Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஞ்சலி: பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு

on June 21, 2020

spacer.png

 

 

திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும் ஆழமாக வளர்த்து அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்திய ஒருவர். இவருடைய அர்ப்பணிப்பு தமிழ் சமூகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவதாயும், இளம் தலமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமையும்.

பண்டிதர் வீரகத்தியின் மகனான சேந்தனுடைய உரையாடல்கள் ஒரு கவிஞனுடைய ஆழமான இலக்கிய அறிவையும் மொழித்திறனையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சேந்தன் ஹாட்லிக் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை முடித்த பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். அதன்பின் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த போதும் இளம் வயதிலேயே தன்நாட்டில் வேலை செய்யவேண்டுமென்ற உறுதியுடன் இலங்கை திரும்பினார்.

ஒரு இளம் பொறியியலாளராக இருந்த காலத்திலேயே அந்த பெரும் திக்கம் வடிசாலையை வடிவமைக்கும் பொறுப்பையேற்று கடினமாக உழைத்து வெற்றிகரமான தொழிற்சாலையாக அதை உருவாக்கினார். திக்கம் வடிசாலைக்கு அப்பால் வட மாகாணத்தில் இருக்கும் ஒவ்வொரு பனை தென்னை கூட்டுறவு சங்கங்களுடனும் நன்றாக பழகி அங்கு கள்ளை போத்தலில் அடைப்பதிலிருந்து பனங்கட்டி உற்பத்தி போன்ற பலவிதமான உற்பத்தித் திட்டங்களை தனது பொறியியல் அறிவுடன் உருவாக்கினார். பனைவளம் என்பது வட மாகாணத்தின் மிக முக்கியமான வளம் என்பதை விளங்கி அந்த வளத்தை அபிவிருத்தி செய்ததில் அவருக்கு ஒரு தனியிடம் இருக்கிறது.

இங்கு பனைவளத்தை மட்டுமல்லாமல் வடக்கினுடைய வளங்கள் மற்றும் சமூக கட்டமைப்பை விளங்கி அதற்கு ஏற்றமாதிரியான தொழில்நுட்ப மாற்றங்கள்தான் வேண்டும் என செயற்பட்டார். அதாவது, வெறுமனே நவீனமயமாக்கலை பின்பற்றாது எங்களுடைய புவியியல், சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கு பொருத்தமான திட்டங்களையும் மாற்றங்களையுமே தேட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இலங்கையின் சூழலைப் பற்றி சிந்தித்து பல தடவை அவர் இவ்வாறு கூறுவார்: “மேற்கு நாடுகளை போலல்ல, எமது நாட்டில் தாராளமான இயற்கை வளங்களும், குறைந்த வசதிகளுடனேயே தன்நிறைவுடனும் மனநிறைவுடனும் வாழக்கூடிய காலநிலையும் இருக்குது. ஆனால், ஏன் இவ்வளவு வறுமையும், சாதி, வர்க்க மற்றும் இன முரண்பாடுகளும் இருக்க வேண்டும்?” இவர் வெறுமனே கேள்விகளை கேட்பது மட்டுமல்லாது அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆழமாக யோசிப்பவர். எங்களுடைய சூழலைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் எவ்வாறு எங்களுக்கு பொருத்தமான வாழ்வாதார வளர்ச்சியை உருவாக்கலாம் என்பதை பற்றியெல்லாம் சிந்திப்பவர்.

காந்தியுடைய சிந்தனைகளில் இருந்து மாக்சிச தத்துவத்தை படிப்பதற்கு அப்பால் அவ்வாறான கருத்துக்களுடன் தனது வாழ்க்கையையும் மாற்றியமைக்க முயன்றார். பூலோக அரசியல் பொருளாதாரத்தில் இருந்து சர்வதேச இலக்கிய விமர்சனங்கள் மற்றும் விஞ்ஞான மாற்றங்கள் போன்ற விடயங்களில் அவருக்கு ஒரு தேடல் இருந்தது, நண்பர்களுடனான கலந்துரையாடல்களில் கூட இவ்வாறான விடயங்களையே விவாதித்தார்.

இவ்வாறான அவருடைய பார்வை என்னுடைய எழுத்துக்களிலும் ஆய்வுகளிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தியது. உதாரணமாக யுத்தகாலத்தில் அவரைச் சந்தித்த பொழுது நாள்கூலியில் தங்கியிருக்கும் மக்கள்தான் போராலும் பெரும் பாதிப்பிற்கு உட்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கான ஒரு தீர்வுதான் சமாதானத்தையும் உறுதிப்படுத்தும் என்றும் விவாதித்தார். மேலும் யுத்தம் முடிந்தவுடன் வடக்கை தெற்குடன் புகையிரதமூடாக இணைப்பது வடக்கின் மேம்பாட்டிற்கும் இராணுவ மயமாக்கத்தைக் குறைப்பதற்கும் உதவும் என்பது போன்ற தந்திரோபாயத்தை முன்வைத்தார். அதற்கப்பால் பனை வளம் மற்றும் அதுசார்ந்த தொழில்களை ஆராய வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார். இவைபோன்ற அவருடைய ஆழமான கருத்துக்களும், காலத்திற்கு காலம் வரும் முக்கியமான கேள்விகள் தொடர்பான அவருடனான எனது விவாதங்களும் என்னை வளர்த்தது.

சேந்தன் எந்தக்கட்சி சார்பாகவும் இருக்காத பட்சத்தில் தமிழ் மக்களிற்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு தேவை என்றும் இலங்கையிலிருக்கும் அனைத்து மக்களினது உரிமைகள் மற்றும் சுயமதிப்புகள் பற்றி அக்கறைகாட்டினார். ஒரு உறுதியான ஐனநாயகவாதி என்பதன் அடிப்படையில் மாற்றுக்கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அதன் அடிப்படையில்தான் 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் புலிகளினுடைய வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டார். குறிப்பாக மாற்றுக்கருத்து செயற்பாட்டாளர்களாக இருந்த சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக புலிகள் நடவடிக்கை எடுத்தபோது அவர்களைப் பாதுகாக்க  முயன்றார். அதன் விளைவாகத்தான் புலிகளால் சிறையில் அடைக்கப்பட்டு பெருந்துயரத்திற்கு ஆளானார். சிறையிலிருந்து வெளியில் வந்த பின்பும் தொடர்ச்சியாக புலிகளுடைய புலனாய்விற்கு உட்படுத்தப்பட்ட பொழுதும் படிப்படியாக தன்னுடைய குடும்பத்தினுடைய வளர்ச்சியிலும், பொறியியல் வேலைகளிலும் தொடர்ந்தார்.

இவ்வாறான துயரம் மிக்க வாழ்க்கையின் மத்தியில் யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்பும் தன் சேவைகளை முன்கொண்டு போன சேந்தன், வேலைகளில் இலாபத்தையோ வருமானத்தையோ கருத்திற் கொள்ளாமல் எவ்வாறு எமது சமூகத்தை கட்டியெழுப்பலாம் என்பதில் தான் கவனம் செலுத்தினார். இவ்வாறான ஒருவரின் வாழ்க்கையை நினைவுகூரும் அதேநேரம், இவர்போல் மௌனமாக மக்கள் சார்ந்த சேவை செய்த பலரது அர்ப்பணிப்புக்கள்தான் தமிழ் சமூகத்தின் விமோட்சனத்திற்கும் வழிவகுக்கும். இவருடைய வாழ்க்கை, செயற்பாடு மற்றும் சிந்தனைகள் இளம் தலைமுறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.

கலாநிதி அகிலன் கதிர்காமர்

சிரேஷ்ட விரிவுரையாளர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
 

https://maatram.org/?p=8576

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.