன்ற தேர் இழுப்பதில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை புலிகளுடைய காலத்தில் வேறு மாதிரியே தீர்ந்திருக்கும். அது ஒடுக்கப்பட்டவர்களுடைய தரப்பில் பெறுமதியானது. இந்த ‘பெறுமதி’ என்ற வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள். இன்னொன்று புலிகளுடைய காலத்தில் தலித்திய அரசியலுக்கு எதிரான ‘கேலிக் குரல்கள்’ தமிழ் தேசியப் பரப்பிலிருந்து வெளிப்பட வாய்ப்பே இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முற்போக்குத் தமிழ்  தேசியம் பற்றிய சிந்தனைகள் எனக்கு இருந்தன. உள்ளிருக்கும் அசமத்துவங்களுக்கு எதிரான போக்குடைய ஒரு தமிழ் தேசியக் கனவு அது. இருக்கின்ற தமிழ் தேசியத்திலிருந்து இன, பால், சமூக, வர்க்க ஒடுக்குமுறைக் கருத்துக்களை வெளியேற்றுகிற வேலைத் திட்டங்களை யோசித்திருக்கிறேன். எதுவானாலும் இறுதியில் அயர்ச்சியே எஞ்சுகிறது. 

ஈழப்போராட்டம் இன்றைக்கு சந்தித்திருக்கும் ஜனநாயக வழியிலான அணுகுமுறைகளும் தேக்கம் அடைந்து இருக்கின்றன. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் சடங்கியல் ரீதியாகவும், உணர்வெழுச்சி புகை மூட்டத்திற்குள்ளும் நீதிக்கான அறிவார்ந்த அரசியல் போராட்டத்தின் கொதிநிலை இன்று  தணிந்து போய்விட்டது போல தோன்றுகிறதே?

ஈழப்போரில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதி காலம் தொட்டே கொடையாளர் பாத்திரம்தான் உண்டு. இதை என்னுடைய பதிநான்கு வருட புலம்பெயர் வாழ்வின் அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு காலத்தில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுடைய கூட்டுச் சிந்தனையை ஓர் அரசியல் திரளான சக்தியாக்கி சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தமுடியுமென்று நம்பியிருந்தேன். அது நான் புலம்பெயர்ந்திருந்த ஆரம்பக் காலங்கள். அதனால் ‘உருளுதாம்… புரளுதாம்..’ போன்ற நம்பிக்கைகள் எனக்கிருந்தன. நாடு கடந்த அரசு பற்றிய எண்ணக்கருவை வியந்திருக்கிறேன். அது செயல் வடிவம் பெற்ற சில ஆண்டுகளிலேயே ‘சிரிப்புக் கம்பனி’ ஆகிவிட்டது. என்னுடைய ஒரு நண்பர் அண்மையில் கீழ்வருமாறு சொன்னார். ‘புலம்பெயர்ந்த சனங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளோடு உறவுகளை ஏற்படுத்தி அங்கிருக்கின்ற அரசியல்வாதிகளோடு ‘லொபி’ வேலைத்திட்டங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் இலங்கையில் இருக்கின்ற சுமந்திரனோடும், கஜேந்திரகுமாரோடும் ‘லொபி’ செய்து கொண்டிருக்கிறார்கள்’ உண்மைதான். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது. கேள்வியில் குறிப்பிட்டதைப்போல நினைவுச் சடங்குகளையே அவர்களால் செய்ய இயலும். இதை ஒரு குற்றச்சாட்டாக நான் கூறவில்லை.

உங்களுடைய மூன்றாவது நாவலை எழுதி வருகிறீர்கள். புலம்பெயர்ந்து வாழும் நிலத்தின் கதையை எழுதுவதாக நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மிக முக்கியமான நகர்வாக நான் இதனைக் கருதுகிறேன். ஒரு படைப்பாளி அவனுடைய ‘அலைந்துழல்’ ஜீவிதத்தில் ‘அகதி’  நிலையில் இருந்து எழுதும் புனைவாக அதனை நான் எதிர்பார்க்கிறேன். வெளிவரவிருக்கும் நாவல் குறித்து  பகிர்ந்து கொள்ளுங்களேன்?

IMG_0035-1024x768.jpg

வாழும் நிலத்தின் கதையென்று சொல்ல மாட்டேன். ஆனால் கதை வாழும் நிலத்தில் நிகழ்கிறது. தொடக்கத்தில் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் கேட்காத ஒரு நாவல் என்று தீர்மானித்திருந்தபோதும் முடிவில் அது நிராசையாகத்தான் முடிந்தது. முதலாவது நாவலான ஆறாவடு, செய்திகளின் தொகுப்பு என்றொரு விமர்சனம் இருந்தது. அது பகுதியளவிற்கு உண்மையானது. வரலாற்றுச் செய்திகளே அதில் பெருமளவுக்குக் கதையாகவும் நிகழ்ந்தது. ஆதிரையில் வரலாறு மேடையின் பின்திரைச் சேலை போல் இருந்தது. புதிய நாவலில் வரலாற்றைச் சொல்லும் இலக்கிய நாட்டத்திலிருந்து விலகியிருக்கிறேன். மிகுதியை நாவல் வெளியானதும் நீங்களே சொல்லுங்கள்.   

ஈழத்தின் இலக்கிய விமர்சனத்துறையானது, க.சிவத்தம்பி, க.கைலாசபதி போன்றவர்களுக்கு பின்னால் நிகழ மறுத்துவிட்டதன் காரணமாக எதனைக் கருதுகிறீர்கள்? இப்போது வெளிவரும் பெயரளவிலான விமர்சனங்கள் கடுந்தனிமனித வெறுப்புகளை மட்டுமே கொண்டிருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

விமர்சனத்துறை என்றில்லை, புதிய கோட்பாட்டுச் சிந்தனைகள், புதிய மொழிபெயர்ப்புக்கள் எதுவுமே ஈழத்தில் இப்போது நிகழ்வதில்லை. தமிழகம் இது விடயத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றது. எம்மிடம் அப்படியொரு பாரம்பரியம் இல்லை. இன்றைக்கும் ஆறுமுகநாவலரைக் கேள்விக்கு உட்படுத்தினால் சைவமும் தமிழும் என்ற லேபிளுக்குக் கீழ் அவரை ஒளித்துவைக்கிற கல்விதான் நமக்குப் புகட்டப்பட்டிருக்கிறது. க.சிவத்தம்பி, க.கைலாசபதி காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்குமான ‘போக்குவரவு’ சிறப்பாயிருந்தது. இலக்கிய சமூக அரசியல் விவகாரங்களில் அது சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்தியது. இன்றைக்கு பல்கலைக்கழகம் அதிலிருந்து வெளியேறி விட்டது. சமூகத்திற்கும் அதற்கும் இப்போது கிலோ மீற்றர் கணக்கில் இடைவெளி உண்டு. ஆக, இவற்றையெல்லாம் வெளியிலிருந்துதான் மறுபடியும் முதலேயிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஈழச்சூழலில் தற்காலத்தில் அனோஜன் பாலகிருஷ்ணன், தர்மு பிரசாத் போன்றவர்கள் இலக்கிய மதிப்பீட்டாளர்களாக நம்பிக்கை அளிக்கிறார்கள். மற்றபடி தனி மனித வெறுப்பினால், விருப்பினால் வந்து கொண்டிருக்கும் ‘நறுக்குகள்’ வேறு திணைக்களத்தைச் சேர்ந்தவை. அவை நிலைத்தகவல் வகையானவை. எப்போதாவது இன்றைய நாளின் ஞாபகத்தில் வரக்கூடியவை. பின்னர் அமிழ்ந்து விடுபவை.     

பொதுவாக ஈழத்தமிழர் மீதான பரிவினால் மட்டுமே சில ஈழப்பிரதிகளுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருப்பதாக சில பிரதிவாதங்கள் உண்டு. அப்படியான பிரதிகளுக்கு ‘கழிவிரக்க பிரதி’யென சிலர் பெயர் சூட்டியும் இருக்கிறார்கள். என்னளவில் இது கண்மூடித்தனமான வாதம். உங்களுடைய ஆதிரை நாவலுக்கு தமிழகத்தின் இந்துத்தமிழ் பத்திரிக்கை வழங்கிய விருதையும் இவ்வாறு கருதமுடியுமா? இப்படியான வாதங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

முதலாவது கேள்வியில் இலக்கிய மதிப்பீட்டில் கறார் தன்மை அவசியமென்று சொன்னேன். எல்லா எழுத்துக்களுக்கும் கடுமையான முதலாவது மதிப்பீட்டாளர் எழுதியவரே என்பது என்னுடைய நம்பிக்கை. நான் எழுதிய எல்லா எழுத்துக்களையும் நீங்கள் படிக்கவில்லை என்பதற்கான காரணம் ஒரு மதிப்பீட்டாளராக அவற்றை நான் வெட்டி வீசி எறிந்திருக்கிறேன் என்பதுவே. ஆகவே வெளியிலிருந்து வருகிற மதிப்பீடுகளின் ‘உண்மையான இடத்தை’ எழுதுபவரால் உள்ளுணர முடியும். அதனாலேயே சில ஈழப்பிரதிகள் ‘பாவம் பார்க்கப்பட்ட’ எழுத்துக்களாக அணுகப்படுகின்றனவோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. 2009இற்கு முன்னர் இப்படி நடக்கவில்லை என்பதை ஆதாரமாக வைத்தே இதைப் பேசுகிறேன். இதைப்பற்றி தமிழகத்தின் விமர்சகர்கள், மதிப்பீட்டாளர்கள் எல்லோருடனும் திறந்த உரையாடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்துவுடைய விருது குறித்துக் கேட்டீர்கள். வெளியிலிருந்து வருகின்ற மதிப்பீடுகளின் உண்மைத்தன்மையை எழுதியவரே முதலில் அறிவார் என்று முதலில் சொல்லியிருக்கிறேன். இதைக் கேளுங்கள். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த கலகம் அமைப்பினர் என்னுடைய ‘பெயரற்றது’ கதைத்தொகுப்பிற்கு ‘சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான’ விருதுச் செய்தியை அனுப்பியிருந்தார்கள். அதைப் பணிவன்புடன் மறுத்திருக்கிறேன். ஆதிரைக்கும் பெயரற்றதுக்குமான என்னுடைய சொந்த மதிப்பீடுகளே ஒன்றைப் பெறவும் இன்னொன்றை மறுக்கவும் செய்தன.

செவ்வியல் தன்மை வாய்ந்த படைப்புக்களை எழுதவல்ல இடத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியம் இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன்.இனிவரும் பத்து ஆண்டுகளுக்குள் அது நிகழுமென நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய அனுமானம் என்னவாக இருக்கிறது?

எழுத்து ஒரு தவம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால் அது நிறைய உழைப்பைக் கோருகிறது. உலகம் வேகமாகி விட்டது. அந்த வேகம் எல்லாவற்றிலும் பாதிப்பைச் செலுத்துகிறது. பத்து வரியில் ஒரு நிலைத்தகவலை எழுதி அடுத்த அரை மணிநேரத்தில் ஐம்பது விருப்புக்குறிகளைப் பெறுவதற்கு மனித மனம் விரும்புகிறது. எழுத்தை முன் வைப்பதற்குப் பதிலாக பெயரை அடையாளமாக்குவதும், பெயருக்கு விசிறிகளைப் பெறுவதும் ஒரு நுட்பமாக மேற்கொள்ளப்படுகிறது. பிறகு எதை எழுதினாலும் உள்வாங்கப்படுமென்று நம்பப்படுகிறது. இவ்வாறான குறுக்குப் பாதைகளுக்கூடாக செவ்வியல் இலக்கியங்களை யோசித்துப் பார்க்கவே எனக்குக் கண் வேர்க்கிறது. இருப்பினும் இந்தக் கேள்வியை  நேர்மறையாக நிறைவு செய்வதற்காக செவ்வியல் படைப்புகள் வராது என்று சொல்லவில்லை. வந்தால் நன்றாயிருக்குமென்று கூறுகிறேன்.

‘கண் வேர்க்கிறது’ என்கிற உங்கள் பதிலில் இருக்கும் அங்கதத் தொனியை நான் விளங்கிக்கொள்கிறேன். செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய உங்களுடைய கருதுகோள் என்ன?

அது காலத்தினில் நிற்க வேண்டும்.!

தொடக்கத்தில் சிறுகதையாளராக இருந்து நாவல்களுக்குள் வந்தவர் நீங்கள், இப்போது மீண்டும் சிறுகதை எழுதுகிறீர்கள். சிறுகதை, நாவலென இவ்விரு  கலைகளுக்கும் அதனுடைய வடிவ உள்ளீடுகள் சார்ந்தும்  அமைப்புகள் சார்ந்துமே நிறைய வேறுபாடுகள் உண்டு. எதனை நீங்கள் உங்களுடைய நெருக்கமான கலையாக கருதுகிறீர்கள்?

என்னுடைய வருகை நாவல் ஊடாகவே நிகழ்ந்தது. அதற்கு முன்னர் எழுதியவற்றை எழுதப் பழகிய கதைகள் எனலாம். நாவல்தான் எனக்கு வசப்பட்ட கலை. அதில்தான் நிதானத்தையும் சுதந்திரத்தையும் உணர்கிறேன். சிறுகதை கைக்குள் திமிறுகிற ஓர் உயிரியைப்போல இருக்கிறது. நான் எழுதியவற்றில் ஒரு நான்கை நல்ல சிறுகதைகளென்று சொல்லலாம். ஒரு முறை நண்பர் சசீவன், கையில் ஒரு குறுங்கத்தியோடு அலையும் மனோநிலையில் ஒரு சிறுகதையை எழுதிவிடலாம் என்று குறிப்பிட்டார். அதனாலேயோ என்னவோ அந்த வடிவம் கை வருவதே இல்லை. ஒரு கத்தியை எனக்கு ஒழுங்காகப் பிடிக்கக்கூடத் தெரியாது.  

மழுப்பல்கள் வேண்டாம் சயந்தன். கண்ணை மூடிக்கொண்டு சொல்லுங்கள். இன்றைய இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடியவர்களாக யார் யாரை அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள் ?

கண்ணைத் திறந்துகொண்டே சொல்கிறேன். யதார்த்தன், சுசித்திரா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சுரேஷ் பிரதீப், அனோஜன் என்று தொடரலாம். இவர்களுடைய ஒரு கதையாவது ‘அட இதை நான் எழுதியிருக்கலாமே’ என்று தோன்ற வைத்துள்ளது. 

நீங்கள் படைப்பூக்க மனநிலையில் இருந்தே புனைவை எழுதத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய படைப்பு மனவெழுச்சியை நீங்கள் எவ்வாறு கண்டடைகிறீர்கள்? அப்படியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

இந்தக் கேள்விக்கு ஆழ்மனத்தின் வாசலைத் தட்டும் அனுபவம், அக மன இயக்கம், அறிந்தும் அறியாததுமான பொருண்மைத் திறன்கள் என்ற வார்த்தைகளைக் கொண்டு ஒரு மனவெழுச்சி தரக்கூடிய பதிலை எழுதலாம் என்றால், ஓர் கவிதையில் கவிஞர் இசை குறிப்பிட்டதைப்போல ‘எனக்கு ஒன்றுமே புரிவதில்லை தம்பி’ என்றுதான் தோன்றுகிறது. எழுத வேண்டுமென்ற வேட்கை நீண்ட கால இடைவெளிகளில்தான் உருவாகிறது. ஆதிரை வெளியாகி ஐந்து ஆண்டுகளாகின்றன. இடையில் மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். புதிய நாவலைத் தற்போது எழுத வேண்டுமென்று தோன்றியதற்குரிய படைப்பூக்கக் காரணியை எனக்குத் தெரியாது. தொடர்ச்சியாகப் புனைவுகளும், வரலாறுகளும், சமூக அரசியலையும்  வாசித்துக் கொண்டிருப்பதால் இலக்கியம் பற்றிய என்னுடைய சிந்தனைகள் காலத்திற்குக் காலம் மாற்றமடைகின்றன. ஒருவேளை ஊற்றில் நீரைப்போல புதிய இலக்கியப் புரிதல்கள் எனக்குள் ஊறி ஊறி ஒரு முழு அனுபவமாகின்ற போது அதை ஒரு இலக்கிய வடிவமாக முன் வைக்கின்ற தாகம் ஏற்படுகின்றது எனலாம். நான் பெறுவதற்கு ஒன்றுமில்லையெனில் நான் தருவதற்கும் ஒன்றும் இல்லை.

***
 

http://www.yaavarum.com/archives/5513

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.