Jump to content

வெண்முரசை என்ன செய்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசை என்ன செய்வது?

சுரேஷ் பிரதீப் 

 

SOLVALARKAADU_EPI_47.jpg

 

சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார்.

வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவுச்சூழலில் ஒரு மெல்லிய சலனம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சலனத்தை கவனிக்கும் போது அதனுள் இந்த நாவல் வரத்தொடங்கிய ஜனவரி 1, 2014 முதல் நாம் அதை எவ்வளவு தோல்விகரமாக எதிர்கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தைக் காண முடிகிறது.

முதலில் வெண்முரசு நாவல் வரிசைக்கு நவீன இலக்கியத்தில் என்ன இடம் கொடுப்பது என்ற குழப்பமும் பதற்றமும் ஏற்படுகிறது. இதுவரை தமிழில் வெளியான பல நல்ல நாவல்களை இந்த நாவல் உருவ அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் சிறுத்துப் போகச் செய்வதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழின் விமரிசன மரபை பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டு விவாதித்து தனக்கென ஒரு நாவல் வரிசையை ஒவ்வொரு வாசகரும் தன் மனதில் உருவாக்கி இருப்பார். அந்த வரிசையின் மீது வெண்முரசு நாவல் வரிசை ஒரு பெரும் மோதலை நிகழ்த்துகிறது. குறைந்தது வெண்முரசின் ஆறு நாவல்களை 'சிறந்த நாவல்கள்' என்று நான் நம்பும் பட்டியலுக்குள் நுழைக்க வேண்டியிருக்கிறது. (வெண்முரசின் இருபத்தைந்து நாவல்களையும் முழுமையாக வாசித்து இருக்கிறேன்) நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தப் பட்டியல் மாறுபாடும். ஆனால் இந்தப் பட்டியலுக்கு ஒரு இயைந்து போகும் தன்மை உண்டு. என் ரசனையை கட்டமைத்ததில் முன்னோடிகளின் ரசனைக்கும் அழகியல் தேர்வுக்கும் முக்கிய பங்கு உண்டு. போலவே தமிழ் இலக்கியத்தை விமர்சனப்பூர்வமாக அணுகும் பார்வையை கட்டமைத்ததிலும் முன்னோடிகளின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அத்தகைய விமர்சகர்களால் ஒரு வரிசை உருவாக்கப்படும் போது வெண்முரசு அவ்வரிசையில் பெரியதொரு இடத்தை எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேற்சொன்ன அவதானிப்பு என் ரசனை சார்ந்த மிகை நம்பிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம். படைப்பு நிலைத்திருப்பதும் அழிவதும் காலத்தால் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று வெண்முரசு எவ்வாறு அணுகப்படுகிறது? இரண்டு விதங்களில் பார்க்கலாம். வாசகர்கள் மத்தியில் வெண்முரசு தற்போதே புகழ்பெற்ற நாவல் வரிசையாகத்தான் விளங்குகிறது. வெண்முரசு நாவல் வரிசைக்கென வரும் கடிதங்கள் தனியொரு வலைப்பூவில் தொகுக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான கடிதங்கள் கொண்ட வலைப்பூ அது. நானும் குறைந்தது இருபது கடிதங்கள் எழுதி இருப்பேன். ஒரு வாசகனாக வெண்முரசின் செல்வாக்கை மறுப்பதற்கில்லை. ஆனால் அடுத்த படிநிலைகளில் வெண்முரசு எப்படி பார்க்கப்படுகிறது எனும்போதுதான் ஒரு குழப்பம் வருகிறது. எழுத்தாளர்கள், விமர்சகர்கள் வட்டத்தில் வெண்முரசு பெரும்பாலும் மௌனத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த கனத்த மௌனத்தைத்தான் நான் சந்தேகம் கொள்கிறேன். பிரம்மாண்டமான ஆக்கங்களை எதிர்கொள்ளும் பயிற்சி நம் பண்பாட்டுச்சூழலுக்கு இல்லையோ என்று ஐயுறுகிறேன்.

முகநூல் போன்ற கருத்து சொல்லும் ஊடகங்களின் பெருக்கத்தால் வெண்முரசு குறித்து நிறைய கருத்துகள் சொல்லப்பட்டுவிட்டன. அந்த கருத்துக்களில் பெரும்பாலானவை பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை. காரணம் பெரும்பாலான கருத்துகள் இப்படியொரு முயற்சி உருவாக்கும் ஒரு ஆழமான அதிர்ச்சியை சிரமப்பட்டு விழுங்கிய பிறகு நூலினை வாசிக்காமலேயே சொல்லப்படும் கருத்துகள். வெண்முரசு குறித்த இத்தகைய பொருட்படுத்த அவசியமில்லாத கருத்துதிர்ப்புகளை திரட்டினால் அது வெண்முரசு நாவல் வரிசையை விட இரு மடங்கு பெரிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 

இத்தகைய கருத்துகளின் ஊற்றுக்கண் எது? நான் அதிர்ச்சி என்றுதான் கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய செயல் நாம் வாழும் காலத்தில் நிகழும்போது ஏற்படும் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி தான் காழ்ப்பாகவும், அரசியல் சரிநிலை சார்ந்த எதிர்ப்பாகவும் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். 

பொது ஊடகப் பெருக்கம் விளைவித்த இன்னொரு தீங்கு எல்லோரையும் அரசியல் நிலைப்பாடு எடுக்கச் சொல்வது. முன்பு நாமெல்லாம் ஜாதி பார்த்து பழகிக் கொண்டோம். இன்று ஜாதியின் இடத்தை அரசியல் நிலைப்பாடு எடுத்துக் கொண்டது என நினைக்கிறேன்.

'நீங்க திராவிடமா, தமிழ்தேசியமா, இந்துத்துவமா, இந்தியதேசியமா?' என்று கேட்டு நாம் பேசிக்கொள்ள நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்கள் தொடர்ச்சியாக வெண்முரசின் மீது வீசப்படுகிறது. அதிர்ச்சிக் கூச்சல்களுக்கு அடுத்ததாக இந்த அரசியல் கூச்சல்களை வைக்கலாம். இதற்கிடையே வெண்முரசு நாவல் வரிசைக்கு எழுதப்படும் போதே நல்ல வாசிப்புகளும் விமர்சனங்களும் வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் படைப்புகளின் அளவையும் தரத்தையைம் வீச்சையும் ஒப்பிடும்போது விமர்சனங்கள் போதாமை நிறைந்தவைகளாகவே தெரிகின்றன.

அதிர்ச்சி மற்றும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்களுக்கு அடுத்ததாக வெண்முரசு சார்ந்து நிலவும் மௌனம் வருகிறது. இந்த மௌனத்துடன் புழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கடந்த ஐந்து வருடங்களில் கிட்டியிருக்கிறது.

ஒரு வகையில் அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததுமேகூட வெண்முரசு என்றுதான் சொல்ல வேண்டும். நான் வாசித்த ஜெயமோகனின் முதல் ஆக்கம் வெண்முரசின் முதல் நூலான முதற்கனல் தான். தீவிர இலக்கியம் சார்ந்த புரிதல் இல்லாமல் அனைத்தையும் 'கொத்தாக' வாசித்துக் கொண்டிருந்த என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்துவிட்டது முதற்கனல்தான். அதன் பிறகான தொடர்ச்சியான வாசிப்பு, என் எழுத்து என அனைத்திற்குமான முதல் புள்ளி என அந்த நாவலைச் சொல்லலாம்.

அதன் வழியாக தமிழிலக்கிய உலகப் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் மேற்சொன்ன இலக்கியம் குறித்து ஏதும் அறியாத கூச்சல்காரர்கள் சத்தம் போடுகிறார்கள் என்றால் இலக்கியவாதிகள் மௌனம் சாதிக்கின்றனர் என்று கண்டு கொண்டேன். இந்த மௌனத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? முதலில் அந்த நாவலின் பிரம்மாண்டம். எந்தவொரு இலக்கியவாதியும் சமகாலத்தை சற்று சந்தேகத்துடனேயே அணுகுவார். ஒரு சமகால நூலின் மீதான தன்னுடைய வாசிப்பு சரியாக இருக்கிறதா தான் எதையும் தவற விடுகிறோமா அல்லது பிறரால் சுமாரான ஆக்கம் என்று சொல்லப்படும் ஒன்று தன் பார்வைக்குச் சிறந்ததாகத் தெரிகிறதா என்ற வகையான ஊசலாட்டம் ஒரு இலக்கியவாதியிடம் நிரந்தரமாக இருக்கும். வெண்முரசு சார்ந்தும் அத்தகைய ஊசலாட்டம் இருக்குமானால் அது புரிந்து கொள்ளக்கூடியதே. 

ஆனால் இத்தகையதொரு நிகழ்வே இங்கு நடக்கவில்லை என்ற வகையிலான பாவனைகள் ஆபத்தானவை. ஏதோவொரு வகையில் தமிழ் இலக்கிய உலகம் வெண்முரசை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதை எவ்வளவு விரைவாகவும் தெளிவாகவும் செய்யவிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே தமிழ் இலக்கியத்தில் வெண்முரசின் தாக்கம் என்ன என்பது தமிழ்ச் சூழலுக்குத் தெரியவரும்.

நான் உணரும் ஒன்று உண்டு. என்னுடன் எழுதிக் கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் வெண்முரசால் உந்ததுலும் உற்சாகமும் பெற்றவர்கள் பலர். சூழலில் இப்படி ஒரு பெருநிகழ்வு நடைபெறும்போது இயல்பாகவே அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உப நிகழ்வுகளை உருவாக்கி விடுகிறது. வெண்முரசு அப்படி நிகழ்த்தி இருப்பது என்ன என்பதை அறிவதற்கும் தமிழ் அறிவுச்சூழல் இந்த நாவல் வரிசையை நேர்மையுடன் எதிர்கொண்டாக வேண்டும். வெண்முரசு ஒரு பெரும் நூலாக தன்னுடைய நிறைவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த மாதம் முடிவடையும். அதன்பிறகாவது வெண்முரசு சார்ந்த உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் எழ வேண்டும். அயோத்திதாசர் போல சங்க இலக்கியம் போல வெண்முரசும் அது என்ன என்று புரிந்து கொள்ளப்படாமலேயே நம்முடைய கலைச்செல்வ கருவூலத்திற்கு அனுப்பப்பட்டுவிடக்கூடாது.

புகைப்பட உதவி: http://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_5.html?m=1

 

https://sureshezhuthu.blogspot.com/2020/07/blog-post.html

 

Link to comment
Share on other sites

2014 ல்ஆரம்பிக்கப்பட்டு 2020 வரை 25 வரையான பாகங்கள் கிட்டத்தட்ட 25000 பக்கங்கள் ,தமிழில் வேறு எதும் இப்படியான புத்தகங்கள் இருக்கிறதா தெரியவில்லை
தெரிந்த கதை தானே அதில் எழுத புதிதாக என்ன இருக்கிறது என்ன தான் எழுதுகிறார் பார்ப்போமே என்கின்ற
மனநிலையுடனே தான் படிக்க தொடங்கினேன்
கதையின்ஆரம்ப பகுதிகளும்
மிகு புனைவும் கொஞ்சம் அயற்சியினை தந்தாலும் காண்டீபம்,வெய்யோன் இந்திரநீலம்,மாமலர் ,பன்னிரு படைகளம் ,திசைதேர்வெள்ளம் இலிருந்து துரியோதனனின் இறப்பு வரையான பகுதிகள் வாசிப்புக்கு மிக நன்றாக இருந்தன பாரத யுத்தம் பற்றி வரும் 3-4 புத்தகங்கள் நல்ல விறுவிறுப்பாக இருந்தன..எத்தனை எத்தனை பாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ஒவ்வொரு பெரிய கதை ...
எழுத தொடங்கினால் எதையும் தவிர்க்கமுடியாது..
பூரிசிரவஸ் பால்கீகர்..சாத்யகி.. ஜெயத்ரதன்
பானுமதி..என
ஒருவரியிலாக கடந்த பாத்திரங்கள் எல்லாம் இங்கு பரந்து விரிகின்றன அவர்களின் வம்சாவளி காதலி அரசியர் வாரிசுகள் என..
ஒவ்வொரு நாளும் MRT யில் போகும் போதும் வரும் போதும்,வேலை இடத்தில் கிடைத்த நேரங்களிலுமாக அவரின் தளத்தில் வர வர படித்து கொண்டு வந்தேன்..
இப்போது புத்தகங்களாகவும் கிண்டில் பதிப்பாகவும் வந்துவிட்டன...இனிமேல் தமிழில் மகாபாரதம் என வரும்போது ஜெயமோகனின் வெண்முரசுக்கென ஓரிடம்
தவிர்க்கமுடியாமல் இருக்கும்
109033948_10223566946948110_905014478800
 
 
109382229_10223566947348120_599241667896
 
 
108286500_10223566947628127_809589588690
 
 
109724673_10223566947988136_687276854943
 
 
109693447_10223566948308144_474765781193
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு

சுனீல் கிருஷ்ணன்

 

வெண் முரசு இன்றுடன் நிறைவுற்றது. ஏழாண்டுகள் ஒரு படைப்புடன் பின்னி பிணைந்து கடந்திருக்கிறோம். நாவலின் இறுதியில் வெண் முரசு பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு முரசறைபவன்  நிறுத்தி விட்டான் அதன் கார்வை அதை வாசித்தவர்களுக்குள் விதிர்த்தபடி இருக்கும். மீண்டும் மீண்டும் என இனி வருங்காலங்களில் பல்கி பெருகி செவி நிறைத்து அகம் நிறைக்கும். அளவிலும் தரத்திலும் ஒரு பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. வணங்குகிறேன்  

 

வெண் முரசை பற்றி எவர் எழுதினாலும் அதன் அளவை பற்றி பெரு வியப்புடன் இன்றி குறிப்பிட முடியாது. 1932 அத்தியாயங்கள் கொண்ட 26 நாவல்கள், 25000 த்திற்கு அதிகமான பக்கங்கள். இவை நமக்கு பெரும் மலைப்பை அன்றி வேறு எதையும் தராது.  ஒரு நாளைக்கு ஆறு அத்தியாயங்கள், அதாவது சுமார் அறுபது பக்கங்கள் வாசித்தால் ஒரு வருடத்தில் இந்த நாவல் வரிசையை முடிக்க முடியலாம். இந்த மலைப்பின் மறுபுறம் எழுத்தை எழுதிய அளவை கொண்டு மதிப்பிடக் கூடாது. அதன் தரத்தை கொண்டு தான் மதிப்பிட வேண்டும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சரியான ஏற்புடைய வாதம் தான். 

 

வெண் முரசு ஒரே நேரத்தில் நவீன இலக்கிய பிரதியாகவும் காப்பியமாகவும் உருக்கொள்கிறது என்பதே இதை அணுகுவதில் விமர்சிப்பதில் நமக்கு  சவாலை அளிக்கிறது. காப்பியம் போல் இதை அணுக்க நூலாக, ஏறத்தாழ ஒரு பக்தி நூலாக வாசிக்கக்கூடிய ஒரு பரப்பு உருவாகி உள்ளது. அங்கே எந்தவகையான விமர்சனங்களும் செல்லுய்படியாகாது. நானும் வெண் முரசை அப்படியே வாசித்து வருகிறேன்.   ஆனால் நவீன இலக்கியப்பிரதியாக  வெண் முரசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பு அல்ல. சில பிசிறுகளை, தர்க்கப் பிழைகளை,, ஒர்மையின்மைகளை சுட்டிக்காட்ட புளங்காகிதம் அடையலாம். பெரும்பாலும் விமர்சனம் எனும் பேரில் இவையே நிகழ்கின்றன. இந்த கதைப்பெருக்கில் இவற்றுக்கு எவ்வித பொருளும் இல்லை. அடுத்த சுற்றில் நவீன இலக்கிய பிரதியாக இதை அணுகி வாசிக்க முயல வேண்டும் என்பதே திட்டம்.

 

மற்றொரு வகையான விமர்சனம் என்பது மூலநூல் வாதம் சார்ந்தது. மூல நூலில் இல்லாதவற்றை எழுதுகிறார் என திரும்ப திரும்ப சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்விமர்சனமும் பொருட்படுத்தத்தக்கதல்ல. நவீன இலக்கிய தளத்தில் நின்று இதற்கு பதில் அளிக்கலாம் என்றால், ஊகப் புனைவு  போன்றவையெல்லாம் புழங்கும் சூழலில் துரியோதனன் வென்றதாக கூட ஒருவர் தலைகீழாக மாற்றி எழுத முடியும். மகாபாரதம் என தலைப்பிடாமல் தனித்த ஆக்கமாக முன்வைத்தால் போதும். மரபான தளத்தில் நின்று இதற்கு மற்றொரு வகையில் பதில் அளிக்கலாம். .மகாபாரதம் என்பதே  பல கதைசொல்லிகளின், பல்வேறு நிலப்பரப்புகளில் தொல்கதைகளின் தொகுப்பு. மதுரையில் ஒருவர் எதற்காக அர்ஜுனனுக்கும் அல்லிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்? துரியன் மரணத்தை கூத்தாக இங்கு எதற்காக நிகழ்த்த வேண்டும்? கர்ணனுக்கு பொன்னுருவி என ஒருத்தியை ஏன் மணமுடித்து வைக்க வேண்டும்? காளிதாசனின் சாகுந்தலை எல்லாம் மூல நூலுக்கு உட்பட்ட பிரதியா? மீளுருவாக்கம் என்பது எப்போதும் நிகழ்த்துக்கொண்டே இருப்பது. நவீன இலக்கியம் என கொண்டாலும் கூட பருவம், இரண்டாம் இடம், நித்ய கன்னி, யயாதி என இவையாவும்பாத்திர வார்ப்புகளில் கணிசமாக மாற்றங்களை செய்துள்ளன. இதிகாசங்கள் ஒரு மிக நீண்ட ரயிலை போல்.. காலந்தோறும் அதில் சில பெட்டிகள் இணைக்கப்பட்டபடி உள்ளன. இவற்றை அனுமதித்து செறித்து உருமாறி வளர்வதே இந்திய இதிகாசங்கள் சாமானிய மக்களுடன் கொண்டிருக்கும் தொடர்புக்கான சான்று. இங்கே எப்படி சார் ஜடாயு கிடந்திருக்க முடியும், வால்மீகி அப்படி சொல்லலையே  என திருப்புல்லாணியில் ஒருவர் கேட்டால் அவருக்கு என்ன பதில் அளித்து விட முடியும்? மகாபாரதத்தை ஒற்றை மூல நூலாக ஐந்தாவது வேதமாக காண்பதற்கு இடமுள்ளது போலவே பெருகி ஓடும் நதிபரப்பாக கான்பதற்குமிடமுண்டு. 

 

அடுத்த விமர்சனம் என்பது சமகாலத்தை விட்டுவிட்டு ஜெயமோகன் என்றோ எழுதப்பட்ட ஒரு கதையை எதற்காக வீணாக மீள எழுதுகிறார்? பல இலக்கியவாதிகளும் இந்த விமர்சனத்தை உண்மையான அக்கறையின் பேரில் எழுப்பி இருக்கிறார்கள்.  ஜெயமோகன் தற்காலத்தை எழுதக்கூடாது என சொல்கிறார் என திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. வெண் முரசின் தொடர் வாசகராக ஒன்றை சொல்ல முடியும். ஜெயலலிதா மறைவு தொடங்கி பெரும்பாலான சமகால நிகழ்வுகள் வெண் முரசில் பேசப்பட்டுள்ளன.இலக்கியத்தை பற்றி ஒரு அபார வரி உண்டு. சொன்னவர் ஹெரால்ட் ப்ளூமாக இருக்க வேண்டும். In literature what is present need not be contemporary. ஜெயமோகன் இன்றைய நிகழ்வுகளை எழுதுவதில்லை, ஆனால் அதிலிருந்து ஒரு சாரமான கேள்வியை எடுத்துக்கொண்டு அவற்றை புனைவுகளில் விசாரணைக்கு உட்படுத்துகிறார். நிகழ்வுகள் செய்தி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். எழுத்தாளர் இந்த நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக உடனடியாக ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு எழுதுவதைத்தான் அவர் விமர்சிக்கிறார். செய்திகள் நாளுக்கு நாள் மாறுபடும். ஒரு அன்றாட செய்தியிலிருந்து அதன் அடியாழத்தை தொட முடிகிறதா? அதை எக்காலத்திற்கும் உரிய கேள்வியாக மாற்ற முடிகிறதா? அல்லது குறைந்தபட்சம் இந்த தலைமுறையின், இந்த காலக்கட்டத்தின் கேள்வியாக மாற்ற முடிகிறதா என்பதே கேள்வி. வெண் முரசை முழுவதுமாக வாசித்த ஒருவர் அதில் எத்தனை சமகால விஷயங்கள் வேறு வேறு கோணங்களில் பிரதிபலித்துள்ளன என்பதை அறிய முடியும். இவையாவும் எடுத்துக்கொண்ட கதை களத்திற்கு பொருத்தமாகவும் கையாளப்பட்டுள்ளன. 

 

அடுத்ததாக இந்நாவலின் வடிவம் சார்ந்து, அமிஷ் நாவல்களை போல இவை மிகை புனைவு, கடந்த கால பெருமையை பேசுபவை என ஒரு விமர்சனம் கூறப்பட்டது. வெண் முரசின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அது ஒரே சமயத்தில் குழந்தை கதையாகவும் மெய்ஞான கதையாகவும் பரிணாமம் கொள்வது தான். நாவலில் அபாரமான மிகு புனைவு பகுதிகள் உண்டு. சட்டென ஷண்முகவேல் வரைந்த கார்கோடகன் ஓவியம் மனதில் எழுகிறது. ஆனால் இதே நாவல் வரிசையில் தான் இமைக்கணம், சொல்வளர்காடு போன்ற மிக கனமான நாவல்களும் உள்ளன. முழுக்க முழுக்க செவ்வியல் தமிழில் கவிதைக்கு வெகு அருகே உள்ள மொழியில் எழுதப்பட்ட நீலத்திற்கு முன்னர் உள்ள நாவல்களில் ஒன்றான மழைப்பாடல் முழுக்க முழுக்க யதார்த்த தளத்தில் ஒரு தால்ஸ்தாய் நாவலின் தன்மையை கொண்டிருக்கிறது. 

 

இவையெல்லாம் போக இந்துத்துவத்திற்கு ஆதரவான எழுத்து என இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கருதி வாசிப்பை புறக்கணிக்க வலியுறுத்தினர். தொன்மம் என பழமையை மீட்டுருவாக்க மனுநீதியை நிலைநாட்ட வந்த நூல் என கருதினர். இதற்கு என்னிடம் இருக்கும் பதில் முழு நாவலையும் வாசித்து நீங்கள் முடிவிற்கு வாருங்கள். பாரதத்தில் இல்லாத அளவிற்கு வெண் முரசில் தமிழ் அடையாளங்கள் வருவதால் இது தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரதி என்றொரு விமர்சனமும் உண்டு. இந்த விமர்சனத்திற்கும் வாசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். இந்துத்துவர்கள் மூல நூல் பிறழ்வு, வியாசர் மாதிரியான ரிஷியுடன் மானுட பிறவியான ஜெயமோகன் தன்னை இணை வைக்கலாமா? என வேறு வகையான விமர்சனங்கள். அவர்களிடம் இந்தவகையான அரசியல் காரணிகளை தாண்டி வாசிக்கும் திண்மை இருந்தால் முயன்று பாருங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். இத்தனை பிரம்மாண்டமான பிரதியை நமக்குகந்த அரசியலை கொண்டு புறக்கணிப்பது ஆக எளிய வழி. சரியாக சொல்வதானால் சோம்பேறித்தனமான வழி.  

 

 இந்த ஏழு ஆண்டுகளில் அந்தந்த ஆண்டு சிறந்த நாவல்களின் பட்டியல்களில் நான் உட்பட வெண் முரசு வாசகர்கள் பலரும் பட்டியலில் வெண் முரசை தவிர்த்துவிட்டே பிற ஆக்கங்கள் குறித்து பேசுகிறோம். அசவுகரியமாக இருந்தாலும் கூட நேர்மையாக இன்று தமிழின் முதல் பத்து சிறந்த நாவல்கள் என ஒரு பட்டியல் இட்டால் அதில் பத்து இடங்களும் ஜெயமோகனுக்கே செல்லும், பெரும்பாலானவை வெண் முரசு நாவல்களாகவே இருக்கும். இதை அதிக பிரசங்கித்தனமாகவோ, உணர்ச்சிவசப்பட்டோ கூறவில்லை. 

 

ஒரு நல்ல படைப்பென்றால் அது என் கனவிற்குள் ஊடுருவ வேண்டும் என்பது எனக்கிருக்கும் ஒரு எதிர்பார்ப்பு. இந்த ஏழு வருடங்களில் வெண் முரசு பலமுறை என் கனவுகளுள் புழங்கியுள்ளது. வெண் முரசின் பல்வேறு கதை மாந்தர்களுடன் என்னை வெவ்வேறு தருணங்களில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இலக்கியம் வாசிப்பதும் எழுதுவதும் தன்னை அறிதலின் ஒரு பகுதி என நம்புகிறேன். முன்னர் விஷ்ணுபுரமும் இப்போது வெண் முரசும் எனக்கு என்னை காட்டித்தந்தன.  

 

வெண் முரசை ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும்?

 

நிகர் வாழ்வு- முதன்மையாக புனைவு என்பது நிகர் வாழ்வு வாழ செய்வது. குமரி நிலம் தொட்டு கங்கைக்கரை வடகிழக்கு, இமையமலை, குஜராத், காந்தாரம் என விரிந்த நிலக்காட்சிகளை வாழ்வனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்வை கண்ணுக்கு முன் நிகழ்த்தி காட்டுகிறது. அதில் நம்மையும் ஒரு பகுதியாக ஆக்குகிறது. 

 

மொழி- புதிய சொற்கள், சொல் இணைவுகள், வழக்கொழிந்த சொற்களின் மீள் பயன்பாடு. வெண் முரசு தமிழுக்கு அளித்த சொற்கொடை அளப்பறியாதது, நவீன இலக்கியத்தில் இதுவரை இல்லாதது. நண்பர்களின் ஒரு கணக்குப்படி 38.5 லட்சம் சொற்கள் வெண் முரசில் உள்ளன என்கிறார்கள். 

 

கதை மாந்தர்கள்- கதை என்பது என்னவும் செய்யலாம் முதன்மையாக அது சில கதை மாந்தர்களை நமக்கு அறிமுகம் செய்து நம்முள் வளர்த்து எடுக்கிறது. வெண் முரசின் கதை மாந்தர்கள் தனித்துவமானவர்கள். துரியோதனனும் திருதராஷ்டிரனும் சிறுமை அண்டாதவர்களாக நாவல் முழுவதும் திகழ்கிறார்கள். துரியனுக்காக கண்ணீர் சிந்திய நண்பர்கள் பலர் உண்டு. நேர்மறை எதிர்மறை என பாத்திரங்கள் துருவ நிலையில் நிற்பதில்லை. நாமறிந்த பாரத கதை மாந்தர்களை தவிர்த்து சில வரிகளில் வந்து செல்லும் கதை மாந்தர்கள் வெண் முரசில் பேருரு கொள்கிறார்கள். விசித்திரவீரியன், அவனுடைய அமைச்சர், பூரிசிரவஸ் , ஜராசந்தன், சாத்யகி ஆகியோர் அபாரமான கதை மாந்தர்களாக உருவாகி வருகிறார்கள். இவைத்தவிர வெண் முரசின் தனித்துவம் என்பது அதில் வரும் சிறிய  கதை மாந்தர்கள். முக்கியமான பங்களிப்புகளை ஆற்றி தனித்தன்மையுடன் திகழ்கிறார்கள். சட்டென நிருத்தன், பிரலம்பன், மாருதன், மாலினி, மாயை போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். கதை மாந்தர்களின் வரைபடம் முதல் நாவல் துவங்கி இறுதி வரை மிகவும் துல்லியமாக உருக்கொள்வதை காண முடியும். 

 

எழுத்தாளராக என்னுள் சில படிமங்கள் வளர்ந்து கொண்டே செல்லும். நீவி நீவி அதன் அர்த்தங்களை விரித்துக்கொண்டே செல்லலாம். அத்தகைய ஒரு பெரும் படிமத் தொகையை வெண் முரசு உருவாக்கி அளிக்கிறது. சித்ராங்கதன் காணும் குளம், துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை, ரக்த பீஜன், சித்ரகர்ணி,  அர்ஜுனனின் காண்டீபம், கர்ணனின் கவச குண்டலங்கள் என சிலவற்றை உடனடியாக கூற முடிகிறது. 

 

நாவலின் மெய்யியல் தளம். இந்திய மெய்யியலின் பல்வேறு தரப்புகளை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது. இவற்றை பற்றி தனியே எழுத வேண்டும்.

 

எழுத்தாளாராக நாவலின் கற்பனை சாத்தியங்கள் மற்றும் உத்திகளை கவனித்தேன். கனிகர் போன்ற ஒரு பாத்திரத்தை முழுவதுமாக உருவாக்கி மொத்த தீமையின் பிரதிநிதியாக இளைய யாதவருக்கு எதிராக நிற்க வைப்பதும், பாஞ்சாலியின் அவை சபதத்தை மாயை எனும் அவளுடைய அணுக்க சேடியின் வழியாக நிகழ வைப்பதும் அபாரமான இடங்கள். இவை சட்டென நினைவுக்கு வருகின்றன. தர்க்க மனம் குழம்பும் பித்து நிலையின் விளிம்பு புலப்படும் அத்தியாயங்கள் உண்டு. எல்லாவற்றையும் தலைகீழாக்கி அபத்தமாக பகடி செய்யும் சூதர் கதைகளும் உண்டு. 

 

வரலாறு மற்றும் தகவல்களை பயன்படுத்தும் விதம்- வெண் முரசுக்குள் யுங், ஃபிராய்டு,கிராம்ஷி, லாரி பேக்கர், காந்தி, ஜாரெட் டயமண்டு, கால் சாகன் என எல்லோரும் உண்டு என சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். இத்தனை நூற்றாண்டு கால வரலாறு மற்றும் அறிதலை கொண்டு ஒரு தொல்கதையை மீளுருவாக்கம் செய்யும் போது எவற்றை எல்லாம் எந்தெந்த கோணங்களில் பயன்படுத்தியுள்ளார் என ஆராய்வது எழுத்தாளராக மிக முக்கியம் என எண்ணுகிறேன். ஜெயமோகன் இதுவரை வாசித்த, கற்ற அத்தனை நூல்களின் பிரதிபலிப்பும் வெண் முரசில் நிகழ்ந்துள்ளது. 

 

இன்னும் யோசிக்க யோசிக்க பல காரணங்கள் மனதில் ஊறியபடி இருக்கின்றன. நவீன இலக்கியவாதிகள், நவீன இலக்கிய வாசகர்கள் தவிர்க்க கூடாத பிரதி என வெண் முரசை சொல்வேன். ஆரம்ப மனவிலக்கத்தையும் முன்முடிவுகளையும் கடந்தால் நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வெண் முரசு ஒரு பெரும் ஊக்க சுரங்கம். வெண் முரசு இல்லையென்றால் ஆரோகணம் மாதிரியான ஒரு கதையையோ நீலகண்டம் மாதிரியான ஒரு கதை வடிவத்தையோ என்னால் தேர்ந்திருக்க முடியுமா என தெரியவில்லை. 

 

எனக்கு வாசிப்பில் விடுபட்ட நாவல்கள் என ஒரு ஐந்து நாவல்கள் உள்ளன அவற்றையும் வாசித்து முடித்துவிட்டு ஒரே மூச்சாக முழு நாவல்களையும் ஒரு முறை மீள் வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன். வேன்முரசை வாசிப்பதற்கான ஒரு துணை நூலை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 

 

கண்ணுக்கு முன் ஒரு பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. இதை எப்படி வகுக்க போகிறோம்? எப்படி புரிந்து கொள்ள போகிறோம்? இனிதான் வெண் முரசின் தாக்கத்தை நாம் தமிழ் இலக்கியத்தில் உணர போகிறோம்.  

 

https://suneelwrites.blogspot.com/2020/07/blog-post_16.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

CAEEFA61-93A0-4B23-891B-D7A91E2ECE8E.jpeg


ஆர். அபிலாஷ்

வெண்முரசு நிறைவு பெறுகிறது. சுமார் 25,000 பக்கங்கள். சும்மா ஒரு கணக்கு: ஒரு வருடத்திற்கு ஆயிரம் பக்கங்கள்படிக்கிற வாசகர்களுக்கு 25 வருடங்கள் ஆகும், மற்றவர்கள்இதை மட்டுமே வருடம் முழுக்கப் படித்து ஒரு சில வருடங்களில்முடிக்கலாம். (ஆனால் அது ஒரு ஸ்டாக்ஹோம் சிண்டுரோத்துக்குவாசகனை ஆளாக்காதா? அதாவது கடத்தினவனை வழிபடும்கடத்தப்பட்டவரின் மனநிலை.). நான் இவ்வளவு பக்கங்கள் ஒருவர்எழுதுவதை வியக்கவில்லை, மாறாக ஆறு வருடங்களுக்குமேலாக அவரால் ஒரே மையத்தில் மனத்தை குவித்து, உத்வேகம்குறையாமல், நெருப்பு அணையாமல் பயணிக்க முடிந்திருக்கிறதேஎன எண்ணி அசந்து போகிறேன். மூன்று வருடங்கள் ஒரு நாவலில்மனம் குவித்து எழுதுவதே பலருக்கும் பெரும் பிரயத்தனமாகஇருக்கும் போது இவர் எப்படி ஆர்வம் குன்றாமல் இருக்கிறார்? நடுவே அவர் விட்டிருந்தால் ஒட்டுமொத்த முயற்சியும்வீணாகியிருக்கும். இதில் இளம் எழுத்தாளர்களுக்கு ஒருபடிப்பினை உள்ளது.

 

வெண்முரசை நான் தொடர்ந்து படிக்கவில்லை, உதிரியாகஅவ்வப்போது ஊன்றிப் படித்தேன். “நீலம் போன்ற வெண்முரசுநாவல் வெளியீடுகள் சிலவற்றை வாங்கினேன். எனக்குமகாபாரதக் கதை மீது மட்டுமீறிய விருப்பம் உண்டு. யார்பாரதக்கதையைப் பற்றிப் பேசினாலும் உட்கார்ந்து கேட்டுவிடுவேன், எந்தக் கதை இதன் பின்னணியில் எழுந்தது என்றாலும்படிக்கத் தவற மாட்டேன். ஆனால் ஜெ.மோவின் இத்தொடர்நாவல்களைப் படிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது; இது நான்மட்டுமல்ல மேலும் பல நவீன இலக்கிய வாசகர்கள் உணர்ந்ததே. இதனாலே தமிழ் நவீன உலகில் வெண்முரசு பெரும் தாக்கத்தைஏற்படுத்தவில்லை. யாரும் அவரைப் புறக்கணிக்கவில்லை, மாறாக இந்த தொடர் நாவல்கள் நவீன, பின்நவீன வாசகர்களைப்புறக்கணித்தது. இன்னொரு பக்கம், தீவிர இலக்கியப் பயிற்சிஅதிகம் இல்லாதவர்கள் அல்லது வெகுஜன வெளியில் இருந்துமகாபாரதக் கதையை முதலில் படிக்க வந்தவர்கள் மற்றும்மகாபாரதத்தை புனித நூலாகக் கருதியவர்களுக்குவெண்முரசைப் படிப்பது மேலும் சுலபமாக இருந்தது எனகணிக்கிறேன். ஏன் என சொல்கிறேன்:

 

நாவல் என்ற கலைவடிவம் ஐரோப்பாவில் தோன்றியது. நவீனநாவலானது அதன் போக்கு, வடிவம், மொழி என ஒவ்வொன்றிலும்எந்திரமயமாக்கத்தின், நகரவயப்பட்ட வாழ்வின் நீட்சியாக, பிரதிபலிப்பாக அமைந்தது. இந்தியாவில் நவீன இலக்கியம்தோன்றிய போது நாமும் இதையே பின்பற்றினோம். வணிகநாவலாசிரியர்களே செவ்விலியக்கத்தில் இருந்தும், நாட்டார்நாடக வடிவங்களில் இருந்தும் அம்சங்களை எடுத்துக் கொண்டுவடிவ ஒழுங்கற்ற தொடர் சரித்திர நாவல்களை எழுதினர் - அதில்மிகை கற்பனையான பாத்திரங்கள், சம்பவங்கள் வந்தன, தமிழ்ப்பெருமை குறித்த மீட்புவாதம் தோன்றியது, இவையெல்லாம்சேர்ந்து வெகுமக்களிடையே பெரும் வரவேற்பை இந்நாவல்கள்பெற்றன. ஆனால் தமிழ் நவீன நாவல்கள் நவீனத்துவ அழகியலைகைவிடவில்லை. பின்னர் லத்தீன் அமெரிக்க, ஜப்பானியதொல்மரபின், நாட்டார் கதைகளின் தாக்கம் பெற்று பின்நவீனநாவல் இலக்கியம் ஐரோப்பாவில் வலுவாகக் காலூன்றியது. இதைப் பின்பற்றி நாமும் பின்நவீன கதைகள், நாவல்களைபடைத்தோம். ஆரம்பத்தில் ஐரோப்பிய பாணியில் எழுதி பின்னர்நாட்டார் கதையம்சங்களையும் உள்ளே கொண்டு வந்தோம். ஜெயமோகனுக்கு இந்த இரண்டையும் விடுத்து இந்தியாவின்தனித்துவமான, பாரம்பரியமான கதைகூறல் மரபின் வழியில்நாவல்களை எழுத விருப்பம் என நினைக்கிறேன். தொண்ணூறுகளின் துவக்கத்தில் அவர் பிரசுரித்த நாவல் எனும்விமர்சன நூலில் இப்படியான ஒரு காவிய நாவல் வடிவின்சாத்தியங்களை பரிசீலிக்கிறார். 2014இல் வெண்முரசு துவங்கிய பிறகு தான் அவர் தன் கனவை நடைமுறைப்படுத்துகிறார் - “வெண்முரசின் பிரச்சனையேஇதுதான் என்பது என் பார்வை.

 

 பாரதக் கதை பல முறை நவீன இலக்கியத்தில் மீளுருவாக்கம்பெற்றுள்ளது - ஆனால் இது பாரதக் கதையை திரும்பசொல்வதல்ல. புராணக் கதை ஒன்றை அதே பாணியில்மாற்றமின்றி மீளச் சொல்லும் போது அதற்கு ஒரு காலத்தால்மாறாத உளவியலை அளிக்கிறோம் - கிருஷ்ணருக்கு புன்னகைமாறாத, புத்திசாலித்தனான அழகான குழந்தைமை மாறாதமகத்தான பகவான் எனும் பிம்பம் நமது பாகவத பாராயணங்கள், கதாகாலட்சேபங்களில் தோன்றுகிறது. இதையே பின்னர்மகாபாரதம் தூரதர்ஷனில் தொடராக வெளியான போதுசாம்பலிட்டுத் துலக்கி இயக்குநர் பி.ஆர் சோப்ரா நம் வீட்டுக்குள்கொண்டு வந்து காட்சிப்படுத்தினார். நமது நாட்டார் வாய்மொழிக்கதைகளில் பாரதக்கதை பலவிதமாய் புது வடிவங்களில்பேசப்பட்டது என்றாலும் நாம் திரும்பத் திரும்ப பாரதக் கதையின்பாத்திரங்களை, அவர்களின் உறவாடல்களை, எதிர்கொள்ளும்சந்தர்பங்களை நமது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அல்ல, இந்தபூமியில் இருந்து விலகி மற்றொரு கிரகத்தில் மற்றொரு மகத்தான, கற்பனைக்கப்பான இயல்புகளுடன் வாழ்ந்த மனிதர்களாக, அவர்களின் கதையாகவே பார்த்திருக்கிறோம். ஜெயமோகனும்இதையே செய்கிறார்.

 ஜெயமோகன் நமது மரபில் பாரதக்கதை பலவிததனித்தன்மைகளுடன், ஊடுபாவும் கதையாடல்களும் கவனித்துஉள்வாங்கி தன் நாவல் தொடரில் சித்தரித்தாலும் அதில் ஒருகாவியத்தன்மை வந்து விடுகிறது. .தா., கிருஷ்ணனையோஅர்ஜுனனையோ பற்றிப் படிக்கும் போது இதுவரை நாம் வெகுஜனமரபில், புராண மீளுருவாக்கங்களில் கண்ட அதே நபர்களையே’ - நபர்கள் என்பது கூட தவறு, மாமனிதர்கள் என சொல்லவேண்டும் (!) - காண்கிறோம். இவர்கள் தவறிழைத்தால் மாபெரும்தவறிழைத்தவர்கள், இவர்கள் தும்மினால் அது மகத்தானதும்மலாகிறது, இவர்கள் பார்வையை தவழ விட்டால் அதுதெய்வாதிகமான பார்வையாக புரள்கிறது. இவ்விதத்தில் அவரதுபுகழ்பெற்றக் கதையான பத்மவியூகத்தில் உள்ள கிருஷ்ணரில்இருந்து, அதில் வரும் யுத்தச் சூழலில் இருந்து வெண்முரசு வெகுவாக வித்தியாசப்படுகிறது; அக்கதை வெளியான போதுஈழத்தமிழ் வாசகர்கள் அந்த யுத்தக்காட்சிகளை, மானுட அழிவைதமது நேரடி அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனம்உடைந்து கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் வெண்முரசு அத்தகைய சாத்தியங்களை சுலபத்தில் அளிப்பதில்லை. இதில்வரும் மானுட அழிவானது அமானுட அழிவாக, காவிய அழிவாகஉள்ளது. ஆம், அங்கங்கே சில மீறல்களை ஜெ.மோநிகழ்த்துகிறார், ஆனால் புராணிக, சுட்டுவிரலில் சக்கராயுதம்சுழலும் ஆரவாரங்கள் இடையே இவை காணாமல் போய்விடுகின்றன.

இந்த புராணிக மிகையை பின்நவீனப் புனைவில் மாந்திரகமாகசித்தரிக்கலாம், ஆனால் அந்த மாந்திரிக எதார்த்தத்தில் ஒருவிலகி நின்று ரசிக்கும் மனநிலை உள்ளது. பின்நவீன இலக்கியம்மிகையான மாந்திரிகக் காட்சிகளை ஒரு தற்சார்பற்ற, நம்அனுபவத்துக்கு அப்பாலான ஒரு பொருளாகவே கையாள்கிறது. மார்க்வெஸின் A Very Oldman with Enormous Wings சிறுகதை இதற்கு நல்ல உதாரணம் - கடற்கரை கிராமம்ஒன்றிக்கு வரும் அந்த நீண்ட இறக்கைகள் படைத்ததேவதையைப் போன்ற வயோதிகர் கர்த்தருக்கான உருவகம் எனநமக்குத் தோன்றும்படியே அக்கதை எழுதப்பட்டிருக்கும். மேலும்அவருக்காக வருந்தும் போதே வாசகன் இதை ஒரு வியப்புடன்விலகி நின்று நோக்கவும் செய்கிறான். ஏனென்றால் பின்நவீனஇலக்கியம் மையப்படுத்தப்பட்ட உண்மைகளை ஏற்பதில்லை. அது கதையையும் ஒரு செயற்கையான கட்டமைப்பாகவேபார்க்கிறது. இந்த பிரக்ஞையை ஒவ்வொரு பின்நவீன பிரதியிலும்பார்க்கலாம். ஆனால் ஜெயமோகன் மகாபாரதத்தை ஒருமாந்திரிக எதார்த்தக் கதையாக அல்லாமல், நாம் உணர்வுரீதியாககேள்வியின்றி ஏற்க வேண்டிய புராணமாகவே வெண்முரசில் காட்டுகிறார். இந்த நாவல் வரிசை - அவர் தன் பேட்டியொன்றில்சொல்வதைப் போல - ஒட்டுமொத்தமான இந்திய ஞானத்தை, தொன்மங்களின் சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் எனவிரும்புகிறர. இப்படி ஒட்டுமொத்தமாய் இந்தியாவுக்கு என ஒருசாரமான ஆன்மிகம், வரலாறு, நுண்ணுணர்வு உள்ளதென அவர்நம்புவதாலே துரோணரை துரோணராக, பீஷ்மரை பீஷமராக, கிருஷ்ணனை கிருஷணனாக எந்த பெரிய உடைவுகளும், முரண்களும், பின்நவீன மொழி விளையாட்டுகளும் இன்றிகாட்டுகிறார்; இதனாலே இந்த கதாமாந்தர்களை ஒரு பொருளாககாணுறாமல், சாரமற்ற உண்மையொன்றின் சித்திரமாகபடைக்காமல், சாரம் உள்ள ஒற்றைத்தன்மை கொண்ட ஒருசித்திரமாக உருவாக்குகிறார். பன்முகத்தன்மையே இல்லை எனநான் கூறப் போவதில்லை, ஒரு இலக்கிய படைப்பாளிக்குஇயல்பிலேயே கைவரும் பன்முகத்தன்மை ஜெயமோகனின்கைவண்னத்திலும் அங்கங்கே வெளிப்படுகிறது, ஆனால்ஒட்டுமொத்தமாக ஜெயமோகன் நம்மை ஒரு மையமானகதையாடலுக்கே அழைத்து செல்ல முனைகிறார். இது அவர்பின்நவீனத்தின் அடிப்படையான கருத்தியலான அர்த்தமின்மை, சாரமின்மை போன்றவற்றை ஏற்கவில்லை, பாரதவர்ஷத்துக்குஆன்மா என ஒன்று இருக்கிறது என நம்புவதாலே நிகழ்கிறது. அதாவது இது ஒரு அழகியல் சிக்கல் மட்டுமல்ல, ஜெயமோகன்தத்துவார்த்தமாய் சமகால பின்நவீன சிந்தனைப் போக்குகளுக்குஎதிராக இருக்கிறார் என்பதே வெண்முரசாகி இருக்கிறது.

 

அடுத்து, இலக்கியப் படைப்புக்கு என ஒரு அளவுகோல் உள்ளது(இலக்கியப் படைப்பு என பெயருக்குதான் சொல்கிறேன் - எந்தபடைப்பூக்கமான பிரதிக்குமான அளவுகோல் இது) - பாத்திரங்கள், அவர்களது செயல்கள், அவற்றாலான கதை நகர்வுஒவ்வொன்றிலும் உள்முரண்கள் வேண்டும். பீஷ்மர் வருகிறார்என்றால் அவர் என்னவெல்லாமாகக் காட்டப்படுகிறாரோ அதற்குநேர் மாறான ஒரு சித்திரமும் உணர்த்தப்பட வேண்டும். அவர்இன்னவகையானவர் என தெளிவுபட முடியாதபடி ஒருபூடகத்தன்மை வேண்டும். ஜெ.மோ இங்கு சிக்கல்களை பாத்திரஅமைப்பில் கொண்டு வரும் அளவுக்கு உள்முரண்களை, பொருள்மயக்கத்துக்கு இடமளிப்பதில்லை. “வெண்முரசின் பீஷ்மர் நாம் தூரதர்ஷனில் கண்ட அதே பீஷ்மராக மூச்சைஇறுக்கிப் பிடித்த நிலையில் இருக்கிறார்.

 

திரௌபதனின் நாட்டை பாண்டவ, கௌரவ சீடர்களைக்கொண்டு வியூகம் வகுத்து துரோணர் கைப்பற்றுவதைப் போன்றபல காட்சிகள் சினிமாத்தனமாக உள்ளன. இதை நான் இதற்குமுன்பு ஜெயமோகனின் நாவலில் கண்டதில்லை

 

நவீன இலக்கியத்தில் பீஷ்மரைக் கொண்டு வந்தால் அவரைசமகாலத்தின் பல உளவியல், தத்துவச் சிக்கல்களுக்குஆட்படுத்தி ஒரு உருவகமாக மாற்றுவோம். இதுவே வாசகனுக்குசுவாரஸ்யமாகிறது. பல உடைவுகளை பண்பாட்டுத் தளத்தில்சாத்தியமாக்குகிறது, நிறைய அடுக்குகளை அந்த பாத்திரத்துக்குஅளிக்கிறது. ஆனால் ஜெ.மோ நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டமீட்புவாதத்தையே பிரதானப்படுத்துகிறார். இதுவே வெண்முரசு இலக்கிய வாசகனுக்கு அலுப்பூட்ட முக்கிய காரணம் எனநினைக்கிறேன்.

 

ஆனால் ஜெயமோகன் இதைத் தெரியாமல் செய்த பிழையாக, அவரது படைப்பாற்றலில் ஏற்பட்ட சறுக்கலாக நான்கருதவில்லை அவர் திட்டமிட்டே ஒரு மீட்புவாத புராண நாவலாகஇதை இயற்றியிருக்கிறார் - இதற்கு அவர் புராணிக எதார்த்தம் என ஒரு பெயரும் அளிக்கிறார். அது என்னவோ, நம்மைப் போலஇலக்கிய வாசகர்களுக்கு கண்ணைக் கட்டி டினோசர்கள்மத்தியில் உலவ விட்டதைப் போல இருக்கிறது.

 

மற்றொரு பக்கம் இந்த நாவல் வரிசை வெகுஜன வாசகர்களில்மகாபாரதக் கதையை வாசிக்கும் விருப்பம் கொண்டோர் இடையேநல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு தூரதர்ஷன்மகாபாரதத் தொடரில் இருந்து வெண்முரசுக்குத் தாவுவதுவெண்ணையை ரொட்டியில் தடவி உள்ளே இறக்குவதைப் போலசுலபமாக இருக்கிறது. ஜெயமோகன் இவர்களை இலக்காக்கியேஇதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன், கூடவே நவீனவாசகர்களும் படித்தால் நல்லது என எதிர்பார்த்திருக்கலாம். (இந்த இரு சாராருக்கும் நடுவே விஷ்ணுபுரம் வாசக வட்டத்தினரைஎங்கே வைப்பதெனத் தெரியவில்லை.)

 

எப்படியோ, ஜெயமோகன் தான் நினைத்ததை சாதித்திருக்கிறார். அவருக்கு அதற்கான முழு உரிமையும் உள்ளது. விவிலியத்தில்ஊதாரி மைந்தன் என ஒரு கதை வரும். ஊதாரி மைந்தன் எல்லாசெல்வத்தையும் அழித்துவிட்டு வீடு திரும்பும் போது அவனதுவயதான அப்பா அவனுக்கு ஆடு, கோழி அடித்து விருந்து படைத்துவரவேற்பார் நாமும் ஜெயமோகனை வரவேற்போம். அவருக்குவாழ்த்துக்கள்
 

http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_16.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசு: ஒரு தன்னுரை

by கடலூர் சீனு • September 1, 2020 
 
IMG-20200829-WA0016

2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு வருகையில் அந்த நிகழ்வு கைவிடப்பட, அந்தத் துவக்கம் அங்கே வரை வந்து நின்றது. தயாரிப்பு நிறுவனத்துடன் சம்பந்தம் கொண்ட பிரதி ஆகவே, அது பொதுவில் வாசிக்கக் கிடைக்காது. பிரதி சீரமை நோக்கும் பணி எனக்கு என்பதால், நான் மட்டும் அதன் ஒரே வாசகன். இந்தப் பின்புலத்தில் இந்த மனிதன் இங்கே நின்றுவிடும் மனிதன் அல்ல என்பதை நானறிவேன்.

காரணம் பாரதப் பெருவெளியைத் தனது தேடல் களமாகக் கொள்ளவேண்டும் என்பது, குரு நித்யாவின் மாணவர் எனும் நிறையில் ஒருவராக ஜெயமோகனின் நெடுநாள் கனவு. நாராயண குரு எனும் இயக்கம் என்ற தலைப்பில் தனது குரு வரிசையின் செயற்களத்தை ஜெயமோகன் விரிவாக எழுதி இருக்கிறார். இந்த குரு மரபில் பகவத் கீதை வகிக்கும் இடம் வாசகன் தனியே பயில வேண்டிய களம். அந்த வரிசையில் வரும் ஜெயமோகன் பகவத் கீதையை அதன் ஒட்டு மொத்த பின்புலத்துடன்  எங்கணம் தனது போதத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தார் என்பதன் இலக்கிய சாட்சியமே கிருஷ்ணன் எனும் மகத்தான இந்திய மர்மத்தை மையம் கொண்ட வெண்முரசு எனும் பெரும்புனைவு.

இந்திய சமூக மறுமலர்ச்சித் தொடங்கி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியைத் தொடங்கி வைத்த பாரதி வரை, பகவத் கீதையின் பாரதக் கதைகள் தாக்கம் யாவரும் அறிந்ததே. பாரதிக்குப் பிறகு தீவிரத் தமிழ் இலக்கியம் மரபுடனான தொடர்பை விசாரணையே இன்றி துண்டித்துக் கொண்டது. இந்தப் போக்கை விமர்சனப் பூர்வமாக அணுகி தனது புனைவுலகு வழியே, ஜெயமோகன் மரபினை மறுவிசாரணை செய்தார். பின் தொடரும் நிழலின் குரல் நாவலே மகாபாரதத்தின் நவீன வடிவம்தான். குருஷேத்ரமோ ஈழமோ இந்தப் பலிகளுக்கு என்ன பொருள் என்று போரைத் திரும்பி நின்று கண்ட ஒரு மனம், வரலாறு நெடுக நீளும் காலாதீதம் கொண்ட வினா.

பத்ம வியூகம் கதை எழுப்பிய அந்த வினா ஈழ சூழலில் அன்று எழுப்பிய அதிர்வுகள், இலக்கிய வரலாறு. என்றுமுள்ள தகிக்கும் வினாக்கள் விரவிய களம் வியாச பாரதம். வெவ்வேறு தருணங்களில் சிறு சிறு கதைகளாகவும், நாடகமாகவும், பாரதத்தின் குறிப்பிட்ட தருணங்களை எழுதிப் பார்த்திருந்த ஜெயமோகன், முதல் சொன்ன துரியோதனன் பிறப்பு வரை வந்து நின்று போன முயற்சிக்குப் பிறகு, இனி எதன் பொருட்டும் அல்ல, தனது தேடலின் பொருட்டு மட்டுமே பாரதத்தை எழுதி முடிப்பது என்று வீறு கொண்டு எழுந்தார். மகள் சைதன்யாவுக்காக எழுத முடிவு செய்தார். அன்றுதான் என்னை அழைத்திருந்தார்.

இது எதிர்காலத்தில் என்ன வரவேற்பு பெறும், இது என்ன தாக்கம் விளைவிக்கும் என்றெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பத்து வருடம், தொடர்ந்து தினமும் எழுதி நிறைவு செய்வேன். அதுவே என் இலக்கு. உங்களைப் போன்ற மிகச் சில நண்பர்களிடம் மட்டும் நான் கேட்பது ஒன்றுண்டு. எந்தக் காரணம் கொண்டும் இடை வெட்டி நிறுத்தாதீர்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் உட்பட ஒரு பத்து பேர் போதும். நீங்கள் தினமும் வாசிக்கிறீர்கள் எனும் உத்வேகம் போதும். இதை எழுதி நிறைவு செய்து விடுவேன். எனவே தினமும் வாசியுங்கள் என்றார். இப்படியாக நான் நிறைவேற்ற வேண்டிய ஒரு வாக்காக வெண்முரசு எனும் வாசிப்பின்பம் என்னை வந்து சேர்ந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகான கல்வி அமைப்பு நவீனம், அறிவியல்பூர்வம் என்ற இலக்கில் இந்திய மரபுச் செல்வம் மீது பாராமுகம் காட்டினாலும், பாரதக் கதை கேட்டு வளராத இந்தியக் குழந்தைகளே இல்லை எனும் வகையில்,  குழந்தைகளுக்கு வியாச பாரதத்தை காமிக்ஸ் வடிவில் கொண்டு சேர்த்தவர் ஆனந்த் பய். தொலைக்காட்சி புரட்சி துவங்கியபோது இல்லம் தோறும் பாரதக் கதையைக் கொண்டு சேர்த்தார் பி ஆர் சோப்ரா. இது இரண்டையும் வாசித்துக் கண்டு வளர்ந்தவன் நான். எனது கூட்டுக் குடும்ப தலைவர் என் தாத்தா, தீவிர தி க. (பின்னர் தனது மகள் ஒருவரின் வாழ்வு தடுமாறியபோது “நா பண்ண தப்புக்கு எம் புள்ளய தண்டிச்சிட்டியே முருகா” என்று கதறியவர்) குடும்ப உறுப்பினருக்கு தி க ஞானஸ்நானம் செய்த பெயர்தான். சித்தப்பா இருவருக்கும் தமிழரசன் ராவணன் எனும் பெயர் இறுதிவரை நீடிக்க என் அப்பா மட்டும் லிங்க ராஜ் என மாறிவிட்டார். அப்பாவின் அம்மா போடிநாயக்கனூர்காரி. எழுத்தறிவற்றவர். ஆனால் நாட்டுப்புறத்தில் புழங்கும் மகாபாரதக் கதைகள் மொத்தமும் அறிந்தவர். தாத்தா பெயர் தர்ம ராஜ். அந்த தரும ராசாவே வந்து தன்னைப் பெண் கெட்டிக் கூட்டிச் சென்ற நினைப்பில் வாழ்ந்தார். கணவர் பெயரைச் சொல்ல மாட்டார். கணவன் பெயரை மனைவி சொன்னால் பதி பக்தியில் இழுக்கு நேரும் என்பது அவர்கள் கால நம்பிக்கை. ஒரு முறை அரிசி அட்டை கொடுக்கும் ஊழியர் குடும்ப உறுப்பினர் சரிபார்க்க வீடு வந்தார். பாட்டி வசம் உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன என்று அவர் வினவ, பாட்டி சொன்ன பதில்

“பஞ்சபாண்டவஹல மூத்தவுஹ”

இப்படி ஒரு பெயரா. திடுக்கிட்டுப் போனார் ஊழியர்.

தர்மரின் கதையை, தான் உடல் நலம் குன்றி, படுக்கையில் இருக்கையில் (அன்றெல்லாம் காசநோய்க்கு மருத்துவம் அரிது. புதுமை பித்தன் போல இருமி இருமி சாக வேண்டியதுதான்) அப்பா பாட்டி வசம் கதையாகக் கேட்டார். அவ்வாறே பிற பாரதக் கதைகளும் அவரை வந்து சேர்ந்தன. நெல்லையை விட்டு அப்பா தொழிலுக்காகக் கடலூர் வந்தார். கடும் உழைப்பில் நகரும் வாரத்தில், ஞாயிறு மட்டும் அரைநாள் விடுமுறை. அன்றிரவு குடும்பம் மொத்தமும் கதைபேசியபடியே இரவு உணவு உண்போம். முட்டை போல பொரித்த அப்பளத்தைச் சற்றே ஓட்டைப் போட்டு, உள்ளே ரசம் சோறு நிரப்பி, தங்கைக்குத் தருவார் அப்பா. என் இரண்டு கையைக் குவிக்கச் செய்து பெரிய கவளமாக உணவைப் போடுவார்.  உண்டபடியே கதை கேட்போம். எல்லாமே பாரதக் கதைதான். வரங்களால் உயரந்தெழும் மாமனிதர்கள் சாபங்களால் சரியும் கதைகள். சொன்ன சொல்லின் பொருட்டு உயிரையும் அதற்கு அளிக்கத் துணிந்து நிற்கும் ஆளுமைகள். எத்தனை எத்தனை மனிதர்களின் கதைகள். கதைகள் ஒன்றினில் சகுனியின் அப்பா பீஷ்மரால் பழிவாங்கப் பட்டவர். சகுனிக்குத் துரியோதனன் போல நூறு சகோதரர்கள் உண்டு. நூறு பேரையும் சிறையில் இட்டு வதைக்கிறார் பீஷ்மர். எல்லா சகோதரர்களுக்கும் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே அளிக்கிறார். நூறு பருக்கை சேர்ந்தால் ஒரு பிடி. சகோதரர்கள் அனைவரும் பிடி சோற்றைச் சகுனிக்குத் தந்து அவனைப் பாதுகாத்து, தான் இறந்து அவனைத் தப்புவிக்கிறார்கள். தந்தை இறந்த பிறகு அவரது தொடை எலும்பில் சதுரங்க எண் பாய்ச்சிகை செய்து கொள்கிறான் சகுனி. அதில் அவன் தந்தையின் உயிர் ஆவாகனம் கொண்டிருக்கிறது. சகுனி சொன்னபடி அது கேட்கும். சகுனி சொன்ன எண் அப்படியே விழும். பீஷ்மரால் தவிர்க்க இயலா சந்தர்ப்பம் வழியே சகுனி பீஷ்மரின் குடிக்குள் நுழைகிறான். பீஷ்மர் கண் முன்னால், அவர் பற்றுக் கொண்ட அனைவரையும் கொலை களம் அனுப்புகிறான்.

பகையாளர் குடியை உறவாடிக் கெடு எனும் சொல்லுக்கு விளக்கம் என இப்படி ஒரு கதை எழுந்து வரும். வாரா வாரம் வித விதமான கதைகள் கர்ணனின் கதை, சகாதேவன் கதை, பாஞ்சாலி கதை, குந்தி கதை, அனைத்துக்கும் மேலாக பீமனின், கிருஷ்ணனின் கதை. கதைகள் சொன்ன அப்பா, எதோ ஒரு தருணத்தில், இந்தப் புரிந்து கொள்ள இயலா மர்மங்கள் கொண்ட மனிதர்கள் வாழ்க்கை மத்தியில் என்னைத் தனியே விடுத்து மறைந்து போனார். புரிந்து கொள்ள இயலா இந்த வாழ்வின் மீது ஒளி பாய்ச்சியது இலக்கியம். இலக்கியம் இந்த வாழ்வை அறிவதற்கான வழிமுறைகளில் ஒன்று என்ற போதத்தை எனக்குள் விதைத்தவர் ஜெயகாந்தன். அவரில் தொடங்கியே நான் ஜெயமோகனை அவர்  வழியே விஷ்ணுபுரத்தைத் தொடர்ந்து வெண்முரசுவரை வந்தடைந்தேன்.

unnamed

வெண்முரசு எனும் நிகழ்வு துவங்கும் முன் அது இலக்கியக் களத்தில் என்னென்னென்ன விதமான எதிர்வினைகளை எதிர்கொண்டது என்பதை எண்ணிப்பார்க்க இக்கணம் சரியான தருணம் என நினைக்கிறேன். நவீன தமிழ் இலக்கியகர்த்தாக்கள் ஒரு செயல் திட்டம் போலவே, மரபு சார்ந்த எந்த ஒன்றும் தங்களது புனைவுக் களத்துக்குள் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அது உருவாக்கிய விமர்சனக் கொந்தளிப்பில் அதைக் காணலாம். இன்றும் நிலவரம் பெரிதாக மாறிவிடவில்லை. வெண்முரசு பெரிய அளவில் சென்று சேர விரும்பிய நண்பர்கள், அதற்கொரு பிரமோ வீடியோ உருவாக்க முடிவு செய்தனர். அந்தப் பணியில் சிலரைப் படம் பிடிக்க நானும் அணுகினேன்.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஜெயமோகனின் நெருங்கிய நண்பரும் கூட, இந்த பிரமோவுக்கு வெண்முரசு சார்ந்து உங்கள் வாழ்த்து இருப்பின் வீடியோவில் தெரிவிக்கக் கேட்டேன். தனிப்பட்ட உரையாடலாக மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்த வெண்முரசு எனும் முயற்சியை மறுதலித்தார். கண்டித்தார். ஐம்பதாண்டு பகுத்தறிவு உருவாக்கிய சமூக நீதியை மீண்டும் பிராமணீயம் உண்டு செறிக்க வழிவகை செய்யும் முயற்சி இது என்பது அவர் தரப்பு. இருப்பினும் இந்தச் செயல்பாடு இலக்கிய ஜனநாயகம் எனும் முறையில் ஆதரித்து பிரமோவில் பங்கேற்றார். ஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை இதே நிலையில் இருந்தாலும், ப்ரமோவில் பங்கு கொள்ளாமல் நழுவினார். அசோகமித்திரன் கூட நா.மு போலத்தான். ஜனநாயக தன்மையுடன் இதை ஆதரித்தார். தனியே கேட்டிருந்தால் என்னாத்த அத போட்டுக்கிட்டு திரும்ப எழுதிக்கிட்டு என்றுதான் பதில் சொல்லி இருப்பார். தமிழின் முக்கியமான கவிஞர் (கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் இவருக்கு விருப்பமானது) தனி உரையாடலில் இந்துத்துவத்தை அடி வருடும் முயற்சி இது என்றார். மற்றொரு முக்கிய எழுத்தாளர் நவீன தமிழ் இலக்கியம் அடைந்தது எல்லாம் வீணாகும் வகையில், சூழலை ஒரு நூறு வருடம் பின்னோக்கி இழுக்கிறார் ஜெ என்றார். நான் வெகு இயல்பாக “சரி சார் அதுக்கு எதிரா நீங்க ஒரு நாவல் எழுதி, சூழலை இருநூறு வருஷம் முன்னாடி இழுத்துட்டு போய்டுங்க அவ்ளோதானே சிம்பிள்” என்று சொல்ல கடுமையாக மனம் புண்பட்டு சில வருடம் பேசாமல் இருந்தார். கிட்டத்தட்ட மன்னிப்புக் கேட்டு சமாதானம் ஆனேன். பி.ஏ கிருஷ்ணன், அ. முத்துலிங்கம், இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட மிக சில எழுத்தாளர்கள் தவிர பிறர், மேற்சொன்ன மனநிலையும் கருத்தும் கொண்டவர்களாகவே வெண்முரசு எனும் நிகழ்வை எதிர்கொண்டார்கள்.

ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையே புனைவாக   மறுஉருவாக்கம் செய்த வெண்முரசு எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அதை அத்யாயம் தோறும் நுட்பமாக அணுகி வாசித்த சான்றாகப் பல்லாயிரம் சிறந்த கடிதங்கள் வந்தன. வந்து கொண்டும் இருக்கும் அக்கடிதங்களுக்காக மட்டுமே தனியே ஒரு தளம் இயங்குகிறது. வெண்முரசு வாசிப்புச் சாத்தியங்கள் சார்ந்து அறிந்து கொள்ள இன்று அது முக்கியத் தளம். வெண்முரசு எப்படியெல்லாம் வாசிக்கப்படக் கூடாது என்பதற்குச் சான்றாகவும் சில கட்டுரைகள் வேறு தளங்களில் வெளியாகின. சுனில் கிருஷ்ணன் போன்ற சில இளம் எழுத்தாளர்கள் தவிர, முந்திய தலைமுறை எழுத்தாளர்கள் எவரும் வெண்முரசு குறித்து எழுதவில்லை. வாசிக்கிறார்கள் என்பதன் சுவடும் இல்லை. நானறிந்து வெண்முரசு நாவல் நிறை முழுமையும் படித்த ஒரே எழுத்தாளர் பாவண்ணன்.

முன்பு ஒரு காலத்தில் ஒரு நாவல் வெளியானதும், அது குறித்த சூழலில் நிலைபெறும் முதல் உரையாடலை முன்னெடுப்பவர்களாக சக எழுத்தாளர்களே இருந்தார்கள். அதாவது சுந்தர ராமசாமி காலத்தில். அந்த உரையாடலுக்குப் பிறகு உடன் நிகழ்வாக விமர்சன உரையாடலும், வாசகர் வாசிப்பும் நிகழும். இந்த நிகழ்வுக்குப் பிறகே ஒரு புனைவு சார்ந்து சூழலில் ஒரு மதிப்பீடு திரண்டு வரும். அந்த மதிப்பீட்டை ஊடறுக்கும் கோவை ஞானி போன்றவர்களின் விமர்சனங்கள் நிகழும். இத்தகு செயல்பங்கு இந்த 2020 இல் வழக்கொழிந்துபோனது என்றே சொல்லவேண்டும். நவீன இலக்கியத்தின் ரசனை விமர்சனத்தைத் தனது பரிந்துரைகள் வழியே க.நா.சு விரிவாக்கினார். சு.ரா, தேவதச்சன் போன்ற பல படைப்பாளிகள் உரையாடல் வெளியை நிகழ்த்தும் முதல் மையமாகத் திகழ்ந்தார்கள்.

பொதுவாகக் கேரளம், வங்கம், கர்நாடகம் போல தமிழ் நிலம் வளமான யதார்த்த இலக்கியம் கொண்டதில்லை. தகழியம் காரத்தும் கோலோச்சிய சூழலில் நமக்குக் கிடைத்தது கல்கியும் அகிலனும்தான். கன்னடத்தில் ‘அழிந்த பிறகு’ போலவோ, மலையாளத்தின் ‘காசாக்கின் இதிகாசம்’ போலவோ ஒரு வலிமையான நவீனத்துவப் புனைவு உருவாக்கியதில் தமிழ் நவீன இலக்கியம். சோகையான இந்த நவீனத்துவம் பிறகான அடுத்த ஒரு பத்துப் பதினைந்து  ஆண்டுகள் கட்டுடைத்தல் போன்ற விமர்சன போக்குகளும் பின்நவீன மொழுக்கட்டை பிரதிகளும் நின்று சாமியாடின. இன்று தமிழில் நிகழ்ந்து ஓய்ந்த அந்தப் பின்நவீனம் எனும் மியூசியத்தில் வைப்பதற்குக் கூட எந்த ஸ்பெஸிமனும் எஞ்சி இருக்கவில்லை. ‘ஜிரோ டிகிரி’யைத் தவிர ஒரே ஒரு பிரதி கூட இன்று அச்சிலோ வாசிப்பிலோ இல்லை. நாகார்ஜுனன் பூர்ணச்சந்திரன் தமிழவன் பிரேம் ரமேஷ் எம்ஜி சுரேஷ் இவர்கள் ஆக்கங்கள், இவர்கள் வைத்துக் குட்டிக்கரணம் போட்டுக் காட்டிய கோட்பாட்டு விமர்சனக் கழிகள் எல்லாம் எங்கே போயின?  ஆலன் சோக்கால் உலகளவில் இந்த பின்நவீன டப்பாங்குத்து எல்லாம் வெத்து வேட்டு என்று நிறுவிய பிறகும், தமிழில் மட்டும் அந்த அசட்டுத்தனம் அப்படியேதான் இன்னும் தொடர்கிறது.

தமிழ் நிலத்துக்குச் சொந்தமான மெய்யியல் ஒன்றின் வேரைத் தேடிப் பயணம் செய்த கொற்றவை போல இந்தியப் பண்பாட்டின் சாரமான மெய்மையின் வேர்களை நோக்கிப் பயணிப்பது வெண்முரசு. பின் நவீனம் பேசும் மையத்தை மறுத்தல், விளிம்புகளை அங்கீகரித்தல், பன்மைத்துவத்தை அதன் இயங்கியலை அங்கீகரித்தல் இவை பெருங்கதையாடல் மரபிலும் உண்டு. பௌத்தமும் வேதாந்தமும்தான் அது. இயற்பியல் முதற்கொண்டு தியரி ஆப் எவ்ரிதிங் எனும் இலக்கில் பெருங்கதையாடலின் இயங்கியலின் மறுமுனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெண்முரசு இந்த இயங்கியலின் அடுத்த படி. விஷ்ணுபுரம் தமிழின் அதுவரை எனும் நிலையை உடைத்த அடுத்த படி. விஷ்ணுபுரம் அடுத்த படி என்று அறிய வர சூழலுக்குப் பத்துவருடம் தேவையாக இருந்தது. நவீனம், பின்நவீனம் எனும் தத்துவங்கள் அழகியல்கள் தமிழில் கொண்டு வந்து சேர்த்தவற்றின் காலம் இங்கே முடிகிறது. வெண்முரசு இவற்றின் அடுத்தபடி.

இவை போக வெண்முரசு நிகழ்வு எனும் சமகால சூழலின் மிக முக்கிய அலகு இந்துத்துவர்கள். இந்துத்துவர்  ஒருவரின் பதிவு இவ்வாறு முடிந்தது. இளம் தலைமுறை இதுதான் மகாபாரதம் என்று மயங்கி விடும் ஆபத்து உண்டு. அவர்கள்  மூல மகாபாரதத்தை வாசிப்பதே சிறந்தது. இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று சாக்ரடிஸ் மீது விழுந்த அதே குற்றச்சாட்டு. இந்த மூலநூல்வாதம் பேசும் இந்துத்துவர்கள் இந்த நாவல் துவங்கியபோது ஒரு அலை போல பொங்கி வந்து குவிந்தார்கள். கொஞ்ச நாளில் தங்கள் அரசியலுக்கு முட்டுக்கொடுக்க வந்த பிரதி அல்ல இது என்று தெரிந்த பிறகு, தலையைச் சொரிந்துகொண்டே பின்வாங்கி சென்றார்கள்.

இவர்களுக்கு வெளியே, வெண்முரசு நிறையை அனுபவித்தும் நுட்பமாகவும் வாசிக்கும் பல குடும்பங்களை நேரடியாகவே நான் அறிவேன். அப்படி ஒரு குடும்பமே புதுவை அரிகிருஷ்ணன் குடும்பம். குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் அதன் வாசகர்கள். வெண்முரசு பேசும் அனைத்து நுட்பங்களையும் விரித்துப் பொருள்கொண்டு ரசித்து வாசிக்க அக்குடும்பம் ஒரு கூடுகையைத் துவங்கியது. பாவண்ணன், நாஞ்சில்நாடன், கீரனூர் ஜாகிர் ராஜா என ஆசிரியர் ஜெயமோகன் உட்பட பலர் இந்தக் கூடுகைகளில் கலந்து கொண்டார்கள். சென்னை, கோவை என பல இடங்களில் வெண்முரசு கூடுகை நிகழ்கிறது. பல ஆயிரம் பேர் இந்தப் பெரு நாவலை முழுதாக வாசித்திருக்கிறார்கள்.  தத்துவம், ஆத்மீகம் தொன்மங்கள் உளவியல் சமூகவியல் அரசியல் அழகியல் என வெண்முரசு எனும் பெரும்புனைவை விரித்துப் பொருள்கொள்ள தேவையான உரையாடல்கள் இனி நிகழும். நிற்க.

என் தனி வாழ்வில், வெண்முரசு நாவல் நிறையை வாசித்து நிறைவு செய்த இந்த நாள் ஒரு நன்னாள். இருள் வெளியில் என்னை நிறுத்தி, என்னைக் கைவிட்டுச் சென்ற தந்தை பேரொளியுடன் திரும்பி வந்து என்னை அணைத்துக் கொண்ட நாள். உணவு தந்து பாரதக் கதையும் சொன்ன என் தந்தை போலவே, அவருக்கும் மேலாக நின்று உணவும் தந்து வாழ்நாளுக்கும் தீராத பாரதக்கதையும் தந்த என் ஆசிரியர் ஜெயமோகனை நான் முழுதுற உணர்ந்த நாள்.  முன்பொரு சமயம் நடந்தது இது. ஜெயமோகன் அவ்வப்போது எனக்கு ஏதேனும் நூல்கள் பரிசளிப்பார். அந்த நூல்களில் எதையேனும் எழுதச் சொல்லி அதன் கீழ் அவரது கையொப்பம் போட சொல்லி நூலை பெற்றுக்கொள்வேன். பன்னிரு படைக்களம் நூலை பரிசளிக்கும்போது ஒரு விஷயம் சொன்னார். கேரளத்தில் ஒரு முறை உண்டாம். ராமாயணம் மகாபாரதம் ஏதேனும் ஒன்றை எடுத்து (மனம் குழம்பி சுபம் ஏதேனும் தேடும் சூழலில்) ஏழு பகுதிகள் விட்டு கண்ணில் படும் வரியை வாசிப்பார்களாம். அவர்களுக்கான செய்தி அங்கே இருக்குமாம். உங்களுக்கு என்ன வருது பாப்போம் என்று பன்னிரு படைக்களம் நூலை கையில் எடுத்தார்.

ஏழு பகுதி தாண்டினார். ஏழு பக்கம் தாண்டினார். ஏழு பாரா தாண்டினார். அடுத்த பாராவில் ஏழு வரி தாண்டினார். எட்டாவதாக வந்த வரி எதுவோ அதை எழுதி அதன் கீழ் கையெழுத்துப் போட்டுத் தந்தார். திருதுராஷ்டிரர் பேசுவதாக வரும் அந்த வரி …

“மைந்தா இப்புவியில் முதன்மையான உறவென்று நான் உன்னையே நினைக்கிறேன்”

இந்த நாவல் நிறையை எனக்களித்த தந்தைக்கு நிகர்த்த ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இப்பிறப்புப் போல எப்பிறப்பிலும்  என் பிரியமும் நன்றியும்.

 

http://vallinam.com.my/version2/?p=7083

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்

by ஜா.ராஜகோபாலன் • September 1, 2020

n95PGROa_400x400-300x300

வெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன? நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன்.

“சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப்  பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என நினைக்கிறீர்கள்? பொருந்தாது என்பதற்கு என்ன காரணங்களைச் சொல்கிறீர்கள்? பொருந்தக் கூடிய காலம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?“ என்று கேட்டேன்.

நண்பர் “இவ்வளவு நீளமாக எழுதுகிறார், ஏற்கனவே எழுதியதைத் திரும்ப எழுதுகிறார், இன்றைய சூழலுக்கு நீதிநெறிக் கதைகள் எதற்கு? சில சமயம் கதையை மாற்றிச் சொல்கிறார், சில சமயம் நீளமாக வர்ணனைகள் சொல்கிறார்,” என்று ‘பலமுறை சிலசமயம்’ போட்டுப் பேசிக்கொண்டே போனார்.

நான் “இவை படைப்பை வாசிப்பதிலிருந்து உங்களைத் தடுக்கிறதா?” எனக் கேட்டேன்.

நண்பர் “இல்லை, ஆனால் சில சங்கடங்கள் வருகின்றன. நவீன இலக்கியவாதி என்ற பெயரில் இவர் ஏன் புராணத்தை எழுத வேண்டும்?” என ஆரம்பித்துப் பல விமர்சனங்களையும் வைத்தார். அவருக்கு அளித்த பதில்களையே இங்கும் பேசுகிறேன்.

வெண்முரசு படைப்பின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பொதுவான மூன்று தலைப்புகளில் பிரித்துக் கொள்கிறேன். அதிலிருந்து நாம் உரையாடலைத் துவக்கலாம்.

முதலாவதாக, நவீன இலக்கியவாதி ஏன் புராணத்தை எழுத வேண்டும்  என்ற  கேள்வி. இதை ஒட்டிய அரசியல் கருத்துகளைப் பேசும் இடமல்ல இது என்பதால் அதைத் தனி உரையாடலுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு மேலே செல்லலாம்.

அடிப்படையில் வியாசர் எழுதுகையில் “ஜெய” எனும் பெயரில் இருந்து, பின் வளர்ந்து வந்து மஹாபாரதம் எனும் பெயரைச் சூட்டிக்கொண்ட மூலப்படைப்புப் புராணமல்ல. அது இதிகாசம் எனும் வகை. ‘தமிழில்’ சற்றேறக்குறைய காவியம் எனும் பயன்பாட்டுச் சொல்லை அதற்குப் பொருத்திப் பார்க்கலாம்.

பெரும்பாலான புராணங்கள் இந்திய மண்ணில் தெய்வங்களின் அவதார மகிமை பற்றி, அவதாரங்களின் செயல்களைக் குறித்த புகழைப் பாடுபவை.  அதனுடன் இணைந்த ஆன்ம விசாரம், தர்ம விசாரம், தத்துவ விசாரம் ஆகியவையும் உண்டு என்றாலும் பெருமளவு இவ்விசாரங்கள் அனைத்தையும் அந்த அவதாரத்தின் மகிமையை உயர்த்தும் விதத்திலேயே புராணங்கள் அமைந்திருக்கும்.

ராமாயணமும், மகாபாரதமும் கூட அவதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையே எனினும் இரண்டிலும் பேசப்படும் அறச்சிக்கல்களே அவற்றை வேறுபடுத்துகின்றன. புராணங்களில் வரும் அவதாரங்கள் எவ்வித அறக்குழப்பதிற்கும் ஆளாகாத தன்பணியை முழுதும் உணர்ந்து செவ்வனே அவதாரக் கடமையாற்றுபவை. ஆனால் இதிகாசங்களான இரண்டிலும் அறக்குழப்பங்கள் பேசப்படுகின்றன. குறிப்பாக மகாபாரதத்தில் அவதாரம் அல்லாத பிற கதைமாந்தர்களின் அறக்குழப்பங்களும், அறச்சிக்கல்களும், மீறல்களும் பேசுபொருளாகி அவை தொடர்பான சம்பவங்களே கதையை நகர்த்துகின்றன.

இங்கிருந்து நவீன இலக்கியதிற்குள் நுழைவோம். ஒருவகையில் சொல்லப்போனால் தொழிற்புரட்சிக்குப் பின்னர் மாறிய சமூக அடுக்கு முறைகளும், சமூக இயங்குமுறைகளின் மாற்றங்களும் உருவாக்கிய முரணிலிருந்து நவீன இலக்கியம் தன் மூலப்பொருளைக் கண்டடைந்தது எனலாம். சமூக நெறிகளுக்கும், தனிமனித உணர்வுகளுக்கும் இடையே நிகழும் முரண்களே நவீன இலக்கியங்க்களின் அடிப்படையாக அமைந்துள்ளன. “இன்றைய நெருக்கடி மிகுந்த காலக்கட்டதில்“ என்று உரையாற்றும் ஒரு இலக்கியவாதியும் இல்லாத மேடையை என் இருபதாண்டு அனுபவத்தில் கண்டதில்லை.

சமூகம் தன்னை பிறப்பு, மொழி, சாதி, நிலப்பரப்பு, மொழி, இனம் என பலவற்றின் அடிப்படையில் பிரித்து வகைப்படுத்திக்கொண்டு அந்தப் பொது வரையறைக்கு உட்பட்டே வாழும்படி நிர்பந்திக்கையில் தனிமனிதருக்கு ஏற்படும் சிந்தனை இந்தச் சமூக நெறிகளுக்கு, விழுமியங்களுக்கு மாறான போக்கை நாடும்போது ஏற்படும் முரண்  நவீன இலக்கியத்தின் அடிப்படை பேசுபொருள். இந்தப் பேசுபொருள் பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவாகி இந்தியாவிற்கு இறக்குமதியானது எனும் கற்பாறைக் கருதுகோள் இங்கு நிலைபெற்று விட்டது.

மகாபாரதத்தை இப்போது கிடைக்கும் மூலவடிவில் பயில்வோர்க்கு இந்த இடம் பிடிபடும். மாறிவரும் அறங்களைக் குறித்த பேசுபொருள் பாரதத்தில் அதிகம். ஒப்புநோக்க பாரதத்துக்கு முந்தைய ராமாயணம் சில அறக் குழப்பங்களைக் கையாண்டது, அதிலும் கதைத் தலைவனான ராமனுக்கு ஏற்பட்ட குழப்பங்கள். பாரதத்திலோ அவதாரமல்லாத கதைமாந்தர்கள் பலருக்கும் நேரும் அறக்குழப்பங்கள் பேசுபொருளாகின்றன.

சமூக நெறிகளும், தனிமனிதச் சிந்தனையும் முரண்பாடு கொள்ளும் புள்ளிகள் இந்திய மரபில் இறக்குமதி செய்யப்பட விசேஷங்கள் அல்ல. அவை இங்கு எப்போதும் இருப்பவையே. இம்மண்ணில் நிகழ்ந்த அத்தனை தத்துவ விவாதங்களும் மாற்றத்தைப் புரிந்து கொண்டு முரண்களுக்கு இடமளித்து விவாதித்து முன்னகரும் முயற்சிகளே. இந்த முரண்களைச் சமகால சூழலில் மட்டுமே வைத்துப் பேசும் நவீன நாவல்களையே நாம் அதிகமும்  வாசித்திருக்கிறோம். ஆகவே இப்படி மரபான ஒரு நூலை நவீனத்துவ அடிப்படையில் மீள எழுதுகையில் அதை வாசிக்கும் நமக்கு இக்கேள்வி இயல்பாக எழுவதே.

நாம் அதிகமும் நவீன நாவல்கள் எனக் குறிப்பிடும் நாவல்கள் மரபின் பின்னணியில் எழுந்தவைதான். தமிழில் உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்,  நித்யகன்னி – எம் வி வெங்கட்ராம், கிருஷ்ண கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி ஆகிய படைப்புகள் உடனே நினைவில் எழுகின்றன. புதுமைப்பித்தன் தொடங்கி பாலகுமாரன் வரை வந்து இன்று எழுதும் ஜா தீபா வரை  மகாபாரத கதைமாந்தர்களை, சம்பவங்களை வைத்து சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியிருக்கிறார்கள். பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த இரண்டாம் இடம் – எம் டி வாசுதேவன் நாயர் , இனி நான் உறங்கலாமா – பி கெ பாலகிருஷ்ணன் ஆகிய மலையாளப்  படைப்புகளும், பருவம் – பைரப்பாவின்  கன்னடப் படைப்பும்,, சாம்பன் – சமரேஷ் பாசு வின் வங்க மொழிப் படைப்பும்  தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவையே.

மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து அதை நவீன நாவலாக்கம் செய்வதில் குறைந்த பட்சமாக ஐம்பது ஆண்டுகால இலக்கிய வரலாறு பல முன்னுதாரணங்களைக் கொண்டிருக்கிறது. இந்திய நவீன இலக்கியகர்த்தாக்களில் பலரும் பாரதக் கதைகளை தம் புனைவுகளால் மீள எழுதிப்பார்த்தவர்கள்தாம்.  எழுத்தின் நவீன வடிவங்களான  நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பாரதம் மீள மீள சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள ஆர்.வி எழுதிய இக்கட்டுரை http://www.tamilhindu.com/2014/01/mbhworks/ பொருத்தமாக இருக்கும்.

வெண்முரசு மொத்த மகாபாரதத்தையும் நவீன நாவலாக்கமாகக் கொண்டுவந்தது அதன் பணியின் பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது. உலகெங்கும் நவீன இலக்கியங்கள் மரபினை மீளுருவாக்கம் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. குறைந்த பட்சஅளவில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், யசுநாரி கவாபத்தா, ஓரான் பாமுக், ஜியாங் ரோங்க் ஆகிய அயல்நாட்டு நவீன இலக்கிய எழுத்தாளர்களும்  அவர்களது மரபின் அடிப்படையைக் கொண்டு நவீன ஆக்கங்களைப் புனைந்தவர்களே. ஆகவே வெண்முரசு எனும் படைப்பு மகாபாரதத்தை மீளுருவாக்கம் செய்வதில் தேர்ந்த இலக்கிய வாசகனுக்கு மறுப்பு இருப்பதற்கு தனிப்பட்ட காரணங்களே இருக்க வாய்ப்புண்டு.

இரண்டாவதாக மகாபாரதம் போன்ற ஒரு  தொன்மத்தை ஏன் மாற்றி எழுத வேண்டும், புதிய ஆக்கங்களைச் செய்வதை விட்டுவிட்டு ஏன் தொன்மக் கதை ஒன்றை இப்போது எழுத வேண்டும், தொன்மங்களை மறு உருவாக்கம் செய்வது முற்போக்கானதுதானா ( இக்கேள்வியின் இன்னொரு எல்லை – தொன்மங்களை மறு உருவாக்கம் செய்ய இவருக்கு யார் அனுமதி தந்தது) என்பன போன்ற தொன்மம் சார்ந்த விமரிசன வினாக்கள்.

தொன்மம் என்பதை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதிலிருந்துதான் இதை ஆரம்பிக்க வேண்டும். தொன்மம் என்பது ஒரு சுட்டு. ஒரு சொல்லோ ஒரு வரியோ ஒரு கதையை ஒரு சம்பவத்தை அதனுடன் இணைந்த அனைத்து உணர்ச்சிகளுடனும் கேட்பவருக்குக் கடத்தி விட இயலுமென்றால் அச்சொல் அல்லது வரி தொன்மம் எனும் கலைச்சொல்லாக்கத் தகுதி பெறுகிறது. இதில் அச்சொல், சுட்டும் கதைகளும், சம்பவங்களும், உணர்வுகளும் அச்சொல் புழங்கும் பண்பாட்டிலிருந்து வேர் கொள்பவை.

இன்றைய சூழலில் தொன்மம் என்பதை சமீபத்திய தொழில்நுட்பத்தில் வந்த கைப்பேசி வசதியுடன் பொருத்திப் புரிந்து கொள்ளலாம். உங்கள் கைப்பேசி எண்ணை ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள் எனில் அவர் உங்களுடன் குரலால் பேசலாம், எழுத்தால் பேசலாம்,  நேரலையில் காணலாம், பாடலாம், ஆடலாம், தகவல்களை எழுத்தாக, எண்ணாக, படங்களாக, சுட்டிகளாக, பணப்பரிமாற்றமாக, உணவுப்பொருளாக, நுகர்வுப் பண்டங்களாக இன்னும் எவ்வெவ்வாறோ அனுப்பலாம்.  அனைத்துத் தொடர்புகளுக்கும் ஒரே குறிச்சொல் ‘மொபைல் எண்’. “மொபைல் நம்பருக்கு வாட்ஸப் பண்ணிடுங்க” என நீங்கள் சொல்வதில் அடங்குவதைப் பட்டியலிட்டால் ஐம்பது எண்ணிக்கையைத் தாண்டுமல்லவா? கைப்பேசி எண் என்பது இங்கு சுட்டுவது அனைத்தையும் ‘மொபைல் நம்பர்’ எனும் ஒரு சொல்லில் நாம் புரிந்து கொண்டுவிடுகிறோம் இல்லையா? இதில் உணர்வு நிலையும் அடக்கம்.  ஒருவரிடம் நாம் கைப்பேசி எண்ணை அளிக்கிறோம் எனில் அவரை நம்புகிறோம் என்றுதானே பொருள். ஒருவர் தராமல் அவரது கைப்பேசி எண்ணுக்கு அழைத்தால் அவர் கேட்கும் கேள்வி என்ன? என் எண் உனக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதானே. கைப்பேசி எண் என்பது இன்று ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஒருவரது முன் அனுமதி இன்றி அவரைக் கைப்பேசியில் அழைப்பது தொழில் சார் அணுகு முறை அல்ல என்னும் உணர்வு நிலை உருவாகி விட்டது. கைப்பேசி  எண்ணைப் பகிர்வது கூடுதல் நெருக்கத்தைக் காட்டும் உணர்வாக மாறிவிட்டது. ஒருவரது கைப்பேசியை அவரது அனுமதி இன்றி எடுத்துப் பார்ப்பது அநாகரீகச்செயலாகி விட்டது, அவர் நம் குடும்ப உறுப்பினராகவே இருப்பினும். “இவ்வளவு பழகியும் மொபைல் நம்பரை எனக்குச்  சொல்லலையே“ என உணர்வின் ஆழம் காட்டும் கருவியாகி விட்டது கைப்பேசி எண்.

கைப்பேசி எண் என்ற ஒரு சொல் எப்படி இத்தனை விஷயங்களைப் புதைத்து வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல வியப்பு. அச்சொல்லை சொன்னதும் இன்றைய மனம் மேற்சொன்ன அனைத்தையும் பொருள்படுத்திக்கொள்ளும் விதம்தான் வியப்புக்குரியது.  இத்தனையும் கைப்பேசி  கண்டுபிடிக்கப்பட்டுச் சந்தைக்கு வந்த நாளிலேயே உருவாகி விட்டதா? கிட்டத்தட்ட இன்று 30 அகவைகள் நிரம்பியோர் யோசித்தால் தெரியும்.  இன்றுக் கைப்பேசி  எனும்  சொல்லுக்கு சமூகத்தின் கூட்டுமனம் உருவாக்கிக்கொள்ளும் பொருள்செறிவு அனைத்தும் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக உருவாகி வந்தவை. இன்றும் உருவாகிக் கொண்டிருப்பவை. மேலும் இத்தொன்மமாக்கல் ஒருவரால், சிறு குழுவால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்க இயலாது. மொத்த சமூகமும் தொன்ம உருவாக்கத்தில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியம். திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்கள் தொன்மமாக்களின் இன்னொரு உதாரணம். அவர் திரைப்படத்தில் காட்சிக்கு ஏற்ப பேசிய வசனங்கள் இன்று பல்வேறு சூழல்களில் மக்களால் பொருத்திக் கொள்ள முடிவது சமூக கூட்டுமனத்தின் வெளிப்பாடாகும். தொன்ம உருவாக்கக்தில் ஒரு கைப்பேசி எண்ணுக்கு முப்பது ஆண்டுகளும் வடிவேலுவின் வசனங்களுக்கு இருபது ஆண்டுகளும் ஆவதற்குள்ளாகவே இவ்வளவு பொருள்செறிவு உருவாகும் எனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாடெங்கும் பேசப்படும் இதிகாசங்கள், அதன் சம்பவங்கள், அதிலுள்ள கதை மாந்தர்கள், இடங்கள் ஆகியன எவ்வளவு பொருள்செறிவு ஊட்டப்பட்டு தொன்மம் என நிலைபெற்றிருக்கும்.

தொன்மத்தின் சிறப்பே அதனை எக்காலத்திற்குமான மானுட உணர்வுகளோடு இணைத்துக்கொள்ள இயலும் என்பதே. “சிலுவையில ஏறிட்டான்” எனும் ஒற்றைச்சொல் சுட்டுவது எதை?   பிறரின் தவறுக்காக தவறே செய்யாத ஒருவன் தண்டனையை மட்டும் அடைந்தான் என்பதைத்தானே. ஈராயிரம் ஆண்டுப் பழமை ஏறிய ஒரு சொல் இன்றும் பொருள் கொள்ளும் முறைதான் தொன்மத்தின் இயங்குமுறை.

மகாபாரதம் ஒரு தொன்மம் என்பதை ஒப்புக்கொண்டால் அது காலந்தோறும் பொருள்செறிவு கொண்டபடியே வருகிறது, அதன் அடிப்படை காலத்தால் வழக்கொழிய முடியாதவற்றால் ஆனது என்பதையும் ஏற்க வேண்டியிருக்கிறது. அதன் தொன்மச் செறிவு சடங்குகளால், கலைகளால் ஏற்றப்பட்டது. சிற்பம், காவியம், ஓவியம், நாடகம், நாட்டியம், நாட்டார் நிகழ்த்துக் கலைகள், புராண உரைகள், கல்விச்சாலை பாடநூல் என பாரதம் முழுவதும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாட வாழ்வில் புழங்கி வந்த ஒரு இதிகாசம் எவ்வளவு தொன்மச்செறிவினை அடைந்திருக்கும்?

தொன்மம் என்பதே ஒருவகையில் பண்பாட்டால் காலாதீதமாக மாற்றப்பட்ட ஒன்று. செயல்விழுமியங்களைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு முன்னகர்ந்து கொண்டே இருக்கும் பண்பாட்டில் அதன் தொன்மங்களும் மாற்றத்திற்கேற்ப சமகாலப் பொருளை, மாறாத மானுட உணர்வுகளை, மாறாத அற விழுமியங்களைச் சுட்டியபடியே இருக்கும்.

அதனால்தான் தொன்மக்கதை என்பது எப்போதும் மீள மீள எழுதப்படும், பேசப்படும், பாடப்படும், நிகழ்த்தப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்திய இலக்கியத்தின் பிதாமகர்கள் எனக் கருதப்பட்டோர் இதிகாசங்களின் ஒரு பகுதியையேனும் எழுதாமல் இருந்ததில்லை. தொன்மக்கதை ஒரு நிலையில் சமூகமே கூட்டாக எழுதும் ஒரு கதைதான்.

கதையின் மையச்சம்பவங்கள் சட்டமாக வரையப்பட்ட பலகையில்  ஒவ்வொருவரும் அவரவருக்கான பங்கை எழுதும் சுதந்திரத்தை அந்த இதிகாசமே அளித்திருக்கிறது. எவ்வளவு பெரிய கொடை அது. நாட்டார் வழக்காறு என்ற ஒரு சமூக அலகை மட்டும் எடுத்துக்கொண்டால்  இந்த இதிகாசத்திற்கு நாடு முழுதும் அது எவ்வளவு செறிவினை ஊட்டியிருக்கிறது? http://www.amitwrites.com/best-mahabharata-books/. இக்கட்டுரை மகாபாரதம் குறித்து எழுதப்பட்ட நூல்களின் சிறுதொகுப்பு. நவீன இலக்கிய, நவீன ஆய்வுப் பார்வை கொண்ட எத்தனை பேர் அதை மீள எழுதும் பணியில் இருக்கிறார்கள் என்பதை உணர முடியும.

சிறுவயதில் ஞானபூமி எனும் ஆன்மிக இதழில் இந்தியா முழுவதும் உள்ள பாரதக் கதைகளைச் சிறுதொடராக வெளியிட்டனர். அதில் ஒரு கதையில் வனவாச காலத்தில் கானகத்தில் செல்லும்போது ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் பாண்டவர்களும், திரௌபதியும் தங்குகிறார்கள். அம்மரத்தின் உச்சிக்கிளையில் ஒரே ஒரு பழம் பழுத்து  மணம் வீசிக்கொண்டிருக்கிறது. அவள் அதைக் கேட்டவுடன் அர்ஜுனன் அம்பெய்து அக்கனியை வீழ்த்துகிறான். அக்கனி மண்ணில் விழ அங்கு இரு சீடர்கள் வருகிறார்கள். அக்கனி தம் குருவாகிய ரிஷி ஒருவருக்காக ஆண்டொன்றுக்கு ஒன்று மட்டுமே பழுக்கும் எனவும், அது மட்டுமே அவருக்கான ஓராண்டு உணவு என்றும், அவர் வந்து நிற்கையில் மரமே கிளை தணித்து இக்கனியை  அவர் கைகளில் அளிக்கும் என்றும் இப்போது கொய்யப்பட்டு மண்ணில் வீழ்ந்த இக்கனியை அவர் புசிக்க மாட்டார் எனவும் கூறுகிறார்கள். தவறை மன்னித்து இக்கனியை மீண்டும் மரம் சேர்க்க என்ன செய்யவென்று பாண்டவர்கள் கேட்க  அவர்கள் அறுவரும் இதுவரை வேறெவருக்கும் சொல்லாத உண்மையைச் சொல்லவேண்டுமென்றும் அதனால் அக்கனி மரத்தில் சென்று ஒட்டி தன் பழைய நிலைக்குத் திரும்பும் என்கிறார்கள்.  பாண்டவர்கள் ஐவரும் சொல்லும் உண்மைகளால் அக்கனி உயர உயரச் சென்று காம்பின் அருகே நிற்கிறது. இப்போது திரௌபதியின் முறை. அவள் சிலவற்றைச் சொல்கிறாள். கனி ஒட்டாமல் நிற்கிறது. வேறுவழியின்றி திரௌபதி சொல்கிறாள் – “சுயம்வரத்தில் கர்ணனைக் கண்ட நான் அவனைக் கணவனாக அடைய நினைத்தேன்”. கனி சென்று காம்பில் ஒட்டிக்கொள்கிறது.

மூல நூலில் இச்செய்தி இல்லை என்பதால் இது முக்கியத்துவம் இழந்து விட்டதா? மூலநூலில் அதற்கான இடங்கள் இருக்கின்றன. கதையின் முக்கிய மாந்தர்கள் அனைவரும் அவள் சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார்கள். தொன்மம் இப்படிப் பல இடங்களைத் தளர்வாக்கி வைத்திருக்கிறது.  அதில் உள்ள இடைவெளிகளில் எழுதிக்கொள்ள மக்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. இன்றுவரை மேலே சொன்ன கதை தவறு, ஆபாசம் என்று பாரதம் படித்த எவரும் சொல்லவில்லை. முழுமையாக பாரதம் படித்தவர்க்கு இதற்கான இடங்கள் உண்டு என்பது தெரியும்.

புராணிகர்கள் வந்து அதில் பக்கங்களை நிரப்ப முடியும், கம்ஸனும், சிசுபாலனும் எதிர் அவதாரங்கள், விரைவில் பரமாத்மாவை அடைய வேண்டி குறுக்கு வழியாக எதிர் அவதார நிலையைக் கைக்கொண்டவர்கள் அந்த எதிர் அவதாரமாகப் பிறக்கும் வரத்தையும் அவதார தெய்வத்திடமே பெற்று வருகிறார்கள் என்பதும் பௌராணிகத் தொன்மமாக்கலாக இருப்பது. அதன் வழியே தத்துவக் குறியீடுகளுக்குள் சென்று விட முடியும். நாட்டார் வழக்காறில் ஆழுணர்வுகளுக்கு இடம் கொடுத்த பாரதம்தான் தத்துவக் குறியீட்டுப் பௌராணிக உணர்வுகளுக்கும் இடம் கொடுக்கிறது. அம்புப் படுக்கையில் இறுதி மூச்சை எண்ணும் வேளையிலும் பீஷ்மர் வாயால் அறநெறி முறைமைகளை உரைக்கச் செய்கிறது. காலக்கணக்கைப் பல்லாண்டுகளாக நீடித்துப் பல முன் பின் பிறவிகளாகக் கதைமாந்தருக்குத் தொடரச் செய்கிறது. வீரக்கதைப் பாடகர்களும், குலமுறைப் பாடகர்களும் பாட இடம் கொடுக்கிறது. இவை அனைத்தையும் வெண்முரசு கையாண்டிருக்கிறது.

பாரதத் தொன்மத்தில் வரும் அதிமானுட செயல்களைக் கனவுத் தோற்றம், உருவெளி மயக்கங்கள், காட்சிப்பிழைத் தோற்றங்கள், சடங்கு முறையாளர்களின் நிமித்தக் கூற்றுகள், சூதர்களின் பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மிகப் புத்திசாலித்தனமாக மாய யதார்த்த பாணிக்குள் சென்று எழுதும் வெண்முரசு நேர்கூற்று முறையில் யதார்த்த நவீனமாகவும் சம்பவங்களைச் சொல்லிச் செல்கிறது.  நனவோடை கூற்று முறையை நெருங்கிய கூறுமுறை ஒன்றில் அதன் நீலம் எனும் காப்பியக் கவி நூல் எழுதப்படுகிறது. நவீன நாவல்களின் கதைகூறுமுறைகளாக நேர்கூற்று முறை, மாய யதார்த்த  கூறுமுறை, நனவோடை உத்தி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் நவீன வாசகருக்கு, இவ்வடிவிற்கு இடமளிக்கும் தொன்மமான பாரதத்தை நவீன கூறுமுறை உத்திகளில் எழுதுவதற்கு என்ன குறை சொல்லல் இருக்க முடியும்? ஒருவகையில் நாமும் எழுதக்கூட தொன்மங்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்கும் என்பதில் நவீன வாசகனுக்கு எந்த ஐயமும் இருக்காது என்றே நம்புகிறேன்.

மூன்றாவதாக  வெண்முரசு வாசிக்க நீளமாக இருக்கிறது, சில இடங்கள் நீளமாக நீட்டிக்கப்படுகிறது, வர்ணனைகள் அதிகமாக இருக்கின்றன – என்பன போன்றவை. படைப்பின் அளவை ஒரு விமரிசனமாகவும், அந்த மிகு அளவுக்குக் காரணம் என ஒரு பட்டியலும் இடும் விமரிசனத்துக்குள்  போகலாம். ஒரு வாசகனின் மனப்பதிவாக வெளிவரும் இக்கருத்தில் சில இடங்களைக் கவனிக்க வேண்டும்.

வெண்முரசு ஒரு காவியத்தை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி என்று சொன்னாலும் அதன் வடிவம் குறித்த சவால் ஒன்று இருக்கிறது. வரையறுக்கப்பட்ட, உறுதி செய்யப்பட கட்டுமான வடிவச் சட்டகங்கள் கொண்ட பாவகை இலக்கணங்கள் தமிழில் உண்டு.  காவியம் பேசும் பொருட்கள் குறித்த வரையறைகளும் உண்டு. இப்படிச் சொல்லலாம் – இன்று நீங்கள் செய்யுள் வடிவில் காந்தியின் வாழ்வைக் காவியமாகப் பாட முயல்கிறீர்கள் எனில் அதற்கான வடிவம், பேசுபொருட்களாக எவை வரவேண்டும் என்ற பட்டியல், நிகழ்வுகள்  எந்த வரிசையில் சொல்லப்பட வேண்டியவை எனும் முன்வரைவு, நூல் எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்ற ஒழுங்குமுறை போன்ற அனைத்தும் அரைநாளில் காங்க்ரீட் கட்டுமானத்திற்கான சாரப்பலகை அமைப்புகள் போல கட்டி எழுப்பப்பட்டுவிடும். பலவகை வீடுகளின்  வரைபடங்கள்  முன்பே தயாரித்து வைக்கப்பட்டுக் கிடைப்பதைப் போல.

வெண்முரசு உரைநடை வடிவில் இதிகாசத்தை எழுதும் முயற்சி. தமிழுக்கு உரைநடை வடிவம் அதிகபட்சமாக கடந்த 150 ஆண்டுகளில் உருவாகி வந்தது. அதிலும் கடந்த 75 ஆண்டுகளில்தான் மொழியின்  முதன்மை கூறுமுறையாக  உரைநடை உருவாகி வந்துள்ளது. ஆனால் நவீன தமிழ் இலக்கியம் உரைநடையின் அனைத்து சாத்தியக் கூறுகளையும்  விவாதித்தும், உரையாட ஆரம்பித்தும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகின்றது என்பது வியப்பானது. உரைநடை வடிவிற்கும், செய்யுள் வடிவிற்கும் நடுவே தன் வடிவமைப்பைத் தொடங்கிய புதுக்கவிதை இயக்கமே இந்த விவாதங்களை நம் மொழியில் துவக்கி வைத்தது. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/106577/13/13_chapter%206.pdf– இக்கட்டுரையில் பக்க எண் 179 முதல் 182 வரையிலான பக்கங்களைப் பார்த்தால் காவிய இயல் என்பதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இயலும். வடமொழி, தமிழ் ஆகிய இரு காவிய இயல்களுமே பேசப்பட்டிருக்கும்.

இந்த அடிப்படையைக் கைக்கொண்டு ஒரு உரைநடை வடிவ காப்பியம் என வெண்முரசு தன்னிடத்தை உருவாக்கிக்கொள்கிறது. காவிய இயல் எவையெல்லாம் காவியத்தில் எவ்வெவ்வாறு இடம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுகிறதோ அவை அனைத்தையும் வெண்முரசு முயன்று பார்த்திருக்கிறது. தமிழின் உரைநடையில் காவிய இயலின் அனைத்து சாத்தியங்களையும் முயன்ற படைப்பு வெண்முரசு எனச் சொல்லலாம்.  ஜெயமோகன் எழுதிய கொற்றவை தமிழ் காவிய இயலின் சாத்தியங்களை முயன்ற ஒன்று. ஆனால் வெண்முரசு தமிழ், வடமொழி ஆகிய இரண்டு காவிய இயல்களின் சாத்தியங்களையும் முயன்ற சிறப்பான முயற்சி.

காவிய இயலின் எந்த வரையறை சரிவர வெண்முரசில் வெளிப்படவில்லை என்றோ, காவிய மரபின் எந்தெந்த இடங்கள் படைப்பில் பொருந்திவரவில்லை என்றோ விமர்சனம் வரலாம். காவிய மரபின் அடிப்படை என்பதை வைத்து வெண்முரசை விமர்சன மதிப்பீட்டிற்கு உள்ளாக்குவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். மாறாக என் வாசிப்பின் பயின்று வந்த பழகுமுறை, என் வாசிப்பின் எல்லைகளால் ஏற்பட்ட மனப்பதிவு வாசிப்பிற்கான உழைப்பைச் செலுத்துவதில் எனக்கிருக்கும் எல்லைகள் ஆகியவற்றால் உருவான மனப்பதிவுகளை “நீளமா எழுதறார் , வர்ணனை அதிகம்” எனச் சொல்வதை விமர்சனமாக ஏற்றுக்கொள்ளும்படி சொல்வதில் எந்த இலக்கிய மதிப்பும் இல்லை.

இந்த வர்ணனைகள் காவிய இயலின் பகுதிகள் என்றாலுமே வெண்முரசு இவற்றை நவீன இலக்கிய கூறுமுறைக்குள் எப்படிக் கொண்டுவருகிறது? வர்ணனைகள் காவிய லட்சணங்களில் ஒன்று என்பதை அன்றைய அரசியல், சமூக, பொருளாதார சூழலைச் சித்தரிக்கவும், காட்சிப்படுத்தும் உத்தியாகவும் வெண்முரசு கையாள்கிறது. ஐந்து நகரங்களைக் குறித்துப் பேச வேண்டுமெனில் ஐந்துமுறை அவற்றை வர்ணிக்க வேண்டும். அதன்வழியே காட்சிப்படுத்துவது நவீன இலக்கியத்தின் கூறுமுறை. வெண்முரசு காவிய இயலின் கூறையும், நவீன இலக்கியத்தின் மொழிபையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு முறையை முயற்சிப்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

எவ்வகையிலும் வெண்முரசு தமிழின் உரைநடை வடிவில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழின் உரைநடை வடிவிற்குக் காவிய அந்தஸ்து கொடுக்கப்படலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சிகளில் முதன்மையானது. ஆகவே அப்பின்னணியில் இருக்கும் நீண்ட வரலாறு கொண்ட மொழி அமைப்பு, இலக்கண சட்டகங்கள், முந்தைய காப்பியங்கள், முந்தைய முயற்சிகள் ஆகிய பலவற்றையும் அடிப்படையாகக் கொண்டே விமரிசனங்கள் எழுந்து வர வேண்டும்.

என் தாத்தா சொல்லுவார் – “ஆக்கி வைக்கறவனுக்கு ஆறுமணி நேரம், அமர்ந்து திங்கறவனுக்கு அரைமணி நேரம், அள்ளிக் கொண்டு கொட்டறவனுக்கு அரை நிமிசம்தான்”.

 

http://vallinam.com.my/version2/?p=7080

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள்

சிறுவயதில் சின்னச் சின்ன கதைகளாக மட்டுமே மகாபாரதக்கதையைக் கேட்டுள்ளேன். முழு கதையாக அல்லாது தனித்தனி கதாபாத்திரங்களின் கதைகள் பள்ளியின் துணை நூல் பாடத்திலும், வீட்டுப்பெரியவர்களிடம் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அச்சிறு கதைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய கேன்வாஸில் இந்திய அளவிலானக் கதை ஒன்று உள்ளது என்பதை தொலைக்காட்சித் தொடர் வழியாகவே அறிய முடிந்தது. அதுவரை அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணனின் கதை, துச்சாதனன் துகில் உரித்த கதை, சகுனியின் சொல்படி கேட்டு உருளும் தாயத்தின் கதை, அஸ்வத்தாமனின் மறைவு, பீஷ்மரின் அம்புப்படுக்கை என சிறு கதைகளாகக் கேட்டு வளர்ந்த கதை ஒரு பெரிய காவியத்தின் சிறு தீற்றல்கள் எனப் புரிந்தது. மிக எளிமையாகச் சொல்லப்பட்ட தொலைக்காட்சித் தொடர் ஒரு முக்கியமானத் தொடக்கம். அதன் பின்  தமிழ் புனைவுலகில் மகாபாரதக்கதை வந்தபோதெல்லாம் அதன் மீதான நவீன அலசல்முறை கதை மீதான ஈர்ப்பாக மாறவில்லை. 

ஜெயமோகன் எழுதத்தொடங்கிய வெண்முரசு நாவல் வரிசையின் ஒவ்வொரு நூலின் சில அத்தியாயங்களைத் தொடர்ந்து வாசிக்கத்தொடங்கி எங்கோ தேங்கி நின்றுவிடுவேன். இது ஒவ்வொரு நாவலில் நடந்ததினால் அடுத்தடுத்த நாவல்களைத் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. தனித்தனியாக நாவல்களை வாசிக்க முடியும் என ஒவ்வொருமுறையும் நண்பர்கள் கூறினாலும் ஏனோ திடுமென பதினாறாவது நாவலை எடுத்து வாசிப்பதில் ஒவ்வாமை இருந்தது. கொரானா காலத்தில் அதிக மாற்றமில்லாது செல்லும் நாளின் ஓட்டத்தில் ஒவ்வொரு நாவலாகப் படித்து முடிக்கலாம் என மீண்டும் தொடங்கியுள்ளேன்.

வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல், காவிய நாவலின் இயல்புக்கு ஏற்ப மரபாகத் தொடங்கும் இடத்தில் அல்லாது நாகர்களின் குலக்கதையிலிருந்து தொடங்கியுள்ளது. குருஷேத்திரப் போர் நடந்து முடிந்து இரு தலைமுறைகளுக்குப் பிறகு அஸ்தினபுரியின் அரசனான ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ர யாகத்திலிருந்து கதை தொடங்குகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷனின் தங்கை ஜரத்காருவுக்குப் (மானசாதேவிக்கும்) பிறந்த ஆஸ்திகன் எனும் சிறுவன் ஜனமேஜெயன் வேள்விக்குச் செல்லும் நிகழ்விலிருந்து கதை தொடங்குகிறது. இங்கு ஜரத்காரு எனச் சுட்டாமல் மானசாதேவி என ஆசிரியர் கையாண்டதில் ஒரு நுட்பம் உள்ளதாகத் தோன்றுகிறது. கிசாரி கங்குலியின் மஹாபாரத்தில் ஆதி பர்வத்தில் வரும் இந்தக் கதை  ஜரத்காரு தனது பெயருள்ள ஒரு பெண்ணை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார் எனச் சொல்கிறது. நாகங்களுக்கு அரசியான மானசாதேவி தன் குலத்துக்கு வர இருக்கும் அழிவிலிருந்து காப்பதற்காகத் தனது மகனான ஆஸ்தீகனை ஜனமேஜயன் வேள்விக்கு அனுப்புகிறாள். வங்க நாட்டார் கதைகளில் சைவத்துக்கும் மாந்திரீக உலகத்துக்கும் தொடர்புடையவளாக மானசாதேவியைக் கொண்டாடுகிறார்கள். சுவாமி சித்பவானந்தரின் மஹாபாரதத்தில் கூட மானசாதேவியிலிருந்து கதை தொடங்குவதில்லை. இங்கு ஜெயமோகன், மஹாபாரத்தின் துணை கொண்டு இந்தியாவின் பல தரப்பட்ட வரலாறுகளை இணைக்க முற்படுவது தெரிகிறது. நாகர் குலத்தின் ஆதிகதைக்கு செல்வதன் மூலம் சத்வ குணத்தைக் கொண்டு மட்டுமே புடவியின் விதியைத் தீர்மானித்துவிட முடியாது எனும் தத்துவ விவாதத்துக்கு கதை செல்கிறது. உலகில் முழுமை என்றால் என்ன எனும் கேள்விக்கான விடையாக ஆஸ்திகனின் பயணம் இருக்கிறது. நாகம் என்பது மனித மனதின் இச்சை எனவும் அதை அழிப்பதன் மூலமே சத்வ குணத்தை அஸ்தினாபுரியில் நிலை நிறுத்த முடியும் எனவும் ஜனமேஜெயன் சொல்வதைச் சுட்டிக்காட்டி நாகம் என்பது இச்சையின் குறியீடு என்றாலும் அதை சமன்படுத்திச் செலுத்தும்போது அது புடவியை வழிநடத்தும் விளக்காகிறது. அந்த இச்சையிலிருந்து எழும் சமன்படுத்தாத காமமும் அகங்காரமுமே மஹாபாரதத்தின் அடிநாதமாகிறது எனச் சொல்லும் வியாஸர் தனது மாணவனான வைசம்பாயனரை ஶ்ரீஜய என தான் எழுதிய காவியத்தைப் பாடச்சொல்கிறார.

இராவதிகார்வே தனது யுகத்தின் முடிவில் நூலில் ஒரு கற்பனையான உரையாடலைச் சொல்கிறார்.

ஒரு நண்பர் கேட்டார் – “வேதம், உபநிஷதம், மகாபாரதம் என்று தொடங்கிய பின்னர் நம்முடைய முழுச்சமுதாயமும் தலைகீழாக மாறியதேன்? பக்தி மார்க்கத்தையும், விபூதி பூஜையையும் அவன் எப்படி ஏற்றுக்கொண்டான்?”

அவர் கேட்பதன் அர்த்தம் நமக்குப் புரியாமல் இல்லை. இந்திய தத்துவத்தின் உச்சாணியாக இருந்த வேதம், உபநிஷதம், மஹாபாரதம் எனும் தத்துவ சாஸ்திரத்தில் தனது மனதை நிலைநிறுத்தி மறுமைக்கு வழி தேடாமல் ஏன் பக்தி, பூஜை போன்றவற்றில் மனம் நிலைத்துவிட்டான்? அதற்கு விளக்கமாக அவரே கூறியது, “வேறு எதுவும் நிலைக்கவில்லை. ஆனால் மொழி நிலைத்திருக்கின்றது. அதுவே சிறப்பு என்று எண்ணுங்கள். இன்றும் உங்களுக்கு மஹாபாரதத்தைப் படிக்க முடிகிறது. பொருள் புரிகிறது அதுவே உங்களது பாக்கியம் அல்லவா? நான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘ஜய’ என்ற பெயருடைய கதையைப் படிக்க முடிகிறது. அதில் என்னுடைய மறு உருவத்தைப் பார்க்க முடிகிறது என்பதே வியப்பான ஒன்றாகும்.”

முதல் பெண் மானுடவியலாளரான இராவதிகார்வே மஹாபாரத்தை மானுட வளர்ச்சியின் நீட்சியாகவும், பொருள்முதல்வாத அணுகுமுறையோடு வரலாற்றை பார்க்கக்கூடிய சாத்தியத்தையும் பதிந்துள்ளார். யுகத்தின் முடிவில் நூலில் கூறப்பட்டுள்ள மஹாபாரதக்கால சமூகத்தையும், தத்துவ நீட்சிகளையும் அடிப்படையாக மட்டுமே கொண்டு எழுதாமல் காவிய மரபின் பல கிளைகளில் வளர்ந்த மரபுக்கதைகள், தொன்மங்கள், மாற்று வரலாறுகள் போன்றவற்றையும் தொகுத்து வெண்முரசு எனும் நாவல் தொடராக ஜெயமோகன் எழுதியுள்ளார்.

“பொற்கதவம்” எனும் ரெண்டாம் பகுதியில் பீஷ்மரும் சத்யவதியும் அறிமுகமாகிறார்கள். நவீன நாவலின் அழகியலின் படி கதை மாந்தர்களின் அகச்சிக்கலிலிருந்து தொடங்கி, சற்று பின் சென்று அவர்களது பிறப்புக்கதையைத் தொட்டுச்சென்று, சூதர்களின் பாடல்கள் வழி மாற்று வரலாற்றுக்கான சாத்தியங்களைத் திறந்து காட்டி, ஊடாக குலக்கதையின் ஆற்றொழுக்கத்தோடு கதை நகர்கிறது. நவீன வாசகன் எதிர்பார்க்கும் அகச் சிக்கல்களை முன் வைக்கும் அதே நேரத்தில் சூதர்களின் கதைகள் மூலம் முன்னோர் கதையின் தொடர்ச்சி சொல்லப்படுகிறது.  இது கதையாக மட்டுமல்லாது கதாபாத்திரங்களுக்கு அடுத்தகட்ட நகர்வுகளை அடையாளம் காட்டும் வழியாகவும் அமைந்திருக்கிறது. உதாரணத்துக்கு, காசி நாட்டு இளவரசிகளை சுயம்வரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் எனும் ஆணையை சாத்தியப்படுத்துவது எப்படி எனத் தெரியாத பீஷ்மருக்கு பராசரபட்டருக்குப் பிறந்த வியாசரின் கதையைக் கூறுவதன் மூலம் ஒரு தெளிவு பிறக்கிறது. ஷத்ரிய தர்மத்தின் படி நாட்டின் நன்மைக்காகப் பெண்ணை வென்று வருவதில் தவறில்லை என பீஷ்மர் சொன்னாலும் அதையும் தாண்டி “மழையில் கரைக்கப்படாத பாறை போல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது. அந்த பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் விடப்போகும் கண்ணீர்” நூல் முழுவதும் மீண்டும் மீண்டும் நடைபெறும் உரையாடலுக்கானத் தொடக்கம் இதில் உள்ளது. பெரும் நீதி, குலத் தர்மம் எனும் அரணால் சூழப்பட்ட சமூகமாக இருந்த காலகட்டம் நெகிழ்ந்து உலகலாவிய தர்மம், மானுட உண்மை எனும் சற்றே விரிந்த தர்மத்தை நோக்கி நகரத்தொடங்கிய காலகட்டமாக மஹாபாரதத்தை ஜெயமோகன் சித்தரிக்கிறார். இக்கதையில் நல்லவன் கெட்டவன் என்ற அடையாளத்துடன் யாரும் வருவதில்லை. சின்ன பூ முதல், மலை, ஆறு, சிங்கம், பசு மிருகம் , மனிதன் என அனைவரும் அவரது ஸ்வதர்மத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். எப்போதெல்லாம் அந்த ஸ்வதர்மம் அவர்களை மானுட தர்மத்தின் எல்லையை மீறச் செய்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இருளில் விடப்பட்ட ஆடுகளாக துலாகோலின்றி தவிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு துணையாக எந்த தர்மமும் வருவதில்லை, அவர்களது உலகத்தில் மானுட அறத்துக்கான கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அவற்றின் பதிலாக கிருஷ்ண வேதம் உருவாகும் காலகட்டமே மஹாபாரதம் எனும் பார்வையை வெண்முரசு முன்வைக்கிறது. அதற்கானத் தொடக்கமே பீஷ்மரின் சஞ்சலமாக முதற்கனல் நூலின் மையமாக அமைந்துள்ளது.

bheeshmar.jpg?resize=1024%2C503&ssl=1

பீஷ்மரின் சஞ்சலத்தைப் போக்குவதற்கு வியாஸர் சிபிச் சக்கிரவர்த்தியின் கதையைச் சொல்கிறார். தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தடைந்த புறாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் தர்மம் ஒரு பக்கம், அதை வேட்டைக்காகச் சாப்பிடும் பருந்தின் தர்மம் மறுபக்கம். சிபி எடுக்கும் முடிவை எடுத்துச்சோல்லி வியாசர் பீஷ்மரின் சஞ்சலத்துக்கு விடை தேடச் சொல்கிறார். ஆனால் பீஷ்மர் ஒரு வீரன் எனும் நிலையிலிருந்து ஞானி எனும் நிலைக்குச் செல்கிறார். எல்லா தர்மங்களையும் தாண்டி பெண்ணின் ஓலமும் சாபமும் உள்ளது எனும் நிலையை ஆணித்தரமாக ஏற்றுக்கொள்கிறார். பெரும் பழியும் பாவமும் வந்து சேரும் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஷத்ரியனாகத் தன் கடமையைச் செய்கிறார் என்றாலும் இதன் பெரும் சுமைக்கு அதிக விலை கொடுக்கப்போவதையும் அறிந்தே இருக்கிறார். இந்த சுமையே மஹாபாரதத்தின் முதல் விதை.

அடுத்தப்பகுதி பீஷ்மரால் சிறைபிடித்து வரும் காசி நாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை போன்றோரில் தொடங்கினாலும் மையம் கொள்வது அம்பை மீது. அம்பை ஏற்கனவே சால்வ மன்னனை மனதில் வரித்துக்கொண்டதால் பீஷ்மரின் தாக்குதலால் நிலைகுலைந்து போகிறாள். ஹஸ்தினாபுரம் நோக்கிச் செல்லும் போது பீஷ்மரிடம் தனது காதலைச் சொல்லி விடைபெற்றுக்கொள்கிறாள். ஷ்த்ரிய தர்மத்தின்படி வென்றதால் அவள் பீஷ்மருக்கானவள் என சால்யனும், அவளைப் பெண்ணெடுத்துச் சென்றுவிட்டதால் அவளுக்கு அடைக்கலம் இல்லை என காசி மன்னனும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. காசி மன்னர் ஃபால்குனர் “அத்தனை கன்னியருக்கும் ஒரு தருணத்தில் பிறந்த வீடு அன்னியமாகிவிடுகிறது” எனச் சொல்லும் இடத்தில் மகளாக அவளது இடத்தை இழந்ததை அம்பை உணர்கிறாள். பீஷ்மர் வென்றதினால் அவள் ஹஸ்தினபுரியின் அரசி எனவும், தன்னைக் கண்டிப்பாக அடையவேண்டுமென்றால் சால்வனின் அந்தப்புரத்தில் இருக்கலாம் எனவும் சொல்வதன் மூலம் காதலை அடைந்த பெண்ணாக அவள் அடைந்த முதல் ஏமாற்றத்தை அம்பை உணர்கிறாள்.  திருமணம் செய்ய முடியாத விரதத்தை மேற்கொள்ளும் பீஷ்மர் மீதான காதலை வெளிப்படுத்தியபின் அவரால் நிராகரிக்கப்பட்ட பின் உண்டான அகங்காரக் குலைவு அம்பையை அணங்காக்கியது.

சத்யவதி சாந்தனுவுக்குப் பிறந்த ரெண்டாம் மைந்தன் விசித்ரவீரியன். நோய்வாய்ப்பட்டவன். பெண்ணுடன் கூடும் நரம்புசக்தி அற்றவன். கூடினால் இறந்துவிடும் அபாயமும் உண்டு. ஆதூரசாலையில் மட்டுமே முழு வாழ்நாளும் கழித்துவிட்டவன் என்றாலும் தனது அன்னையான சத்யவதியை மிகவும் நெருக்கமாக அறிந்தவன். அம்பிகைக்கு விசித்திரவீரியன் மீது ஒரு குழந்தைத்தனமான அன்பும் காதலும் பிறக்கிறது. மிகக்குறைவான நேரம் மட்டுமே இருந்தாலும் அவர்கள் இருவருக்குள்ளும் மிக நெருக்கமான காதல் உண்டாகிறது. சத்தியவான் சாவித்திரி கதையை அம்பிகை விசித்திரவீரியனிடன் சொல்லும்போது ஆழத்தில் இவர்களது காதல் மரணத்தையும் எதிர்த்து நிலைத்து நிற்கவேண்டும் எனும் ஆவல் எழச்செய்கிறது. பாம்பு விடம் ஏற்றிய மருந்துடன் விசித்திரவீரியன் அம்பிகையுடன் கூடுவதற்கு முற்பட்டு இறந்துபோகிறான்.

சத்யவதிக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. அரசனில்லாத ஹஸ்தினபுரி வெல்லத்துக்கு வரிசைக்கட்டும் எறும்பு என பிற 52 ஷத்ரிய மன்னர்களை ஈர்க்கும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அது மட்டுமல்லாது, கங்கனின் வாரிசுகளான சத்யவதியும் பீஷ்மரும் பிற ஷத்ரியர்களின் குலக்கலப்பு எனும் ஏச்சுக்கு ஆளாகியிருப்பவர்கள். அரசியல் சதுரங்கக்காயாக ஒரு மன்னனை அரசூட்டுவது ஹஸ்தினாபுரியை ஸ்திரப்படுத்தும். மேலும், காசி அரசனான ஃபல்குனனின் ஆதரவும் கிட்டும் என சத்யவதி திட்டமிடுகிறாள். பீஷ்மர் நைஷ்டிக பிரமச்சரியம் பூண்டிருப்பதால் பராசுரபட்டருக்கும் சத்யவதிக்கும் பிறந்த வியாசனைக் கொண்டு அம்பிகை, அம்பாலிகையை கூடவைக்கும் ஆலோசனையைக் கூறுகிறாள்.

குருதியை அளித்து தனது குலத்தை செழிக்கவைக்கும் சித்ரகர்ணிகை எனும் கழுதைப்புலியின் வழியாகக் வியாசருக்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. தந்தை என அறியாது பராசரிடம் வேதம் பயின்ற நாட்களையும் அங்கு தன் உடலில் இருந்த மீனின் வாசத்தால் பிற மாணவர்களால் புறக்கணிக்கப்பட்ட கதையையும் சொல்கிறார். கிருஷ்ண துவைபாயனர் எனும் பெயரை சத்யவதி அவருக்கு அறிமுகப்படுத்தியபோது அவர் தாயிடமிருந்து விலகப்பார்க்கிறார். அவளுக்குக் கொடுத்த சாபம் பலிக்கவில்லை. தனது பிறப்பினால் ஏற்பட்ட இழிவு என எண்ணி பராசரிடம் ஓடுகிறார் – ஞானத்தினால் பிறவித் தளைகள் எனச் சொல்லப்பட்டும் குல தர்மத்தை அறுக்க முடியும் எனும் பெரும் உண்மையை அன்று அறிகிறார். தனது தந்தையின் சொல்கேட்டு வேதங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபடுகிறார். குலக்கல்வியிலிருந்து உலக ஞானம் எனும் நகர்வுக்கானத் தொடக்கமாக ஜெயமோகன் எழுதிய இந்தப்பகுதி அமைந்துள்ளது. தாயின் ஆணைக்காகக் காத்திருந்தவர் பீஷ்மரின் சொல்கேட்டு ஹஸ்தினாபுரம் செல்கிறார். அம்பிகை, அம்பாலிகையுடன் இணைகிறார். சத்யவதி தனது மகன் மீது கொண்ட பாசத்தின் பலனாக ஹஸ்தினாபுரம் புது இளவரசர்களுக்குத் தயாராகிறது.

முதற்கனலில் வரும் எல்லாவற்றுக்கும் ஒரு பெயரும் குலக்கதையும் உள்ளது. அது அம்பையைச் சுற்றி வரும் சிறு நிழல்களான தேவியர் அவளுக்கு பெண்மையின் உணர்வுகளைப் புகட்டுகிறார்கள். அந்த மூன்று தேவியருக்கும் பெயரும் குலக்கதையும் உள்ளது. அதே போல, கங்கை, காற்று, நிருதன் எனும் படகுக்காரன் என எல்லாருக்கும் தெளிவான அடையாளமும் வமிச கதையும் இருப்பது காவிய அழகியலின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும். தொன்ம அழகியலுக்குத் தேவையான அம்சமாக கதை நெடுக இவ்வியல்பு அமைந்துள்ளது. பெருங்காவியங்களில் வரும் ஒவ்வொரு அசைவும் காவியத்தின் அழகைக் கூட்டச் செய்வதுடன் படிமங்களை மீட்டுருவாக்கம் செய்வதனால் கிடைக்கும் உணர்வாழத்தையும் நமக்கு அளிக்கிறது. அம்பையுடன் தேவியர் மூவரும் பேசும் இடம் இத்தகைய அழகுக்கு உதாரணம். அம்பையின் அம்சங்களை மூன்று விதங்களாகப் பிரித்துக்கொண்டு அவளது இயல்பின் வளர்ச்சிப்போக்கை உள்ளத்தின் இயல்புடன் ஊசலாட விடும் இடமாக இந்தப்பகுதி அமைந்துள்ளது. அம்பை அவளையே கண்டுகொண்டு மறு உருவாக்கம் செய்யும் இடம் இது. மூன்று விதங்களில் அவள் புறக்கணிப்புக்கு உள்ளாகிறாள் என்றாலும் அடியாழத்தில் அவள் அடங்கா காதலை சிறு வயதிலிருந்து வளர்த்து வந்தவளாக இருக்கிறாள். அந்த அகங்காரமும், காதலும் அவளிடம் சீண்டலாகவும் பெண் எனும் அடையாளமாகவும் உருவாகி இருந்தது. அவை உடைந்து மறு கோடியில் முழுமையான சினமாக உருவெடுக்கத் தேவையான படிமங்கள் இப்பகுதியில் மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இந்நூலின் மிக முக்கியமான பகுதியாக அம்பை சிகண்டியாக மாறும் நிகழ்வுகளைச் சொல்லலாம். அணங்கென அவள் புறப்பட்டு காடு மலை எல்லாம் அலைகிறாள். பித்தியென சுற்றும்போது பன்றிகளுடன் சேர்ந்துகொள்கிறாள். பெண் எனும் அடையாளத்தால் தான் பெற்ற அவமதிப்பை கிழித்து தூர வீசுவதற்கான வழியைத் தேடி பித்தி போல அலைகிறாள். ஸ்தூனகர்ணனையிடம் வேண்டிக்கொண்டு பெண் அடையாளம் கலைந்து சிகண்டி ஆகிறாள். பீஷ்மரைக்கொல்வது மட்டுமே அவளது தர்மம் என அலைகிறாள். அக்னிவேசரிடம் பயிற்சிக்குச் சென்றபோது எதிரியை முற்றறியும் ரகசியமே வெற்றிக்கானத் திறவுகோள் என்பதை அறிகிறாள். பீஷ்மரை முன்னர் தோற்கடித்த பால்ஹிகரை சந்திக்க சிபி நாடு செல்கிறாள். 

பெண்களின் சாபம் பெரும் சுமையென பீஷ்மரை வாட்டுகிறது. நாட்டை விட்டு விலகி பல வருடங்கள் பாதமே வழியெனச் செல்கிறார். பீஷ்மர் தன் முன்னோர்களின் ஊரைத் தேடி அலைகிறார். வழியில் ஓரிரவு தங்க நேரும் இடத்தில் அவள் மீது மையல் கொள்ளும் பெண்ணை விலக்கிச்செல்கிறார். கனவில் தன்னைக் கொல்ல வருபவளை அவள் அடையாளம் காட்டுகிறாள். அதே கனவை சிகண்டியும் காண்கிறாள். இருவர் கண்ட ஒரே கனவு. பீஷ்மர் யாரெனத் தெரியாமலே அவரிடம் ஆசிர்வாதம் வேண்டி நிற்கிறாள் சிகண்டி.

வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது. அந்த விளைநிலத்தின் முதல் நீர் சத்யவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை போன்றோரின் கண்ணீர் துளிகளே.

 

https://solvanam.com/2020/12/27/முதற்கனல்-விளைநிலத்தின/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசை என்ன செய்வது?

நியாயமான கேள்விதான். 

ரொம்ப பெரிசாக இருக்கிறது, வழமை போல் தலையணையாக வைத்து தூங்கவும் முடியாது🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.