Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன்

July 4, 2020

rajan.jpg

அன்புள்ள ஜெ,

உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது.

இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை?

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை.

1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குறை எனக்கு அறிமுகமானார். அப்போது அரசுத்துறையில் குமாஸ்தா நிலை ஊழியர். அன்று தன்னை அவர் ஒரு நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர் என்று காட்டிக்கொண்டார். பிராமண அடையாளத்தை மீற அவர் சூட்டிக்கொண்ட பெயர் குறை. அதாவது தீவிர இடதுசாரித் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போல. அது அன்று ஒரு மோஸ்தர்.

அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’  ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல்.

திரும்பி வந்தபின் அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிட இயக்கப்பார்வையுள்ள பேராசிரியர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். எம்.எஸ்.எஸ் பாண்டியன் டெல்லியின் பல்கலைகழகச் சூழலில் செல்வாக்கானவர் அன்று. அவர் வழியாக இந்தியாவின் கல்வித்துறைக்குள் நுழைந்தார். அப்போது அவர் உருவாக்கிக் கொண்டதுதான் திராவிட இயக்க ஆதரவு நிலைபாடு.

தொடர்ச்சியாக கொக்கிகளை வீசி மேலே சென்றுகொண்டே இருக்கும் ஒரு ‘தொழில்முறைவாதி’ ராஜன் குறை. மிக வெற்றிகரமானவர். இன்று அவருக்கு இந்த திராவிட இயக்க அறிஞர் என்ற வேடம் மிக உதவிகரமானது, அவருக்கு தனக்கே உரிய திட்டங்கள் இருக்கும். அவருடைய ஆற்றலுக்கு எல்லையே இல்லை. இந்தியச்சூழலில் அடையத்தக்க உச்சகட்ட வெற்றிகளுடன் ஓய்வுபெறுவார். [ஆனால் கூடச்சேர்ந்து மண் சுமக்கும் திராவிடக் கூச்சல்காரர்களுக்கு உதிர்ந்த பிட்டுகூட கிடைக்காது, எப்போதுமே இந்த ஃபார்முலா இப்படித்தான்.]

அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்தும் அவர் பொதுத்தளத்தில் உருவாக்கும் நிழல்களுடன் சண்டை போடுவதைப்போல வெட்டிவேலை வேறேதுமில்லை. ஆகவே முற்றாகத் தவிர்க்கிறேன், இனிமேலும் அப்படித்தான்.

ராஜன் குறையின் வாசிப்பு ஒருவகையான வைக்கோல்ப்போர் வாசிப்பு. எந்தப் புரிதலுமில்லாமல் நூல்களை, மேற்கோள்களை அள்ளிஅள்ளி தன்மேல் போட்டுக்கொள்வது. எந்தவகையான கருத்துநிலைபாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் ஆற்றலற்றவர். வழக்கமான ஒன்றாம் வகுப்புத்தர கட்சியரசியல் கட்டுடைப்பு [அதாவது பாசிசத்தை அகழ்ந்து எடுப்பது] தான் அவரும் செய்வது. மேலதிகமாக மேற்கோள்களை தூவிவிட முடியும் அவரால்.

எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் உள்ளே சென்று வாசிக்க, ஆராய அவரால் இயலாது. அந்த நுண்ணுணர்வே அவரிடமில்லை. இலக்கியத்தில் அவருடைய நிலைபாடு, ரசனை, தேர்வு என ஏதும் இல்லை. அவர் அப்போது எந்த தரப்பை எடுத்து பேசுகிறாரோ அந்தத்தரப்பில் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம். மற்றதெல்லாம் எதிரிகளால் எழுதப்படுவது, ஆகவே ஃபாஸிசம், நாசிசம், இன்னபிற. அவ்வளவுதான். இதற்கு அந்த மேற்கோளெல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் சும்மா லுலுலாயி என்று அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறமென்ன?

இத்தகைய தொழில்முறையாளர்கள் கருத்தியல் தளத்தில் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. இவர்கள் பேசுவது இவர்களின் அரசியல் அல்ல. ஆனால் சூழலில் பெரிய ஓசையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சரி, உண்மையில் அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகர்கள் இவர்களை கொஞ்சம் பிந்தியேனும் கண்டுகொள்வார்கள் என நினைக்கவேண்டியதுதான்.

ஆனால் என்ன அபாயம் என்றால் இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க , ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள் என்பதுதான். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும்.

chida.jpg சிதானந்த மூர்த்தி

ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள்  ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன.

அத்தகைய ஒருவர் ராஜன் குறை. அதை ஐயமறத் தெரிந்துகொண்ட ஒரு காலகட்டம் எனக்கு தொண்ணூறுகளில் வந்தது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி முடிக்கிறேன். இதைப்போல பல உள்ளன.

தமிழ்ச்சூழலில் இன்று பெரும் சமூகப்பூதம் போல நின்றிருக்கும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தை முதன்முதலாக உருவாக்கியவர்கள் ராஜன் குறையும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும்தான். தலித்துகளுக்கு எதிரான இடைநிலைச்சாதி வன்முறைக்கு முதல்புள்ளிகளாக எவரையேனும் சொல்லமுடியும் என்றால் இவர்களைத்தான்.

இந்தியாவில் எண்பதுகள் முதல் உருவாகி வந்த இரண்டாம்கட்ட தலித் அரசியல் அலை இடைநிலைச்சாதியினரை அச்சுறுத்தியது. ஆகவே அதன் அற அடிப்படையை குலைக்க எண்ணினார்கள். அவர்களின் தேவைக்காக  இந்தியாவின் தலித் இயக்கங்களின் ஒட்டுமொத்த தார்மீகத்தையே நிராகரிக்கும் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகளை ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு திட்டமிட்டு உருவாக்கியது.

pandian-passes-away-600.jpg எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

அக்கருத்துக்கள் இவை:

1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம்.

2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை.

3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செய்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள்.

ராஜன் குறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரையிலிருந்து சமீபத்தில் இதழியல்- நீதித்துறை உடபட பலரிடமும் செல்வாக்கு செலுத்திய பகுதிகள் இவை

rajan%2B3.jpg

rajan1.jpg

rajan2.jpg

தொண்ணூறுகளில் இவர்கள் வடதமிழகப்பகுதிகளில் நிகழ்த்திய ‘கள ஆய்வில்’ தலித் இளைஞர்கள் தொழிலிடங்களில் திருடுவது, சூபர்வைசர்களை தாக்குவது போல  ‘எண்ணற்ற’ நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஆகவே அவர்களுக்கு முதலாளிகள் வேலைகொடுக்க அஞ்சுகிறார்கள் என்றும் தெரியவந்ததாக எழுதினார்கள்.

தலித் இளைஞர்கள் தங்கள் சமூகத்துப் பெண்களின் உதவியுடன் இடைநிலைச்சாதிப் பெண்களை திட்டம்போட்டு கவர்வதாகவும், அவர்களை காதலிப்பதாக ஏமாற்றுவதாகவும்,அப்பெண்கள் வழிக்கு வராவிட்டால் அவமதிப்பதாகவும், வடதமிழகத்தின் சாதியமோதல்களுக்கு அதுவே காரணம் என்றும் கண்டடைந்ததாக  எழுதினார்கள்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் டெல்லியில் இருந்தார். இங்கே அந்தக் ‘களஆய்வை’ செய்தவர் ராஜன் குறை. அப்போது அவரை ஒருமுறை பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தலித் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு செய்வதாகச் சொன்னார்- செய்த ஆய்வு இது.

ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு உருவாக்கிய இக்கருத்துக்கள் பொதுத்தளத்திற்கு வரவில்லை.  Economic Political Weekly போன்ற ‘அறிவுத்தள மதிப்பு’ கொண்ட ஆய்விதழ்களில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அங்கே இவை உரியமுறையில் மறுக்கப்படவில்லை. ஆகவே அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளில் மேற்கோள் காட்டப்பட்டன. வெளிநாட்டு இதழ்களில் ‘ஆய்வுலகில் நிறுவப்பட்ட’ செய்தியாக வெளியிடப்பட்டன. அதன்பின் இந்தியாவின் ஆங்கிலநாளேடுகளின் கட்டுரைகளுக்கு வந்தன. அங்கிருந்து அரசியல்வாதிகளை வந்தடைந்தன. அரசியல் மேடைகளில் பேசப்பட்டன.

இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியில் அத்தனைபேரும் சாதாரணமாக ஏதோ அறுதியுண்மை போல, அவர்களே கண்டடைந்த அனுபவ உண்மை போல, இவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியல் என்று சும்மா வாயைத் திறங்கள், மேலே சொன்ன மூன்று அபிப்பிராயங்களும் எந்த இடைநிலைச் சாதியிடமிருந்தும் எழுந்து வரும். இந்தியாவெங்கும் ஏன் கேரளத்தில் கூட ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருவரின் கருத்துக்கள் தலித்துகளுக்கு எதிராக மேற்கோள் காட்டப்படுகின்றன.

இந்த மூன்று சித்திரங்களும் உண்மையானவை அல்ல, வெளியில் இருந்து திட்டமிட்டு நுட்பமாக உருவாக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டவை என்பது எவருக்கும் தெரியாது.

இந்த மூன்று சித்திரங்களுமே அமெரிக்காவின்  ஆப்ரிக்க வம்சாவளி மக்களைப் பற்றி அங்கே வெள்ளையர் கொண்டிருக்கும் முன்முடிவுகள். அவை அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டன. ராஜன் குறையே தலித் இளைஞர்களை அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளி மக்களுடன் திறமையாக ஒப்பிட்டுச் செல்வதை இந்த ‘ஆய்வுகள்’ முழுக்கக் காணலாம்.

உண்மையில் இந்த மூன்று முத்திரை குத்தல்களில் இருந்து இனி எளிதில் தலித்துக்கள் வெளியே செல்லமுடியாது. ஏனென்றால் இன்று இது ஒரு சமூகநம்பிக்கையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இன்று தலித் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இந்த ஆய்வாளர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அவநம்பிக்கையின் அடிப்படையிலேயே.

ஆணவக்கொலைகளுக்கு அடிப்படையான மனநிலையை உருவாக்குவது ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடங்கிவைத்த இந்த அடையாளப்படுத்தலும் நாடகக்காதல் என்ற கருத்தும்தான்.இன்னும் ஒரு தலைமுறைக்காலம் தலித்துகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளுக்கும் காரணமாக அமைவன ராஜன் குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவாக்கிய இந்த மூன்று வரையறைகள்தான்.

இந்த ‘ஆய்வுக்கட்டுரைகளின்’ மொழிநடை மிகச்சமத்காரமானது. உண்மையில் கட்டுடைப்பு போன்ற உத்திகள் தேவைப்படுவது இந்தவகையான மொழிநடைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளத்தான். ஆனால் இவர்கள் கதைகளை தாறுமாறாக உடைத்து அபத்தமாக ‘விளக்க’ அதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலே கொடுத்திருக்கும் மூன்று பத்திகளை மட்டுமே பாருங்கள் இவர்கள் எவர் என்று தெரியும். மிக அப்பட்டமான முத்திரைகுத்தி ஒழிக்கும் அரசியல் ஜாலக்கான கல்வித்துறை நடையில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ராஜன் குறையின் இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். அதில் முக்கியமான வார்த்தை The use of violence by Dhalit youths. தலித் இளைஞர்கள் பயன்படுத்தும் வன்முறை-க்கான சமூகக்காரணங்களை அவர் மேலே ஆராய்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள்தான் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது? அதுவா இங்குள்ள களஉண்மை? இங்கே அவர்களா உண்மையான வன்முறையாளர்கள்? இதுவரை இங்கே எந்த உயர்சாதியினராவது தாக்கப்பட்டிருக்கிறார்களா? திருப்பித் தாக்குவதாவது நடந்திருக்கிறதா? சங்கர், இளவரசன் போன்றவர்களின் கொலைகளை நியாயப்படுத்தும் முன்முடிவுகளை உருவாக்குதல் அல்லவா இது?.

அதன்பின் சாதுரியமாக அடுத்த வரி new masculine subjectivity of dalit youths மேலே சொல்லப்பட்ட ‘தலித் இளைஞர்கள் பிறர்மேல் காட்டும் வன்முறைக்கான’ காரணம் இது என்கிறார். அதாவது ‘புதிதாக அவர்கள் கண்டடைந்த ஆண்திமிர் சார்ந்த தன்னடையாளம்’ தான் அவர்களின் வன்முறைக்கான அடிப்படையாம். அங்கிருந்து ஆரம்பிக்கிறது ‘நாடகக்காதல்’ என்ற கருத்து.

அதை தெளிவாக ராஜன் குறையே வரையறை செய்கிறார். love plays a central role in defining the masculine identity of dalit youths. ‘தலித் இளைஞர்களின் ஆண்திமிர் சார்ந்த அடையாளத்தை வரையறை செய்வதில் காதல் ஒரு மையமான இடத்தை வகிக்கிறது’ என்கிறார்.

தலித் இளைஞர்களின் முக்கியமான பொழுதுபோக்கே வேலைக்கு அல்லது படிக்கச்செல்லும் உயர்சாதி பெண்களை சீண்டி அவமதிப்பதுதானாம் [Their major pastime is to tease woman who go to study and work].இவ்வாறு தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களைச் சீண்டுவதும் அவமதிப்பதும் அவர்களால் அகராதிபேசுதல் என்று பெருமையுடன் சொல்லப்படுகிறது என்கிறார்.

உயர்சாதிப் பெண்களை கவர்ந்து வென்று அடைவது தலித் ஆண்களின் ஆண்மையின் நிரூபணமாக அவர்களால் கருதப்படுகிறது என்கிறார் ராஜன் குறை. அதில் உள்ள வார்த்தை enticing. மிக நுட்பமான வார்த்தை. மாயங்களால் மயக்கி கவர்வது என்ற நுண்பொருள் கொண்டது.

இந்தவகையான கட்டுரைகள் தேவையான எல்லா ‘முற்போக்கு’ பாவனைகளையும் கடைசியில் தொகுப்புரையில் கொண்டிருக்கும். எல்லாவகையான அறிவுத்தள சர்க்கஸ்களையும் அடித்திருக்கும். சிலசமயம் வலுவற்ற ஒரு மறுதரப்பையும் மேலோட்டமாகச் சேர்த்து இந்த ‘ஆய்வுகளுக்கு’ ஒரு நடுநிலைத்தன்மையையும் உருவாக்கியிருப்பார்கள்.

நம்மூர் எளிய தலித் செயல்பாட்டாளர்கள் இவர்களிடம் பேசவே முடியாது. ராஜன் குறை சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆயிரம் மேற்கோள்களை அள்ளிக் குவிக்கவும் செய்வார். நயந்து பேசுவார், குழைவார், தனக்கு எதிரான பேச்சை சொல்சொல்லாக கட்டுடைப்பார். ஆனால் அவர் உத்தேசித்த நஞ்சு ஆழமாக இறக்கப்பட்டுவிட்டிருக்கும்.

மேலே சொன்ன கட்டுரையை நான் மேலோட்டமாக வாசித்தது நினைவிருக்கிறது. உண்மையில் அரசியல்வாதிகள் கையில் எடுக்கும்வரை எனக்கேகூட இந்த முத்திரைகுத்தலின் ஆற்றல் என்ன என்று புரியவில்லை. எனக்கு இதெல்லாம் கல்வித்துறையாளர்களின் சமத்காரங்கள், சிறுவட்டத்தில் புழங்குபவை என்ற எண்ணமே இருந்தது.சமீபத்தில் இந்த வரிகள் இவர்களின் ‘ஆய்வுமுடிவுகளாக’ உயர்மட்டங்களில் சுற்றிவருவதை வாட்ஸப்பில் கண்டபோது திகைப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டது. நான் மேலே கொடுத்திருப்பவை வாட்ஸப் ஃபார்வேட்கள்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இடைநிலைச்சாதியின் அரசியல் கொண்டவர்.  ராஜன் குறைக்கு அப்படி எந்த அரசியலும் இல்லை. உண்மையில் நேரில் பழகுவதற்கு இனியவர், உற்சாகமாகப் பேசுபவரும்கூட. அவரை அறிந்தவன் என்றவகையில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சாதிவெறியோ, காழ்ப்போ உண்டு என்றுகூட நான் நினைக்கவில்லை.

ஆனால் ராஜன் குறைக்கு அன்று எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் தொடர்பு தேவைப்பட்டது, ஆகவே அக்கருத்தை ‘களஆய்வு’ செய்து கொடுத்தார். இன்று சாதாரணமாக அதை மறுத்து கடந்துசென்று அடுத்த அரசியலைப் பேசுவார். தேவை என்றால் நேர் எதிரான கள ஆய்வையும் செய்து தருவார், வாதாடவும் வருவார். அவருக்கு லாபம் இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஆனால் அவர் உருவாக்கிய அழிவு அழிவுதான், சிந்தப்பட்ட ரத்தம் ரத்தம்தான். அவர் உருவாக்கிவிட்ட பூதத்திற்கு அவர் பொறுப்பேற்க மாட்டார்.

இன்னொரு ஆரோக்கியமான, முற்போக்கான அறிவுச்சூழல் இத்தகைய அப்பட்டமான இனவாதத்தை – நாஸிஸத்தை வெறுத்து ஒதுக்கும். இதை உருவாக்கியவர்களை அருவருத்து விலக்கும். ஆனால் தமிழ்ச்சூழலில் இவர்களே முற்போக்காளர்களாக அங்கி மாட்டிக்கொண்டுவந்து மற்றவர்களை ஃபாஸிஸ்டுகள் என்கிறார்கள்.

எழுதவந்த காலம் முதல், பிரசுரமான இரண்டாவது கதை முதல், இன்று வந்து கொண்டிருக்கும் கதைகள் வரை, நான் தலித் மக்கள் மீதான அடக்குமுறையையும், அதிலிருந்து அவர்கள் மீண்டெழுந்ததன் பெருமைமிக்க வரலாற்றையும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அது என் மாறாத நிலைபாடு. அதற்கு இளமையில் நான் கண்ட அனுபவங்களில் இருந்து எழுந்த அறவுணர்வே அடிப்படை. ஆகவே என்றும் தலித் இயக்கங்களின் சகபயணி. என்னால் அறவுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ராஜன்குறை போன்ற ஒருவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவோ மதிக்கவோ முடியாது. அவருடைய சொற்சிலம்பங்களுடன் களமாடவும் பொழுதில்லை.

ஜெ

https://www.jeyamohan.in/133952/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்


 

ஜெயமோகனின் அரசியல் என்ன? – ராஜன் குறை

1.jpg

ஜெயமோகனின் ராஜன் குறை என்பவர் யார்?” என்ற கட்டுரைக்கு மறுப்பு 

images.jpg
 

ஜெயமோகனின் அவர் வலைத்தளத்தில், ஜூலை 4 ஆம் தேதி “ராஜன் குறை என்பவர் யார்?” என்று ஒரு கட்டுரையை பிரசுரித்துள்ளார். அதனால் அவருடைய வாசகர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது, அதனால் அறிமுகம் செய்கிறார் என்ற பொருள் உருவாகிறது. ஆனால் மிகவும் பிழையாக அறிமுகம் செய்கிறார். அவருடைய வலைத்தளத்தில்தான் மறுப்பு எழுதவேண்டும். ஆனால் அவர் சொற்களை முழுமையாக மறுத்து, கண்டித்து எழுதும் கட்டுரையை அவர் பிரசுரிப்பார் என்று தோன்றாததால் நான் சமீபத்தில் அவர் கதை,கட்டுரைகள் குறித்த விமர்சனங்களை பிரசுரித்த உயிர்மை இணையதளத்திலேயே பிரசுரிக்கிறேன்.

அவருடைய வாசகர் எம்,ராஜேந்திரன் என்பவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலாகத்தான் ஜெயமோகன் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அந்த வாசகர் நான் ஒரு அப்செஷன் போல தொடர்ந்து ஜெயமோகனைப் பற்றி எழுதி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் எந்த கட்டுரைகளை படித்தார் என்று தெரியவில்லை. வியப்பாக இருக்கிறது. நான் ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரை, கூற்று அல்லது படைப்பு குறித்துதான் எழுதுவேனே தவிர ஜெயமோகனைப் பற்றி இதுவரை எதுவுமே எழுதியதில்லை. அவருடைய மாஸ்டர் கட்டுரை குறித்து எழுதியபோதுதான் அவருடைய புனைவெழுத்தாக நான் படித்த விஷ்ணுபுரம் மற்றும் சில கதைகளுக்கும் அவருடைய கட்டுரைகளில் வெளிப்படும் பல்வேறு பார்வைகளுக்கும் தொடர்பிருக்கிறது; அதற்கும் மாஸ்டர், விதி சமைப்பவர்கள், தேர்வு செய்யப்பட்டவர்கள் போன்ற கட்டுரைகளில் வெளிப்படும் பாசிச மனோவியலுக்கும் தொடர்பிருக்கிறது என்று எழுதினேன். இதுவும் கூட எழுத்துருவாக நான் அறிந்த ஜெயமோகன் மட்டுமே. அதனால் அவரைப்பற்றி நான் எதுவும் எழுதுவதில்லை என்பதே உண்மை. ஆனால் இந்த உயர்பண்பிற்கு நேரதிராக ஜெயமோகன் என் எழுத்துக்களை பற்றி, அவர் மீது நான் வைக்கும் விமர்சனங்கள் பற்றி எதுவுமே எழுதியதில்லை. எப்போதுமே என் ஜாதி அடையாளத்தையோ, வேறு  மேலும் பல்வேறு சமூக அடையாளங்களையோ குறித்துதான் எழுதுவார். என்னை அறிமுகப்படுத்தும் இந்த கட்டுரையிலும் முழுவதும் என்னைக் குறித்த தனிப்பட்ட கிசுகிசு பாணியிலான புனைவுகளை மட்டுமே எழுதியுள்ளார். “ஆளை ஆளை பார்க்கிறார்; ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார்” என்று ஒரு பாட்டு உண்டு. அதுபோல என் விமர்சனங்களில் நான் கூறியுள்ள கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு தனிநபர் தாக்குதலை மட்டுமே தொடுத்துள்ளார்.

அது மட்டுமல்ல. என்னுடைய பல கட்டுரைகளில் ஜெயமோகனுடன் நான் தத்துவார்த்தமாக, கருத்தியல் ரீதியாக எப்படி வேறுபடுகிறேன் என்பதை விளக்கியுள்ளேன். அவரை கருத்தியல் எதிரி என்றே குறிப்பிட்டு கெளரவித்து கண்டித்தும், விமர்சித்தும் வருகிறேன். இதெல்லாம் காலம் காலமாக பின்பற்றப்படும் அறிவுலக நடைமுறை என்பது என் கருத்து. மேலும் அது போல அவரை முன்வைத்து எழுதுவதன் மூலம் எதிர்நிலையில் என் கருத்துக்களை தொகுத்துக்கொள்ள முடிகிறது; வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. என் கட்டுரைகளை படித்த பலரும் ஜெயமோகன் எழுத்திற்கான எதிர்வினை என்பதற்கு அப்பால் என் கட்டுரைகளில் பல சிந்தனைக்குரிய அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைக் கூறியுள்ளார்கள். உதாரணமாக வேளச்சேரியில் வெளி மாநில தொழிலாளர்கள் ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தையொட்டி என்கெளண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ஜெயமோகன் காவல்துறைக்கும். அந்த நிகழ்வை கண்டிக்கும் மனித உரிமையாளர்களுக்கும் நடுநிலையில் நின்று காவலர் தரப்பில் உள்ள பிரச்சினைகளையும் கவனிக்கவேண்டும் என்று எழுதினார். நான் அத்தகைய நிலைபாடு எவ்வளவு தவறானது என்பதை விளக்கி மூன்றுவிதமான கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் அடங்கியிருந்த சிந்தனைகள் குறித்து பலர் என்னுடன் விவாதித்தார்கள். அதாவது ஜெயமோகனுக்கு மறுப்பு அல்லது கண்டனம் என்பதைக் கடந்து அதில் பல முக்கியமான கோட்பாடு சார்ந்த அம்சங்களை விவாதித்திருந்தேன் என்பதால் அந்த விவாதங்கள் நிகழ்ந்தன. எனவே ஜெயமோகன் எழுத்தை விமர்சிப்பது, கண்டிப்பது என்பது முகாந்திரமே தவிர என் எழுத்து என்றுமே என் சிந்தனைகளை தொகுத்து வெளிப்படுத்தும் முயற்சிகள்தான். என் கருத்தியல் நிலைகளுக்கு நேர் எதிராக அவர் எழுதும்போது அந்த எழுத்து என்னை எழுதத் தூண்டுகிறது. பெரும்பாலும் முகநூலில்தான் எழுதியுள்ளேன். சமீபகாலமாக உயிர்மை பத்திரிகை மற்றும் இணையதளத்தில் எழுதுகிறேன்.

1910279_1169489326763_6239467_n-225x300.
 

அப்படி அவரை கருத்தியல் ரீதியாக ஏன் கணித்து மீண்டும் மீண்டும் அவர் எழுத்துக்களை விமர்சித்து எழுதுகிறேன் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை அவரே கட்டுரையின் துவக்கத்திலேயே தருகிறார். நான் அமெரிக்காவுக்கு ஆய்வு படிப்பிற்காக சென்றதைக் குறிப்பிடும் அவர் அதற்கான ஒரு வியத்தகு காரணத்தைத் தருகிறார்: “அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’  ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல்.”  அது என்ன “இந்து-இந்திய எதிர்ப்பு அரசியல்”? இந்துத்துவ எதிர்ப்பு அரசியலைத்தான் அப்படி குறிப்பிடுகிறார். இந்துத்துவவாதிகள் எப்போதுமே அவர்களை எதிர்ப்பதை இந்து மதத்தை, இந்தியாவை எதிர்ப்பதாகத்தான் கூறுவார்கள்.

உதாரணமாக ஜெயமோகனின் நண்பர் அரவிந்தன் நீலகண்டனும், ராஜீவ் மல்ஹோத்திராவும் இணைந்து “உடையும் இந்தியா” என்ற நூலை எழுதினார்கள். அதில் குறிப்பாக திராவிடம் என்ற கருத்தாக்கம் அந்நிய சதியால் நிதியால் உருவானது என்று எழுதியிருந்தார்கள். ஆசிரியர் வீரமணி அதற்கு மறுப்பாக ஒரு நூல் எழுதினார். அதன் தலைப்பு “உடையும் இந்தியாவா? உடையும் இந்துத்துவாவா?” என்பதுதான். இந்த அரசியல் மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறது. இன்றைய இந்துத்துவ அரசியலின் மிகப்பெரிய பிரச்சினையே ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று கூறப்படுவதும், அதற்குமுன்னால் இங்கே இருந்தவர்களுள் திராவிடர்களும் உண்டு என்பதும், சிந்துவெளி சின்னங்களுக்கும், தமிழ் தொல்லியல் தடயங்களில் காணப்படுபவற்றிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து பேசப்படுவதும்தான். ஆரிய, வேத கலாசாரத்தை இந்தியாவின் ஒற்றை மூலமாகக் கட்டமைப்பது அவர்களுக்குத் தேவையாக இருப்பதால் திராவிடம் என்ற பார்ப்பனீய எதிர்ப்பு கோட்பாடு, அரசியல் இந்திய-இந்து விரோதமாகத்தான் இருக்கும்.

இதை நான் இங்கு விளக்குவதற்குக் காரணம் நான் சிந்தனையாளனாக, ஆய்வாளனாக மாறுவதற்குக் காரணமாக இருந்த ஒரு சம்பவம் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அது “பெரியாரியம்: தத்துவத்தை வரையறுத்தலும், நடைபெறவேண்டிய விவாதமும்” என்ற கட்டுரையை நிறப்பிரிகை பத்திரிகையில் நான் எழுத நேர்ந்தது. அதுவரை இலக்கியம், திரைப்படச் சங்கங்கள், நவீன நாடகம் என பல்வேறு திசைகளில் கவனம் செலுத்திவந்த நான், ஆய்வாளனாகவும், எழுத்தாளனாகவும் மாற தீர்மானித்த தருணம். பெரியார் என்ற ஆகிருதி தோற்றுவித்த வியப்பும், அவரை வாசித்த அனுபவம் அளித்த உத்வேகமும்தான் என்னை துணிந்து ஆய்வுப்புலத்தை நோக்கி நகர்த்தியது. அதுவரை நான் ஏதோ சில வேர்மட்ட கலாசார நடவடிக்கைகளில்தான் என் வாழ்நாளை செலவழிக்க வேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் புனைந்து கூறுவது போல என்னை “நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர்” என்று காட்டிக்கொண்டதில்லை. (அது எப்படி பிராமணணாகவும், நக்சலைட் செயல்பாட்டாளராகவும் ஒரே நேரத்தில் காட்டிக்கொள்வது? அத்துடன் குறை என்று பெயர் வைத்துக்கொண்டு பிறப்பை மறைக்கவேறு செய்யவேண்டும். ஏதோ ஸ்பை திரில்லர் படத்தில் நடித்தது போல இருக்கிறது). நான் பழகிய மார்க்ஸீய லெனினீய இயக்கத்தோழர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். எல்லா இடதுசாரி இயக்கங்களிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். எல்லோரிடமும் கோட்பாட்டு ரீதியாக விவாதித்திருக்கிறேன். மார்க்ஸிய லெனினீய இயக்கத் தோழர்கள் அதிக பட்சம் என்னை பெட்டி பூர்ஷ்வா சிந்தனையாளன், ஜனநாயக ஆதரவு சக்தி என்று வேண்டுமானால் கணித்திருப்பார்கள்.

நிறப்பிரிகை பத்திரிகையும், அ.மார்க்ஸ், ரவிகுமார், பொ.வேலுசாமி உள்ளிட்ட பல நண்பர்களின் தொடர்பும்தான் நான் எழுத முனைவதற்கான, தொடர்ந்து வாசிப்பதற்கான தூண்டுதல்களை தந்தது என்றால் மிகையாகாது. அதன் விளைவாகத்தான் பெரியாரியம் கட்டுரையை எழுத நேர்ந்தது. குறிப்பாக பெரியாரை விரிவாக வாசிப்பதற்கான தூண்டுதலை ஒரு ப்ரவொகேஷனாக தந்தது கோ.ராஜாராம். வாசிக்க உதவி செய்து பங்கேற்றது கிராமியன். கட்டுரையை என்னையே எழுதச்சொல்லி உற்சாகப் படுத்தியது அ.மார்க்ஸ். இப்படியாகத்தான் 1993 ஆம் ஆண்டு பெரியாரியம் கட்டுரை காரணமாக ஆய்வாளனாகவும், திராவிட இயக்க ஆதரவாளனாகவும் மாறினேன் என்று கூறவேண்டும். சிறுபத்திரிகை சூழலில் நண்பர்கள் எல்லோரும் அறிந்ததுதான் இது. அந்த சூழலில் புழங்கிக் கொண்டிருந்த ஜெயமோகனுக்கும் அவசியம் தெரிந்திருக்கும். மறந்தாரோ, மறைக்கிறாரோ, அவர் பிரச்சினை. ஆனால் “இந்து-இந்திய” எதிர்ப்பு என்று இந்துத்துவ எதிர்ப்பை சரியாகத்தான் சுட்டிக் காட்டுகிறார்.  எனக்கும், ஜெயமோகனுக்குமான தத்துவார்த்த, கருத்தியல் முரண்கள் துலக்கமடையும் புள்ளி பெரியார் என்றால் மிகையாகாது. என்னுடைய பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவான சிந்தனையுலக ஆய்வுலகச் செயல்பாட்டை பலவீனப்படுத்தும் ஆசையில்தான் ஜெயமோகன் என்னைக் குறித்து எழுதும்போதெல்லாம் என் ஜாதி அடையாளத்தை சுட்டிக்காட்டுவார். நான் அதுபோன்ற ஒரு செயலை யாருக்கும் செய்வதில்லை. என் பிறப்பு சார்ந்த அடையாளத்தை மறைப்பதும் இல்லை.

10-mss-pandian-passes-away-600-300x225.j
 

பெரியார் கட்டுரை எழுதியபின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள சென்னைக்கு குடிபெயர்ந்தேன். அந்த கட்டுரை எழுதியவன் என்ற அடையாளத்துடன் எம்.எஸ்.எஸ்.பாண்டியனை சந்தித்தேன். அவருடைய நட்பும், வழிகாட்டுதலும் தொடர்ந்து வாசிக்கவும், கல்விப்புலம் நோக்கிய நகர்விற்கும் உதவியாக இருந்தது. ஒரு குறுகிய கால பகுதி நேர ஆய்வில் அவருடன் ஈடுபட்டேன்; தமிழ் சினிமா குறித்த கருத்தரங்கத்திற்கான பூர்வாங்க தயாரிப்பிற்கான ஆய்வு அது. அதன் பின்னர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெவலப்மண்ட் ஆல்டர்நேடிவ்ஸ் என்ற நிறுவனத்தில் ஆண்தன்மை (masculinity) குறித்த ஆய்வில் ஜெயரஞ்சன், ஆனந்தி ஆகியோருடன் இணைந்துகொண்டேன். பலபேர் இணைந்து செய்த நிறுவன ரீதியான ஆய்வு அது. அதற்குக் காரணம் என்னுடைய பல்வேறு கவனிக்குவிப்பு கோட்பாட்டு புலங்களில் பாலியல் கட்டுமானமும் ஒன்று என்பதும், அது குறித்து நான் கணிசமாக வாசித்து வந்தேன் என்பதும்தான். இந்த ஆய்வு நடந்ததும், கட்டுரை எழுதியதும் நான் பட்டமேற்படிப்புக்கு செல்வதற்கு முன்னால். ஜெயமோகன் தரும் எல்லா தகவல்களும் பிழை என்பதுடன், உள்நோக்கம் கொண்டு செய்யும் திரிபுகளாகவும் இருப்பது வியப்பளிக்கவில்லை. அவர் இதை பலருக்கும் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்.

“Work, Caste, Competing Masculinities: Notes from a Tamil Village” என்ற கட்டுரை எஸ்.ஆனந்தி, ஜெ.ஜெயரஞ்சன், ராஜன் கிருஷ்ணன் என்ற பெயரில் நான் ஆகிய ஆகிய மூவரால் எழுதப்பட்டது, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் வெளியான ஆண்டு 2002. இந்த கட்டுரைக்கான கள ஆய்வு 1999-2001 ஆண்டுகளில் பலரால் மேற்கொள்ளப்பட்டது, நானும் ஒரு சில குழு விவாதங்களுக்கு சென்று அந்த ஊரில் உள்ள மக்களை சந்தித்தேன். கட்டுரை பல கட்டங்கள், பல வரைவுகளை தாண்டி நிறைவு செய்யப்பட்டது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறுதி வடிவம் பெறுவதற்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அவருடைய பங்கேற்பும் கணிசமாக இருந்தது. இந்த கட்டுரை வந்தபிறகு பேராசிரியர். லட்சுமணன் இதற்கு விரிவான மறுப்பு ஒன்றை அதே EPW பத்திரிகையில் எழுதினார். அவருடன் அதன்பின்னும் உரையாடலில்தான் இருக்கிறேன். கல்விப்புல ஆய்வுகளில் இதுபோன்ற மறுப்புகளும், மாற்றுக் கோணங்களும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை ஆய்வுகளில் அறுதி உண்மைகளை காண்பது என்பது சாத்தியமல்ல. சில குறிப்பிட்ட அம்சங்கள் நம் பார்வைக்கு வரும்போது அவற்றைக் குறித்து நாம் எழுதுகிறோம். அது பிறருடைய சிந்தனைக்கும், தொடர்ந்த ஆய்விற்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இந்த கட்டுரை, அந்த கட்டுரைக்கு வந்த பேராசிரியர் லட்சுமணனின் மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, அதன் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டு, நான் மேலும் சிந்தித்து வந்துள்ளேன். ரட்கர்ஸ் பல்கலைகழகத்து கருத்தரங்கம் ஒன்றில் “Touching Untouchability: Dalit Situations and Theoretical Horizons” என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன். அது 2006 ஆம் ஆண்டு ஒரு நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்படியாக கல்விப்புல செயல்பாடு என்பது தொடர் செயல்பாடாகத்தான் இருக்கும்.

ஜெயமோகனின் துண்டு துண்டாக மேற்கோள்களைப் போட்டு விமர்சிக்கும் போக்கு தவறானது என்றாலும், கட்டுரையை குறித்து ஒரு சில வார்த்தைகள் கூறுவது தவறில்லை. நாங்கள் மாஸ்குலினிடி என்ற கோணத்தை முதன்மைப்படுத்தி, எப்படி ஒரு தலித் இளைஞர் குழு ஆண்தன்மையை கட்டமைத்துக் கொள்கிறது என்பதை எங்கள் ஆய்வில் கவனத்திற்கு வந்ததன் அடிப்படையில் எழுதினோம். அதை சமூக பொருளாதார மாற்றங்களின் பின்புலத்திலும், ஜாதி அதிகாரம் தகர்வதின் பின்புலத்திலும் வைத்து புரிந்துகொள்ள முயற்சி செய்தோம். பாலியல் ஆய்வுகளில் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் அதாவது ஆண்/தலித்/வர்க்கம், பெண்/ஜாதி/வர்க்கம் ஆகியவை பலவிதமாக வெட்டுத் தோற்றங்கள் கொள்வதை intersectionality என்று குறிக்கிறார்கள். ஆண்தன்மையை விமர்சித்தால் அது தலித் இளைஞர்களை விமர்சிப்பதாகத் தோன்றும். மேலும் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடம் காணப்பட்டஅம்சங்களை எழுதுவது ஏதோ ஒட்டுமொத்த சமூகத்தை குறித்தும் எழுதிவிட்டதுபோலும் வாசிக்கப்படுகிறது. கத்திமேல் நடப்பதுதான் இது. முழுவதும் மாஸ்குலினிடி, அதாவது ஆண் என்ற பாலியல் கட்டுமானம் குறித்த சிந்தனைகளின் பின்புலத்தில்தான் இந்த கட்டுரையின் பிரச்சினைப்பாட்டை புரிந்துகொள்ள முடியும். அதிகாரம் பெறுதலின் வடிவம் ஏன் ஆண்தன்மை கொள்கிறது என்ற கேள்வியாகவே இதை புரிந்துகொள்வது நலம்பயக்கும்.

உதாரணமாக சமீபத்தில் “Modi & a Beer” என்ற குறும்படம் ஒன்று ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் படமாக யூடியூபில் வெளியாகியிருந்தது. அதில் ஒரு பார்ப்பன பெண்ணும், பிற்படுத்தப்பட்ட சமூக ஆணும் காதலர்களாக ஒரு பாருக்கு செல்வார்கள். அவர்கள் திருமணத்தைக் குறித்து பேசுவார்கள். அந்தப் பெண் சங்கிகள் போல “தலித்துகளை நீங்கள்தான் வன்முறைக்கு ஆட்படுத்துகிறீர்கள்; நாங்கள் எந்த வன்முறைக்கும் போனதில்லை” என்று பார்ப்பனீய மீட்புவாதம் பேசுவார். விவாதத்தின் போக்கில் அந்த இளைஞன் ஆணாதிக்க மனோபாவத்தில் அந்த பெண்ணின் நடத்தையை விமர்சித்துப் பேசி விடுவான். அந்த பெண் உறவை முறித்துக்கொண்டு சென்றுவிடுவார். பல நுட்பமான குறியீடுகளைக் கொண்ட இந்த படம் நம் சமூக முரண்களின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. குறிப்பாக ஆண்தன்மை, ஆணாதிக்கம் என்று வந்துவிட்டால் எல்லா சமூக அடையாளங்களுமே பிரச்சினைக்குரிய அம்சங்களை கொண்டவைதான். ஒவ்வொரு சமூகத்திலும் ஆண்தன்மை கட்டமைப்பு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக நிகழ்கிறது. தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் இது.

Economist-Jeyaranjan-300x200.jpg
 

தன் சுயத்தை உறுதிபட கட்டமைத்துக்கொள்வது என்ற ஆதிக்க எதிர்ப்பு நடைமுறையில் ஆண்தன்மை என்பதும் மையப்படத்தான் செய்கிறது. அதன் சில அம்சங்களை கள ஆய்வில் கண்ணுற்றதால் அவற்றை சுட்டிக்காட்டி எழுத நினைத்தோம். ஆனால் கட்டுரையை வாசித்த சிலர் நாங்கள் தலித் இளைஞர்களை பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவதாக நினைத்துவிட்டார்கள். அப்படி வாசிப்பது பயனற்றது, பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்வது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில், ஆண்தன்மை பெறும் வடிவம் குறித்து விவாதிப்பதுதான் எங்கள் நோக்கமே தவிர, தலித் இளைஞர்களை பொதுமைப்படுத்தி வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதல்ல. ஜெயமோகன் masculinity என்ற வார்த்தையையே ஆண்திமிர் என்று மொழிபெயர்க்கிறார். மேலும் entice என்ற வார்த்தையை தவறான பொருளை குறிப்பதாகக் கூறுகிறார். கவர்வது, வசீகரிப்பது, மயக்குவது எல்லாம் காதலில் ஒரு அங்கம்தானே. அதெல்லாம் காதல் செய்வதன் வடிவங்களே தவிர நாடகக் காதல் அல்ல. உண்மையான சத்தியமான காதலிலும் இந்த அம்சங்கள் உண்டு. கண்ணோடு கண் நோக்குவதும், தோற்றமும், நடையுடை பாவனைகளும் காதலின் முக்கிய அம்சங்கள். காலம் காலமாக நிலவிய ஜாதீய ஒடுக்குமுறையை மறுத்து சுய உருவாக்கம் செய்யும்போது அதில் ஆண்தன்மையை ஆற்றல் மிக்கதாக கட்டமைப்பது எப்படி இடம் பெறுகிறது என்பதையே நாங்கள் பரிசீலிக்க விரும்பினோம். இதில் ஜாதி மறுப்புக் காதலர்களை இழிவு படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. காதல் கதைகள் எல்லாமே இனிமையானவை அல்ல; அது ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், விரும்பத்தகாத விளைவுகளும் எத்தனையோ. கட்டுரையை அதன் முழு வடிவில் படித்து விமர்சிப்பவர்களுடன் உரையாடுவதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் அதை திரிபு வேலை செய்யும் ஜெயமோகனுக்காக செய்ய வேண்டியதில்லை. முழுமையாக கட்டுரையை படித்து விமர்சித்து எழுதும் யாருடனும் விவாதிக்கலாம். அதன் நிறை, குறைகளை பொறுமையாக விவாதிப்பதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை. விமர்சனங்களை ஏற்பதும், நம் எழுத்துக்களை சுய விமர்சனத்துடன் மீள் பரிசீலனை செய்வதும் இன்றியமையாத அறிவுலகப் பண்புகள். இன்றைய நிலையில் அந்த கட்டுரை எழுதப்பட்டால் அது மிகவும் மாறுப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. இனவரைவியல் ஆய்வின் அடிப்படையில் கட்டுரை எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த முறையையில் தொடர்பான பிரச்சினைகளையும் சேர்த்துதான் சிந்திக்க வேண்டும். அது குறித்தும் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவேன்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஆனந்தி, ஜெயரஞ்சன், நான் ஆகிய யாருமே அந்த ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எழுதியவர்கள் அல்ல. அதற்கு முன்னும் பின்னும் அரசியல் குறித்தும், ஜாதீயக் கட்டுமானத்தின் பிரச்சினைகள் குறித்தும், தலித் ஒடுக்குமுறை குறித்தும் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். பேசி வந்துள்ளோம். அவை பல அச்சில் வெளியாகியுள்ளன; பொதுக்களத்தில் இருக்கின்றன. நான் பொதுவாக நல்லவன் என்று நிரூபிக்க மெனக்கெடுவதில்லை. சமூகம் சீர்தூக்கிப் பார்த்து புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கையில்தான் இயங்குவேன். உதாரணமாக இளவரசன் கொலையுண்டபோது முகநூலில் நிறைய பதிவுகளைச் செய்தேன். ஆங்கிலத்தில் “ILAVARASAN: AT A DEADLY NEW JUNCTION OF CASTE AND ELECTORAL POLITICS” என்ற கட்டுரையை எழுதினேன். இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இந்த தலைப்பை கூகுளில் கட் அண்ட் பேஸ்ட் செய்யவும். அப்போதும் ஒரு நண்பர் தலித்துகளுக்கும், இடைநிலை சாதியினருக்கும் மோதல் அதிகரிக்கும்போது பார்ப்பனர்கள் ஏன் மகிழ்கிறார்கள் என்று என்னை குத்திக்காட்டுவதுபோல முகநூலில் எழுதினார். நம் சமூகத்தின் முரண்கள் கடுமையானவை. தொடர்ந்து மற்றமையை மதித்து உரையாடும்போதுதான் மெள்ள மெள்ள நாம் புதிய சிந்தனை வெளியை, விமர்சன சிந்தனையை மீட்டெடுக்க முடியும்.

lynching1-300x212.jpg
 

பார்ப்பனரல்லாத ஜாதிகளை, தலித்தல்லாத ஜாதிகளாக தலித் பார்வையிலிருந்து விமர்சிக்கும்போது பல புதிய கோணங்களும், பிரச்சினைகளும் எழுகின்றன. இவற்றைக் குறித்து நான் “பார்ப்பனரல்லாதோரும், தலித் அல்லாதோரும்: இரண்டு திரைப்படங்களும், ஒரு நூலும்” என்ற கட்டுரையை உயிர்மை இதழில் எழுதியுள்ளேன். என்னுடைய “எதிர்புரட்சியின் காலம்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எதற்காக சொல்கிறேன் என்றால் தலித் ஒடுக்குமுறை குறித்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து எழுதி வருவதையும் சுட்டிக்காட்டத்தான். இடைநிலை ஜாதிகளுக்கும், தலித் தொகுதிகளுக்கும் உள்ள முரணை, திராவிட அரசியலுக்கும் தலித் அரசியலுக்கும் உள்ள முரணாக சித்தரிக்க இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து முயல்வதையும், பார்ப்பனீய மீட்பு வாத சக்திகள் அதற்குத் துணைபோவதையும் விவாதிக்கத்தான் வேண்டும். சமூக அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதில் ஆயாசம் கொள்ள முடியாது.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இன்று நம்மிடையே இல்லாததால் அவர் குறித்து சில வார்த்தைகள் அவரை அறியாதோருக்காக கூற வேண்டி உள்ளது. பாமாவின் நாவல், ரவிகுமார், ராஜ்கெளதமன் விமர்சனங்கள் என தலித் எழுத்துக்களை சர்வதேச கவனத்திற்குக் கொண்டு சென்றவர் பாண்டியன். அவருடைய “Brahmin and Non Brahmin: Genealogies of Tamil Political Present” என்ற நூலின் இறுதிப்பகுதியில் எப்படி பார்ப்பனரல்லோதார் என்ற அடையாளம் தோன்றுவதற்கான வரலாற்று நியாயங்கள் இருந்ததோ, அதே போன்ற வரலாற்று நியாயம் தலித் என்ற அரசியல் அடையாளத்திற்கும் உண்டு என அழுத்தம் திருத்தமாக எழுதியவர். ஆனால் அதெல்லாம் நூலை முழுமையாகப் படித்தால்தான் புரியும். அவதூறு செய்வதற்கு எதையும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை.

நாடக க் காதல் என்று ராமதாஸ் கூறியதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கும், ஆணவக் கொலைகளுக்கும் எங்கள் EPW கட்டுரை காரணம், தூண்டுதல் என்பது வக்கிரமான, மிகையான சித்தரிப்பு என்பதை சமூக அரசியல் வரலாறு தெரிந்த யாரும் புரிந்துகொள்வார்கள். சமூக மாற்றம் என்பது பல்வேறு முரண்களைக் கொண்ட பிரம்மாண்டமான வரலாற்றுத் தொடர் நிகழ்வு. மானுடவியல் ஆய்வு முயற்சிகள் ஓடும் நீரில் ஒரு கை நீரென ஒரு தருணத்தில் காணக்கிடைப்பதை வைத்து சிந்திப்பது.

ஜெயமோகன் ஒரு முறை நள்ளிரவில் என்னை ஒரு நெடுஞ்சாலை ஓர பேருந்து நிறுத்தத்தில் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ளார். எனக்குமே எதிர்பாராத  இனிமையான சந்திப்பாகத்தான் அது இருந்தது. என் நினைவில் தங்கியுள்ளபடி நட்பாகவே பேசிக்கொண்டோம். அந்த சந்திப்பு நிகழ்ந்த ஆண்டு 2010. அப்போதும் நான் தலித் மக்கள் தொகுதிகள் குறித்த கள ஆய்வில்தான் இருந்தேன். ஆனால் வேறு ஆய்வு. பொருளாதார முன்னேற்றத்தில் தலித் மக்கள் எப்படி விடுபட்டுப் போகிறார்கள் என்பதை பல்வேறு கோணங்களில் பலரும் ஆராயும் ஒரு ஆய்வுப் பணி அது. அதன் முடிவில் நான் எழுதிய கட்டுரையும் ஜெயமோகனுக்கு நிச்சயம் பிடிக்காது. தலித் கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தவறானது என்பதை விளக்கும் கட்டுரை அது. Caste and Religion in the Age of the Nation State: Certain Polemical Blinders and Dalit Situations என்பது அதன் தலைப்பு. இணையத்தில் யாரும் வாசிக்கக் கிடைக்கும். இந்த தலைப்பை கூகுளில் கட் அண்ட் பேஸ்ட் செய்யவும். அதிலும் பலருக்கு பல கருத்து மாறுபாடுகள் தோன்றலாம். நிச்சயம் அவற்றை செவிமடுக்கவும், அதிலிருந்து பயிலவும் தயாராக இருப்பேன்.

அந்த ஒரு EPW கட்டுரையை சுட்டிக்காட்டிவிட்டதால், அவர் எழுத்தைக் குறித்த என்னுடைய விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக ஜெயமோகன் நினைக்கலாம். இது ஒரு திசைதிருப்பல் என்றுதான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் என்னைப் பொறுத்தவரை தனிநபர்களுக்கு இடையில் நடப்பதல்ல. தத்துவ நோக்குகளுக்கும், கருத்தியல்களுக்கும் நடக்கும் விவாதம்தான் அது. ஜெயமோகன் அவர் எழுத்துக்களை குறித்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளப் பழகுவதுதான் ஆரோக்கியமானது.

https://uyirmmai.com/news/அரசியல்/இந்தியா/rajan-kurais-reaction-to-jeyamohan/

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மேன்மைமிகு ரதி அவர்களுக்கு, அங்கயன் என்பவரும் சேர்ந்தேதான் கடந்துபோன இருபதாவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றியுள்ளார். ஒரு அரசியல்வாதி எனப்படுபவர் நீண்டகால நோக்கு உடையவராக இருக்கவேண்டும் குறுகியகாலத்தில் அவர்வகிக்கும் பதவிகளால் அவரை அவரைச் சேர்ந்தவர்களை அல்லது தனது பரம்பரை ஆகியவற்றுக்கான சொத்துச்சேர்ப்பதற்காய் என்ன கழிசடைத்தனமும் செய்யலாம் என்பது தவறாக இருந்தாலும் அது காலப்போக்கில் சரிப்பண்ணப்படக்கூடியதாக இருக்கும் காரணம் சிறீலங்கா என்பது காலாகாலத்துக்கும் அங்கீகரிக்கபட்ட ஒரு நிர்வாகத்தையுடைய இறயாண்மையுடன் கூடியநாடு, அது நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பண்பையுடையது. இப்படியான சில்லறத்தனமான விடையங்கள் பெரிதாக எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படுத்தாது காலப்போக்கில் அதைச் சரிசெய்துவிடலாம். ஆனால் எதிர்காலம்பற்றிய திட்டமிடுதல் அதுதொடர்பான சட்டங்களை இயற்றுதல் ஆகியனவற்றுக்கு நீண்டதூரப்பார்வையும் குறைந்த அளவாவது கண்ணியமும் அரசியல் தூரநோக்கும் இருக்கவேண்டும். ஆனால் அங்கயன் இராமநாதன்  எனும் பொறுக்கித்தனமான குறுகிய வட்டத்தையே சிந்தித்து தன்னுடைய பணப்பையைக் காப்பாற்றவும் அதை இன்னமும் பெருப்பிக்கவும் ஒரு சுயநலம்கொண்ட அம்பாந்தோட்டயை வாழ்விடமாகக்கொண்ட ஒரு பொறுக்கிக்கூட்டத்துடன்சேர்ந்து இலங்கைத்தீவின் எதிர்காலத்துக்குக் கொள்ளிவைக்கும் ஒருவரை நீங்கள் உச்சிமுகர்ந்து மெச்சுவது தெருவில போகும் மனநோயாளிக்குக்கூட சலனத்தை ஏற்படுத்தும்.  ஒருசாண் வயிறை நிரப்பவும் மானத்தை மறைக்கவும் எவ்வளவு வேண்டும் கக்கூசு கழிவிச் சீவிச்சாலும் மானத்துடன் வாழும் எத்தனையோ கனவாஙளைக் கண்டு கடந்துபோன இனம் எமது இனம். ஆனால் அங்கயன், டக்ளஸ் சந்திரகுமார், விஜயகலா, ஆகியோருக்கு வரிந்துகட்டிக்கொண்டுவந்தால் எமக்கு அழுகலைக் கண்டதுபோல் குமட்டவே செய்யும். இது நீங்கள் உட்பட எந்த ஒரு தனிப்பட்ட தமிழனிலும் தவறில்லை , அது எங்கள் டிசைன் அப்படித்தான் போலைருக்கு.
  • இப்போ ராஜபக்சேக்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனிப்பார்ப்போம் வடக்கில் எவ்வளவு அபிவிருத்தி அங்கஜன், டக்கியூடாக நடக்கிறதென்று!!
  • நியாயமா கதைச்சம் எண்டால், ஒரு 154 பதிவுக்காரான உங்களுக்கே, இப்படி கேள்வி வருகுதெண்டா, 55,541 பதிவுக்காராருக்கு கை, கால் எப்படி உதறும்?
  • தமிழ் தேசியம்: ஸ்டாலினுக்கு ஒரு பதிலுரை தமிழ் தேசியம்: ஸ்டாலினுக்கு ஒரு பதிலுரை ஸ்டாலினுக்கு யாழ் மேலாதிக்கத்தை விமர்சிக்கும் உரிமை உள்ளதா? எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் அவர்கள் யாழ் மேலாதிக்கம் எவ்வாறு வரலாற்றில் செயற்பட்டது என்ற குறிப்பொன்றை நிலாந்தன் அவர்களின் ‘கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல” கட்டுரைக்குப் பதிலாக விரிவாகவும் சரியாகவும் முகநூலில் எழுதியிருக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்புகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை.  ஆகவே முதலில் என் மீது சுமத்தப்படுகின்ற யாழ், ஒடுக்கும் சாதி, ஆண், போன்ற பல்வேறு அடையாளங்களினால் கடந்த காலங்களிலிருந்து பல மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். ஏதோவொரு வகையில் இந்த ஒடுக்குமுறைகளில் பங்காளியாக இல்லாமலிருந்தாலும் அதனால் கிடைக்கின்ற பலாபலன்களை அனுபவத்திருக்கின்றேன். இந்தடிப்படையில் இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்க வேண்டியது எனது பொறுப்பாகும். அதேநேரம் இந்த விமர்சனத்தை எழுதுவதால் என் மீது பல முத்திரைகள் குத்தப்படலாம். ஆனால் என்னிடம் பிரக்ஞையாக ஒடுக்கும் சிந்தனைகளோ செயற்பாடுகளோ இல்லை என்பேன். இருப்பினும் நானறியாமல் பிரக்ஞையின்மையாக வெளிப்படுமாயின் அவற்றை சுட்டிக்காட்டும் பொழுது அதற்காக சுயவிமர்சனம் செய்து கொண்டு அதிலிருந்து வெளிவர தயாராகவே உள்ளேன். ஏனெனில் பிரதேச மேலாதிக்க உணர்வு சிந்தனை, ஆணாதிக்க சிந்தனை, ஒடுக்கும் சாதியின் ஆதிக்க சாதி சிந்தனை எனப் பல சிந்தனைகள் எனக்குள் இருக்கலாம். இவற்றையெல்லாம் நம் வாழ் நாளில் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வதனுடாக அதனிலிருந்து முறித்துக் கொண்டு வெளிவரலாம். அதற்கான முயற்சிகளையே செய்கின்றேன். அதேநேரம்  ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் பிரதேச வாதங்களுக்கும் இனவாதங்களுக்கும் எதிராக எனது குரலை பதிவு செய்தே வருகின்றேன். இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் அவர்களின் யாழ் மேலாதிக்கம் தொடர்பான பதிவை விமர்சிக்க முயற்சிக்கின்றேன். முதலில் யாழ் சைவ வெள்ளாள உயர் வர்க்க ஆதிக்க சக்திகளும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுதிய அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சாதிமான்களாக, பிரதேசவாதிகளா, மதவாதிகளாக, வர்க்கவாதிகளாக, இருந்துள்ளார்கள் என்றால் மிகையல்ல. இவர்களிடமே சகல அதிகாரங்களும் இருந்தன. இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களையும் இவர்களே பிரதிநிதித்துவம் செய்தார்கள். இந்தடிப்படைகளில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய வரலாறுக் குறிப்புகள் முக்கியமானவை. ஏன் இந்த முரண்பாடுகள் போராட்ட காலத்திலும் தொடர்ந்தன. போர் முடிந்த பின்பும் தொடர்கின்றன. இதன் ஒரு விளைவுதான் விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்து சென்றது எனலாம்.  வடபகுதியைச் சேர்ந்தவன் என்றடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய நம் தலைவர்கள் கடந்த காலங்களில் இழைத்த பெறும் தவறுகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்கின்றேன். இப்பொழுது நம் தமிழ் தலைவர்களின் தவறுகளை ஏற்றுக் கொண்டு ஸ்டாலின் அவர்கள் முன்வைக்கின்ற அரசியலை விமர்சனபூர்வமாக அணுக முயற்சிக்கின்றேன். முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஆணாதிக்கவாதிகளாக இருந்தால் என்ன ஒடுக்கப்படுகின்றன பெண்களாக இருந்தால் என்ன, ஒடுக்கும் சாதிகளாக இருந்தால் என்ன, ஒடுக்கப்படுகின்ற சாதிகளாக இருந்தால் என்ன, யாழ் மேலாதிக்க சக்திகளாக இருந்தால் என்ன, புறக்கணிக்கப்படுகின்றன மற்ற (வன்னி, கிழக்கு) பிரதேச மக்களாக இருந்தால் என்ன, பணக்காரர்களாக இருந்தால் என்ன, ஏழைகளாக இருந்தால் என்ன, முதலாளிகளாக இருந்தால் என்ன, தொழிலாளர்களாக இருந்தால் என்ன இருபால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஒரு பால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஆண்களாக இருந்தால் என்ன, பெண்களாக இருந்தால் என்ன, வேறு பால் வகையினராக இருந்தால் என்ன இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதனால் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்படுகின்றனர் புறக்கணிக்கப்படுகின்றனர். 2009ம் ஆண்டுவரை தமிழர்கள் தமிழர்கள் என்பதற்கானவே தயவு தாச்சணியமின்றி அழிக்கப்பட்டனர். இது ஒரு இனவழிப்பு என்றால் மிகையல்ல. இவ்வாறான ஒரு நிலையில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை, பிரதேசவாதங்களை எதிர்க்கும் அதேவேளை, ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அதேவேளை. முதலாளிகளின் சுரண்டலை எதிர்க்கும் அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் அதன் மேலாதிக்கத்தையும் எதிர்க்க வேண்டும்.  இதுவே நியாயமான ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான அரசியலாக இருக்கும். ஆனால் ஸ்டாலின் அவர்கள் எவ்வாறான அரசியல் செயற்பாட்டை யார் சார்பாக முன்னெடுக்கின்றார் என்பதே விமர்சனத்திற்குரியது. ஸ்டாலின் அவர்கள் யாழ் மேலாதிக்க வாதத்தை சரியாக எதிர்க்கும் அதேநேரம் தமிழ் மக்களை கொன்றொழித்து சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தை முன்னெடுக்கின்ற ராஜபக்ச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றார். இக் கூட்டானது இவர் யாழ் மேலாதிக்கம் மீது முன்வைக்கின்ற  விமர்சனங்களை வலுவிழக்கச் செய்கின்றது எனலாம்.  உண்மையிலையே யாழ் மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் எல்லா வகையிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களை ஒன்றினைத்து அவர்கள் சார்பாக செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற ஒருவர் யாழ் மேலாதிக்கம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைப்பாராயின் அதில் ஒரு நியாயம் நேர்மை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இலங்கையில் தமிழர்கள் என்பதற்காக ஒடுக்கும் சக்திகளான சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வெறுமனே அக ஒடுக்குமுறைகளை மட்டும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்குவது சந்தேகத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது. இவர் எந்த கிழக்கு மக்களின் அக்கறையின்பால் மேற்குறிப்பிட்ட தமிழ் தலைவர்களின் வரலாற்று தவறுகளை குறிப்புகளாக முன்வைத்தாரோ, அதே மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத்தினால் ஒடுக்கப்படுவதை உணரத் தவறியது கவனிக்க மறந்தது எப்படி? இன்றைய ஈழத் தமிழ் பிரதேசமான வடக்கு கிழக்கில் சாதிய ஒடுக்குமுறைகள், ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் பால் பாகுபாடுகள், மதப் புறக்கணிப்புகள் தொழிலாளர்களை சுரண்டுதல்கள் இருப்பதுபோல பிரதேச வேறுபாடுகளும் புறக்கணிப்புகளும் காணப்படுகின்றன. சமூக விடுதலையை நேசிப்பவர்களாக இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் எந்த தயக்கமோ சந்தேகமோ இல்லை. ஆனால் தூரதிர்ஸ்டவசமா தமிழ் தேசிய அரசியலில் காலம் காலமாக விடுதலைப் புலிகளுக்கு முன்பும் அவர்களது காலத்திலும் அதன் பின்பும் யாழ் உயர் வர்க்க வெள்ளாள மேலாதிக்கமே தொடர்கின்றது என்றால் மிகையல்ல. அந்தவகையில் விடுதலைப் புலிகளிலிருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்து சென்றபோது முன்வைத்த குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் நியாயமானவையே. ஆனால் அந்த அநீதிகளை கேள்விகேட்டு பிரிந்து சென்றவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். அல்லது கிழக்கு மக்களின் விடுதலைக்கான அரசியலை செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் ராஜபக்சக்களுக்கும் முண்டு கொடுத்து சாமரம் வீசுகின்றார்கள். இச் செயற்பாடே இவர்களது யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனத்தை சந்தேகத்திற்குள்ளாக்குகின்றது. ஏனெனில் இதனுடாக இவர்கள் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்திற்கு சேவை செய்கின்றார்கள். சிங்கள பௌத்த பேரினவாதமே இன்று இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சனை எனலாம்.  ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதமானது அரசியல் பலத்தை, இராணுவ பலத்தை மட்டுமல்ல ஜனநாயக பலத்தையும் கொண்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்களுக்குள் பிளவுகளையும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இந்த நோக்கத்திற்கு துணைபோகின்ற வகையில் கருணாவும் பிள்ளையானும் இவர்து ஆலோசகரான ஸ்டாலினும் பிரதேசவாதத்தையும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள். இவ்வாறு ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிராக செயற்படுகின்ற இவர்களுக்கு யாழ் மேலாதிக்கம் தொடர்பாக கதைப்பதற்கு என்ன அருகதை உள்ளது?. மக்களின் விடுதலையா? விடுதலைப் புலிகளாக? என்றால் நான் நிற்கும் பக்கம் மக்களின் விடுதலையே. ஏனெனில் விடுதலைப் புலிகள் மக்கள் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டார்கள் என முழுமையாக அன்று நம்பியது மட்டுமல்ல புரிந்தும் கொண்டிருந்தேன். அதேநேரம் விடுதலைப் புலிகளா? சிங்கள பௌத்த பேரினவாத அரசா? என்றால் எனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கே. எவ்வாறு ஜேவிபியினர் உண்மையான இடதுசாரிகளாக இல்லாதபோதும் ஜேவிபியா? அல்லது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளாக? என்றால் எனது ஆதரவு ஜேவிபிக்கே. இது ஒப்பிட்டடிப்படையில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்படும் சக்திகள் சார்பாகவும் இருக்கின்ற அரசியல் நிலைப்பாடாகும். மாறாக ஒடுக்கும் அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற யாருக்கும் சமூகங்களுக்குள் இருக்கின்ற எந்த ஒடுக்குமுறைகள் தொடர்பாகவும் விமர்சிப்பதற்கு உரிமையில்லை. ஜனநாயக அடிப்படையில் அவ்வாறு உரிமையை எடுத்துக்கொண்டாலும் அந்த விமர்சனத்தில் உண்மையில்லை. நேர்மையில்லை. இந்தடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனம் உண்மையாயினும் அதை முன்வைத்தமைக்கான நோக்கத்தில் நேர்மையில்லை என்றே புரிந்து கொள்கின்றேன். ஒடுக்குமுறையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற அவருக்கு அந்த உரிமை உண்டா என கேட்பதிலும் தவறில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு கட்சியும் மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைவரும் பிழைப்புவாதிகளாகவே இருக்கின்றனர். தூரதிர்ஸ்டமாக ஒடுக்கப்படுகின்ற மக்களுக்குள் இருந்து எந்த தலைமையும் உருவாகவில்லை. அவ்வாறு உருவாகின்ற தலைமைகளையும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ் வெள்ளாள கொழும்பு மேட்டுக்குடி ஆண்கள் நசுக்கிவிடுகின்றனர். இவர்களால் தமிழ் தேசிய அரசியலானது சிக்கி சின்னாபின்னமாகி பிற்போக்கான அரசியல் பயணத்தையே முன்னெடுக்கின்றார்கள். ஆகவே இன்றைய தேவை எல்லாவகையிலும் ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்கள் சார்பான முற்போக்கான தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுமே அவசியமாகும். மாறாக எந்த மேலாதிக்கத்திற்கும் துணைபோகின்ற செயற்படால்ல. அது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோவது மட்டுமல்ல யாழ் சைவ வெள்ளாள ஆண் மேலாதிக்கத்திற்கு துணைபோவதாக இருந்தாலும் தவறானதே. ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் தம் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின் இவ்வாறான ஒரு அரசியலையே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கும் பொழுது இவ்வாறான விமர்சனங்கள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்குப் பயனுள்ளவையுமாகும். வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பாக போராடிய தலைவர்களே புகழுடன் நினைவு கூரப்படுகின்றார்கள். மக்களை ஒடுக்கிய தலைவர்கள் தூற்றப்பட்டு சபிக்கப்படுகின்றார்கள். மறக்கவும்படுகின்றார்கள். நாங்கள் வரலாற்றில் யாருடன் எந்தப் பக்கம் நிற்கப்போகின்றோம் என்பது எங்களின் தெரிவு. இதை ஸ்டாலினும் அவரது கட்சியும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். மீராபாரதி   https://meerabharathy.wordpress.com/2020/09/12/தமிழ்-தேசியம்-ஸ்டாலினுக/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.