• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

பிலாக்கணம் பூக்கும்  தாழி - அகர முதல்வன்

Recommended Posts

பிலாக்கணம் பூக்கும்  தாழி - அகர முதல்வன்

July 1, 2020
akara-muthalvan-696x391.jpg

அகர முதல்வன்

ஓவியம்: வல்லபாய்

பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார்.

“உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில் கிடந்த மூத்திரவாளியின் வீச்சத்தை தணிக்கும் வகையில் சுருட்டின் வாசம் கமழ்ந்து அலைந்தது. ஆச்சி செருமிமுடித்து மீண்டும் புகைத்தாள். அப்பா சுருட்டை பாதியில் காணுமென்று நூத்துவிட்டு தன்னுடைய போணியில் பத்திரப்படுத்தினார். மாலாவிற்கு அப்பா நூறுரூபாய் காசைக் கொடுத்து இதை வைத்துக்கொள் என்றார். அவளுக்கு மறுப்பதற்கு மனமுமில்லை இடமுமில்லை.  வாங்கினாள். அப்பா சைக்கிளை எடுத்து தோட்டம் நோக்கி உழக்கலானார்.

மாலா என்னுடைய உடுப்புக்களையும் அப்பாவின் உடுப்புக்களையும் தோய்ப்பதற்கு எடுத்துக்கொண்டு கிணற்றடி நோக்கி நடக்கலானாள். பிலா இலை  ஆச்சியின் கொட்டிலைத் தாண்டுகையில் சுருட்டும் மூத்திரமும் கலந்தெழுந்து வயிற்றைக் குமட்டியது.

“ஆச்சி இரண, உடுப்புத்தோய்ச்சுப் போட்டு வாறன்”

என்று சொல்லியபடி  அந்தக் குமட்டலை பாய்ந்து கடந்தாள். “கொண்டோடி வேசை என்ர தலையில இருக்கிற பேன் உன்ர கவட்டுமயிரிலா ஊரப்போகுது” கோபம் தழல்விட ஆச்சி கேட்டாள். மாலா பதிலுக்கு “ஓமணை ஆச்சி, இவர் வேற தங்குவேலைக்கு போயிட்டார், அப்பிடி எதுவும் நடந்தால் நான் ஆர வைச்சு பேன் பார்க்க ஏலும் சொல்லுங்கோ” என்று அந்தரங்கமாய் தொனித்தாள். இலை ஆச்சியும் மாலாவும் இப்படித்தான் வாக்குவாதப்படுவார்கள். பயன்படுத்தும் வசவுகளும் பதில்களும் கனிந்து பகிடியாய் எஞ்சி இருவருக்குள்ளும் அன்பாய் விரிந்தெழும்.

“மோளே மாலா, நீ என்னை கோபிக்கப்பிடாது, உன்னுடைய கையில மீன்வெடுக்கு அடிக்குது, சாப்பாட்டுக் கோப்பையை இதில வைச்சிட்டு, அந்த மஞ்சள் கட்டி சவுக்காரத்த போட்டு கழுவு. இல்லாட்டி நீ தீத்துகிற இந்தச் சாப்பாடும் குமட்டி சத்தி வரும்”

ஆச்சி இண்டைக்கு என்ர வீட்டில மரக்கறிதான் சமைச்சனான். உங்களுக்கு மனப்பிரமை. எப்ப பார்த்தாலும் மீன் வாங்கிக்காய்ச்ச என்ர புருஷன் என்ன அரசாங்க உத்தியோகமே?

மாலா சன்லையிட் சவுக்காரத்தை எடுத்து கையைக்கழுவுவாள். ஆச்சியின் மூக்கிலேய இரண்டு கையையும் வைத்து இப்ப மீன் மணக்குதோ? மான் மணக்குதோ? என்று கேட்பாள்.

ஆச்சி எதுவும்  சொல்லாமல் சோற்றுக் குழையலுக்காய் ஆவென்று வாயைத் திறப்பாள். சாப்பாடு முடித்ததும் ஒரு சுருட்டு. அதைப் புகைத்து முடித்தால் கனாச்சுரக்கும் நித்திரைச்சுழல் ஆச்சியைத் தாக்கும். பரிதாபகரமான இரையைப் போல பகல் நித்திரைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பாள். நித்திரையிலிருக்கும் ஆச்சிக்கு பேன் பார்க்கத் தொடங்குவாள் மாலா. அவ்வளவும் மொளியன் பேன். தன் இரண்டு பெருவிரல் நகங்களும் இரத்தப் பசைமேடாகும் வரை மாலா பேன் பார்ப்பாள். ஆச்சி செருமிக்கொண்டு நெஞ்சைத்தடவி புரண்டு படுப்பாள். மாலா தனது பாவாடையை  உதறி சட்டையைத் தட்டிக்கொண்டு  ஆச்சியின் கொட்டிலை விட்டு வெளியேறுவாள். தனது வீட்டிற்கு போய் குளித்து முடித்துவிட்டு கூந்தலை ஈர்கோலி கொண்டு இழுத்து நெரிப்பாள். ஈர்க்கும்பல் பொரிந்து வெடிக்கும். வேப்பிலையையும் கருவேப்பிலையையும் மஞ்சளோடு அரைத்து அவசரகதியில் தலையில் பூசுவாள்.

ப்பா கொஞ்சம் வெள்ளனவே வீட்டிற்கு வந்தார். மனித ரத்தம் உறிஞ்சும் நுளம்புகள் பறந்தபடியிருந்தன. ஆச்சி பின்னுக்கு எழும்பி மெல்ல நடமாடிக் கொண்டிருந்தாள். அப்பாவிற்கு இரவுச்சாப்பாட்டை பரிமாறும் பொறுப்பு எனக்கிருந்தது. குளித்துமுடித்த நேராக குசினிக்குள் நுழைவதைக் கண்டேன். வெளியே கிடந்த அப்பாவின் கோப்பையைக் கழுவிக்கொண்டு குசினிக்குள் போனேன். பெரிய பலகைக் கட்டையில் ஈரச்சாறத்தோடு அமர்ந்திருந்தார்.  மூடிக்கிடந்த பெரியசட்டியைத் திறந்து புட்டை அள்ளிப்போட்டேன். நான்காவது அகப்பை விழுந்ததும் “காணும்…காணும்” என்றார். கடலைக்குழம்பும் நொச்சி மிளகாய் சம்பலும், சேலன் மாங்காய் சொதியும் இருந்தது. அப்பாவிற்கு அளவளவாக பரிமாறினேன். அப்பா காணும் என்று சொன்னதும் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன். அப்பா சாப்பிட்டு முடித்து வாயைக்கொப்பளித்து குசினிக்கு இடப்பக்கமாக இருக்கும் வேலியடியில் துப்புவது கேட்டது. பின்னர் குடத்தைச் சரித்து தண்ணீர் நிரப்பி மூன்று செம்பு தண்ணீர் குடிப்பார். அதுமுடிந்ததும் சாய்மனைக் கதிரையில் இருந்து சுருட்டைப் பத்தவைத்து இழுத்து ஊதியபடி மகத்தான மனிதத்தோரணையில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருப்பார்.அப்போது அவரின் முகத்தில் வடிவு பொலிவதைக் காண்பேன். “உன்ர கொப்பன் மிடுக்கான ஆளல்லோ” என்று எனக்குள்ளே நான் பெருமை பொங்கி வழிவேன். அப்பா அப்படியே கதிரையிலேயே படுத்துவிடுவார். அதிலொரு உறக்கம் கண்டு மூத்திரத்திற்கு விழிப்புற்று பின்னர் வீட்டிற்குள் நுழைந்து பாயில் படுப்பார்.

தொள தொளப்பான சட்டையணிந்த ஒரு வயோதிகனைப் போல இரவு இறுகி அசைய, பிலா இலை ஆச்சி உறக்கமில்லாது வாங்கில் முழித்திருந்தாள். திடீரென கூரையில் செருகப்பட்டிருந்த பிலா இலைக்கம்பியை எடுத்துக்கொண்டு கொட்டில் முற்றத்தில் இறங்கினாள். நடுங்கும் கைகளும் பொருக்கடைந்து சுருங்கிய சரீரத்தோடும் வானத்தை பார்த்துக் கொண்டே பிலா இலைகளை மிகவேகமாக குத்தத்தொடங்கினாள். தொள தொளப்பான சட்டையணிந்த ஒரு வயோதிகன் பூமியை விட்டு அகலும் நொடிவரைக்கும் அவள் குத்திக்கொண்டே நின்றாள். முற்றமெங்கும் பிலாக்கம்பியின் கூர்த்தடம். ஆச்சியின் கால்தடம்.

அப்பா எழுந்ததும் உமிக்கரியை வாயில் போட்டு பல்லை விளக்கியபடி கிணத்தடிக்கு போகையில் இரண்டு தடங்களையும் கண்டார். கொட்டிலை எட்டிப் பார்த்தார். ஆச்சி சுருட்டு குடித்துக் கொண்டிருந்தாள். நிலமிறங்கிய பிலாக்கம்பி கூரையில் செருகப்பட்டிருந்தது. கூர்முனையில் மண். அப்பா பல்லைத் தீட்டி கிணற்றுப்பாத்தியில் நான்குதரம் துப்பி குளித்துமுடித்தார். எழும்படா நித்திரை காணுமென்று என்னை வந்து தட்டியெழுப்பினார். ஆச்சியின் கொட்டில் முற்றத்தில் அத்தனை சிறுபொட்டு குழிகள் கண்டேன். அவ்வளவு வடிவாக இருந்தது. பிரக்ஞையற்ற அகமனத்தின் மேய்ச்சல் போலிருந்தது. ஆச்சியை எட்டிப்பார்த்தேன். அவள் வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்தாள். அவளின் இரண்டு பாதங்களிலும் மண் ஒட்டிக்கிடந்தது. இன்னும் கொஞ்சம் பக்கமாக போய் நின்று பார்த்தேன். இந்தநொடியில் அரும்பிய பிலா இலை போலிருந்தது அவளின் முகப்பசுமை.

எங்களுடைய  சொந்தக்கிராமத்தில்  ஆச்சிக்கிருந்த  நான்கு ஏக்கர் காணியில் பிலாமரங்கள் நிறைந்திருந்தன. “பிலாவளவுக்காரர்” என்றால் அறியாதார் இல்லை. நான் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த நாளொன்றில் அங்கிருந்து இடம் பெயர்ந்து இந்தவூருக்கு வந்தே சரியாக இருபத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்மா மலேரியா காய்ச்சலினால் உயிரிழந்திருக்கிறாள். அப்போது எனக்கு ஒருவயது கூட பூர்த்தியாகவில்லையாம். அம்மா எனும் பொருண்மை அருவவுணர்வெனக்கு. ஆச்சிதான் எல்லாமுமாக இருந்தாள். ஆனால் அவளுக்கு இந்தக்கிராமத்தோடு ஒன்ற முடியாதிருந்தது. சகிக்க முடியாதிருந்தாள். எத்தனை வருஷமானாலும் பிலாவளவு கிணற்றில் தண்ணி அள்ளி குடிச்சால்தான் களைதீருமென்று மந்திரமாய் சொல்லிக்கொள்வாள்.

ஆனால் ஆச்சியின் சொந்தக் கிராமத்தின் தலைவாசலில் “இந்த நிலம் இராணுவத்திற்கு சொந்தமானது” என்ற அறிவிப்புப்பலகை கால் நூற்றாண்டாக தொங்குகிறது. “ என்ர இராசா நான் இஞ்சனேக்கே செத்துப்போனா என்னை எரிச்சு கடலில காடாத்தாத, அந்தச் சாம்பலைக் கொண்டு என்ர பிலா வளவுக்குள்ள ஒரு கிடங்கு வெட்டி தாக்கவேணும். அப்பதான் என்ர ஆத்மாவுக்கு களைப்பு அடங்கும். விளங்குதே மோனே ” என்பாள் ஆச்சி. அப்போது அவளின் கண்களில் தவிப்பின் உக்கிரம் மிழங்கும்.

“ ஓமண, ஓமண ஆமிக்காறன் காணிகளை விட்டுப்போனால் முதல் வேலையாய்  உன்ர சாம்பலைக் கொண்டே பிலாவளவுக்குள்ள புதைப்பன் நீ யோசியாத ” என்பேன்.

ஆச்சியின் உடலுக்குள் இருந்து கண்ணீரின் பெருக்கு நிகழும். அவள் என்னுடைய கன்னங்களை அளைந்து நெற்றியால் முட்டி கொஞ்சுவாள். அவளின் உள்ளங்கைகளில் குளிர்மையாக  வலுத்துநிற்கும்  திகைப்பு ரேகைகளாக ஓடிக் கொண்டிருந்தது.

பிலா இலை ஆச்சிக்கு மாறாட்டம் கூடிப்போயிற்று. தலையில் புழுத்து உடம்பில் பேன் விழுந்தது. இரவும் பகலும் கொட்டில் முற்றத்தில் பிலாக்கம்பியை  வைத்து குத்தினாள். வேம்படி பரியாரியிடம் மருந்து வாங்கி வந்து மாலாவிடம் அப்பா கொடுத்தார். சாப்பாட்டில் கலந்து கொடுத்தும் ஆச்சியை உறக்கம் தொடவில்லை. மாலாவைப் பார்த்து சின்னக்கிளி வாடி, எப்பிடி சுகமென்று கேட்டாள்.

“ நான் சின்னக்கிளி இல்லெ, பெரிய கிளியெனெ ” மாலா சிரித்தபடி சொன்னாள். சின்னக்கிளி யாரென்று அப்பாவுக்கும் தெரியவில்லை. ஆச்சிக்கு எந்த வைத்தியமும் கேட்கவில்லை. அவள் பிலாக் கம்பியோடு ஓயாமல் நடந்து கொண்டே இருந்தாள். பகலுக்குள் நடந்தாள். இரவுக்குள் நடந்தாள். அவளின் சொந்தக் கிராமத்தை நோக்கி கற்பனையில் நடந்தாள்.

ஆனால் மாலா ஆச்சியை தூக்கிக்கொண்டு போய் கிணற்றடியில் இருத்தி வைத்து முழுக வார்ப்பாள். கையாலாகாத குழந்தை திமிறி அழுவதைப் போல ஆச்சி அழுவாள். “ இந்தா முடிஞ்சுது, இந்தா முடிஞ்சுது ” என்று சொல்லி ஆற்றுப் படுத்துவாள். உடைமாற்றி, தலைதுடைத்து ஆச்சிக்கு சோறு தீத்திவிடுவாள்.

“சின்னக்கிளி நீ சாப்பிடு,நான் திடகாத்திரமாய் தான் இருக்கிறேன். நீ சாப்பிடு”

“ஓமண நான் சாப்பிட்டேன். நீங்கள் சாப்பிடுங்கோ” – மாலா சொல்லுவாள்.

ஆச்சி விசுக்கென எழுந்து கூரையில் செருகப்பட்டிருக்கும் பிலாக்கம்பியை எடுத்து முற்றத்துக்கு ஓடிப்போய் குத்தத் தொடங்குவாள். மாலா சோற்றுக் கோப்பையோடு அவள் பின்னே ஓடிவந்து ஆச்சி இந்த வாயை மட்டும் வாங்குங்கோ என்று இரந்து கேட்பாள். ஆச்சிக்கு எதுவும் கேட்காது.

மாலாவின் புருஷன் பத்துநாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பியிருந்தான். அன்றைக்கிரவு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் நுளம்பு வலைக்குள் நித்திரையாக்கிவிட்டு வீட்டின் முன்னே நின்ற பாலைமரத்தின் கீழே போய்க் கிடந்தாள். புருஷன் குளத்தில் குளித்துவிட்டு அப்போதுதான் வந்தான். பிள்ளைகள் எழும்பிவிடாதபடி அரவம் எழுப்பாது சாப்பாடு பரிமாறினாள்.

இரவின் கன்னம் உப்பியிருந்தது. வீசுங்காற்றில் ஈரச்செதில்களோடு தாபம் நீந்தின. மாலாவின் அதரங்கள் கனிந்து தொங்கின. புருஷன் வெளவால். அவனுக்கு கிளைகள் தோறும் அசையும் கனிகள். உடல்களின்  குறுணிச்சப்தம். மாலாவின் கண்கள் மடலுக்குள் போயின. ஓங்கியெழுந்த வேகம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பெனும் உருசைகளின் அணிவகுப்பு. மாலா பாலைமரத்தின் நுனிக்கொம்பு உச்சியிலிருந்து சிறகடித்து எழுகையில் புருஷன் அசையாமல் கிடந்தான். வேர்வையின் வாசத்தை இரவின் போர்வையால் மூடிக்கொண்டாள். புருஷன் மூச்சு இயல்புக்கு வந்தது. கனிந்தவைகள் களைப்புற்று மின்னின. அவனுக்கு காணாது போலும். இருள்வெளியில் அவனுடல் தீயுருவாய் கனன்றது. ஆனால் மாலா எழுந்து குடத்துநீரால் உடல் கழுவினாள்.

“நாளைக்கு காலம வெள்ளென போகவேணும். ஆச்சியை பரியாரியார் பார்க்க வாறார்”

“ஏன் ஆச்சிக்கு என்ன நடந்தது? நல்லாய்த் தானே இருந்தவா”.

“ஓமோம் ஆனால் இப்ப கொஞ்சம் மாறாட்டம், நித்திரையில்லை, கோபமும் பிடிவாதமும் கூடிப்போயிற்று. பாவம். தலைமுழுக்க பேன் வேற”.

“பார்த்து உனக்கும் பேன் தொத்தப்போகுது”.

“மாலாவிற்கு ஆச்சி அன்றைக்கு ஏசியது ஞாபத்தில் வந்ததும், சிரித்துக்கொண்டு “ஏன் இப்ப எங்கையாவது பேனை கண்டனியளா” என்று கேட்டாள்.

அவளின் அந்தரங்க  முசுப்பாத்தி புருஷனுக்கு விளங்கவில்லை. எழும்பிப் போய் குடத்துநீரை எடுத்து உடல் கழுவினான். நீரில் இரவு தளும்பியது.

வேம்படிப் பரியாரியார் ஆச்சியைப்பார்த்து கதைத்துவிட்டு சில மருந்து  உருண்டைகளை தந்தார். அப்பாவும் நானும் மாலாவும் அவர் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டோம். மாறாட்டமும் மனப்பிறழ்வும் சரியாகிவிடுமென்று நாங்கள் நம்பினோம். ஆனால் எதுவும் மாறவில்லை.ஆச்சிக்கு பேன்கூடி தலையை ஒட்ட வெட்ட தீர்மானித்தோம். அப்பாவின் துணையோடு மாலா வெட்டினாள். அப்போது ஆச்சி தன்னுடைய உலர்ந்த கன்னங்களில் கண்ணீர் சொரிந்தபடி சொன்னாள்.

“மோளே சின்னக்கிளி  நான் இஞ்சனேக்க  செத்துப்போனால் என்ர சாம்பலை எடுத்து இஞ்ச காடாத்த வேண்டாம். என்ர சொந்த வளவில புதையுங்கோ”

“ஓமண ஓமண, அதுக்கு உன்ர சின்னக்கிளி ஆகிய நான் பொறுப்பு” என்றாள் மாலா.

“சின்னக்கிளி என்னை நீ ஏமாத்தக்கூடாது, இரட்டைக் கேணி அம்மன் மேல சத்தியம் பண்ணு”

“இரட்டைக்கேணி அம்மன் மேல சத்தியம், உங்கட சாம்பல எத்தினை காலம் சென்றாலும் பிலாவளவுக்கு தாழ்ப்பம், காணுமே”ஆச்சியை எழுப்பிக்கொண்டு கிணற்றடிக்கு போய் தோயவாத்தாள். நீர் முழுக்க பேன் நீச்சல்.

ருநாள் நடுச்சாமத்தில் மாலாவின் வீட்டிற்குள்ளிருந்து அலறல் சத்தம் கேட்டது. ஊரே போர்வையோடு அச்சத்துடன் ஓடிவந்து மாலாவின் வீட்டின் முன்னால் கூடிநின்றது. ஆச்சி கொட்டிலுக்கு முன்  பிலாக்கம்பியோடு நடமாடிக் கொண்டிருந்தாள் அப்பா மாலாவின் வீட்டிற்கு போய்வந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டதும் ஆச்சி சாவதைப் போல கனவு கண்டிருக்கிறாள். கனவிலேயே  பயந்துபோய் அழுத்திருக்கிறாள் என்றார். காலையில் மாலா வந்ததும் கனவு குறித்து கேட்கவேண்டுமென நினைத்துக் கொண்டேன். அப்பா தோட்டத்திற்கு போக ஆயத்தமானார். மாலா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். உங்கட கனவும் கத்தலும் தான் இண்டைக்கு தலைப்புச் செய்தி. மாலா சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்து “ஆச்சி செத்துப்போற மாதிரி கனவு.”

அதுக்கு ஏன் இப்பிடி கதறினியள்?

“ஆச்சியோட உடம்பு சவப்பெட்டிக்குள்ள இருக்கு. இரண்டு கால் பெருவிரலும் வேட்டித்துணியால கட்டிக்கிடக்கு. ஆனா ஆச்சியோட அடிவயிற்றில இருந்து ஒரு சின்னஞ்சிறு பிலாச்செடி புழுவைப் போல எழும்பி வருகுது”என்றாள்.

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது போலும். நடுங்கி நின்றேன். ஆச்சி தன்னுடைய கொட்டிலுக்கு முன்னால் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவளின் கையில் பிலாக்கம்பி மின்னிக்கொண்டிருந்தது.

மாலா மதியச்சாப்பாட்டை ஆச்சிக்கு தீத்திவிடுவதற்காக கொட்டிலுக்குள் நுழைந்தாள். ஆச்சி கொஞ்சம் நாட்டம் காட்டினாள். மாலாவிற்கு அந்தக்கொட்டிலுக்குள் ஆயிரம் பிலாச்செடிகள் நிற்பதை போன்ற தோற்ற மயக்கம்.

ஆச்சி ஒருபிடி குழையலை விழுங்கிமுடித்துக் கேட்டாள்.

”மோளே மாலா உன்னுடைய கனவில் செத்துப்போன என்னை எரித்து முடித்து சாம்பலை காடாத்தாமல் வைத்திருக்கிறார்களா? அல்லது கடலில் எறிந்தார்களா?”

மாலா பயந்தடித்து வெளியே ஓடிவந்தாள். அந்தக்கொட்டிலை திரும்பிப்பார்த்தாள். எல்லாமே பிலா இலைகள்.

ஆச்சி கொஞ்சம் பெலத்தாக குரல்கொடுத்தாள். “அடி வேசை இஞ்ச வாடி, நான் என்ன பேயோ, பிசாசோ என்னைக் கண்டு ஓடுறாய்”

மாலா மீண்டும் அந்தக்கொட்டிலுக்கு போகவில்லை. அவளின் கால்களில் சூடு கோடாகி இறங்கியது. அப்படியொரு நாற்றம் மூத்திரமாய கழன்றது. அவள் தன்னுடைய வீட்டிற்கு போய் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்தாள். அவளின் வெள்ளைநிற உள்ளாடையில் ஒரு பசிய பிலா இலை துளிர்த்திருந்தது. அவள் அதனைக்கண்டதும் வேகம்கொண்டு வீறிட்டு அழுதாள். சத்தம் எழவில்லை. காதடைத்தது. கண்கள் இருட்டியது. மயக்கமுற்று விழுந்தாள். நல்லவேளை பிள்ளைகள் அழுதுசத்தமிட சனங்கள் சூழ்ந்தனர். மாலாவிற்குள் சிசுச்சூல் உருவாகியிற்று என்று நாடிபிடித்து உறுதிசெய்தனர். மாலா வேலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டாள். அப்பா அவளுடைய  வீட்டிற்கு சென்று இரண்டுமாத சம்பளத்தொகையை வழங்கி “என்ன உதவி வேணுமெண்டாலும் என்னெட்ட கேள் பிள்ளை” என்று சொல்லிவிட்டு வந்தார்.

ச்சியைப் பார்த்துக் கொள்வதற்காக இன்னொரு வேலையாளை வேறொரு இடத்திலிருந்து அப்பா கூட்டிவந்தார். வந்தவளுக்கும் ஆச்சிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆச்சி அவளை குப்பை வேசை என்று திட்டிக்கொண்டே இருந்தாள். இரவுகளில் ஆச்சி பிலாக்கம்பியோடு நடமாடுவதை விசித்திர புதினமாக விழித்திருந்து பார்த்தாள் புதிய வேலைக்காரி. ஆச்சி தன்னுடைய கையொன்றால் மண்ணையள்ளி அப்படியே வாயில் போட்டு இது என்ர முத்தமில்லை என்ர முத்தமில்லை என்று பினாத்தியதை பார்த்த வேலைக்காரிக்கு எல்லாமே வினோத நாடகம்போல தோன்றிற்று.

பஞ்சமித் திதி நாளொன்றின் அதிகாலையில் விக்கெலெடுத்து ஆச்சி துடியாய்த் துடித்தாள். வேலைக்காரி ஒரு சில்வரில் பால்மா கரைத்துவந்தாள். அப்பா ஆச்சியின் வாயில் கரண்டியால் பாலூட்டினார். பால் உள்ளிறங்கி வெளித்தள்ளியது. அப்பா மீண்டும் மீண்டும் ஊற்றினார். ஒரு சின்ன விக்கலோடு கண்கள் மேலே போய் கூரையில் செருகிக்கிடந்த பிலாக்கம்பியில் குத்திட்டு நின்றது.

90439-768x1024.jpg ஓவியம் : வல்லபாய்

பிலா இலை ஆச்சி செத்துப்போனாள் என்ற செய்தி அதிகாலையில் ஊரிலுள்ள எல்லோருக்கும் தெரிந்தது. பறையொலித்தது. அதே வாங்கில் கிடத்தப்பட்டிருந்த ஆச்சியின் உடலத்தை தூக்கி சவப்பெட்டியில் வைத்தோம். அதிகவிலையும் அலங்காரமும் கொண்ட அந்தச்சவப்பெட்டி பிலாமரத்தினால் செய்யப்பட்டிருந்தால் ஆச்சிக்கு சந்தோசமாயிருக்கும். நிறையப்பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரமுடியாத சூழல். மாலா, ஆச்சியின் காலடியில் அமர்ந்திருந்தாள். அவளின் அடிவயிறு மேடாக உயர்ந்திருந்தது..

ஆச்சியை குளிப்பாட்ட போகையில் மாலா எழுந்து போனாள். வாளியில் நீர்நிரப்பி வந்து நானே குளிப்பாட்டுகிறேன் என்று சொன்னபோது “ வாயும் வயிறுமாக இருக்கிற நீ உதுகள செய்யக்கூடாது ” என்றனர். அப்பாவே வேண்டாமென மறுத்தும் மாலா அடம்பிடித்து அழுதுதீர்த்து குளிப்பாட்டினாள்.

ஆச்சியின் தலையில் பேன் கூட்டம் ஊர்ந்தபடியிருந்தது. புதிய சீலையை உடுத்து ஆண்களைக் கூப்பிட்டு ஆச்சியைத் தூக்கிப்போகுமாறு சொன்னாள்.  கிரிகைகள் முடிந்தது. பஞ்சமியில் செத்த ஆச்சியின் கால்மாட்டில் ஒரு விறாத்தல் பருவக் கோழியையும் மூன்று முட்டைகளையும்  வைத்து பெட்டியை மூடினார். வீட்டின் படலையை பெட்டியின் முன்முனையால் இடித்துக்கொண்டு ஆச்சி ஊர்வலமாய் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அப்பா கொல்லிக் குடத்தை  தூக்கியபடி நடந்துபோனார். மாலாவும் சில பெண்களும் வீட்டைக்கூட்டி நீர் தெளித்து சுத்தப்படுத்தினர்.

ஆச்சி மிளாசி எரிந்தாள்.

பஞ்சமித் திதியில்  செத்துப்போனதால்  உடனடியாக காடாத்த வேண்டுமென  சிலர் அப்பாவிடம் சொல்லினர். அப்பா ஓமென்று தலையசைத்தார்.

அப்படி காடாத்தினால் ஆச்சி ஆத்மா சாந்தியடையாதப்பா என்றேன். ஆச்சியோட ஆசையை நாங்கள் நிறைவேற்ற வேணுமென்று சொன்னேன். அப்பா எனக்கு ஓமென்று தலையசைக்கவில்லை.

ஆச்சி மிளாசி எரிந்தாள். தீயின் அடவுகள் அந்தரத்தில் எழுந்து வான் நோக்கி பாய்ந்தன. ஆச்சி மிளாசி எரிந்தாள்.

ஆச்சியின் சாம்பலை சுடச்சுட ஒரு மண்பானையில் அள்ளிவந்து மிகப் பாதுகாப்பான இடத்தில் யாருக்கும் தெரியாமல் வைத்தேன். காடாத்திவிட்டு அப்பா கடலிலேயே குளித்துவிட்டு வந்திருந்தார். கடலின் இரைச்சல் என் காதுகளுக்கு கேட்டபடி இருந்தது. ஆச்சிதான் சீற்ற அலையாய்  எழுகிறாள். அந்த இரைச்சலில் அவள் அப்பாவை தூசணங்களால் ஏசுவது போலிருந்தது.

மாலாவிற்கு பிறந்த பெண்குழந்தையில் பிலாப்பழ பால்  வாசம் வந்ததாம்.  தாதியொருத்தி பிள்ளையின் கால்களை முத்தமிட்டு சின்னப்பிலா இலை போன்றது  என்றாளாம். அவளுக்கு இப்போது ஐந்து வயசு எங்கள் வீட்டிற்கு வந்தால் கதைத்துக்கொண்டே இருப்பாள். அப்பாவுக்கு செல்லம். ஒருமுறை என்னோடு கதைத்துக் கொண்டிருந்தாள்.

“உங்கட ஆச்சியை ஏன்  எல்லாரும்  பிலா இலை  ஆச்சி என்று சொல்லினம்” கேட்டாள்.

“எங்கட ஆச்சிக்கு பிலா மரமென்றால் பிடிக்கும்,அவாவுக்கு ஆசை அதுதான்” என்றேன்.

மாலாவின் மகள் மந்தகாசத்தோடு என்னைத் தழுவி முத்தமிட்டாள். அப்போதென் தண்டுவடத்தில் ஓடிச் சிலிர்த்தது  பெயரற்ற ஓருணர்வு. பின்னர் அவள் என்  காதினில் ரகசியக்குரலில் “ என்ர இராசா அந்தச் சாம்பலைக் கொண்டு என்ர பிலாவளவுக்குள்ள ஒரு கிடங்கு வெட்டி தாக்கவேணும். அப்பதான் என்ர ஆத்மாவுக்கு களைப்பு அடங்கும். நீ பக்குவமாய் அதே இடத்திலேயே வைச்சிரு மோனே ” – என்று சொன்னாள்.

விசுக்கென யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த ஆச்சியின் சாம்பல் பானை இருக்கும் திக்கு நோக்கி ஓடினேன். சாம்பல் பானையில் முளைத்து நின்று அசைகிறது சின்னஞ்சிறு பிலாக்கன்று.

அக்கணம் காற்றில் குளிர் வீசியது. அது ஆச்சியின் உள்ளங்கைக் குளிர்மையோடு இருந்தது.

***

( அகர முதல்வன், ஈழ எழுத்தாளர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு வெளிவந்துள்ளன)

 

 

http://www.yaavarum.com/archives/6130

Share this post


Link to post
Share on other sites

அகர முதல்வனின் கதையில் மண்வாசனையுடன் பிலாப்பழ வாசமும் சேர்ந்தே மணக்கின்றது.......இயல்பான பேச்சும் வசவுமாய் கதை நகர்வது நன்றாக இருக்கின்றது.....!  👍

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆண் : { தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் } (2) ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே ஓ தனியே தனியே தனியே ஆண் : …………………………….. ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { ஓஹோ பப்பாய ஆஹா பப்பாய } (2) ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { அன்று கண்கள் பார்த்துக்  உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் } (2) { ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் } (2) ஆண் : நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது ஆண் : தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா ஆண் : ……………………. ஆண் : என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் ஆண் : { அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் } (2) குழு : ……………………………… ஆண் : { சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் } (2) மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது ஆண் : தனியே… தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா  
  • இதுதான் ராஜா அரசியல். இதெல்லாம் சகஜம். பெரிதாக எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடாது. அப்படி செய்தால் எங்களுக்குத்தான் பாதிப்பு.
  • சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை.  மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை. பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.
  • உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி   உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி   துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! 2016 - உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!  solomon5050 3 years ago மடிந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி,  தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்தும்,  விவசாய பன்னைகளை ஆங்காங்கே கட்டி எழுப்பவேண்டும் என்ற நம்மாழ்வாரின் கனவினை நனவாக்க துடிப்புடன் செயல்பட்டு கொண்டும், இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் அதிமுக, திமுக -வின் அநாகரீகமான அரசியல் கலாச்சாரத்தினை புரட்டிப் போட்டு புரட்சி செய்ய வந்திருக்கும் சீமான் அவர்களே, உங்களுக்கு உதவ எந்த தமிழ் மகனும் தயங்கமாட்டான்.  சிறுதுளி பெருவெள்ளம் என்பதனை தற்சமயம் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இலட்சோப இலட்சம் இளைஞர்களின் பேரெழுச்சி சொற்ப பத்தே மானாக்களின் எண்ணிக்கையில்தான் ஆரம்பித்ததென்பது அனைவரும் அறிந்ததே.  அதன்படி இப்பொழுது நீங்கள் கேட்கும் பண உதவி சொற்பமாக இருந்தாலும், அனைவரும் மனமுவந்து தரும்பொழுது, நமது இயக்கம் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் செயல்பட உதவும். எங்களுக்கெல்லாம் தன்மானத்தை கற்றுத்தந்த உங்களின்  தலைமை வேண்டும்,  உங்களின் பொதுப் பணி தங்கு தடையில்லாமல் நடைபெற ஏற்கனவே அனுப்பியுள்ளேன் எனது பங்கினை. தயவுசெய்து பெற்றுக்கொள்ளவும். வாழ்க தமிழன்! வளர்க தமிழ்!!        
  • திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் கூட்டமைப்பில் தேர்தலில் நிறுத்தப்பட போகிறார் என்றவுடன் முல்லை மதி எழுதியது. அம்மா உனக்கு சொன்னால் கேளு வேணாம் இந்த வம்பு. காசும் பணமும் தும்பு மானம் ஒன்றே கொம்பு. ஔவை சொன்தை கேளு  நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) ஆனந்தியைக் இழுத்துவந்து அசிங்கப்படுத்தினார் அன்று அடுத்த பெயராய் உன்னையிவர் களங்கப்படுத்துவார் இன்று. குப்பை மேட்டில் வந்து நின்று என்ன தேடுவாய் குண்டுமணியுமில்லை என்ன காணுவாய் சொல்லு ஔவை சொன்தை கேளு  நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) கணவன் காத்த நல்ல பெயரை சீரழிக்க கூடாது. கருத்தில்லா கூட்டத்தில் மறந்து உன் காலை வைக்கக் கூடாது. வாக்கு பெறும் இயந்திரமாய் உன்னை நாட்டுவார். வாசலோ விரட்டியடித்து புத்தியைக் காட்டுவார் ஔவை சொன்தை கேளு  நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) சொன்னால் கேள் தாயே வேணாம்  இந்த நோயே உன்னை வைத்து பிழைப்பு நடத்து ஓட்டமானின் கூடம் உண்மையில்லை இவர்களிடம் தூய்மைவாதம். பதவி ஒன்றே இலட்சியம் பாழ்படுவார் மக்கள் காதில் பூ சுத்துவதே சாத்தியம் ஔவை சொன்தை கேளு  நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) கதிரைக்கா இனத்தை அழிக்க துணிந்த சம்மந்தன் கரிகாலன் கண்டு சொன்னான் இதை கருத்தில் கொள்ளணும். சப்பித் துப்பும் கரும்புத்துண்டு  ஆகப் போகிறாய் நம்பவைச்சு கழுத்தறுகும் நாசாதாரிகள் நான் சொல்வதில் உண்மையுண்டு இவர்கள் வேடதாரிகள். ஔவை சொன்தை கேளு  நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) சேனாதி நித்தம் நூறு பொய் பேசுவார் நீ கேளாதே சத்தியமாய் சுத்துமாத்துதான் பத்தாண்டை பாழ்படுத்திய விட்ட கூட்டம் பயித்தியமா விட்டு வீசு இவர்கள் தோட்டம். மக்கள் கவிஞன் புதுவைதாசன்.