தமிழும் சமஸ்கிருதமும் நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய இந்திய மொழிகள். இருமொழி களிலும் தோன்றிய இலக்கியங்களுக்குள்ள பொதுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் இரா.ராக வையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, வ.அய்.சுப்பிர மணியம், கதிர்மகாதேவன் முதலிய அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழறிஞர்கள் மட்டுமன்றி மேலைநாட்டவரும் சமஸ்கிருத மொழியினைத் தமிழோடும் பிற வெளிநாட்டு மொழிகளோடும் ஒப்பாய்வு செய்தனர். கி.பி. 1786இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவிலுள்ள ஆசியக் கழகத்தில் சமஸ்கிருத மொழியினைப் பற்றி ஆய்ந்து ஐரோப்பிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் உள்ள உறவினை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கோல்புரூக் பாபு, கீரீம், மாக்சுமுல்லர், புருக்மன், விட்னி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. அக்காலத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவை வடமொழி, வடசொல் என்று வழங்கப்பட்டன. ‘இந்தியாவின் வடக்கு பாகத்தில் வழங்கிய மொழிக்கு தமிழ் இலக்கணத்தார் வடமொழி எனப் பெயரிட்டனர். அதனைத் தற்போது சமஸ்கிருதம் என்று கூறுகிறார்’ பி.எஸ்.சுப்பிரமணி சாஸ்திரியார்1. வடசொல் “சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லை வடசொல் என்றும் அம்மொழியினை வடமொழி என்றும் சுட்டுவது தமிழ் மரபு. சமஸ்கிருதத்தைத் தவிர வேறு மொழிகள் வடதிசைக்கண் வழங்கப்பட்டிருந் தாலும் கூடச் சிறப்பு கருதிச் சமஸ்கிருதத்தை வட மொழி என்றும் வேறுமொழிகள் இந்தியாவின் தென் பகுதியில் வழங்கி வந்திருந்தாலும் சிறப்பு கருதித் தமிழைத் தென்மொழி என்றும் பண்டுதொட்டே தமிழறிஞர்கள் வழங்கி வந்திருக்கிறார்கள்.”2

‘சங்க காலத் தமிழகத்தில் வடமொழியைத் தாய் மொழியாகவும் தமிழைப் பிறமொழியாகவும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் அவர்களுடைய இருமொழியத்தை ((Bilingualism) வடமொழி, தமிழ் இரு மொழியம் என்று குறிப்பிடலாம்’’ என செ.வை.சண்முகம்3 குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு சமஸ்கிருத மொழி அறிவு தமிழகத்தில் அப்போது பரவியிருந்திருக்கிறது. பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, ‘தமிழ் மொழி இலக்கிய வரலாறு’ குறித்த தம் நூலில் ‘தமிழில் காணலாகும் காதற் பாடல்கள் தனி உரிமை சான்றன அல்ல. அவை வடமொழியிலும் பண்டைக்காலம் தொட்டுக் காணப்படுகின்றன’ என்று கூறியுள்ளார்.4 சாதவாகன அரசனான ‘ஹாலா’ என்பவர் தொகுத்த ‘சப்தசதி’ என்னும் தொகுதி அகப்பொருளோடு ஒப்புமை உடையதாய் காணப்படுகிறது என்கிறார் பேரா.கதிர் மகாதேவன்.5 தமிழிழும் சமஸ்கிருதத்திலும் உள்ள வளமான இலக்கியங்களைக் கற்றவர்கள் அவற்றுக்கிடை யிலான ஒற்றுமைக் கூறுகளை அவ்வப்போது எடுத்துக் காட்டியுள்ளனர். மேகத்தைத் தூது விடுவது; மூங்கிலின் ஓட்டையில் காற்று புகுந்து எழுப்பும் ஓசையைப் புல்லாங்குழலின் இசையோடு ஒப்பிடுவது போன்ற அம்சங்கள் சங்கப் பாடல்களிலும் காளிதாசனின் படைப்புகளிலும் காணப்படுவதை ஒப்பிட்டுக் காட்டுகிறார் ஜார்ஜ் எல். ஹார்ட்.6 தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில்தான் முதல் முதலாக வடசொற்களின் கலப்பு பற்றியும், அச்சொற்கள் தமிழ்ப்படுத்துவதற்குரிய விதிகள் பற்றியும் கூறப் பட்டுள்ளன. இவற்றை உற்று நோக்குகையில் தொல் காப்பியர் காலத்திற்கு முன்பே சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் கலந்துள்ளதை அறிய முடிகிறது. தொல் காப்பியத்தில் கூறப்படும் எண்வகை மெய்ப்பாடுகளில் நகை(ஹாஸ்ய), அழுகை(கருணா), இளிவரல் (பிபதாஸ்), மருட்கை (ரௌத்ர), உவகை (சிருங்காரம்) போன்ற கூறுகள் பரத நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதை பி.திருஞானசம்பந்தம் சமஸ்கிருதம் - தமிழ் உறவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சமஸ்கிருத மொழியில் தமிழ்ச் சொற்கள் கலப்பு குறித்து ஆய்வு செய்தவர்களில் டாக்டர் குண்டர்ட், கிட்டல், டாக்டர் கால்டுவெல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ‘கால்டுவெல்’ இவ்விரு மொழிகளுக்கிடையே உள்ள இலக்கண உறவுகளை ஆராய்ந்து சில ஒற்றுமைக் கூறுகளையும், வேற்றுமைக் கூறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வராய்ச்சியில் வடமொழிச் சொற்களில் திராவிடச் சொற்களை இனங்காணும் சில விதிகளை வகுத்துள்ளார். டாக்டர். குண்டர்ட் ‘வட மொழியில் திராவிடக் கூறுகள்’ என்ற தலைப்பிலும் டாக்டர். கிட்டல் என்பவர் கி.பி.1872 இல் ‘வடமொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள்’ என்ற தலைப்பிலும் கட்டுரை எழுதியுள்ளதாக மு. வரதராசனார் அவர்கள் தனது மொழி வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சமஸ்கிருத மொழிகளில் காலந்தோறும் இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இம்மொழிகளில் உள்ள இலக்கணப் பொதுமைகள், வேற்றுமைகள் குறித்து பி.எஸ்.சுப்பிரமணி சாஸ்திரி, கு.மீனாட்சி, வி.எஸ்.ராஜம், கி.நாச்சிமுத்து போன்ற அறிஞர்கள் ஆய்வு செய்து உள்ளனர். தமிழில் இலக்கணம் என்பதை சமஸ் கிருதத்தில் வியாகரணம் என்பர். “இலக்கணம் என்ற சொல் மொழியின் கூறுகளாக விளக்கும் ஒலி, எழுத்து, சொல், வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை விளங்கும் விதிகளையும், மொழி வழியாக எழும் இலக்கியத்தின் கூறுகளான யாப்பு, அணி,பொருள் முதலியவற்றின் அமைப்பை விளக்கும் விதிகளைக் குறிக்கும்” என்கிறார் கி. நாச்சிமுத்து.7 தமிழ் மொழியின் இலக்கணத்தை அறிய தொல்காப்பியமும், சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தை அறிய பாணினின் அஸ்டாத்தி யாயும் முதன்மை நூல்களாக விளங்குகின்றன. சமஸ் கிருத்தில் நான்கு வேதங்களில் ஆறு அங்கங்கள் உண்டு. இவற்றை வேதாங்கம் என்று கூறுவர். அவை மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசிதி, நிருக்தம், சோதிடம் போன்றவைகளாகும். இவற்றுள் வியாகரணம், சிட்சை, சந்தஸ், நிருக்தம் என்பவை சொல், எழுத்து, யாப்பு, அகராதி என்ற இலக்கணங்களை விளக்கு வதாகும்.

தமிழ் - சமஸ்கிருத ஒப்பாய்வுகள்

முதன்முதலாக 1796 ஆம் ஆண்டு வில்லியம் ஜோன்சு என்னும் ஆங்கிலேயர் கிரேக்கம், இலத்தீன், ஜெர்மானியம், கோதியம், செலத்தியம் போன்ற மொழிகளுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடைப்பட்ட நெருக்கமான உறவைக் கண்டுபிடித்தார்.8 இதன் தொடர்ச்சியாக வந்தவர் ஜெர்மானிய அறிஞர் மாக்சு முல்லர். இவர் ஆரியம் என்னும் சொல்லைச் சமஸ்கிருதத்திற்கு இனமான ஐரோப்பிய மொழிகட்கும் பெயராக விரிவுபடுத்தினார். மேலும் இவர் திராவிட மொழிகளை ஆராய்ந்துள்ளார். திராவிட மொழிகள் தனிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற செய்தியை

1816 இல் பிரான்சில் ‘வைட் எல்லிஸ்’ என்பவர் நிறுவி யிருந்தார். இராபர்ட் கால்டுவெல் பாதிரியார் 1856 -இல் தனது திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் ஒப்பிலக்கணம் என்னும் நூலை வெளியிட்டார். அந்நூலில் சமஸ்கிருதம் திராவிட மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்களைத் தொகுத்துள்ளார். 1855 ஆம் ஆண்டில் ஜி.யு.போப் தமது ‘தமிழ் மொழிக் கையேடு’ என்ற நூலில் கீழ்க்கண்ட முடிவினைத் தருகின்றார். “திராவிட மொழிகள் சமஸ்கிருதம் தோன்றிய காலத்தில் தோன்றியதும், சமஸ்கிருதம் எந்த முதன் மொழியி லிருந்து தோன்றியதோ அதே முன் மொழியிலிருந்தே தோன்றியுதுமான ஒரு மொழியிலிருந்து உருவாகிப் பின் பிரிந்தவையாகும். அந்த திராவிட மொழிகளுக்கும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த கிரீக், காதிக், பாரசீகம் முதலிய மொழிகளுக்கும் இடையே ஒப்புமை இருந்ததைக் காட்டும் பல சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதத்துக்கும் திராவிட மொழிகளுக்கும் ஒப்புமை இல்லாத இடங்களிலும்கூட அத்தகைய ஒப்புமை உள்ளன.”9

1884 ஆம் ஆண்டிலே விட்னி எட்கிரன் ஆகியோர் பாணினியின் தாது பாடத்தில் கண்டுள்ள “1750 வேர்களுள் பெரும்பாலானவை உன்னிப்பில் உருவானவை” என்றனர். “தாது பாட வேர்களில் பாதியை - ஏன் பாதிக்குமேல் - எந்தக் காலத்திய சமஸ்கிருத நூலிலும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை? இனியும் கண்டுபிடிக்கப் போவதில்லை” என்கிறார். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி இதழில்(1929)10 ஞானப்பிரகாசர் “மொழியின் தோற்றம்” என்ற கட்டுரையில் “இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன்மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில்தான் கிட்டும்” என கூறியுள்ளார். பரோ அவர்கள் 1945 ஆம் ஆண்டில் ‘some Dravidian11 Words in sanskirit என்ற கட்டுரையையும் 1946 ஆம் ஆண்டில் Loan Words in Sanskirit என்ற கட்டுரையையும் 1948 ஆம் ஆண்டில் Dravidian Studies Further Dravidian Words in Sanskirit என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார். இக்கட்டுரைகள் வழி சமஸ்கிருதச் சொற்கள் ஏறத்தாழ 500 சொற்கள் தமிழிலிருந்து கடன் பெற்றவை என்று நிறுவியுள்ளார். பரோவைப் பின்பற்றி எமனோ 1954 இல் ‘இந்திய மொழிக் குடும்பங்களின் பழைய வரலாறு’ ((Linguistic Pre-history of India)) என்ற கட்டுரையில் சமஸ்கிருதச் சொற்களைத் தமிழ்

மொழி கடன் பெற்றிருக்கிறது என்கிறார். இக்கால அறிஞர்களான அருளியார், கு.அரசேந்திரன் ஆகியோர் வடமொழிப் புகுந்த தென்சொற்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றனர். அண்மையில் கு. அரசேந்திரன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு அளித்த ‘தமிழ் வட இந்திய மொழிகட்கு இடையேயான வேர்ச் சொல் இலக்கண ஒப்புமைகள்’ குறித்து எழுதியுள்ளார். இவ்வாறு தமிழ் சமஸ்கிருதம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளும் கட்டுரைகளும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமஸ்கிருதம் - தமிழ் மொழிபெயர்ப்புகள்:

சிறந்த இலக்கியப் படைப்பாளிகளையும் இலக்கியங் களையும் கொண்டுள்ள சமஸ்கிருதப் படைப்புகள் பெரும்பாலும் உலகில் உள்ள முக்கியமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலக மொழிகளுடன் பெரும்பாலும் தொடர்புடையதாக சமஸ்கிருதம் இருப்பதனால் அதனடிப்படையில் தோன்றும் இலக் கியங்களும் விமர்சனங்களும் மொழிபெயர்ப்பின் வாயிலாக மற்ற மொழிகளைச் சென்றடைந்து அந்த மொழி இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த தாக்கங் களை உண்டாக்குகின்றன. காலந்தோறும் நடை பெற்றுள்ள மொழிபெயர்ப்புப் பணிகளால் தமிழும் இவ் வகையான தாக்கத்தினை அடைந்துள்ளது. பெரும்பாலும் இதிகாசம், புராணம், நாவல், சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு பெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பணிகள் எந்தெந்த வகையில் நடைபெறுகின்றன என்று நோக்கும் போது மூலமொழியான சமஸ்கிருதத்திலிருந்து நேரடி யாகவும், ஆங்கிலம் வழியாகவும் தமிழுக்கு மொழி பெயர்ப்புகள் நடைபெறுகின்றன.

தொடக்க கால மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் மூல மொழியி லிருந்தே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனை சமஸ்கிருத மொழியினை அறிந்தவர்களும், சமஸ்கிருத மொழியின் மீது ஆர்வம் கொண்டவர்களும் இம் மொழியினைக் கற்றுக்கொண்டு பின்னர் மொழி பெயர்த்தனர். புதுச்சேரி, மைலாப்பூர், மதுரை, திருச்சி, கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் சமஸ்கிருத மொழியினைக் கற்கும் வாய்ப்பு இருப்பதனால் சிலர் அதனைக் கற்றுக்கொண்டு பின்னர் இலக்கிய ஆர்வத் தினால் சில மொழிபெயர்ப்புப் பணிகளை நேரடியாக சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தனர். வடமொழி இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் தமிழ் மக்களாலும், மன்னர்களாலும் போற்றப்பட்ட நிலையில் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிற மொழி நூல்களைக் குறிப்பாக வடமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்துதல் என்ற நிலை கடைச்சங்க காலத்தி லிருந்தே உண்டானது என்பதற்குக் கீழ் வரும் சின்ன மனூர் செப்பேடு சான்றாகக் திகழ்கிறது.12

“மகாபாரதத் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்

மகாராஜரும் சார்வபௌமரும் மகிமண்டலங் காத்திகந்தபின்”

-சின்னமனூர் செப்பேடு.

மகாபாரதத்தை தமிழ்ப்படுத்தும் என்னும் தொடரிலிருந்து வடமொழிக்கும் தமிழுக்கும் இடை யிலான மொழிபெயர்ப்பு ஆதியிலிருந்து தொடர்வதை அறிந்துகொள்ளலாம்.

தொடக்க காலத்தில் சமஸ்கிருத நூல்கள் தழுவல் களாகவும், அதனைத் தொடர்ந்து நேரடி மொழி பெயர்ப்பாகவும் பல நூல்கள் தமிழுக்கு வந்தன. அவ்வகையில், வேத உபநிடதங்கள், இதிகாசம், புராணம், நாடகம், புதினம், சிறுகதை, தர்க்கம், அறிவியல், தத்துவம், சோதிடம் போன்ற இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்ப்பலாயின. தமிழில் ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வாறு மொழி பெயர்ப்பாகியுள்ளன. வேதம் முதலில் இயற்றப் பட்டிருந்தாலும் செய்யுள் இலக்கியமே முதலில் மொழிபெயர்ப்பாகி உள்ளது.

செய்யுள் இலக்கியம்:

அத்யாத்ம ராமாயண வசனம் வே.பாலகிருஷ்ண முதலியார்(1903), ஆனந்த ராமாயணம் பலர்(1910), காவ்ய ராமாயணம் கே.எஸ்.ஸ்ரீநிவாசன், சீதாவிஜய என்னும் சத கண்ட வட ராமாயணம் சுந்தராசாரியர் (1842), உத்தர ராமாயண சரித்திரம்(1875), வால்மீகி ராமாயணம் எஸ்.எம்.நடேச சாஸ்திரி (1901) ராமாயணம் பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயர்(1960-1972) என்பன போன்ற ராமாயணம் நூல்கள் பலவாக மொழிபெயர்க்கப்பட்டன. பாரதம், கீதை, பாரதக் கிளைக்கதைகள் மொழிபெயர்ப்புகளை நோக்கும்போது வேதகிரி முதலியார்(1852), ஸ்ரீபட்டர் (1886), என்.வீரபத்திரபிள்ளை (1889), ஏ.சீனிவாச தாதாசரியார், கே.ராமசாமி நாயுடு(1889), சி.ஆனந்தாச்சாரி (1895), சுப்பிரமணிய பாரதியார் (1995), ராமசாமி தவராஜன் (1974), கண்ணதாசன் (1977) போன்றவர்கள் பகவத்கீதையை மொழிபெயர்த்துள்ளனர்.

புராணம்:

கருடபுராணம் துரைசாமி மூப்பனார்(1883), கல்கி புராணம் கே.தேசிகாச்சாரியார் (1902),சிவபுராணம் சி. சுப்பையா (1928), ஸ்ரீ நாராயணீயம் சச்சிதானந்தம்(1962), விநாயகபுராணம் பொன்.சுப்பிரமணியபிள்ளை (1966). சமயச்சார்புடையனவாக அத்துவித ரச மஞ்சரி நித்தி யானந்த சுவாமி (1888), சிவானந்த லஹரி கே.நாராயண சாஸ்திரி(1889), ஆனந்த ரகசியம் பஜ கோவிந்தம்(1977), கருட புராணம், ஸ்கந்த புராணம் ஸ்ரீ.கோவிந்த ராஜன் (2007) போன்ற பல நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகி யுள்ளன.

இருக்கு வேதம் எம்.ஆர்.ஜம்புனாதன்(1977), யசூர்வேதம் (1935), அதர்வவேதம் எம்.ஆர்.சம்பந்தம் (1941) என வேதங்களும், நுற்றெட்டு உபநிஷத்துகள் (1887), கடோபநிஷத்து ராஜாகோபாலாச்சாரியர் (1962), போன்ற உபநிடதங்களும் மொழிபெயர்ப்பாகியுள்ளன.

காப்பியம்:

கி.பி. முதலாம் நூற்றாண்டில் அசுவகோசர் இயற்றிய புத்தசரிதம், சௌந்தர நந்தம் எனும் காப்பியங்கள் வடமொழியில் நமக்குக் கிடைக்கும் முதற் காவியங்களாகும். காவியத்தை ‘சிர்வய காவ்யம்’, ‘த்ருச்ய காவ்யம்’ என இரண்டாகக் கூறுவர். ‘திருச்ய’ காவியத்தைப் பொதுவாக ‘நாடகம்’ என்று கூறுவர். அதனால் காப்பியம் என்பது ‘சிரவ்யத்தையே’ குறித்தது. குப்தர் காலத்தில் பல்வேறு காவியங்கள் தோன்றியதால் அவர் காலத்தைச் காவியக்காலம் என்றே கூறுகின்றனர். பாரவி கிரதார்ஜீனீயம், மகாகவி சிசுபாலவாதம், பட்டிக் காவியம், ஸ்ரீ ஹர்ஷர் நைஷத சரிதம், காளிதாசரின் இரகுவம்சம், குமாரசம்பவம் ஆகியன பஞ்ச காவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக கவி ரகஷ்யம், ராமசரிதம், காதம்பரி சாரம், ஹரிவிலாசம், பாரதமஞ்சரி, ராமாயண மஞ்சரி, கங்காவதாரணம், சிவலீலார்வணம், ராமாயண சாரம், ஹர்ஷ சரிதம், கௌடவறம், நவசாக சாங்கசரிதம், ஜமதகனி போன்ற பல காவியங்கள் மொழிபெயர்ப்பாகியுள்ளன. காதம்பரி சார சங்கிரகம் கே. சடகோபாச்சார்லு (1887), காதம்பரி ஆதிவராக கவி (1907), எம். துரைசாமி ஐயங்கார் (1923), ஆர்,வி. கிருஷ்ணமாச்சாரி (1925) போன்றவர்கள் மொழிபெயர்த்தனர். ரகுவம்சம் என்ற காப்பியத்தை ராமசாமி சாஸ்திரி(1884), அரசகேசரி(1887), எம்.எஸ். நடேச சாஸ்திரி(1901), டி.தி. தாதாசார்யா(1952), வி.எஸ். வெங்கடராகவாசாரி (1952), எம்.எஸ்.ராமசாமி (1965) போன்றவர்கள் மொழிபெயர்த்தனர். குமாரசம்பவம் எம்.நடேச சாஸ்திரி (1913) இல் மொழிபெயர்த்துள்ளார்.

புதினம்:

புதினம் என்று பார்க்கும்போது ஒரு சில புதினம் மட்டுமே மொழிபெயர்ப்பாகியுள்ளது. அவை தசகுமார சரித்திரம் எஸ்.ராமநாதன் (1968), போஜராஜ சரித்திரம் சீனிவாசாரியார்(1902), டான் குவிக் சோட்டு க.வ. முத்தையா(1964) மருதூர் மாணிக்கம் கா.அப்பாதுரை போன்றவர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

கதை:

தமிழிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடமொழியிலிருந்து கதைக் கூறுகளை தமிழில் மொழி பெயர்த்த முன்னோடிகளின் பட்டியல் நீண்டதாகும். வடமொழியில் தோன்றிய கதை இலக்கியங்களில் பஞ்ச தந்திரம் முதன் முதலில் சுட்டுதற்குரியது. இது கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே பஹ்லவி. உதயணன் சரிதை, கதாசரித் சாகரம், கதா மஞ்சரி, கதைக்கடல் போன்ற கதைகளும் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பஞ்சதந்திர கதைக்கே அதிக மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன.

நாடகம்:

சமஸ்கிருத நாடக இலக்கியத்திற்கு முதல் படைப்பாக பரதரின் அமிர்தமதனம் என்ற நாடகத்தைக் கூறுவர். ஆனால் பரதற்கு முன்பே கி.மு.3 ஆம் 4 ஆம் நூற்றாண்டுகளில் பாடலிபுத்திரத்தை ஆண்ட மௌரியப் பேரரசினின் அரசவையில் வீற்றிருந்ததாகக் கூறப்படும் சுபந்து மகாகவி வாசவதத்தா நாட்டியதாரா என்ற நாடகத்தை இயற்றியதாக அறிகிறோம். அதே காலக்கட்டத்தில் பாச மகாகவி என்பவரும் (இவர் காலம் கி.பி.முதல் நூற்றாண்டு) 13 நாடகங்களைப் படைத்த தாகவும் கூறப்படுகிறது. ஆயினும் நாடக இலக்கியத் திற்கு இலக்கணம் வகுத்தவர் பரதரே. வடமொழி தமிழிற்கு ஏராளமான நாடகங்களை, கதை வடிவில் அளித்தது எனினும், இந்நூற்றாண்டில் அவை நாடக வடிவாகவும் மொழிபெயர்க்கப்பட்டு அமைகின்றது. வட மொழியில் எழுதியுள்ள நாடகங்களைத் தழுவலாகவும், மொழிபெயர்ப்பாகவும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர். அவற்றில் வடமொழியும், பிராகிருத மொழியும் கலந்த நடையில் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்ற நாடகத்தை திரு.டி.என். சுப்பிரமணியமும், மயிலை சீனி.வேங்கடசாமியும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். இந்நாடகம் நகைச் சுவைப் பாத்திரத்தின் மூலம் சமூகப் பிரச்சினைகளைக் கூறுவதாகும். இந்நாடகத்தைப் பற்றி ஆறு.அழகப்பன் “நாட்டின் சமய நிலையைக் கண்ணாடி போலக் காட்டி நிற்பது மத்தவிலாச நாடகம். இம் மூல நூலை ஆங்கிலத்தில் ‘பார்னெட்’ மொழிபெயர்த்தார். இந்நாடகக்கதை எழுதியதால் மகேந்திரவர்மனுக்கு மத்தவிலாசன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது”13 என்று கூறுகிறார். இவ்வாறாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டு களிலே வடமொழி நாடகங்களைத் தமிழ் நாட்டில் மொழிபெயர்த்துள்ளனர் எனலாம்.

ஆங்கில நாடக ஆசிரியரான சேக்ஸ்பியர் நாடகங் களை அடுத்து தமிழில் அதிகமாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நாடகங்கள் வடமொழி நாடக ஆசிரியரான காளிதாசரின் நாடகங்களே ஆகும். அவருடைய சாகுந்தலத்தை 1887- ஆம் ஆண்டு லட்சுமி அம்மாள் ‘சகுந்தல விலாசம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்ததைத் தொடர்ந்து சுமார் 16க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழில் பெயர்த்துள்ளனர். அவர்களில் ராமச்சந்திரன், வெங்கடச்சாரியா,

சுந்தரராஜ சர்மா, ஆதித்தன், மறைமலைஅடிகள் முதலியோரின் மொழிபெயர்ப்புகள் சிறப்பாக உள்ளன எனலாம். சூத்திரகரின் மிரிச்சகடிகா என்ற நாடகத்தை ‘மண்ணியல் சிறுதேர்’ என்று தமிழில் மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதனையும் கே.துரைசாமி, சங்கரதாஸ், ராகவாச்சாரி, நடேசசாஸ்திரி என பல ஆசிரியர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். மேலும் விசாகதத்தரின் முத்திராட்சம், பவபூதியின் உத்திராம சரிதம், பாசகவியின் சொப்பன வாசவதத்தா போன்ற நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர். இந்நிலையில் காளிதாசரின் ‘சாகுந்தலம்’ முதலிடம் பெறுகிறது. இராமசந்திரன் (1876), வேங்கச்சாடசாரியா(1880), சுந்தரராஜ சர்மா(1901), என்.நாதசாஸ்திரி (1902), மறைமலையடிகள்(1957) போன்றவர்கள் சகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். ஹர்ஷனின் ரத்நாவளி என்ற நாடகத்தை தி.ஈ சீனிவாச ராகவாச்சாரியார்(1880), பம்மல் சம்பந்த முதலியார்(1913), வசந்த கோகிலம், வடுவூர் கி.துரைசாமி ஐயங்கார் (1919), மண்ணியல் சிறுதேர் மு.கதிரேசச் செட்டியார்(1969), பொன்னூர்தி நலங்கிள்ளி (1981), மாளவிகாக்கினிமித்திரம் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார்(1880),நடேச சாஸ்திரியார்(1911), ஆர்,வி.கிருஷ்ணமாச்சாரியார்(1922), பம்பல் சம்பந்த முதலியார்(1930), எஸ்.ஏ.ராமஸ்சுவாமி(1965) போன்ற பலராலும்; விக்கிரமூர்வசியம் என்ற நாடகத்தை பம்மல் சம்பந்த முதலியார்(1929), எஸ்.ராஜா சாஸ்திரி(1911), எஸ்.ஏ.ராமஸ்சுவாமி(1965) முதலியோராலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விசாகதாத்தாவின் முத்ரா ராக்ஷஸ எஸ்.எம்.நடேச சாஸ்திரி(1885), வி.ஸ்ரீனிவாச சாஸ்திரி முதலியார்(1948), கே.நடேசசர்மா(1950) ஆகியோரால் தமிழில் வழங்கப்பட்டுள்ளது. சத்ய ஹரிச்சந்திரன் நாராயணசாமி ஐயர் (1915), வில்ஹணீயம் வ.கணபதிப்பிள்ளை (1875), பிரபோத சந்திரோதயம் ஏ.முத்துதம்பி பிள்ளை(1889), சோமப்பிரபா விலாசம் எஸ்.ஏ.திருமலைக் கொழுந்துப்பிள்ளை(1917), ஏழு நாடகக் கதைகள் எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன்(1961). இவ்வாறு சமஸ்கிருத நாடக இலக்கியங்கள் தமிழிற்கு மூலத்தின் வழியாகவும், ஆங்கிலம் வழியாகவும் மொழி பெயர்த்துள்ளனர்.

தத்துவம்:

அத்வைத சிந்தா கௌஸ்தும் கே.ரங்கநாதன் பிள்ளை, மகாத்வ சரஸ்வதி(1911), குரு தத்துவ இரகசியம் ஏ.ரங்கசாமி சாஸ்திரி, சாரசதுஸ்டையா வேதாந்த தேசிகர் (1911), சித்தாந்த சராவளி சி.சண்முக சுந்தர முதலியார்(1888), ஆனந்த சிவாச்சார்யா (1975), தத்வ சந்திரிகா விஸ்வநாத சிவாச்சாரியார்(1966), நைஷ்கர்மய சித்தி சுரேசவராச்சாரியார் (1915), பஞ்சதசப பிரகணம் நாகலிங்க சுவாமிகள் (1869), பாலபோதம் வே.குப்பு சாமி ராஜீ (1902), வேதாந்த பரிபாஷை இராமச்சந்திர சாஸ்திரியார் (1907), காசிகானந்த ஞானசார்ய சுவாமி(1937), போன்ற தத்துவ நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

அறிவியல், வரலாறு போன்ற துறைகளிலும் மொழி பெயர்ப்பு நடந்துள்ளது. இவை குறைந்த அளவில் நடந்துள்ளது. அவைகளுள் கர்பிணி ரக்க்ஷ£ ராமலிங்கப் பிள்ளை (1970), ரத்ன பரீட்சை எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி போன்றவர்கள் அறிவியல் நூல்களையும், பல்லவர் செப்பேடுகள் முப்பது தி.ரா.சுப்பிரமணியம் (1966), ஆரம்ப காலம் முதல் உள்ள இந்திய சரித்திரம், வரதராஜ தீக்ஷிதர் போன்றவர்கள் வரலாற்று நூல்களையும் மொழிபெயர்த்துள்ளனர்.

சோதிடம்:

அனுபவமாந்திரீக சாஸ்திரம், ஆத்மநாத சுவாமி (1906), உடுதசாபல நிர்ணயம் நடேச சாஸ்திரிகள் (1935), பாராசாரியம் பராசர முனிவர்(1974), ஜாதக பஞ்ச சித்தாந்தம், ஸ்ரீ நிவாசாச்சாரியர்(1918), போன்ற சோதிட நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. மேற் கண்டவற்றின் மூலம் வடமொழியில் உள்ள பல்வேறு நூற்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாகியுள்ளன என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

சமஸ்கிருதம்- தமிழ் மொழிபெயர்ப்புகள்

வ.எண் சமஸ்கிருத இலக்கியங்கள் எண்ணிக்கை

1 செய்யுள் இலக்கியம் 146

2 மகாபாரதம் 33

3 பகவத் கீதை 53

4 வால்மீகி ராமாயணம் 91

5 புராணங்கள் 51

6 தலபுராணம் 67

7 வேதங்கள் 13

8 சம்கிதைகள் 14

9 சும்ருதிகள் 6

10 ஆகமம் 3

11 உபநிடதங்கள் 23

12 புதினம் 4

13 சிறுகதை 21

14 நாடகம் 90

15 தர்க்கம் 8

16 மருத்துவம் 5

17 அறிவியல் 2

18 தத்துவம் 29

19 சோதிடம் 16

தமிழ்- சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள்:

தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம், சங்கமருவிய இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என வகைப்படுத்தலாம். இதில் வடமொழியில் பரிபாடல்(1977), பத்துப்பாட்டு(1972), ஆகியவற்றை எஸ்.என்.ஸ்ரீ.ராமதேசிகன் மொழி பெயர்த்தார். குடி சுப்பிரமணிய சாஸ்திரி நாலடி யாரையும், எஸ்.என்.ஸ்ரீராம தேசிகன், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்பவன வற்றையும்; ஒய்.மகாலிங்க சாஸ்திரி வாக்குண்டாம், நல்வழி ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். காப்பியங் களில் ஒரு சிலவும் தமிழிலிருந்து சமஸ்கிருத மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம் (1968) எஸ்.என்.ஸ்ரீராம தேசிகன், பி.நாராயணன் நாயர்(1955) போன்றவகள் மொழிபெயர்த்தனர். கம்பன் படைப்பை ஸ்ரீராமதேசிகன்(1964) எஸ்.நீலகண்ட சாஸ்திரி என்போர் பெயர்த்தனர். பக்தி இலக்கியத்தை நோக்கும்போது மிகுதியாக மொழிபெயர்த்துள்ளனர். சமயச் செல்வாக்கு மட்டுமன்றி இலக்கியநயம், இன்பம், சுவை, வகை, புதுமை, தனித்தன்மை என்பனவும் இதற்கு காரணம். வடமொழியில் வைணவ நூல்கள் பல சென்றுள்ளன. திருவாய்மொழி மட்டுமே சுமார் பன்னிரண்டு மொழிபெயர்ப்புகள் பெற்றுள்ளது. முதல் திருவந்தாதி(1914), இரண்டாம் திருவந்தாதி(1914), பெரியாழ்வார் திருப்பல்லாண்டு(1912) முதலாயிரம் (1958), ஆண்டாள் திருப்பாவை(1910;1911), பதினேழு தொகுதிகளில் அமையும் நாலாயிரம்(1813;1945) எனப் பல சுட்டத்தக்கன. இராமலிங்க சுவாமிகள் பாடல்களும் (1980) வடமொழியில் ஆக்கப்பட்டுள்ளன. பகவத் விசயம், திருப்பாவை, போன்ற நூல்களை எஸ்.என் ஸ்ரீராம தேசிகன் என்பவர் வடமொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தனர். பாரதியாரின் படைப்புகள், நாலடியார் போன்ற நூல்களை சுப்பிரமணி சாஸ்திரி மொழிபெயர்த்துள்ளார். புதினம்,சிறுகதை என்ற நிலையில் பார்க்கும்போது தமிழிலிருந்து வடமொழிக்குச் செல்லவில்லை என்கிறார் ச.வே.சுப்பிரமணியன்.14

தமிழ் - சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள்

வ.எண் சமஸ்கிருத இலக்கியங்கள் எண்ணிக்கை

1 சங்க இலக்கியம் (பரிபாடல், பத்துப்பாட்டு) 2

2 நீதிநூல்கள் (ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார், மூதுரை, நல்வழி) 6

3 காப்பியம் (சிலப்பதிகாரம்) 3

4 பக்தியிலக்கியங்கள்

(திருவாய்மொழி,

முதல்திருவந்தாதி, இரண்டாம்

திருவந்தாதி, பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு, திருப்பாவை,

நாலாயிரம் திவ்வியப்பிரபந்தம்) 9

5 சிறுகதை, புதினம் _

அடிக்குறிப்புகள்

1. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி வடமொழி வரலாறு;1950;26

2. பொற்கோ.இலக்கணக் கலைக் களஞ்சியம்:2000:ப.150

3. செ.வை.சண்முகம், மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்,1989

4. அ.ஆலிஸ்.பிறமொழி இலக்கியங்களில் சங்க இலக்கியங்களின் தாக்கம்: 2009:82

5. ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம்,ப.133

6. Otto Harrassowitz, A History of Indian Literature, Wiesbaden,1976

7. கி.நாச்சிமுத்து, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2007:1

8. இந்திய - ஐரோப்பிய மொழிகள்,விக்கிப்பீடியா.

9. பி.இராமநாதன், உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்,ப.9

10. நாசுதிராதிக், ஞால முதன்மொழி ஆய்வுகளுக்குப் பாவாணர் தரும் ஒளி, (இராமநாதன்),ப.21.

11. மேலது ப.22.

12. பாண்டியர் செப்பேடுகள் பத்து, சின்னமனூர் செப்பேடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,ப.168.

13. ஆறு.அழகப்பன், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடக வரலாறு; 2011:262

14. திராவிட மொழி இலக்கியங்கள், உ.த.நி. 1983:521

http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb2015/28157-2015-03-31-08-17-36