Jump to content

'உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்

No photo description available.

 

நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம்

 

 

சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து .

         நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,'' ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல் ,புலம்பெயர் வாழ்வுக்கும் தாயக வாழ்வுக்கும் இடையே பல வேறு தளங்களில் தத்தளிக்கும் வாழ்வின் ஒரு வெட்டுமுகம் என்பதில் ஐயமில்லை .

      எழுத்தாளர் ஒருவர் தனது படைப்பை மக்கள் முன் வைக்கும் நோக்கம் என்ன ?இப்போது வாழும் மனித குலம் இன்னும் சிறிதளவு சிறந்ததாக இன்னும் கொஞ்சம் மனிதப் பண்பு மிக்கதாக மேலும் சற்றுக் கூரப்படைந்ததாக மாற அந்தப் படைப்பு உதவுமாக இருந்தால் அது படைப்பாளியின் வெற்றிப்படி என்று கருதலாம் .கதையின் உள்ளடக்கம் தருகின்ற செய்தி வாசகர் ஒருவரிடமாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

உருவம் கலைநயம் மிக்கதாக அமைந்து ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் .உதாரணமாக இந்நூலில் 'ஆசை மனதளவு 'என்ற கதையின் நாயகி விழுமியமும் அறமும் மாறுபட விரும்பாதவளாய் உயர்ந்து நின்று உள்ளடக்க நோக்கத்தை நிறைவு செய்கிறாள் .

Rocco Fumento என்ற ஆய்வாளர் சிறுகதை நாலுவகை என்பார் .

1.நிகழ்ச்சியால் சிறப்பெய்தும் கதை

2.சூழலால் சிறப்பெய்தும் கதை

3.கதை மாந்தரின் பண்பால் சிறப்பெய்தும் கதை

4.உரிப்பொருளால் சிறப்பெய்தும் கதை

'பணத்துக்காக எதுவும் செய்யலாம் 'என்ற கலாசாரம் தமிழர் மத்தியில் மிக வேகமாகப் பரவுகிறது .இனியாளின் அக்கா அதற்கான ஒரு வகை மாதிரி .அதனால் அது கதைமாந்தரின் பண்பால் சிறப்புப்பெறுகிறது .என்ஜினியர் கதை கலாசார அதிர்ச்சியை அழகாகச் சொல்லுகிற அதே நேரம் தாயகத்தில் வளர்ந்த ஆண் ,வெளிநாட்டில் வளர்ந்த பெண் ஆகியோரின் பாத்திரப் படைப்பை மிக இயல்பாகத்தந்து அத்தகைய திருமணத்தில் வரக்கூடிய நெருக்கீட்டை கதை மாந்தர் சித்திரிப்பால் சிறப்புறச் சொல்கிறது

பெண்மனது கதை முதுமையில் வரும் இயலாமை ,வன்முறை ஆகியவற்றைக் காட்டினாலும் தேவகி என்ற பாத்திரத்தினால் சிறப்புறுகிறது .தேவகியை வகைமாதிரிப் பாத்திரம் எனப்பார்க்கலாம் .

வேப்பங்காய்கள் அழகான தலைப்பு .நீளமான கதை.சிறுகதைக்கட்டமைப்பு ப் பேணப்படுகிறதா உடைந்துவிடுகிறதா என்ற ஐயம் ஏற்பட்டாலும் சிந்தியா பாத்திரத்தால் உயர்வடைகிறது .

விடுதலை தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று .நந்தா என்கிற அருமையாக வார்க்கப்பட்ட பாத்திரம் அதற்கான காரணம் .சம்பவங்கள் இதனை இயற்பண்பு கொண்ட கதை ஆக்கி விடுகின்றன .

நிகழ்வுகளால் சிறப்பெய்தும் கதைகளில் உறவுகள் ஒன்று.ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வு முறையின் மாற்றம் பற்றி அது பேசுகிறது .மகனுடைய நடத்தை நிறையவே சிந்திக்க வைக்கிறது .அவன் உணர்வு பூர்வமாகச் சந்தோஷிக்கிறானா ?தனது எதிர்ப்பைக் கோபமாக வெளிப்படுத்தாவிட்டாலும் உறுதியாகவேனும் புலப்படுத்தா காரணம் என்ன ?பயமா ?அசௌகரியமான சூழலை எதிர்கொள்ளும் தயக்கமா ?எதிர் காலத்தில் தனக்கான முன்மாதிரி என்று நினைக்கிறானோ ?விவாதிக்கத் தூண்டும் பாத்திரம் .

எப்போதும் இரவு நல்ல தலைப்பு .நிகழ்வுகளால் உயரும் மற்றோர் கதை .பெண்கள் மீதான வன்முறை கலை நயத்துடன் வெளிப்படுகிறது .ஆயினும் வாசகர் திருப்திப்பட முடியவில்லை .

தொகுதியின் தரமான கதைகள் வரிசையில் வரக்கூடிய மற்றொன்று வரம் வேண்டினேன் .நிகழ்வுகளால் மேலேவருவது .மருத்துவருக்கு இந்த மாற்றம் சாதாரணமாக இருக்கலாம் .ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட பெற்றோரின் உணர்வு ?எமது மரபணு குழந்தைக்கு வராவிட்டால் உயிரியல் தொடர்ச்சி என்ற திருப்திக்கு என்ன ஆவது ?இதுதான் நியதி என்றால் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கலாமே ?இவ்வளவு செலவும் துன்பமும் ஏன் ?விடை இல்லாத வினாக்கள் .

உணர்வுகள் கொன்றுவிடு என்ற தலைப்புக் கதை உரிப்பொருளால் சிறப்புப் பெறுவது .நேரில் பார்க்காத ,பழகாத ,முகப் புத்தக உறவுகளின் கொடுமை பற்றி அழகாகப் பேசுவது இக்கதை .அண்மையில் தாயகத்தில் இருந்து ஒரு பெண் ,நிஜத்தில் இத்தகு உறவைத்தேடி இந்தியா சென்று தற்கொலையில் தன் வாழ்வை நிறைவு செய்திருப்பது பத்திரிகைச் செய்தி .முடிவாகிப்போனது என்ற கதையும் தற்கொலையில் முடிகிறது .நல்ல அன்பு என்றால் உயிர் ஒன்றாகப் போகுமா ?அல்லது முறையற்ற உறவு அகால மரணத்தில் தான் முடியுமா ?எழுத்தாளரின் தொனி காதலரின் முடிவுக்குச் சாதகம் போலத் தெரிகிறது .

அநீதியை எதிர்ப்பது கனவில் தான் முடியும் என்கிறதா ரயில் பயணம் ?வாழ்வு வதையாகி என்ற கதை Euthanasia கருப்பொருளைக் கொண்டது .உலக சரித்திரத்தில் இது புது விடயம் .தமிழ்ச் சிறுகதை ஒன்றில் இக்கருப்பொருளைக் கலைத்துவமாகக் கையாண்டமை எழுத்தாளரின் பலம் .ஆனாலும் இனிமேல் மாற்றவே முடியாத கடும் வேதனையைத் தருகிற நோய்களுக்குத்தான் Euthanasia சாத்தியப்படும் .பாரிசவாதம் மெல்ல மெல்லக் குணமடைவதும் உண்டு .கடும் வேதனை தராத அந்த நோயுடன் பத்து வருடத்துக்கு மேல் வாழ் பவர்களும் உண்டு .கதையின் யதார்த்தப் பண்பு கேள்வியாகிறது .

மனம் எனும் மாயம் என்ற கதையில் பலவீனமான மனம் ஒன்று அழகாகக் காட்டப்பட்டாலும் முடிவு நம்பும்படி இல்லை .

ஆசிரியரின் சில இடங்களில் இவர் எழுத்தாளர் தான் என்பதை உறுதி செய்கிறது .உதாரணமாக ,'வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது '(கிடந்தன ?)ஆயினும் மொழி இன்னும் சிறக்கலாம் .

படைப்பு வட்டம் என்பது தயாராதல் ,அடைகாத்தல் ,உந்தல் ,சரிபார்த்தல் ,என நாலு நிலைகளைக் கொண்டது .சரிபார்த்தல் என்ற நிலையில் எழுத்துப் பிழைகள் ,இலக்கண வழு ஆகியனவும் கவனிக்கப் படவேண்டும் .நின்மதியா ?நிம்மதியா ?ஏஜென்சியா ?ஏயென்சியா?

கதையோடு கதையாகச் சொல்லிச் செல்லும் சில விடயங்கள் மனதில் நிற்கின்றன .காசுக்காகப்  புருஷனைவிவகாரத்துச் செய்துவிட்டு ஒன்றாக வாழும் மேல்நாட்டுக் கலாசாரம் ஒரு வகைமாதிரி .

மனதுக்கு நிறைவு தரும் தொகுப்பு .

கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்

இலங்கை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.