Jump to content

பொட்டம்மான்' வருவாரா?


Recommended Posts

பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும் இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். அவர் மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்!  இந்த நேரத்தில் அவர் வந்துவிடக் கூடாது.இறந்தவராகவே இருக்கட்டும் என்று சிந்திப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கலாம்.  ஏனெனில்  இயக்கத்தின் சொத்துக்கள் இன்னார் இன்னாரிடம் இருக்கின்றன என்ற விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலும் வெளிவருகின்றது. நிச்சியமாக இயக்கத்தின் சொத்துக்கள் பலரிடம் இருக்க வேண்டும்.அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, "அம்மான் வந்தால் கொடுப்பம்".அவர் வந்து கணக்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றொரு புருடா, கதையை அவிழ்ப்பார்கள்.


எதிர்காலத்தில் ஏதாவது தேவைகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தேசியத் தலைவர் அவர்களும், சில பொறுப்பாளர்களநம்பிக்கைக்கு உரியவர்கள் என்றெண்ணி பெருந்தொகைப் பணத்தையும், சொத்துக் களையும் ஒப்படைத்திருக்க வேண்டும்.  அந்தச் சொத்துக்களை இவ்வளவுகாலமும் நீங்கள் வைத்து ஆண்டது போதும், அனுபவித்தது போதும்! தமிழீழ மண்ணில் மாவீரர் குடும்பங்களும்,சிறை மீண்டு வந்த போராளிகளும் அவர்கள் குடும்பங்களும் இவ்வளவு காலமும் அவல வாழ்வையேவாழ்ந்து கொண்டிருந்தார்கள்.கூலி வேலை செய்தாவது காலம் கழித்து வந்தார்கள்.


சொல்லாமல் கொள்ளாமல் வந்த இந்த கொடிய கொரோனா அவர்களின் வாழ்க்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கிவிட்டது. ஒரு நேரக் கஞ்சிக்கே அல்லல்படும் நிலையில் அவர்கள் அன்றாடம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  இந்த நேரத்திலாவது உங்கள் இதயக்கதவுகள்  திறக்கட்டும். நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் அவர்களை நோக்கி உங்கள் கரங்கள் நீளட்டும். இந்த நேரத்திலாவது நீங்கள் உதவிகள் செய்யாவிடின் இனி எப்போ செய்யப் போகின்றீர்கள்?  அள்ளிக் கொடுக்க வேண்டாம்.  கிள்ளியாவது போடுங்கள்! இதுதான் நீங்கள் தேசியத்தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் காட்டும் விசுவாசமாக இருக்கும். நன்றிக்கடனாக இருக்கும்.

தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பொறுத்தவரையில் 'அண்ணை' என்ற வார்த்தை தேசியத் தலைவர் அவர்களையே குறிக்கும். அனைத்துப் போராளிகளும் அவரைப்  பாசத்தோடு 'அண்ணை ' என்றுதான் அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் அவரோடு வாழ்ந்தவர்கள் 'தம்பி' என்று அழைப்பார்கள். இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன் பெரிய சோதி, சின்ன சோதி, தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர்களுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து இயங்கிய காலங்களில் வயதில் குறைந்தவராக இவர் இருந்தமையால் அனைவரும் இவரைத்  'தம்பி' என்றே அழைத்தார்கள். பின்பு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது.


 'கரிகாலன்' என்றும் இவருக்கு இன்னொரு பெயர் உண்டு.அது காரணப் பெயர். வல்வை ஊரிக்காடு நெற்கொழு வைரவர் கோவில் பகுதியில் இவர்கள் வெடிகுண்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை தற்செயலாக அது வெடித்து தலைவரின் காலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காயத்தின் தழும்பு அவரது குதிக்காலில் இருந்தமையால் கரிகாலன் என்றும் அழைக்கப்பட்டார்.சோழ மன்னனின் பெயராக இருந்ததும் இப்பெயர் நிலைத்ததற்கு காரணமாக இருக்கலாம். சோழ மன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையை ஆட்சி புரிந்திருக்கின்றார். அதை நினைவுகூர்ந்தே எமது இயக்கத்தின் புலிக்கொடியையும் தலைவர் அவர்கள் வடிவமைத்தார்.
 

பின்நாட்களில் பாலா அண்ணர் தலைவரை சோழர் என்றும் அழைப்பது வழமை. மணி என்றொரு பெயரும் தலைவருக்கு உண்டு. கிட்டு போன்றவர்கள் தலைவர் தொலைவில் வருகின்றார் என்றால் "டேய் முழியன் வாறான்டா" என்று கூறி மற்றவர்களை உசார்ப்படுத்துவதும் உண்டு.  காந்தக் கண்கள் தலைவருடையது. அவருடைய அந்தக் கண்களை வைத்தே அவர் என்ன மனநிலையில் இருக்கின் றார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் சொல்லிவிடுவார்கள். வாகனங்களில் அவர் செல்லும்போதுகூட ஆசனத்தின் நடுவில் துப்பாக்கியோடு தயார் நிலையில் இருக்கும்போதும் அவரது கண்கள் இரண்டும் முன்புறமும் இரு பக்கங்களிலுமாக அவதானித்துக் கொண்டே இருக்கும். இயக்கத்தின் மூத்த போராளிகளை மற்றையவர்கள் அவர்களின் பெயர்களோடு சேர்த்துப் பால்ராஜ் அண்ணை, பாலா அண்ணை, யோகி அண்ணை, நடேசன் அண்ணை  என்று அழைப்பார்கள். குமரப்பா, ரஞ்சித் அப்பா, ரகுவப்பா என அப்பாவையும் சேர்த்து சிலர் அழைக்கப்பட்டதுண்டு. மாதவன் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், மனோ மாஸ்டர், இந்திரன் மாஸ்டர், விவேகன் மாஸ்டர், அன்ரன் மாஸ்டர் என சிலர் அழைக்கப்பட்டார்கள். செல்லக்கிளி அம்மான், பொன்னம்மான், புலேந்தி அம்மான், கபிலம்மான் வரிசையில் பொட்டு அம்மானும் வந்து சேர்கின்றார்.
 

77 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் திரு.வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் வெற்றிபெற்றபோது அவரது நெற்றியில் தனது விரலை பிளேட்டினால் கீறி இரத்தப் பொட்டு வைத்து தனது உணர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார் பொட்டு அம்மான். பின்பு இவர் இயக்கத்தில் இணைந்த போது இவ்விடயம் தெரியவர இவர் பொட்டு என்று அழைக்கப்பட்டார். காலக்கிரமத்தில் அது பொட்டு அம்மானாக நிலைத்துவிட்டது. இன்று சர்வதேச காவல் துறையினரால் (Interpol, International Criminal Police Organization) தேடப்படும் அளவிற்கு முக்கிய நபராக பொட்டு அம்மான் விளங்குகின்றார்.

சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில்  ஒருவர். புலனாய்வுத்துறை பொறுப்பாளர். யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே தமிழீழ விடுதலையை இலட்சியமாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக விளங்கியுள்ளார். பொட்டு அம்மான் குடும்பத்திற்குச் சொந்தமான நாயன்மார்கட்டிலுள்ள பழைய வீடொன்றில் தேசியத்தலைவர், சீலன், புலேந்தி, ரகுவப்பா, நான் உட்பட சிலர் 1981 மே மாத காலப்பகுதியில் தலைமறைவாக வாழ்ந்திருக்கின்றோம். தங்கத்துரை, குட்டிமணி  ஆகியோரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து  நாங்கள் அங்கு வாழ்ந்தோம். அந்த வீட்டை ஒழுங்கு பண்ணிக் கொடுத்ததோடு அக்காலப் பகுதியில் இயக்கத்தோடு இணைந்து எம்மோடு தங்கியிருந்தார் பசீர் காக்கா.


82 காலப்பகுதியிலும் அந்த வீட்டிலேயே எம்மவர்கள் தங்கியிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.அப்போது ஒரு நாள் தங்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறிய பொட்டு அம்மானுக்கு அந்தப் பழைய வீட்டின் ஜன்னலூடாக ஒரு காட்சி தென்பட்டுள்ளது.அங்கு அறையில் இருந்தவர்கள் துப்பாக்கிகளை கழற்றி சுத்தம் செய்யும் காட்சி தென்பட்டுள்ளது. பல நாட்களாகவே தங்கள் பழைய வீட்டில் தங்கியிருப்பவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? என்ற வினாக்கள் அவர் மனதில் இருந்து வந்துள்ளது. அந்தக் காலப்பகுதியில் பொட்டு அம்மான் அருகாமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கராத்தே வகுப்புக்குச் சென்று கராத்தே பயின்று வந்துள்ளார். அந்த வகுப்புக்கு அந்த இளைஞர்களில் சிலரும் வந்து கராத்தே பயின்று வந்துள்ளனர்.அவர்களோடு சிறிது சிறிதாக அறிமுகமாகிக் கொண்டார்  பொட்டு அம்மான்.பின் ஒரு நாள் இவர் அந்த வீட்டுக்குச் சென்றபோது அங்கு சங்கர் (சத்தியநாதன்) இருந்துள்ளார். அம்மான் சங்கரிடம் தானும் அவர்களது அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து அவர்களோடு இணைந்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது செயற்பாடுகளில் பங்கேற்று வந்த அம்மான் விசுவமடுக் காட்டில் நடைபெற்ற புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளார்.

83 ஆடிக் கலவரத்தைத் தொடர்ந்து தலைவர் அவர்களோடு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்களில் ஒருவரான பொட்டு அம்மான் நவம்பரில் ஆரம்பமான இந்தியா வழங்கிய முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுத் திரும்பினார்.  லெப்டினன்ட் கேணல் குமரப்பா  மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகச்  செயற்பட்ட காலத்தில் அவருக்கு உற்ற துணைவனாக இருந்து செயற்பட்டவர் பொட்டு அம்மான்.

1987 செப்டெம்பர் 26 திலீபனின் தியாக மரணம், ஒக்டோபர் 5இல் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் தியாகச் சாவுகளைத் தொடர்ந்து ஒக்டோபர் இந்திய விமானங்களின் குண்டுவீச்சுக்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக ஒக்டோபர் 12ஆம் நாளன்று, யாழ் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் தேசியத்தலைவர் வசிப்பதாக இலங்கை உளவுப்பிரிவு வழங்கிய தகவலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைது செய்யும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில், நள்ளிரவு வேளையில் சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்திகள் சூட்டாதரவு வழங்க இந்திய இராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவு ஒன்று
உலங்குவானூர்தி மூலம் தரையிறக்கப் பட்டது.அங்கு விடுதலைப்புலி வீரர்கள் மேற்கொண்ட உக்கிரமான தாக்குதலில் தரையிறக்கப்பட்ட 30 சீக்கியர்களின் 29 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிரோடு கைது செய்யப்பட்டார்.  இந்த தாக்குதலின்போது பொட்டு அம்மானுக்கு வயிற்றில் குண்டு பாய்ந்ததோடு கை ஒன்றிலும் காயம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழிமறிப்புச் சமர்களில் மேஜர் ஜேம்ஸ் உட்பட சிலர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப் படைகள் வடமராட்சிப் பகுதிக்குள் முன்னேறும் முயற்சியை மேற்கொண்டன. முன்னேறி வரும் அவர்களின் முதல் இலக்கு மருத்துவ மனைகளாக இருக்கும் என்பதனால் பொட்டு அம்மானும் சில போராளிகளும் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு வல்வையில் வாழ்ந்து கொண்டிருந்த கிட்டம்மாவின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டனர்.
 

கிட்டம்மா அவர்கள் காயப்பட்டவர்களை குளிப்பாட்டி சிகிச்சை செய்து
பராமரித்து வந்தார். ஒரு நாள் பொட்டு அம்மானை கிட்டம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்த வேளையில், அந்த வீட்டை இந்தியப்படை சுற்றி வளைத்துக் கொண்டது. வீட்டினுள் நுழைந்த படையினரில் சிலர் கிணற்றடிப் பக்கம் வருவதை அவதானித்த கிட்டம்மா  பலத்த குரலில் "ஆரடா பெண்கள் குளிக்கிற இடத்துக்கு வாறது? என்று சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியப்படைகள் அங்கிருந்து அகன்று சென்றன. தொடர்ந்து பொட்டு அம்மானை அங்கு வைத்து சிகிச்சை வழங்குவது ஆபத்தானது, எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதனால் அவர் தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டு இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பூரண குணமடைந்தபின் நாடு திரும்பினார்.

 நாடு திரும்பிய அவர் 89 கால கட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு  பணியாற்றிக் கொண்டிருந்தார்.89 இன் இறுதியில் அப்பொறுப்பில் இருந்து பொட்டம்மான் நீக்கப்பட்டு பானு அவர்கள் யாழ் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பொட்டு அம்மான் தேசியத்தலைவர் அவர்களால் பாலமோட்டைக் காட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தார். தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலனாய்வுக்கான திறமையையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி செயற்பட்டு வந்த பொட்டு அம்மான் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களால் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். லெப்டினன்ட் கேணல் சூட்டி, லெப்டினன்ட் கேணல் மாதகல் ராஜன், மாதவன் மாஸ்டர், கபிலம்மான் ஆகியோர்களைக் கொடுத்த தலைவர் அவர்கள் புலனாய்வுத் துறையைக் கட்டியெழுப்ப வேண்டிய மாபெரும் பணியை பொட்டு அம்மானிடம் ஒப்படைத்தார் தேசியத்தலைவர்.

1990 பெப்ரவரி மாத இறுதி நாட்களில் தேசியத்தலைவரின் அழைப்பின் பேரில் மணலாற்றுக் காட்டுக்கு வந்து சில நாட்கள் தங்கி தலைவரோடு வாழ்ந்திருந்த திரு.கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திற்கு வருவதற்காக புறப்பட்ட வேளையில் தலைவர் அவர்கள் என்னை அழைத்தார். " அண்ணா ராமகிருஷ்ணன் அண்ணை தமிழ்நாட்டுக்கும் திரும்பிறார். நீங்களும் போங்கோ. ஒரு மாதம் லீவு தாறன்.அங்கை போய் அக்கா பிள்ளைகளோடை தங்கி இருந்திட்டு திரும்பி வந்திடுங்கோ.அதுக்குப் பிறகு எங்களுக்கு நிறைய வேலையள் இருக்கு" என்று கூறியவர் முன்பே தயார் பண்ணி வைத்திருந்த ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்து "பிள்ளையளுக்கு யாழ்ப்பாணத்தில ஏதாவது வாங்கிக்கொண்டு போங்கோ" என்று கூறி என்னை அனுப்பி வைத்தார். அதன்படி கோவை ராமகிருஷ்ணன்
அவர்களோடு புறப்பட்டு வந்த நான் சென்னையில் மனைவி, பிள்ளைகளோடு தங்கிவிட்டு மீண்டும் ஈழத்திற்குச் சென்றேன்.

நான் செல்லும்போது சிறுவயதில் இருந்து தலைவர் அவர்களின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த எங்கள் மூத்த மகளையும் இயக்கத்தில் இணைப்பதற்காக கூட்டிச் சென்றேன். அப்போது அவளுக்கு வயது பதினாறு. நான் 90 மார்ச் பிற்பகுதியில் ஈழத்திற்குச் சென்றபோது தலைவர் அவர்கள் நன்கு பயிற்சிகள் பெற்ற ஆயிரக்கணக்கான போராளிகளோடு யாழ் மண்ணில் பாதம் பதித்திருந்தார். நான் சென்றபோது தலைவர் அவர்கள் சாவகச்சேரிப் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு சென்று அவரைச் சந்தித்து மகளை அவரிடம் கையளித்தேன். மகளை சுகம் விசாரித்த பின், "அண்ணா இவவைக் கொண்டு போய் காட்டுக்குள்ளை செஞ்சோலை முகாமிலை ஜனனியிடம் ஒப்படைச்சிட்டு வாங்கோ" என்று கூறி எங்களை அனுப்பி வைத்தார். நான் அவ்விதம் கானகம் சென்று ஜனனியிடம் மகளை ஒப்படைத்துவிட்டுத் திரும்பினேன். தலைவர் அவர்களின் பணிமனை அப்போது சங்கத்தானை முருகன் கோவிலுக்குச் சமீபமாக செயற்படத் தொடங்கியிருந்தது.   அங்கு சென்ற நான் எனக்கான அலுவலகப் பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டேன். தலைவர் அவர்களின் தட்டச்சு வேலைகள் உட்பட அலுவலகச் செயலராகவும் நான் என் பணிகளைச் செய்ய ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் முதன் முதலில் பொட்டு அம்மானுக்கும் எனக்குமான நெருங்கிய பழக்கம் ஆரம்பமானது. அங்கு தலைவர் அவர்களைச் சந்திக்க வரும் தளபதிகள் முதலில் என்னிடம் கேட்பது, "அண்ணா நாடு குழம்பியிருக்கோ... என்ன மாதிரி?" என்றுதான். எனது பதிலை அறிந்து அதற்கேற்ற விதமாக ஒருவித தயார்படுத்தலுடன் அவர்கள் தலைவரின் அறைக்குள் செல்வார்கள்.

தேனிசை செல்லப்பா அவர்கள் இயக்கத்தின் அழைப்பின் பேரில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக  ஈழம் வந்திருந்த சமயத்தில் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்த கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்கள் தலைவரிடம் என்னை தனக்கு உதவியாக தந்துதவுமாறு கேட்டுக் கொண்டார். செல்லப்பா அண்ணர் அவர்கள் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகப் போகின்ற சூழ்நிலையில் சாவகச்சேரிப் பணிமனைக்கு தலைவர் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தார். செல்லப்பா அண்ணர் அவர்களுக்கும், அவரது குழுவினர்க்கும் விருந்துபசாரம் வழங்கப்பட்டதோடு தலைவர் அவர்களால் அவர்கள் அனைவர்க்கும் கௌரவம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு அவர்களை அழைத்துச் சென்று வல்வை ரேவடிக் கடற்கரையில் படகேற்றிவிட்டுத் திரும்பினோம்.

யுத்தம் ஆரம்பமாகிய காலகட்டத்தில் கலை, பண்பாட்டுக் கழகத்தின் துணைப் பொறுப்பாளராக பணியாற்றும்படி தலைவர் அவர்கள் என்னை அனுப்பி வைத்தார். தலைவரின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்த பொட்டம்மானுக்கும் எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டே இருந்தது. கலைபண்பாட்டுக் கழகத்திற்கு வருகை தரும் பொட்டு அம்மான் அவர்கள் என்னோடும் உரையாடிவிட்டே செல்வார். புலனாய்வுத்துறையில் மட்டுமன்றி பன்முக ஆற்றல்களைக் கொண்டிருந்த பொட்டு அம்மான் அவர்கள் சிறந்த கலாரசிகரும்கூட. அக்காலகட்டத்தில் புலிகளின் குரல் வானொலிக்கென மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் எழுதி
என்னால் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து 53 வாரங்கள் ஒலிபரப்பான 'இலங்கைமண்' நாடகம் பொட்டு அம்மானின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. தொடர்ந்து வாராவாரம் அதனைச் செவிமடுத்து ரசித்து வந்த பொட்டு அம்மான் அவர்கள் அந்நாடகம் பற்றி அதன் சிறப்புக்கள் பற்றி கலைஞர்களின் திறமை பற்றி என்னைச் சந்திக்கும் வேளைகளில் எல்லாம் எம்மைப் பாராட்டத் தவறுவதில்லை. 'இலங்கை மண்'  நாடகம் வெற்றிகரமாக ஒலிபரப்புக் செய்யப்பட்டு முடிந்தபின் அதில் பங்கேற்று நடித்த கலைஞர்கள் உட்பட திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கும் சிறப்புச் செய்ய வேண்டும் என நான் தீர்மானித்தேன். அந்நாடகத்தை கேட்டு ரசித்து வந்த சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதனை சிறப்பாக நடத்தும்படியும் அதற்கான முழுச் செலவையும் தான் பொறுப்பெடுக்க முன்வந்தார். அதற்கான முன்னெடுப்புக்களை கலை, பண்பாட்டுக் கழகத்தினராகிய நாம் முன்னெடுத்தோம். நல்லூர்  இளங்கலைஞர்மன்ற கலாமண்டபத்தில் அதனை நடாத்துவதென முடிவு செய்தோம். அவ்விழாவின் சிறப்புப் பேச்சாளர்களாக திரு.பொன். கணேசமூர்த்தி மற்றும் இலங்கை கம்பன் கழகத்தின் நிறுவனர் கம்பவாருதி இ.ஜெயராஜ் ஆகியோர் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தனர்.அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பொட்டு அம்மான் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பிய நான் அதற்கான அனுமதி கேட்டு அவருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.


அண்ணா, வணக்கம். 'இலங்கை மண்'  நாடக கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் என்னை சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டிருந்தீர்கள். நன்றி. அந்த நாடகத்தை தொடர்ந்து நான் கேட்டு வந்துள்ளேன். அதன் சிறப்புக்கள் பற்றி உங்களை சந்திக்கும் வேளைகளில் தெரிவித்தும் உள்ளேன். முதலில் அதில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவர்க்கும் எனது பாராட்டுக்கள். நான் செய்யும் பணியைப் பொறுத்து அது போன்ற நிகழ்வில் மேடையில் கலந்து கொள்வது சிறப்புடையது அல்ல. அதனால் அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். ஆயினும் அந்த நிகழ்வில் சாதாரண ஒரு பார்வை மாற்றாக நான் கலந்து கொள்வேன் என அறியத் தருகின்றேன் நன்றி. என எனக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடன் நின்றுவிடவில்லை அவர்.விழாவின்போது  நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பே தனது பிரிவு உறுப்பினர்களோடு வந்து சேர்ந்த அவர், நிகழ்வுகள் ஆரம்பமாகி முடியும்வரை பார்வை யாளர்கள் போன்று ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்து பார்த்துவிட்டே சென்றார். அங்கிருந்து செல்வதற்கு முன் வானொலி நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரையும் பாராட்டிவிட்டே சென்றார். நிகழ்வு சிறப்புற நடந்தேறிய மகிழ்ச்சியை விட பொட்டு அம்மான் வருகை தந்து இறுதிவரை உட்கார்ந்து இருந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்ததோடு கலைஞர்கள் எம்மைப் பாராட்டிச் சென்றமை எமக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.

94 ஏப்ரலில் எனது வானொலி  நாடகம் 'மண்ணுக்காக'  கதையை வீடியோ படமாக தயாரித்திருந்தோம். அதனையும் பார்த்துவிட்டு எமக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிறகு ஒரு நாள் பொட்டு அம்மானின் பிரிவைச் சேர்ந்த ஒரு தம்பி என்னைத் தேடி வந்தார்.  "அம்மான் உங்களிடம் சொல்லி புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு பட்டதாக ஒரு குறும்படம் செய்யச் சொல்லி இருக்கின்றார்" என்றார். "கதைக்கரு எப்படி அமைய வேண்டும்?" என அவரிடம் வினவினேன். "புலனாய்வுத்துறையில் இரகசியம் காத்தல் முக்கியமானது.அதை அடிப்படை யாக வைத்துச் செய்யுங்கள்" என்று கூறி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.  உடனடியாக அதற்கான திரைக்கதைப் பிரதியைத் தயார் செய்து அம்மானுக்கு அனுப்பினேன். அதனைப்  படமாக்கலாம் என சம்மதம் தெரிவித்தார். புலனாய்வுத் துறையின் வெளியக புலனாய்வு நடவடிக்கைகளுக்காக கொழும்பு போன்ற ஈழத்திற்கு வெளியே இரகசிய நடவடிக்கைகளுக்குப் செல்லும் ஒரு போராளியை மையமாக வைத்து கதையை அமைத்திருந்தேன். அதனை இயக்கும் பொறுப்பை எனது நண்பரும் மாமனிதருமான பொன்.கணேசமூர்த்தி அவர்களிடமே ஒப்படைத்திருந்தேன். அதில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக நான் நடித்திருந்தேன்.

வெளியக புலனாய்வு வேலைகளுக்காக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொறுப்பாளர் திட்டங்களை விளக்கி எந்தக் கட்டத்திலும் இரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் மிகப்பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்பதையும் எடுத்துச் சொல்லிய பின் ஒரு போராளி முக்கிய நடவடிக்கை ஒன்றிற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கு அந்தப் போராளி முன்பு இயக்கத்தில் இருந்து விலத்திச்சென்ற இவரின் நண்பர் ஒருவரைச் சந்திக்கின்றார். அவர்கள் இருவரும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் சாப்பிடு கின்றனர். நண்பன் போராளியை தன்னோடு வருமாறு அழைக்க மறுக்கும் போராளி தான் வந்த காரணத்தை வெளிப்படையாக, வெகுளித்தனமாக  நண்பனிடம் கூறிவிடுகின்றான். அவர்களுக்குப் பின்புற மேசையில் அமர்ந்திருந்த சிங்களவன் ஒருவன் கண்காணித்துள்ளான். சாப்பிட்டு முடிந்து நண்பர்கள் இருவரும் வெளியேறும்போது வாசலில் நின்றிருந்த இருவர் இவர்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளி பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர். இரகசிய இடம் ஒன்றில் இவர்களுக்கு நடைபெற்ற சித்திரவதைகளின்போது போராளி சயனைட் குப்பியைக் கடித்து மரணம் அடைகின்றான்.

'படிப்பினை' என்ற பெயரில் ஏழு நிமிடங்கள் கொண்ட குறும்படமாக தயாரித்திருந்தேன். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்திலும், புலனாய்வுப் பிரிவிலும் வேலை செய்த கிருபா படப்பிடிப்பு, படத்தொகுப்பு என்பனவற்றை சிறப்பாகச் செய்திருந்தார்.  ஒரு வார காலத்திற்குள் பொட்டு அம்மானின் 'படிப்பினை' குறும்படப் பிரதி கையளிக்கப்பட்டது. அந்த குறும்படம் பொட்டு அம்மான் அவர்களுக்கு நன்கு பிடித்திருந்தது. எங்களை அழைத்துப் பாராட்டுவதற்கு அவர் மறக்கவில்லை.அது மாத்திரமன்றி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் அது தொடர்ந்து காண்பிக்கப்பட்டது வந்தது.

இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின் மல்லாவியில் வசித்து வந்தோம். 2001 ஆம் ஆண்டு நான் கொழும்புக்குச் செல்வதற்காக போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவுக்கு விண்ணப்பம் கொடுத்திருந் தேன். சில நாட்களில் புலனாய்வுத் துறையின் வெளியகப் புலனாய்வு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த துரோணர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்.  "இப்ப நிலைமை சரியில்லை. தேவர் அண்ணாவை அவசரப்பட வேண்டாம். நிலைமை சரியானதும் அனுப்பலாம் என அண்ணை அறிவிச்சவர் எண்டு அம்மான் சொல்லிட்டு வரச்சொன்னார்" என்றார். துரோணர். அப்புறம் 2002ஆம் ஆண்டளவில் துரோணரே மீண்டும் வீட்டுக்கு வந்து பயணத்திற்கான அனுமதிப்பத்திரத்தை  தந்து சென்றார்.

கொழும்பில் ஒரு மகளும் மனைவியும் இருந்தார்கள். நானும் ஒரு மகளும் மகனும் மல்லாவியில் வசித்து வந்தோம். நான் கொழும்புக்கும் வன்னிக்குமாக போய் வந்து கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் துரோணரே வீட்டுக்கு வந்தார்." அம்மான் உங்களட்டை ஒரு பொறுப்பைக் கொடுத்து செய்ய முடியுமோ என்று கேட்கச் சொன்னவர்" என்றார். நான் எதுவித தயக்கமும் இன்றி " அம்மானுக்கோ,  புலனாய்வுத்துறைக்கோ எதையும், எப்பவும் செய்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன்" என்றேன். தங்களது போராளிகள் சிலருக்கு சிங்களம் கற்பிக்க வேண்டும் என்றார் , நான் "எப்போ ஆரம்பிக்கலாம்? "என்றேன். "உடனடியாக செய்தால் நல்லம்" என்றார் அவர்.  நான் சிலரது எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது மல்லாவி, பாலிநகர், பாண்டியன் குளம் போன்ற பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களில் சிங்களம் கற்பித்த அனுபவமும், புத்தகங்களும் கைவசம் இருந்த காரணத்தினால் அடுத்த நாளே ஆரம்பிக்கலாம் என்று கூறி துரோணரை அனுப்பி வைத்தேன்.  

மறுநாள் காலையிலேயே துரோணரின் முகாமில் போராளி களுக்கான சிங்கள வகுப்பு ஆரம்பமாகியது. எனது மாணவர்கள் என்னைப் பார்க்க முடியும். எனக்கு அவர்களது முகங்களைப் பார்க்க முடியாது. நான் மட்டுமல்ல, போராளிகளும் மற்றைய போராளிகளின் முகங்களைப் பார்க்க முடியாது. ஒரு குடிலில் இருவர் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மட்டும் குடிலின் உள்ளே ஒருவரை ஒருவர் பார்க்க முடியும்.குடிலை விட்டு வெளியே வரும்போது அவர்கள் முகத்திரையை அணிந்தபடியே வருவார்கள். வெளியே புலனாய்வுப் பணிகளுக்காக அவர்கள் அனுப்பப்படுவதன் காரணமாகவே அந்த நடவடிக்கை. கொழும்பு போன்ற இடங்களில் ஒருவர் கைதாகும் சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் காரணமாக மற்றையவர்களைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்தற்காகவே அந்த ஏற்பாடு.

சில மாதங்கள் அந்த வகுப்பு நடைபெற்றது.அந்த வகுப்பு நிறைவடைந்த பின் ஒரு நாள் வீட்டுக்கு வந்த துரோணர் அவர்கள் ஒரு தொகைப் பணத்தை என்னிடம் தருவதற்கு முயற்சி செய்தார். " இல்லைத் தம்பி, எனக்கு இயக்க கொடுப்பனவு மாதாமாதம் தமிழீழ வைப்பகத்தின் மூலம் வந்து கொண்டிருக்கு வேண்டாம்" என்று கூறி வாங்க மறுத்தேன்.  "இல்லையண்ணா, அம்மான் இதை கட்டாயம் உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னவர்" என்று கூறி என்னிடம் அந்தப் பணத்தை தந்துவிட்டுச் சென்றார்.

2004ஆம் ஆண்டளவில் சிறிலங்கா கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தேசிய நாடக சபையில்ஒரு செயற்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின் வன்னிக்கு சென்று வந்து கொண்டுதான் இருந்தேன்.2006 அளவில் வவுனியாவில் ஒட்டுக் குழுக்களின் தொல்லைகள் இருப்பதனால் வன்னிக்கு வரவேண்டாம் என் எனக்கு அறிவித்தல் வந்தது.அதன்பிறகு நான் வன்னிக்கு செல்லவில்லை. இயக்கத்தில் இணைந்த காலம்தொட்டு இறுதி நாட்கள் வரை தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக அவரின் பாதுகாவலனாகவே பொட்டு அம்மான் வாழ்ந்து வந்தார்.

நாம் அனைவரும் அம்மான் வருவாரா என்ற ஏக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றோம். தேசியத்தலைவர் அவர்களின் உடல் என ஒரு உடலை சிறிலங்கா அரசு காட்டியது.அது அவரது உடல்தானா? என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு.தளபதிகள் பலரது உடலைக் காட்டிய சிங்கள அரசு பொட்டம்மானின் உடலைக் காட்டவே இல்லை. அது மட்டுமன்றி காலத்திற்கு காலம்பொட்டு அம்மான் ஹாங்காங்கில் இருக்கிறார்....  இத்தாலியில் இருக்கிறார், எரித்திரியாவில் இருக்கிறார் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

தமிழகத்திலிருந்து தேவர் அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.