Jump to content

வீழ்ச்சியடைந்த பிரான்ஸ் – உலகப்போர் 2 - பகுதி 7


Recommended Posts

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegஜேர்மனியிடம் பிரான்ஸ் வீழ்ச்சியடைந்த நிகழ்வு ஐரோப்பாவின் அன்று அதிசயமாகவே பார்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து இத்தாலி வரை 750 கிலோமீற்றர் நீளமான பலமான பங்கர்களுடன் அமைந்த ‘மகினோட் லைன்’  என்ற பாதுகாப்பு வேலியை அமைந்திருந்தது.  பெல்ஜிய எல்லைக்கு சமீபமாக உள்ள இயற்கை பாதுகாப்பு அரண் என்று பிரான்ஸ் கருதிய ஆர்டேனெஸ் (Ardennes)காடுகளினூடாக மிக இரகசியமாக இடம்பெற்ற ஜேர்மனியின் பாரிய படைநகர்வை பிரான்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிக கடினமான நில அமைப்பை கொண்ட ஆர்டேனெஸ் காடுகளூடாக கனரக வாகனங்களுடன் பல லட்சம் வீரர்கள் நகர்ந்தது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது. பிரெஞ்சு விமானப்படையின் கண்ணில் பட்டிருந்தால் முழு நடவடிக்கைகளுமே ஜேர்மனிக்கு ஒரு பேரழிவாக அமைந்திருக்கும். ஒரு இருண்ட ஆபத்தான காடு வழியாக இரகசியமாக தனது டாங்கி படைப்பிரிவுகளை நகர்த்திய ஜேர்மனிய படைகள் பிரான்ஸ் எல்லைக்குள் புகுந்தது மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் பிரான்ஸ் படைகள் இரண்டையும் டுன்கிர்க்கில் முற்றுகையிடும் அளவுக்கு ஆற்றல் பெற்றன.

 

பிரிட்டன், பிரான்ஸ் இரண்டும் குறுக்கிடுவதற்கு முன்னால் சிறிய மீன்களைப் பிடித்தாகிவிட்டது. தேவையான மட்டும் எல்லைகளைப் பலப்படுத்தியாகி விட்டது. அடுத்து, பெரிய மீன் பிரான்ஸ். கடைசியாக சோவியத்யூனியன். போதும் போதும் அது போதும். புனித ரத்தம் கொண்ட என் ஜேர்மனி மக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி வாழ்வார்கள். புதிய சாம்ராஜ்ஜியத்தை நான் உருவாக்குவேன். உலகின் தலைமைப்பீடமாக ஜேர்மனி மாறும். தலைவனாக நான்.

ஒட்டுமொத்தமான பிரான்ஸும் கூட ஹிட்லருக்கு தேவைப்படவில்லை. வடக்கு பிரான்ஸ் எல்லையில் உள்ள நகரங்களை கூடுமான வரை முதலில் கைப்பற்றவேண்டும். நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. நேரம் விரயமானால் தளபாடங்களும் அதிகம் விரயமாகும். முடிந்தவரை சீக்கிரம் முடித்துவிடுவது தான் உசிதமானது. போர் ஒரு பக்கம் நடைபெறும் போது  ஆயுத உற்பத்தி அதற்கேற்றாற்போல் பெருகிக்கொண்டிருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல் தொழிற்சாலைகள்  இயங்கவேண்டும். இரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் நடையின்றிக் கிடைக்கவேண்டும். இது ஒரு வலைப்பின்னல். எச்சரிக்கையுடன் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கவேண்டும்.

large.1726676593_HitlerinParis.jpg.5097e073ff3e990bccccc839fc2f15b0.jpgபிரான்ஸை நெருங்குவதற்கு முன்னால் மேலும் இரண்டு குட்டி மீன்களை விழுங்க வேண்டியிருந்தது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து. முன்னதாக இரு நாட்டு பிரதிநிதிகளை அழைத்து பேசினார் ரிப்பன்ராப். பிரிட்டனும் பிரான்ஸும் உங்கள் நாடுகளைக் கைப்பற்றுவதற்காக படைகளைத் தயார் செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் உங்களை அழிக்காமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் உங்களை அரவணைக்கவேண்டும். கவலை வேண்டாம். ஹிட்லர் உங்களை காப்பாற்ற முடிவு செய்து விட்டார். எந்நேரமும் ஜேர்மனி உள்ளே நழையும். தயாராக இருக்கவும்.

கிட்டத்தட்ட இதே சமயம் ஃபிரெஞ்சு  ராணுவத்தின் சுப்பீரீம் கமாண்டர் மவுரிஸ் குஸ்தாவ் கேம்லின் (Maurice Gustave Gamelin) தன் அரசாங்கத்தை எச்சரித்தார். கேம்லின் பிரான்ஸின் புகழ்பெற்ற ஜெனரல். சிந்தனையாளர், அறிவுஜீவி என்று அடையாளம் காணப்பட்டவர். பிரான்ஸ் மட்டுமன்றி, ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டவர், இவர் மீது  ஜேர்மனிக்கு மதிப்புண்டு. முதல் உலகப்போரில் பணியாற்றியிருக்கிறார். இவர் தலைமையேற்கும் படை தோற்காது என்பது நம்பிக்கை.

கேம்லினின் எச்சரிக்கை இது தான். ஹிட்லரை நாம் உடனடியாக எதிர்கொள்ளவேண்டும். அவரை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். சிறிய நாடுகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிக்கொண்டிருக்கிறார். நிச்சயம் அடுத்த குறி பிரான்ஸ். அவர்களுக்கு முன்னால் நாம் முந்திக் கொண்டு  தாக்கினால் ஜேர்மனியை நாம் வீழ்த்தமுடியும். ஆனால், பிரான்ஸ் இந்த எச்சரிக்கையை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அப்படியொன்றும் ஆகிவிடாது. பார்த்துக்கொள்ளலாம். அநாவசிய பதற்றம் வேண்டாம்.

பிரான்ஸ், மகினோட் லைனை (Maginot Line) தனது முக்கிய பாதுகாப்பு அரணாக கருதிவந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. கிட்டத்தட்ட பிரான்ஸின் எல்லைப்பகுதி முழுவதையும் இந்த லைன் காத்தது.  பிரான்ஸ் மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பேர்க் என்று படர்ந்திருந்தது மகினோட் லைன். பிரான்ஸுத் தொடவேண்டுமானால் இந்த கோட்டைத் தாண்ட வேண்டும். அது சாத்தியமேயில்லை.

நம்மைப்பற்றி கவலைப்படவேண்டாம். நெதர்லாந்து, பெல்ஜியம் எல்லைகளைப் பலப்படுத்தினால் போதும் என்று நினைத்தது பிரான்ஸ். முதல் உலகப்போரில் நடைபெற்றது எந்நிலையிலையிலும் தாக்கப்படக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தது. ஆகவே பிரிட்டனும் பிரான்ஸும் நெதர்லாந்தையும் பெல்ஜியத்தையும் பலப்படுத்த ஆரம்பித்தன. ஒருவேளை பெல்ஜியத்தை ஜேர்மனி கைப்பற்றி கொண்டாலும் மகினோட் லைனிலேயே  அவர்களை எதிர்கொண்டு அழித்து விடலாம். அந்தக் கோட்டைத் தாண்டி யார் காலடி எடுத்து வைத்தாலும் அழிவு நிச்சயம். ஒன்று ஜேர்மனி கோட்டை நெருங்கவிடாமல் ஓடவைக்க வேண்டும். அல்லது சரணடையவைக்கவேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே தீரும். தீரவேண்டும்.  ஜேர்மனியின் அடுத்த அசைவுக்காக நேசப்படைகள் காத்திருந்தன. இதுவே ஜேர்மனியின் கடைசி அசைவாக இருக்கவேண்டும். ஹிட்லர் இதோ உனது சகாப்தம் முடியப்போகிறது.

நேசப்படைகளின் இந்த அசாத்திய நம்பிக்கைக்கு இன்னொரு காரணமும் இருந்தது. இயற்கை அவர்களுக்கு சாதகமாக இருந்தது தான். ஆன்ரீனெஸ் பகுதி (Ardennes region)  பிரான்ஸின் இயற்கை அரணாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதி இது. இதன் வழியாக நுழைவது மிக மிக சவாலான காரியம். மீறி கடக்க முயற்சித்தாலும் திசைமாறி சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். சிறிய படையை காட்டின் இந்தப்பக்கம் நிறுத்தி வைத்தாலே போதுமானது. காட்டில் இருந்து தப்பிவரும் சொற்ப ஜேர்மானியர்களை அப்படியே சுற்றிவளைத்து அழித்து விடலாம்.

மே 9, 1940 இருட்டத்தொடங்கியிருந்த நேரம். ஜேர்மனி லக்ஸம்பேர்க்கை தாக்கிக் கைப்பற்றியது. அதே இரவில் பெல்ஜியம், நெதர்லாந்து இரண்டையும் தாக்க ஆரம்பித்தது. ஜேர்மனியின் Luftwaffe போர்விமானங்களை டச்சு Militaire Luchvaartafdeling (ML)  விமானங்கள் எதிர் கொண்டன. மொத்தம் 144 எம். எல் வகை விமானங்கள் இருந்ததால் நம்பிக்கையுடன் ஜேர்மன் விமானங்களோடு மோத ஆரம்பித்தது டச்சுப்படை. ஆனால் சீறிப்பாயும் ஜேர்மன் விமானங்களை எதிர்கொள்ள முடியவில்லை. பின்வாங்க ஆரம்பித்தார்கள். பயமும் தயக்கமும் ஒன்று சேர அழுத்தியது. ஜேர்மனியின் ஆகாயத்திறனை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். என்றாலும் முதல் முறையாக நேரில் தரிசிக்கிறார்கள். ஒவ்வொரு எம். எல்  விமானமும் முழுவதும் பாதியும் எரிந்தபடியே தரையை தொட்டபோது  தோல்வி பயம் அப்பட்டமாக  தெரிந்தது. ஒரே நாளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட எம். எல் விமானங்கள் நொறுக்கப்பட்டன.

ரோட்டர்டாம் செல்லும் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை பாலங்களையும் ஜேர்மனி ஒவ்வொன்றாக கைப்பற்றிக்கொண்டது. மே 13ம் திகதி, ஃபிரெஞ்சுப்படைளை எதிர்கொண்டு, வீழ்த்தியபிறகு ரொட்டர்டாம் கைப்பற்றப்பட்டது. நகரம் முழுவதும் அழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் கைப்பற்றிவிடுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார் ஹிட்லர்.  போர் விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்து  ரொட்டர்டாம் முழுவதும் குண்டுகளை வீசிக்கொண்டே சென்றன. ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இந்த குண்டுவீச்சில் சிக்கி உயிரிழந்தனர். நெதர்லாந்து பெல்ஜியம் இரண்டும் ஜேர்மனியிடம் முழுமையாக சரண்டைந்தன.

ஹிட்லர் தன்னை ஒரு பிலிட்டரி ஜீனியஸாக நம்ம ஆரம்பித்திருந்த சமயம் அது. அதுவரை கிடைத்த வெற்றிகள் அனைத்தும் திட்டமிட்டு பெற்றவை. பிரிட்டன், பிரான்ஸ் இரு தரப்பில் இருந்தும் பெரிய எதிர்ப்பு எதுவும் அதுவரை இல்லை. திருப்தியாக இருந்தது ஹிட்லருக்கு. பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் கைப்பற்றியதன் மூலம் போதுமான விலாலமான களம் கிடைத்துவிட்டது. துருப்புக்களை இந்த இரு தேச எல்லைகளிலும் வரிசையாக அடுக்கிவைத்து விட்டால் நினைத்த காரியம் சுலபத்தில் கைகூடும்.

நீங்கள் எதற்கும் இன்னொரு முறை யோசியுங்கள் Mein Führer என்றார் Walther von Brauchitsch  கொமாண்டர் ஒஃவ சீஃவ.. ஹிட்லர் அவரை வெறுப்புடன் பார்த்தார்.

·         Mein Führer என்றால் ஜேர்மன் மொழியில் என் தலைவர்.

என்ன தான் இருந்தாலும் பிரான்ஸுற்கு நாம் மரியாதை தரவேண்டும். புராதனமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு. போலந்தை போல செக்கோஸ்லாவாக்கியாவை போல அத்தனை சுலபத்தில் பிரான்ஸ் கைகூடாது. அவர்கள் ராணுவபலத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட கூடாது. சரியாக திட்டமிடாமல் நாம் தாக்குதலை ஆரம்பித்துவிட்டால், பிறகு சிரமம் நமக்கு தான். கூடுதலாக பிரிட்டனையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது.

இப்படியெல்லாம் கவலைப்பட யார் சொல்லிக்கொடுத்தது உனக்கு?

அவர் தலையை கவிழ்ந்து கொண்டார்.

எனக்கு காரணங்கள் வேண்டாம். சால்ஜாப்புகள் வேண்டாம். எழுந்து நின்று கொண்டார் ஹிட்லர். ஒரு புழுவைப் பார்ப்பது போல் தன் கொமாண்டரைப் பார்த்தபடி அங்கும் இங்கும் உலாவினார். கபினெட்டில் இருந்த மற்றவர்களையும் ஒருமுறை நோட்டம் விட்டார்.

வேறு யாருக்கு தயக்கம் இருக்கிறது இங்கே?

எனக்கு! என்றபடி கையை உயர்த்தினார் Franz Halder, ராணுவ ஜெனரல் ஸ்டாஃப். ஜேர்மனியின் மீதோ ஃபயூர்ரின் மீதோ (Führer) எனக்கு துளி சந்தேகமும் இல்லை. ஆனால், பிரான்ஸை தாக்குவதில் உள்ள சவால்கள் குறித்து Führer சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை உயிர் பயமா உங்களுக்கு? விநோதமாக இருக்கிறது.

மொத்தம் இருநூறு ஜெனரல்கள் அங்கே குழுமியிருந்தனர். ஒருவரும் பேசவில்லை. தங்கள் Führer ஐ பாரத்தபடி அமைதியாக இருந்தனர்.

பிரான்ஸை வீழ்த்துவதற்கு முன்னால் நீங்கள் வீழ்த்தவேண்டியது உங்கள் கோழைத்தனத்தைத் தான். திட்டமிடுவதற்கு முன்பு மட்டுமே நான் யோசிப்பேன். பிறகு, யோசிக்கமாட்டேன். தயங்கமாட்டேன். தயங்குவது கோழைத்தனம். பயப்படுவது எனக்கு பிடிக்காது. பிரான்ஸ் எப்படித் தாக்கவேண்டும், எங்கிருந்து தொடங்கவேண்டும், எப்போது, எப்படி முடிக்கவேண்டும் அனைத்தையும் திட்டமிட்டு விட்டேன். இனி நான் பின்வாங்கமாட்டேன். ஜேர்மனி பின்வாங்காது.

சில விநாடிகள் கழித்து Walther von Brachuitsch  தன் தொண்டையை செருமிக்கொண்டார்.

நான் ராஜிநாமா செய்துவிடுகிறேன்.

ஹிட்லர் திரும்பினார்.

அதற்கு உனக்கு அனுமதி இல்லை. எனக்கு வேண்டியது சொன்னதை செய்து முடிக்கும் ஜேனரல்கள். 1918 ல் நாம் சந்தித்த அவமானங்களுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும். பிரான்ஸை  நாம் கைப்பற்றுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக அமையும். இதில் மாற்றம் எதுவும் இல்லை. எந்த இடைஞ்சல் வந்தாலும் மீறி மிதித்து நடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டியாக வேண்டும். இதற்கு மாற்று கருத்து இல்லை.

அதுவரை அமைதியாக இருந்த கோய்பெல்ஸ் பக்கம் திரும்பினார் ஹிட்லர்.

நான் சொல்வது சரிதானே கோய்பெல்ஸ்

சரிதான் என்றார் கோய்பெல்ஸ்.

அவருக்கு அப்படி சொல்லித்தான் பழக்கம். அப்பபடி மட்டும் தான்.

·        மே 10 என்று திகதி குறித்தாகிவிட்டது. மூன்று மில்லியன் வீரர்களை பிரான்ஸுக்காக ஒதுக்கினார் ஹிட்லர். இதுவரை நடந்தவை சின்னச் சின்ன யுத்தங்கள், இது கொஞ்சம் பெரிய விளையாட்டு, மோதப்போவது பிரான்ஸுடன் மட்டுல்ல, பிரிட்டனும்தான். மூன்று பிரிவுகளாக ராணுவத்தினர் பிரிந்திருந்தனர்.

  • க்ரூப் ஏ, Gerd von Rundstedt என்பவரின் தலைமையின் கீழ் செயல்படும்.
  • ·க்ரூப் பி Fedor von Bock என்பவரின் கீழ் போரிடும்.
  •  க்ருப் சி, Wilhelm Ritter von Leeb என்பவரின் கட்டுப்பாட்டில் இருக்கும்

ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பணி. மூன்றும் ஒன்றுக்கொன்று உதவி புரியும்.

large.map-invasion-German-Low-Countries-France-1940.jpg.44a597fe25cb1721c2a6f30ded8d8eca.jpg

பிரான்ஸின் ராணுவ பலம் ஜெர்மனியைவிட அதிகம் என்பதில் சந்தேகமில்லை. மொத்தம் ஆறு மில்லியன் பேர் ராணுவத்தில் இருந்தனர். ( ஜேர்மனியின் மொத்த பலம் 5.4 மில்லியன்) ஆனால் ஆறு மில்லியன் பேரும் அப்போது தயார் நிலையில் இல்லை. வடக்குப் பகுதியில், 2.2 மில்லியன் வீரர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். பின்னர், பிரிட்டன், பெல்ஜியம், டச்சு ஆகிய நாடுகளின் உதவியுடன் 2.2 மில்லியன் 3.3 மில்லினாக உயர்ந்தது.

ஒரு பக்கம் ஜேர்மனி, மற்றொரு பக்கம், பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் டச்சுப் படைகள். ஜேர்மனி 136 பிரிவுகளை ஒதுக்கியிருந்தது. பிரான்ஸ் அணியிடம் 144 பிரிவுகள் இருந்தன. பிரான்ஸில் இருந்து 101, பெல்ஜியத்தில் இருந்து 2500 டாங்கிகளைக் களம் இறக்கியிருந்தது. ஃபிரெஞ்சு அணியிடம் இருந்தவை 3400. ஃபிரெஞ்சு டாங்கிகளும் பீரங்கிகளும் ஜேர்மனியை விடவும் நவீனமானவை. பலம் பொருந்தியவை, ஜேர்மனியின் வான்படை பிரான்ஸைவிட சக்தி வாய்ந்தது.

பிரான்ஸ் போருக்கு தயாராக ஆரம்பித்தது. படைகள் எல்லைகளில் குவிக்கப்பட்டன. ராணுவ ஜெனரல்கள் போர் உத்தரவுகளை பிறப்பிக்கத் தயாராக இருந்தனர். தயாரிப்பு ஏற்பாடுகள் ராணுவ மத்தியில் மட்டுமே இருந்தன. தேசம் தழுவிய போர் தயாரிப்புகள் காணப்படவில்லை. குறிப்பாக, ஃபிரெஞ்சு மக்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. ஒரு தேசம் தழுவிய போர் தயாரிப்புகள் காணப்படவில்லை. குறிப்பாக, ஃபிரெஞ்சு மக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. ஒரு தேசம் போருக்குத் தயாராகும் போது மக்களிடையே ஏற்படும் எழுச்சியும் பரபரப்பும் காணப்படவில்லை.

மே 10 ம் திகதி நள்ளிரவுக்கு மேல் ஜேர்மனி, பிரான்ஸ் எல்லையை நோக்கி நகர ஆரம்பித்தது.  Ardennes region என்ற அடர்ந்த காட்டுப்பகுதியைத் தான் தேர்வு செய்திருந்தது ஜேர்மனி. Manstein, Guderianஇந்த இரு ஜெனரல்கள் போட்டுக் கொடுத்த திட்டம் இது. இங்கே நாம் நுழைவோம் என்று பிரான்ஸ் கனிவிலும் எதிர்பார்க்காது. பிரான்ஸின் பலம் எதுவோ அதுவே தான் அவர்கள் பலவீனமும். காட்டுப்பகுதி யார் வரப்போகிறார்கள் என்று அசட்டையாக இருப்பார்கள். ஆகவே இதை தேர்ந்தெடுப்போம். பிரான்ஸை சிதறடிக்க இதைவிட நல்ல மார்க்கம் கிடையாது. ஹிட்லர் உற்சாகத்தில் முகம் மலர்ந்தார். இதுதான், இதுவே தான் ஜெனரல் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

அந்த வனப்பகுதியின் வரைபடத்தை மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் பார்வையிட்டார் ஹிட்லர்.

.      எங்கெங்கே தடைகள் முளைக்கலாம்?

·        எங்கே அடர்த்தி அதிகம்?

·        எங்கே ஆபத்துக்கள் அதிகம்?

·        விலங்குகளின் தொல்லை உண்டா?

·        கடந்து செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்?

·        ஏதாவது சிறப்பு உபகரணங்கள் தேவைபடுமா?

·        டாங்கிகளை உருட்டி செல்ல முடியுமா?

·        எப்படி சமாளிப்பீர்கள்?

என்று ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு கண்கள் துடிக்க உத்தரவிட்டார். புகுந்து காலி செய்யுங்கள்.

Guderian தலைமையின் கீழுள்ள மூன்று பிரிவுகளும் புறப்பட்டன. வனப்பகுதியில் நுழைவதற்கு முன்னால் சேடன் (Sedan) பகுதிக்கு அருகே உள்ள ம்யூஸே (Meuse) ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. சிறு அணிகளாகப் பிரிந்து கொண்டனர். கட்டுமரம் பயன்படுத்தப்பட்டது. துரிதமாகத் துடுப்புகள் போட்டு ஆற்றைக் கடந்தனர். காடு ஆரம்பித்தது.

காட்டுப்பகுதியில் டாங்கிகளை உருட்டிக்கொண்டு போவது எதிர்பார்த்ததை விடவும் சவாலான காரியமாக தான் இருந்தது. முரட்டுதனமான மலையடிவாரங்களையும் குண்டும் குழியுமான தடங்களையும் கடக்கவேண்டியிருந்தது. ஆட்கள் ஏறுவதற்கே சிரமமான தடங்கள் அவை. ஆயுதங்களையும் சேர்த்தே கொண்டு போயாக வேண்டும். மலையேறுவதில் பயிற்சி பெற்ற பிரிவினரே இந்தப் பணிக்கு ஒதுக்கபட்டிருந்தனர். பொறியியலாளர்களும் மோட்டார் படை வீரர்களும் உடன் சென்றனர். பொறியியலாளரின் வேலை, பாதைகளை ஏற்படுத்துவது. பாதை இல்லையா? பாலம் கட்டு. அங்கேயே  அப்போதே பென்சில் வைத்து வரைந்து, அங்கேயே அப்போதே பாலங்கள் அமைக்கபட்டன. தற்காலிக பாலங்கள், தொங்கு பாலங்கள், கயிறுகளையும் சிறு பலகைகளையும் வைத்து அமைக்கப்படும் ஆகாயப்பாதை. அவசியத்திற்கு ஏற்றாற்போல் நீள, அகலத்தில்  அமைத்துக்கொடுக்கவேண்டும். பகல் இரவு  பாரக்க முடியாது. கிடைக்கும் உபகரணங்களை, கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

வீரர்கள் காட்டுப்பகுதியை கடந்து எல்லைக்குள் பிரவேசிக்கும் போதே, ஜேர்மானிய வான் படைகள் தாக்குதலை தொடங்கிவிட்டன. ஃபிரெஞ்சு எல்லை வீரர்களால் இதை எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு பக்கம் துப்பாக்கி ஏந்தியபடி, காட்டுப்பகுதியில் இருந்து வெளிவரும் வீரர்கள். கடவுளே என்று  வானத்தை பாரத்தால் குண்டுகள் தலை மீதே விழுந்து வெடிக்கின்றன. Luftwaffe – வான்படைக்கு இரண்டு உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஃபிரெஞ்சு வீரர்களை தாக்கி பதுங்கு குழிகளை கைப்பற்றவேண்டும். எதிரியின் தகவல் தொடர்பு சாதனங்களை மொத்தமாக அழிக்க வேண்டும். எல்லை தாக்கப்படுகிறது என்ற விடயம் நீண்ட நேரத்திற்கு பிரான்ஸுக்கு போய் சேரக்கூடாது.

பிரான்ஸின் கூட்டணிப் படைகள் ஜேர்மனியின் தாக்குதலைக் கண்டுபிடித்து விட்டன. என்றாலும் அவர்களும் குழப்பத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். என்ன, ஏது  என்று இனம் காண்பதற்குள் ஜேர்மனி அத்தனை படைகளையும் துடைத்துப் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டது. ஜேர்மனி தாக்குதல் நடத்துகிறது என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்வதற்கு முன்னரே பல வீர்ர்கள் உயிரிழந்தனர்.

மூன்று தினங்களில் லக்ஸம்பேர்க் மற்றும் தெற்கு பெல்ஜியம் வழியாக முன்னேறிய ஜேர்மனி, சேடன் கோட்டையை முழுவதுமாக கைப்பற்றியது. பிரிட்டன் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினர் அலறியடித்துக்கொண்டு பெல்ஜியத்துக்குள் நுழைந்தனர். Ardennes பகுதியை கோட்டை விட்டது போல் பெல்ஜிய எல்லையையும் இழக்கமுடியாது. அப்படி நடந்துவிட்டால் பிரான்ஸ் சுற்றிவளைக்கப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.

இங்கே ஹிட்லர் தந்திரமாக ஒரு காரியத்தை செய்திருந்தார். முஸோலினியிடம் முன்கூட்டியே பேசியிருந்தார். பிரான்ஸுக்கு ஒர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகிறது. இத்தாலி ராணுவத்தில் இருந்து ஒரு படை அனுப்பிவைக்க முடியுமா? சொல்லும் போது உங்கள் படையையும் பிரான்ஸை தாக்கட்டும். இரண்டு முனைகளில் இருந்து வரும் இந்த தாக்குதல் நிச்சயம் அவர்களை அலைக்கழிக்கும். முஸோலினி உடனே ஒப்புக்கொண்டார். இதென்ன பிரமாதம்? சொல்லுங்கள், அனுப்பிவைக்கிறேன். உங்களுக்கில்லாத உதவியா?

பிரான்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. பெரும் குழப்பம், ஒரு பக்கம் ஜேர்மனி குண்டு வீசிக்கொண்டிருந்தபோதே மற்றொரு பக்கம் இத்தாலி அடிக்கிறது. ஜேர்மன் பீரங்கிகள் முழங்கிக்கொண்டிருக்கும் போதே வான் தாக்குதலும் ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு சாலையாக பாரத்து அழிக்க ஆரம்பித்தது ஜேர்மனி. சில சமயம் வெடி வைத்து விட்டு காத்திருப்பார்கள். சில சமயம், சீறிப் பிளந்து பாய்ந்து வந்து தாக்குவார்கள். மறைந்திருந்து தாக்கும் உத்திகளும் உண்டு. காலாட்படையை பிரான்ஸ் எதிர்கொண்டு திணறிக்கொண்டிருக்கும் போதே விமானத் தாக்குதல் ஆரம்பித்துவிடும். இடையிடையே கலவரம் உண்டாக்க இத்தாலி.

மே 15 ம் திகதி, ஃபிரெஞ்சு பிரதமர் பவுல் ரெனாயன்ட், சேர்ச்சிலைத் தொடர்பு கொண்டார்.

அவர்கள் முன்னேறிவிட்டார்கள். நாங்கள் தொலைந்தோம்.

என்ன சொல்லுகிறீர்கள்? உண்மையாகவா?

பாரிஸின் கதவு திறந்தே கிடக்கறது. நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நடுங்கும் குரலில் ரெனாய்ட் பேசிக்கொண்டே இருந்தார். சேர்ச்சிலிடம் இருந்து பதில் இல்லை. என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர்? ஃபிரெஞ்சு எல்லைக்குள் ஜேர்மனி நுழைந்துவிட்டதா? பாரிஸை கைப்பற்ற போகிறார்களா? பாரிஸையா?

தவிக்க ஆரம்பித்தது பிரிட்டன். இப்போது என்ன செய்யவேண்டும்? இதோ கொல்லைப்புறம் வரை வந்துவிட்டார் ஹிட்லர். படை எடுத்து வந்து மிரட்டுகிறார். அட்டகாச சிரிப்புடன் ஆணவத்துடனும் கால் மேல் கால் போட்டபடி சிரிக்கிறார். பிரான்ஸ் தோல்வியடையப்போகிறது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த பிரதமர், நடுங்கும் குரலில் தன் தோல்வி பயத்தை இதோ பதிவு செய்துவிட்டார்.  ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருந்தால் இத்தனை தூரம் வளர்ந்திருக்காது.

சரி போனது போகட்டும். இப்போது என்ன செய்வது? நட்பு நாடுதான். பிரான்ஸு்றகு இன்று ஆபத்து என்றால் நாளை பிரிட்டனுக்கும் இதே நிலைமை வரலாம். சந்தேகம் என்னவென்றால் போர் விமானங்களை அனுப்பி வைப்பதா வேண்டாமா என்பது தான்.

வேண்டாம் என்றால் விமானப்படை சீஃப் மார்ஷல் டவுடிங்.  நம்மிடம் உள்ள போர்விமானங்களை பிரான்ஸுக்கு தருவது இப்போதைக்கு உகந்ததல்ல. நாளை பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் வரும்போது, நமக்கு கூடுதல் விமானங்கள் தேவைப்படும். அதுவும் தவிர, பிரான்ஸ் தோற்கப்போவது எப்படியும் உறுதியாகிவிட்டது. இனி அவர்களுக்கு எத்தனை விமானங்கள் கொடுத்தாலும் அதனால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடப்போவதில்லை. இழப்பு நமக்குதான்.

ஆனால் உதவலாம் என்று தோன்றியது சேர்ச்சிலுக்கு. தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்னும் மார்ஷலின் வாதத்தை அவர் நிராகரித்தார். நாம் எடுக்கும் ரிஸ்க் என்று நினைத்துக்கொள்வோம் என்று சொல்லி நான்கு விமானப்படைப் பிரிவுகளை அனுப்பிவைத்தார்.

மீண்டும் சேர்ச்சிலை தொடர்பு கொண்டார் ஃபிரெஞ்சு பிரதமர்.

உங்கள் உதவிக்கு நன்றி. ஆனால் அவர்கள் அருகே வந்துவிட்டார்கள்.

எங்கே?

பாரிஸில் இருந்து எண்பது மைல் தொலைவில் வந்துவிட்டார்கள்.

பாரிஸிற்கு அவசர விஜயத்தை மேற்கொண்டார் சேர்ச்சில். பார்த்த அவர் அதிர்ந்து போனார். சோம்பிக்கிடந்தது. பாரிஸ் ராணுவத்தினர் உற்சாகம் இன்றி காணப்பட்டனர். தோல்வியை வரவேற்க தயாராக இருப்பதாக தோன்றியது சேர்ச்சிலுக்கு. ஏன் இத்தனை அசிரத்தையாக இருக்கிறார்கள்? பிரதமரிடம் பேசினார். ராணுவ உயர் அதிகாரிகளிடம் பேசினார். ஒருவரும் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை.

ஜெனரல் கேம்லினிடம் பேசினார் சேர்ச்சில். உங்களுக்கு கூடவா நம்பிக்கை இல்லை. அவர் தலையை கவிழ்ந்து கொண்டார்.

மேலும் ஆறு விமானப்பிரிவுகளை அனுப்பச் சொல்லியிருக்கிறேன். எங்கள் பாதுகாப்புக்கு போதுமான விமானங்கள் இல்லை என்ற நிலையில் பிரிட்டன் இந்த உதவியை அளிக்க முன்வருகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அப்போதும் பதில் இல்லை, சேர்ச்சிலுக்கு கொஞ்சம் எரிச்சல்.

 

உங்களிடம் ரிஸர்வில் தளவாடங்கள் இல்லையா? இது போன்ற சூழலில் என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவில்லையா?

இல்லை என்று ஃபிரெஞ்சு மொழியில் பதிலளித்தார் அந்த ஜெனரல்.

அடக்கி வைத்திருந்த கோபத்தை சில தினங்கள் கழித்து வெளிப்படுத்தினார் சேர்ச்சில். எனக்கு தெரிந்து இதுவரை இத்தனை மோசமான போருக்கான தயாரிப்பு வெறெங்கும் செய்யபட்டதில்லை.

ஜேர்மனியை தாக்கலாம் என்று மே 15 ம் திகதி பிரிட்டன் முடிவு செய்தது. ஜேர்மனி மீது நடத்தப்படும் முதல் பெரும் தாக்குதல். கொலோனில் (Cologne – Köln)  ஒரு பால் வியாபாரி வீட்டை விட்டு வெளியே வந்தார். முதல் பலி அவரே. மறுநாள் ஹம்பேர்க்கில் நடத்தபட்ட தாக்குதலில் 34 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர். எரி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தகர்க்கப்பட்டது. மே, ஜுன் என்று தொடர்ச்சியாக பிரிட்டன் ஜேர்மனி மீது குண்டுகளை வீசியது. தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என்று தேடித்தேடி அழித்தது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்டடவர்கள் உயிரிழந்தனர்.

இருந்தாலும், இந்த தாக்குதல் ஜேர்மனியைத் தடுத்து நிறுத்தவில்லை. ஐயோ பிரிட்டன் வந்துவிட்டதே என்று பிரான்ஸை ஆக்கிரமிப்பதை ஜேர்மனி கைவிடவில்லை. கொசு கடித்தால் தட்டிவிட்டு அடுத்த காரியத்தை பார்ப்போமே, கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு அலட்சிய மனோபாவத்துடன், தன் காரியத்தை தொடர்ந்தது.

மே 17 ம் திகதி பெல்ஜியத்தின் தலைநகரம் பிரஸல்ஸ் சரணடைந்தது. ஆனால், மன்னர் மூன்றாம் லியோபோல்ட் (King Leopold III) அது பற்றி கவலைப்படவில்லை. தொடர்ந்து போராட அவர் தயாராக இருந்தார். பிரிட்டிஷ் படை அவரிடம் பேசியது. கவலைப்படவேண்டாம் மன்னரே, நாங்கள் உங்களை பத்திரமான நாட்டை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறோம். உங்கள் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம். இனியும் பெல்ஜியத்தில் நீங்கள் தங்கி இருப்பது உசிதமல்ல. ஹிட்லர் சுற்றிவளைத்துவிட்டார்.

மன்னர் அவர்களை திகைக்க வைத்தார். என் மக்களை விட்டு நான் வரமாட்டேன். நான் ஓடிவிட்டால், அவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள். சரித்திரம் என்ன சொல்லும், நான் இங்கேயே இருந்து கொள்ளுகிறேன். என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும். பெல்ஜிய அரசாங்கம் இதை வேறு விதமாக பார்த்தது. சரணடைந்துவிடலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு இந்த மன்னர் ஏன் நகர மறுக்கிறார். ஒருவேளை எல்லோரும் போன பிறகு, ஹிட்லருடன் உடன்படிக்கை செய்து கொண்டு தொடர்ந்து பெல்ஜியத்தை ஆளலாம் என்று நினைக்கிறாரோ!

large.dunkirk-evacuation-operation-dynamo.jpg.a8c3df50f3258ea8f216b81ba486770e.jpgஇறுதியாக டுன்கிர்க் (Dunkirk) என்னும் இடத்தில், ஜேர்மனிய பெல்ஜியத்தை நாலாபுறமும் சுற்றிவளைத்தது. ஃபிரெஞ்சு படைகள், பெல்ஜியப்படைகள், பிரிட்டிஷ் படைகள் அனைத்தும் சிக்கிக்கொண்டன. மே 27 ம் திகதி, லெயோபோடல் பெல்ஜிய படைகளை ஜேர்மனியிடம் சரணடைய உத்தரவிட்டார். பெல்ஜியத்தின் பிரதம மந்திரி, ஹியுபர்ட் பியர்லாட் (Hubert Pierlot) எரிச்சல் அடைந்தார். அரசியல் ரீதியில் எந்த முடிவையும் அரசாங்கம் தான் எடுக்கும். அதாவது, நான். மன்னர் என்னும் அலங்காரப் பதவியில் இருந்து கொண்டு எப்படி இதில் தலையிடலாம்.? அவர் எப்படி படைகளைச் சரணடைய சொல்லலாம்?

ஆமாம் பெல்ஜிய மன்னர் செய்தது தவறு தான் என்றார் ஃபிரெஞ்சு பிரதமர். சேர்ச்சிலும் அதையே தான் சொன்னார். ஜுன் 4 ம் திகதி கொமன்ஸ் சபையிலும் அவர் இதைச் சுட்டிக்காட்டினார். இறுதி நிமிடம் வரை பெல்ஜியத்திற்கு பிரிட்டன் படை உதவிக்கொண்டுதான் இருந்தன. மன்னரின் அரை லட்சம் வீரர்கள் பெல்ஜிய எல்லையை காவல் காத்துவந்தனர். பெல்ஜிய எல்லை பாதுகாப்பாக இருப்பது பிரிட்டனுக்கு எவ்வளவு முக்கியமானது. இந்நிலையில் மன்னர் யாரையும் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார். பெல்ஜிய வீரர்களும் சரணடைந்து விட்டனர். இதனால் பிரிட்டனுக்கு ஆபத்து அதிகம்.

காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டதை போல குதித்துக்கொண்டிந்தது பிரான்ஸ். என்ன செய்து ஹிட்லரைத் தடுப்பது.? கேம்லில் மாற்றப்பட்டு  அவர் இடத்திற்கு மாக்‌ஸிம் வேகன்ட் (Maxim Weygand) என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு எழுபத்தி இரண்டு வயது ஆகியிருந்தது. இவர் வருகை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவித்தார் ரெய்னாட். புதிய கொமாண்டர் உள்ளே வரும்போதே முடிவு செய்துவிட்டு தான் வந்தார். இன்னும் சில தினங்களே பணியாற்றவேண்டிவரும். எப்படியும் ஜேர்மனி கைப்பற்றதான் போகிறது.

மே 21 ம் திகதி சானல் கோஸ்ட் பகுதியை இரண்டாக கிழித்து போட்டது ஜேர்மனி. இனி தாக்குப்பிடிப்பதில் பலனில்லை என்பதை பிரிட்டன் உணர்ந்து கொண்டது. தன் படைகளைத் திரும்ப பெற்றுக்கொள்ள ஆரம்பித்தது. மே 26 தொடங்கி ஜூன் 4 வரை பிரிட்டன் படைகள் டுன்கிர்க் பகுதியில் இருந்து சிறிது சிறிதாக விடுவித்துக்கொண்டன, குறிப்பிட்ட இந்த தினங்களில் ஜேர்மன் படைகள் பிரிட்டன் படைகள் மீது தாக்குதல் நடத்தாததற்கு  காரணம் ஹிட்லர் தான் என்று ஒரு பேச்சு இருந்தது. பின்னாளில் பிரிட்டனுடன் அமைதி ஒப்பந்ததம் செய்து கொள்ள உதவும் என்பதற்காக ஹிட்லர் தன் படைகளின் கைக்கை கட்டி வைத்திருந்தார் என்று சொல்லபட்டது.

என்னென்னவோ செய்து பார்த்துவிட்டு ஓய்ந்து போனது ரெனாய்ட் அரசு. துணைக்கு நண்பர்கள் இல்லை. படைகள் சிதறியோடுகின்றன அல்லது அழிந்து போகின்றன. இனியும் பாரிஸைக் காப்பாற்ற முடியுமா? புதிதாய் வந்த கொமாண்டரிடம் பேசினார் ரெனாய்ட். பாரிஸை விட்டு வெளியேறிவிடலாமா? அதைத்தான் இறுதியில் செய்தது பிரான்ஸ்.  ஜுன் 10 ம் திகதி  பாரிஸ் கைவிடப்பட்டது ஹிட்லருக்காக.

 மாபெரும் சோக தினமாக அந்நாள்  மாறிப்போனது. திடீரென்று அரசாங்கப்படைகள் பின்வாங்கிவிட்டதால் என்ன செய்வதென்று மக்களுக்கு தெரியவில்லை. நிஜமாகவே தோற்றுவிட்டோமா? ஐரோப்பாவின் அசைக்க முடியாத சக்தி என்று நினைத்துக்கொண்டிருந்தது எல்லாம் சும்மாதானா? ஹிட்லர் முன்னால் நிற்க முடியவில்லையா பிரான்ஸால்? தோல்வி என்று நம் அதிபர் ஒப்புக்கொண்டுவிட்டாரா? வேறு ஏற்பாடுகள் செய்யப்போகிறர்களா? பாதுகாப்பை பலப்படுத்தப்போகிறார்களா? எங்கே போய் யாரைக்கேட்பது? அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. மூடாத அலுவலகங்கள் சிதறிக் கிடக்கின்றன.

ஜுன் 14 ம் திகதி நாசிகள் நுழைந்தபோது பாரிஸில் ஈ காக்கா இல்லை. இரண்டு தினங்கள் முன்பாகவே மக்கள் இருப்பதை மூட்டை கட்டிக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறியிருந்தனர். ஆஹா இது தான் பாரிஸா என்று அதிசயப்பட்டுக்கொண்டே சாலைகளில் அங்குமிங்கும் உற்சாகத்துடன் ஓடினார்கள் நாசிகள். அழகை ஆராதிக்கும், போற்றும் இடமல்லவா?

கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தார் ரெனாய்ட். பிரான்ஸின் எதிர்காலம் ஆட்டம் கண்டிருந்தது. எதுவுமே பலிக்கவில்லை. அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே சென்றன. தேசத்தை காவு கொடுத்துவிட்டு பிறகு என்ன அதிபர் பதவி? ஏச்சு பேச்சு தாங்கமுடியவில்லை. ஜுன் 16 ம் திகதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு பெடாய்ன் (Petain) என்பவர் வந்தார். பொம்மை அரசாங்கம். முறைப்படி போர்நிறுத்தம் அறிவிக்கபட்டது. 21 ம் திகதி, எஞ்சியிருந்த கடைசி பிரிட்டிஷ் பிரிவும் விடைபெற்றுக்கொண்டது. திரும்பும் திசையெங்கும் ஜேர்மன் படைவீரர்கள்.

ஒரு விஷயம் பாக்கியிருந்தது. நீ தோற்றுவிட்டாய் என்பதை பிரான்ஸுக்கு அறிவிக்கும் ஒப்பந்தம். ஜேர்மனியின் வெற்றியை ஐரோப்பாவுக்கு உணர்ந்துவதற்கான ஒப்பந்தம். பாரிஸிற்கு வட கிழக்கில் இருந்த Compiegne  என்னும் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்திருந்தவர் ஹிட்லர். அருங்காட்சியகத்தில் இருந்த குறிப்பிட்ட ரயில்வே காரெஜை (2419D) எடுத்துவந்தனர். பிறகு ஹிட்லரை தொடர்பு கொண்டனர். ஃபயூரர் நீங்கள் சொன்ன  இடத்தில் நீங்கள் சொன்னதைப் போன்ற ஏற்பாட்டை செய்துவிட்டோம். வருகிறீர்களா?

ஹிட்லர் வந்தார். அந்த காரெஜை ஒரு முறை நோட்டம் விட்டார். பெருமிதம் பூத்துக்கிடந்தது அவர் முகத்தில். இங்கே வைத்து தானே 1918 ல் ஜேர்மனி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இங்கே தானே ஜேர்மனி தோற்றுபோன அவமானத்துடன் கூனி குறுகி கிடந்தது. அதே இடம், அதே ரயில்வே காரேஜ். இங்கே தானே வெற்றி பெற்ற ஃபிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினால் ஃபோச் (Marschal Foch) அமர்ந்திருந்தார்.

இன்று நான் அமர்கிறேன். வெற்றியாளரின் இருக்கையில் நான், ஹிட்லர். பிரான்ஸ் என்முன்னே மண்டியிட்டு கிடக்கட்டும். எனக்கு கையெழுத்து போட்டு கொடுக்கட்டும். தோல்வியை ஒப்புக்கொள்ளட்டும். ஜேர்மனியின் பலத்தை பயத்துடன் அங்கீகரிக்கட்டும். சரித்திரத்தில் ஏற்பட்டிருந்த அவப்பெயர் இதோ அழிந்துவிட்டது. தோற்றுப்போன ஜேர்மனி என்று இனி யாரும் சொல்ல முடியாது.

ஜுன் 22 ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு வாரம் கழித்து ஹிட்லர் பாரிஸ் வந்திருந்தார், ஈஃபிள் டவருக்கு முன்பாக நின்று இரு கைகளையும் கோர்த்துகொண்டு ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

large.713443620_N2419D.jpg.7be33b2657d5a7473a7d2dee2a08ebb1.jpg

பிரான்ஸின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் வந்து சேர்ந்தன. தெற்குப்பகுதி ஒரளவுக்கு சுதந்திரத்துடன் தனித்து விடப்பட்டிருந்தது. நீயே ஆண்டுகொள் என்று புதிய அதிபரை கூப்பிடு சொன்னது ஜேர்மனி. நினைவிருக்கட்டும், இப்போது நீ ஆட்சி செய்து கொண்டிருப்பது தோற்றுப்போன பிரான்ஸை. இது நினைவில் இருக்கும் வரை உனக்கு பிரச்சனை இல்லை.

இந்த யுத்தத்தில் ஜேர்மனியின் இழப்பு 27074 வீரர்கள். ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். எதிரணியில் இழப்பு 229200 பிரான்ஸ், பெல்ஜியம், டச்சு, போலந்து. பிரிட்டன் வீரர்கள் இதில் அடக்கம்.

(தொடரும்)

 

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது நேரத்தை எடுத்து இதை இங்கே பகிர்வதற்கு மிக்க நன்றி. 

இன்னொரு மொழியிலிருந்து தமிழிற்கு மொழிப்பெயர்க்கும் போது சில நேரங்களில் அதே அர்த்தத்தை தருவது மிகவும் கடினம் என்பதை  தொடரை வாசிக்கும் உணரக்கூடியதாக இருந்தது..ஆனாலும் எழுதியவரின் முயற்சி பாராட்டுக்குரியது.  அதே போல,  நாவலை  இங்கே இணைக்கும் உங்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.