Jump to content

மதுரை - தூங்கா நகரின் ராப்பாடிகள்


Recommended Posts

தூங்கா நகரின் ராப்பாடிகள்.....

நான் தமிழகம் முழுவதிலும் சுற்றியலைய தொடங்கிய காலத்தில் மதுரை என்றாலே பலரும் உடன் விசாரிப்பது “உங்க ஊரில் நள்ளிரவிலும் சூடாக இட்லி கிடைக்குமாமே என்பது தான்”. மதுரை ஒரு தூங்கா நகரம் என்பதே வெளியூர்க்காரர்கள் எப்பொழுதுமே வியப்பாகவே இருக்கும். 2500 ஆண்டுகளாகவே மதுரை ஒரு தூங்கா நகரமாக வரலாற்றை விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது.

மாலை நேரத்தில் விதவிதமான இடைத்தீனிகள் (Snacks) மதுரை தெருக்களை அலங்கரிக்கும், எந்த வீதியில் நடந்தாலும் இந்த நறுமணங்கள் வந்து மூக்கை துளைக்கும், நம்மை கடை நோக்கி அழைக்கும். உளுந்த வடை, பருப்பு வடை, கார வடை, கீரைவடை, பைரி (முள்ளுமுருங்கை வடை), தேங்காய் போலி, பருப்பு போலி, ரவா அப்பம், காரப் பணியாரம், இனிப்புப் பணியாரம், கருப்பட்டி தோசை, சீயம், போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, அப்பள பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி, முட்டை போண்டா, கேப்பை ரொட்டி, பட்டர் பன், கிழங்கு வகைகள், பயிறு வகைகள், பருத்திப்பால், வெட்டிய பழங்கள் (cut fruits) என இந்த பட்டியல் மதுரையில் வாக்காளர் பட்டியல் போன்றே நீண்டு கொண்டே செல்லும். கடந்த இருபது ஆண்டுகளில் பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி தொடங்கி சிக்கன் 65 வரை புதிய விருந்தினர்கள் பலர் களத்திற்கு வந்துள்ள போதும் மதுரையின் பன்முகத்தன்மையை அவர்களால் ஒருபோதும் அசைக்க முடியவில்லை. இவர்கள் சாம்ராஜ்ஜியம் மாலை 5 மணி தொடங்கி இரவு 9.30-10 மணிக்கு அஸ்தமிக்கும்.

பொழுது சாயும் நேரமே மெல்ல ரோட்டோரக் இடலிக் கடைகளை எடுத்து வைக்க தொடங்குவார்கள் மதுரை அக்காமார்கள். கடையை எடுத்து வைப்பது என்பது அத்தனை சுலபமான வேலையல்ல. தள்ளுவண்டி கடைகள், ட்ரைசைக்கிளில் இட்லிக் கடை, தெருவில் இட்லிக்கடை, உட்சந்துகளில் இட்லிக் கடைகள், வீட்டு வாசலில் இட்லிக் கடை என கடைகள் பல விதங்களில் உண்டு. நின்றே உணவு சாப்பிடும் கடைகள், மூடியிருக்கும் பெரிய கடைகளின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து சாப்பிடும் கடைகள், சில கடைகள் ஓரிரு பெஞ்சு, டேபிள்களுடனும் இயங்குகின்றன.

இருட்டத்தொடங்கியதும் அடுப்பும் எரியத்தொடங்கும் 8 மணிக்கு எல்லாம் ஆவிபறக்க இட்லிகள் மதுரை வீதிகளை எட்டிப்பார்க்கும், இரவு 8.30 மணிக்கு எல்லாம் கடை பிசியாகி விடும். கொஞ்சம் லேட்டாக போனாலே இட்லிக்காக காத்திருக்கத்தான் வேண்டும் ஊர் அடங்கிய பின்னும் இட்லி தயாராகிக் கொண்டேயிருக்கும். மதுரைக்கு வரும் வியாபாரிகள், காய்கறி விற்க-வாங்க வருபவர்கள் என பசியுடன் இந்த நகரத்திற்குள் நுழையும் யாவருக்கும் அற்புதமான உணவை இந்த நகரம் ஆயிரம் ஆண்டுகளாக பரிமாறியபடி இருக்கிறது.

அரசியல் பொதுக்கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள் நடக்கும் நாட்களில் நணபர்கள் அனைவரும் எப்படியும் சங்கமித்துவிடுவோம் அன்று இரவு எங்கள் அபிமான ரோட்டோரக்கடைகள் நோக்கி சென்று விடுவோம். மெல்ல மெல்ல தட்டுகளை கைமாற்றி மாற்றி ஒரு நேரத்தில் அந்த அக்கா கடையில் இருக்கும் எல்லா தட்டுகளுமே எங்கள் குழாமின் கைகளுக்கு வந்துவிடும். முட்டை தோசை, சூடான இட்லி, வெஜிடபிள் ஊத்தப்பம், சின்னவெங்காய ஊத்தப்பம் என க்ளாஸ்காரத்தெருவின் பூட்டிய வீடுகளின் கதவுகளின் எங்கள் ஆர்டர் சத்தம் எதிரொலித்து திரும்பும்.

இரண்டாம் ஆட்டம் சினிமாவை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது ஒரு பசி மெல்ல வயிற்றில் படரும், அப்பயும் நகரத்திற்குள் வண்டியை விட்டால் எங்காவது சுடச்சுட இட்லியில் இருந்து ஆவி பறந்து கொண்டு தான் இருக்கும், சமயங்களில் நள்ளிரவு 2 மணியாகிவிட்டால் யானைக்கல்லுக்கு வந்துவிடுவோம், யானைக்கல்லுக்கு வந்தால் இது இரவா பகலா என்றே ஒரு குழப்பம் வந்துவிடும். இருப்பினும் இந்த ஒட்டு மொத்த இரவுக்கடைகளில் நம்மிடம் அவர்கள் வாங்கும் தொகை மிக மிக சொற்பமே.

பெரியார் பேருந்து நிலையம், நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு, ரயிலடி, க்ளாஸ்காரத்தெரு, மேலமாசி வீதி சந்திப்பு, தெற்கு மாசி வீதி, தெற்கு வாசல், மஞ்சனக்காரத் தெரு, சிம்மக்கல், முனிச்சாலை (சவுராஸ்டிரா உணவு வகைகள்) , காளவாசல், கீழ வாசல், தானப்ப முதலித் தெரு, சம்பந்த மூர்த்தி தெரு, தேர்முட்டி, டி.எம்.கோர்ட், காஜிம்மார் தெரு, கோரிப்பாளையம், புதூர், கே.கே,நகர் ஆர்ச் என எண் திசைகளிலும் இரவுக் கடைகள் பெட்ரோமாஸ் லைட்டுகளுடன் ஒளிரும். மெல்ல மெல்ல பெட்ரோமாக்ஸ் ஒளி LED பல்புகளாக உருமாறியது, தட்டின் மீதானவாழையிலை ப்ளாஸ்டிக் பேப்பராக மாறியது. ஆம்லேட்டு, ஆப்பாயிலுடன் இப்பொழுது கலக்கி வந்து தட்டில் அமர்ந்து கொண்டது. அக்கா கடைகளும் காலச்சக்கரத்துடன் இணைந்து மாற்றத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டுதான் வருகின்றன.

மதுரை நகரத் தெருக்களில் இரவு முழுக்க எந்த விதமான பயமும் இல்லாமல் நடந்து செல்லலாம். எந்தத் தெருவில் திரும்பினாலும் எங்கோ ஒரு உணவுக்கடையின் அடுப்பு நள்ளிரவு வரை எரிந்துகொண்டிருக்கும். மதுரையின் இரவு பாதுகாவலர்களாக இந்த அக்காக்கள் தான் இருந்தார்கள். சட்ட ஒழுங்கு என்கிற பெயரில் இன்று மெல்ல மெல்ல இந்த நகரத்திற்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இந்த நகரம் உறங்கத் தொடங்கிவிட்டது. தூங்கா நகரம் என்கிற விசயம் ஒரு நினைவாக எங்கள் காலத்திலேயே மாறி வருகிறது. சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கு பிறகு 11 மணிக்கு எல்லாம் இவர்கள் விரட்டப்பட்டு ஊர் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக இருளின் அர்த்தத்தை மாற்றி இந்த உலகிற்கு அறிவித்த மதுரைக்காரர்கள் வசமிருந்த தூங்கா நகரம் முடக்கப்பட்டு விட்டது.

உலகின் பல நகரங்களில்அந்த நகரத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் உணவுக் கடைகளை எல்லாம் விடிய விடிய திறந்து வைத்து, பல நகரங்களில் NIGHT LIFE என்கிற ஒரு ஒன்றை உருவாக்க அவர்கள் கடும் சிரத்தை எடுக்கிறார்கள், ஆனால் ஆயிரம் வருடங்களாக இயல்பாக இருந்த ஒன்றை அதன் அருமை தெரியாமல் அழித்து விட்டோம்.

மதுரை போன்ற பழைய நகரத்தின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது, ஆனால் இந்த இட்லிக்கடை அக்காக்கள் எங்கள் வாழ்வில் உறவுகளை போல் மாறினார்கள், இவர்களின் வாடிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து வருடங்களாக சாப்பிட்டு உறவுமுறை சொல்லி அழைப்பவர்களாக மாறிவிட்டார்கள். க்ளாஸ்காரத்தெருவில் இருந்த அந்த இட்லிக் கடை மூடப்பட்டு விட்டாலும் இன்றும் இரவு நேரம் என் கால்கள் மெல்ல முகமதியர் சந்து வழியாக க்ளாஸ்காரத்தெருவிற்குள் ஒரு நடை நடந்து விட்டே பேருந்து நிலையத்திற்கு செல்லும்.

இந்த ஊரடங்கு காலம் காலமாக அன்பாக முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் அன்னமிட்ட மதுரையின் அன்னபூரணிகளையும் பட்டினியில் போட்டது. இரவை தங்கள் இமைகளில் சுமந்தவர்களுக்கு மனப்பூர்வமாக பசுமை நடையின் பலசரக்கு பொதிகளை கொடுத்து விட்டு இன்னொரு நாள் சாப்பிட வருகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.

#GREENWALKCORONARELIEFWORK
#MADURAILOCALHISTORY
#MADURAISUBALTERNS

நன்றியுடன்  பகிர்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இப்படியான பதிவுகளை தேடி போட  நிறைய பொறுமை தேவை முதல் பதிவை பார்த்து  அடுத்த பதிவை எடுக்கவும் முடியாது அநேகமான முகநூல் பதிவுகள் வேறு ஒருவரின் மூலமாக இருக்கும் அவர்களின் பெயரை எடுத்துவிட்டு தங்களின் பெயரை போட்டு தமிழ் தேசியத்தில் குமுறி எடுப்பினம் ஆராந்து பார்த்தால் உண்மையான பதிவாளர்கள்  தங்களின் பதிவுகள் திருடப்படுவது தெரியாமல் அடுத்த பதிவுகளை போட்டுக்கொண்டு இருப்பினம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல எழுத்தாளர்களின் கதைகளிலும் திரைப்படங்களிலும் மதுரை தூங்கா நகரமாகவே வாழ்ந்து வருகின்றது.....பகிர்வுக்கு நன்றி நிழலி.....!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.