• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

கிழச்சிங்கமும், நரிகளின் திரி(ணி)ப்பும் !!!

Recommended Posts

    •  
கிழச்சிங்கமும், நரிகளின் திரி(ணி)ப்பும் !!!
 
கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Systematic Genocide), ஒரு இனத்தின் வரலாற்றை சிறுகச்சிறுகக் கருவறுக்கும். இது பாரிய இனவழிப்பு யுத்தத்தின் மூலம் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிப்பதை விட அபாயமானது.
 
அதுபோன்றே, திட்டமிட்ட கருத்தியல் விதைப்புக்களூடாக வரலாற்று மகோன்னதங்களின் விம்பங்களை உடைத்து, அவற்றுக்கு மாற்றீடாக நேரெதிர் விம்பங்களை மக்கள் சிந்தைக்குள் புகுத்தி, பட்டாபிஷேகம் நடத்தும் நுண்ணரசியற் பொறிமுறை.
 
நேரடி இனவழிப்பு செயன்முறை, பொதுவாக ஒரு வரைமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கும் அல்லது அதனை ஒரு எல்லைக்குமேல் நீட்சி செய்ய முடியாத புற அழுத்தங்கள், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மீது பிரயோகிக்கப்படும்.
 
ஆனால், அப்புற அழுத்தங்கள், மனிதநேயம் சார்ந்ததோ அல்லது ஜனநாயகம் சார்ந்ததோ அல்ல. மாறாக, பூகோள அரசியல், பன்னாட்டு அரசியல், ஐ.நா சாசனம், சர்வதேச சாசனம் போன்ற பல பின்புலக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும்.
 
எனினும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயன்முறைக்கு, அதுபோன்ற புற அழுத்தங்களோ? அல்லது நெருக்கடிகளோ? அதிகம் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும், அவை வெறுமனே வரையறைக்கு உட்பட்ட கண்டன அறிக்கையிடலோடு மட்டும் நின்றுவிடும்.
 
அவ்வறிக்கைகள் வெறும் சொல்லாடல்களுக்குள், அநீதிகளை மறைத்து, நேரத்தைக் கடத்தி, கொடிய சக்திகளைப் பிணையெடுத்து, பின்னர் ஆசீர்வதித்து விடும்.
 
அதன் காரணமாகவே, வல்லாதிக்க சக்திகள் அவ்வழிமுறையை மிக இலாவகமாகக் கையாண்டு, தமது வன்மத்தை, மென்வழியில் தீர்த்துக்கொள்கின்றன. இது சேதாரங்கள் குறைந்த, அதிக ஆதாயங்களைக் கொடுங்கோல் சக்திகளுக்கு அள்ளிக்கொடுக்கும்.
 
ஆனால், இங்கு கொடுமை என்னவென்றால், “நலிந்த - ஒடுக்கப்பட்ட – அடக்கப்பட்ட” சமூகத்தில் இருந்தே முகவர்களைத் தெரிவுசெய்து, அச்சமூகத்தின் பிரமுகர்களாகவே அவர்களை வளர்த்தெடுத்து, பின்னர் தமது காரியத்தை நிறைவேற்றும் அஸ்திரங்களாக, அவர்களைப் பயன்படுத்தலாகும்.
 
இவ்வாறானவர்களுக்கு இலகுவில் துரோகிப்பட்டம் கொடுத்துவிட முடியாத, தடுப்புக்கான பொறிமுறைகளை சம்பந்தப்பட்ட முகவர்கள், ஏற்கனவே செய்துவைத்திருப்பார்கள்.
 
காரணம், அம்முகவர் தான் சார்ந்த இனத்தின் குரலாக, ஓங்கி ஒலித்திருப்பார், தன் சார்ந்தவர்களை விட, மக்களின் குரல் நான் மட்டுமே என்று சத்தமாக முழங்கியிருப்பார். தமது வட்டத்துக்குள் உள்ளவர்களையும், அவ்வப்பொழுது சாடி, தனது தூய்மையை நிரூபிக்கப் பாடுபட்டிருப்பார்.
தான் சார்ந்துள்ள கூட்டத்துக்குள் இருந்து, தன்னைத் தனித்துத் அடையாளப்படுத்தும், முகமாக சில சாகசங்களை, அவ்வப்பொழுது நிகழ்த்திக்காட்டியிருப்பார்.
 
"ஏனையவர்கள் நிலம் முட்டும், எட்டுமுழ வேட்டி கட்டியிருக்க, இவர் மட்டும் முழங்கால் தெரியும்வரை வேட்டியை மடித்துக்கட்டியிருப்பார்."
 
இப்படியானவர்கள் முகமூடியணிந்த போலிகள் என்று பகுத்தறிந்தவர்கள் முன்னுரைத்தால், அவர்களை வசைபாடும் விசுவாசிகளை அம்முகவர் அதிகளவில் கொண்டிருப்பார்.
 
ஆக, மக்களின் (சாமானியர்களின்) அப்பாவித்தனமான உளவியலை ஆழமாகப்புரிந்து கொண்ட செம்மல்களாலேயே, இவற்றை நன்கு நெறிப்படுத்த முடியும்.
 
இப்படியானவர்கள் மூலமாகவே,ஏகாதிபத்தியங்கள், காலம் வரும்போது தமது காரியங்களை ஆற்றும் பொறுப்புக்களை ஒப்படைக்கின்றன.
 
ஆனால், இவர்கள் முற்கூட்டியே அடையாளங் காணப்படமுடியாத, மறைபொருள் அல்ல. அவர்களின் செயற்பாடுகள் பொதுவில் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அவர்களின் உடல்மொழி, வாய்மொழி, செயல்வழி அனைத்தும், அந்த மிகப்படுத்தலை, போலித்தனைத்ததை நிச்சயம் பதிவு செய்யும் அல்லது அம்பலப்படுத்தும்.
 
ஆனால், மக்கள் அதனை நம்பமாட்டார்கள். தம்மைக் காக்க வந்த மகானாக அவரைப்போற்றுவார்கள். அந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, தனது இனத்தைக் கருவறுக்கும் செயற்பாட்டை, அந்த நம்பிக்கை நாயகன் முன்னெடுப்பார்.
கொஞ்சம் கொஞ்சமாக தனது நிலைப்பாட்டை மாற்றுவார். அதற்கான பொருள் விளக்கத்தை எளிய மக்களுக்கு, இலகு வழியில் எடுத்துரைப்பார்.
 
தான் இதுவரை அமுதமென்று நம்பிய பழம் புளிப்பானதென்று, தற்போதே தனக்குப் புரிந்ததென்பார். தான் இதுவரை புலியென்று காட்டியது உண்மையில் எலியென்பார். அதோடு நிற்காமல் தான் இப்போது காட்டுவதே புலியென்பார்.
 
மேலும், தான் இப்போது காட்டும் புலி, மென்புலி என்பார். இது மாமிசம் உண்ணாத நல்ல புலியென்பார். இந்த மென்புலி, உன் வலியையும், என் வலியையும் போக்கும் என்பார். அதனை ஏற்றுக்கொண்டு நீங்கள் அதனைப்போற்றினால் நல்வழி பிறக்கும் என்பார்.
 
அவ்வாறுதான், அண்மையில் ஒரு அறிவிப்பு, தமிழ் அரசியற்பரப்பில் அவதானிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அது தொடர்பில் உரிய கரிசனை கொள்ளப்படவில்லை. அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் மக்களும் இல்லை. அதன் ஆழத்தைப் புரியவைப்பதில், புலமைசார் தளங்களும் போதிய அளவு செயற்பட்டதாகத் தெரியவில்லை.
 
இது மிகவும் ஆபத்தானது. ஒரு இனத்தின் பெருமைமிகு வரலாற்று விம்பத்தை, மலினப்படுத்தி சிதறடிக்கும், நஞ்சேற்றிய நாண் அதுவென்பதைப் பலர் இதுவரை புரியவில்லை.
 
இதுவரை, மக்களோடு மக்களாக உருமாற்றத்தில் இருந்த முகவர், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டும், செயற்பாடுகளை அண்மைக்காலங்களில் முன்னெடுத்துள்ளார்.
அம்முகவர், ஏகாதிபத்தியத்தின் மிதவாத முகவருடன் கூட்டணியமைத்து, அம்முகவரை, மக்களும், மறவரும் நேசித்த கிழச்சிங்கத்துடன் ஒப்பிட்டு, இழிவுபடுத்தியுள்ளார்.
 
தியாகத்தால், திறமையால் உருவாக்கப்பட்ட அக் கிழச்சிங்கத்தின் விம்பத்தை அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாமல், புலிகளின் காட்டுக்குள் அரியணை அமைத்த கிழச்சிங்கத்தின் சிம்மாசனத்தை, மென்வழி முகவருக்காகப் பரிந்துரைத்து, பக்கத்தில் தனக்கும் ஒரு ஆசனம் கிடைக்கும் என்று அம்முகவர் காத்திருக்கிறார்.
 
புலிகளின் கோட்டைக்குள், அவற்றின் இயல்பான பாய்ச்சல்களை தனது புத்தியாலும், சிங்கத்துக்கேயுரிய அதட்டலாலும், கட்டுப்படுத்திய கிழச்சிங்கத்தின் ஆற்றலையும் ஆளுமையையும் , இணைக்க அரசியல் எனும் பெயரில் சரணாகதியடைந்துவிட்ட நரியுடன் ஒப்பிட்டுள்ளார்.
 
மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீண்ட வரலாற்றில் அவ்வப்பொழுது கிழச்சிங்கம் அதட்டப்பட்டதும் உண்டு. அதனால், புலிகள் பின்னர் வருந்தியதும் உண்டு. ஆனால், கிழச்சிங்கம் தனது மிடுக்கை இழக்கவும் இல்லை. அதன் மாண்புகெட புலிகள் அனுமதித்ததும் இல்லை. காரணம் தம் இனம் சார்ந்த இலட்சியத்தில், புலிகளும், கிழச்சிங்கமும், உறுதியோடு இருந்தமையே. அற்பச் சலுகைகளுக்காக அவை தம்மை ஒருபோதும் அடகுவைக்கவில்லை.
 
இதில் வேடிக்கையும், வேதனையும் என்னவென்றால், பதவி மோகத்துக்காகவும், புகழுக்காகவும், தமது இனத்தின் மாண்புகளை அம்மணமாக்கும் ஒருவரை, மக்கள் கறுப்புக் கண்ணாடியணிந்து வேடிக்கை பார்ப்பதே. அதற்காகவே கருப்புக்கண்ணாடிகள் முன்னரேயே மக்களுக்கு வழங்கப்பட்டன என்பதையும், தமது சந்ததி அடகு வைக்கப்பட்டதையும், அம்மக்கள் அறியவோ, புரியவோ வாய்ப்பில்லை.
 
ஆனால், அந்த மகோன்னதங்களின் வரலாற்று விம்பங்களை, சில சில்லறைகள் உடைக்க முனைவதை, ஒரு பெரும் சமூகம், மெளனமாக வேடிக்கை பார்ப்பது, ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுச் சிதைப்புக்களை விட ஆபத்தானது.
 
அதன் பொறிமுறை மற்றும் வழிமுறை கீழ்வருமாறே அமையும்;
 
“ஒரு இனத்தின் திசை வழிகளை மாற்ற வேண்டுமா ? அவ்வினத்துக்குள் இருந்து ஒரு பிரதிநிதியை உருவாக்கு அல்லது உருவி எடு. அவன் மூலம் மந்தைகளை வழிநடத்துவதுபோல், அக்கூட்டத்தின் திசைகளை மாற்றியமை....."
 
"....ஒரு கட்டத்தில் தனது இருப்பு எது? நிலை எது? அடையாளம் எது? வரலாறு எது? என்று அவ்வினம் குழப்பமடையும்போது, மொத்த வரலாற்றையும் மாற்றியெழுது."
 
ஈற்றில் அவ்வினம் தனது சுயம் இழக்கும், அதுவும் ஒரு இனவழிப்பே...!!!
 
- உதயன் S. பிள்ளை -
(June 24, 2020)
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this