• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்….

Recommended Posts

மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்….

 
“தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள்.
 
அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்.”
 
அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம்.
 
Major-Thangesh-Milran_verkal.jpgஅவன் பிறந்து வளர்ந்த அவனது சொந்தக் கிராமத்தின் மூட நம்பிக்கைகளும் அவனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்தாலும், தன் பதினெட்டு வயதில் தேர்ந்தெடுத்த விடுதலைப் பாதை அவனுள் முற்போக்கான எண்ணங்களிற்கு வழிகாட்டியதென்றே கூறவேண்டும்.
 
அவன் போராளியாகி பொறுப்பாளனாகி சீ.டி -125 உந்துருளியில் வீட்டுக்குப் போனால், அங்கு இன்னமும் பழமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் அம்மா, அப்பாவுடன் புதுமை பற்றிய விவாதங்கள்தான்.
 
“உந்தக் காட்டைக் கட்டிப் பிடிக்கிறதை விட்டுட்டு றோட்டுக்கு வாங்கோ” அவனது வீடு ஏ-9 வீதிக்கருகில் வருவதற்கு அவனது வாதம்தான் காரணமாயிற்று.
 
தொடக்கத்தில் விவாதங்கள் இருப்பினும் பிற்காலத்தில் அவனது கட்டளையின் கீழ் ‘வீடு’ வந்ததென்றே கூறல் வேண்டும். அவனது கட்டளைகளில் முதன்மையானது “வீட்டுக்கு வாற போராளிகளுக்கு தேநீர் கொடுத்து, சாப்பாடு கொடுத்து அனுப்பவேணும். அவையளும் உங்கட பிள்ளைகள்தான்.”
 
இந்த உணர்வானது இயக்கத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே அவனிடம் குடிகொண்டிருந்தது.
1989 அவன் இயக்கத்துக்கென வந்து ஆண்டு ஒன்று கடந்திருந்தது.
 
பாலமோட்டை, கொந்தக்காரக்குளப் பகுதியில் அணி ஒன்றின் பொறுப்பாளனாய் அவன் நடமாடும் செய்தி, உறவினர் வாயிலாக பெற்றோரின் காதுகளை எட்டியது.
 
‘இந்தியப் படைகளினது கண்களில் மண்ணைத் தூவி நடமாடும் தன் பிள்ளையைப் பார்ப்பது அவ்வளவு உசிதமல்ல’ என்று தெரிந்தும் பெற்றோரின் மனசு அதற்கு இடங்கொடுக்கவில்லை.
 
தமது வசதிக்கேற்ப சிறு பலகாரப் பொதியுடன் அவன் நடமாடும் கிராமங்களில் அவனைத் தேடினர் பெற்றோர்.
சில வாரங்கள் கழித்து அவர்களிடம் அவன் வந்தான்.
 
“அம்மா, நீங்கள் என்னைத் தேடித் திரியிறது எனக்கு எப்பவோ தெரியும். என்னைக் காணவில்லை என நீங்கள் போவியள் எண்டு நினைச்சன். ஆனால் நீங்கள் என்னைக் கண்டுதான் போறதெண்ட முடிவோட நிக்கிறியள்… அம்மா, என்னைப்போலதான் என்னோட நிற்கிற பெடியளும் தங்கட அம்மா, அப்பாவைப் பார்க்காமல் நிக்கினம்… என்னை மட்டும் பார்க்க வந்திருக்கிறது சரியில்லை அம்மா. அதுவும் நான் இரு அணிக்குப் பொறுப்பாக இருக்கிற இந்நிலையில்… நினைக்கவே மனம் ஏற்குது இல்லையம்மா.”
 
அவனது முதிர்வான சில நிமிடப் பேச்சு அம்மாவை கண்கலங்கி நிற்கவைக்க… “அம்மா நான் போயிற்று வாறன் – உந்தப் பலகாரப்பொதி எங்கள் எல்லோருக்கும் போதாது – இனி சந்தர்ப்பம் கிடைச்சா எல்லோருக்கும் சேர்த்துச் செய்து வாங்கோ” அவன் சென்று அடர்ந்த காட்டினுள் முழுமையாக மறையும்வரை அம்மா பார்த்துக் கொண்டேயிருக்க, “அவன் போராட என்று புறப்பட்டவன், தன்ர கடமையை முடிச்சு வீட்டுக்கு வருவான்” என அப்பாதான் அம்மாவின் கையைப் பிடிச்சு கூட்டிவந்தார்.
 
அம்மா சந்திச்சு சில மாதங்களின் பின்பு, “கொந்தக்காரகுளப் பகுதியில இந்தியனாமிக்கும், எங்கட பெடியளுக்குமிடையில சண்டையாம், பெடியளிலையும் இழப்பாம்” அயலவரின் செய்தியால் அம்மா ஒடிந்துபோனா. அம்மாவை நிமிர்த்தும் செய்தி சிலவாரங்கள் கழித்துத்தான் வந்தடைந்தது.
 
அந்தச் சம்பவம் பற்றி அவன் இப்படித்தான் விபரிப்பான், “சுடலைக்குள்ள கிடந்தால் ஆரும் வரமாட்டாங்கள் எண்டு சுடலைக்க கிடக்கப் போய், இந்தியன் ஆமி ‘பிறன்’ எல்.எம்.ஜீ யால போட்டானே ஒரு போடு. சன்னம் ஒண்டு என்ர கையை முறிச்சுக்கொண்டு போயிற்று. அதில இருந்து இந்தியன் ஆமிக்கு நாங்கள் வைச்ச சங்கேதப் பெயர் (CODE NAME) ‘சுடலைப்பேய்.’
 
அந்த நேரத்தில், அடர்ந்த காட்டினுள் உள்ள முகாம்களுக்கான வழங்கல்கள் அனைத்தும் நகருக்குள்ளிருந்து, கிராமப்புறத்துக்காகி அங்கிருந்து முதுகுச் சுமையில்தான் காட்டினுள் செல்லும்.
 
நிலத்தில் கொட்டும் தானியங்களை காட்டுக்கோழி அல்லது மயில் பொறுக்காது விடின், ஐம்பது கிலோ அரிசிக்காகக்கூட இரத்தம் சிந்தவேண்டிய அபாயகரமான சூழலில் அவனது முள்ளந்தண்டும் நூற்றுக்கணக்கான மூட்டைகளைச் சுமந்து போராளிகளுக்கான வழங்கல்களை எடுத்துச் சென்றிருந்தது.
 
இறுக்கமான அந்தப் போர்ச் சூழலில் ஊருக்குள் நடமாடும்போது அசாதாரணமான மறைப்பிடமே வாழ்விடமாக மாறும். நான்கு அடி சதுர இடத்தினுள் ஆறடி உடலை மறைத்து துயிலவேண்டிய நிர்ப்பந்தம் எழும். அப்பொழுதுகளில் எல்லாம், “ஆம்பிளப்பிள்ளை எண்டால் காலை நீட்டி நிமிர்ந்து படுக்கவேணும் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.”
 
“இப்ப அப்பா வந்து பார்த்தார் எண்டால் ‘ஆம்பிளப் பிள்ளையெண்டால் குறண்டிப் படுக்கவும் பழகவேணும்’ எண்டு சொல்லுவார்.” என முடிப்பான்.
 
கடினமான வாழ்வை, இக்கட்டான ஆபத்தான நிலைமையை, தளம்பாது மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவனே போராளி என்ற தகுதியைப் பெறுவான் என்ற அடிப்படையில் அவனிடமும் ‘அது’ நிரம்பியே காணப்பட்டது.
 
அதனால்தான் மாங்குளம், கனகராயன்குளம், பன்றிக்கெய்தகுளம் என தன் அணியை வழிநடத்தி இந்தியப் படையினருடன் போரிட அவனால் முடிந்தது.
 
இந்தியப் படைகள் எமது மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட 1990களில் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகளினுள் அவனும் ஒருவன்.
 
இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைக்கூலிகளாய்ச் செயற்பட்டோர், இன்னும் செயற்பட இருப்போரை களைந்து போராட்டத்தை வீறுகொள்ள வைக்கவேண்டிய பாரிய பொறுப்பு புலனாய்வுத்துறையின் மிக முக்கிய பணியாகியபோது, அவை சார்ந்த பணிகளே அவனுக்கு தொடக்கத்தில் வழங்கப்பட்டதெனினும், அவன் தன்னை போர்க்குணம் மிக்க போராளியாக உருவாக்கியிருந்தமை, புலனாய்வுத்துறைச் சண்டை அணித் தளபதிகளில் ஒருவனாக அவனை மாற்றியது.
 
போர்க்குணத்துடன் (MORALE) உற்சாகத்துடன் போராளிகளை வைத்திருந்து வழிநடத்துவது, என்பதில் லெப்.கேணல் கோபியைப்போல் அவனும் பேசப்பட வேண்டியவனே.
 
இந்தியப் படையுடனான போர்க் காலத்தில் எதிரியின் வரவை எதிர்கொள்வதற்காய் துப்பாக்கியின் விசை வில்லினுள் சுடுவிரலை வைத்தபடியே நடமாடும் அவனது விழிப்புணர்வு அவனது வாழ்வில் தொடர்கதையே.
 
“துப்பாக்கியை விட்டுட்டு விலகக்கூடாது…
 
“படுக்கும்போது துப்பாக்கி எடுக்கக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும்…” போன்ற கட்டளைகளுடன் கோல்சர் கட்டும் முறை, துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய முறை, அதன் தூய்மைப்படுத்தல், பயிற்சிகள், ஒறுப்புக்கள்(தண்டனைகள்) என தனது போராளிகளை எப்போதும் வழிப்புடனேயே வைத்திருப்பான்.
 
இந்தியப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் தன் துப்பாக்கியை இழந்த ஆனந்தன்- பிறிதொரு நாள் இந்தியப் படையினரிடமிருந்து துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றுவதற்காகத் தன் உயிரையே இழந்த கதையை, அவன் தன் போராளிகளுக்கு அடிக்கடி நினைவு படுத்துவான்.
 
இந்தியப் படையினருடனான சண்டையில் முறிந்த கை வீங்க வீங்க சக போராளிகளுடன் இணைந்து பங்கர் வெட்டுவது தொடக்கம் சமையல் வரை போராளிகளுடன் ஒருவனாக நிற்பான். எதிரி ‘எவ்வாறெல்லாம்’ நகருவான் நாம் ‘எவ்வாறெல்லாம்’ பதிலடி கொடுக்கவேண்டும், அவை பற்றிய கதைகளைத் தவிர அம்முகாமில் வேறு கதைகள் வருவது மிகக்குறைவு.
 
போராளிகளுக்குரிய நேரத்திட்டமிடலை அவனேதான் போட்டுக் கொடுத்து, அவர்களுடன் நின்று பணியினைக் கவனிக்கும் அவனது செயல், லெப்.கேணல் கோபியின் வழிகாட்டலில் கற்றுக் கொண்டதொன்று. புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாதுகாப்பு அணியினை வழிநடத்தும் பொறுப்பினை எடுத்து சில வாரங்களின் பின், ஒருநாள் அவரிடம் ‘வேண்டிக் கட்டிக்கொண்டு’ இப்படித்தான் என்னிடம் கூறினான்.
 
“ஒவ்வொரு போராளியும் பொறுப்பாளராய் வருமுன் சில மாதங்களேனும் – அவருக்குப் பக்கத்தில நிற்கவேணும் – அப்பதான் அவருடைய எதிர்பார்க்கையை விளங்கிக்கொண்டு பெடியளையும் வழிநடத்துவினம், தங்களையும் வழிநடத்துவினம்.”
 
அவனின்ர ஊர்தி ஓட்டத்தைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும். ஊர்தி வலம், இடம் என சின்ன ஆட்டத்தோட வேகமாய் வருகுதெண்டால் அவன்தான் ஓடிவாறான் என்று ஊகிக்கிறது அவ்வளவு சிரமமான விடயமல்ல.
 
“மாட்டின்ர நாணயத்தைப் பிடித்த கை ‘ஸ்ரேறிங்’ஐப் (STEERING) பிடித்தால், இப்படித்தான் ஊர்தி ஆடி ஆடி வரும்” எண்டு லெப்.கேணல் கோபி கிண்டலடித்தால் “ப்பூ… இதை இன்னொருத்தர் சொன்னால் கேட்கலாம்” என மறுத்தான் போட்டு விடுவான்.
 
ஒரு சமயம் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அவனது கிராமப் பக்கம் வந்தவேளை அவனது வீட்டில்தான் மதியச் சாப்பாடு.
 
இந்தச் செய்தியை அவனது காதில் நான்தான் போட்டது.
 
 
 
 
“அம்மா நல்லாச் சமைச்சவவே, உறைப்பை சற்று கூடுதலாய்ப் போட்டவாவே, சோறு என்ன அடிப்பிடிக்காமல் இருந்திச்சோ?” அவனது ஆதங்கம் எனக்கும் புரிய அதிகநேரம் எடுக்கவில்லை. உண்மையில என் வாழ்நாளில் அவனது அம்மாவின் கைபட்ட சமையலைவிட சுவையான உணவை இன்னும் கண்டதில்லை. எண்டாலும் “சமையல் அவ்வளவு வாய்ப்பில்லைத்தான்” என்ற பொய்யை வேண்டுமென்றே அவனுக்குச் சொன்னேன்.
 
“நீ இயக்கத்துக்குப் போய்த்தான் சமையல் படிச்சனி. நீ பிறக்கிறதுக்கு முதலே நான் சமையல் படிச்சனான்” இப்படித்தான் தாயிடம் பின்னொரு நாளில் அவன் வேண்டிக் கட்டியதாய்க் கேள்வி.
 
பிற்காலத்தில் புலனாய்வு நிர்வாகப் பணிகளினுள் உள்வாங்கப்பட்டான். வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேதான் அவனது பணி.
 
அச்சமயம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வன்னியைச் சொந்த இடமாகக்கொண்ட ஒரு போராளி, வன்னியில் உள்ள தன் தங்கையை பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்குக் கதைத்துவிட்டு வாருங்கள் என்பதை மட்டுமே சொல்லிவிட, அவளைப் பாடசாலையில் சேர்த்துவிட்டு அந்தச் செய்தியை தொலைத்தொடர்பு சாதனத்தினூடாக அறிவித்த அவனது செயல் போராளிகளுடனான நேசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.
 
1995, யாழ். இடம்பெயர்வின் பின் எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் – புலிகளின் பலம் எதுவென நிரூபிக்கவும் – நீண்ட கடற்றொடர் ஒன்றினைக் கைப்பற்றவும் திட்டமிடப்பட்ட முல்லைச் சிங்களப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சிகள் தொடங்கியிருந்த வேளை.
 
இரகசிய பயணம் ஒன்றிற்கான ஆவணங்களை தயார்செய்து கொண்டிருந்த அவனும் சண்டையின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வுத்துறைத் தாக்குதல் படையணியினுள் உள்வாங்கப்பட்டான்.
 
‘பயிற்சி’ நினைச்சுப் பார்க்க முடியாத அப்படி ஒரு கடும் பயிற்சி. சில மாதங்கள் நீண்ட பயிற்சி. பல படைணிகள் ஒன்று சேர்ந்திருந்த தளத்தில் புலனாய்வுத்துறைப் படையணியும் பயிற்சியில் முன்னணிவகிக்க ஊக்கியானவர்களுள் அவனும் ஒருவன்.
 
வட்டுவாகல் பாலத்தின் வலதுபக்க முன்னணி காவலரணின் தடையுடைத்து உட்புகும் அணி ஒன்றின் பொறுப்பாளர் அவன்.
 
 
 
 
18.07.1996 அதிகாலை முதலில் சண்டையைத் தொடங்கும் அணிகளில் அவனது அணியும் ஒன்று. களம் திறந்த பொழுதில் எதிரியின் கடும் எறிகணை வீச்சில் – எறிகணை ஒன்று அவனருகே வெடிக்க அவன் எடுத்துச் சென்ற ‘ரோப்பிற்ரோ’ (Torpedo) அவனுடன் வெடிக்க தடைகளுடன் அவனது உடலும் தகர்ந்து போயிற்று. வெற்றிக்காக உழைத்து – அந்தச் செய்தியைக் கேட்குமுன் வீரச்சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் மாவீரர்களினுள் அவனும் ஒருவன் ஆனான்.
 
அவனது உடல் அடையாளமின்றிப் போனதால், அவன் உயிர்நீத்த இடத்திலிருந்து இடுப்புப்பட்டி, கோல்சர், இன்னும் சிதறல்களை தேடித்தேடி எடுத்த அவனது தந்தை ‘அவன் போராட என்று புறப்பட்டவன் தன் கடமையை முடித்து வீடு வருவான்’ என்ற நம்பிக்கையுடன் இருக்க, அவனது படத்துக்கு விளக்கேற்றச் சென்றால், பல்லி சொல்லித் தடுப்பதாக அம்மா சொல்லுறா.
 
‘குறி’ சொல்பவன் ஒருவன் அண்ணன் உயிருடன் இருப்பதாகவும் மற்றொருவன் ‘இல்லை’ எண்டும் மாறிமாறி சொல்வதாக அன்புத் தங்கை சொல்கிறாள்.
 
அவன் இன்னமும் அவர்களுள் ஒருவனாக வாழ்கின்றான் . அதனால்தான் இன்னும் அவர்களால் அவனது இழப்பை ஏற்க முடியவில்லை. நான், மாவீரர் நாள் அன்று அவனது உடலை விதைத்த, கிளிநொச்சி துயிலும் இல்லம் சென்றேன் – அவனுக்கு விளக்கெரிக்க நிறையப்பேர் நின்றார்கள். அவனது பெற்றோரைத் தவிர.
 
நினைவுப்பகிர்வு –சி.மாதுளா.
விடுதலைப்புலிகள் இதழ் 2004  
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கம்

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this