Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 3-FB04592-78-B8-4-CF5-9683-ECA4-F8-DA3-E
அடிக்கிற கைதான் அணைக்கும் என பாடி வளர்ந்த பெண்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் பெண்ணைப்பற்றிய கதை..
அம்ரிதா என்கிற அம்முவின் முடிவினால், தங்களது உண்மை முகங்களை, உணர்வுகளை அறிந்து கொள்ளும் அவளைச்சுற்றியுள்ள பெண்கள்.. 
அம்முவின் முடிவினால் தங்களது செயல்களை சற்று திரும்பி பார்க்கும் அவளைச்சுற்றியுள்ள ஆண்கள்..

பெரும்பாலும் ஒரு பெண்ணானவள் அவளது தாயைப்பார்த்தே வளர்கிறாள்.. அதனால்தான் அவளது தாய், பாட்டி, கொள்ளுபாட்டி செய்தது போல, தனது மகிழ்ச்சியை, கனவுகளை குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கிறாள்..
ஆனால் ஆண்கள் அவர்களது தாயைப்பார்த்து வளர்வதில்லை.. அது அவர்களது துரதிர்ஷ்டமாகிவிடுகிறது.

திருமனமாகிய பின் வேலைக்கு போகாமல் குடும்பத்தை கவனிக்கவேண்டும் என மனதார விரும்பி வாழும் குடும்பத்தலைவியாக, கணவனது கனவுகளை, அவனுடன் சேர்ந்து அடையவிரும்பும் ஒரு மனைவியாக வாழும் அம்ரிதா

A729-D0-E2-F2-CC-4-A40-99-BF-13-F2770-BF


இப்படி வாழும் அவளை, கணவன் என்பதற்காக அவர்களது வீட்டில் நடக்கும் விழாவில் கை நீட்டி அடிப்பதை அவள் எப்படி ஏற்கிறாள்.. அவளது மதிப்பு என்ன?
பெண்ணாகப் பிறந்தாலே, எல்லாவற்றையும் சகித்து போகவேண்டும்.. என வலியுறுத்தும் அதே நேரம் அவளது உணர்வுகளுக்கும் மதிப்பு உள்ளது என்பதை ஏற்க மறுத்தால் வாழ்க்கை எப்படி மாறும் என்றும்
 
காலங்காலமாக வரும் ஆண் என்கிற ஆணவம், அகம்பாவம், பெண்தானே என நினைத்து உணர்வுகளினை வைத்து மிரட்டுவது, விலையுயர்ந்த பரிசை, பூவை கொடுத்தால் தன்னிச்சைப்படி அவளை நடத்தலாம் என்ற எண்ணம்..
இவ்வளவையும் பிரதிபலிக்கும் அம்முவின் கணவனாக வரும் விக்ரம், கடைசியில் தவறை உணரும் போது அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்பதுதான் இந்தப்படம்.

அம்ரிதாவின் வக்கீலாக வரும் நேத்ராவைப்போன்றவர்களை இப்பொழுது அதிகம்  கேள்விப்படுவோம்.. காதலித்து திருமனம் செய்த அவளது கணவன் அவளை கொடுமைப்படுத்தினாலும், அவனது தந்தையால்தான் தான் ஒரு திறமையான வக்கீலாக மாறியதால் அதற்கு நன்றியாக அந்த திருமனத்தை தக்கவைக்க முயற்சிக்கும் அதேவேளை, தனது கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பை, பரிவை, தனது நண்பனிடம் தேடுகிறாள்.. இந்த நேத்ராவை அம்ரிதாவின் விவாகரத்தின் அடிப்படை நோக்கம் எவ்வாறு பாதிக்கிறது?

சுனிதா, அம்ரிதாவின் வீட்டில் சமையல், வீட்டுவேலைகளுக்கு உதவும் பெண்.. ஒவ்வொரு நாளும் கணவனிடம் அடி வாங்கி, அடி வாங்கியே வாழும் பெண்.. பின்பு எப்படி தனது வாழ்க்கையை மாற்றுகிறாள்?

சிவானி, அம்ரிதாவின் அயல்வீட்டு பெண்மணி, கணவனை இழந்து தனது பதின்மவயது மகளுடன் வாழும் சிவானி, தனது வாழ்க்கைபற்றி எடுக்கும் முடிவு..

3-AE83-E33-C274-4-F4-E-81-F4-E4-A1983-ED
அம்ரிதா, நேத்ரா, சுனிதா, சிவானி, அம்ரிதாவின் தாய், அம்ரிதாவின் தம்பியின் காதலி, அம்ரிதாவின் மாமியார் என பெண்களை மையமாக வைத்தே கதை அமைந்தாலும்.. அம்ரிதாவின் தந்தையும் வித்தியாசமானவரே.. அப்படி ஓரு தந்தை எல்லாபெண்களுக்கும் அமைவதில்லை..
அதே போல, தனது மகன், அவனது காதலியை மதிக்கவேண்டும் என நினைக்கும் அம்ரிதாவின் தாயாரால், தனது மகளையும் அவளது கணவன் மதிக்கவேண்டும் என்பதை முதலில் ஏன் ஏற்கமுடியாமல் போகிறது..

இந்தப்படத்தில் அனைவருமே தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு அறிந்து இயல்பாக நடித்திருக்கிறார்கள்..

A0-F57-F10-A876-4100-9-DA4-08-D92-FFF5-D
கணவன் தன்னை மற்றவர்களின் முன் அவமானப்படுத்தியின், தனது கோபத்தை, அதிருப்தியை மெளனமாகவே காட்டும் அம்ரிதா..
அம்ரிதாவின் கவலையைப்பார்த்து மனம் வருந்தி காய்ச்சலில் வாடும் தந்தை.. 

நான் ஒரு மேலதிகாரி என்பதால்தானே என் மீது உன்னால் கையை நீட்டி அடிக்கமுடியவில்லை ..நானும் நீயும்தான்  இந்த வேலை என்கிற ஒட்டப்பந்தயத்தில் இலக்குகளை அடைய ஓடுகிறோம், எங்களது குடும்பங்கள் இல்லை.. ஆனால் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அவர்களை காயப்படுத்துவது சரியல்ல என விக்ரமின் மேலதிகாரி அவனிடம் கூறும் வசனங்கள்

நாங்கள் எடுக்கும் எல்லா தீர்மானங்களும் சரியானதாக இருந்தாலும் அவை எல்லாம் எப்பொழும் மகிழ்ச்சியைத்தான் முடிவாக தரும் என்பதில்லை என்று அம்ரிதாவின் தந்தை அம்ரிதாவிடம் கூறும் வசனங்கள்

நீங்கள் எங்களது திருமனத்தை அழகாக செய்து தந்தீர்கள்.. சாதாரன பெண்ணான எனக்கு உங்களைப்போன்ற பெருமையான, நல்லதொரு குடும்பத்தில் வாழ சந்தர்ப்பம் தந்தீர்கள், அன்பை தந்தீர்கள்.. அதற்கு பரிசாக நான் நல்லதொரு மருமகளாக, குடும்பத்தலைவியாக,இருந்தேன்.. ஆனால் அந்த சம்பவம் நடந்த போது நீங்கள் என்னை விக்ரமின் மனைவியாக மட்டும்தானே பார்த்தீர்கள் என அம்ரிதா அவளது மாமியாரிடம் கேட்கும் பொழுது.. அதற்கு அவர் கூறும் பதில் எத்தனை உண்மை என்பதை படத்தைப்பார்ப்பவர்களுக்கு விளங்கும்

இப்படிபல ரசிக்க, சிந்திக்க வைக்கும் வசனங்கள் இந்தபடத்தில் உண்டு.. 
இசை.. படத்தின் இன்னொரு நல்ல அம்சம்.. காட்சியோடு அமைந்த பிண்ணனி இசை, படத்திற்கு இன்னும் அழகை தருகிறது.. 

When we broke apart.. so little was left ..
fragment of light..filled with dewdrops 

We were tied together with a single thread.. that came slowly undone 

Our names were written on the wall..now washed away by the rain 

Are shattered dreams.. worth living for?
Are false promises..worth chasing?

I made my mind up..to find myself again..
I must follow my heart..

The road we traveled ..seems so narrow now..
fragment of light..filled with dewdrops..

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி ...நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை

 
Thappad-Movie-1280x720.jpg


பெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் ஆதாரமான உரிமைகளைப் பற்றி பேசும் படைப்புகளின் தொனி இப்போது மேலும் கூர்மையடைந்திருப்பதை கவனிக்க முடிகிறது.

பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசும் படைப்புகள் முன்பெல்லாம் எப்படியிருக்கும்? அப்பாவியான ஒரு மனைவி இருப்பார். அதற்கு எதிர்முனையில் குடிப்பழக்கம், குடும்ப வன்முறை உள்ளிட்டு பல தீய இயல்புகளைக் கொண்ட ஒரு கணவன் இருப்பார். கணவன் செய்யும் பல கொடுமைகளை சகித்துக் கொண்ட பெண், நெருக்கடியின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் பொங்கியெழுவார்.

அதாவது கணவனின் பாத்திரம் கொடுமைத்தனம் உள்ளதாகவும் மனைவியின் பாத்திரம் கொடுமையில் மாட்டிக் கொண்டு அல்லல்படும் அப்பாவி அபலையானதாகவும் துல்லியமாக பிரிக்கப்பட்ட கறுப்பு – வெள்ளையில் இருக்கும். எனவே பார்வையாளர்களின் அனுதாபம் பெண்ணின் பக்கம் எளிதில் சாய்ந்து விடும். ஆனால் உண்மையில் அவ்வாறு அவதிப்படும் பெண்களை அன்றாட வாழ்விலும் நாம் காண முடியும்.

ஆனால் 2016-ல் வெளிவந்த ‘Pink’ என்கிற இந்தித் திரைப்படத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கவனிக்க முடிந்தது. இதில் வரும் பெண்கள் அடுப்பங்கரை அடிமைகளாக இல்லாமல் சற்று சுதந்திரமான மனோபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். நவீன ஆடைகள் அணிந்து குடிவிடுதிக்குச் செல்கிறார்கள். அங்கு நட்பின் மூலம் ஏற்படும் அறிமுகத்தால் ஆண்களுடன் இணைந்து குடிக்கிறார்கள். ஆனால் தனிமையான சூழலில் ஆண்கள் அத்துமீறத் துவங்கும் போது தற்காப்பிற்காக தாக்கி விட்டு தப்பிக்கிறார்கள்.

இதில் பெண்கள் அப்பாவித்தனமுள்ளவர்களாக, அபலைகளாக, பார்வையாளர்களின் அனுதாபத்தைக் கோரும் வகையில் சித்தரிக்கப்படவில்லை என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்தத் திரைப்படம்  எழுப்பிய கேள்விகளும் மிக முக்கியமானவை.

ஆணைப் போலவே பெண்ணும் தாம் விரும்பிய படியான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் சகல உரிமைகளும் உள்ளது என்று நினைக்கும் சமூகமாக பெண் சமூகம் மாறி வருகிறது. அப்படியாக Pink திரைப்படத்தில் வரும் பெண்கள் குடிவிடுதிக்குச் சென்று ஆண்களுடன் இயல்பான நட்புடன் தனிமையில் பேசத் துவங்குகிறார்கள். ஆனால் அந்த சமிக்ஞையை பாலியல் அழைப்பிற்கான, அல்லது சம்மதத்திற்கான சமிக்ஞையாக ஆண்கள் எப்படி தானாகவே எடுத்துக் கொள்ள முடியும்?

அவள் அந்தச் சூழலில் பாலுறவிற்கான உறவை மறுத்தால் அப்போது  ‘NO’ என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஆணின் அடிப்படையான நாகரிகம். அல்லாமல் அத்துமீறினால் அது சட்டவிரோதமான, பண்பாடற்ற செயலாகத்தான் கருதப்பட வேண்டும்.

ஆனால் பொதுப்புத்தி இதை எப்படி எதிர்கொள்ளும்? ‘இவங்க.. கவர்ச்சியாக ஆடை அணிந்து கொண்டு குடிவிடுதிக்குச் செல்வார்களாம்… ஆண்களுடன் சிரித்து பேசுவார்களாம்.. ஆனா மேல கைய வெச்சா.. நான் கண்ணகி’ன்னு கத்தி ஊரைக் கூட்டுவாங்களாம்’.. என்னப்பா.. நியாயம் இது?” என்றே பேசும்.

உண்மையில் இந்தத் திரைப்படம் தமிழில், நேர்கொண்ட பார்வையாக வெளி வந்த போது அரங்கத்தில், பொதுப்புத்தி சார்ந்த இவ்வாறான கேலிக்குரல்கள்தான் கேட்டன. ஆணாதிக்க மனோபாவத்திலேயே ஊறிப் போய் தான் செய்வது ஆதாரமான அத்துமீறல் என்பதைக் கூட உணர முடியாமல் ‘ஒரு பொண்ணு நைட்ல வெளில வந்தா.. நாலு ஆம்பங்களைங்க துரத்தத்தான் செய்வான்” என்று தன் குற்றத்தை நியாயப்படுத்தியே பேசுகிறது.

இந்த ஆதாரமான ஆணாதிக்க மனோபாவத்தைத்தான் ‘Pink’ திரைப்படம் கேள்வி கேட்டது. “ஒரு பெண் குடிவிடுதிக்கு வந்தால் அவள் மேல் கைவைக்க அது லைசென்ஸ் ஆகி விடுமா.. இதுவே கோயிலுக்குச் செல்லும் பெண் மீது ஏன் தோன்றுவதில்லை’ என்பது உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்தது.

**

இந்த வரிசையில் ‘Thappad’ திரைப்படமும் இதே மாதிரியான கேள்வியைத்தான் இன்னொரு கோணத்தில் கேட்கிறது. “ஒரு ஆம்பளை.. ஏதோவொரு கோவத்துல.. பொண்டாட்டியை அறைஞ்சுட்டான்.. அதுக்காக.. இப்படியாப்பா.. அந்தப் பொண்ணு.. ஓவராப் பண்ணுது” என்றுதான் பல ஆண்கள் இந்தத் திரைப்படத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இதை விடவும் மொண்ணையான, தட்டையான புரிதல் இருக்கவே முடியாது. அவர்களுக்குள் ஊறிப் போயிருக்கும் பழமைவாதமும் ஆணாதிக்க மனோபாவமுமே இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது.

இந்தக் காட்சியை அப்படியே திருப்பிப் போட்டு பார்ப்போம். ‘இதே மாதிரி ஒரு பார்ட்டியில் ஒரு மனைவி கோபத்தில் தன் கணவனை பளார் என்று அறைந்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.. அப்போதும் இதே மாதிரியான எதிர்வினையைத்தான் ஆண் சமூகம் தருமா?”

இந்தக் கேள்வியை நேர்மையாக சிந்தித்துப் பார்த்தாலே இந்தப்படம் என்ன சொல்ல வருகிறது என்பது புரிந்து விடும்.

**

மேலும் பல விளக்கங்களுக்குப் போவதற்கு முன் படத்தைப் பற்றி சிறிது பார்த்து விடுவோம்.

வெவ்வேறு வர்க்க சூழலில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான மெல்லிய அறிமுகத்துடன் படம் ஆரம்பிக்கிறது.

ஒரு வேலைக்காரி பாத்திரம், தன் கோபக்கார கணவனிடம் தினம் தினம் அடிவாங்குகிறது.

இளம் வழக்கறிஞராக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு மண வாழ்க்கையில் நிறைவில்லை. அவளுடைய அங்கீகாரத்தை மறுக்கும் கணவன், அவனுடைய வெற்றியையே எப்போதும் பிரதானமாகப் பேசுகிறான். அவள் உழைத்து அடையும் வெற்றியைக் கூட, வழக்கறிஞராக இருந்த தன் தந்தை அடைந்த வெற்றியின் நிழலாகத்தான் பார்க்கிறான்.

எனவே மணவுறவில் இருக்கும் கசப்பினால் தன் திருமணத்திற்கு முந்தைய காதலனுடன் இருக்கும் தருணங்களை இனிமையானதாக அவள் உணர்கிறாள்.

ஒரு முதிய தம்பதி. திருமண காலம் முழுவதும் தன் மனைவி மீது அன்பும் மரியாதையும் இருப்பவர்தான் அந்தக் கணவர்.. ஆனால் ‘பாடகி’யாவதுதான் விருப்பம் என்கிற மனைவியின் இளம் வயதுக் கனவை அறியாதவராக இருக்கிறார். இதை அந்திம வயதில்தான் அவரால் அறிய முடிகிறது. அந்த அளவிற்கு  தன் கனவுகளை ஆழப்புதைத்து விட்டு குடும்பத்திற்காக பல சமரசங்களை பெண்கள் மேற்கொள்கிறார்கள்.

இன்னொரு இளம் ஜோடி. திருமணம் என்கிற நிறுவனத்தின் மீதான சந்தேகஙகளுடன் தன் உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு பெண் ஒரு விதவை. மிக மிக அன்பாக இருந்த தன் கணவனின் மறைவை ஜீரணிக்க முடியாமல் அடுத்த திருமணம் குறித்த தயக்கத்தினுள் இருப்பவள். இவளுடைய இளம் மகள், தன் சக வயதுப் பையனுடன் சுதந்திரமாக பழகுகிறாள். இவர்கள் நவீன தலைமுறையின் பிரதிநிதிகள்.

இன்னொரு பணக்காரப் பெண்மணி. நீரிழவு நோயாளியான இவள், கணவன் தன் வெற்றியின் மிதப்பிலேயே இருப்பதால் அவனை விட்டுப் பிரிந்து தன் மகனுடன் வசிக்கிறாள்.

இப்படி பல கதாபாத்திரங்களையும் அவர்களுக்கிடையே உறவுச்சிக்கல்களையும் படம் மெலிதாக அறிமுகப்படுத்துகிறது. ஆனால் அனைத்து உறவுகளிலும் இழப்புகளைச் சந்திக்கிறவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

**

இந்தத் திரைப்படத்தின் நாயகி, அம்ரிதாவிற்கு வருவோம். இவள் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண். பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு உள்ள அம்மா மற்றும் அப்பா இருக்கும் குடும்பத்தில் வளர்வதால் ஆணாதிக்கம் என்பதின் வாசனையை பெரிதும் அறியாதவள்.

ஒரு பணக்கார குடும்பத்தினுள் இவள் வாழ்க்கைப்படுகிறாள். இவளுடைய கணவனான விக்ரம். அவர்களின் குடும்ப நிறுவனம் ஒன்று இருந்தாலும் தன் கனவுகளைத் தேடி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கடுமையாகவும் விசுவாசமாகவும் பணிபுரிகிறான்.

காலை ஆறு மணிக்கு அலார்ம் அடிப்பதில் அம்ரிதாவின் அன்றாட நாள் துவங்குகிறது. வாசலைத் திறந்து நாளிதழையும் பால் புட்டிகளையும் எடுத்து வந்து தனக்கான தேநீரை தயார் செய்து பருகுகிறாள். பால்கனிக்குச் சென்று அதை அருந்திய படியே சூரிய உதயத்தை புகைப்படம் எடுக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு ஒரு புன்னகை. ஒரு நாளில் இதுதான் அவளுக்கான நேரம். இது மட்டுமேதான்.

பிறகு ஆரம்பிக்கிறது அவளது இயந்திர வாழ்க்கை. மாமியாருக்கு தேநீர் தயார் செய்து விட்டு அவருக்கு நீரிழவு பரிசோதனையைச் செய்கிறாள். பிறகு இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனுக்கு பெட் காஃபியை தயார் செய்து விட்டு அவனை எழுப்புகிறாள். பிறகு அவனுக்கான உணவு. அவன் அலுவலகத்திற்கு கிளம்பும் போது அவனுக்கான பொருட்களை கையில் வைத்துக் கொண்டு வாசல் வரை தந்து நிற்கிறாள்.

பிறகு இரவு. அணைத்துக் கொண்டிருக்கும் கணவனின் பிடியில் இருக்கிறாள். மீண்டும் காலை ஆறு மணி அலாரம்.

இந்தக் காட்சிகள் படத்தில் திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றன. அவளின் தினசரி வாழ்க்கை இதுவாகவே இருக்கிறது. அதாவது கணவனின் இயக்கத்தின் ஒவ்வொரு துளியிலும் அவள் கலந்திருக்கிறாள்.

**

ஆனால் கணவனுக்கு இது பற்றிய பிரக்ஞையே இருப்பதில்லை. தன்னுடைய வெற்றிக் கனவைத் துரத்திக் கொண்டு ஓடுவதிலேயே அவன் கவனம் பெரும்பாலும் இருக்கிறது. அது சார்ந்த பரபரப்பிலேயே இருக்கிறான்.

அவனுக்கு பதவி உயர்வுடன் லண்டன் அலுவலத்திற்கு தலைமை பொறுப்பாளனாக செல்லும் ஒரு வாய்ப்பு வருகிறது. அலுவலகத்தில் இவனுடைய பெயர்தான் பிரதானமாக அடிபடுகிறது. இவன் அதற்காக பல வருடங்கள் மிகவும் விசுவாசமாக உழைத்திருக்கிறான். எனவே அந்தக் கனவு மெய்ப்படும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். அதற்கு இணையாக நாயகியும் காத்திருக்கிறாள்.

அந்த நாளும் வருகிறது. இவன் லண்டன் செல்வது உறுதியாகிறது. அதற்காக வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடாகிறது. கணவன், மனைவியின் உறவினர்கள், நண்பர்கள், கணவன் பணிபுரியும் நிறுவனத்தின் உயரதிகாரி ஆகிய பலரும் அங்கு கூடியிருக்கிறார்கள். குதூகலகமும் உற்சாகமும் கொப்பளிக்கிறது.

ஆனால் விக்ரமிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி தலைமையிடமிருந்து வருகிறது. அவனுடைய கனவு இடத்தில் ஒரு வெள்ளைக்காரன் இருப்பான். இவன் அவனுடைய உதவியாளனாக செல்லலாம். Corporate politics. இதைக் கேட்டதும் விக்ரமின் அத்தனை உற்சாகமும் வடிந்து கோபம் தலைக்கேறுகிறது.

இதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த அதிகாரி, விருந்துக் கூடத்திலேயே இருப்பதால் ஆத்திரம் கண்ணை மறைக்க அவரிடம் சென்று உரக்க விவாதம் செய்கிறான் விக்ரம். தன் உதவியாளன் தடுத்தும் அவன் அடங்குவதில்லை. விருந்தினர்கள் சற்று திகைத்துப் பார்க்கிறார்கள். சூழல் ரசாபாசமாகி விடக்கூடாதே என்கிற பதட்டத்தில் நாயகி அவனைத் தடுக்க முனைகிறாள். ஆனால் ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் அவனுக்கு எதுவும் உறைப்பதில்லை. மீண்டும் மீண்டும் தன்னைத் தடுக்க முனையும் மனைவியின் கன்னத்தில் பளார்’ என்று ஓர் அறை விடுகிறான்.

அம்ரிதா திகைத்துப் போய் நின்றிருக்க எல்லோரும் மெளனமாக விலகி விடுகிறார்கள். ஒரு பெண்ணின் பெற்றோருக்கு மிக குறிப்பாக தந்தைக்கு இது மிகவும் மனவருத்தத்தை தரும் சம்பவம். அவர்களும் வருத்தத்துடன் கிளம்பி விடுகிறார்கள்.


**

இந்த ஒரு ‘பளார்’ நாயகியின் வாழ்க்கையைத் தலைகீழாக்கி விடுகிறது. இந்தப் படத்தைப் பார்த்த பலர், இந்த அறைதான் நாயகியின் மிகையான எதிர்வினைக்கு காரணமாகி விடுகிறது என்பது போல் புரிந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படியல்ல. அதுவரை அவள் கொண்டிருந்த பல்வேறு மனஅழுத்தங்களுக்கான ஒரு சாவியாகவே இந்தச் சம்பவம் அமைகிறது.

இந்த அவமதிப்பு நிகழ்ந்தாலும் ஒரு இந்தியப் பெண்ணுக்குரிய சகிப்புத்தன்மையுடன் அந்த வீட்டிலேயே தொடர்ந்து இருக்கிறாள் அம்ரிதா. ‘பூ.. ஒன்று புயலானது’ மாதிரி உடனே வெகுண்டு எழவில்லை. ஆனால் கணவனிடம் முன்பு போல் பேசுவதில்லை. அன்பு காட்டுவதில்லை. இயந்திரம் போல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாள். ஏதேவொரு நிம்மதியின்மை அவளைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.


இந்தச் சம்பவத்திற்காக பிறகு  விக்ரம் வருத்தம் தெரிவிக்கிறான். ‘ஏதோ கோபத்துல செஞ்சிட்டேன். இதை விட்டுடேன்’ என்று மறுபடி மறுபடி வேண்டுகிறான். ஆனால் அவனுடன் பழைய மாதிரி பழக முடியாமல் ஏதோவொன்று அம்ரிதாவைத் தடுக்கிறது.  தங்களின் இடையில் இருந்த ஏதோவொன்று உடைந்து நொறுங்கி விட்டதாக அம்ரிதா உணர்கிறாள்.

“என்ன பண்றது.. பொம்பளைங்களோட பொழப்பு இப்படித்தான்’ என்று ஒரு சராசரியான பெண் போல அந்தச் சம்பவத்தை மறந்து விட்டதைப் போல அவளால் நடிக்க முடியவில்லை. அப்படியொரு பொய்யான வாழ்க்கை தேவையில்லை என்று நேர்மையாக நினைக்கிறாள். எனவே தற்காலிக விடுதலையாக தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் இதை கணவன் தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு கோபமடைகிறான். மீண்டும் இறங்கி வருகிறான்.

ஆனால் அவர்களுக்கு இடையேயான உறவுச் சிக்கல் இன்னமும் மோசம் அடைகிறது. விவாகரத்து கோரி விண்ணப்பிக்கிறாள் அம்ரிதா. அதற்காக கணவனின் மீது எவ்விதமான பொய்ப் புகாரையும் அளிக்க அவள் விரும்பவில்லை. ‘இப்படில்லாம் சாதாரணமா போட்டா கேஸ் நிக்காது’ என்று அவளுடைய வழக்கறிஞர் எச்சரித்தும் அவள் தன் நேர்மையைக் கைவிடுவதில்லை.

ஆனால் இந்த விவாகரத்தை தன் ஆண்மைக்கு சவாலாக எடுத்துக் கொள்ளும் கணவன். தன் வழக்கறிஞரின் ஆலோசனையின் படி அம்ரிதாவிற்கு எதிரான பல பொய் புகார்களை, குற்றங்களை இணைக்கத் துணிகிறான்.

பிறகு என்னவானது என்பதை மிக நெகிழ்வுபூர்வமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.

**

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்’ என்கிற பழமொழி இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இது பெண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் பழமொழியாக தென்பட்டாலும், காலம் பூராவும் உழைத்தாலும் ஆணின் பின்னால்தான் பெண் எப்போதும் நிற்க வேண்டியிருக்கிறது என்கிற மறைபொருளான செய்தியையும் கொண்டிருக்கிறது. அத்தகையை பழமைவாத மரபைத்தான் இந்தப் படம் கேள்வி கேட்கிறது.

இதில் நாயகனாக வரும் விக்ரம், ஒரு சராசரி ஆணைப் பிரதிபலிக்கிறான். அடிப்படையில் அவன் நல்லவன்தான். ஆனால் தன்னிச்சையான ஆணாதிக்கம் நிரம்பி வழியும் ஆண்களின் பிரதிநிதியாக இருக்கிறான். இது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்.

கணவனை இழந்து வாழும் பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி, விக்ரம் வைத்திருப்பதையும் விடவும் பெரிய  காரை வாங்குகிறாள். விக்ரம் தன் மனைவி அம்ரிதாவிடம் கேட்கிறான். ‘என்ன வேலை செய்யறா.. அவ?”

ஒரு பெண் எப்படி அதிகம் சம்பாதித்து விட முடியும் என்கிற மலினமான அர்த்தம் கொண்ட கேள்வி அதனுள் பொதிந்திருக்கிறது. பெண்கள் உயர்பதவியை அடையும் போது ஆண்கள் பேசும் வம்புகள் பெரும்பாலும் அவளுடைய கற்பு சார்ந்ததாகவே இருக்கும். ஏன்.. பெண்கள் கூட இம்மாதிரி வம்பு பேசுவதில் விதிவிலக்கில்லை.

ஆனால் கணவன் கேட்கும் வில்லங்கமான கேள்விக்கு அம்ரிதா சரியான பதிலைச் சொல்கிறாள். ‘அவ hard work செய்யறா’

அடுத்த வசனத்தில் அம்ரிதா கேட்கிறாள். ‘நானும் கார் ஓட்ட கத்துக்கிடட்டுமா?” அதற்கு விக்ரம் பதில் சொல்கிறான். ‘நீ மொதல்ல பரோட்டாவை தீயாம சுடப் பழகிக்கோ”

தங்களின் ஆணாதிக்க கிண்டல்களின் மூலமும் மலினமான நிராகரிப்புகளின் மூலமும் ஆண்கள் பெண்களை பின்னுக்குத் தள்ளியபடியே இருக்கிறார்கள்.

பெண்களுக்கென்று ஒரு சுயம் இருக்கிறது, அவர்களுக்கும் பல கனவுகளும் லட்சியங்களும் இருக்கும், அவர்களும் வெற்றிப்பாதையில் பயணப்பட விரும்புவார்கள் என்பது குறித்த பிரக்ஞையே ஆண் உலகத்திற்கு இருப்பதில்லை. தன் வெற்றிக்கு பெண் துணையாக நின்றால் போதும் என்றே ஆண்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.

**

“என் சொந்தக் கம்பெனி மாதிரி நெனச்சு உழைச்சேன்… ஆனா இப்படி துரோகம் பண்ணிட்டாங்களே’ என்று புலம்பும் விக்ரம், தன் கணவனின் வெற்றியயையே தன்னுடைய வெற்றியாக நினைத்த மனைவிக்கு ஓர் அறையின் மூலம் அதே துரோகத்தை பரிசாக அளிக்கிறான்.

அவனுடைய குடும்ப நிறுவனம் ஒன்று இருந்தாலும், அவன் அங்கு இணைய விரும்பவதில்லை. மாறாக தனித்தன்மையுடன் தன்னுடைய உழைப்பில் நிகழ்ந்த வெற்றியையே சுவைக்க விரும்புகிறான். ஆனால் இதே மாதிரியான கனவு பெண்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்பதுதான் இந்தத் திரைப்படம் வைக்க விரும்பும் முக்கியமான செய்தி.

அம்ரிதாவின் தம்பியே அக்காளின் பிரச்சினையை புரிந்து கொள்வதில்லை. ‘அவர் ஏதோ டென்ஷன்ல அடிச்சிட்டாரு. இத்தனைக்கும் இதுதான் முதன்முறை.. அதுக்கு இவ ரொம்ப சீன் போடறா” என்கிற மாதிரி புகார் சொல்கிறான். அவனுடைய தோழி அதற்கு சரியான பதிலைச் சொல்கிறாள். ‘என்னது முதன்முறையா.. அதனால பரவாயில்லைன்னு ஆயிடுமா.. ஒரு பெண் முதன் முறை சோரம் போனா .. நீங்க ஒத்துப்பீங்களா?” என்று கேட்கிறாள். இது தட்டையான புரிதலை கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்குமான கேள்வி.

ஆண்கள் மட்டுமல்ல.. அம்ரிதாவின் தாய் உட்பட்ட இதர பெண்களும் கூட அம்ரிதா வாங்கிய அறையை ஒரு சாதாரண விஷயமாகத்தான் பார்க்கிறார்கள். பெண்கள் செய்யும் பல்வேறு சமரசங்களின் மூலமாகத்தான் ஒரு குடும்பம் பழுதின்றி இயங்குகிறது என்பது அவர்களின் நெடுங்கால அனுபவம். அது உண்மைதான். ஆனால் இன்னமும் எத்தனை காலத்திற்கு அத்தகைய சமரசங்களை பெண்கள் மட்டுமே சகித்துக் கொள்ள வேண்டும்?

ஒருவகையில் இந்த ஆணாதிக்க மனோபாவத்திற்கு பெண்களும் காரணமாக இருக்கிறார்கள் என்கிற செய்தியையும் படம் பதிவு செய்கிறது. அம்ரிதா, தன் மாமியாரிடம் பேசும் அந்த உருக்கமான உரையாடல் படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. “நான் அடிவாங்கின போது யாராவது ஒருத்தராவது எனக்கு ஆறுதலா வந்து நிப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா உங்க குடும்ப மரியாதைன்னு முக்கியம்-னு நெனச்சீங்க” என்று அம்ரிதா சொல்லும் போதுதான் மாமியாருக்கும் அது புரிகிறது. ‘நீ விவாகரத்து கோரினது தப்பில்ல. நீ போ. சுதந்திரமா வாழு’ என்கிறாள். ஏனெனில் அவளுக்கும் அப்படியொரு கசப்பான வாழ்க்கை இருக்கிறது. எனவே அவளால் அம்ரிதாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்

**

ஒரு குடும்ப வண்டி எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க பெண்களின் பங்குதான் பிரதானமானது. அதற்காக பெண் சமூகம் பல்வேறு சமரசங்களை, அவமதிப்புகளை, தியாகங்களை எதிர்கொள்கிறது. ஆனால் தன் வெற்றியின் மிதப்பினால்தான் அனைத்தும் நடக்கின்றன என்கிற போலியான பெருமையை ஆண் அடைகிறான். அந்தப் பெருமிதத்துடன் பல்வேறு வன்முறைகளை பெண்ணின் மீது நிகழ்த்துகிறான்.

அம்ரிதாவிற்கு விழும் அறை இத்தனை விஷயங்களை அவளுக்குள் கிளறச் செய்கிறது. ஆண் அடித்து விட்டான் என்பதற்காக அவள் அங்கிருந்து விலகவில்லை. அந்தக் குடும்பத்தில் தன் இருப்பின் மதிப்பு என்ன என்கிற கேள்வியே அவளைத் துரத்துகிறது.

ஆண்கள் அடையும் வெற்றி கூட பெண்களுக்கு ஒருவகையில் தண்டனை என்பதற்கான உதாரணக்காட்சி இந்தப் படத்தில் இருக்கிறது.

விக்ரமின் லண்டன் வெற்றிக்காக அம்ரிதாவும் ஆவலுடன் காத்திருக்கிறாள். அந்தச் செய்தி அவளுக்கு வந்து சேர்கிறது. ஆனால் கூடவே வரும் ஒரு செய்தியினால் அவள் சற்று சங்கடம் அடைகிறாள். அன்று இரவு சுமார் நாற்பது பேர் கலந்து கொள்ளும் விருந்திற்கான ஏற்பாடுகளை அவள் செய்தாக வேண்டும். எனவே சற்று சங்கடத்துடன் அதைச் சொல்லி விட்டு அப்புறம்தான் லண்டன் தகவலை மாமியாரிடம் சொல்கிறாள்.

ஆண் வெற்றி பெறுவதற்கான கொண்டாட்டத்திற்கு கூட பெண்தான் உழைக்க வேண்டியிருக்கிறது என்கிற தகவலை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இந்தக் காட்சி.

**

ஆக தன் கணவன் ஒரே ஒரு முறை கோபத்தில் தெரியாமல் அடித்தற்காகத்தான் அம்ரிதா பிடிவாதமாக விவாகரத்தைக் கோருகிறாள் என்று இந்தப் படத்தைப் புரிந்து கொள்வதைப் போல் ஒரு தட்டையான புரிதல் இருக்கவே முடியாது. அம்ரிதாவின் முடிவிற்குப் பின்னால் ஏராளமான இழைகள் இருக்கின்றன என்பதற்கான பல சாட்சியங்கள் இந்தத் திரைப்படத்தில் இறைந்திருக்கின்றன.

எந்த வெற்றிக்காக விக்ரன் அத்தனை அல்லாடினானோ, அம்ரிதா இல்லாமல் அந்த வெற்றியை அவனால் சுவைக்க முடிவதில்லை. அத்தனையையும் கைவிட்டு விட்டு மன்னிப்புடன் அம்ரிதாவின் முடிவை ஏற்றுக் கொள்கிறான். அவளுடைய இருப்புதான் அவனுடைய வெற்றியை முழுமையாக்குகிறது என்பதை அவன் இறுதியில்தான் புரிந்து கொள்கிறான். நுண்ணுணர்வுள்ள பார்வையாளர்கள் வந்தடைய வேண்டிய இடமும் இதுவே.

**

இதைப் போலவே திருமணம் என்கிற நிறுவனத்திலிருந்து பெண்கள் விலகுவதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி என்பதைப் போல தட்டையாக வேறு சிலர் புரிந்து வைத்திருக்கலாம்.

பெண்கள் குடும்பத்திற்காக பல சமரசங்களை, தியாகங்களை, அவமதிப்புகளை எதிர்கொண்ட காலம் மலையேறி விட்டது. நவீன காலப் பெண்களிடம் இன்னமும் ஆணாதிக்க மனோபாவம் செல்லுபடியாகாது. அறிவுத் தேடலும் பொருளாதார சுதந்திரமும் கொண்ட பெண்கள், ஆண்களுக்கு தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்கிற உணர்வை அடையத் துவங்கியிருக்கிறார்கள்.

எனவே இனி மேல் திருமணம் செய்யப் போகும் ஆண்கள், எந்தவொரு காரணத்திற்காகவும் தங்களின் கோபத்தின் வடிகாலாக பெண்களை உபயோகிக்க முடியாது. அப்படியொரு அழுத்தமான செய்தியை இந்தத் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.

இறுதிக்காட்சியில் விக்ரமின் மேலதிகாரி சொல்கிறார் “உன் கோபத்தைக் காண்பிக்க என்னையோ, தலைமை அதிகாரியையோ உன்னால் அடித்திருக்க முடியுமா? எளிய வாய்ப்பாக இருந்த மனைவியை அடித்து விட்டாய். நீ செய்தது தவறு” என்கிறார்.

ஆண்கள் தங்களிடமுள்ள கோப தாபங்களின் வடிகாலாக பெண்களை கிள்ளுகீரை போல பயன்படுத்திக் கொள்ள முடியாது, இனிமேலும் அதை இயல்பு என்று பெண்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே படம் சொல்லும் முக்கியமான செய்தி.

என்னதான் நாகரிக உலகத்தை நோக்கி நடைபோடுகிறவர்களாக நம்மை சொல்லிக் கொண்டாலும், ஆணாதிக்க சூழல் காரணமாக வர்க்க பேதமின்றி ஏறத்தாழ அனைத்துக் குடும்பங்களிலும் குடும்ப வன்முறை இன்னமும் கூட குறையாமல் இருக்கிறது. இந்தச் சூழலில், பெண்களின் தரப்பிடமிருந்து ஒரு பலத்த எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது, இந்தத் திரைப்படம்

suresh kannan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. அப்படி தேர்ந்து எடுத்து பார்த்த படங்களில் அதிகம் பிடித்தது இந்தப்படமே.  இடைவேளைக்கு பின் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் படம் கூறும் செய்தி உண்மையானது என்பதால் அந்த குறை பெரிதாக தோன்றவில்லை.

மிகவும் அருமையான விமர்சனத்தை இணைத்துள்ளீர்கள் ஏராளன். நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.