• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

தமிழ்த் தேசிய அரசியலின் ஆதரவுத் தளம் சரிந்து விட்டதா?

Recommended Posts

தமிழ்த் தேசிய அரசியலின் ஆதரவுத் தளம் சரிந்து விட்டதா?

-அதிரதன் 

பலூனை ஊதஊத அது பெரிதாகி, பின்னர் வெடித்துப் போனால், ஒன்றுமில்லை என்றாகிப் போய்விடுவதைப் போலதான், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான விரோதப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  

அரசியலில் கற்றுக்குட்டிகளும் கட்டாயம் தேவைதான். ஆனால், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலில் அவை, பன்றிக் குட்டிகளாக இருப்பதுதான் வினோதம். இவர்களை விடவும், “தமிழ்த் தேசியத்துக்காகவே எல்லாம்” என்று கூறிக்கொண்டே, தமிழ்த் தேசிய எதிர்ப்பைக் கக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள், பலூனுக்குள் காற்றை ஊதிக்கொள்ள முடியாத நிலைலேயே இருக்கிறார்கள்.    

தமிழ்த் தேசிய அரசியல் சூழல், யுத்தத்துக்கு முன், பின் என்று மாறிப் போனதன் விளைவு, பல விமர்சனங்களுக்கு வழிகோலிவிட்டுள்ளது.  இரண்டு சூழல்களும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட தன்மைகளை உடையவைகளாக இருக்கின்றமையானது குழப்பகரமானதுதான்.   

ஏனென்றால், உள்ளேஇருந்து ஓர் அதிகாரம், தமிழர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளில், ஒருவித அச்சத்தை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் கொடுத்துக் கொண்டே இருந்து. இந்த அழுத்தம் 2009க்குப் பின்னர் இல்லாமல் போனது.   

அதன் விளைவு, தமிழ்த் தேசிய அரசியலை, உள்ளே இருந்த அரசியல் அதிகாரம் இல்லாமலேயே முன்கொண்டு நகர்த்த வேண்டியதொரு நிர்ப்பந்தத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளிவிட்டது. அதை உடனேயே பற்றிக் கொண்டதன் விளைவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சரியும் பிழையுமாகும்.   

கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற வேளை, வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் அதிகாரம் காணப்பட்டது. ஒரு கட்டமைப்பாக இருந்தார்கள் என்ற வகையில், அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. (அதனால், பிள்ளையான் என்றோர் அரசியல்வாதி உருவாகிவிட்டார்; அவரது கட்சியும் தலையெடுத்தது. அது வேறுகதை)   
ஆனால், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டது; மாகாண சபையைக் கைப்பற்றிக் கொண்டது. இந்த இரண்டு முடிவுகளுக்கு உள்ளும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதைக் காலத்தின் நிலைமைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு என்றுதான் சொல்கிறார்கள்.   

அடுத்து வந்த கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு போட்டியிட்டது. அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், அதன் பின்னர் இரண்டு வருடங்கள் இணைந்த ஆட்சிக்குள் இருக்க முடிந்தது. அக்காலம் தொடர்பிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.   

வடக்கில் மாகாண சபை ஆட்சி, கூட்டமைப்பின் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் முதலமைச்சர் இப்போது தனியானதொரு கட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கிக் கொண்டார். அதேபோல், அனந்தி சசிதரன் தனியொரு கட்சி, சிவாஜிலிங்கம், சிறிகாந்தா இணைந்து இன்னுமொரு கட்சி.  

கூட்டமைப்பில் இருந்து, கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் வெளியேறினர். ஆனால், கிழக்கில் அவ்வாறில்லை. என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிரிந்து, வேறு கட்சியை அமைத்துக் கொண்டார். அத்துடன், மஹிந்த தரப்புடனும் உறவைப் பேணுகிறார். இவ்வாறு, பலூன்களை உடைத்துக் கொண்டவர்கள்தான் அதிகமானோராக இருக்கின்றார்கள்.   

அரசியலில், பன்முக ஆளுமை கொண்டவர்களைத்தான், நாம் எல்லோரும் தேடிக்கொண்டிருக்கிறோம். அரசியல் அவர்களுக்குத்தான் கைதேர்ந்ததாக இருக்கும் என்றும் நம்புகிறோம். தேர்தலுக்கு முன்னர், தான் ஏதோ வெட்டிமுறித்துவிடுவோம் என்று சொல்லிவிட்டு, வெற்றி பெற்றபின்னர் கணக்கிலெடுக்காதவர்களும் நிர்வாகத்தில் அதிகாரிகளாக இருந்து, இயலாதவர்களாகப் பல வருடங்களைக் கழித்துவிட்டுச்  செல்பவர்கள்தான், நம்முடைய அரசியல் ஆளுமைகளாக இருக்கிறார்கள்.   

இலங்கையைப் பொறுத்தவரையில், நிர்வாகத்தால் செய்யமுடியாத எதையும் அரசியலால் செய்துவிடமுடியும் என்று கனவு காண்பவர்கள்தான் அதிகம். என்றாலும், அதிக பலம் நிர்வாகத்துக்குத்தான்.   

யுத்தம் நிறைவுறுவதற்கு முன்னரான காலத்தில், விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கம் தான் வடக்குக் கிழக்கில் இருந்த நிர்வாகங்களில் நடைபெற்றிருந்தது என்பதை, இங்கு ஞாபகமூட்டுவதுதான் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.   

நம் எல்லோருடைய வீடுகளைத் தேடி, அரசியல்வாதிகள் வருகை தரவேண்டும்; நமக்காக மட்டுமே அவர்கள் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும் என்று மட்டுமே எண்ணுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். இதில் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காத சுயநலவாதிகளாக இருக்கிறோம் என்பதை ஒருபோதும் எண்ணிக் கொள்வதில்லை. இது நம்மிடம் உள்ள குறைபாடாகும். இந்தக் குறைபாட்டை யார் சரி செய்து கொள்ள வேண்டும்?   

பல வேலைகளை அடுக்கி வைத்துவிட்டு, நம் எல்லோருக்கும் அவர்கள் எல்லாவற்றையும் செய்து தர வேண்டும் என்று சிந்திப்பதிலுள்ள சரி பிழைகளை நாமல்லவா சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.   

காலம் காலமாக, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள அரசியல் உரிமை, சுயநிர்ணயம் போன்ற விடயங்களுக்கான காய் நகர்த்தல் என்பது, சாதாரணமாக நடைபெற்று முடிந்துவிடக் கூடியதா? அப்படியானால், நாம் எல்லோரும் பெரும் அரசியல் தலைவர்களாக மதிக்கின்றவர்களால் அவற்றை ஏன் கடந்த காலங்களில் எடுத்த எடுப்பிலேயே செய்து முடித்துவிட முடியவில்லை.   

இலங்கையில் யுத்தம் நடத்தப்படுவதும், ஆட்சிகள் மாறிவிடுவதும் மீண்டும் அந்த ஆட்சி வீழ்ச்சி பெறுவதும் நடந்து கொண்டேதான் இருந்திருக்கின்றன. அவற்றால் இராஜதானிகள் காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்றே வந்திருக்கின்றன. இராஜதானிகள் வேறு வேறு இடங்களுக்கு நகர்ந்தன. சில, அதே இடங்களிலேயே ஆட்சியாளர்களால் நிர்வாகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதும் நடைபெற்றிருக்கின்றன.   

ஆனால், அரசர்கள் தங்களது முயற்சிகளை விட்டுவிட்டு ஓய்ந்திருக்கவில்லை. அதே போன்றுதான் இப்போதும் இராஜாக்களின் அரசாட்சிகளுக்குப் பின்னர், ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கங்களின் ஆட்சிகளும் மாறிக் கொண்டிருப்பவைகளாகவும் மாற்றப்படுபவைகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.   

ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்; அரசாங்கத்தின் தலைவர்கள் மாறுகிறார்கள். இப்போது குறு நில அரசர்கள் இல்லாமல், பேரரசர்கள் போன்று ஒரு தலைமை என்கிற ஜனாதிபதி, பிரதமர் கொண்டு ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   

இதில் பங்குபெறும் அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் இருக்க, அவர்களுக்கு எதிரானவர்களும் இருந்து கொண்டு, மக்களுக்கான தேவைகளை மோதுகைகளின் மூலம் பெற்றுக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள். முடியுமானவர்களுக்கு ஏதோ கிடைக்கிறது. அரசாங்கத்துக்கு, கொடுக்க மனது வந்தால் கொடுக்கிறது. இல்லையானால் கிடைப்பதில்லை. இதே நிலைமையில் மாற்றம் இருக்கப்போவதில்லை.   

ஆனாலும், அரசாங்கத்துக்கு ஊது குழல்களாக, அரசாங்கத்துடன் சாய்ந்திருக்க, ஒத்திசைய நினைப்பவர்கள் ஒரு சில நலன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றைப் பூதாகாரமாகக் காட்டி, அவற்றால், அரசாங்கத்தின் நலனுக்கு அவர்கள் பயன்பட்டு மக்களையும் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். இது மன்னராட்சியிலும் இருக்கத்தான் செய்தது; இது ஒன்றும் புதிய விடயமல்ல. காலத்தின் மாற்றத்துக்கேற்ப மாறி இருக்கின்றவைகளுக்கு ஏற்ப, இவை நடைபெறத்தான் செய்கின்றன.   

நாம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், என்ன திருப்திப்பட்டா கொள்கிறோம்? விருப்பங்களின் அதிகரிப்பால் ஏற்படுகின்ற மாற்றங்களை இன்னமும் மேன்மேலும் மேம்படுத்திக் கொள்ளவே எல்லோரும் நினைத்துக் கொள்கிறோம்.   

எல்லோரும் அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பைப் பெற்று, எல்லோரும் வசதி படைத்தவர்களாகவே வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்குமா? அதில் மாற்றம்தான் ஏற்படுமா? அதனால்தான் நாம் எல்லோரும் மனிதர்களாக இருக்கிறோம். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மனிதர்களாக இருக்கவும் தகுதியற்றவர்களே.   

இலங்கை அரசியலில் நாடாளுமன்றமாகட்டும் மாகாண சபையாகட்டும் இரண்டிலுமே தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தில் குறைவு ஏற்பட்டுவிடும் என்பது தான் இப்போதைக்கு தமிழர்களது அச்சமாக இருக்கிறது.   

இவ் அச்சம் காலங்காலமாக இருந்து வருவது என்றாலும், இவ் வருடத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சற்று அதிகமாகவே இருக்கிறது. விடுதலைப் போராட்டம் அழிந்து போவதற்கு எவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்த காலம் பெருங்காரணமாக அமைந்ததோ, அதே போன்று தற்போதைய போரற்ற காலம், தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம், அதன் பலம் என்பவற்றுக்குக் காலாய் அமைந்திருக்கின்றது.   

அந்த வகையில் தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதற்கு, பேரினவாதிகள் பாரிய சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றார்கள். இதைப் புரிந்து கொண்டு, இச்சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும். அத்துடன், தனிப்பட்ட நலனுக்காகக் கூட்டுச் சேர்ந்துள்ளவர்களையும் கவனமாகக் கையாள வேண்டும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. இதனை மக்கள் உணர்ந்துள்ளார்களா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் சிறப்பு.  

கடந்த காலங்களில் தேர்தல் தொடர்பாகத் தமிழ்ச் சமூகம், பூரணமான அக்கறை காட்டாமையானது வேறுவிதமான பலன்களையே தந்து கொண்டிருந்தன. அந்த அக்கறை, உரிமை தொடர்பாக, ஆயுதப் போராட்டம் மீதே இருந்தது. அபிவிருத்தி உட்பட ஏனைய விடயங்கள் சலுகை சார் விடயமாகவே பார்க்கப்பட்டன. இதன் காரணமாகவே, தேர்தல் தொடர்பாக இந்த நிலைமை காணப்பட்டது. இப்போதும் கூட, இவ்வாறான மனோநிலையில் இருந்து மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன என்பதும் உண்மைதான்.   

2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர், எமது உரிமை தொடர்பாக வலுவிழந்த நிலையில், கையேந்த வேண்டியவர்களாகத் தமிழர்கள் காணப்படுகின்றனர்.   

சர்வதேச ரீதியாகவும் முறையிட்ட பல விடயங்கள் கவனிப்பாரற்றுப் போயுள்ளன. மீண்டும் மீண்டும், சர்வதேச ரீதியாக முறைப்பாட்டை முன்வைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும், அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்னும் கேள்வி, எம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கின்றன.  

வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில், தமிழர்கள் வாக்களிக்கும் சதவீதம், அரைவாசிக்கும் குறைவாகக் காணப்படுவதால், தமிழர்களின் அரசியற்பலமும் அருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தல்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்களிக்கப்பட்டதால் வாக்குவீதம் அதிகரிக்கப்பட்டது. அது போன்றதொரு வாக்களிப்பானது இவ்வருடத்திலும் நிகழுமாக இருந்தால் மக்களின் பலம் நிரூபிக்கப்படும்.   

அதேநேரத்தில், நடைபெறவுள்ள தேர்தலில் இவ்வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிக்கச் செய்யவேண்டிய பொறுப்பு எம் அனைவரிடமும் உள்ளது. குறிப்பாக, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பிரிப்பதற்காகப் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குகளைச் சிதடிக்கும் முகவர்களாகப் இயங்குகின்றார்கள். இவர்கள், இம்மாவட்டங்களில் புதிதுபுதிதாகத் தேர்தலில் போட்டியிட முனைவதால், தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்பதை எமது சமூகம் மறந்துவிடவில்லை. இவ்வாறானவர்களைத் தமிழ்ச் சமூகம் நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.   
நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்தல், குறைத்தல் போன்ற சதி வேலைகளுக்கு மத்தியில் நடைபெறுகின்ற போட்டியானது, தமிழ்த் தேசிய அரசியலில் வீழ்ச்சியாக அமைந்துவிடக்கூடாது.   

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும், தொழில் தருவதாகக் கூறுவதும் விலாவாரியாக நடக்கும் விடயமாக இருந்தாலும், மக்களை ஏமாற்றுகின்ற சுயநலம் சார் செயற்பாடுகளுக்கான முற்றுப்புள்ளி, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வைக்கப்படும்.   

பெரும்பான்மைக் கட்சிகளின் நோக்கங்களானவை, தமிழ் மக்களின் பலத்தைப் பலவீனப்படுத்துவதுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடித்துச் செல்வதும், அபிவிருத்தி என்ற பெயரில் எலும்புத்துண்டுகளை வீசுவதுமாகவே இருக்கின்றது. இவ்வாறுதான் கடந்த காலங்களில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். இதுதான் வரலாறாகும்.   

இந்த உண்மைகளைத் தெரிந்து வைத்திருக்கும் தமிழ் மக்கள், ஒற்றுமை என்னும் போர்வையில், தேசியக் கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயற்பட்டு, தமிழ் மக்களின் வாக்குகளை விற்று, தனிப்பட்ட நலன்களைப் பெறும் எண்ணம் கொண்டவர்களின், தமிழ்த் தேசிய அரசியலை வீணடிக்கும், அங்கவீனப்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பதும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி தெரிந்துவிடும்.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலின்-ஆதரவுத்-தளம்-சரிந்து-விட்டதா/91-252626

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, கிருபன் said:

வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில், தமிழர்கள் வாக்களிக்கும் சதவீதம், அரைவாசிக்கும் குறைவாகக் காணப்படுவதால், தமிழர்களின் அரசியற்பலமும் அருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தல்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்களிக்கப்பட்டதால் வாக்குவீதம் அதிகரிக்கப்பட்டது. அது போன்றதொரு வாக்களிப்பானது இவ்வருடத்திலும் நிகழுமாக இருந்தால் மக்களின் பலம் நிரூபிக்கப்படும்.

இவர் என்ன சொல்கிறார்? கடைசியாக நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்து உள்ளனர் அதுவும் கூட்டமைப்பு சொன்னவருக்கு தான்.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர் என்ன சொல்கிறார்? கடைசியாக நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்து உள்ளனர் அதுவும் கூட்டமைப்பு சொன்னவருக்கு தான்.

உங்கள் கருத்துடன், ஊரில் உள்ள ஒருவர் ஒத்துப் போகிறார்.

இனியும் கொழுவிக் கொண்டு, இழுபட்டுக் கொண்டிருக்க முடியாது. மகிந்தருக்கு 2/3 கிடையாது. அதனை தமிழர் தரப்பு வைத்து, கொடுத்தால், நமக்கு வேண்டிய சிலதையாவது வேண்டலாம்.

சும்மா, ஒன்றுக்கும் பிரயோசனமில்லா, மோதல் அரசியல் பேசி, பிரயோசனம் இல்லை. அமெரிக்காவே, கோத்தாவை கொண்டு வந்து இருக்குது. சேர்ந்து நடந்து அலுவல்களைக் கொண்டோடவேண்டியதுதான் என்கிறார்.

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

உங்கள் கருத்துடன், ஊரில் உள்ள ஒருவர் ஒத்துப் போகிறார்.

இனியும் கொழுவிக் கொண்டு, இழுபட்டுக் கொண்டிருக்க முடியாது. மகிந்தருக்கு 2/3 கிடையாது. அதனை தமிழர்

அய்யா எனது கேள்விக்கான பதில் அது இல்லை.

16 minutes ago, விளங்க நினைப்பவன் said:
1 hour ago, கிருபன் said:

ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தல்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்களிக்கப்பட்டதால் வாக்குவீதம் அதிகரிக்கப்பட்டது. அது போன்றதொரு வாக்களிப்பானது இவ்வருடத்திலும் நிகழுமாக இருந்தால் மக்களின் பலம் நிரூபிக்கப்படும்.

இவர் என்ன சொல்கிறார்? கடைசியாக நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்து உள்ளனர் அதுவும் கூட்டமைப்பு சொன்னவருக்கு தான்.

 

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர் என்ன சொல்கிறார்? கடைசியாக நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்து உள்ளனர் அதுவும் கூட்டமைப்பு சொன்னவருக்கு தான்.

மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கில் வாக்களிப்பு வீதம் குறைவு. வடகிழக்குக்கு வெளியே 80 வீதத்திற்கு அதிகமான வாக்களிப்பு நடந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் 65 - 75  வீதம் மக்களே வாக்களித்தனர். அதிலும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அதிக வீதம் வாக்களித்திருப்பார்கள்.

மேலும் கடந்த தேர்தலில் கூட்டமைப்பு சொல்லாமல் இருந்திருந்தாலும் தமிழர்கள் சஜித்துக்குத்தான் வாக்களித்திருப்பார்கள்.

https://en.wikipedia.org/wiki/2015_Sri_Lankan_parliamentary_election

https://en.wikipedia.org/wiki/2019_Sri_Lankan_presidential_election

https://en.wikipedia.org/wiki/2015_Sri_Lankan_presidential_election

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this