• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

தமிழர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட, கருப்பு ஜுலை தினம் இன்று!

Recommended Posts

 

 

தமிழர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட, கருப்பு ஜுலை தினம் இன்று!

உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள்.

ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது.

இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்படுவதற்கான முன்னெடுப்புகளையும் பெரும்பான்மை அரசியலால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பல வன்முறைகள் தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்து வடிவிலும் பதிவுகள் வடிவிலும் மட்டுமே காணக்கூடிய அளவில் உருமாற்றம்பெற்றுள்ள நிலையில், இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக ஆழப்பதிந்திருக்கின்ற வரலாற்று துயர்களில் ஒன்றாக இருப்பதும் தமிழர்கள் மீது பேரினவாதத்தால் நடத்தப்பட்ட இத்தனை பெரிய இனப்படுகொலையின் மிகப்பெரிய திருப்பு முனையாக இருப்பதுமான ஒன்று ஜூலை கலவரம்.

1983ம் ஆண்டு இலங்கை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம். இலங்கை பேரினவாதம் சிறுபான்மையினத்தவர்களின் மீது படிப்படியாக தனது அடாவடித்தனங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தாலும் அனைத்துமே வெளி உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்த காலப்பகுதி.

1981இல் உலக தமிழர்களின் மிகப்பெரிய கலாசார சின்னம், யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தழல்கள் முற்றாக அணைந்துவிடாத காலப்பகுதி.

விடுதலைக்கான ஒரே வழி ஆயுதம் ஏந்துவதுதான் என பேரினவாதத்தால் கற்பிக்கப்பட்டு போராடத் தயாரான தமிழ் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள், படிப்படியாக வளர்ந்து கனிசமாக பலம் பெற்றிருந்த காலப்பகுதி.

அந்த ஆண்டின் ஜூலை மாதம் 23ஆம் திகதி வளர்ச்சிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்த விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களது தரப்பில் இருந்த மிக முக்கியமான படைத்தளபதிகளில் லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8வது நாள்.

இவர்களின் இறப்புக்கான பதிலடியினை வழங்க வேண்டிய கடப்பாடு விடுதலைப் புலிகளுக்கு. அதேநேரம் இலங்கை இராணுவத்தினை பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கெதிரான மிக முக்கிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டு குறித்த நடவடிக்கையில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட, விடுதலைப் புலிகளுக்கு எதிரான, அந்த நடவடிக்கை குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பலாலியில் இருந்து நகரும் இலங்கை இராணுவத்தினரின் ஒரு குழுவினருக்கு FOUR FOUR BRAVO  என பெயரிடப்படுத்திருந்தது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் பலாலி குழுவினர் திருநெல்வேலி பகுதியால் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தபாற்பெட்டி சந்தியில் வைத்து விடுதலைப் புலிகளினால் நிலக்கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

மேலும் அப்பகுதியில் பரஸ்பரம் இரு பகுதியினருக்கு இடையில் நடந்த ஆயுத தாக்குதலில், ஏறக்குறைய 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்ததுடன், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரில் மேலும் இருவர் இறப்பினைத் தழுவ உயிரிழப்பின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது.

இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கனிமப்பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பது உபரித்தகவல்.

இந்நிலையில் இந்த தாக்குதலை, ஆரம்ப புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு மிகப்பெரிய இன வன்முறையினை கட்டவிழ்க்க திட்டம் தீட்டியது பெரும்பான்மை.

அதற்கு வழிகோலுவது போல யாழில் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதாக வெளிவந்த வதந்தி மற்றும் கொல்லப்பட்ட இராணுவத்தினரை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை என்பன அமைந்துவிட தமிழர்களின் வாழ்க்கையினை நிலைகுலைய செய்தன அந்த நாட்கள்.

காலனித்துவத்திற்கு இலங்கை உட்பட்டிருந்த காலப்பகுதியில் இருந்தே தமிழர்கள் கல்வியிலும் வியாபார ரீதியாகவும் தம்மை வளர்த்துக்கொண்டதன் காரணமாக, தலைநகரின் பல பகுதிகளில், தமிழர்களும் தமிழர்களின் வியாபார தளங்களும் பரவலாக காணப்பட்டன.

இலங்கை, பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே என கோஷமிடும் பெரும்பான்மை இனத்தவர்களால் இம்முறை அதிகமாக கவனம் செலுத்தப்பட்டது, கொழும்பில் இருந்த தமிழர்கள், அவர்களது உடைமைகள் மற்றும் தமிழர்களின் வியாபார தளங்கள் என்பனவே ஆகும்.

அந்த அடிப்படையில் ஏறக்குறைய ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவங்களில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொழும்பிலும் இலங்கையின் பெரும்பான்மையான பகுதிகளிலும் வைத்து கொல்லப்பட்டனர்.

குறித்த ஜூலை கலவரம் முறையாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்ற குற்றச்சாட்டுக் குரல் மனித உரிமைகளின் மேல் நம்பிக்கையுள்ள மற்றும் மனிதாபிமானம் வாய்ந்த மனிதர்களிடம் இருந்து இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அந்த அளவுக்கு மிக கச்சிதமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஜூலை கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்கள் தொடர்பாகவோ, அதனை முன்னின்று நடத்தியவர்கள் தொடர்பாகவோ, இன்று வரை பெரும்பான்மை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லையென்பது இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கான ஓர் அளவீடு என்றால், குறித்த கலவரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் அதற்கு எதிராக கண்டனம் வெளியிட்டு இந்த கலவரத்தை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்த சர்வதேச நாடுகளிடம், எமது நாட்டு பிரச்சினைகளை நாம் பார்த்துக்கொள்வோம் என அக்காலப்பகுதியில், இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்தமை அதற்கான இன்னொரு சான்று.

கொழும்பு போன்ற இலங்கையின் பிரதானமான பகுதிகளில் இவ்வாறான அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றால், இலங்கையில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளில் ஏற்கனவே பல இன்னல்களை எதிர்நோக்கி வந்த தமிழ் கைதிகளுக்கு மேலும் மேலும் அச்சுறுத்தலாய் அமைந்தன இந்த வன்முறைகள்.

அந்த அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் கதவுகள் பேரினவாத கரங்களினால் உடைக்கப்பட்டன. ஜூலை 23ஆம் திகதி யாழில் இடம்பெற்ற தாக்குதலை காரணமாகக்கொண்டு இடம்பெற்ற ஜூலை கலவரத்தின் கொடூர கரங்கள் அதே மாதம் 25ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை வரை நீண்டதில் அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளில், 35 பேர் கோர தாக்குதல்களுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.

மேலும் அன்று குடித்த குருதி போதாமல் 28ஆம் திகதி மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களில், 18 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

தமிழின மீட்பு போராட்ட வராலற்றில் மிக முக்கியமான போராளிகளாக கருதப்பட்ட ஜெகன், தங்கதுரை, குட்டிமணி ஆகியோரின் உயிர்களும் காவுகொள்ளப்பட்டன. அதனை தாண்டிய கொடூரமாக ‘நான் இறந்த பின்னர் எனது கண்களை இரண்டு தமிழர்களுக்கு பொருத்திவிடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை என் கண்கள் காணட்டும்’ என குட்டிமணி தனது மனதின் வேட்கையினை வெளிப்படுத்திய ஒரே காரணத்துக்காக அவரது கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு பேரினவாதத்தின் கால்களால் நசுக்கப்பட்டன.

ஆனால் தமிழினத்தின் வலிமை, பேரினவாதத்தின் கற்பனையை விடவும் சர்வதேசத்தின் கற்பனையை விடவும் மேலானது என்பதை காலம் உலகிற்கு கற்பித்தது.

இத்தனை கொடூரங்களைத்தாண்டி கால வரிசையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட எண்ணிலடங்கா கொடூரங்களைத் தாண்டி, தமிழினம் நிமிர்ந்தது, உலகின் கடைக்கோடி எல்லை வரை வியாபித்தது. எத்தனை பேரினவாதத்தாலும் எத்தனை அடக்குமுறைகளாலும் அவ்வளவு எளிதாக அணைத்துவிட முடியாத வலிமை தமிழுக்கும் தமிழர்களுக்குமானது.

https://athavannews.com/தமிழர்களின்-வாழ்வை-புரட்/

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தமிழர்களை எழுச்சியுறவைத்த கறுப்பு ஜுலை 1983 – சிவசக்தி

Last updated Jul 23, 2020

ஈழத்தழிழர்களின் வரலாற்றுத் தடத்தில் மறந்துபோகமுடியாத ஆழமான நினைவுகளைப் பதித்துச்சென்றது1983 கறுப்பு ஜுலை பலநூறுபேர் உயிரிழக்கவும், இலட்சக்கணக்கானோர்அகதிகளாகவும்காரணமாகியது இந்தக் கறுப்பு ஜுலை.

37234B9F-9369-49F2-A45F-64BB6D511686.jpe

சிங்களப் பேரின அரசியல்வாதிகளில் ஒருவராகவும்இலங்கையின் அதிபராகவும் இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் நன்கு திட்டமிடப்பட்டு, தமிழர்கள் மீதுஏவிவிடப்பட்டதே இந்தவன்கொடுமைகளாகும்.

தமிழர்களின் உயிர்கள் அழிக்கப்பட்டது. ஒரே இரவில்இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் வீகளைஇழந்துஏதிலிகளாக மாற்றப்பட்டனர். கடுமையான உழைப்பின்மூலம்  ஏராளமானசொத்துகளைதேட்டமாக்கிவைத்திருந்த கொழும்புத் தமிழர்கள்உடுத்தஉடைகளுடன் வீதிக்குவிரட்டப்பட்டனர். பலபெண்கள் பாலியல் வன்முறைக்கும்உள்ளாக்கப்பட்டனர். மனித சமுகம்அருவருக்கத்தக்கமுறையில் தமிழ்மக்கள் மீதான வன்முறைகள்கட்டவிழ்த்து விடப்பட்டன. பலஇடங்களில் அரசகாவற்றுறையினரின் முன்னிலையிலேயே தமிழ்மக்கள்கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும்இருந்தனர். 

மட்டுமன்றி, தமிழர்களுக்கு உரித்துடைய பலகோடிபெறுமதியான உடைமைகள் எரித்தழிக்கப்பட்டன. தமிழர்களின் வணிக நிலையங்கள் சூறையாடப்பட்டன. இது நன்கு திட்டமிடப்பட்டஇனப்படுகொலையாகவேஅன்று நடத்தப்பட்டது என்பதை அரசியல் ஆய்வாளர்கள்நன்கறிவர். 

வெலிக்கடைச்சிறையிலும் சிறைவைக்கப்பட்டிருந்ததமிழ் இளைஞர்கள் வெட்டியும் குத்தியும்படுகொலைசெய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகள் ஜுலை 25, 27 ஆகிய இருநாட்களில் கூடவிருந்த சிங்களச்சிறைக்கைதிகளால் நடத்தப்பட்டன. இதற்குசிறையதிகாரிகளும் ஒத்துழைப்புநல்கியிருந்தனர். தீவரவாதிகளாக குற்றஞ்சுமத்தப்பட்டுகைதுசெய்யப்பட்ட குட்டிமணி, ஜெகன் என்கின்ற இருஇளைஞர்கள் உட்பட 52 பேர் இவ்வாறு சிறையில்படுகொலையுண்டார்கள்.  

1983 ஜுலை க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின்குருதி காயமுன்னர் வெளிநாட்டுஊடகம்ஒன்றிற்குநேர்முகமளித்த ஐனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ‘ தமிழர்களின் பாதுகாப்புக்குநான்ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது. ‘ எனத்தெரிவித்தார். இதனூடாக தமிழ்மக்களின்மேல்தனக்கிருந்த இனவாத வேற்றுமை உணர்வை அவர்வெளிப்படுத்தினார். 

தமிழினத்தவர்களைப் பல்வேறுவழிகளில் அடக்கிஒடுக்கிவந்த சிறீலங்கா அரசிற்கு, தக்கதொருபதிலடிகொடுக்க தேசியத்தலைவர் அவர்கள் திட்டமிட்டார். தமிழ்மக்களை தாக்குவதும், அவர்களின்உரிமைகளைமறுப்பதும், தமிழ் இளையோரின் கல்வியுரிமையைமறுத்ததுடன், இளைஞர்களைகைதுசெய்தும்கடத்தியும் படுகொலை செய்வது என்கின்றஅரசபயங்கரவாதத்துக்கு நெத்தியடிகொடுக்கும் நாள்நெருங்கியது. 

இவ்வேளை விடுதலைப் போராட்டத்தின் முதலாவதுதாக்குதற் தளபதியும் தேசியத்தலைவரின்உற்றதோழனுமான சீலன் மீசாலையில்  படையினரின்சுற்றிவளைப்பில் படுகாயமடைந்தார். அவர் தன்னைச்சுட்டுவிட்டு தப்புமாறு தோழர்களைப்பணித்தார். அதன்படி இயக்க மரபுரிமைப்படி அவர்எதிரியிடம்உயிரோடு பிடிபடாது, வீரச்சாவணைத்தார். 

இவை அனைத்துக்குமான விடையாகவே யாழ்ப்பாணம்திருநெல்வேலியில் படையினரின்சுற்றுக்காவல்அணிமீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈழத்தமிழர்களின் இனவிடுதலைஉணர்வைப்புறக்கணித்தது மட்டுமல்லாது, அந்த விடுதலைஉணர்வை படைபலத்தின் மூலமாகஅடக்கிவிடலாம்என நினைத்த பேரினவாதத்துக்கு கொடுக்கப்பட்டசெய்தியாகவும் இத்தாக்குதல்அன்று அமைந்தது.  

இத் தாக்குதலில் 13 படையினர் கண்ணிவெடியில்கொல்லப்பட்டதை தனது அரசியலாக்கி, ஓர்இனப்படுகொலையையே தமிழ்மக்கள் மீது ஏவவிட்டவர்ஜே.ஆர். ஜெயவர்த்தன இவர்பிறப்பால்கிறிஸ்தவரானபோதும் சிங்கள பௌத்தத்தின்காவலராக தன்னை மாற்றிக்கொண்ட பேரினவாதி.தமிழ்மக்கள் மீதான இனவெறுப்புணர்வை விதைத்ததில்இவருக்கும் பெரும்பங்குண்டுஎன்பதைவரலாற்றாசிரியர்கள் நன்கறிவர். 

தென்னிலங்கையில் தமிழர்கள் பொருளாதாரவளர்ச்சியடைந்திருந்தார்கள். தமிழ்மக்கள்அங்குவசதிவாய்ப்புகளுடன் சிறப்பாகவாழ்வதை சிங்களப்பேரினவாதிகளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. தமிழ்மக்களின் பொருளாதாரத்தின் அடித்தளமானவாணிபத்தை நிறுத்த, சிங்களப்பேரினவாதம்காத்திருந்தது.

அதுமடடுமன்றி, 1983 மே மாதத்தில் உள்ளுராட்சிக்கானதேர்தல் நடைபெற்றது. தமிழ்மக்களின்மீதுமனிதப்பண்பாட்டிற்கு முரணாக அடக்குமுறைகளையும்ஒடுக்குமுறைகளையும்கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசைப்புறக்கணிக்கும் வகையில் தமிழ்மக்களை வாக்களிப்பில் தமிழ்மக்களைவாக்களிக்கவேண்டாம் எனவிடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். 

இந்தவேண்டுகோளுக்கிணங்கி தமிழ்மக்கள்உள்ளுராட்சித் தேர்தலைப் புறக்கணித்து, அரசிற்குநெருக்கடியை ஏற்படுத்தினர். ஆதனால் தமிழ்மக்களின்மீது பழிதீர்க்க ஜே. ஆர். ஜெயவர்த்தனஅரசுகாத்திருந்தது. இதுவும் 1883 ஜுலைஇனப்படுகொலைக்கான காரணமாக அமைந்தது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை  வைத்து, தமதுதமிழர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை அதுநிறைவேற்றிக்கொண்டது என்பதுதான்உண்மையாகும். 

ஜுலை 23 நள்ளிரவில் தொடங்கி ஆறு நாட்களாக இந்ததிட்டமிட்ட இன அழிப்பு நடைபெற்றது. இலங்கை அரசுகண்துடைப்பாக ஊரடங்குச்சட்டத்தைநடைமுறைப்படுத்தியிருந்தபோதும், அரசகாவற்றுறையினரும், படையினரும்தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிஉற்சாகப்படுத்தினர். 

இந்தக் கறுப்பு ஜுலைத் தாக்குதல்கள் தமிழர்களின்மனங்களில் ஆறாத வடுவாகப் பதிந்ததுடன், தமிழர்களின் விடுதலைப்போராட்ட உணர்வையும்கிளர்த்திவிட்டது. பெரும்பாலானதமிழ்மக்களைஇளையதலைமுறையினரின் எழுச்சிமிக்கவிடுதலைப்போராட்டத்திற்குஉறுதுணையாகவும்மாற்றியது. பல்லாயிரக்கணக்கான தமிழ்இளையோர்கள் இன உணர்வால்உந்தப்பட்டு, விடுதலைப்போராளிகளாக இணையவும் தூண்டுதலாகஅமைந்தது. 

அதேவேளை இந்த ஜுலைக்கலவரத்தின்பின்னர் தான், இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியநடுவண்அரசின் தலையீடும் ஏற்பட்டது. தமிழ்மக்களின்இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமானஅரசியல்தீர்வை வலியுறுத்திய இந்திய நடுவண் அரசு, போராளிக்குழுக்களுக்கும் இராணுவப்பயிற்சியளிக்கமுன்வந்தது. 

எனவே தான் 1983 ஜுலை என்பது ஈழத் தமிழர்களின்ஆன்மாவில் அழிக்கமுடியாதவடுவாகநிலைத்திருக்கிறது

 

https://www.thaarakam.com/news/143665

Share this post


Link to post
Share on other sites

இலங்கை தமிழர்களின் ஆறாத ரணத்தின் கதை

 

Share this post


Link to post
Share on other sites

தமிழருக்கு எதிராக அநியாயங்கள் செய்த டிஎஸ் சேனநாயக்க வம்சம், அவர் குதிரையில் இருந்து விழுந்து இறந்துபோக, திருமணம் செய்யாத மகன் டட்லி சேனநாயக்கவுடன் முடிவுக்கு வந்தது.

பண்டாரநாயக்க வம்சம், அவர் சுட்டுக்கொல்லப்பட, திருமணம் செய்யாத மகன் அனுராவுடன் முடிவுக்கு வந்தது. மகள் ஜனாதிபதியாகினாலும், கணவர் விஜய குமாரணதுங்க சுட்டுக்கொல்லப்பட,  பிள்ளைகள் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டனர்.

ஜேஆர் ஜயவர்தன வயதானபோதும், நோயினால் அழுந்தி மாண்டு போக, அவரது மகன் பெரிதாக சோபிக்காமல், ஒதுங்கிக் கொண்டார்.

பிரேமதாச, கொல்லப்பட, அவரது மகன் அரசியலில் முயல்கிறார்.

மகிந்தவுக்கு காலம் என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. எனினும் மகனுக்காகவே அரசியலில் தொங்கிக் கொண்டு இருக்கிறார் என்பர் பலர்.

Share this post


Link to post
Share on other sites

கறுப்பு யூலை நினைவு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு!

 

IMG_20200723_161746-960x539.jpg?189db0&189db0

கறுப்பு யூலை இனக்கலவர தாக்குதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட 37ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலை வளாகத்தில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share this post


Link to post
Share on other sites

கடந்து போகுமா கறுப்பு ஜூலை? கிஷோர்

b-july.jpg

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய சம்பவம் என பல்வேறு தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், மறையாமல் அடி மனதில் கறையாக படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.

ஜூலைக் கலவரம் நடந்தேறி 31 வருடங்கள் உறுண்டோடினாலும் தமிழரின் மனத்தோடு ஆழமாக பதிந்துவிட்டது. வருடத்தில் மாதங்கள் பல கடந்தாலும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83 இன் கறைபடிந்த கறுப்பு ஜூலையே நினைவிற்கு வருகின்றது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்படுகின்றார்கள். இதன் எதிரொலியாக தலைநகரில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள்மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி அனைவரும் தாக்கப்பட்டனர்.

நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இனக் கலவரத்தால், தமிழ் மக்கள் செய்வதறியாது அல்லோல கல்லோலப் பட்டார்கள். தமது உயிர்களை பாதுகாக்க எங்கு செல்வதென தெரியாமல் ஏக்கத்தோடு நின்றார்கள்.

ஜூலை 23இல் ஆரம்பித்த இனக்கலவரம் மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரத்தில் 400 முதல் 3,000 வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழரின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் ஜூலைக் கலவரம் சம்மந்தமான தரவுகள் குறிப்பிடுகின்றன.

தலைநகரில் இனக் கலவரங்கள் இடம்பெற்ற அதே சம காலப்பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்களக் கைதிகளால் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன. சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் 53 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு 1983 ஜூலையில் யாருமே எதிர்பார்த்திராத, முழுநாட்டையுமே கலங்க வைத்த சம்பவங்கள் நிகழ்தேறின. இது தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.

1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமான உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். இவ்வாறான இனக்கலவரத்தை இன்று நினைத்தாலும் இதயமே விறைத்து விடுகிறது.

83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல் – சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. இக் கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள்.

1983 ஜூலைக் கலவரங்களை மீண்டும் நினைவுபடுத்தும் முகமாக நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களைக் கூறலாம். அன்று தமிழர்களுக்கு தலைநகரில் என்ன நடந்ததோ அதே போல் இன்று சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கும் நடக்கிறது. 1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலை நிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது. இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில்பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது. காலத்திற்கு காலம் பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களை நிம்மதியாக வாழவிடாமல் திட்டமிட்டு தடுத்து வருகின்றனர். சிறுபான்மை இனத்தவர் தலையெடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை பெரும்பான்மை இனத்தவர் கொண்டு இருந்தால் நாட்டில் அவ்வப்போது கலவரங்களும் முறுகல் நிலையும் தவிர்க்க முடியாது.

1983களில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமது சொந்தப் பணத்தில் வீடுகளையும், நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கி சுயமாக கௌரவமாக வாழ்ந்தார்கள். யார் நிலத்திலும் அவர்கள் அடாத்தாக குடியேறவில்லை. ஆனாலும், அவ்வாறு வாழ்ந்தவர்களையே அன்று தலைநகரில் இருந்து விரட்டினார்கள்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் திட்டமிட்ட வகையிலே அபகரிக்கப்படுகிறது. அதேநேரம் தமிழர்கள் மட்டுமே பாரம்பரியமாக வாழ்ந்த பூமியில் சிங்கள மக்களை அடாத்தாக குடியேற்றி இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை இன்றைய அரசு மேற்கொண்டு வருகின்றது. வடக்கிலே நாவற்குழி,முல்லைத்தீவு, வவுனியா என பல்வேறு இடங்களில் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால், அதேயிடத்தில் நீண்ட காலங்களாக வசிக்கின்ற தமிழ் மக்களுக்கு காணி உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தமிழர்கள் பாரம் பரியமாக வாழ்ந்த நிலங்கள் இராணுவத் தேவைக்கு என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது. இதற்கு எதிராக அண்மைய நாட்களில் பல போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு வடக்கில் மிக வேகமாக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதும் தமிழர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் வடக்கில் மீண்டும் இனக் கலவரங்கள் உண்டாகி தமிழர்கள் தமது சொந்த நிலங்களில் இருந்தே விரட்டப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் இப்போதே தோன்ற தொடங்கி விட்டது.

ஏனென்றால், கடந்த வருட இறுதிப் பகுதியில் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு காணிகளை பங்கீடு செய்ய அளவீடுகளை மேற்கொண்டிருந்த சமயம், அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை சிங்கள மக்கள் இனத்துவேசத்தோடு விரட்டியடித்த சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இவ்வாறான நிலைமையை நோக்குகின்றபோது நாட்டில் இன்றும் கறுப்பு ஜூலையை நினைவுபடுத்துகின்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழுமா? என்ற வினா தமிழர்கள் மத்தியில் இன்று காணப்படுகின்றது.

இலங்கையில் இனங்கள் அனைத்தும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்குமானால் மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த நிலங்களில் சுதந்திரமாக வாழ விடவேண்டும். இல்லையேல் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைக்கின்ற கறை படிந்த கறுப்பு ஜூலை மீண்டும் மீண்டும் நினைவுகளில் தவழ்ந்து கொண்டே இருக்கும்.

கிஷோர்

https://www.vanakkamlondon.com/b-july-23-07-2020/

Share this post


Link to post
Share on other sites

தமிழ் உணர்வுள்ள ஒருவராலும் மறக்க முடியாத நாள். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.