Jump to content

துரோகம் செய்தது பிரபாவா.. ராஜீவா..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 9 people, people standing
 
#பிரபாகரனை ராஜீவ் ஏமாற்றினாரா? ராஜீவை பிரபாகரன் ஏமாற்றினாரா?
...............................................
ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை?

1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி.

ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்து கொள்ளப் போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள்.

பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள்.

இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள்.

அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார்.

அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார்.

'ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம்.

அதற்கு ராஜீவ் காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார்.

இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.

ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்சினையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும் என ராஜீவ் கூறினார்.
..
இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த இரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார்.

அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார்.

இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்த போது அவரைத் தட்டிக் கேட்கவில்லை.

1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை.

2. வடகிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.
3. சிங்கள ஊர்க்காவல் படையிடம் இருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை.

உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்த போது, திலீபன் சாகும்வரை உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி வாயைத் திறக்கவில்லை.

இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது.

சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலி செய்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய இராணுவத் தளபதியின் அனுமதி பெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மறித்த சிங்களக் கடற்படை, அவர்களைக் கைது செய்தது.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார்.

சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை.

17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார்.

ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார்.

இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்து வந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள இராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக்கொண்டனர்.
..
ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ் காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய இராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

விடுதலைப் புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்?

இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன.

பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துசெய்யப் போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார்.

இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ் காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார்.

இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார்.

உடன்பாடு ரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார்.

போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்பாடு செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனாவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார்.

புலிகளுடன் போர் தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது.

ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது.

போஃபர்ஸ் பிரச்சினையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக் கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது.

துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன...

பகிர்வு... 
பிடல் சேகுவேரா இராசிபுரம் 
Link to post
Share on other sites

இலங்கை இனப்பிரச்சினை எனும் அரசியல் சதுரங்கத்தில் “ஹிந்தியா” தப்பாட்டம் ஆடி “ராஜாவை” இழந்ததுதான் மிச்சம்...

அத்தப்பாட்டம் இன்றும் தொடர்வதுதான் சோகம்...

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.