Jump to content

சிங்கங்களை இழக்கும் காடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜூன் 02

image_3ac5adc3d2.jpgஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது.

தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், அதே வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

ஆறுமுகன் இறக்கும் போது, அவருக்கு வயது 55. அஷ்ரப் மரணித்தபோது, அவருக்கு 52 வயது. இருவரின் மரணமும் அகாலமானவை. நடுத்தர வயதில், இருவரும் மறைந்து போனார்கள்.

அஷ்ரப்பும் ஆறுமுகனும் எங்கு 'முளை'த்தார்களோ, அந்த மண்ணின் மக்கள்தான் அவர்கள் இருவரையும் தத்தமது அரசியல் தலைவர்களாக்கிக் கொண்டனர். அஷ்ரப்பும் ஆறுமுகனும் வேறொரு நிலத்தின் 'வாடகைத் தலைவர்'களாக இருக்கவில்லை என்பதுதான் அவர்களின் பெருமிதங்களாகும்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து, அம்பாறை மாவட்டத்தில் கதிரைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எல்.எம். அதாவுல்லா (தற்போதைய தேசிய காங்கிரஸ் தலைவர்) யூ.எல்.எம். முகைதீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.

ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராகவே, அஷ்ரப் மரணித்து விட்டதால், அவரின் இடத்துக்கு அவருடைய மனைவி பேரியலை வேட்பாளராக, முஸ்லிம் காங்கிரஸ் நியமித்தது. அந்தத் தேர்தலில், அஷ்ரப்பின் மனைவி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

கிட்டத்தட்ட அதேபோன்ற நிகழ்வுகள்தான், ஆறுமுகன் தொண்டமானின் மரணத்திலும் நடந்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிடுகிறது. அதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஆறுமுகன் களமிறங்கி இருந்தார். அவரின் திடீர் மரணத்தையடுத்து, அன்னாரின் வேட்பாளர் இடத்துக்கு, அவருடைய மகன் ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஷ்ரப்பின் மரணத்தின் பிறகுதான், அவருடைய பெறுமானத்தை அவரின் மண்ணின் மக்கள் முழுவதுமாக உணர்ந்தனர். அஷ்ரப் என்கிற அரசியல் தலைவரின் இழப்பை, முஸ்லிம்கள் இன்னும் வலியுடன் நினைவுகூருகின்றனர். அஷ்ரப்பின் 'இல்லாமை', அவரின் மண்ணுக்கு வாடகைத் தலைவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆறுமுகனின் இழப்பால், மலையகத்துக்கு அவ்வாறானதொரு நிலை நேர்ந்து விடக்கூடாது.

ஒரு நிலத்தின் மக்களுக்காகப் போராடுவதற்கும், தலைமை வகிப்பதற்கும் அந்த நிலத்தில் பிறந்த ஒருவரால்தான் முழுவதுமாக முடியும் என்பதை, வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. நிலமொன்றில் வாழும் மக்களின் கண்ணீரை, வியர்வையை, கோபத்தை மட்டுமல்ல, தூஷண வார்த்தைகளைக் கூடப் புரிந்துகொள்வதற்கு, வாடகைத் தலைவர்களால் முடிவதில்லை.

தலைவர்கள், தமது சொந்த நிலத்து மக்களின் வழியாகத்தான், மரணத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அஷ்ரப்பின் பெயரையும் உருவத்தையும் தவிர்த்து, அவரின் பிறந்தகமான கிழக்கு மாகாணத்தில், 'முஸ்லிம் அரசியல்' இன்றுவரை சாத்தியப்படாமைக்குக் காரணம், அவருடைய நிலத்து மக்களின் மனங்களில், அவர் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஆகும். 

ஒவ்வொரு தேர்தலிலும், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, கிழக்கில் அஷ்ரப் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். அஷ்ரப் உயிரோடிருந்த போது, அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் கூட, இப்போது அஷ்ரப்பைப் போற்றிப் புகழும் அரசியலைச் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அஷ்ரப்பின் பெயரை வைத்து, ஏமாற்று அரசியலும் தாராளமாகவே நடக்கின்றன.

தேர்ந்ததோர் அரசியல் தந்திரியாக,  அஷ்ரப் இருந்தார். அதேவேளை, தனது சமூகத்தையும் குறிப்பாக, தனது நிலத்து மக்களையும் அவர் ஆழமாக நேசித்தார். அதனால், தனது சமூகத்தை அடகு வைக்கும் 'அரசியலை', ஒருபோதும் அவர் செய்யவில்லை.

ஆனால், வாடகைத் தலைவர்கள் அப்படியல்ல. தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமக்கு வாக்களித்த சமூகத்தையே, 'விற்றுப் பிழைத்த' வரலாறுகள் ஏராளமுள்ளன.

சிறுபான்மை அரசியல் தலைவர்களில், ஆறுமுகன் தொண்டமானுக்கும் 'தந்தை' எனத் தமிழர்கள் அழைக்கும் செல்வநாயகத்துக்கும் மட்டுமே உள்ள பெருமையொன்று பற்றி, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அண்மையில் சிலாகித்து எழுதியிருந்தார்.

'அரசியல் கட்சியொன்றின் தலைவராகத் தந்தை செல்வா பதவி வகித்த நிலையில், அவர் அமைச்சராகாமல் அவரின் கட்சிக்குள், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த செனட்டர் திருச்செல்வத்தை அமைச்சராக்கினார்.

இவ்வாறே, ஆறுமுகன் தொண்டமான், தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த முத்து சிவலிங்கத்தை, ஒருமுறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஆக்கினார்.

அரசாங்கங்களுடன் இணைந்திருந்த, வேறெந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், இந்தப் புகழ்மிக்க தைரியமான முடிவை எடுக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான், அவருடைய சமூக மக்களுக்குள் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருந்தமையும் மக்கள் மீது அவரும் அவர் மீது மக்களும்  பரஸ்பரம் கொண்டிருந்த செல்வாக்கும் நேசமுமே இந்தத் தைரியமான முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

தான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கத்தக்கதாக, தனது கட்சியிலுள்ள வேறொருவர் அமைச்சரானாலும், தனது தலைமையை அவ்வமைச்சரால் பறித்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கை ஆறுமுகனுக்கு இருந்தமையால், அவர் யுக புருஷராகிறார்'' எனத் தெரிவித்துள்ளார் பஷீர் சேகுதாவூத்.

ஆறுமுகன் தொண்டமானின் மரணம் ஏற்படுத்தியுள்ள 'வெற்றிடத்தை', மலையகம் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான காலம் இன்னுமிருக்கிறது.

ஆறுமுகனின் மரணம் காரணமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தலைமைப் பதவி நிரப்பப்படும் போது, அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறந்து விடலாகாது.

அஷ்ரப்பின் மரணத்தை அடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை நிரப்புவதில் ஏற்பட்ட மிகப்பெரும் தடுமாற்றங்களும் அதன் காரணமாக, இரட்டைத் தலைவர்கள் அந்தக் கட்சிக்கு நியமிக்கப்பட்டமையும் இங்கு கொள்ளத்தக்கது.

'சிங்கங்களின் கர்ஜனைகளால்தான், காடுகள் கம்பீரம் பெறுகின்றன' என்பதை, சிங்கங்களின் இழப்புகள்தான் அநேகமாகப் புரிய வைக்கின்றன.

அஷ்ரப்பின் 'இல்லாமை'தான், அவரின் 'இருத்தலின்' அவசியத்தை, கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகம் உணர்த்தியது.

அதேபோன்று, ஆறுமுகன் இல்லாத மலையக அரசியலில், இப்போதைக்குச் சோபை இருக்கப் போவதுமில்லை.

இனி, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதற்கும் திட்டுவதற்கும், ஆறுமுகன் இல்லை. எனவே, அவரின் புகழ் பாடுவதன் ஊடாக, அவரின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் போடும் அரசியலைச் செய்ய வேண்டிய 'கையறு' நிலைக்குள், எதிர்க்கட்சிகள் தள்ளப்படும் நிலை ஏற்படும். அஷ்ரப் மரணித்த பின்னர், அவருக்கு எதிரான கட்சிகள், இப்படித்தான் நடந்து கொண்டன.

எது எவ்வாறாயினும், மலையகத் தமிழர்களின் ஏராளமான தேவைகள், உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவனாக, ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.

ஆனால், சிறுபான்மைச் சமூகங்களை அரவணைக்கும், மனநிலையற்ற தற்போதைய ஆட்சியாளர்களை,  ஆறுமுகன் இல்லாத அரசியலரங்கில், மலையகத் தமிழர் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது, மிக முக்கியமான கேள்வியாகும்.

இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற செய்தி வெளியாகியுள்ளது.

மிகவும் குறைவான, அடிப்படை வசதிகளுடன் வாழ்க்கையைச் சிரமத்துடன் எதிர்கொள்ளும் மலையக மக்கள், சில நன்மைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதென்றால், அவர்களைச் சார்ந்த ஒருவர் அமைச்சுப் பொறுப்பை வகித்தல் அவசியமாகும். இந்த ஆட்சியில், ஆறுமுகன் மூலம் மலையகத் தமிழர்களுக்கு ஓர் அமைச்சர் கிடைத்தார். அவரின் மறைவுடன் அதுவும் இல்லாமல் போயிற்று.

ஒவ்வொன்றையும் இழக்கும் போதுதான், அவற்றின் 'அருமை'கள் புரியத் தொடங்கும். அஷ்ரப் இல்லாமல் போனபோது, முஸ்லிம் சமூகம் தனது கம்பீரத்தை அரசியலரங்கில் இழந்தது.

சிறுபான்மை அரசியல் தலைவர் ஒருவர் அகால மரணமடையும் போது, அவர் சார்ந்த அரசியல் கட்சியும் அவரின் சமூகமும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னரான சம்பவங்கள், உதாரணங்களாக இருக்கின்றன.

சிந்திக்கத் தெரிந்தோருக்கு, வரலாற்றில் ஏராளமான பாடங்கள் உள்ளன.

ஆறுமுகன்: ஓர்மை யாத்திரீகன்

(ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் 

எழுதிய குறிப்பொன்றின் சில பகுதிகள்)

01

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது, தொழிற் சங்கம் என்றும் அரசியல் கட்சி எனவும் இரண்டு தடங்களில் பயணிக்கும் அமைப்பாகும்.

image_9025482aea.jpgஇவ்விரட்டை அமைப்புக்கு, ஆறுமுகன் தலைமை தாங்கத் தொடங்கிய ஆரம்பகாலத்தில், 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற அவ்வமைப்பின் வருடாந்த பேராளர் மாநாட்டுக்கு, விருந்தினர்களில் ஒருவராக என்னை அழைத்திருந்தார்.

அவ்வருடம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் என அதிகாரம்மிக்க இரண்டு பதவிகளுக்கும் ஆறுமுகன் ஒருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதற்காகக் கட்சி யாப்பும் மாற்றப்பட்டிருந்தது.

அதேவேளை, அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். இம்மாநாட்டில் நான் பேசுகையில், ''தொண்டமான் அவர்களுக்கு கட்சியில் தலைவர், செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மட்டுமல்ல, கட்சியில் இன்னும் மூன்று பதவிகளை அதிகமாகவும் வழங்கலாம். ஏனென்றால், அவர் 'ஒரு முகன்' அல்ல, 'ஆறு முகன்' அல்லவா''  என்றேன்.

கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் ஒன்று சேரக் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். பேசி முடித்து, மேடையில் இருந்து இறங்கி வந்து, நண்பர் ஆறுமுகனின் அருகில் அமர்ந்த போது, ''எனக்கு தெரியும், இது குத்திக்காட்டுண்ணு'' என்று கூறி, எனது இடுப்பில், அவரது முழங்கையால் செல்லமாகக் குத்தினார்.

காலப் போக்கில், அவரோடு இணைந்து செயற்படுகையில், ஆறுமுகன் உண்மையில் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை, ஐயந்திரிபுற அறிந்துகொள்ள முடிந்தது. இதை இலங்கைக்கே புரியவைத்துவிட்டுப் போயிருக்கிறார். 'பன்மை திரளத் தன்மை சூழ்ந்த' ஓர்மையான யாத்திரீகன் ஆறுமுகன்.

02

பெரியவர்  சௌமியமூர்தி தொண்டமான் ஐயாவிடம், அரச அனுமதிப் பத்திரம் உள்ள 'சொட் கண்'  துப்பாக்கி இருந்தது. 1976ஆம் ஆண்டு ஒரு நாள், 12 வயது ஆறுமுகன், அப்போது பொலிஸ் அதிகாரியாகவும் பெரியவரின் அன்புக்குரியவராகவும் இருந்த கந்தசாமி ஐயாவிடம் வந்து, ''ஐயா, துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்க, எனக்கு ஆசை; சுட்டுக் காட்டுங்கள்'' என்று கேட்டார்.

கந்தசாமியார் துப்பாக்கியை எடுத்து ளுபு  தோட்டாவைப் புகுத்தி, மரக்கிளையில் நின்ற காகம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினார். இதைப் பார்த்த சிறுவன் ஆறுமுகன், ''நானும் சுடணும் நானும் சுடணும்'' என்று அடம்பிடித்துத் துள்ளினான்.

பெரியவரின் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு, வேறு ஓர் இடத்துக்குச் சிறுவனை அழைத்துச் சென்று, துப்பாக்கியால் அதிர்வு குறைந்த வகையில், 'பொறி'யும் நாலாம் நம்பர் தோட்டா ஒன்றையும் நிரப்பினார் கந்தசாமி. மரத்தில் இருந்த ஒரு காகத்தைக் காட்டி, இலக்கு வைத்துச் சுடுமாறு கூறி, துப்பாக்கியை ஆறுமுகனிடம் கொடுத்தார்.

சரியாக காகத்தை இலக்கு வைத்த 'தம்பி', துப்பாக்கியின் குழலை, காகம் இருந்த இடத்துக்கு அப்பால் வலப்புறமாக, ஓர் அடி அளவு நகர்த்தி, 'றிகறை' அழுத்தினார். 'டுமீல்', காகம் கரைந்தபடி எழும்பிப் பறந்தோடிச் சென்றது.

''ஏன் தம்பி, நீங்கள் காகத்தைச் சுடாமல் தப்ப விட்டீங்க''? என்று கேட்ட ஐயாவிடம், ''காகம் பாவம், இப்ப அது, அதுட கூட்டுக்கு பிள்ளைகளப் பார்க்க போயிருக்குமில்ல..'' என்று சொன்னார் தம்பி ஆறுமுகன்.

இப்படிப்பட்ட இனிய 'உயிரபிமானி'யாக ஆறுமுகன் இருந்தார்.

ஆறுமுகனின் இழப்பின் பின்னர், மலையகத்து மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் சந்தேகமும் இருந்தாலும், காலத்துக்குக் காலம் யுக புருஷர்களை, தமக்குத் தலைவர்களாகப் பெற்றுவந்த அந்த மக்கள், புதிய தலைவர் ஒருவரை விரைவில் பெறுவது நிச்சயமாகும்.

வாழுங்காலம் முழுவதும் வாழ்க்கைக்காகப் போராடுகிற, தொழிற் சங்கப் போராட்டங்களுக்குப் பழக்கப்பட்ட தேர்ந்த போராளிகளான அம்மக்கள், தமக்கான புதிய தொண்டரை விரைவில் தெரிவார்கள்.          

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்கங்களை-இழக்கும்-காடுகள்/91-251265

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.