Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்பு ஜூலை; “காயாத இரத்தம்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை; “காயாத இரத்தம்”

July 21, 2020
  • தாயகன்

லங்கைத் தமிழர் வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள் .

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் இதயங்களை உறைய வைத்த கதறலும், கண்ணீரும் காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?

கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த தமிழினப் படுகொலை நடந்து எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் 37 ஆண்டுகள். வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் இக்காடைக்கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட,வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும்.

black-july-00.jpgதமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் ஆசிர்­வா­தத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டன. 1983 ஜூலை 23,24,25,26 ஆகிய தினங்களில் ஐ.தே .க.அரசினால் திட்டமிட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ”ஜூலைக் கலவரம்” எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக,தீராத வலியாக கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 37வருடங்கள் கடந்துவிட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாக பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83 இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கலங்கவைப்பதை தவிர்க்க முடியாது.

ஜனநாயகத்தின் அடிப்படையில் இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனச்சாட்சிகளை இருளாக்கிய அந்த ”ஜூலைக் கலவரம்” எனப்படும் தமிழினப்படுகொலையே 30 வருடயுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்ததுடன் உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி, சிங்களவர்-தமிழர்களை இன்றுவரை எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது. தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இந்தக் சிங்களவர்களின் கடைகெட்ட காடைத்தனம் தேசிய அடக்குமுறையினது உச்சக்கட்டமாகும்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை ஜே .ஆர்.ஜெயவர்த்தன அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது.. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். தாக்கப்பட்டனர்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக இடம்பெற்றுவந்தன..அது மட்டுமன்றி கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார் ,சிறைக்காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக்கைதிகள் ,காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி ”உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” எனக்கூறி ஆட்சியாளர்களால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர்.
தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் தகனம் செய்ய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. தமிழினப்படு கொலைகளை தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது.

black-july.jpgஇதற்காகவே யாழ் திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக்காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது.

ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப்படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸா ரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாக தமிழர்களைத் தேடித்தேடிக்கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுகள் செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர் ஜூலை 25 ஆம் திகதி மாலை 2 மணிக்கே ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது .

இரா­ணு­வத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும், இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஊட­கங்­களின் ஊடாக உண்மை நிலை­மையை உட­னுக்­குடன் அறிய முடியா சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது.அப்­போது கொழும்பில் இருந்த வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் கடு­மை­யாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டார்கள்.

அவர்கள் தங்­க­ளு­டைய ஹோட்டல் அறை­களில் இருந்து வெளியில் வரு­வ­தற்கும் சில நாட்கள் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் நாட்டில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டனர் .

முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், சிங்களக்காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது படுகொலைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது.ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை அரங்கேற்றினர். . திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது.

ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப்படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன. தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும் பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.

ஐ.தே .க.அரசின் ஆட்சியில் ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன வழி நடத்தலில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் சிங்களக்காடையர்களை கட்டவிழ்த்துவிட்டு மேற்கொள்ளப்பட்ட ஜூலைக் கலவரம் என்ற பெயரிலான இந்த தமிழினப்படு கொலையின் பின்னர் ஜே .ஆர்.ஜெயவர்த்தன பிரிட்டன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் சிங்களத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தியதுடன் அந்த முகமே இன்று வரையும் வெளிப்பட்டும் வருகின்றது. அந்த நேர்காணலில் ”இப்போது யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை. தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” என ஜே .ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இந்த தமிழினப்படுகொலையை வெளிநாடுகள் சில கண்டித்தபோது “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். அத்துடன் “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற சூளுரையும் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.
நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு, வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது பொலி­ஸாரும் படை­யி­னரும் ஏன் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்லை என டைம்ஸ் ஒவ் இந்­தியா பத்­தி­ரிகை, அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜெயவர்த்தன­விடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்­காணல் ஒன்­றின்­போது வின­வி­யது.

‘படை­யி­ன­ரிடம் பெரிய அளவில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உணர்வு ஏற்­பட்­டி­ருந்­தது என நான் நினைக்­கிறேன். கலகத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினால், அது சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாகப் போய்­விடும் என்றும் அவர்கள் (படை­யினர்) உணர்ந்­தி­ருந்­தார்கள். உண்­மை­யி­லேயே சில இடங்­களில் அவர்கள், அவர்­களை (கல­கக்­கா­ரர்­களை) ஊக்­கு­வித்­தி­ருந்­ததை நாங்கள் கண்டோம்’ என ஜெயவர்த்தன­ பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இந்த 1983 ஜூலைக்கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல் – சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது. கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாக பார்க்கப்பட்டது.

ஆனால் 37வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப்பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை.1983 ஜூலையில் நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். சிங்களம் -தமிழ் என்ற இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் எற்பட்டுவிட்ட முடிவு. ஜூலைக் கலவரம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை என்றுமே அழியாத வடுவாகத்தான் இருந்துவருகிறது.

 

http://thinakkural.lk/article/56595

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.