Jump to content

குணத்தின் மீது செயலின் விளைவு - சுவாமி விவேகானந்தர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குணத்தின் மீது செயலின் விளைவு - சுவாமி விவேகானந்தர்

4_0524.jpg

செய்தல்

எல்லா செயல்களுமே கர்மம்தான். செயல்களின் விளைவுகளையும்  இந்தச் சொல் குறிக்கும். தத்துவம் சம்மந்தமாக வரும்போது இந்தச் சொல் சிலவேளைகளில் நமது முன்வினைகளின் விளைவுகளையும் குறிக்கும். ஆனால் கர்மயோகத்தில், கர்மம் என்ற சொல்லை ‘செயல்’ என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

அறிவு

மனித சமூதாயத்தின் குறிக்கோள் அறிவு. கீழை நாட்டுத் தத்துவம் நம் முன் வைத்துள்ள ஒரே இலட்சிமும் இதுவே. மனிதனின் இலட்சியம் இன்பம் அல்ல, அறிவே. இன்பமும் போகமும் ஒரு முடிவுக்கு வதே தீரும். இந்த இன்பத்தை இலட்சியமாக எண்ணுவது தவறு. தான் அடைய வேண்டிய இலட்சியம் இன்பமே என்று மனிதன் முட்டாள்தனமாக நினைப்பதுதான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம். ஆனால் அவன் சென்று கொண்டிருப்பது இன்பத்தை நாடி அல்ல, அறிவைத் தேடியே. இன்பமும், அதுபோல் துன்பமும் பெரிய ஆசிரியர்கள், நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் அவன் படிப்பினை பெறுகிறான்.

இவையெல்லாம் காலப்போக்கில் அவனுக்குத் தெரியவருகிறது. இனபமும் துன்பமும், மனித மனத்தைக் கடந்து செல்லும்போது, அவை அதன் மீது பல்வேறு அனுபவங்களைப் பதித்துச் செல்கின்றன. இந்த மொத்தப் பதிவுகளின் விளைவே குணம் (Character) என்று அழைக்கப்படுகிறது.

குணம்

எந்தவொரு மனிதனின் குணத்தை எடுத்துக் கொண்டாலும் உண்மையில் அது அவனது மனப்போக்குகள் அனைத்தின் மொத்தம், மனப்பாங்கின் திரட்சியே தவிர வேறல்ல. எனவே குணத்தை உருவாக்குவதில் துன்பமும் இன்பமும் சரிசமமான பங்கு வகிக்கின்றன. குணத்தைச் செப்பனிடுவதிலும் நன்மை, தீமை இரண்டிற்கும் சமயிடம் உண்டு. சிலவேளைகளில் இன்பத்தைவிடத் துன்பமே சிறந்த ஆசிரியராக அமைகிறது. உலகம் தந்துள்ள உயர்ந்த மனிதர்களின் வாழ்வை ஆராய்ந்தோமானால், பெரும்பாலோரது வாழ்க்கையில் இன்பங்களை விடத் துன்பங்களே, செல்வத்தைவிட வறுமையே அவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது.

புகழ் மொழிகளைவிட ஏமாற்றங்களே, அடிகளே அவர்களது அக ஆற்றல்களை வெளியே கொண்டு வந்துள்ளன என்று நான் துணிந்து கூறுவேன்.

இந்த அறிவு என்பது மனிதனிடம் இயல்பாக இருக்கின்ற ஒன்று. எந்த அறிவும் மனிதனுக்கு வெளியேயிருந்து வருவதில்லை, அவை உள்ளேயே இருக்கின்றன. ஒரு மனிதன் ‘அறிகிறான்’ என்பதைச் சரியான மன இயல் மொழியி்ல் ‘கண்டுபிடிக்கிறான்’ அல்லது ‘திரையை விலக்குகிறான்’ என்றே சொல்ல வேண்டும். அதுபோலவே ஒரு மனிதன் ‘கற்கிறான்’ என்பது உண்மையில் அவன் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகிய தன் சொந்த ஆன்மாவை மூடியிருக்கும் திரையை விலக்கிக் கண்டுபிடிப்பதையே குறிக்கும்.

புவி ஈர்ப்பு

நியூட்டன் புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அது ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனத்தில் இருந்தது, தருணம் வந்தது, அவர் கண்டுபிடித்தார்.

இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனத்திலிருந்து வந்ததேயாகும். பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனத்திற்குள்ளேயே இருக்கிறது. புறவுலகம், நீங்கள் உங்கள் மனத்தை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல், ஒரு வாய்ப்பு மட்டுமே. ஆனால் நீங்கள் ஆராயப் போகின்ற பொருளும் உங்கள் மனம்தான். மரத்திலிருந்து ஆப்பிள் வீழ்ந்தது நியூட்டனுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. அவர் தன் மூலம் தன் மனத்தை ஆராய்ந்தார். ஏற்கனவே தன் மனத்திலுருந்து சிந்தனை தொடர்களை எல்லாம் முறைப்படு்த்தித் திருத்தி அமைத்தபோது அவற்றுக்கு இடையே ஒரு புதிய தொடர்பைக் கண்டுபிடித்தார். அதை நாம் ‘புவியீர்ப்பு விதி’ என்று கூறுகிறோம். இந்த விதி ஆப்பிளிலோ அல்லது பூமியின் மையத்திலோ இருக்கவில்லை.

மனமே காரணம்

லெளகீக அறிவோ, ஆன்மீக அறிவோ எல்லாமே மனத்தில்தான் இருக்கிறது. பலரிடம் இவை கண்டுபிடிக்காமல் மூடப்பட்டிருக்கிறது. மூடியிருக்கின்ற திரைகள் மெல்லமெல்ல நீக்கப்படும்போது நாம் ‘கற்கிறோம்’ என்று சொல்கிறோம். நாம் பெறுகின்ற அறிவின் அளவு, இந்தத் திரையை விலக்குகின்ற அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்தத் திரை யாரிடமிருந்து தூக்கப்பட்டிருகிறதோ, அவன் அதிகம் தெரிந்துவன். யாரிடம் இந்தத் திரை கனமாக இருக்கிறதோ, அவன் அறிவிலி. திரை முழுவதுமாக நீங்கப்பெற்றவன் எல்லாம் தெரிந்தவன் ஆகிறான். எல்லாம் அறிந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இனி வரும் யுகங்களிலும் இலட்சக்கணக்கில் அவர்கள் தோன்றுவார்கள்.

சிக்கி முக்கிக் கல்லில் நெருப்புபோல் மனத்தில் அறிவு இருக்கிறது. புறத்தூண்டுதல்தான் அதை வெளியே கொண்டு வருகின்ற உராய்வு. நம்மையே நாம் அமைதியாக ஆராய்ந்து பார்த்தோமானால் நமது கண்ணீர்கள், நமது புன்முறுவல்கள், நமது மகிழ்ச்சிகள், நமது கவலைகள், நமது அழுகைகள், நமது சிரிப்புகள், நமது சாபங்கள், நமது வாழ்த்துக்கள், நமது பாராட்டுக்கள், நமது ஏச்சுக்கள் என்று நமது எல்லா உணர்ச்சிகளும் செயல்களும் வெளியிலிருந்து தரப்பட்ட பல்வேறுத் தாக்குதல்களின் மூலம் நமக்குள்ளிருந்தே வெளியே கொண்டு வரப்பட்டன என்பதை அறியலாம்.

இந்தத் தாக்குதல்களை மொத்தமாகக் கர்மம் அல்லது செயல் என்று கூறுகிறோம். தூல உடல் ஆகட்டும், மனத்தளவில் ஆகட்டும், மனத்திற்குக் கொடுக்கின்ற அடிகள் ஒவ்வொன்றும், அங்கே ஏற்கனவே மறைந்திருக்கின்ற அதன் சொந்த ஆற்றலையும் அறிவையும் வெளிப்படுத்துகிறது. அதவாது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வோர் அடியும் கர்மமே. இங்கு கர்மம் மிகப்பரந்த பொருளில் பயன்படுத்துப்படுகிறது.

https://m-tamil.webdunia.com/article/thought-of-the-day/குணத்தின்-மீது-செயலின்-விளைவு-சுவாமி-விவேகானந்தர்-110092300033_1.htm

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குணத்தின் மீது செயலின் விளைவு - சுவாமி விவேகானந்தர் - பாகம்-2

4_0524.jpg

இவ்வாறு நாம் எல்லோரும் எப்போதும் கர்மம் செய்துகொண்டிருக்கிறோம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இது கர்மம், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுவும் கர்மம். நாம் மூச்சு விடுகிறோம். அதுவும் கர்மம், நாம் நடக்கிறோம். அதுவும் கர்மம். உடலின் மூலமாகவும் மனத்தின் மூலமாகவும் நாம் செய்கின்ற எல்லாம் கர்மமே. அவை ஒவ்வொன்றும் நம் மீது ஒரு பதிவை விட்டுச் செல்கின்றன.

சிறிய செயல்கள் பலவற்றின் ஒட்டு மொத்தம்போல் தோன்றுகின்ற சில குறிப்பிட்ட செயல்கள் உள்ளன. கடற்கரையில் நிற்பதாக வைத்துக்கொள்வோம். கடல் அலைகள் கரையில் மோதிச் சிதறுகின்றன. அதன் ஓசை தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பேரலை கோடிக்கணக்கான சின்னஞ்சிறு அலைகள் சேர்ந்து உருவானதே தவிர வேறல்ல. இது நமக்குத் தெரயும். இந்தச் சின்னஞ்சிறிய அலைகள் ஒவ்வொன்றும் ஓசை எழுப்புகின்றன. ஆனால் அவற்றை நாம் கேட்பதில்லை. அந்தச் சிற்றொலிகள் ஒன்றுசேர்ந்து ஒரு பேரொலியாக உருவெடுக்கும்போதுதான் நாம் அதைக் கேட்கிறோம். அதுபோல், இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செயலே. சிலவகையான செயல்களை நாம் உணர்கிறோம். அவை நமக்குத் தெளிவாகப் புரிகின்றன. அதேவேளையில் அவை பல சிறிய செயல்களின் ஒட்டுமொத்தமே

நீங்கள் ஒருவரது உண்மையான குணத்தை அறிய விரும்பினால், அவரது மகத்தான் காரியங்களைப் பார்த்து முடிவுக்கு வராதீர்கள். முட்டாள்கூட எப்போதாவது சிலநேரங்களில் மகத்தான் மனிதனாக முடியும். ஒருவன் மிகமிகச் சாதாரணச் செயல்களைச் செய்யும்போது கவனியுங்கள். அவையே அவனது உண்மையான குணத்தைத் தெரிவிப்பவை. சில குறிப்பிட்ட நேரங்கள் மிகச் சாதாரண மனிதர்களைக்கூட ஒருவகையான மகத்தான நிலைக்கு உயர்த்திவிடும். எந்தச் சூழ்நிலையிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.

குணத்தை உருவாக்குவதில் செயலின் பங்கு முக்கியமானதாகும். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் தன்னை நோக்கிக் கவர்ந்திழுத்து, தன்னுள்ளே அவற்றை ஒருங்கிணைத்து, மாபெரும் சக்தியாக வெளியே அனுப்புகின்ற ஒரு மையம்போல் இருக்கிறான் மனிதன். அந்த மையம்தான் உண்மை மனிதன். எல்லாம் வல்லவன்,. எல்லாம் அறிந்தவன். பிரபஞ்சம் முழுவதையும் அவன் தன்னை நோக்கிக் கவர்ந்திழுக்கிறான். நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லாமே அவனை நோக்கி ஓடி வருகின்றன. அவனைச் சுற்றிச் சுழல்கின்றன. குணம் என்று அழைக்கப்படுகின்ற, தன் தனிப்போக்கை அவன் இவற்றிலிருந்து உருவாக்கிப் பேராறுபோல் வெளியில் பரவவிடுகிறான். தன்னிடம் எதையும் இழுத்துக் கொள்வதற்கான ஆற்றல் போலவே அதனை வெளியில் விடும் ஆற்றலும் அவனிடம் இருக்கிறது.

உலகில் நாம் காண்கின்ற எல்லா செயல்களும் சமுதாயத்தின் எல்லா இயக்கங்களும், நம்மைச் சுற்றி நடக்கும் வேலைகள் அத்தனையும் வெறும் எண்ணங்களின் வெளித்தோற்றமே. மனித கயேச்சையின் வெளிப்பாடுகளே. எந்திரங்கள், கருவிகள், நகரங்கள், கப்பல்கள், போக்கப்பல்கள் இவையெல்லாமே மனிதனது சுயேச்சையின் வெளிப்பாடுகளே, இந்தச் சுயேச்சை குணத்தால் அமைகிறது. குணமோ செயல்களால் உருவாக்கப்படுகிறது. செயல் எத்தகையதோ அத்தகையதே சுயேச்சையின் வெளிப்பாடும் உலகம் இதுவரை தோற்றுவித்துள்ள உறுதிவாய்ந்த சுயேச்சை கொண்டவர்கள் எல்லோரும் மாபெரும் செயல்வீரர்களாகவே இருந்திருக்கிறார்கள். காலங்காலமாகத் தொடர்ந்து செய்துவந்த செயல்களின்மூலம் பெற்ற ஆற்றல் வாய்ந்த தங்கள் சுயேச்சையால் உலகையே மாற்றியமைக்க வல்ல மாபெரும் மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள்.

புத்தருக்கும் ஏசுவிற்கும் இருந்தது போன்ற மாபெரும் சுயேச்சை ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை. இவர்களின் தந்தையர் யார் என்பது நமக்குத் தெரியும். இந்தத் தந்தையர் மனித குலத்தின் நன்மைக்காக ஒரு வார்த்தையாவது பேசினார்களா என்பது சந்தேகமே! ஜோசப்பைப் போன்று லட்சக்கணக்கான தச்சர்கள் வந்துபோய் விட்டனர்; லட்சக்கணக்கானோர் இன்றும் வந்துபோய் விட்டனர்; லட்சக்கணக்கானோர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புத்தரின் தந்தையைப் போன்ற எண்ணற்ற சிற்றரசர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றனர். பரம்பரையின் காரணமாக குணம் அமையும் என்றால், ஒருவேளை தன் சொந்த ஏவலர்கூட அடிபணியாத இந்தச் சிற்ரசரால் இன்று உலகில் பாதிக்கு மேற்பட்டவர்களால் கடவுளாக வழிபடப்படுகின்ற ஒரு மகனை எப்படி உருவாக்க முடிந்தது? இன்று லட்சக்கணக்கான மக்களால் வணங்கப்படுகின்ற ஏசுவுக்கும் சாதாரண தச்சரான அவரது தந்தை ஜோசப்பிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை எப்படி விளக்குவீர்கள்? பரம்பரைக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு இவற்றை யெல்லாம் விளக்க முடியாது.

புத்தரும் ஏசுவும் இந்த உலகின்மீது பரப்பிய மாபெரும் சுயேச்சை எங்கிருந்து வந்தது? இத்தகைய மொத்த ஆற்றல் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? இந்த ஆற்றல் கால்காலமாக அங்குதான் இருந்திருக்க வேண்டும். அது சிறுகச்சிறுக வளர்ந்து பிரம்மாண்டமான ஆற்றலாகி, ஒரு புத்தராக, ஓர்ஏசுவாக சமுதாயத்தின்மீது பாய்கிறது. இன்றும் பாய்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாமே கர்மத்தால், செயலால்தான் நிச்சயிக்கப்படுகின்றன.

உழைக்காமல் யாரும் எதுவும் பெற முடியாது. இது மாறாத நியதி. அப்படியில்லை என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால் காலப்போக்கில் இதைப் புரிந்து கொள்கிறோம். பணக்காரன் ஆவதற்காக ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடலாம். ஆயிரக் கணக்கானோரை ஏமாற்றலாம். ஆனால் கடைசியில், பணக்காரன் ஆவதற்கான தகுதி எனக்கு இல்லை என்பø அவன் காண்கிறான். வாழ்க்கையே அவனுக்குத் துன்பமாகவும் தொந்தரவாகவும் போய்விடுகிறது. இன்பத்திற்காக நாம் பொருட்களைச் சேர்த்துக் கொண்டே போகலாம். ஆனாலும் நாமே உழைத்துச் சம்பாதித்தவை மட்டுமே உண்மையில் நமக்குச் சொந்தமானவை. ஒரு முட்டாள், உலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் வாங்கித் தனது நூல்நிலையத்தில் அடுக்கி வைக்கலாம். ஆனால் அவற்றுள் அவனது தகுதிக்கு ஏற்றவைகளை மட்டுமே அவனால் படிக்க முடியும். இந்தத் தகுதியைச் செயல்தான் உருவாக்குகிறது.

நமது தகுதி என்ன, நம்மால் எதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நமது செயல்தான் நிர்ணயிக்கிறது. நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மைச் செய்துகொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது. இப்போதைய நமது நிலைக்கு முன்வினைப் பயன்களே காரணம் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது இப்போதைய நமது செயல்களுக்கு ஏற்பவே அமையும் என்பதும் உறுதி. எனவே செயல்புரிவது எப்படி என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதால் என்ன பயன்? ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு வழியில் வேலைகள் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்! என்று கேட்கலாம் ஆனால் ஆற்றல்களை வீணடிப்பது என்று ஒன்று இருக்கிறது. சாதுரியமாகவும் ஒரு விஞ்ஞானம் போல் நுணுக்கமாகவும் செயல்புரிவதே கர்மயோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்வதன்மூலம் ஒருவன் பெரிய பலன்களை அடைவான்.

அனைத்து செயல்களும் நம் மனத்துள் ஏற்கனவே இருக்கின்ற ஆற்றலை வெளியே கொண்டு வருவதற்கான, ஆன்மாவை விழிப்புணர்த்துவதற்கான முயற்சிகள் மட்டுமே என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஆற்றல் மனிதனுள் இருக்கிறது. அதுபோலவே அறிவும் அவனுள்ளேயே இருக்கிறது. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காக, இந்த மாமனிதர்களை விழிப்புணர்த்துவதற்காகத் தரப்படும் அடி போன்றதே பல்வேறு செயல்கள். பல்வேறான பலன்களைக் கருதி மக்கள் செயல் புரிகிறார்கள். பலன் கருதாமல் செய்யப்படுகின்ற செயல்களே இல்லை. சிலர் புகழை விரும்புகிறார்கள். அவர்கள் புகழிற்காக வேலை செய்கிறார்கள். சிலர் பணத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். சிலருக்கு அதிகாரம் வேண்டும், அவர்கள் அதற்காக வேலை செய்கிறார்கள். வேறு சிலர் சொர்க்கத்தை விரும்புகிறார்கள். இறந்தபின் அல்லாமல் சீனாவில் யாரும் எந்தப் பட்டமும் பெறமுடியாது.

எப்படிப் பார்த்தாலும் நாம் செய்வதைவிட அது நல்லது தான். அங்கே ஒருவர் மிக நல்ல காரியம் ஏதாவது செய்தால் இறந்துபோன அவரது தந்தைக்கோ பாட்டனாருக்கோ ஒரு கவுரவப் பட்டம் வழங்குவார்கள். பலர் அதற்காகப் பாடுபடுவார்கள். முஸ்லீம் மதத்தின் ஒரு பிரிவினர். தாங்கள் இறந்த பிறகு தங்கள் சமாதி பெரிய மண்டபமாகக் கட்டப்பட வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடுவார்கள். குழந்தை பிறந்த உடனே அதற்கான சமாதியைக் கட்டிவிடுகின்ற ஒரு பிரிவினரைக்கூட எனக்குத் தெரியும். அவர்களைப் பொறுத்தவரை ஒரு மனிதன் செய்ய வேண்டிய மிகப் பெரிய செயல் சமாதி கட்டுவதுதான். சமாதி எவ்வளவுக்கு எவ்வளவு பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த மனிதன் சிறந்தவனாகக் கருதப்படுவான். மற்றும் சிலர் பிராயச்சித்தமாகச் செயல்புரிகிறார்கள்; எல்லாவிதமான பாவங்களையும் செய்வது, பிறகு ஒரு கோயிலைக் கட்டுவது அல்லது புரோகிதர்களுக்கு லஞ்சம் கொடுத்து சொர்க்கத்திற்குப் போவதற்கான பயணச்சீட்டை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டியது. இப்படிச் செய்துவிட்டால் தங்கள் பாவங்கள் நீங்கிவிடும் தன்டனையே இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பது இவர்களின் எண்ணம். இவ்வாறு பல்வேறு நோக்கங்களுக்காகச் செயல்புரிகிறார்கள்.

செயலுக்காகச் செயல்புரிய வேண்டும் உலகிற்கு உண்மையாகவே வளமை சேர்க்கின்ற சிலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் செயலுக்காகவே செயல் புரிகிறார்கள். பெயர், புகழ், ஏன் சொர்க்கத்தைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. நம்முயற்சி என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

மற்றும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் இன்னும் உயர்ந்த லட்சியங்களைக் கைக்கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள். மனித சமுதாயத்திற்கு உதவுகிறார்கள். ஏனெனில் இவர்கள் நன்மை செய்வதிலும் அன்பு காட்டுவதிலும் நம்பிக்கை கொண்டவர்கள், பொதுவாக, பெயர்புகழுக்காகச் செய்யப்படும் செயல்கள் உடனடியாகப் பலனளிப்பதில்லை. அந்தப் பெயரும் புகழும் பெரும்பாலும் நாம் வாழ்க்கையையே கடந்து விட்ட, நமது வயது முதிர்ந்த காலத்தில்தான் வருகிறது.

சுயநல நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவன் வேலை செய்தால் அவனுக்குக் கிடைக்கும் பலன் எதுவுமே இல்லையா? இருக்கிறது! உண்மையில் மிகவுயர்ந்த பலனை அடைபவன் அவன்தான். சுயநலமின்றி வேலைசெய்வதுதான் மிகுந்த பலனைத் தருவது, ஆனால் அவ்வாறு வேலை செய்வதற்கான பொறுமை மக்களிடம் இல்லை. பலன் கருதாமல் செயல்புரிவது உடல்நலத்திற்கும் மிகுந்த நன்மை செய்கிறது. அன்பு, உண்மை, சுயநலமின்மை இவையெல்லாம் ஒழுக்கம் பற்றிய வெறும் பேச்சுக்கள் அல்ல, அவை நம்மிடம் மிக உன்னதமான லட்சியத்தை உருவாக்குகின்றன. ஏனெனில் அவற்றிலிருந்துதான் அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது. எவ்வித சுயநல ஆசையுமின்றி, எதிர்காலத்தைப் பற்றியோ சொர்க்கத்தையோ தண்டனையையோ அல்லது அத்தகைய வேறு எதையுமோ நினைக்காமல் ஐந்து நாட்களோ அல்லது ஐந்து நிமிடங்களோ ஒருவரால் வேலை செய்ய முடியுமானால், தர்மத்தில் நிலைத்த ஒருவராக, ஆகக்கூடிய சக்தி அவரிடம் இருக்கிறது. என்பது பொருள். இப்படிச் செய்வது கடினம்தான் என்றாலும் நன்மையைக் கொண்டுவரும் என்பதும் நம் உள்மன்திற்குத் தெரிந்தே இருக்கிறது. ஆற்றலின் வெளிப்பாடுகள் அனைத்திலும் இதுவே மிகப் பெரிய ஆற்றலாகும். இந்தத் தீவிர சுயக்கட்டுப்பாடு, புறமுகமாகச் செய்யப்படுகின்ற எந்த வேலையையும்விட அதிகமான ஆற்றல் வெளிப்பாடாகும்.

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டி மலை ஒன்றிலிருந்து கட்டுப்பாடற்று கீழே பாய்ந்து வரலாம், அல்லது பாய்ந்து செல்லும் அந்தக் குதிரைகளை வண்டிக்காரன் கட்டுப்படுத்தலாம், இந்த இரண்டில் எதில் மிகப் பெரிய ஆற்றல் வெளிப்படும்? குதிரைகளைத் தன் போக்கில் ஓட விடுவதிலா, அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதிலா? பீரங்கியிலிருந்து புறப்படுகின்ற ஒரு குண்டு வான்வழியாகப் பாய்ந்து தொலைதூரம் சென்று கீழே விழுகிறது. மாறொன்று அருகிலுள்ள சுவரின்மீது மோதுகிறது. அப்படித் தடுக்கப்படும்போது பயங்கரமான வெப்பத்தைக் கக்குகிறது. சுயநல நோக்கத்துடன் வெளியே செல்கின்ற ஆற்றல்கள் யாவும் சிதறி வீணாகின்றன. அந்த ஆற்றல உங்களிடம் திரும்பி வருவதற்கான வழியில்லை. ஆனால் அவற்றின் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுமானால். அது ஆற்றல் வளர வழிவகுக்கும். இந்தச் சுயக் கட்டுப்பாடு மகத்தான சுயேச்சையை உருவாக்குவதற்கு ஏதுவாகும். ஏசுவையும் புத்தரையும் உருவாக்குகின்ற குணநலனைத் தரும்

முட்டாள்கள் இந்த ரகசியத்தை அறிவதில்லை. ஆனால் மனிதகுலத்தை ஆள மட்டும் அவர்கள் விரும்புகிறார்கள். வேலைகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பானேயானால் முட்டாள்கூட உலகம் முழுவதையும் ஒருநாள் ஆளலாம். ஆள வேண்டும். என்னும் முட்டாள்தனமான எண்ணத்தை விட்டுவிட்டுச் சில ஆண்டுகள் காத்திருக்கட்டும். அந்த எண்ணம் அவனிடமிருந்து முற்றிலுமாக விலகி விடுமானால், அவன் ஒரு மகத்தான ஆற்றலாக மாறிவிடுவான். சில மிருகங்களால் சில அடி தூரத்திற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாது. அதுபோல் நம்மில் பெரும்பானோருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு சிறிய வட்டம், அதுவே நமது உலகம். அதைக் கடந்து பார்க்கின்ற பொறுமை நமக்கு இல்லாமல் ஒழுக்கமற்றவர்களாகவும் தீயவர்களாகவும் மாறிவிடுகிறோம். இதுதான் நமது பலவீனம்! வலிமையற்ற நிலை!

மிகமிகச் சாதாரண வேலையைக்கூடஇழிவாகக் கருதக் கூடாது. உயர்ந்த எதுவும் தெரியாதவன் சுயநலத்திற்காக வேலை செய்யட்டும், பெயர்புகழிற்காகச் செயல் புரியட்டும். ஆனால் ஒவ்வொருவரும், மேலான இன்னும் மேலான லட்சியங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை அடையவும் எப்போதும் முயற்சி செய்ய வேணடும். செயல்புரிய மட்டுமே நமக்கு உரிமைஉண்டு அதன் பலன்களில் அல்ல. பலன்களை அவற்றின் போக்கில் விட்டுவிடுங்கள். விளைவுகளைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவனுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அவன் உங்களிடம் எப்படி நடந்துகொள்வான் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் மகத்தான ஒரு செயலை அல்லது நல்ல ஒரு செயலைச் செய்ய விரும்பினால் அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்

செயல்புரிதல் என்ற இந்த லட்சியத்தில் கடினமான கேள்வி ஒன்று எழுகிறது. இடைவிடாது செயல்புரிதல் முக்கியம். நாம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், வேலை செய்யாமல் ஒரு நிமிடம்கூட நம்மால் உயிர் வாழ முடியாது. அப்படியானால் ஓய்வு என்பது எங்கே?வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு புறம் இது-வேலை, நாம் இதில் சிக்கி வேகவேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றோம். மற்றொரு புறம் அமைதியான, அனைத்திலிருந்தும் விடுபட்ட துறவு, சுற்றியுள்ள எல்லாமே அமைதி மயம். ஓசைகள் என்று எதுவுமே இல்லையென்று சொல்லிவிடலாம். தன் விலங்குகள், மலர்கள் மலைகள் இவற்றோடு இயற்கை மட்டுமே உள்ளது. ஆனால் இந்த இரண்டு காட்சிகளுமே முழுமை பெற்றவை அல்ல. ஏகாந்தத்தில் பழக்கப்பட்ட ஒருவனை அலைச்சல்மயமான உலக வாழ்க்கையில் கொண்டு வந்தால் அப்படியே நசுங்கிப் போவான். கடலின் அடி ஆழங்களில் வாழும் மீன், மேற்பரப்பிற்குக் கொண்டுவரப் பட்டால், நீரின் அழுத்தத்தால் இதுவரை ஒன்றாக இருந்த அதன் உடல் உறுப்புகள், இப்பொழுது அந்த நீரின் அழுத்தம் இல்லாத காரணத்தால் சிதறுண்டு போகும். அதுபோல் அலைச்சலும் ஆரவாரமுமான வாழ்க்கைக்குப் பழகிவிட்ட ஒருவன் அமைதியான இடத்தில் நிம்மதியாக வாழ முடியுமா? அவன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். ஒருவேளை அவனது மனநிலைகூடப் பாதிக்கப்படலாம்.

ஆனால் ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் இடையீடற்ற செயல்களைக் காண்பவனும், இடையீடற்ற செயல்களிடையே பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பவனுமான ஒருவனே லட்சிய மனிதன். அவன் சுயக்கட்டுப்பாட்டின் ரகசியத்தைக் கற்று விட்டான். பெருநகரின் ஆரவாரமும் நடமாட்டமும் மிக்க தெருவின் வழியே பேய்க்கொண்டிருந்தாலும், எந்த ஓசையும் உட்புகாத, ஒரு குகைக்குள் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற பேரமைதியில் அவனது மனம் ஆழ்ந்திருக்கும். அதன் ஊடே அவன் இடையீடற்ற செயலிலும் ஈடுபட்டிருப்பான். இதுதான் கர்மயோக லட்சியம். இதனை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்றால் கர்மத்தின் ரகசியத்தை உண்மையில் அறிந்துவிட்டீர்கள்.

ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். நம்மிடம் வருகின்ற வேலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, நாள்தோறும் படிப்படியாக நம்மை மேன்மேலும் சுயநலமற்றவர்களாக மாற்றிக்கொண்டே வர வேண்டும். வேலை செய்ய வேண்டும், கூடவே, எந்த நோக்கம் நம்மை அந்த வேலையில் ஈடுபடத் தூண்டுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். விதிவிலக்கின்றி நமது நோக்கங்கள் சுயநலம் நிறைந்ததாகவே இருப்பதை நாம் ஆரம்ப வருடங்களில் காண்போம். விடாப்பிடியான முயற்சியால் இந்தச் சுயநலம் சிறிதுசிறிதாக மறையும். இறுதியில் ஒருநாள் சுயநலம் சிறிதும் இல்லாமல் செயல்புரிகின்ற மன நிலையைப் பெற்றுவிடுவோம். வாழ்க்கைப் பாதைகளில் போராடியவாறே சென்று கொண்டிருக்கின்ற நாம் முழுக்கமுழுக்கச் சுயநலம் இல்லாதவர்களாகின்ற வேளை என்றாவது ஒருநாள் வரவே செய்யும் என்று நாம் அனைவரும் நம்புவோம். அதை நாம் அடைகின்ற அந்தக் கணமே நமது ஆற்றல்கள் எல்லாம் ஒருமுகப்படும், நமக்கே உரிய அறிவும் வெளிப்படும்.

https://m.dinamalar.com/detail.php?id=624548

டிஸ்கி: 

12 -1- 1863 விவேகானந்தர் பிறந்தநாள். அவரின் தியான- முக்தி மார்க்க கருத்துக்களின் வழி நடக்க முயற்சி செய்குவம்..👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.