• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Justin

கொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா? 

Recommended Posts

கொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா? 

2019 இன் கடைசிப் பகுதியில் சீனாவின் வுஹானில் சில நூறு நபர்களைத் தொற்றியதன் மூலம் பரவ ஆரம்பித்த கொரனா வைரஸ் பலரையும் வைரஸ் நோய்களின் தடுப்பு முறைகள் பற்றித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சாதாரணமாக தடிமன் குளிர் காய்ச்சல் காலங்களில் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுவதன் மூலம் இந்த வகையான காய்ச்சல் தரும் வைரசுக் கிருமிகளைத் தடுக்கலாம் என்ற ஆலோசனை பல வருடங்களாக புளக்கத்தில் இருந்தாலும், அதிக உயிரிழப்பை உருவாக்கும் நவீன கொரனாவைரசு வரும் வரை, இந்தக் கை கழுவலின் முக்கியத்துவம் பலருக்குச் சரியாகப் பதியவில்லை என்றே சொல்லலாம். உலகம் முடங்கி இரண்டு மாதங்கள் கடந்த பின்னர், தொலைவு பேணுதல், கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல் என்பன மட்டுமே கட்டுப் பாட்டு முறைகளாகப் பேணப் படும் நிலையில் நாம் முழுவதுமாக வழமைக்குத் திரும்ப தடுப்பு மருந்துகள் தேவை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

 தடுப்பு மருந்துகள்

1796 இன் கடைசிப் பகுதியில், மாட்டம்மை நோயினால் உருவான பொக்குளங்களை பசு மாட்டில் இருந்து  எடுத்து சிறுவன் ஒருவனுக்கு தடுப்பூசியாகப் போட்டதன் மூலம், அதிக உயிராபத்தை ஏற்படுத்திய சின்னம்மை நோயை தடுத்தார் எட்வர்ட் ஜென்னர். அந்த நிகழ்வே கொடிய தொற்று நோய்களாக அந்த நாட்களில் விளங்கிய அம்மை போன்ற நோய்களை தடுக்க தடுப்பூசிகள் சிறந்த வழிகள் என்ற கண்டு பிடிப்பின் ஆரம்பம். 1950 இல் வைரசுகளை எங்கள் உடலுக்கு வெளியே வளர்த்து, அவற்றின் நச்சுத் தன்மையைக் குறைத்து தடுப்பூசியாகப் பாவிக்கலாம் என்ற பாரிய முன்னேற்றத்தினால், 2014 இல் ஆட் கொல்லி நோயான போலியோ உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து ஒழிக்கப் பட்டது. தடுப்பூசிகளால் பயன் இல்லை என்று வாதிடும் anti-vaxxersபார்க்க மறுக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக போலியோ இருக்கிறது. இன்று மில்லியன் கணக்கான குழந்தைகளை இறப்பில் இருந்தும் உடல் ஊனத்தில் இருந்தும் காப்பாற்றும் தடுப்பு மருந்தாக போலியோ தடுப்பூசி இருக்கிறது. 

தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது?

வைரசுகள் உடலினுள் புகும் போது உடல் உருவாக்கும் எதிர்ப்பு சக்தியை, தடுப்பூசி மூலம் ஏற்கனவே ஏற்படுத்தி விடுவது தான் தடுப்பூசிகள் நோயில் இருந்து பாதுகாக்கக் காரணம். ஆனால், அனைத்து வைரசுகளும் அல்லது நுண்ணுயிரிகளும்  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஒரே மாதிரித் தூண்டுவதில்லை. இதனால், எல்லா நுண்ணுயிர்களுக்கும் தடுப்பூசிகள் தயாரித்து விட முடியாது.சில சமயங்களில், ஒரு வைரசு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டினாலும், காலப் போக்கில் வைரசு தன் அமைப்பை மாற்றிக் கொள்வதால் அது தூண்டிய நோய் எதிர்ப்புச் சக்தி வைரசை எதிர்க்கத் தகுதியற்றதாய் மாறி விடுவதும் நடக்கிறது.உதாரணமாக, வருடா வருடம் பரவும் இன்புழுவன்சா குளிர் காய்ச்சல் வைரஸ் தன் அமைப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஒவ்வொரு வருடமும், புதிய தடுப்பு மருந்தை உருவாக்கி நாமும் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் சில வைரசுகளுக்கு தடுப்பூசிகள் தயாரிப்பதே இயலாத அளவுக்கு அவை மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எயிட்சை உருவாக்கும் எச்.ஐ.வி இந்த மாதிரியானது. 

கொரனாவைரசு, நிலை என்ன?

நவீன கொரனாவைரசு புதிதென்றாலும், அது மனிதருக்கு அறிமுகமான ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தின் உறுப்பினர். மாடு, பன்றி, நாய், பூனை போன்ற விலங்குகளில் ஏற்கனவே சில கொரனாவைரசுகள் இருக்கின்றன. மனிதரில், நவீன கொரனா வைரசு வருவதற்கு முதலே, குறைந்தது ஆறு வகையான கொரனா வைரசுகள் நோயை ஏற்படுத்தும் வைரசுகளாக இருக்கின்றன. இவற்றில் 2002 அளவில் வந்த சார்ஸ்(SARS), 2012 இல் வந்த மெர்ஸ் (MERS) வைரசுகள் தவிர்ந்த ஏனைய நாலும், வருடாந்தம் குளிர் காய்ச்சலோடு சேர்ந்து எம்மைத் தாக்கும் சாதாரண வைரசுகளாக இனங்காணப்பட்டிருக்கின்றன. அப்படியானால், வருடா வருடம் எம்மைத் தாக்கும் கொரனா வைரசுகள் எமக்கு நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடவில்லையா? ஏன் என்ற கேள்வி எழுகிறது.

-ஜஸ்ரின்

மூலங்கள்: பல்வேறு. 

-தொடரும் 

Edited by Justin
anti-vaxxers inserted
  • Like 9

Share this post


Link to post
Share on other sites

நல்ல தலைப்பு....  ஜஸ்ரின்,  மனிதரால்... இயற்கையை,  வெல்ல முடியும். :)
ஆனால்... திடீரென்று, ஒரு நோய் வரும் போது.. 
மருந்து, இல்லாத நிலைமையில்...  எங்கள் உடல், அதற்கேற்ப இசைவாகி விடும். 💡

இருமல், தடிமல்  வந்தால்....  எப்படி,  நாங்கள் கையாளுவமோ...
அதே... மாதிரி, கொரோனாவையும்,  விரட்டி அடிப்போம். 😎

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு பதிவு பலருக்கு உதவும், தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

நல்ல தலைப்பு....  ஜஸ்ரின்,  மனிதரால்... இயற்கையை,  வெல்ல முடியும். :)
ஆனால்... திடீரென்று, ஒரு நோய் வரும் போது.. 
மருந்து, இல்லாத நிலைமையில்...  எங்கள் உடல், அதற்கேற்ப இசைவாகி விடும். 💡

இருமல், தடிமல்  வந்தால்....  எப்படி,  நாங்கள் கையாளுவமோ...
அதே... மாதிரி, கொரோனாவையும்,  விரட்டி அடிப்போம். 😎

இது தொற்று நோய்களின் வரலாறு தெரியாத நம்ம ஆட்கள் முகநூலில் அடிச்சு விடும் ஒரு போலி விஞ்ஞான விளக்கம்! அடுத்த முறை இப்படியான விளக்கம் தரும் ஒருவரிடம் போலியோவுக்கு எங்கள் உடல் எப்படி இசைவாக்கம் அடைந்தது என்று கேட்டுப் பாருங்கள் (மேலே எழுதியிருக்கிறேன்)

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

உரிய நேரத்தில் சிறந்த பதிவு. நன்றி ஜஸ்ரின். 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
11 hours ago, Justin said:

ஒரு வைரசு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டினாலும், காலப் போக்கில் வைரசு தன் அமைப்பை மாற்றிக் கொள்வதால் அது தூண்டிய நோய் எதிர்ப்புச் சக்தி வைரசை எதிர்க்கத் தகுதியற்றதாய் மாறி விடுவதும் நடக்கிறது.

நுளம்புகளை ஒழிப்பதற்காக, 1970´ களில்....மாநகர சபையால், 
வீடுகளுக்கு வந்து... ஒரு மருந்தை அடிப்பார்கள்.  
ஆரம்பத்தில்... நுளம்புகளின் தாக்கம் குறைந்து இருந்தாலும்,
காலப் போக்கில்... அந்த மருந்து நுளம்புகளுக்கு, "விற்றமின் சி" மாதிரி.... பழக்கப் பட்டு விட்டது. :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

கிறிஸ் மனிதர்கள்..தப்பி வாழும் வைரசுகள்

தாயகத்தில் காலத்திற்குக் காலம் கிறிஸ் மனிதர்கள் , குள்ள மனிதர்கள் நடமாட்டம் பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். செய்திகள் உருவாக்கும் திகில் fபீலிங்கை விட கிறிஸ் மனிதர்கள் யார் என்ற கேள்வி அவ்வளவாக எழுவதில்லை. உண்மையில், வழு வழுப்பான கிறிசை உடலில் பூசிக் கொண்டு வீடு புகுந்து திருடுவோர் தான் கிறிஸ் மனிதர்கள். மிக நெருங்கிப் பிடித்தால் கூட நழுவி ஓடி விடக் கூடிய தன்மையை கிறிஸ் பூச்சு தருகிறது, அவர்களும் தப்பி ஓடி விடுகிறார்கள். இப்போது உருவாகியிருக்கும் நவீன கொரனாவைரசும் இதற்கு நிகரான  ஒரு நுட்பத்தைப் பாவித்து , உடலின் நோய் எதிர்ப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.  

நம்மிடையே காலங்காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஏனைய கொரனாவைரசுகளும் எங்கள் உடலில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை. குளிர் காய்ச்சல் தரும் இன்புழுவன்சா வைரசு போல வருடா வருடம் உருமாறா விட்டாலும், வேறு வழிகளில் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி தூண்டப் படாதவாறு  கொரனாவைரசுகளின் அமைப்பு இருக்கிறது. நேயெதிர்ப்புச் சக்தியை நவீன கொரனா வைரசு தூண்டுமா தூண்டினாலும் பல மாதங்களுக்கு அந்த சக்தி எங்கள் உடலில் தங்கியிருக்குமா என்ற இரு கேள்விகளில் தான் கொரனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்க முடியுமா என்ற பதில் தங்கியிருக்கிறது.


நவீன முயற்சிகள் 

இது வரை உலகில் தயாரிக்கப் பட்ட நுண்ணுயிர்களுக்கெதிரான தடுப்பூசிகளில் இருந்து கொரனாவைரசுக்கான தடுப்பூசி பல வழிகளில் வித்தியாசமான ஒன்றாக இருக்கப் போகிறது என்பது மட்டும் இப்போதைக்குத் தெளிவாக உள்ள விடயம். வைரசுகளை உடலுக்கு வெளியே வளர்ப்பது கடினம், அதிலும் கொரனா வைரசை உடலுக்கு வெளியே இழையங்களில் வளர்த்து, சேமித்து அதை தடுப்பூசி தயாரிக்கும் அளவுக்கு பெருமளவில் உற்பத்தி செய்வது மிகவும் கடினம். இதனால் புதிய தொழில் நுட்பமாக , கொரனாவைரசின் ஒரு முக்கிய ஜீன் துண்டுகளை தடுப்பூசி போல தயாரித்து, அதை எமதுடலில் செலுத்தும் திட்டமே இப்போது ஒரு குழுவினால் முன்னெடுக்கப் படுகிறது. அந்த வைரஸின் ஜீன்கள் எமது உடலினுள் வைரசுகளாக மாற்றப் படும் போது , வைரசின் முக்கியமான அந்த அமைப்பிற்கெதிரான நோயெதிர்ப்புச் சக்தி உடலினால் உருவாக்கப் படும் என்பது எதிர்பார்ப்பு.

வெற்றி வாய்ப்புகள் என்ன? 

சாதாரணமாக, ஒரு நுண்ணுயிர் தடுப்பூசி தயாரிக்கப் படும் போது அது தோல்வி அடைவதற்கான வாய்ப்பு 90%. இதன் அர்த்தம், ஒரு நுண்ணுயிருக்கெதிராக 10 வகையான தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து முடிக்கும் போது, இறுதியில் 1 வகையான தடுப்பூசி மட்டும் வேலை செய்யும். இது வரலாற்று ரீதியான தரவுகளால் நிரூபணமான அவதானிப்பு. இந்தத் அவதானிப்பு, என்ன தான் மறைத்தன்மையானதாக இருந்தாலும், நவீன கொரனாவைரசுக்கான தடுப்பூசியைப் பொறுத்த வரையில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரு அவதானிப்பு. ஏப்ரல் நடுப்பகுதியளவில் வரை, 30 வரையான கொரனா வைரஸ் தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருந்திருக்கின்றன. இப்போது இந்த எண்ணிக்கை 30 இற்கு அதிகமாக இருக்கக்  கூடும். எனவே, அதிக பட்சம் 3 தடுப்பூசிகளாவது வெற்றியளிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 

பரிசோதனை முடிவுகள்

வைரசின் ஜீன் துண்டங்களை தடுப்பூசியாகப் பயன்படுத்தும் மொடெர்னா நிறுவனத்தின் பரிசோதனைகள் குரங்குகளிலும் சிறு எண்ணிக்கையான மனிதர்களிலும் நவீன கொரனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக அந்த நிறுவனம் செய்திக் குறிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், மனிதர்களில் , முதல் 6 வாரங்கள் மட்டுமே இந்த நோயெதிர்ப்புச் சக்தியை அவர்கள் உடலில் ஆராய்ந்திருப்பதால், நீண்ட காலத்திற்கு இந்தத் தடுப்பூசியினால் விளையும் நோயெதிர்ப்புச் சக்தி நீடிக்குமா என்பது இன்னும் உறுதியாகாத விடயம். இதே நேரம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தனது கொரனா வைரஸ் தடுப்பூசியை குரங்குகளில் பரீட்சித்துப் பார்த்த போது கிடைத்த முடிவுகள் நம்பிக்கை தருவனவாக இருந்தன. தடுப்பூசி ஏற்றப் பட்ட குரங்குகளின் நாசித் துவாரத்தில் பெருமளவு வைரசுகள் காணப் பட்டாலும், அந்தக் குரங்குகளில் சுவாச நோய் உருவாகவில்லை!. 

வெற்றிகரமான தடுப்பூசி கிடைத்தால்..எப்போது சந்தைக்கு வரும்?

வழமையாக 10 வருடங்கள் ஆற அமர ஆய்ந்து சந்தைக்கு வரும் தடுப்பூசிகள் போலல்லாமல் கொரனா வைரஸ் கேசில் ஒரு புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது. சில தடுப்பூசிகள் பரிசோதனையில் இருக்கும் போதே அந்த தடுப்பூசிகளை பெரிய அளவில் சில கம்பனிகள் உற்பத்தி செய்யும் அனுமதியை அரசுகள் வழங்கியிருக்கின்றன. தடுப்பூசிகளின் செயல் திறனும் பாதுகாப்பும் உறுதியாக ஒரு வருடம் எடுக்கலாம், ஆனால் அந்த ஒரு வருட முடிவில் சில நூறு மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் ஏற்கனவே தயாராக இருக்கும் வகையில் தான் இந்த ஏற்பாடு. அந்தத் தடுப்பூசி செயல்திறனிலோ அல்லது பாதுகாப்பிலோ தோல்வியடைந்தால்,சில பில்லியன் டொலர்கள் நட்டத்துடன் அடுத்த தடுப்பூசியை நோக்கி ஆய்வுகள் நகரும். 

முடிவு, அனேகமாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டு  பிடிப்பதாக அல்லது வைரசை உடலில் வைத்து அழிக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றைக் கண்டு பிடிப்பதில் தான் இருக்கிறது. நவீன கொரனா வைரசுக்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் சமாந்தரப் பாதையில் பயணிக்கின்றன. எனவே, இப்போதைக்கு விஞ்ஞான மருத்துவத்தின் கைகளில் தான் நம் கொரனாவுக்கு முந்திய வாழ்வுக்குத் திரும்புவதற்கான சாவி இருக்கிறது!  

-ஜஸ்ரின் 

(பல்வேறு ஆய்வு மூலங்களில் இருந்து)

-முற்றும்

  • Like 7
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி ஜஸ்ரின் இரு கட்டுரைகளும் பல அரிய தகவல்களை தந்துள்ளன. முகநூல், யூரியூப் புளுகர்களின் பதிவுகள் மக்களை அறியாமை இருளில் தள்ளும் வேளையில் இவ்வாறான கட்டுரைகள் மக்களை அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும். 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 6/6/2020 at 03:15, தமிழ் சிறி said:

நல்ல தலைப்பு....  ஜஸ்ரின்,  மனிதரால்... இயற்கையை,  வெல்ல முடியும். :)
ஆனால்... திடீரென்று, ஒரு நோய் வரும் போது.. 
மருந்து, இல்லாத நிலைமையில்...  எங்கள் உடல், அதற்கேற்ப இசைவாகி விடும். 💡

இருமல், தடிமல்  வந்தால்....  எப்படி,  நாங்கள் கையாளுவமோ...
அதே... மாதிரி, கொரோனாவையும்,  விரட்டி அடிப்போம். 😎

உண்மை தான்.

எம்மைப் போலவே தான் வைரஸூகளுக்கும் பல சூழல் உயிரியல்.. பெளதீகக் காரணிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய நிலை.

அதுவும் இல்லாமல்.. அவற்றின் வாழ்கை வட்டம் குறுகியது என்பதால்.. அவற்றின் ஜீன்களில் உண்டாகும் மாற்றங்கள் சில அவற்றைப் பலவீனப்படுத்தலாம். அந்தப் பலவீனம் அடுத்தடுத்த அவற்றின் சந்ததிகளுக்குப் பரவின் இந்த கொரோனா வைரசுக்கள் இயற்கையாகவே பலவீனப்படும் வாய்ப்புக்கள் உண்டு. 

மேலும்.. எமது உடலும் தன்னை புதிய தொற்றுக்களுக்கு எதிராக பலவழிகளில் போராடும். அதில் அது வெற்றி கண்டு.. வைரஸும் தொற்றும் இயல்பில் பலவீனப்பட்டால்.. இந்த வைரஸ் இயற்கையாக அதன் வீரியத்தை இழந்ததாகி விடும்.

Coronavirus 'could be getting weaker' as scientists spot new mutation

https://www.mirror.co.uk/science/coronavirus-could-getting-weaker-scientists-21981820

Healthy eating as important as social distancing in fight against COVID-19, Government is warned by food specialists from City, University of London, the University of Sussex and Cardiff University.

https://www.city.ac.uk/news/2020/march/healthy-eating-important-covid-19-fight-experts-warn-government

ஆனால்.. இப்படி நிகழ்வதற்கு உள்ள சாத்தியம் என்பது உடனடியானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. அதனால்.. தான் இந்த வைரஸுக்கு எதிரான மருந்துத் தேடலும்.. வக்சீன் தேடலும். காரணம்.. இந்த வைரஸீன் தற்போதைய தொற்று வீதம் அதிகம். இறப்பு வீதமும் ஒப்பீட்டளவில் தற்போதைய சூழலில் சில நாடுகளில் அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக.. இந்த வைரஸின் பொருண்மிய.. சமூகத்தாக்கம் மிக மிக அதிகம். அதனால் தான் பல நாடுகள்.. போட்டி போட்டுக்கொண்டு மருந்துகளை.. வக்சீனைத் தேடுகின்றன. 

ஏலவே இந்த நிலையை சார்ஸ் வைரசில் அவதானித்திருக்கிறார்கள்.  எனவே உங்களின் அந்த எளிமையான கருத்து நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. புரளியும் கிடையாது. நிகழ்வுக்குச் சாத்தியமானதே. 

Edited by nedukkalapoovan
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கருத்துகளுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி!

தமிழ் சிறியின் கேள்வி, நெடுக்கரின் கருத்து பற்றி மேலும் எழுத விளைகிறேன்: "எமது உடல் இசைவாக்கம் அடைந்து விடும் , கொரனா ஒழியும்" என்று தமிழ்சிறி கூறியதை , எங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறிப்பிடுவதாக நான் விளங்கிக் கொண்டேன். நெடுக்கர் வைரஸ் மாறுவதால் அது பலமிழந்து போவதைப் பற்றி எழுதியிருக்கிறார். எமது உடலின் இசைவாக்கமும் வைரஸ் விகாரத்தினால் பலமிழப்பதும் இரு வேறு விடயங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

வைரசுகள் மாறுகின்றனவா?

மிக வேகமாக பெருக வேண்டும் என்ற அவசரத்தில் வைரசுகள் தங்கள் ஜீன்களை வேகமாக பிரதி செய்யும் போது, அதிக தவறுகள் நிகழ்கின்றன. இந்த தவறுகள் காரணமாக, உருவாகும் வைரசுகள் பலம் கூடியவையாகவோ பலம் குறைந்வையாகவோ இருக்கக் கூடும். இது ஆய்வுகளால் முன் கூட்டியே எதிர்வுகூர இயலாத எழுந்தமானமான செயல் பாடு. ஆனால், அண்மைய கால வரலாற்றில் இரண்டு தடவைகள் மனித இனத்திற்கு லொட்டரி அடித்தது போல வைரசுகள் தாமாகவே பலமிழந்த உதாரணங்கள் உண்டு. 2002 இல் வந்த சார்ஸ், ஒரு வருடத்திற்கும் குறைவாக மனிதரிடையே பரவிய பின்னர் பலமிழந்து பரவுதல் குறைந்தது ஒரு உதாரணம். 2009 இல் உருவான பறவைக் காய்ச்சல் எனப்பட்ட புதிய வகை இன்புழுவன்சா வைரசும் இப்படியாக பலமிழந்ததால் நாம் தப்பித்தோம். ஆனால், மிக முக்கியமான விடயம், அதே சார்ஸ் குடும்ப வைரஸ், சார்சை விட தன் தொற்றும் திறனை அதிகரிக்கும் வகையில் விகாரமடைந்த போதே நவீன கொரனா வைரஸ் உருவானது. எனவே 2019 இல், எழுந்தமானமான மாற்றத்தால் லொட்டரி விழுந்தது வைரசுக்கு! ஆப்பு விழுந்தது மனிதனுக்கு!

கொரனாவைரசுகள் மாறுகின்றனவா? 

ஒவ்வொரு வகை வைரசும் விகாரமடையும் வேகம் வித்தியாசமானது. வருடா வருடம் வரும் குளிர்காய்ச்சல் இன்புழுவன்சா வைரஸ் ஒரு வருடத்தில் மூன்று தடவைகள் தன் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. ஆனால், மனிதரில் இருக்கும் ஏனைய 6 கொரனாவைரசுகளும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை தங்கள் உருவமைப்பில் உருவாக்க 10 வருடங்கள் எடுத்துக் கொள்கின்றன. எனவே, அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் ஒரு வைரசாக கொரனாவைரசுகள் இது வரை அடையாளம் காணப் படவில்லை! நவீன கொரனாவைரஸ் இதற்கு விதிவிலக்கா என்பது காலத்தின் கையில் இருக்கும் கேள்வி. ஆனால், இன்புழுவன்சா வைரஸ் போல கொரனாவைரசு வேகமாக மாறாமல் இருக்க அதன் ஜீன்கள் அமைக்கப் பட்டிருக்கும் விதம் காரணம் என்று அறியப் பட்டிருக்கிறது. 

கொரனாவைரசுகள் தொற்றாதவாறு நமது உடல் அமைப்பு மாறமுடியுமா?

அனேக வைரசுகள் தங்கள் உடல் அமைப்பில் இருக்கும் ஒரு புரத மூலக்கூறு மூலம், எங்கள் உடலின் செல்களில் இருக்கும் புரத மூலக்கூறு ஒன்றுடன் பொருந்திக் கொள்வதால் எங்கள் உடலினுள் நுழைகின்றன. இதை வைரசு தனது திறப்பொன்றின் மூலம் எங்கள் செல்களின் பூட்டைத் திறக்கிற மாதிரி உருவகித்துக் கொள்ளலாம். நவீன கொரனாவைரஸ்  எங்கள் சுவாசப் பையின் சில கலங்களில் இருக்கும் ACE2 என்ற பூட்டைத் திறந்து தான் உள்ளே நுழைகின்றது. இந்தப் பூட்டின் அமைப்பு இசைவாக்கம் மூலம் மாறும் வாய்ப்புகள் குறுகியகாலத்தில் சாத்தியமில்லை  என்றே அனேக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால், அடுத்த நூறு வருடங்களில் இது நிகழலாம். பூட்டு மாற்றப் பட்ட செல்லினுள் நவீன கொரனா வைரஸ் நுழைய முடியாததால், கொரனாவைரசினால்  பாதிக்கப் படாத மனிதர்கள் எம்மிடையே நடமாடலாம்! இப்படியான ஒரு மாற்றம் எயிட்சை உருவாக்கும் எச்.ஐ.வி வைரசைப் பொறுத்த வரை மனிதர்களில் பல நூறாண்டுகள் முன்பு நிகழ்ந்திருக்கிறது. CCR5 என்ற மனித செல்களின் புரதமொன்றின் ஊடாக எச்.ஐ.வி வைரஸ் உடலினுள் நுழைகிறது. மனித வரலாற்றின் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த CCR5 இல் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டு, எச்.ஐ.வி வைரசின் திறப்பு, இந்தப் புரதப் பூட்டைத் திறக்க இயலாதவாறு மாறியிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் வாழும் 5% வரையான மனிதர்கள் இதனால் எச்.ஐ.வி தொற்றினாலும், எயிட்ஸ் நோய்க்குள்ளாகாத வினோத மனிதர்களாக இருக்கிறார்கள்!.

தொடர் முற்றானாலும், நீண்ட பின்னிணைப்பாகி விட்டது, மன்னிக்கவும்!. 

மூலங்கள்: பல்வேறு. நான் குறிப்பிடும் தகவல்களை ஆய்வு அறிக்கைகள், நான் என் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கும் பாடநூல்கள் என்பவற்றில் இருந்தே எடுக்கிறேன். மூலங்கள் அவசியமானவை என நீங்கள் யாரும் கருதினால் இங்கே நான் இணைக்கிறேன்.   

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, Justin said:

தமிழ் சிறியின் கேள்வி, நெடுக்கரின் கருத்து பற்றி மேலும் எழுத விளைகிறேன்: "எமது உடல் இசைவாக்கம் அடைந்து விடும் , கொரனா ஒழியும்" என்று தமிழ்சிறி கூறியதை , எங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறிப்பிடுவதாக நான் விளங்கிக் கொண்டேன். நெடுக்கர் வைரஸ் மாறுவதால் அது பலமிழந்து போவதைப் பற்றி எழுதியிருக்கிறார். எமது உடலின் இசைவாக்கமும் வைரஸ் விகாரத்தினால் பலமிழப்பதும் இரு வேறு விடயங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

 

6 hours ago, nedukkalapoovan said:

அதுவும் இல்லாமல்.. அவற்றின் வாழ்கை வட்டம் குறுகியது என்பதால்.. அவற்றின் ஜீன்களில் உண்டாகும் மாற்றங்கள் சில அவற்றைப் பலவீனப்படுத்தலாம். அந்தப் பலவீனம் அடுத்தடுத்த அவற்றின் சந்ததிகளுக்குப் பரவின் இந்த கொரோனா வைரசுக்கள் இயற்கையாகவே பலவீனப்படும் வாய்ப்புக்கள் உண்டு. 

மேலும்.. எமது உடலும் தன்னை புதிய தொற்றுக்களுக்கு எதிராக பலவழிகளில் போராடும். அதில் அது வெற்றி கண்டு.. வைரஸும் தொற்றும் இயல்பில் பலவீனப்பட்டால்.. இந்த வைரஸ் இயற்கையாக அதன் வீரியத்தை இழந்ததாகி விடும்

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this