Jump to content

கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்?

லிண்டா கெட்டெஸ் பிபிசிக்காக
கொரோனா வைரஸ்Getty Images

கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

24 மணி நேர காலத்தில் வெளிச்சம் மற்றும் இருட்டு என்ற உலக வாழ்க்கைக்கு மனிதர்களின் உடல் பழகி வளர்ந்துள்ளது. சூரிய வெளிச்சத்தைப் பொருத்து செயல்படும் வகையில் நமது உடல்கள் அமைந்துள்ளன. புற ஊதா கதிர்கள் நமது தோலில் படும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆவதை நல்ல உதாரணமாகக் கூறலாம். வைட்டமின் டி நமக்கு தினமும் கிடைப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுகின்றன. அது நமது நோய் எதிர்ப்பு செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நமது நுரையீரல்களில் உள்ள பேருண்ணிகளுக்கு வைட்டமின் டி சக்தியைத் தருகிறது. இவை தான் சுவாச மண்டலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் முதல்வரிசை வீரர்களைப் போன்றவை. நுண்ணுயிர்களை எதிர்க்கக் கூடிய புரதத்தை உற்பத்தி செய்யும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அது நேரடியாகத் தாக்கிக் கொன்றுவிடும். B மற்றும் T செல்கள் போன்ற மற்ற நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளையும் அது ஊக்குவிக்கும். நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை காரணமாக இருக்கின்றன. வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு, சளிக்காய்ச்சல் என்ற மூச்சுக் குழாய்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம்.

கோவிட்-19 நோயுடன் தொடர்புடைய தீவிர சிக்கல்களைக் குறைப்பதற்கு வைட்டமின் டி சத்துள்ள மருந்துகளைத் தரலாமா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். கோவிட் 19 நோய்த் தாக்குதலால் அதிகம் உயிரிழப்புகள் நிகழ்ந்த ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பியர்களுக்கு வைட்டமின் டி அளவு மிகக் குறைவாக இருந்தது என்று இந்த மாத ஆரம்பத்தில், டூப்ளின் டிரினிட்டி கல்லூரி முதுமையியல் நிபுணர் ரோஸ் கென்னியும், அந்தப் பெண்ணின் சகாக்களும் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'  

சூரிய வெப்பமான காலத்தில், இது உணர்வுகளுக்குப் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். ஆனால், அதிக நேரத்தை வீட்டுக்குள்ளேயே செலவிடும் வாழ்க்கை முறைக்கு மாறி, இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சூரிய ஒளி படுவதைத் தடுக்கும் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துவதைப் பார்க்கும் போது, வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கு அவை காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த நாடுகளில் கோவிட் - 19 பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், ``வைட்டமின் டி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவையும் காரணமாக இருந்திருக்கலாம் என்பதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் வலுவாக உள்ளன. குறிப்பாக தீவிர கோவிட் பாதிப்பு சூழ்நிலையில் இந்த காரணங்கள் கூறப்படுகின்றன'' என்று கென்னி கூறுகிறார். 

முதலில், முதலில் இன்டர்லெயுக்கின்-6 என்ற அழற்சியை ஏற்படுத்தும் உயிரிவேதிப் பொருளை வைட்டமின் டி குறைப்பதாகத் தெரிகிறது. இந்த அழற்சி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நுரையீரலில் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் நுழைந்து நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ACE2 உணர்பொறியின் தன்மையையும் வைட்டமின் டி மாற்றுகிறது. ஏற்கெனவே வைட்டமின் டி இந்த மாற்றத்தைச் செய்திருந்தால், கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து தொற்றிக் கொள்வது சிரமம் ஆகிவிடும்.

இந்தப் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வதற்கு, தன்னியல்பான, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இப்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தில் பெரியவர்கள் அனைவரும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது நல்லது என்று கென்னி கூறுகிறார். பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் நிறைய நேரத்தை வெளியில் செலவிட்டு அதிக வைட்டமின் டி பெற்றுக் கொள்வது வேறு பல நன்மைகளையும் கொண்டு வரும் என்றும் வலுவாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்Getty Images

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் கோவிட்-19 தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதற்கு அறிவியல்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், சளிக் காய்ச்சல் மற்றும் சாதாரண சளி போன்ற மற்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக நமது தற்காப்பை அது பலப்படுத்துகிறது என்பதற்கு பல்வேறு ஆய்வு முடிவுகள் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இது உதவும் என்பதும் ஆய்வுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வனங்களில் சில நாட்களைக் கழித்தால், உடலில் இயல்பாக கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மன அழுத்தம் குறைவதுதான் இதற்குக் காரணம் என்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ``மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பலர் உடற்பயிற்சி செய்வது நமக்குத் தெரியும். அதிக மன அழுத்தம் இருப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நல்லது அல்ல என்பதும் மிகவும் தெளிவான விஷயம்'' என்று, நோய் எதிர்ப்பாற்றலில் உடற்பயிற்சியின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ரேஸ் பல்கலைக்கழக மாணவர் நெயில் வால்ஷ் கூறுகிறார். ``சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்றால், அது உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்கிறார் அவர்.

பூங்காவில், மரங்கள் சூழ்ந்த காட்டில் அல்லது பசுமைவெளியில் உடற்பயிற்சி செய்தால், மிகவும் நல்லது. இயற்கைவெளியில் செல்வது, நகர்ப்புற பூங்காவாக இருந்தாலும் சரி - இருதயத் துடிப்பு வேகம், ரத்த அழுத்தம் குறையும், மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறையும் என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இயற்கை சூழலுக்கு நெருக்கமாக, இயற்கையுடன் இணைந்து வாழ்வது இருதயக் கோளாறுகளை, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பைக் குறைக்கும், மரணத்தை தள்ளிப்போடும்.

அதிக உடற்பயிற்சி செய்வது மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றுடன், இவற்றுக்கு வேறு காரணங்களும் இருப்பதாக பல்வேறு கட்டுரைகள் கூறுகின்றன. வெளியில் செல்வதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், தனிமை உணர்வு குறைந்து, மன அழுத்தம் குறைய உதவிகரமாக இருக்கும் என்பது அவற்றில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. கவன மீட்பு தியரி என்ற காரணமும் குறிப்பிடப்படுகிறது. அதாவது இயற்கைக் காட்சிகள் மற்றும் எளிதாக நாம் செல்வதில் நமது கவனம் ஈர்க்கப்படுகிறது. அதிகம் உழைத்திருக்கும் நமது மூளை ஓய்வெடுக்க, மீட்சி பெற வாய்ப்பு கொடுப்பதாக இது அமைகிறது என விளக்கம் தரப்படுகிறது.

இருந்தபோதிலும், நமது நோய் எதிர்ப்பு மண்டலங்களில் மரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. சில நாட்கள் காட்டுக்குள் இருந்தால், இயல்பாகவே கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நமது ரத்தத்தில் வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும் நோய் எதிர்ப்பு செல்களாக இவை உள்ளன. 

கொரோனா வைரஸ்Getty Images

மரங்களில் இருந்து வெளியாகும் பைட்டான்சைட் என்ற பொருளை சுவாசிப்பதால் இது நிகழ்கிறது என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலுக்கு வெளியே இவற்றை வளர்த்து பரிசோதித்த போது, இயற்கையாக கிருமிகளை அழிக்கும் செல்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது. சுவாசிப்பதாலும் இதே பலன் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டியுள்ளது.

``நடைமுறையில், இந்த வழிமுறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக நான் கருதுகிறேன்'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓப்பன்ஸ்பேஸ் ஆராய்ச்சி மையத்தின் டைரக்டராக உள்ள கேத்தரின் வார்டு தாம்ப்ஸன் கூறுகிறார். நகர்ப்புற பசுமைவெளிகள் மற்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை தயாரித்த குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார். 

``பைட்டோன்சைட்கள் முக்கியமானவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பயன்களைப் பெறுவதற்கு நீங்கள் சில காலம் முழுமையாக இயற்கை சூழலில் மூழ்கியிருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவு போன்ற பயன்களை அப்போது எளிதில் பெற முடியும்'' என்று அவர் கூறுகிறார்.

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேலைக்குச் செல்லும்போது காலையில், பிரகாசமான ஒளியில் செல்வதால், இரவில் எளிதாகத் தூங்கிவிடுகிறார்கள்.

வீட்டுக்கு வெளியில் செல்வது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். வீடுகளுக்குள் நாம் முடங்கி இருந்த நேரம், நமது உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாட்டைப் பாதித்திருக்கும். இது 24 மணி நேர சுழற்சிக்கு ஏற்ப, தூக்கம் உள்ளிட்ட உயிரியல் இயக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தி பழகியிருக்கிறது. நாம் வெளியில் செல்லும் போது வெளிச்சத்தின் தன்மை, நமது கண்களின் பின்புறத்தில் இருக்கும் ஒளி-உணர்வு செல்களில் பதிவதன் மூலம், உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. கண்களின் பின்னால் உள்ள இந்த செல்கள் மூளையில், உடலின் மாஸ்டர் கடிகாரமாகச் செயல்படும் செல்களுடன் தொடர்பு கொள்கின்றன. 

``வீட்டுக்குள் இருக்கும் வெளிச்சம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயல்பாடு தூண்டப்படாது. எனவே வாரம் முழுக்க ஒருவர் வெளியில் செல்லாமல் இருந்தால், இந்த ஒருங்கமைவுகளில் இடையூறுகள் ஏற்பட்டு, தூக்கத்தில் கோளாறுகள் ஏற்படும்'' என்று நியூயார்க் ட்ராயில் உள்ள லைட்டிங் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியானா பிகுவெய்ரோ கூறுகிறார். 

கொரோனா வைரஸ்Getty Images

காலையில் அதிக வெளிச்சத்துக்கு ஆட்படும், அலுவலகம் செல்லும் அலுவலர்கள், நடந்து செல்லக் கூடியவர்கள், குறைவான வெளிச்சத்துக்கு ஆட்படுபவர்களைக் காட்டிலும் இரவில் நன்றாகத் தூங்குகிறார்கள், இடையூறான தூக்கத்துக்கான வாய்ப்பு குறைகிறது என்று அவருடைய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. (நமது தூக்கத்துக்கு இயற்கை வெளிச்சம் ஏன் முக்கியமானது என்பதை அறிய மேலும் படியுங்கள்)

``உடல் கடிகார செயல்பாட்டில் இடையூறு, தூக்கத்தில் கோளாறு ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தன்மையைக் குறைப்பதாக தொடர்புபடுத்தப் படுகிறது'' என்று பிகுவெய்ரோ கூறுகிறார். ``எனவே நோய் எதிர்ப்பாற்றலில் வெளிச்சத்துக்கு நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், உடல் கடிகாரம் மற்றும் நல்ல தூக்கம் போன்றவற்றை செம்மைப்படுத்தும் அம்சம் மூலமாக மறைமுகமான தாக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது'' என்று அவர் கூறுகிறார். காலையில் பிரகாசமான வெளிச்சத்துக்கு ஆட்படுவது மக்களின் மனநிலையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவிகரமாக உள்ளது.

இந்தப் பயன்களைப் பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டும் என்று பார்த்தால், அதைச் சொல்வது கடினமான விஷயமாக இருக்கும். நமது உடல் கடிகாரத்தை ஒருங்கமைவு செய்த நிலையில் வைத்திருப்பதற்கு, காலைநேர வெளிச்சம் முக்கியமானது என்றாலும், சூரிய வெளிச்சத்தில் அதிகபட்ச புறஊதா கதிர்கள் இருக்கும் மதிய நேரத்தில் தான் அதிகபட்ச வைட்டமின் டி உற்பத்தி நடக்கிறது.

எனவே முடக்கநிலை கட்டுப்பாடுகளில் தளர்வு கிடைத்து, வாய்ப்பு கிடைத்தால், தினமும் ஒரு முறையாவது வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். சமூக இடைவெளி பராமரித்தலிலும், சூரிய வெப்பத்தால் கொப்புளம் ஏற்படாமலும் கவனமாக இருக்க வேண்டும். சூரிய வெளிச்சமும் இயற்கையும் தான் அற்புதமான ஹீலர்கள். அவை இலவசமாகக் கிடைக்கின்றன.
 

https://www.bbc.com/tamil/science-52791204

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.