Jump to content

மக்கள் மயப்படாத அரசியலின் சில்லறை சண்டைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மயப்படாத அரசியலின் சில்லறை சண்டைகள்

-ஏகலைவா

அண்மையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில், ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன.   

ஒருபுறம், அவை, அவரைச் சாடுவதற்கான சாட்டாகவும் இன்னொருபுறம், அவருக்கான வக்காளத்தாகவும் தொடர்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின், பயனற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல்களின் ஓர் அத்தியாயமாகவே இதை நோக்க வேண்டியுள்ளது.   

தமிழ்ச் சமூகம், தனக்குத் தானே கேட்க வேண்டிய, எத்தனையோ கேள்விகள் உள்ளன. விமர்சனமும் சுயவிமர்சனமும் இல்லாத சூழல், இன்றும் தொடர்கிறது. அத்தனை கேடுகளின் ஊற்றுக்கண் இது.   

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான விவாதத்தை, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தடை செய்து, அது “விவாதத்துக்கு உரியதல்ல; அது, முடிந்த முடிவு” என்று, எப்போது அறிவித்தாரோ அன்றே, ஈழத்தமிழ் அரசியலின் ஜனநாயகப் பண்புகளுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

அண்ணனின் வழியில், தம்பிகள் தொடர்ந்தார்கள். இப்போது, அதையே சமூக ஊடகப் போராளிகள் செய்கிறார்கள். இப்போதும், துரோகிப் பட்டங்கள் இலகுவாகச் சூட்டப்படுகின்றன.   

போருக்குப் பின்னரான, கடந்த 11 ஆண்டுகளில், ஈழத் தமிழ் அரசியல், எதைச் சாதித்திருக்கிறது என்ற கேள்வியை, யாரும் கேட்பாரில்லை. இது, மிகவும் சங்கடமான கேள்வி.   

ஏனெனில், எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் ஆகிய இரண்டையும் நாம் செய்திருக்கிறோம். போதாக்குறைக்கு, வடக்கு - கிழக்கிலுள்ள மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என எல்லாம், தமிழ் அரசியல் கட்சிகளின் கைகளிலேயே இருந்திருக்கின்றன; இருக்கின்றன; இனியும் இருக்கும். அதன் வினைதிறன் குறித்தோ, செய்யத்தவறிய விடயங்கள் குறித்தோ, இதுவரை மனந்திறந்து பேசியிருக்கிறோமா?   

தமிழ்த் தேசிய அரசியல் களத்தில், வேலைத்திட்டங்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. தேர்தல் காலங்களில் கூட, வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுவதில்லை. தேர்தல் விஞ்ஞாபனங்கள், வெறும் வார்த்தைகளால் நிரப்பப்பட்ட குப்பைகளாகவே இருந்திருக்கின்றன. இதனால்தான் ஒரு பகுதியினரால், தீபாவளி, பொங்கல், அடுத்த தீபாவளிக்குத் தீர்வு வரும் என்று, நெஞ்சாரப் பொய்யுரைத்துக் காலம் கடத்த முடிகிறது.   

இன்னும் கொஞ்சப் பேரால், கோட்பாட்டு அரசியல் என்ற பெயரால், நடைமுறையில் இருந்து விலகிய அரசியலைச் செய்ய முடிகிறது.   

மீதிப் பேர், அரசாங்கத்துடன் நின்று, தங்கள் தேவைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் பெயரால், அரசியல் நடத்தும் அனைவரும், இவற்றையே செய்கிறார்கள். ஏனெனில், “பேச்சுப் பல்லக்கு, தம்பி எப்போதும் கால்நடை” தான்.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலைப் பேசுபவர்களாகட்டும், “புலி”யரசியலைப் பேசுபவர்களாகட்டும், தீவிர தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுபவர்களாட்டும், அபிவிருத்தி அரசியலைச் செய்பவர்களாகட்டும் அனைவரும், கடந்த காலங்களில் எந்தப் பக்கம் நின்றார்கள் என்று, ஒருமுறை திரும்பிப் பார்த்தால், இந்தப் பயனற்ற சண்டைகள், ஏன் நடக்கின்றன என்று விளக்கும்.   

சுண்ணாகத்தில் நீர் மாசாகி, அங்குள்ள மக்கள் இந்நீரைப் பருகலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு மேற்சொன்ன யாரும் பதிலளிக்கவில்லை.   

புத்தூரில், சுடலைப் பிரச்சினையில் இவர்கள் அனைவரும், யார் பக்கம் நின்றார்கள்? அனைவரும், மக்கள் பக்கம் நிற்கவில்லை; அநியாயத்தின் பக்கம் நின்றார்கள்; சாதிய ஒடுக்குமுறையாளர்களின் பக்கம் நின்றார்கள்.   

இவ்விரண்டு உதாரணங்களும், தெளிவாகச் சொல்கிற செய்தி ஒன்றுண்டு. இன்று, சமூக வலைத்தளங்களில் நடக்கும் சண்டைகள், மக்கள் நோக்கிலான சண்டையில்லை; மக்களுக்காகச் சண்டையிடவில்லை.   

ஏனெனில், இவை மக்களுக்கான சண்டையாயின், தமிழ் மக்களின் வாழ்வில், பயனுள்ள மாற்றம் சிறிதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும்; ஆனால், அது நிகழவில்லை.   

இந்த வார நிகழ்வு சுட்டுகிற, இன்னொரு செய்தியொன்று உண்டு. தமிழ்த் தேசிய அரசியல், தனிநபர்களைத் தாண்டியதாக இன்னமும் வளரவில்லை. சேர். பொன்னம்பலம் இராமநாதன், கணபதி காங்கேசர் பொன்னம்பலம், சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றே தொடர்ந்திருக்கிறது. இதன் ஒருவகையான தொடர்ச்சியே, இப்போது நிகழும் சில்லறைச் சண்டைகளும் ஆகும்.   

இதில், வருந்தத்தக்க உண்மை யாதெனில், தனிமனித அரசியலே ஈழத் தமிழ்த் தேசிய அரசியலாக இருந்து வந்திருக்கிறது; இப்போதும் இருக்கிறது. இது, எப்போதும் மக்கள் மயப்பட்டதாக இல்லை; மக்கள் மயப்படும்போது, மக்கள் வினாத்தொடுப்பர்; விமர்சிப்பர்; கண்டிப்பர்.   

இந்த நிலைமையை, எந்தத் தமிழ்த் தேசிய அரசியல்வாதியோ, அவர்தம் அடிப்பொடிகளோ விரும்பியதில்லை. தமிழ்த் தேசிய அரசியல், மக்கள் மயப்படாத வகையில், தமிழ்த் தேசிய அரசியலில், ஜனநாயகத்துக்கு இடமிருக்காது.   

எவ்வாறு, சிங்கள - பௌத்த தேசியவாதம், சிறுபான்மை இனங்களின் அச்சுறுத்தலைக் காட்டிக் காலம் கடத்துகிறதோ, அதேபோல, சிங்கள - பௌத்த தேசியவாதத்தைக் காரணம்காட்டி, தமிழ்த் தேசிய அரசியலும் காலம் தள்ளும்; தமிழ் மக்கள், தொடர்ந்தும் இன்னல்களுடன் துன்புற்றிருப்பர்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்கள்-மயப்படாத-அரசியலின்-சில்லறை-சண்டைகள்/91-250255

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.