Jump to content

சீனாவின் இராஜதந்திர விவேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் இராஜதந்திர விவேகம்

global-inside.02.jpgஇந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ‘ த இந்து ‘ பத்திரிகையில் “கொவிட் — 19 வைரஸ் தொற்றுநோய்கக்குப் பின்னரான உலகிற்கு முகங்கொடுக்க சீனா சிறப்பானமுறையில் தயாராகியிருக்கிறது” என்ற தலைப்பில் இவ்வாரம் ஒரு ஆய்வுக்கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சீனா கையாண்ட முறை தொடர்பாக, குறிப்பாக கடந்த வருட இறுதியிலும் இவ்வருட முற்பகுதியிலும் கடைப்பிடித்த அணுகுமுறைகள் தொடர்பாக உலக நாடுகளிடமிருந்து – முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடமிருந்து – வருகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்ச்சையை தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த மகாநாட்டில் பெய்ஜிங் சாதுரியமாக சமாளித்த பின்னர்தான் நாராயணன் இந்த ஆய்வை எழுதினாரா என்பது தெரியவில்லை.

ஆனால், ஜெனீவா மகாநாட்டில் சுகாதார நிறுவனத்தின் பெரும்பாலான உறுப்புநாடுகளின் விமர்சனங்களுக்கு முகங்கொடு்க்கவேண்டியிருந்த போதிலும், சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சீனா கடைப்பிடித்த அணுகுமுறை கொவிட் — 19 க்கு பின்னரான உலகை எதிர்நோக்குவதற்கு அது தெளிவான தந்திரோபாயத்தை வகுத்துச் செயற்பட ஆரம்பித்திருக்கிறது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

ஜெனீவா மகாநாட்டில் கொவிட் — 19 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சீனா அளித்த ஆதரவு கொரோனாவைரஸின் மூலமுதல் மற்றும் பரவல் தொடர்பாக சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்வதற்கு இருந்துவந்த முக்கியமான முட்டுக்கட்டைகளில் ஒன்றை அகற்றியிருக்கிறது என்ற அபிப்பிராயத்தை சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் பொதுவில் கொண்டிருக்கிறார்கள். அந்த தீர்மானம் கொவிட் — 19 நெருக்கடியை உலக சுகாதார நிறுவனம் கையாண்ட முறை குறித்து “பக்கச்சார்பற்றதும் சுயாதீனமானதுமான விரிவான மதிப்பீடொன்றை” கோருகிறது. கொரேனாவைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியது என்பதையும் அடையாளம் காணுமாறும் தீர்மானம் கேட்கிறது.

5000-2-18.jpgதொற்றுநோயின் மூலமுதல் குறித்தும் இது விடயத்தில் சீனா இழைத்திருக்கக்கூடிய தவறுகள் குறித்தும் விசாரணையொன்றைக் கோருவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த மகாநாட்டில் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு அவுஸ்திரேலியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக மேற்கொண்ட முயற்சிகளை பெய்ஜிங் எதிர்த்தது.அத்தகைய ஒரு விசாரணை வைரஸ் பரவல் உலகளாவிய ஒரு பெருந்தொற்றுநோயாக மாறுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய தனது தவறுகளை அம்பலப்படுத்திவிடும் என்று சீனா அஞ்சுகிறது போலும்.

ஜெனீவா மகாநாட்டில் சுயாதீனமான விசாரணையொன்றுக்கு ஆதரவு அளிப்பதற்கான சமிக்ஞையை சீனா வெளிக்காட்டியிருந்தது. தீர்மானத்தை பெரும் எண்ணிக்கையான நாடுகள் ஆதரித்த சூழ்நிலையில், தனிமைப்படுவதைத் தவிர்ப்பதில் தருணப்பொருத்தமான “இராஜதந்திர விவேகத்தை” சீனத் தலைமைத்துவம் பயன்படுத்தியிருக்கிறது. தீர்மானத்தின் வாசகங்களின் கடுமையை தணிப்பதற்கும் சீனாவினால் இயலுமாக இருந்தது என்பது மிகவும் முக்கிய கவனத்திற்குரியதாகும்.

இறுதியாக, இப்போது சீனாவல்ல, உலக சுகாதார நிறுவனமே நுணுக்கமான ஆய்வுக்கு இலக்காக இருக்கப்போகிறது. தவிரவும், விசாரணையொன்றை அல்ல, மதிப்பீடொன்றையே தீர்மானம் கோருகிறது.ஜெனீவா மாகாநாட்டு பேராளர்களுக்கு பெய்ஜிங்கில் இருந்து வீடியோ தொடர்பு மூலம் உரையாற்றிய ஜனாதிபதி சி ஜின்பிங், “தொற்றுநோய் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்போது” மதிப்பீடொன்றைச் செய்வதற்கு ஆதரவளிப்பதற்கான அறிகுறிகளைக் காடடியிருந்தார். அது உலக நாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. ஏனென்றால், தொற்றுநோய் கட்டுப்பாட்டில் வருவதற்கு பல மாதங்கள் …. ஏன் பல வருடங்களும் கூட பிடிக்கலாம். கொவிட் — 19 பரவலுக்கு வசதியாக அமைந்திருக்கக்கூடிய தவறுகளை அல்லது குறைபாடுகளை உலகம் உடனடியாக அறிந்துகொள்ளவேண்டியது, விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமானது. அதனால், காலத்தைக் கடத்தும் சீனாவின் தந்திரங்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் எடுபடவில்லை.

who.pngஉலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலான பக்கச்சார்பற்ற மதிப்பீடொன்று அதன் செயற்பாடுகளில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் சர்ச்சைக்கும் சந்தேகத்துக்குமுரியவையாக இருந்தாலும் கூட, கொவிட் — 19 நெருக்கடியில் உலக சுகாதார நிறுவனம் கையாண்ட அணுகுமுறைகளிலும் செயற்பாடுகளிலும் – குறிப்பாக ஆரம்பக்கட்டங்களில் — குறைபாடுகள் இருந்தன என்பது என்றுதான் கூறவேண்டும்.

நெருங்கிவந்துகொண்டிருந்த பொதுச்சுகாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை சுகாதார நிறுவனம் குறைத்து மதிப்பிட்டதுடன் கொவிட் — 19 பரவல் உலகளாவிய பெருந்தொற்றுநோயாக மாறுவதற்கான புவியியல் பரவலுக்கான சகல ஆபத்து அறிகுறிகளும் தெளிவாகத்தெரிந்த பின்னரும் கூட அதை சர்வதேச அக்கறைக்குரிய பொதுச்சுகாதார நெருக்கடியாக பிரகடனம் செய்வதை சுகாதார நிறுவனம் பல வாரங்களாக தாமதித்தது.

இது விடயத்தில் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் கெபிரியேசஸ் நடந்துகொண்ட விதம் அவருக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால நெருக்கம் குறித்த வரலாற்றை விமர்சகர்கள் நினைவுமீட்டும் நிலையை ஏற்படுத்தியது.தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியமைக்காக சீனா உலகின் கண்டனத்துக்குள்ளாவதை தவிர்க்கும் நோக்கில் ரெட்ரோஸ் செயற்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுதலிக்கக்கூடிய நம்பகத்தன்மையான தர்க்கநியாயங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் தரப்பில் இருந்து வரவில்லை.

எது எவ்வாறிருந்தாலும், தவறு எங்கே இடம்பெற்றது என்பதை தெரிந்துகொள்வதற்கான உரிமையும் அவசியமும் உலகத்துக்கு இருக்கிறது.

 

ttp://thinakkural.lk/article/42859

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.