Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

இதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி

May 31, 2020
sool_FrontImage_102-696x347.jpg

நேர்கண்டவர் : அகர முதல்வன்

அ.இரவி ஈழத்து எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.இவருடைய “ஆயுதவரி”, “பாலை நூறு” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாண பாஷையில் அமைந்திருக்கும் இவரின் எழுத்து மொழிக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. இவரின் புகழ்பெற்ற “காலம் ஆகி வந்த கதை” தொகுப்பும், “வீடு நெடும் தூரம்” தொகுப்பும் ஈழர் இலக்கியத்தின் முக்கிய பிரதிகள்.

“காலம் ஆகி வந்த கதை” – என்ற உங்களின் தன் வரலாற்றுப் புனைவுப் பிரதி சாத்வீக – வன்முறை ஆகிய இரண்டு போராட்ட வரலாற்றுக் காலங்களைப் பேசுகிறது. இந்த நூலிற்கு கிடைத்த வரவேற்பைக் கூற முடியுமா?

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இதனை வாசித்து விட்டு, க.வே.பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தின துரை, பரப்புரைப் பொறுப்பாளர் ரமேஷ்/இளங்கோ ஆகியோரிடம் விதந்து கூறியதை அவ்வளவு பேரும் எனக்குச் சொன்னார்கள். அந்த நூலிற்கு கிடைத்த பெரிய பெறுமதியான ஒரு அங்கீகாரமாக அதனையே பார்க்கிறேன்.

இலக்கியத்தில் நான் மிகவும் மதிக்கின்ற படைப்பாளி அசோகமித்திரன், இந்நூலை வாசித்துவிட்டு அரைமணித் தியாலமாகத் தொலைபேசியில் என்னுடன் உரையாடினார். அவர் தனது ’18வது அட்சக்கோடு’ நாவலுடன் ஒப்பிட்டார். வார்த்தைகளில் மகிழ்ச்சி மின்னியது. என் சந்தோசத்தினை சொல்ல வார்த்தை இல்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் இந்நூலை வாசித்த பின்னர் இலங்கையில் தனக்குப் பிடித்த படைப்பாளிகள் வரிசையில் என் பெயரையும் குறிப்பிட்டு இணைத்துக் கொண்டார். அப்போது “சன்” தொலைக்காட்சியின் செய்திப் பொறுப்பாசிரியராக இருந்த மாலன் அவர்கள் இந்நூலை வாசித்துவிட்டு நீண்டதொரு செவ்வி எடுத்திருந்தார். “சன்” தொலைக்காட்சியில் அந்த செவ்வி ஒளிபரப்பாகியிருந்தது.

சக ஈழப்படைப்பாளிகளில் அ.முத்துலிங்கம், ‘ஊருக்குப் போய்வந்த சுகம் இருந்தது’ என்று புளகித்தார். ரஞ்சகுமார், தான் வாசித்த சிறந்த பத்து நூல்களில் இது ஒன்று என்றார். ‘இப்படி எழுத வாய்ப்பே இல்லை’ என்றவர் தமிழ்நதி. 

மேலாக, கிளிநொச்சி வட்டாரக்கல்வித் திணைக்களம் சுமார் ஐம்பது பிரதிகள் வாங்கி தமது வட்டாரக் கல்விக்கூடங்களின் ஆசிரியர்களுக்கு விநியோகித்தது. (காரணம்: ‘ஓர் ஆசிரியர் எப்படி இருக்கக்கூடாது என்று இந்நூல் விபரிக்கின்றது’) பின்னர் வடமாகாணக் கல்வியமைச்சராக இருந்த குருகுலராஜா அவர்களே அப்போது கல்வி பணிப்பாளராக பணியில் இருந்தபோது செய்தார். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. என்னைக் கூச்சப்பட வைக்கும் இக்கேள்வியை ஏன்தான் கேட்டீர்கள்?       

உங்களின் சிறுகதைகளில் யாழ்ப்பாணத்து புழங்கு தமிழ் அதிகமாக இருக்கும். உங்களின் கதைகள் மீது எனக்கொரு காதலுண்டு. உங்களின் மொழியை நீங்கள் புனைவில் எவ்வாறு தரிசிக்க விரும்புகிறீர்கள்?

மொழி வசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் நான். எழுத்து அப்படியே வழுக்கிக்கொண்டு போகவேண்டும். வாசிக்கும் யாருக்கும் இடர் தரக்கூடாது. எழுத்து, காட்சியை விரித்தால் சந்தோசம். ஆரம்பத்தில் நான் ஜெயகாந்தனின் ரசிகனாக இருந்தேன். பிறகுதான் தெரிந்தது, அவர் எழுத்தில் காட்சியை விரிக்கவில்லை; நிறையச் ‘சொல்கிறார்’ என்பது. ஜெயகாந்தனின் கருத்துக்களை மாத்திரமே கேட்டுக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்தபோது மிகுந்த சலிப்பு ஏற்பட்டது.

பிறகு நான் கண்டடைந்தவர் லா.ச.ரா. அவரது ‘அபிதா’வை வாசியுங்கள். அங்கு கதையும் தத்துவமும் கிடையாது, காட்சிதான் விரியும். “அந்த மலை தடுத்த மேகங்கள், மழை கொட்டுமோ கொட்டாதோ தெரியாது.. கொட்டலாமோ வேண்டாமோ எனத் தம்முள் குமைகின்றன”-அபிதா’வில் வரும் வரிகள் என்பது ஓர் உதாரணம். உங்களுக்குக் காட்சி தெரியவில்லையா? எனக்கு அது முக்கியம் என பட்டது.

பிறகு நான் கண்டடைந்தவர் வண்ணநிலவன். அவரது ‘கடல்புரத்தில்’ நாவலை கதையாகவே நான் வாசிக்கவில்லை, காட்சியாகப் பார்த்தேன். பாத்திரங்கள் யாவரும் என்னுள் உருக்கொண்டு விட்டனர். வண்ணநிலவன் என்னுள் இறங்கியது அவ்வாறே. 

என்ன கேட்டீர்கள், ‘உங்களின் மொழியை நீங்கள் புனைவில் எவ்வாறு தரிசிக்க விரும்புகிறீர்கள்’ என்றா? என் பதில் இதுதான்: என் புனைவை வாசித்து காட்சியாக விரிந்த ஒரு சினிமாவாகப் பார்த்ததாக நீங்கள் உணர்ந்தீர்கள் ஆயின், வண்ணங்கள் அதில் தெரிந்ததாயின்  அது எனக்குப் போதும். இலக்கியத்தில் தத்துவங்கள் பேசுவதிலும் ‘இசங்கள்’ பேசுவதிலும் எனக்கு அவ்வளவு உவப்பில்லை. 

நீங்கள் ஒரு தமிழ் இயக்கமொன்றில் உறுப்பினராக இருந்து, பின்னர் இன்னொரு இயக்கத்தினால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்தவர். உள்ளொடுங்கிய ஆயுத அமைப்புக்களின் இப்படியான வன்முறைகள் ஏராளம். அன்றைய நாட்களின் நினைவுகள் உங்களுக்குள் எழுந்து தொந்தரவு தருவதில்லையா?

அப்போது நான் NLFT எனும் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல; ஆதரவாளர் மட்டும்தான். NLFT இயக்கத்தைத் தோற்றுவித்த அல்லது கட்டியமைத்த தோழர் விசுவானந்த தேவன் அவர்கள் இன்றைய என் அரசியலையும் தீர்மானித்தபடியே இருக்கிறார். அவர் காணாமல் போய் முப்பது வருசங்களுக்கு மேலாகி விட்டன. ஆயினும் இப்போதும் என்னை அவர் தீர்மானிக்கிறார் என்றால் அவரது ஆளுமையை யோசித்துப் பாருங்கள். 

உயிர் அச்சுறுத்தல் என்று சொல்ல முடியாவிடினும் அங்கத்தில் ஏதேனும் ஊறுபாடு அல்லது ஆன்மாவைச் சிதைக்கும் செயற்பாடு, விடுதலைப்புலிகளால் எனக்கு நிகழும் என சுமார் ஐந்து வருடங்களாக(1987 – 1992) அச்சம் கொண்டிருந்தேன்.

அதற்கான ஏதுக்களும் இருந்தன. ஆனால் நான் பட்ட பாடுகளை இப்போது சொல்வது தேவையில்லாதது. ஒன்றைத்தான் அப்போது யோசித்தேன், என்னை நான்தான் காப்பாற்றவேண்டும், வேறு யாருமல்ல. அவ்வாறு உணர்ந்த கணத்தில் தமிழீழத்தை விட்டு மே 22, 1992  அன்று  நான் களவாக வெளியேறினேன். அன்றைய நாட்களின் நினைவுகள் எழுந்து தொந்தரவு தராமல் விடுமா?   

இந்த காலகட்டத்தின் விளைவுகளால் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து எழுதினீர்கள். பிறகு அந்த நிலையில் இருந்து தீவிர புலி ஆதரவு நிலைக்கு திரும்புவதற்கு காரணம் என்ன?

தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து நான் எழுதுவதற்கு என் ‘அகம்’ மாத்திரம் காரணமல்ல; ‘புறத்தையும்’ உணருங்கள். அப்போது விடுதலைப்புலிகள் கடும் அரராஜக(வாத)த்தைக் கொண்டிருந்ததனை நான் உணர்ந்தேன், அனுபவித்தேன். என் தோழர்கள் காணாமல் போகிறார்கள். (தோழர்கள் என்பது NLFT உறுப்பினர்கள்) என் நண்பர்கள் இல்லாமல் போகிறார்கள். (நண்பர்கள் என்பது செல்வி, தில்லை, தர்மலிங்கம் என இன்னோரன்னோர்) பின்னேரம் ஆறுமணிக்கு எங்களைச் சந்திக்க வருகிறேன் என்று சொன்ன நெருங்கிய நண்பன்(தோழர் விமலேஸ்வரன்) மாலை நான்கு மணிக்கே கொல்லப்படுகிறான். “எங்களை எதிர்த்த இவர் என்னவென்று இங்கிருக்க முடியும்” என்று விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா கேட்டபோது எனக்கு இரட்டைப்பிள்ளைகள் பிறந்து ஒரு மாதமாகி விட்டது. எனது ‘மரண தண்டனை’யை ஒத்திப் போடுவதற்கு நான் பட்டபாடு யாருக்கும் தெரியாது. நேரம் வந்தால் சொல்கிறேன். நீண்ட கதை உண்டு. நிறுத்துகிறேன்.

1992 மே 23-க்கு பிறகு என் வாசம் கொழும்பில். சும்மா இல்லை, நான்கு முழு வருடங்கள். ‘கொழும்பு’ என்னை மிகவும் படிப்பித்து விட்டது. ‘தமிழன் என்றால் நீ புலி’ என்று அது தெளிவாகச் சொல்லிற்று. நிறைய அனுபவப்பட்டேன். சிறைவாசம், காறித்துப்பல், விறகு கட்டையால் அடி, சொல்லக்கூசும் இன்னும் பல. என்னுடன் சேர்ந்தவர்கூட அனுபவித்தார். மனம் அந்தளவு வெதும்பிக் கிடந்தது. அப்போது பூநகரியில் ‘தவளைப் பாய்ச்சல்’ என்று விடுதலைப்புலிகளின் தாக்குதல். இரத்மலானை இந்துக்கல்லூரியில் என் ஆசிரியப்பணி. அருகில் விமான நிலையம். விமானங்கள் வந்திறங்குகின்றன. ‘ஆம்புலன்ஸ்கள்’ காயம்பட்ட சிங்கள ஆர்மியை ஏற்றிக்கொண்டு ஓடுகின்றன. ஒரு சைரன் சத்தம் கேட்குமல்லவா? எனக்கு அது வெற்றிச்சங்கு ஊதியதைப்போல இருந்தது. விடுதலைப்புலிகளின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை; ஈழத்தமிழரின் வெற்றி. தத்துவமாக இதனை நான் யோசிக்கவில்லை; உணர்விலிருந்து நான் யோசித்தேன்.  

இருவர்தாம் எனக்கு அதனை உணர்த்தினார். ஒருவன், ‘தராகி’ சிவராம். அவன் போகிறபோக்கில்தான் சொன்னான்: “மைச்சான், நீ எவ்வளவுதான் புலியை எதிர்த்தாலும் சிங்களவங்களுக்கு நீ புலிதான்.. தமிழனென்டால் புலி! புலி குடுக்கிற அடிதான் இவையளை யோசிக்க வைக்கும்…’ மற்றவன்: எஸ்.கே.விக்கினேஸ்வரன். ‘சரிநிகர்’-ன் முழுப்பொறுப்பும் அவனிடம் இருந்தது. எனக்குப் பிரேமதாஸாவிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. பிறகு சந்திரிகாவிடம் ஓர் அபிமானம் இருந்தது. சந்திரிக்கா, நான் கற்பிப்பதை என் வகுப்பிலிருந்து பார்த்தவர்.(அப்போது அவர் மேல்மாகாண முதலமைச்சர்) இணக்கமான உரையாடல் அவரிடம் இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது எனது வாக்கு மாத்திரமல்ல, எனது குடும்ப வாக்கும்(ஆறு வாக்குகள்) அவருக்கே. சந்திரிகாவுக்காக என் வாதங்கள் இருந்தபோது விக்கி அதனை முற்றாக நிராகரித்தான். கொழும்பும் நண்பர்கள் சிலரும்தாம் என்னை மாற்றியமைத்தது.    

ஈழத்தமிழர் இலக்கியங்கள் இன்னும் உச்சபட்சமான உன்னத இடங்களைத் தொடவில்லை என நீங்கள் முகநூலில் எழுதியிருந்தீர்கள். நீங்கள் வைக்கும் மதிப்பீட்டை கொஞ்சம் விளக்கிக் கூறமுடியுமா?

இலங்கை என்பது மிகச்சிறிய தீவு. அதற்குள்ளும் ஈழத்தமிழர் சொற்ப தொகையினரே. ‘சிறிய தீவு’ என்பதும் ‘சொற்ப தொகையினர்’ என்பதும் ஈழத்தமிழ் படைப்பாளிகளுக்கு அதிக, வித்தியாசமான, நுட்பமான, வரையறைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கொடுக்கவில்லை. அதுமாத்திரமன்றி, ஈழத்தமிழருக்கு கிடைத்த கல்வியென்பது விரிந்த அனுபவங்களைத் தாங்குவதற்குத் தயாராக இருக்கவில்லை. கல்வி, அறிவால் மாத்திரமே யாவற்றையும் பார்க்க வைத்தது; உணர்வால் அல்ல. அதனால் பெரும்பாலும் வறட்டுத்தனமான படைப்புகளே வெளியாகின.

சிறுகதைகளில் ஓரளவுக்கு வளம் இருந்தாலும் சினிமா, நாவல் முதலான படைப்பாக்கங்களில் வளம் பெறவில்லை. கவிதை, அரங்கு என்று சிறுசிறு படைப்பாக்கங்களிலேயே ஈழத்தமிழ் தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்டது. ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த கல்வி என்பது பதிப்பு, ஆய்வு முதலான துறைகளில் அதிகம் உந்தித் தள்ளியது. நிலத்தையும் காலத்தையும் சூழலையும்தாம் இதற்குக் குறை கூறலாம்.

வேறு சிலரிலும் எனக்குக் குறை உண்டு. ‘ஆனா ஆவன்னா’ என்று மாத்திரம் எழுதத் தெரிந்தோரின் படைப்பை ‘ஆகா இதுவல்லவோ படைப்பு’ என்று ஆய்வு செய்து மலடாக்கி விட்டார்கள், நமது சில ஆய்வாளர்களும் சில பேராசிரியப் பெருந்தகைகளும். ஆயினும் இப்போது ஒன்றைச் சொல்ல வேண்டும் ஈழத்தமிழர், தமிழ்நாடு உட்பட வேறுபல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களது படைப்பில் வளம் சேர்கிறது.

ஈழநிலத்தைத்தான் அவர்கள் பாடுபொருளாகக் கொண்டாலும் அவை கலாபூர்வமான வெளிப்பாடாக வருவதனை அவதானிக்க முடிகிறது.  

ஈழத்து இலக்கியங்கள் இன்றைக்கு ஒரு புதியதோர் பாய்ச்சலை வெளிப்படுத்தியபடி இருக்கின்றன. ஆனால் அதன் மீது “கழிவிரக்கம் கோருகின்றன” என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. நீங்கள் இந்த குற்றச்சாட்டை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

தஞ்சாவூர் மாவட்ட கீழ்வெண்மணிக் கிராமத்தில் சுமார் நாற்பது தலித்(இச்சொல்லில் அவ்வளவு உடன்பாடு கொள்ளாதவன்) மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட காலத்தில் அதே தஞ்சாவூர் மாவட்டத்தைக் களமாகக்கொண்டு தி.ஜானகிராமன், ‘மோகமுள்’ நாவலை எழுதினார். அது எதைப்பற்றி பேசியது என்பது உங்களுக்குத் தெரியும். அது அப்போது சிலரால் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட மகத்தான துயர் என்பது அத்தனை ஈழத்தமிழர்களையும் ஏதோ விதத்தில் பாதித்திருக்கிறது. அங்கு தோன்றிய படைப்பாளிகள் தமக்குப் புரிந்த அரசியலினூடாக அதைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தத்தான் செய்வார்கள். வெளிப்படுத்தா விட்டால்தான் அவர்கள் ‘வேறேதோ’ அரசியல் செய்கிறார்கள் என்று அர்த்தம். ‘கழிவிரக்கம்’ கோரும் படைப்பு என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். காலம் எப்போதும் நேரானது; காழ்ப்பு இல்லாதது. அது யாவற்றையும் எவ்வாறு பதிவு செய்கின்றது என்பதனை நாம் இப்போது சொல்ல முடியாது. 

சமகாலத்தில் வெளியான ஈழப்படைப்புக்களில் உங்கள் இலக்கிய மதிப்பீட்டின்படி கலாபூர்வமான படைப்புக்களைக் கூற முடியுமா?

உண்மையில் இதற்குப் பதில் சொல்ல நான் பஞ்சிப்படுகிறேன். யாவற்றையும் முழுமையாக வாசித்தவனல்லன். வாசித்தவற்றிலிருந்து சில குறிப்புக்களைக் கூறலாம். காலத்தையும் சூழலையும் பதிவையும் கலாபூர்வத்தையும் கவனத்தில் கொண்டு மாத்திரமே என் பதிவு அமைகிறது. புனைவிலக்கியம்(அதுவும் நாவல்) ஒன்றை இங்கு கவனம் கொள்கிறேன். விமர்சனம் எதுவும் இங்கில்லை; வெறும் அவதானம், அவ்வளவே. ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘கனவுச்சிறை'(தேவகாந்தன்); ‘ஆறாவடு’, ‘ஆதிரை'(சயந்தன்); ‘நஞ்சுண்டகாடு’, ‘அப்பால் ஒரு நிலம்'(குணா கவியழகன்), ‘பார்த்தீனியம்'(தமிழ்நதி), “கலாதீபம் லொட்ஜ்” (வாசு முருகவேல்) ஆகியனவற்றைக் கலாபூர்வமான படைப்புகளாக நான் கருதுகிறேன். அதேசமயம், ‘புள்ளிகள் கரைந்த பொழுது'(ஆதிலட்சுமி சிவகுமார்), ‘நடுகல்'(தீபச்செல்வன்) ஆகிய படைப்புகளையும் இங்கு பதிவதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை. ஒன்றேயொன்றுதான், அவை இன்னமும் கலாபூர்வமாக வந்திருக்கலாம்.  

யாழ்ப்பாணம் பற்றிய நினைவுகளில் உங்களால் மறக்க முடியாதது என்ன?

எதைச் சொல்ல, எதை விட? யாழ்ப்பாணத்தில் என் குழந்தைமை; யாழ்ப்பாணத்தில் என் சிறுவமை; யாழ்ப்பாணத்தில் என் இளமை! யாழ்ப்பாணச்சாப்பாடு, திருவிழாக்கள், கூத்து, தவில்-நாயனம், நாடக அரங்கு, தியேட்டர்களில் சினிமா, பள்ளிக்கூடம், படிப்பு, மாம்பழம், பிலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றின் இனிமை, பற்றை வழிய திரிந்து அணிஞ்சில் பழம், காரைப்பழம், சூரைப்பழம், வீரைப்பழம், புல்லாந்திப்பழம், இலந்தைப்பழம், பீநாறிப்பழம், தண்ணீர்ப்பழம், பிடுங்கி உண்ணுதல், வேள்வி, பங்கிறைச்சி, யாழ்ப்பாணத்துப் பரவைக்கடல் மீன், பனங்கள்ளு, ஒடியல்கூழ், முட்டைக்கோப்பி, தோட்டம், வயல்வெளி, கடற்கரை, பனங்கூடல், தென்னந்தோப்பு, பற்றைக்காணி, ஆடு மாடுகளுக்கு குழை ஒடித்தல், புல்லுச்செதுக்கல், வெள்ளெலி முயல் உடும்பு என்று வேட்டையாடல், வீட்டுத் தோட்டம் செய்தல்… எதைச்சொல்ல, எதை விட?   

உங்களுடைய நாவல்களில் இருக்கிற “நினைவிடை தோயும்” தன்மை எனக்கு பிடித்தமானது தான். ஆனால் தொடர்ச்சியாக அந்தப் பாணியில் புனைவுகளை கட்டி எழுப்புவது சலிப்பான காரியமாக தோன்றவில்லையா?

கொஞ்சம் பொறுங்கள், கிட்டத்தட்ட ‘தன்மை’யில் நான் எழுதும் புனைவு(நாவல்) உங்களை சலிப்பூட்டியிருக்கலாம். அவற்றிலும் ‘புனைவு’ இருப்பதனைக் கண்டுகொண்டால் சந்தோசம். நான் அரங்கை(theatre) அதிகம் விரும்புபவன். அஃது எப்போதும் பாத்திரங்களைச் சிருஷ்டிப்பவை. நானும் சிருஷ்டிப்பதன் நாயகன். என்னால் நீங்கள் சொல்லும் பாணியிலிருந்து வேகமாக வெளியேற முடியும். வருவேன், அவகாசம் வேண்டும். சாதாரணமாக ‘உப்புக்கு’ உழைக்க வேண்டியிருப்பதால் மினக்கெட வேண்டியிருக்கிறது.    

1958 நாவல் ஒரு முக்கியமான வருகை. ஆனால் அதற்கு வாசகக்கவனம் கிடைக்கவில்லை என்கிற கவலையோடு இந்தக் கேள்வியைத் தொடருகிறேன். அந்த நாவல் தமிழ் – சிங்கள பொதுசனங்களின் மனவோட்டத்தை சரியாக பதிவு பண்ணியது என கருதுகிறேன். இந்த நாவல் குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

நீங்கள் சொல்வது சரிதான். ஒரு பதிப்பாளர் என்னிடம் சொன்னார்: “உங்களை யாரென்று யாருக்கும் தெரியவில்லை” என்று. அதில் இருக்கக்கூடிய உண்மை ஒன்றுதான். நான் யாரிடமும் சென்றிருக்க முடியாத படைப்பாளி. அதற்கு என் எழுத்து காரணம். என் இயல்பு காரணம். வேறு எவரும் காரணமல்ல. என் படைப்புகளை வெளிக்கொணர்ந்த கவிஞர் கருணாகரன், ‘விடியல்’ சிவா, ‘காலச்சுவடு’ கண்ணன், ‘தமிழினி’ வசந்தகுமார் யாவரும் கவனமாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு இடப்பட்ட அரிசி. இவ்வளவுதான் என் பெயர். இதற்கு மிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை.  

புலி எதிர்ப்பு அரசியல் – புலி எதிர்ப்பு இலக்கியம் – புலி எதிர்ப்பு நிறுவனங்கள் என நீளும் இந்த கூட்டுச்சதிகளின் பின்னால் இருக்கிற சூழ்ச்சி அரசியல் பற்றி?

‘அவர்கள்’ என்பதைக்கூட ‘ஒருமைத்தன்மையில்’ அடையாளம் காண விரும்பவில்லை. அதற்கு பன்முகத்தன்மை இருக்கிறது. ஆனால் ‘புலி எதிர்ப்பு’ என்பதனூடாக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். “தேசியவிடுதலை என்பதுதான் வர்க்க விடுதலையின் முதற்படி” என்கிறார் தோழர் கார்ல் மார்க்ஸ். ‘தேசிய இனங்களின் விடுதலை’ குறித்து நிறையவே எழுதியிருக்கிறார், தோழர் லெனின். ‘தேசிய இனம்’ என்றால், என வரைவிலக்கணம் தந்தவர் தோழர் ஸ்ராலின். தோழர் மாவோ தந்த புதிய ஜனநாயகப் புரட்சி என்பதே தேசிய இனம்/இனங்கள் பற்றிய கறாரான பார்வை. இத்தோழர்கள் சொல்கிறார்கள் என்பதனால் அல்ல; ‘தேசிய இன விடுதலை’ பற்றிய உணர்வை நமக்கு அனுபவங்கள் தந்திருக்கின்றன. அரசியல் கருத்துக்கள் மாத்திரமல்ல; அனுபவங்களும் எனக்கு ஆசார்.(‘ஆசான்’ என்பதன் பொதுப்பால்) விடுதலைப்புலிகளின் சில/பல தவறுகள் விமர்சனத்திற்குரியவைதாம். ஆனால் அவர்களின் இலட்சிய உறுதியை, நேர்மையை நான் சந்தேகிக்க மாட்டேன். அவர்கள் ஒரு தேசிய அரசை அமைத்தும்தான் இருக்கிறார்கள். நடைமுறையில் அது மிகச்சிறந்த அரசாகவும் இருந்தது.  உண்மையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் சக்திகள் எப்போதும் ஏதோ ஒரு பெயரால் ஒடுக்கும் அதிகாரத்தால் நிராகரிக்கப்படுவதுண்டு. ‘புலி எதிர்ப்பு’ என்பது அதுதான். அதனூடாக ஒடுக்குமுறை அதிகாரத்துக்குத் துணை போகிற ஒன்றை நான் ‘சூழ்ச்சி அரசியல்’ என்று பெயரிட்டு அழைக்கிறேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளை “பாசிஸ்டுகள்” என்று தொடர்ச்சியாக எழுதிவரும் ஈழ இலக்கியவாதிகள் பற்றி?

‘ஜோர்ஜ் ஓவெல்’ என்ற ஒரு படைப்பாளி இருந்தார். அவர் எழுதிய இரண்டு படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. ‘விலங்குப்பண்ணை’, ‘1984’ என்ற நாவல்கள் அவை. தமிழில் அதன் மொழிபெயர்ப்பு வந்தது. மொழிபெயர்ப்பாளரைப் பார்த்தாலே அதன் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றைப் பலர் வாசித்திருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சிலர்கூடச் சிலாகித்திருக்கிறார்கள். ‘விலங்குப்பண்ணை’, மகத்தான ரஷ்யப்புரட்சியை கிண்டலித்து எழுதப்பட்டது. இந்நாவலில் ‘புதிய இங்கிலாந்தின் பாடல்’ என்று ஒன்று வரும். அது குறிப்பது ‘மார்க்சீயம்’ எனும் பெரும் தத்துவத்தையே. அவ்வாறுதான், ‘1984’எனும் நாவல். தோழர் ஸ்ராலின் காலத்து சோவியத் யூனியனை அது காட்சிப்படுத்துகிறது. ஆனால் இப்போது ‘1984’ நாவலை வாசித்துப் பாருங்கள், அது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகளைத்தான் காட்சிப்படுத்துகிறது. 

ஈழ இலக்கிய உலகிலும் பல ‘ஜோர்ஜ் ஓவெல்’கள் இருக்கின்றனர். மகத்தான ரஷ்யப்புரட்சி, மகத்தான சீனப்புரட்சி, சேகுவேராவின் எழுச்சி.. என்று பலவற்றிலும் ‘ஜோர்ஜ் ஓவெல்’கள் இருந்திருக்கின்றனர். ‘பாசிசம்’ என்று இவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டிருப்பார்களா? இவர்களெல்லாம் எழுதுவதனால் காகிதச்சருகுகள்! அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் புரட்சியின் மகத்துவம் என்னாவது? நாய்கள் குரைத்துச் சூரியன் அழுவதில்லை; சந்திரனும் வருந்துவதில்லை. 

ஈழத்தமிழர் வாழ்வியலில் கோவில்கள் – திருவிழாக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன் முக்கிய அம்சமாக தவில் – நாதஸ்வர இசைக்கு தனிச்சிறப்பிருக்கும். நீங்கள் அதுபோன்ற காணொலிகளை தொடர்ச்சியாக பகிர்ந்து எழுதிய வண்ணம் உள்ளீர்கள். யாழ்ப்பாணத்து தவில்-நாதஸ்வர வித்துவான்கள் பற்றி கூறுங்களேன்?

எனது கிராமத்தின் பெயர் அளவெட்டி. அற்புதமான, அழகான கிராமம். கலைகள் செழித்து வளர்ந்த ஊர். கலையும் கல்வியும் அக்கிராமத்தின் இரு கண்கள்! தோட்டமும் வயலும் இருக்கின்ற ஒரே ஊர் அது. இருக்க, தவில் நாதஸ்வரக் கலைஞர்களால் நிறைந்த ஊர் அளவெட்டி. தவில் கலைஞரில் மிகச்சிறந்த தட்சிணாமூர்த்தியும் நாதஸ்வரத்தில் விற்பன்னரான என்.கே.பத்மநாதனும் வாழ்ந்த ஊர் அது. என் வீட்டிலிருந்து அவர்களது வீடு, முன்னூறு யாருக்குமேல் இருக்காது. என் வீட்டிற்கு அவர்கள் அடிக்கடி வந்திருக்கிறார்கள். தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் நிறைந்த கிராமம் அளவெட்டி என்றால் யாழ்ப்பாணத்தில் இன்னொரு கிராமமும் இருக்கிறது, இணுவில்! தவிலும் நாதஸ்வரமும் கர்நாடக சங்கீதத்தை அடிநாதமாகக் கொண்டு எழுந்தாலும் என் இரத்தத்தில் எப்படியோ ஊறிவிட்டது. 

பங்குனி, சித்திரையில் ஊர்க்கோயில்களில் திருவிழாத் தொடங்குகிறது. திருவிழா முடியும் மாதம் ஆவணி. அளவெட்டி, அந்த ஆறுமாதங்களில் களைகட்டிக் கிடக்கிறது. தவில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு முதற்சேவகம் வரும்நாள் அன்று எனது குலதெய்வமான அம்மாள் கோயிலில்(அவர்களுக்கும் குலதெய்வம்) பத்து நிமிசத்திற்காவது ஒரு கச்சேரி வாசிப்பார்கள். வாசித்துவிட்டுத்தான் முதற்சேவகத்துக்குப் போவார்கள். உருகிப்போய்க் கிடப்போம் நாங்கள். தவில் கடகடத்தோடினதும், நாதஸ்வரத்தில் உருகினோரினதும் கண்களில் கசிவு.  அவர்கள் நெஞ்சால், மனசால் வாசித்ததில் பார்த்த எங்கள் கண்களிலும் கசிவு… சொல்லிக்கொண்டு போனால் அழுது விடுவேன்.

உங்களது கேள்விக்கு என் நேரடிப்பதில்: தவில் என்றால் முதலில் தட்சிணாமூர்த்தி(அளவெட்டி). பிறகு இணுவில் சின்னராசா. இவரது தவில் வாசிப்பைப் பார்த்தால், ‘தில்லானா மோகனாம்பாள்’ பாலையா இவரைப்(இணுவில் சின்னராசா) பார்த்துத்தான் தவில் வாசித்தாரோ என்று தோன்றும். இணுவில் புண்ணியமூர்த்தி எங்களது அம்மாள் கோயிலில் வந்து தவில் முழக்கினால் மயங்கிக் கிடப்போம். கைதடிப் பழநியைச் சொல்லாமல் விடமுடியாது. நாச்சிமார் கோயிலடியிலும் சின்னப்பழனி என்றொருவர் இருக்கிறார்.  நாச்சிமார் கோயிலடி கணேசுவைச் சொல்லாது விட்டால் அநியாயம். தட்சிணாமூர்த்திக்கு ஈடு கொடுக்கிற ஒருசிலரில் இவரும் ஒருவர்! அளவெட்டிக் குமரகுரு, அளவெட்டிப் பெரிய கணேசு(இவர்தாம் தட்சிணாமூர்த்திக்குத் தவில் பழக்கியவர்), அளவெட்டிச் சின்னக்கணேசு, அளவெட்டி ராஜகோபால்(பாவம் இவர், தவில் வாசிப்பதில் விண்ணர்தான். ஆனால் கீர்த்தி பெறவில்லை. அதற்கு அவரது நடத்தையும் காரணம்) என்று தவிலுக்கு நீண்ட வரிசை இருக்கிறது. 

அவ்வாறே நாயனத்திலும் யாழ்ப்பாணம் மிளிர்ந்தது. மாவிட்டபுரம் ராசா பற்றி அப்பா அடிக்கடி சொல்வார். நான் பார்த்ததில்லை. என் ஞாபகத்தில் நாச்சிமார் கோயிலடி ஆறுமுகம் பிள்ளை, சாவகச்சேரி பஞ்சாபிகேசன் ஆகியோர் நாயனத்தில் விண்ணர். பிறகு வந்தவர்தான் அளவெட்டி என்.கே.பத்மநாதன். இறுதிவரை அவர்தான் உச்சத்தில் நின்றார். ஆயினும் நாயனத்தில், அளவெட்டி எம்.பி.பாலகிருஷ்ணனை பலரும் வியப்பர். தோடி ராகம் என்றால் அளவெட்டி எஸ்.சிதம்பரநாதனை கர்நாடக சங்கீதம் தெரிந்தோர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அளவெட்டி ராஜதுரையும் நாயனத்தில் அற்புதமான கலைஞர். ஆனால் ‘காலம்’ என்ற ஒன்று இருக்கிறதுபோல. அவர் இளமையில் காலமாகியும் விட்டார். அளவெட்டி எஸ்.சுதந்திரனையும் கூறுவது முக்கியம்.

இணுவில் கிராமத்தில் நாயனக்கலைஞர் அவ்வளவு எழுந்ததாகத் தெரியவில்லை. இருந்தால், யாரும் சொன்னால் மகிழ்வேன். இணுவிலின் அயல் கிராமமான கோண்டாவிலில் பாலகிருஷ்ணன் என்ற அற்புதமான நாயனக்கலைஞர் இருந்தார். அவர் இளமையில் அகாலமாக மரணமடைந்து விட்டார் எனும் துரதிர்ஷ்டம் இருக்கையில் என்ன செய்வது? கோண்டாவிலில் கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி என்ற சகோதரர்கள் ‘ஜனரஞ்சக’ நாயனக்கலைஞர்களாக விளங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவரது மகன்தான் இப்போது நாயனத்தில் ‘கலக்குகின்ற’ குமரன் என்பவர் ஆவார். 

தவில்-நாயனக் கலையின் மேன்மை குறித்து மஹாகவியின்(அவரும் அளவெட்டிதான்) ‘கோடை’ எனும் பாநாடகம் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்; உருகிப் போவீர்கள். மிகச்சிறந்த நாயனக் கச்சேரி கேட்டது போன்ற கிறக்கம் அது! எனது ‘காலம் ஆகிவந்த கதை’யில் ஒரு கதை, வடக்கு வீதியில் வரும் மேளச்சமா பற்றியது.  

உங்கள் கேள்விக்கு இந்தப் பதில் பெருத்துவிட்டது போல. இடையில் வெட்டுவதற்கு உரிமை தருகிறேன். 

மரியாதைக்குரிய கா.சிவத்தம்பி, கைலாசபதி போன்ற விமர்சகர்கள் முன்னுதாரணமற்றவர்கள். இன்றைக்கிருக்கும் சூழலில் அவர்கள் போன்ற தீவிரத்தன்மையோடு கூடிய விமர்சனங்கள் வருவதில்லையே, அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

‘காலம்’தான் காரணம். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசுவோமே. நான் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்-சிறப்பு’ பாடம் கற்ற ஒருவன். எனது ஆசிரியர்களாக இருந்தவர்கள், (அப்போது)பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ் மற்றும் கலாநிதிகளான நா.சுப்பிரமணிய ஐயர், இ.பாலசுந்தரம், சித்திரலேகா மௌனகுரு, சிவலிங்கராஜா ஆகியோர். ‘தமிழ்’-ஐ ஆழமாகத்தான் கற்றோம்.

‘தமிழியலுக்கான’ ஈழத்தமிழர்களின் பங்கு மிகப் பெரிது. பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம், பொன்.பூலோகசிங்கம்.. என்று அது நிரம்பியது. பல்கலைக்கழகப் பட்டம் இல்லையெனினும் புன்னாலைக்கட்டுவன் சி.கணேசையர், அளவெட்டி த.கைலாசபிள்ளை, மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போன்றோர் ஒரு பல்கலைக்கழகம் போன்று செயலாற்றியவர்கள். இவற்றுக்கும் மேலாக ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசம், சி.வை.தாமோதரம்பிள்ளை, விபுலானந்த அடிகளார், ஆனந்த குமாரசாமி, வண.பிதா.தனிநாயகம் அடிகளார் போன்றோர் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

இவை பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ‘முன்னுதாரணமற்றவர்கள்’ என்கிறீர்களே, அதற்காக. ஈழத்துப் பாரம்பரியம், ‘பேரா.க.கைலாசபதி, பேரா.கா.சிவத்தம்பி போன்றோருக்கு’ முன்னுதாரணமாக இருக்கிறது. அவர்கள் சடாரெனப் பூச்சியத்திலிருந்து தொடங்கவில்லை; பாரம்பரியத்திலிருந்து தொடங்குகிறார்கள். அவர்களை மற்றவர்களிடமிருந்து எது வேறுபடுத்துகிறது என்றால், சமூக விஞ்ஞான அணுகுமுறைதான். அதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் மார்க்சீய அணுகுமுறை என்று சொல்லலாம். ‘மனித சமூக சாரம்’ எனும் மார்க்சீயம் சார்ந்த மானுட ஆய்வுநூலை எழுதிய ஜோர்ஜ் தோம்சன் எனும் மார்க்சீய அறிஞரிடம் பேர்மிங்காம்(இங்கிலாந்து) பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வை இவர்கள் இருவரும் மேற்கொண்டிருந்தனர். ‘முன்னுதாரணமற்று’ இவர்கள் ஆய்வெதனையும் மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே இவை யாவற்றையும் கூறுகிறேன். அதே சமயம் அவர்களது மகத்தான ஆளுமையையும் இங்கு குறிப்பிடாமல் விடமுடியாது. அவர்களிடம் கற்றவன் என்பதனால் அதனை நான் அதிகமாகவே உணர்ந்திருக்கிறேன். 

அதே தீவிரத்தன்மையுடன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் இருந்திருக்கின்றனர். நா.வானமாமலை, கோ.கேசவன், ஐராவதம் மகாதேவன், வீ.அரசு போன்றோரைக் குறிப்பிட வேண்டும். இலங்கையில் பேரா.எம்.ஏ.நுஹ்மான் அவர்களைக் குறிப்பிடலாம். ஆனாலும் போதாமை இருக்கிறது. இலங்கையில் ஆய்வாளர்கள், தீவிர ஆய்வுக்குச் செல்லாமல் தீவிர அரசியலுக்குச் சென்று விட்டார்கள். மேலும் சொல்ல என்ன இருக்கிறது? பேரா.கைலாசபதி, பேரா.சிவத்தம்பி போன்ற அன்றைய ஆய்வாளர்களை அவர்களது அரசியலுக்கு அப்பால் ஆய்வுக்காக மதித்தோம். இன்றையவர்கள் மக்களின் மரணத்தையே கவித்துவமாக வர்ணனை செய்து எள்ளி நகையாடும்போது அவர்களது ஆய்வில் தீவிரத்தன்மையை எங்கனம் எதிர்பார்ப்பது?

ஈழ அறிவுலகப்பரப்புக்கு ஒரு நீண்ட வரிசை இருக்கிறது. ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசம், சுவாமி விபுலானந்தர்,சித்திலெப்பை என நீளும் அந்த வரிசையை நீங்கள் அறிவீர்கள். இவர்களின் ஆய்வுகள் பற்றிய உங்களின் மதிப்பீடுகள் என்ன?

“ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி விபுலானந்தர், அறிஞர் சித்திலெப்பை” என நால்வர் பெயரைக் கூறி, பிறகு ‘நீளும் அந்த வரிசை’ என்கிறீர்கள். இவ்வாறு கேள்வி கேட்டதையிட்டு எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் தமிழ் அல்லது தமிழர் என்பது மதத்தால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் அல்லர். ஆறுமுகநாவலர்-சைவம்;  சுவாமி ஞானப்பிரகாசர்-கிறிஸ்தவம்; அறிஞர் சித்திலெப்பை-இஸ்லாம். 

உண்மையில் இக்கேள்விக்கு என்னால் விரிவாக பதில் சொல்ல இயலாது என்பதை மனவருத்தத்துடன் குறிப்பிட்டு ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். கொம்மியூனிஸ்ற் கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழியல் ஆய்வாளர்களுமான பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் முன்னெடுப்பில் ஆறுமுக நாவலரின் நூற்றாண்டு விழா யாழ்ப்பாணத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரணம், அவர் தமிழுக்கு வழங்கிய சிறப்புப் பங்களிப்பே.(நாவலர் பேணிய சாதியமைப்பு முறைக்காகவல்ல) தமிழில் முதன்முதலாக பதிப்பு முயற்சியை மேற்கொண்டவர் ஆறுமுக நாவலர். பிறகுதான் சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், சி.வையாபுரிப்பிள்ளை முதலானோர் வருகின்றனர். இன்னும் சொன்னால் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு, பதிப்பு முயற்சியில் வழிகாட்டியவரும் ஊக்கம் ஊட்டியவரும் ஆறுமுக நாவலர் அவர்களே. சி.வை.தாமோதரம்பிள்ளை, விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில் பதிப்பு முயற்சியை மேற்கொண்ட முதலாமவர். அவர் வழியையொட்டியே உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை முதலானோர் பதிப்பு முயற்சியை மேற்கொள்கின்றனர். ஈழத்தமிழர் இருவருமே பதிப்பு முயற்சியில் முன்னோடி என்பதுவும் எமக்குப் பெருமையே.

ஆறுமுக நாவலரின் முக்கிய பங்களிப்பு என அச்சியந்திர சாலைகளை நிறுவியமையைக் குறிப்பிடுவேன். அவர் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அச்சியந்திர சாலையை நிறுவவில்லை. ஒரே சமயத்தில் சிதம்பரத்திலும் நிறுவுகிறார். இரண்டு இடங்களிலும் ஒரே பெயர்தான்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை. அச்சேறுவதற்கு அவர் வைத்த பெயர்: ‘அச்சுவாகனமேறல்’ யாழ்ப்பாண வழக்கில் ‘வாகனமேறல்’ என்பது இறைவன் தமது ‘வாகனம்’களில் ஏறுவதனைத்தான் குறிப்பிடும். ஓலைச்சுவடிகளிலிருந்து நீங்கி, அச்சில் ஏறுவதென்பது இறைவன் வாகனத்தில் ஏறுவதற்கு ஒப்பானதென நாவலர் உணர்ந்தாற்போலத்தான் எனக்குப்படுகிறது.

நாவலரின் இன்னொரு பெரும் பங்களிப்பு என நான் கருதுவது, விவிலிய வேதத்தைத்(பைபிள்) தமிழ் மொழியில் பெயர்த்தது. அது தமிழுக்கு புதுமொழியைத் தந்தது என்பதனையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ‘சத்தனே திடங்கொள்’, ‘பாவி, செபதபம் செய்’ என்பனவெல்லாம் தமிழுக்குப் புதுமொழியாக எனக்குப்படுகிறது. ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என்று ஆறுமுக நாவலரை அதனால்தான் சொல்கிறார்கள் போலும்.

உண்மையில் இவ்வளவுக்கு நீங்கள் குறிப்பிட்ட ஏனைய அறிஞர்களை நான் படித்ததில்லை. எனவே அதற்குப் பதில் சொல்லப் பஞ்சிப்படுகிறேன். ‘சளாப்ப’க் கூடாதல்லவா? இவ்வாறு நான் பதில் சொல்லாததினால் கேள்வி கேட்ட உங்களையும் பதில் சொல்லப் புறப்படட என்னையும் ‘இந்துத்துவவாதிகள்’ என்று யாரும் குறிப்பிட, நக்கலடிக்க, விமர்சிக்கக் கூடும். அதற்கு நான் அஞ்சவில்லை. மடியில் கனமில்லை; வழியில் பயமுமில்லை. 

புலம்பெயர்வில் அலைந்துழலும் வாழ்க்கையை எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்?

இது சகித்துக்கொள்வதென்றல்ல; வாழ்ந்தே தீரவேண்டும். எந்த உயிர்களுக்கும் இரண்டு வாழ்க்கை நெறிமுறைகள்தாம் உண்டு. ஒன்று, சந்ததிப்பெருக்கல். இரண்டு, உயிர்வாழ்வைத் தக்க வைத்தல். அதனால்தான் தற்கொலையாளிகளையிட்டு (தற்கொடையாளிகள் அல்லர்) நான் எப்போதும் கோபம் கொள்வது. “வீறிட்டு அழுது விழுந்து புலம்புவதோ/பார் எட்டுத்திக்கும் உலகம் பரந்து கிடக்கிறது” என்பது மஹாகவியின் வரி. அஃது தரும் நம்பிக்கை வரி என்னை வாழவைக்கிறது. அலைந்துழலும் வாழ்க்கை உண்மையில் தாங்க முடியாதது. ஆனால் எனது வாழ்க்கையை நான்தானே வாழ்ந்து தீரவேண்டும். எனக்காக இன்னொருவர் அழலாம்; எனக்காக இன்னொருவர் சோறுண்ண முடியாது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு வெளிக்கிடும்போது தயக்கம் வந்து கால்களை நகர விடாது. ஒரு வாக்கியம் என் மனசில் தோன்றும்: ‘அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ மேலாக ஒன்றைத்தான் நான் ஒவ்வொரு நாளும் யோசிப்பேன்: முள்ளிவாய்க்காலில் இரண்டு, மூன்று மாதங்களாவது மனிதர்கள்(தமிழர்கள்) வாழ்ந்தார்கள் தானே. அதைவிட எம் வாழ்வு அலைந்துழலும் வாழ்வென்றா நீங்கள் கருதுகிறீர்கள்?   

***

 

http://www.yaavarum.com/archives/5879

 • Like 3
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, கிருபன் said:

மேலாக ஒன்றைத்தான் நான் ஒவ்வொரு நாளும் யோசிப்பேன்: முள்ளிவாய்க்காலில் இரண்டு, மூன்று மாதங்களாவது மனிதர்கள்(தமிழர்கள்) வாழ்ந்தார்கள் தானே. அதைவிட எம் வாழ்வு அலைந்துழலும் வாழ்வென்றா நீங்கள் கருதுகிறீர்கள்?   

கிருபனவர்களுக்கு இணைப்புக்கு நன்றி.

ஒரு பேட்டிக்குள்ளால் சில இடங்களில் நாமும் நடந்துபோகிறோம்.  ஏனென்றால் வாழ்தலும் ஒரு கூட்டுமுயற்சி. விடுதலைக்கான பயணமும் அப்படியே என்பதை என்று எமது தலைவர்கள் புரிந்துகொள்வார்கள்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் 👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்........மிகைப்படுத்தப்படாத அழகான பேட்டி .........!   💐

Link to post
Share on other sites

எனக்கு இரவி மீது சற்று கோபம் இருந்தது. சரிநிகரில் இவர் எழுதும் காலம் முழுதும் புலிகளிற்கு எதிரான போக்கை கொண்டு இருந்தவர் ஏன் ஐரோப்பியாவுக்கு வந்தவுடன் மாறினார் என்ற கேள்வியும் அதற்கு 'பிழைப்புவாதம்' தான் காரணம் என்றும் நினைத்து இருந்தனான். இரவி யின் நெருக்கமான நண்பர் சயந்தன் யாழில் எழுதிக் கொண்டு இருக்கும் போதும் ஒரு முறை அவரிடம் இதைக் கேட்டு இருந்தனான்.

ஆனால் இரவியின் இந்த விரிவான, போலித்தனம் இல்லாத பேட்டியை வாசித்த பின் என் எண்ணத்தை மாற்றி விட்டேன். 

பகிர்வுக்கு நன்றி கிருபன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

ஆனால் இரவியின் இந்த விரிவான, போலித்தனம் இல்லாத பேட்டியை வாசித்த பின் என் எண்ணத்தை மாற்றி விட்டேன்

கொல்லப்படுவோம் என்று பயந்தவருக்கு கொழும்பு வாழ்க்கை சிங்களவரின் அடக்குமுறையை உணர்த்தியது என்று சொல்கின்றார்.

இரவியின் இரண்டு நூல்கள் இன்னும் படிக்காமலேயே இருக்கின்றன.

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்    22 Views ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும். ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை. ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது. இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்கத்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார். அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள். இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தகுமார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர். சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது. இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும். அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின்  கவலை. இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும். https://www.ilakku.org/இருபதாம்-திருத்தச்-சட்டம/
  • அதுதான் சொன்னேன்.... இலங்கையை இப்ப யாரு வைச்சிருக்கிறது எண்டு, டெல்லி வாலாக்கள்  மண்டையைதட்டிக் கொள்வர். 🤔 🤦‍♂️
  • மேலதிக தரவு வீட்டு விலங்கு  / கீரைவகை நடு நீக்கின் குடும்ப உறவு முதல் நீக்கின் நாடு  
  • குதிரைகளின் குறும்புகள் குசும்புகள் குழப்படிகள் ......!   🐴
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.