Jump to content

ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும்

5000-2-25.jpgசகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான மூன்று சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

கடந்த வாரத்தில் போரின் முடிவினை நினைவுகூரும் செயன்முறைகள் இலங்கையில் வாழும் சமூகங்களினாலும், இலங்கைக்கு வெளியில் வாழும் புலம்பெயர் இலங்கையினராலும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலே சமூக வலைத்தளங்களிலே இந்த நினைவுக்கூரற் செயன்முறைகள் போர் பற்றிய பல சிக்கலான‌‌ நினைவுகளை வெளிக்கொண்டு வந்தன. போரின் போதும், அதன் முடிவின் போதும் அரசினால் மட்டுமன்றி விடுதலைப் புலிகள் உள்ளடங்கலான ஆயுதப் போராட்டக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்தும் சிலர் தமது கருத்துக்களையும், நினைவுகளையும் முன்வைத்தனர். இது ஜனநாயக ரீதியிலே ஓர் ஆரோக்கியமான செயன்முறையே.

ஆனாலும், விடுதலைப் புலிகளின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டோரும், அவர்களைச் சார்ந்தோரும் தமது நினைவுகளையும், கருத்துக்களையும், நினைவுகூரற் காலப் பகுதியிலே பொதுத் தளங்களிலே வெளியிட்ட போது, அவர்களின் குரல்களை ஏற்க மறுக்கும் வகையிலும், சுயவிமர்சனக் கருத்துக்களுக்கு இடமளிக்காத வகையிலும் சிலர் செயற்பட்டனர். ஆயுதப் போராட்டத்தினை விமர்சனபூர்வமாக அணுகும் ஜூட் ரட்ணத்தின் டீமன்ஸ் இன் பரடைஸ் என்ற திரைப்படத்தினை 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே திரையிடுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள், அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பிலே வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக அவரினைத் துரோகியாக்கும் முயற்சிகள், நினைவுகூரற் செயற்பாடுகளிலே புலிகளை விமர்சிப்போர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றன, ஆயுதப் போராட்டம் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட முடியாத ஒரு புனிதம் என்ற கருத்தியல் இன்றும் கூட எமது சமூகத்தின் சில தரப்பினரிடையே வேரூன்றி இருப்பதனை வெளிக்காட்டுகின்றன.

 

ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற போது அது தொடர்பான கருத்துக்களைப் பொதுவெளியிலே முன்வைப்போர் கடத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், அல்லது அவர்கள் வடக்குக் கிழக்கிலே வாழ்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இன்று ஆயுதப் போராட்டம் ஓய்ந்த நிலையிலே, அதனை நிராகரிப்போர் மீதும், அது பற்றி விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போரின் மீதும் வெறுப்பு விதைக்கப்படுகிறது. சிங்கள பௌத்தப் பெரும்பான்மைவாதத்தினாலும், இராணுவமயமாக்கத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அந்தப் பாதிப்புக்களுக்காக நீதி கோரும் நாம், எமது சமூகங்களினுள்ளே கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்துப் பேசுவோர் மீதும், அந்த ஞாபகங்களினைப் பொது வெளியிலே பகிருவோர் மீதும், எதிர்ப்பினை வெளியிடுவதும், அவர்களைக் கைகழுவி விடுவது போல செயற்படுவதும் மிகவும் கவலைக்குரிய விடயம்.

தமிழ் சமூகமும் அதனுடன் இணைந்து வாழும் சமூகங்களும் இவ்வாறு மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். விமர்சனங்களுக்கான வெளிகளை வழங்க முடியாத நிலைமையும், விமர்சகர்கள் துரோகியாக்கபடுவதும் தொடருமானால், எமது சமூகம் வெறுப்பூட்டும் ஒரு கருத்தியலுக்குள் சிக்கிவிடக் கூடிய அபாயம் ஏற்படும். சுயவிமர்சனத்துக்கு இடமளிக்கும், முற்போக்கான பன்மைத்துவத்தினை மதிக்கும் சமூகங்களினால் மாத்திரமே புதிய அரசியற் பார்வைகளினையும், புதிய அரசியல் செயல்முறைகளையும் உருவாக்கிட முடியும் என்பதனை நாம் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியவாத அரசியலிலே துரோகி அடையாளம்

ஆயுதப் போராட்டத்துக்கு முன்னைய காலங்களிலேயே தமது தேசியவாத நிலைப்பாடுகளுடன் உடன்படாத தமிழ் அரசியல்வாதிகளையும், இலங்கையின் தேசிய ரீதியிலான அரசியற் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்போரினையும் துரோகிகள் என்று சொல்லும் அரசியல் தமிழ்த் தேசியர்களால் முன்னெடுக்கப்பட்டது. துரோகிகளைக் கட்டமைக்கும் வெறுப்பூட்டும் அரசியலினை உருவாக்குவதிலே தம்மை அகிம்சைவாதிகள் என்று சொல்லிக் கொண்ட தமிழரசுக் கட்சியனருக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஆரம்பித்து வைத்த துரோகிக் கருத்தியலினையே புலிகள் உள்ளடங்கலாகப் பின்னர் வந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களும் பின்பற்றத் தொடங்கினர்.

போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ஆயுதப் போராட்டத்தின் வறுமைகளையும், புறமொதுக்குதல்களையும் கேள்விக்குட்படுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜனி திராணகம அதே பல்கலைக்கழகத்தின் மாணவர்களான கவிஞர் செல்வி, ஜோர்ஜ் மனோகரன் போன்றோர் உள்ளடங்கலாகப் பலர் கொலை செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், தங்கத்துரை, சரோஜினி யோகேஸ்வரன் போன்றோரும், ஆயுதப் போராட்டத்துக்கு மாற்றான வழிகளிலே விடுதலைக்குத் தீர்வுகளைத் தேடுவதற்கு முயற்சித்த வேளையிலே கொல்லப்பட்டனர்.

 

இடதுசாரி நிலைப்பாட்டில் அரசியல் முயற்சிகளினை மேற்கொண்டோர் கடுமையான அச்சுறுதல்களுக்கு உள்ளாகினர். அவர்களது கட்சிகள் கூட வடக்குக் கிழக்கிலே இயங்க முடியாது இருந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு வெளியில் இருந்து யாராவது அரசியல் செய்யும் போதும் கூட தம்மைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அவர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி இருந்தனர்.

1980களின் நடுப்பகுதியிலே வேறு போராட்ட இயக்கங்களைத் துரோகிகளாக முத்திரை குத்திக் கொன்று குவித்ததன் பின்னரே புலிகள் தமிழ் ஆயுதப் போராட்டப் பரப்பிலே தனிப்பெரும் சக்தியாக உருவாகினார்கள். இந்தக் கொலைகளைக் கண்டும் காணாதது போலவும், அவை குறித்து மௌனிகளாகவும், சில வேளைகளிலே அவற்றினை நியாயப்படுத்துபவர்களாகவும் நாம் இருந்திருக்கிறோம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தின் அவலமான விளைவுகளுக்கு நாமும் பொறுப்பு என்பதனையும் ஏற்க வேண்டும்.

தமிழர்களைத் தனிமைப்படுத்துவதில் ஆயுதப் போராட்டத்தின் பங்கு

தமிழ் மக்கள் மிகவும் நீண்ட காலமாக அவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தமக்கு சமஷ்டி அடிப்படையிலான பிராந்திய சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பது உள்ளடங்கலான சில நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து சாத்வீகப் போராட்டங்களை நடாத்தினர். இந்தக் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்க மறுத்த இலங்கையினை ஆட்சி செய்த அரசாங்கங்கள், அரசினையும், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளினையும் சிங்கள பௌத்த மயமாக்கும் பணிகளிலே ஈடுபட்டனர். இவ்வாறான புறக்கணிப்புக்களை எதிர்கொண்ட நிலையிலேயே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் உருவானது. இந்தப் போராட்டம் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையினை முன்னிறுத்தினாலும், இது ஒரு கட்டத்திலே தமிழ் மக்கள் மத்தியில் உள்ளக‌ ஜனநாயகம் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகியது.

ஆயுதப் போராட்டத்தின் கொடிய விளைவுகளில் ஒன்றாகவே வட பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாகப் புலிகளினால் வெளியேற்றப்பட்டனர். தென்னிலங்கையிலே பேரூந்துகளிலே பயணித்த, சமய வழிபாட்டுத் தலங்களிலே ஒன்று கூடிய சிங்கள மக்களின் மீதும், வடக்குக் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் மீதும் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எம்மீது இனவாதம் மிக்க அரசினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்குப் பதிலடியாகவே நாம் இந்த வன்முறையினை மேற்கொண்டோம் என, இந்த வன்முறையின் பாதிப்புக்களைப் பற்றிச் சிந்திக்காது, எமது வன்முறையினை நாம் நியாயப்படுத்தி வந்தோம். இதனால் தமிழர்கள் நாட்டில் வாழ்ந்த ஏனைய சமூகங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டோம். இனங்களுக்கு இடையிலான உறவுகளிலே அவதானிக்கப்பட்ட பிளவுகள் மேலும் கூர்மை அடைந்தன.

ஏற்கனவே பலவழிகளிலே புறமொதுக்கல்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய அரசியல் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்ட காலத்தில் மேலும் மோசமான புறமொதுக்குதல்களை உருவாக்கியது. இது தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான நியாயப்பாடுகளை உண்ணாட்டிலும், வெளிநாடுகளிலும் முன்கொண்டு செல்லுவதற்குப் பதிலாக அவற்றினை வலுவிழக்கச் செய்தது. ஒருவிதமான சுய அழிவினையும் இந்தப் போராட்டம் மக்கள் மீது ஏற்படுத்தியது. அரசின் கொடிய வன்முறைகளுக்கு மேலதிகமாக ஆயுதப் போராட்டத்தின் வன்முறைகளையும் சுமக்க வேண்டியவர்களாக வடக்குக் கிழக்கு வாழ் மக்கள் மாறினோம்.

சமூக விடுதலை முயற்சிகளிலே ஆயுதப் போராட்டத்தின் தாக்கம்

ஆயுதப் போராட்ட காலத்திலே மக்களின் சமூக விடுதலைக்கான போராட்டங்களும் சில வகைகளிலே பின்னடைவினை எதிர்கொண்டன. புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் சாதி ரீதியில் மக்களை ஒடுக்கும் சில நடைமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தமை, ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் வாழ்விலே சில சாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கங்கள் செயற்படுவதற்குப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டம் இடமளிக்கவில்லை. மக்கள் மத்தியில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கூட்டுக் கருத்துருவாக்கம் இடம்பெறுவதற்கான வெளிகள் குறுக்கப்பட்டன.

பெண்களின் விடுதலையினை ஆயுதப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியத்துக்குமான அவர்களின் பங்களிப்பு என்பதன் ஊடாகவே புலிகளின் அரசியல் பெரும்பாலான வேளைகளிலே விளங்கப்படுத்த முற்பட்டது. மாற்று அரசியற் கருத்துக்களைக் கொண்ட பெண்கள் கொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கான பாலியல் சுதந்திரம், ஆடைச் சுதந்திரம் போன்ற விடயங்களும் ஆயுதப் போராட்ட காலங்களிலே கட்டுப்படுத்தப்பட்டன. பல்வேறு நாடுகளிலே தேசியவாதச் சூழல்களிலே அவதானிக்கப்பட்டது போல, பெண்ணின் தலையில் தேசத்தின் கலாசாரத்தினைச் சுமக்கும் பொறுப்பினை தமிழ்த் தேசியவாதமும் ஊக்குவித்தது. பெண் விடுதலையினை அரசியல், சமூக, கலாசாரத் தளங்களின் ஊடாக, பன்முகப்படுத்தப்பட்ட முறையில் முன்னெடுக்க விரும்பிய பெண் செயற்பாட்டாளர்களை மேலைத்தேயப் பெண்ணியவாதிகள் என முத்திரை குத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

ஆயுதப் போராட்டம் பற்றிய பல விதமான பார்வைகள்

ஆயுதப் போராட்டத்தினை அகிம்சை நிலையில் இருந்து அறமற்ற போராட்டம் என முற்றாக நிராகரிப்போர், அதனைத் தாம் விரும்பாத நிலையில் இயக்கங்கள் தம்மீது திணித்ததாகச் சொல்வோர், ஆயுதப் போராட்டம் சுய அழிவினை ஏற்படுத்தும் நிலையினை எட்டுவதற்கு முன்னரான அதனது காலப் பகுதியினை ஆதரிப்போர், 1987 இல் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முந்தைய ஆயுதப் போராட்டத்தினை ஆதரிப்போர், ஆயுதப் போராட்டத்தின் நல்ல பக்கங்கள் எவை கெடுதியான பக்கங்கள் எவை என வேறுபடுத்தி அதன் அடிப்படையில் ஆயுதப் போராட்டம் பற்றி விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆதரிப்பவர்கள் எனத் தமிழ் சமூகத்திலே ஆயுதப் போராட்டத்தினை ஆதரிக்கும், நிராகரிக்கும் பல வகையான தரப்பினர் இருக்கிறார்கள். இவ்வாறான பன்மைத்தன்மையான கருத்துக்களைக் கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிலே ஆயுதப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாதோரைத் துரோகிகள் எனவும், தமிழர்களுக்கு விரோதமானவர்கள் எனவும், அரச ஆதரவாளர்கள் எனவும், ஒத்தோடிகள் எனவும், அவர்கள் தமிழர்களே இல்லை என்றும், அல்லது அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலினை முன்னிறுத்தும் கட்சிகளிலே பங்குபற்ற முடியாது என்று சொல்லும் போக்குகள் மிகவும் அபாயகரமான மனநிலை ஒன்று எம்மத்தியிலே இருப்பதனையே காட்டுகிறன.

பல குறைபாடுகளைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சன ரீதியாக அணுகுவது, நாம் எமது நிகழகால மற்றும் எதிர்கால சமூகப் பொருளாதார அரசியல் விடுதலையினை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும். ஆயுதப் போராட்டத்தினைச் சுயவிமர்சனம் செய்வது என்பது போராட்டத்தில் ஈடுபட்டோரினை காட்டுமிராண்டிகள் என்றோ வக்கிர மனநிலை கொண்டவர்கள் என்றோ முத்திரை குத்தி, எம்மை அவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் புனிதர்களாகக் காட்டும் ஒரு முயற்சி அல்ல. போராட்டத்தினை மேற்கொண்டவர்களும் எமது சமூகத்தில் இருந்து வந்தவர்களே. அவர்கள் எமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சில கருத்தியல்களையே பிரதிபலிக்கிறார்கள். எனவே சுயபரிசோதனை என்பது போராட்டத்தின் போதாமைகளுக்கும், வன்முறைகளுக்கும், புறமொதுக்கல்களுக்கும் நாம் சமூகங்களாகப் பொறுப்பேற்கும் ஒரு முயற்சியே. இவ்வாறான ஒரு முயற்சியின் மூலமே நாம் புதியதோர் திசையில் சமூகங்களின் கூட்டாக எமது விடுதலையினை நோக்கிப் பயணிக்க‌ முடியும்.

http://thinakkural.lk/article/42950

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.