Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இதயபூமி – 1’ தாக்குதலின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்

 

 

Maaveerarkal-of-Operation-Ithayaboomi-scaled.jpg

‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!

மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழகத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.

லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்

Lieutenant-Thirumalai-Nambi.jpg

லெப்டினன்ட் திருமலைநம்பி

ஹயசேன, மின்னல், சிக்சர், செவண்பவர் என்றெல்லாம் மணலாற்றில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை முறியடித்தபோது எம்மோடு துணை நின்ற திருமலைநம்பியே! உன் மலைபோன்ற வீரத்தை நாம் மறந்துவிடமுடியுமா…?

மணலாறு தமிழீழகத்தின் ‘இதயம்’ என்பதை உன் இதயத்தில் பதித்து செயல்புரிந்த வீரனே! நீ பிறந்த மண் கொழும்புத்துறையா மணலாறா என்று தடுமாறவைத்தவனே! உன் உணர்வுகளை, உன் நினைவுகளை இலகுவில் அழித்து விட முடியுமா…?

சண்டைக்குச் செல்லும் போதெல்லாம் , “மச்சான் நான் இந்தச் சண்டையில் செத்திடுவன்;;; நான் சண்டைபிடிக்க செத்த முழு விபரத்தையும் வீட்டிலபோய் மறக்காமல் சொல்லிப்போடு” என்று கேட்பாய்.

பொறுப்பாளனென்பதை மறந்து தோழமையோடு பழகினாய். போர் வாழ்வில் உன்னுடன் வாழ்ந்த கால நினைவுகள் எண்ணில. அவற்றில் சிலவற்றை மட்டுமே நினைத்துப்பார்க்குச் சக்தி எனக்குண்டு. என் சக்திக்கு அப்பாற்பட்டவன் நீ. அதனால்தான் என்னை முந்தி சாதனை வரிகளில் பிறந்து நிற்கிறாய்.

மண்கிண்டிமுகாம் தகர்ப்புக்காகச் செல்லும்போது எம்மையெல்லாம் ‘வீடியோ’ படம் எடுத்ததும், அப்போது நீ சொன்னதையும் நினைத்துப்பார்க்கிறேன்.

‘வீடியோ’ கமெரா உன்னை நோக்கித் திரும்பியபோதெல்லாம் எழுந்து, எல்லோருக்கும் முன்னே வந்து நின்றாய். “ஏன் மச்சான் எழும்பி முன்னுக்கு முன்னுக்குப் போய் நிற்கிறாய்’ என்று கேட்டேன்.

“நான் இந்தச் சண்டையின் செத்தால் அண்ணன் என்னை அடிக்கடி போட்டுப் பார்ப்பாரில்லையா?” என்று, பதில் சொன்னாய். தலைவன் உன் கடைசி வீரத்தைப் பார்க்கவேண்டுமென்று தீர்மானித்துத்தான் இதைச் சொன்னாயோ…?

நீ எழுந்ததும், இருந்ததும், விழுந்ததும் இன்னும் என் மனத்திரையில்…

Lieutenant-Nakkeeran.jpg

லெப்டினன்ட் நக்கீரன்

நக்கீரா! நீ பிறந்த பழுகாமத்துக்கு வழு ஏற்படக்கூடாதென நினைத்த மறவனே! கடைசி நிமிடம் வரை உனக்கிருந்த மனக்குறையை வரிகளாக்கி, தமிழ் மக்களின் முன் வைக்கிறேன்.

“எல்லா தாய் தகப்பனும் வந்து வந்து தங்கட பிள்ளையள உயிரோட பாத்திட்டு போயிட்டாங்க அம்மா மட்டும் ஏன் இன்னும் வரவில்லை நான் இந்தச் சண்டையில் செத்தா பொடியக்கூட பார்க்க வரமாட்டாவா மச்சான்…” என்று, கடைசி நிமிடத்திலும் உன் மனதில் கிடந்த மனக்குறையை, ஏக்கத்தை வெளியிட்டாய். உன்னை உன் தாய் பார்க்கக் கொடுத்துவைக்காமல் போகலாம் ஆனால் உன் வீரத்தை கேட்டு நிச்சயம் கண்கலங்க, நிறைவு கொண்டிருப்பாள்.

நக்கீரா! உனக்கு உன் தாயைக் காணவில்லை என்று குறை. ஆனால் நாமெல்லாம் உன்னில்தானே எம் தாயைக் கண்டோம். உன் செயலில்தானே எம்தாயின் அன்பைப் பெற்றோம். நாம் காயப்பட்டிருந்தபோதும், நோயுற்றிருந்த போதும் அருவரூப்பின்றிக் காயம் கழுவியது… கருணையோடு பராமரித்தது…. இதைவிட உலகத்தில் உயர்ந்த பணி என்ன உண்டு? தாயிடந்தான் தூய அன்னைப் பெற முடியுமென நினைத்த எமக்கு, ஒரு போராளியிடமும் அதைப் பெறமுடியுமென்பதை உணர்த்திவிட்டாய். தாயை டிவன்றுவிட்டாய். தலைவன் சரியாகத்தான் வளர்த்தார் என்பதை நிலைநிறுத்திவிட்டாய்.

‘மின்னல்’ தாக்குதலில் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு, ஓடி ஓடி நீ செய்த மருத்துவப்பணி சாதாரணமானதா…? எழுத்தில் வடிக்கக்கூடியதா…? சொல்லி முடிக்கக்கூடியதா…?

நக்கீரா! மற்றவர்கள் உன்னைப் பேசியபோதெல்லாம் மௌமாக இருந்து பின் சிரித்துப் பேசுவாயே, அது எப்படி உன்னால் சாத்தியமானது! பொறுமையை உன்னிடமிருந்துதானே சிறிதளவாயினும் நான் கற்றுக்கொண்டேன்.

ஒரேயொருமுறை நீ கோபமுற்றதையும் எவருடனும் பேசாது மௌனமாக இருந்ததையும் கண்டிருக்கின்றேன். ‘செவண்பவர்’ இராணுவ நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற படையணியில் இடம் பெறமுடியாது போனபோது, உனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா….? அன்றுதான் நீ நக்கீரனாய் நின்றாய். உன் ஈரநெஞ்சிலும் கனல் பறப்பதை அன்றுதான் கண்டேன். உனது கோபத்துக்குக் காரணம். நியாயமான கோபந்தான். ஆனால் உன் பெரும் பணியொன்றினைக் கருதியே, தளபதி உன்னை அக்களத்துக்கு அனுப்பவில்லையென்பதை அறிந்து, கண் கலங்கி நீ நின்ற நாளையும் நான் மறந்துவிடவில்லை.

‘இதயபூமி’ தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த போது செத்துவிழுவதாக நடித்தலும,; விழுந்த உன்னை நான் தூக்கிச் சென்றதும், பின்பொத்தென நிலத்தில் போட்டதும் நிஜமாக மாறிவிடும் என்று, நான் நினைக்கவில்லையடா!

தாக்குதலுக்குப் புறப்படும்போது “என்ன, நக்கரன்ர முகம் வித்தியாசமாய்க் கிடக்கு சாகப்போறன் போல கிடக்கு” என்று நான் சொன்னதும்.. சொன்னது நிகழ்ந்ததும்…

ஒரு தாயை இழந்நுவிட்டோம். உணர்கின்றோம். ஆனால், உன் உயிர் இதயபூமியை புனிதமாக்கி விட்டது. அங்கே உன்குருதியால் பதிந்த புதிய வரலாற்று வரிகள்…!

Lieutenant-Gandhi.jpg

லெப்டினன்ட் காந்தி

பெற்ற தாயும், இரத்தத்தில் உற்ற உறவினரும் பிறந்த பொன்னாட்டைவிட்டுச் சென்றபோதும், ‘தாயகமண்ணின் காற்று என் உடலைத் தழுவவேண்டும் வீழும் என் உடலில் பிறந்த பொன்னாடு புகழ்பெறவேண்டும் போகும் உயிரும் பாயும் குருதியும் வீசும் காற்றாய், முளைவிடும் தளையின் நீராய் மாறவேண்டும்’ என்று கருதி களம் புகுந்தவன் காந்தி.

ஆற்றலுள்ள தலைவன் காலத்தில் மானத்தை நிலைநாட்டிவிட வேண்டுமென்ற துடிப்போடு, இதய பூமியில் கால் பதித்தான். கிடைத்தது சிறிதாயினும் கொடுத்துண்டு வாழ்வது தமிழன் பண்பு. தமிழிலக்கியங்களில் இதைப் படித்திருக்கின்றேன். இக்கருத்தின் நிஜத்தை காந்தியில் கண்டிருக்கின்றேன். சாப்பிட அமர்ந்தால் சூழ இருக்கும் தன் தோழர்களுக்கு ஒவ்வொரு பிடி கொடுக்காவிட்டால், இவனுக்குச் சாப்பாடு இநங்காது. தனக்கு குறைவயிராகிப் போய் விடுமேயென்று ஒரு போதும் நினைத்திருக்க மாட்டான்.

பணிவும் இன்சொல்லும் காந்தியின் அணிகலன்கள். பேச்சில் இனிமை, செயலில் கனிவு நிறைந்த காந்தி களத்தில் தன் துணிவைக் காட்ட ஒருபோதும் பின்நின்றதில்லை. மணலாறு கண்ட களமெல்லாம் வீரவிளையாட்டில் இறங்கியவன்.

‘இதயபூமி – 1’ தாக்குதலுக்குச் செல்லும்முன், ‘நல்ல கடல் குளிப்பொன்று குளிக்கோணு’மெனச் சொல்லி, நாயாற்றுக்கடலில் குளிக்கச் சென்றோம். “மச்சான், இது கடைசிக்குளிப்பாயிருக்குண்டு நினைக்கிறன்” என்று, குளித்துக் கொண்டிருக்கும் போது சொன்ன அவனது வார்த்தையில், எவ்வளவு தீர்க்கதரிசனதிருந்தது!

கடைசி நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வழமைபோல் காந்தியும் அமர்ந்தான். அதுதான் அவன் எம்மோடு பகிர்ந்துண்ட கடைசி நாள்.

“மச்சான், எல்லா மாவட்டப்பெடியளும் இந்த சண்டைக்கு வந்திருக்கிறதால, நாங்கள் எங்கட கடைசிப் பவறினை சண்டையில் காட்டோணும். மணலாற்றைப் பற்றிநிக்கிற புகழை நிலை நாட்டிப்போடோணும்” என்று சொல்லிய போது, எவ்வளவு உறுதியிருந்தது!

காந்தி நிச்சயம் சாந்தி கொண்டே கண்மூடியிருப்பான். ஐந்தே நிமிடத்தில், மண்கிண்டி பிரதான முகாமிக்கு முன் காப்பாய் இருந்த மினிமுகாமைத் தாக்கியழித்து முன்னேறிய போது…. அந்தக் கடைசிநிமிடத்தில் பெருமையோடு உறங்கிய உன்விழிகள்…!

Lieutenant-Villavan.jpg

லெப்டினன்ட் விமலன்

விமலா! மன்னாரிலிருந்து வந்த நான், தோப்பூரிலிருந்து வந்த உன்னை மணலாற்று மண்ணில் சந்திக்கின்றேன். வடக்கிலிருந்து வந்த நானும் கிழக்கிலிருந்து வந்த நீயும் இதயபூமியில் இணைந்து வாழ்ந்தகால நினைவுகள் இனிமையானவை. ஆனால், இதயபூமி – 1 தாக்குதல் நடவடிக்கையில் நீ பிரிந்தபோது, துயரம் நிறைந்து துடிக்கின்றேன்.

விடிகின்ற ஒரு வரலாற்றில் உன் முடிவை எழுதிக்கொண்டதை நினைத்து, பெருமையில் விம்மிப்புடைக்கின்றேன். ஆனாலும், என்னைவிட்டு எப்படி உன்னால் புகழின் உச்சிக்குச் செல்ல மனம் வந்தது? அதை நினைக்கும்போது உன்மீது பொறாமையும் ஏற்படுகின்றது.

சிங்கள இராணுவத் தளபதிகளைக் குழப்பி நிலைகுலைய வைத்த இதயபூமி – 1 நடவடிக்கையில் மரணித்த உன் வீரவரலாற்றை, எம் தலைவன் புரட்டிப்பார்க்கின்றேன். நீ பாக்கியசாலி அவர் நெஞ்சில் உயர்ந்து நிற்குமளவிற்கு சாதனை வீரனாகிவிட்டாய்.

நீ தோப்பூரில் பயிற்சி முடித்ததும், அங்கேயே களம்பல கண்டதும், விழுப்புண் சுமந்ததும், மணலாற்றுக்கு வந்த ஒருமாதகால நடைப் பயணத்தில் துயர்கள் பலவற்றைச்சந்தித்ததும், மணலாற்றுப் பாசறை வாழ்வில் தினமும் கதையாகச் சொன்னபோது கேட்டிருக்கின்றேன். மிகக்குறைந்த வயதில் விடுதலைக்கு உன்னை அர்ப்பணிக்கத் துணிந்ததை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்.

மண்கிண்டி இராணுவ முகாம் தசர்ப்புச்குச் சென்ற அன்றைய இரவு. நீ ஆணித்தரமாகச்சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் நிற்கின்றன.

“இந்த இடத்தில் எங்கட எத்தின பெடியளப் பறிகொடுத்திருக்கிறம் இந்த முகாமை அழிச்சு எங்கட கொடியினை இதில் பறக்கவிடோணும்” என்று கூறி, ஆக்கிரோஷத்துடன் முகாமிற்குள் பாய்ந்து தாக்கினாய். அணியணியாய் எம்வீரர்கள் முகாமிற்குள் பாய்வதற்கு வழிசமைத்துக் கொடுத்த நீ…

மண்கிண்டியின் உச்சியில் கொடி பறந்தது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள உன்னைத் தேடினேன். ஆனால் நீ… மௌனமாகக் கிடந்த உன்னைத் தூக்கி தோளில் சுமந்து….

Lieutenant-Thuraikannan.jpg

லெப்டினன்ட் துரைக்கண்ணன்

அரசியல்ஞானம், கலைஞானம், போர்த்திறன் என மூன்று திறமைகளும் ஒரு மனிதனிடம் கூடிப்பிறப்பது அரிது. எமது தலைவனிடத்தில் நிறைந்துகிடக்கின்ற இந்தத் திறமைகள், அவரது வளர்ப்புக்களிடம் குறைவின்றிக் காணப்பட்டாலும், சிலரிடமே முழுமையாகக் கிடக்கின்றன. துரைக்கண்ணனிடம் இந்தத் திறமைகளின் நிறைவைக் கண்டிருக்கின்றேன்.

சினம், கோபம், குரோதம் எப்படியென்பதை அறியாத பொறுமைசாலி. பொறுப்பாளன் என்பதை மனதிற்கொண்டு கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் அன்பில் வழிப்படுத்தும் பண்பாளன்.

தற்பெருமை, தற்புகழ்ச்சிகளை விரும்பாத குணசீலன். சகதோழர்களுக்கு வித்தைகள் செய்துகாட்டி, மகிழவைக்கும் வித்தகன். களங்களில் விழுப்புண் சுமந்த துணிவாளன். மைதானத்தில் இறங்கினால் போட்டியாளன் கலங்கும் விளையாட்டு வீரன். எடுத்த எடுப்பில் மேடையில் ஏறி நாடகமோ, கவிதையோ வடித்துக்காட்டும் கலைஞன். சுருக்கமாகச் சொன்னால், துரைக்கண்ணன் ஒரு சகலகலவல்லவன்.

துரைக்கண்ணனின் அந்த உயர்குணங்கள் போராளிகள் அனைவரையும் கவர்ந்தன. அவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே மொய்த்திருக்கும். விக்ரம் என்றால் வன்னியில் தெரியாத போராளிகள் இல்லை. போராட்ட வாழ்வில் அவனுடன் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளுமே பசுமையாய் இனிமையாய்த் தெரிகின்றது.

பாசறையில் அவனில்லாத கலை மண்டபம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்கின்றேன். கண்மூடினால் கனவெல்லாம் அவனுடன் சேர்ந்து நாடகம் நடிக்கின்றேன். ஒவ்வொரு மாவீரரைப்பற்றியும் கவிதையோ ‘விழுதுகளோ’ எழுதிப் படித்துக் காட்டிவிட்டு, “பிழையிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வருவது போன்ற பிரமை.

காலையில் கண்விழிக்கும்போது, பாரம் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் துரைக்கண்கனே முன்னால் நிற்பான்.

“எப்படி மச்சான், நெஞ்ச அகலமாகியிருக்குதோ? ‘வீ கட்’ அடிக்கிறதா?” என்ற கேட்டான்.

“ஏன் மச்சான் இப்படிக் கஸ்ரப்படுகிறாய்’ என்று கேட்டால், ‘கனரக ஆயுதங்களைத் தூக்கிவச்சு அடிபடோணுமெண்டால் சுமாயிருந்தால் சரிவருமே மச்சான்” என்று பதிலிறுப்பான்.

‘வீட்டுக்கொரு புலிவரணும்’ என்ற பாடலை எந்தநேரமும் இவனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.

வட்டக்கச்சியில் தாயும் தந்தையும் சகோதரியும் வறுமையால் வாடியபோதும், துரைக்கண்ணன் அதை நெஞ்சில் போட்டுக் கொண்டதில்லை. போராட்டத்துடன் ஊறிப்போன தன் குடும்பத்தவர்கள், தான் துண்டு கொடுத்து வந்திடுவன் என்று பயப்பிடாமல் இருக்கவேண்டுமெனக்கூறி கவிதைகள் எழுதி வீட்டுக்கு அனுப்புவான். உறுதிமிக்க வீரனை – பாசம்மிக்க நண்பனை – இழந்நுவிட்டதை நினைக்கும்போது நெஞ்ச முட்டுகின்றது.

மண்கிண்டி இராணுவ முகாம் தகர்ப்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது என் அருகே ஓடிவந்தான்.

“மச்சான், இந்தச் சண்டையில் தப்பினா மணலாற்றில் நின்ற நாட்களைப்பற்றி ஒரு நாடகம் எழுது, நடிப்பம் நான் செத்திட்டா என்னைப்பற்றி கவிதை எழுதி வாசித்துவிடு – விழுதுகள் எழுதுக் கொடுத்துவிடு” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் மனம்விட்டு அழவேண்டும்போலுள்ளது.

போர்வாழ்வில் இன்னும் அவன் சேவைகள் இருக்க வேண்டுமென நினைத்தோம், தன் சேவை போதுமென்று கருதிப் போய்விட்டான்….!

2nd-Lieutenant-Siyamani.jpg

2ம் லெப்டினன்ட் சியாமணி

பிறந்த மண்ணில், இருந்தால் குற்றம், சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம். தொடர்ந்தும் திருமலை நகரில் வாழ்வதா அல்லது வீணே சாவதுதான் முடிவா என்ற கேள்விக்கு, விடைகாண முடியவில்லை. தாமதித்தால் சாவு நிச்சயம் என்ற உண்மை 1990 இன் பிற்பகுதியில் ஏற்படத் தொடங்கியது. அங்கிருந்து வெளியேறுவது என்ற முடிவோடு படகேறினான் சியாமணி.

வாள்வெட்டுக்கும் கடற்படையின் பீரங்கிக்கும் இரையாகாமல் எஞ்சிவந்த படகுகள், மணலாற்றுக் கரையைத் தொட்டன. படகிலிருந்து கரையிரங்கிய அன்றே, தென் தமிழீழகத்தில் நாம் வாழவேண்டுமாயின், மணலாறு சுதந்திரப் பூமியாக இருக்க வேண்டுமென்ற உணர்வு. அவனிடம் கருக்கொண்டது.

முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிப்புகப் பிரதேச சுதந்திரபுரம் கிராமம், அவனது தாய்தந்தையரின் இருப்பிடமாகியது. குழந்தையுள்ளம் மாறாத வயது. கண்முன் நிகழ்ந்து முடிந்த கோரநிகழ்வுகள் அவனுள்ளதைப் பெரிதும் பாதித்திருந்தன.

படுத்து கண்ணுறங்கமுற்பட்டால் வீடுகள் எரிவது, குழந்தைகள். பெண்கள் வாள் வெட்டுக்கு இரையாகித் துடிப்பது எல்லாம் நினைவுத்தொடராய்வந்து, அவனைத் துன்புறுத்தின.

இரவு பகலாக பலநாள் அழுதிருக்கின்றான் தூக்கத்தில் விழித்திருந்து அழுவதைவிட, விடுதலைப் போரில் விடிவுக்கு வழியமைத்து நிநை;தரமாகத் தூங்குவதுமேல், என்ற பாசறை தேடினான்.

பாசறையில், பயிற்சிக்காலம் அவனுக்குத் துன்பமாகப்படவில்லை. ஏனெனில், அதைமிஞ்சிய துன்பங்களை அவன் சந்தித்துவிட்டான். போர்வாழ்வு அவனுக்கு அமைதியைக் கொடுத்தது.

நடு இரவு. தாக்குதலுக்குச் சில நிமிடங்களே இருந்தன. மண்கிண்டி முகாம் அவன் கண்களில் துல்லியமாய்த் தெரிந்தது. மனத்திரையில் வாள்வெட்டு…. வீடெரிப்பு….. உடலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இத்தாக்குதலின் வெற்றி தென்தமிழீழப் போருக்கு உத்வேகம் கொடுக்கும் உன்ற உணர்வு மேலோங்கியது.

தாக்குதல் தொடங்கியது. சியாமணி மின்னலாய்ப் பாய்ந்தான். எங்கும் ஒரே முழக்கம். வெற்றியின் ஆரவராம். முகாம் தகர்ந்தது. தமிழ்த்தாய் தன்னைக் கைநீட்டி அழைப்பது, சியாமணியின் கண்களுக்குத் தயாராகிவிட்டான். சியாமணியைத் தூக்கி என் தோளில் சுமந்து கொண்டு…..

Lieutenant-Eezhaventhan.jpg

லெப்டினன்ட் ஈழவேந்தன்

கிராமியத்துக்குரிய மிடுக்கு, தோற்றம் அனைத்தும் நிறைந்தவன் ஈழவேந்தன். ஈழவேந்தனால் அவன் பிறந்த கனகராயன்குளம் புனிதமடைகின்றது. அவனால் அவன் பிறந்த மண்ணுக்குப் பெருமை ஒரு வீரப்புதல்வனைப் பெற்றதால் அவன் பெற்றோர்க்குப் பெருமை.

மணலாற்றுக் காட்டின் போர்ப்பாசறையில் போர்க்கலை பயின்ற ஈழவேந்தனுக்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் களமுனைகள் கிடைத்தன.

பொறுமையும், பொறுப்பும், செயல்திறனும் இவனிடம் குறைவின்றி இருந்தன. கோபத்தை அடக்கியாளும் வல்லமையும் அதிகமுடைய இவனது முகத்தில். இனம் புரியாத சோகமொன்று என்றும் இழையோடிக்கிடக்கும். யாரிடமும் அதைச் சொல்லிப் பகிர்ந்துகொண்டதில்லை.

ஈழவேந்தன் சென்ற போர்க்களங்கள் பலவாக இருந்தாலும், வெற்றியைக் குவிந்த களங்கள் சிலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

1991 ஆம் ஆண்டு மாசித்திங்களில் முல்லைத்தீவு இராணுவ முகாமின் முன்னணிக் காவலரண்களைத் தாக்கி அழித்து, பன்னிரண்டு எஃப். என். சி. மூன்று மினிமினி எல்.எம்.ஜி.துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியமை.

1992 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில், முல்லைத்தீவு இராணுவ முகாமின் முக்கிய காப்பரண்களைத் தாக்கி, 50 கலிபர் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியமை.

மாங்குளம் இராணுவ முகாம் தகர்ப்பு. மணலாற்றில், தலைவனின் காலடியில் பயிற்சிபெறும் வாய்ப்புக்கிட்டியபோதே, மணலாற்றின் முக்கியத்துவம் இவன் நெஞ்சில் பதிந்து கொண்டது இதயபூமி – 1 தாக்குதல் நடவடிக்கைக்கு, வன்னியிலிருந்து புறப்பட்ட அணியில் இடம் பெற்றபோதே, மணலாற்றுப் பயிற்சிக்கால நினைவுகள் அவன்மனதில் நிழலாடத் தொடங்கின. அன்று மனதில் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியால், தன்மனதில் உறைந்துகிடந்த சோகத்தையும் வாய்விட்டுக் கூறினான்.

“வீட்டில் சரியான கஸ்ரம் மச்சான். இந்த சண்டையில் பெரிய சாதனையை நிலை நாட்டோணும். உயிரோட திரும்பிவந்தால், வீட்டுக்கஸ்ரத்தைச்சொல்லி வீட்ட ஒரு தடவை போய்ப்பார்த்து, உதவி செய்துவிட்டு வரலாம்” என்று சொல்லி, வீட்டு நிலைபற்றி மனம் விட்டுப் பேசினான். அவன் சொல்லியபடி சண்டையில் சாதனை நிலைநாட்டினான். ஆனால் வீட்டுக்குப் போகுமுன் நாட்டுக்காய் விடைபெற்றுக்கொண்டான்….!

Lieutenant-Kuyilan.jpg

லெப்டினன்ட் குயிலன்

யாழ். மண்ணிலிருந்து மணலாற்றுக்கு வந்தபோது, மணலாற்றுக்காடுகளும், பறவைகளும் குயிலனுக்குப் புதிய அனுபவங்களாயின. இலகுவான வாழ்க்கை முறையிலிருந்து கடினமான வாழ்க்கை முறைக்கு அடியெடித்துவைக்கும் போது, துன்ப அத்தியாயங்கள் அதிகமிருந்தபோதும், இராணுவத்தால் அனுபவித்த துன்பங்களின் முன்னே இது துரும்பாகத் தெரிந்தது குயிலனுக்கு.

ஏழாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிமுடித்தகையோடு, முல்லைத்தீவு இலங்கை இராணுவ முகாம் மீதான தாக்குதற்களம் காத்துக்கிடந்தது. மிதிவெடிவைக்கும் திறமை மிகுதியாக இருந்ததால், அதற்கான சிறப்புப் பயிற்சியோடு களத்துக்கு விரைந்தான்.

மிதிவெடிவைக்கும் பணியில் குயிலனது வலதுகரம் போனதும், யாழ். சென்று சிகிச்சை பெற்றதும், ஒரு கரத்துடன் என்முன் வந்துநின்றதும், ஒரு சோகம்கலந்த வீர வரலாறு.

கரமொன்று போனபின் சண்டை செய்ய வேண்டுமென்ற துடிப்பு குயிலனிடம் மேலோங்கியது. தனது உள்ளக்கிடக்கையைத் தளபதியிடம் வாய்விட்டுக் கேட்டுவிட்டான் தளபதியும் அவனது ஆசைக்குத் தடைபோடவில்லை. ஆனால் அவனது பொறுப்புணர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அணியொன்றின் பொறுப்பாளனாக நியமித்தார். பொறுப்பாளனாக இருக்க விரும்பாத குயிலன், சாதாரண வீரனாயிருந்து இரண்டு மூன்று சண்டைகள் செய்த பின், பொறுப்பாளனாக வருவதையே விரும்பினான். அதையும் வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டான். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.

குயிலன், மணலாற்றில் பெரும்பாலான களங்களில் மனமாரச் சண்டை செய்தாலும், சில சண்டைகளுக்கு தன்னைக் கூட்டிச் செல்லாததையிட்டுக் குறைப்பட்டிருக்கின்றான் – அழுதிருக்கின்றான். அழுதாவது சண்டைக்குச் செல்லஅனுமதி எடுத்துவிட வேண்டுமென்ற சண்டைக்காரன் குயிலன்.

‘இதயபூமி – 1’ நடவடிக்கைக்கான பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, குயிலன் சலிப்பும் களைப்புமின்றி பயிற்சியீலீடுபட்டான். இயலாவாளி என்று தன்னைக் கூட்டிச்செல்லாமல் விட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு.

பயிற்சி முடிந்து அணிகள் வகுக்கப்பட்டபோது, தளபதியின் கை தன்னை நோக்கி அசையுமா என்ற ஆவலோடு இசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அசைந்தது! குயிலனின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மகிழ்ச்சியில் அவன் அடித்த மரியாதை வணக்கம், இன்னும் கண்முன் நிற்கிறது!

Lieutenant-Vasan.jpg

லெப்டினன்ட் வாசன்

தென்தமிழீழத்தில், கோவில்போரதீவு கிராமத்தில் பிறந்தவன் வாசன். இராணுவத்துக்கு அஞ்சி காடுகளில் உறங்கி வாழ்ந்தது – பள்ளிக்குச் செல்லமுடியாது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது – துடிக்கத் துடிக்க வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர்கள் – இராணுவ முகாம்களில் தூங்கிய தமிழரின் எலும்புக்கூடுகள் – பாலியல் வன்முறைகளையெல்லாம் வாசனால் எப்படி மறக்கமுடியும்? இராணுவத்தை அழிக்கவேண்டுமென்பதை விட, அவர்களின் தலையை வெட்டவேண்டும் – அவர்களின் தலை துடிப்பதைப் பார்க்கவேண்டும் – என்ற ஆத்திரம் தன்னுள் நாளுக்கு நாள் அதிகரித்தபோதே களத்துக்கு வந்தவன்.

மணலாற்றுப் போர்வாழ்வில் தென்தமிழீழத்தில் நடக்கும் இராணுவ வெறியாட்டம் பற்றியே அடிக்கடி கதைத்துக்கொண்டிருப்பான். குழந்தைத்தனமான குறும்புகள் இவனிடம் இல்லாமலில்லை. பிறந்த மண்ணில், சுதந்திரமாகச் செய்யமுடியாத குறும்புகளை, தன்னை நேசித்த தோழர்களோடு செய்யநினைத்ததில் தவறில்லை, குறும்புத்தனம் இவனிடம் இருந்தாலும் சண்டையில் இராணுவத்தைச் சுட்டுக் குவிக்கவேண்டும் சுடுவது மட்டுமல்ல வெட்டவேண்டும் என்ற வன்மமும் தலையெடுத்து விடும்.

கனரக ஆயுதம் வைத்து அடிபடவேண்டுமென தளபதியிடம் வேண்டி ஏ. கே. எல். எம். ஜி. துப்பாக்கி பெற்றுக்கொண்டான். இறுக்கமான உடற்கட்டும் – வலிமையும் – வன்மமும் – இத்துப்பாக்கியை வைத்திருக்கும் தகுதியை, இவனுக்குக் கொடுத்தன.

சண்டைகளுக்குச் செல்லத்தயாராகும்போது, கூரிய தனது கத்தியை உறைக்குள் முதலில் போட்டுக் கொள்வான். “என்ன மச்சான் கத்தியைக் கவனமாய்ச் செருகிறாய்” என்று கேட்டால்,

“கண்ணுக்கு முன்னால எத்தனை தலையை ஆமி வெட்டிருக்கிறான். துடிக்க துடிக்க வெட்டிய நாய்களை சும்மாவிடக் கூடாதுதான்” என்று பதில் சொல்வான்.

இதயபூமி 1 தாக்குதலுக்கு அணிவகுத்துச் சென்றபோது துடிப்புடன் – மிடுக்குடன் – இராஜநடை போட்டு நடந்து சென்ற காட்சி….

இலகு இயந்திரத் துப்பாக்கியை அணைத்தபடி, மலர்ந்த முகத்தோடு, செந்நீரால் வீரகாவியம் எழுதி விழிமூடிக்கிடந்த காட்சி…!

2nd-Lieutenant-Pugazharasan.jpg

2ம் லெப்டினன்ட் புகழரசன்

யாழ். மண்ணில் காரைநகர் தந்த புதல்வன் புகழரசன். தான் பிறந்த மண்ணில் சிங்களப்படைகள் ஆதிக்கம் செலுத்துவதும், பிறந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்துவாழும் தாய், தந்தையர் வறுமையால் நொந்து தவிப்பதும், புகழரசனின் நெஞ்சில் நெருப்பை மூட்டின. சிங்களத்தின் கொடுமைகள்கண்டு கொதிப்பதா? வறுமையின் நிலைகண்டு வாய் விட்டு அழுவதா?……..

அழுவதற்கு அவன் தயாரில்லை. தன்மான உணர்வோடு களப்பலி எடுக்கவேண்டுமென்ற சினம் ஓங்கி நின்றது. பயிற்சிக் காலத்தில் வீட்டு வறுமை நிலைபற்றி அடிக்கடி சொல்லிக்கொள்வான். வறுமை அவனுள்ளத்தில் ஒரு போராட்டத்தை எழுப்பியுள்ளதை உணர்ந்து கொண்டேன்.

மட்டக்களப்பில் உணவின்றி, உடையின்றி, இருப்பிடவசதியின்றித் தவிக்கும் தம் தாய் தந்தையர் துயர்பற்றிச் சகதோழர்கள் கூறும் சோகக்கதைகளைக், கேட்கும்போது புகழரசன் மன ஆறுதல் கொண்டான்.

காலத்துக்கேற்ப, நேரத்துக்கேற்ப, இடத்துக்கேற்ப தோழர்களோடு பழகிவிட்டு ஏனைய நேரங்களில் அமைதியாக இருப்பதையே விரும்பினான் புகழரசன். இவனுள்ளத்தில் இசைவெள்ளம் நிறைந்துகிடப்பது எவருக்கும் தெரியாது. அமைதியாக இருந்த அவனைத் தட்டியெழுப்பிப் பாட வைத்த நாள், நெஞ்சில் நிலையாய் நிற்கிறது. புகழரசன் நல்லாய்ப் பாடுவான் என்ற உண்மை தெரிந்ததும் தோழர்கள் சும்மாவிடுவார்களா? அவனைச்சுற்றி என்றும் ஒரு கூட்டம் மொய்த்திருக்கும்.

புகழரசனின் போர்வாழ்வு குறுகியது. குறுகியகாலப் போர் வாழ்வில் நிறைவான வரலாற்றுப்பதிவை ஏற்படுத்திக்கொண்டான். மண்கிண்டி இராணுவ முகாமைத் தகர்த்தெறித்து இதயபூமிக்கு உயிரூட்ட உயிர்கொடுத்த உத்தம வீரர்களின் வரிசையில், தன்னையும் இணைத்துக்கொண்டான்.

வதைபடுவதைவிட மானத்துடன் புதைபடுவதுமேல் என்று கருதி விழிதூங்கமறந்த புகழரசன், நிலையான தூக்கத்தோடு வரலாறாகிவிட்டான். அவனிசைத்த கானங்கள், கானமெங்கும் ஒலிப்பதை உணர்கின்றேன்…. காரைநகர் தந்த கானகக்குயிலின் மானம் இந்த மண்ணில் என்றும் வாழும்!

நினைவுப்பகிர்வுகள்: மணலாறு விஜயன்.
நன்றி: ‘இதயபூமி 01’ நூல் மற்றும் விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி, 1993)

 

https://thesakkatru.com/maaveerarkal-of-operation-ithayaboomi/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.