Jump to content

இரத்தக்காட்டேரி!


Recommended Posts

 

இரத்தக்காட்டேரி!

 

சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன.  மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள்  பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள்  என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத்  தவறவில்லை. 

 மண்ணில் அவள் கால்கள் புதைந்து எழும்போது ஏற்பட்ட இதமான உணர்வு அவளை ஆட்கொண்ட போது அவள் பல வளவுகளைத் தாண்டி, தனியே காட்சியளித்த பிள்ளையார் கோவில் வேவில் குளத்தடிக்கு வந்திருந்தாள். வழமை  போலவே ஆள் அரவமற்ற  குளக்கரையில், பச்சைப் பசேலென செழித்து வளர்ந்திருந்த பற்றைகளின்  பின்னே தன் மாற்று உடைகள், துவாய் போன்றவற்றை தொங்க விட்டாள்.  நீந்திப் பழகுவதற்கு ஏற்றாப்போல்  அம்மாவின் முழுப்பாவாடை ஒன்றை குறுக்குக் கட்டாக அணிந்து, ஒரு சிறு பையை மாத்திரம் தன்னோடு குளக்கரை வரை எடுத்துச் சென்று, அதை எப்போதும் போல  எடுத்துக்   கொள்ள வசதியாக பத்திரப்படுத்தி வைத்து ஒரு சிறு கல்லை அதன் மேல் வைத்தாள்.  குளக்கரையை சுற்றி நோட்டம் விட்டு யாரும் இல்லை என உறுதி செய்தாலும் அவளுக்கு ஏதோ ஒரு உறுத்தல், தன்னை யாரோ கவனிப்பது போன்ற உணர்வு ஒன்று மீண்டும் தோன்றி மறைந்தது.

 மெதுவாகக் கால்களை தண்ணீரில் வைத்து அதன்தட்ப வெப்பங்களை அறிந்து கொண்டபோது,   நிர்ச்சலனமாக இருந்த நீரின் தூய்மையில், குளத்தின் அடியில் இருந்த சின்னச் சின்ன மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி விளையாடுவது தெரிந்தது.  பழக்க தோஷத்தில் அவளும் சிறிது நேரத்தில் ஒரு மீனாக மாறி நீரில் அமிழ்ந்து  மூழ்கி எழும்பிய போது  மனதில் ஏற்பட்ட ஒரு வகை அமைதித் தன்மை அவளுக்குப் பிடித்திருந்தது.

மீன்களோடு மீனாக நீந்தி தன்னை மறந்தவளுக்கு நேரம் ஓடியது தெரியவில்லை. தலையை நிமிர்த்தி குளத்துக்கு வெளியே தெரிந்த பால் மணல் காட்டை கண்களால் நோட்டம் விட்ட போது அயல் வளவுக்குள் இருந்து தென்னோலை இழுத்து வந்து கொண்டிருந்த பவளம் மாமியின் கண்களில் பட்டுத்தொலைத்ததில் அவளுக்கு உதறல் எடுத்தது.

 "குமரிக்கு நேரம் கெட்ட நேரத்தில நீச்சல் கேட்குதோ? கொப்பர் ஒழுங்காய் இருந்திருந்தால்  எல்லாத்தையும் பாத்து கீத்து மேய்ச்சிருப்பார். பொறு நான் கொம்மாவைக் காணட்டும், இதுக்கொரு வழி பார்க்கிறன்!"

 "ஏன் மாமி உங்களுக்கு நீந்த முடியேல்லை எண்டு கவலை போல!" நையாண்டி பண்ணியவளை மாமி முறைத்தாள்.

 "நாடு கெட்டுக்கிடக்கு, தட்டம் தனிய வந்து நீந்துறதும் இல்லாமல் குமரிக்கு வாய்க் கொழுப்பும் அகட விகடங்களும் கூடித்தான் போச்சுது! கெதியில வீட்டுக்கு போய்ச்சேருற அலுவலைப்பார்!"

தன் பாரிய உடம்பையும் தென்னோலைகளையும் சேர்த்து இழுத்துப் போகும் மாமியைப் பார்க்க அவளுக்கு பாவமாகவும் அதே நேரம் தன்னை அம்மாவிடம் வத்தி வைப்பா என்பது கோபமாகவும் வந்தது.

 நீந்தி எழுந்து மாமி போய்விட்டா என்று உறுதிப்படுத்தி, தண்ணீரால் உடம்போடு  ஓட்டிப் பிடித்த  தன் உடைகளை சரி செய்த போது யாரோ தன்னை உற்றுப் பார்க்குமாப்போல் ஒரு வித உணர்வு மீண்டும் அவளை ஆட்கொண்டது.  இலகுவில் பயந்து விடாத அவளது சுபாவம் அவளை ஆடாமல் ஒரே இடத்தில நிற்க வைத்தது. அப்படிச் செய்வதன் மூலம் யாராவது  கோவிலுக்கோ குளத்துக்கோ வந்தால் திரும்பவும் குளத்து  நீரில் முங்கி விடுவது என முடிவு செய்தவளுக்கு அடுத்த சில வினாடிகளுக்கு யாரும் அப்படி நடமாடவில்லை என்பது உறுதியாகியது.

மாற்று ஆடைகளை எடுத்து மாற்றுவதற்காக பற்றையை நோக்கி சில அடிகள்  எடுத்து வைத்த போது யாரோ அவசர அவசரமாக அடர்ந்த மரங்களின் பின்னிருந்து வேகமாக ஓட்டமும் நடையுமாக மறைவது தெரிந்தது. மண் நிறத்தில் ஒரு தொப்பி மட்டும் தெரிந்தது, முகம் தெரியவில்லை.  எதற்காக ஓடி மறைய வேண்டும்? யாராக இருக்கும்? இப்படியான சம்பவம் இத்துடன் மூன்றாவது தரம் நடந்துள்ளதை அவள் எண்ணிப் பார்த்துக்கொண்டாள்.

இரண்டு மாதங்களின் முன்னரும் அவள் உடை மாற்றப் போன வேளையில், அடர்ந்த அந்த காட்டு மரங்களுடனான பற்றைகளின் பின்னே முதல் நாள் பெய்த மழையின் ஈரலிப்பான மணலில் கால் தடங்கள் புதிதாய் ஏற்பட்டிருந்தது.  அதன் பின்னர்  கடந்த மாதத்தில், மீண்டும் ஒரு முறை உடை மாற்ற வந்த போது வழமைக்கு மாறாய் அவ்விடத்தில் ஒரு வித சுருட்டு அல்லது சிகரெட் வாடை அந்த குளிர்ச்சியான காற்றில் கலந்து வந்தது.  தென்னை மரங்களும் பனை மரங்களுமாய் காற்றோடு அசைந்தாடும் போது எல்லா இடங்களிலும் காற்று அசைந்தாடி பால் போன்ற மணற் பரப்பில் எந்த அடையாளங்கள் இருந்தாலும் அதை அழித்து விடும் தன்மை கொண்டதாய் இருந்தது. அப்படியிருக்க புதிதாய் பதிந்த கால் தடங்கள் மட்டுமே ஒரு சில நிமிடங்களுக்கு நின்று பிடிக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆகவே இந்த புதிதாய் தெரிந்த காலடியடையாளம் கூட யாரோ தான் நீந்துவதை நின்று அவதானிக்கிறார்கள் என்பதை அவளுக்கு  மிகவும்  தெளிவாகவே பறை சாற்றியது .  யாரோ நீண்ட நேரமாக தன்னை அவதானித்திருக்கிறார்கள் என்பது அவளுக்கு ஆத்திரத்தை ஊட்டியது.

 இன்றும் அவளுக்கு அது அச்சத்தைக் கொடுக்காமல் ஒரு விதமான கோபத்தையே ஏற்படுத்தியிருந்தது.  இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள். அன்றிலிருந்து அவள் தன் தற்பாதுகாப்புக்காய் கோவிலடிக்கு வரும் போதெல்லாம் தன் உடைகளுடன் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் வெங்காயம் உரிக்கும் குட்டிக்கத்தியை கையோடு எடுத்து வந்தாள். அது சரியா பிழையா என எண்ணிப்பார்க்கும் மனநிலையைக் கடப்பதற்கு அவள் சிக்கல் மிகுந்த   வாழ்வின் நடைமுறையே உதவியது போலும். 

அவளுக்கு சிறிதாய் ஆச்சரியமும் ஒரு விதமான அருவருப்பும் முதன் முதலில் ஏற்பட்டது அவளுக்கே வியப்பாய் தான் இருந்தது.  எவ்வளவு நேரம் தன்னை ஒருவர் பார்த்திருக்கக் கூடும் என்ற நினைவு அவளுக்கு ஒரு விதமான சங்கடத்தையும் தோற்றுவித்தது.  இனிமேல் தனியாய் வரக்கூடாது, தன் தோழிகள் சங்கரியை அல்லது லதாவைக் கூட்டி  வரவேண்டும் என எண்ணிக்கொண்டாள். 

 அவள் சரியான வாயாடியென்பதும் யாருக்கும் அடங்காத தன்மை கொண்டவள் என்பதும் ஊர் எல்லாம் பிரசித்தியான விசயம்.  இருந்த போதிலும், இவ்வளவு நாளும் இருந்த தைரியத்தில் ஒரு பகுதி ஆட்டம் காண வெளிக்கிட்டது அவளுக்குப் பிடிக்கவில்லை .அம்மாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான் , பிறகு இந்தப் பக்கம் வந்த பாடில்லை, அவளுக்கு சொல்லி ஒரு புண்ணியமும் இருக்காது.  பார்க்கலாம், மனதைத் தேற்றிக்கொண்டாள்.

அம்மா பலரது வீடுகளிலும் போய் வேலை பார்க்க வேண்டி வந்ததற்கு காரணமான அப்பாவின் மீது அவளுக்கு கோபமும் அதனால் ஏற்பட்ட விரக்தியும் தான் அவளை இப்படி ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் வைத்திருந்தது. அவள் பாடசாலைக்குப் போய் வரும் நேரம் தவிர வீட்டில் பொழுது போக்கு சாதனங்கள் என எதுவும் இல்லாத பொருளாதார நிலை குறித்து அலட்டிக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை.   பாடசாலை முடித்து வரும் போது அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் துரு துருத்த காலும் கையும் சும்மா இருக்க விடாததால் அவள் காலாற கோவில் வளவு தேடி நடப்பதும் குளத்தில் நீந்துவதும் யாராவது தோழிகள் வந்தால் அவர்களுடன் தாயக்கட்டை விளையாடுவதும் தான் அவள் பொழுது போக்கு.  வாசிகசாலை இப்போது தான் மீண்டும் ஏதோ கிடைத்த புத்தங்கங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து அரை மணி நேரம் நடந்து போய் நூலகம் திறக்கப்படாமல் அல்லது தனக்கு விரும்பிய நூல்கள் எல்லாம் அவளுக்கு முதலே எடுக்கப்பட்டு விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் அதிகரிக்க அவளும் அங்கு போவதை குறைத்துக்கொண்டாள் .இப்போது  யாராவது பக்கத்து வீடுகளில் வாங்கிய தினசரி பத்திரிகைகளை ஒரு எழுத்து விடாமல் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

"பள்ளிகூடத்தலாலை வந்த பிள்ளையை இவ்வளவு நேரமும் காணேலை எண்டு பாத்தன்.  எங்க பிள்ளை போனனீங்கள் ?"  வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் வீட்டின் சொந்தகார அம்மா கேள்வி எழுப்பியபடி அவளைப் பாசத்துடன் பார்த்தாள்.

 "நீந்துவம் எண்டு கோவிலடிக்குப் போட்டு வந்தனான் !"

 "நல்ல பிள்ளையடி அம்மா நீ, சொல்லிப்போட்டுப் போக்கூடாதே ?" அந்தம்மா செல்லமாய் கோவித்துக் கொண்டா.

 "இல்லை, அம்மா சொன்னவ , சும்மா சும்மா உங்களோட கதைக்கவோ கரைச்சல் குடுக்கவோ வேண்டாம் எண்டு அது தான் நான் சத்தம் போடாமல் போட்டு வந்திட்டன்."

 வீட்டுக்கார ஐயாவும் எட்டிப் பார்க்க, அவள் பின் கதவால் வீட்டுக்குள் சென்றாள். சும்மா இருந்த வீடு என்று இடப்பெயர்வில் வந்திருந்த அவளையும் அம்மாவையும் இந்த ஊர் விதானையார் அந்த வீட்டில் இருத்தி மூண்டு வருசங்கள் ஓடிப்போன வேளையில் தான் இந்த வீட்டின் சொந்தக்காரர் வெளி நாட்டில் இருந்து வந்திருந்தார்கள்.என்ன செய்வது என்று திகைத்த வேளையில் தான் அவர்கள் மனம் இரங்கி, பின் கதவால் வந்து போகக்கூடிய மாதிரி ஒரு பெரிய அறை, வெளியேயிருந்த சமையல் அறை, கழிவறை போன்றவற்றை பாவிக்கச் சொல்லி இருந்தார்கள்.  இவர்களது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும், அந்த வயதான ஐயாவுக்கும் அம்மாவிற்கும் இவர்கள் இருவரையும் மிகவும் பிடித்துப் போயிற்று.

 அவள் தன் அறைக்குள் போய் ஓய்வு எடுத்த போது அவளுக்கு மீண்டும் கோவிலடியில் நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து மனதை பிராண்டியது. தன் மனதை மாற்ற நினைத்து தன் உருவத்தை ஒரு முறை அந்த அறையிலிருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.  கண்ணாடியில் தெரிந்த தன்  உருவத்தைப் பார்த்து ரசித்தாள். அவள் பதின்ம வயதுக்கு மீறிய அவளது மனத்திடமும், தைரியமும், உடல் வாகும் அவளுக்கு ஒரு பொலிவைக் கொடுத்திருந்தன.  தன் கட்டிலின் ஓரமாக இருந்தவள், சில நிமிடங்களின் பின் நீந்திய களைப்பில் உறக்கத்தில் வீழ்ந்தாள். 

எத்தனை  நிமிடங்கள் தூங்கியிருப்பாள் எனத் தெரியவில்லை ஆயினும் அவளுக்கு தூக்கக்  கலகத்திலும் தன்னை யாரோ பார்ப்பது போன்ற அதே உணர்வோடு தூக்கிவாரிப் போட எழுந்தவளுக்கு அம்மா வேலையால் வந்து முன் முற்றத்தில் நின்றபடியே வீட்டுக்கார  அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்தது கேட்டு  அவளுக்கு சிறிதே ஆறுதலாகப் பட்டது.  அம்மாவின் நிலவரம் பார்த்து அவளுக்கு பதினெட்டு வயதாக முன்னம் அவளை தத்தெடுக்க விரும்புவதாக அந்த வயோதிபத் தம்பதி கூறியதாலோ என்னவோ அம்மாவுக்கு அவர்களை அப்படிப் பிடித்திருந்தது.  அவளுக்கும் மற்றைய வெளிநாட்டினர் போலல்லாத, தாம் பிறந்த நாட்டை அந்நியமாகப் பார்க்காத அவர்களை பிடித்துத் தான் போயிற்று. 

 "அருமையான சனங்கள், ஏதோ கடவுள் செயல், அதுகள் எங்களோட பழக நாங்கள் குடுத்து வைச்சிருக்க வேணும். ஏதோ காசுக்காக என்ற செல்லத்தை நான்  வெளிநாட்டுக்கு அனுப்ப ஓமென்ன மாட்டன்.  என்ன செய்யிறது இந்த பாவி மனுஷன் தன்ர மனுசி, மகள், குடும்பம்  எண்டு பார்க்காம எங்களை விட்டிட்டு ஓடினதால தானே நாங்கள் இப்பிடி அலைய வேண்டியிருக்கு ." அம்மா கவலையோடு அலுத்துக்  கொண்டாள்.

"அம்மா அதைப் பற்றி எல்லாம் இப்ப யோசிக்க வேண்டாம், களைச்சு போய் வந்திருப்பீங்கள். தேத்தண்ணி ஒன்று போட்டு தரவோ?"

 "என்ர ராசாத்தி, நான் போட்டு குடிக்கிறன், வேளைக்கு சாப்பிட்டிட்டு நித்திரைக்கு போங்கோ.  விடிய பள்ளிக்கூடம் போக வேணும் எல்லோ?" அம்மா சொல்லியபடியே குளிக்கப் போனாள்.

 " இல்லை, நான் சாப்பாடெல்லாம் சூடாக்கி எடுத்து வைக்கிறன், நீங்கள் குளிச்சிட்டு வாங்கோ, இரெண்டு பேருமாய் சாப்பிடுவம்!" அம்மாவை குளிக்க அனுப்பி விட்டு, காலையில் சமைத்து வைத்த சோறையும் கறியையும் சூடாக்க ஆயத்தமானாள்.

 மகளுக்கு பதினாறு வயது தான் ஆகிறது, இருந்தாலும் அவள் சிந்தனைகளிலும் செயல்களிலும் இருந்த முதிர்ச்சி அவள் தாயைப்  பெருமைப்பட வைத்தது.

 அம்மா குளிக்கப் போய் பத்தே நிமிடங்களில் வந்து விட்ட மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது.

  " அம்மா என்ன  அதுக்கிடையில  வந்தாச்சோ, போனதும் வந்ததுமாய் இருக்கு?"

 சிரிப்புடன் கேட்டவளுக்கு எந்தப் பதிலும் இல்லாதது கண்டு ஆச்சர்யத்துடன் அந்த சிறிய சமையல் அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.  யாரும் வெளியே  இல்லாததும், தூரத்தில் அம்மா இன்னும் குளிக்கும் சத்தமும் கேட்டு மனம் திடுக்குற எல்லாத் திசைகளிலும் உற்று நோக்கினாள்.   அமாவாசை இருட்டில் முற்றம் முழுவதும் இருண்டு போய் எந்த சலனமும் இன்றி நிசப்தமாய் இருக்க, அவளுக்கு ஏதோ ஒரு கலக்கம் திரும்பவும் மனதில் எழுந்து ஆரவாரித்தது.

 மனப்பிரமையாக இருக்க வழியில்லை எனத் தீர்மானித்து, வீட்டின் மறு புறம் வந்து வீட்டுக்கார ஐயாவும் அம்மாவும் இருக்கும் பக்கம் எட்டிப்பார்த்தாள். அவர்கள் நல்ல நித்திரையில் இருப்பதை  மின் விளக்குகள் அனைத்துமே அணைக்கப்பட்டு அவர்கள் இருந்த வீட்டுப்பக்கம் இருட்டில் விழுங்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தியது.  அம்மா அதற்கிடையில் குளித்து விட்டு வந்து விட, அவளைக் கலவரப்படுத்த விரும்பாமல் இயல்பாய் இருக்க முயற்சித்தாள். 

 இன்று சனிக்கிழமை, பாடசாலை வார விடுமுறை. அவள் ஏற்கனவே தன் தோழிகளை மூன்று மணியளவில் கோவிலடியில் சந்திப்பதாய் ஏற்பாடு செய்திருந்தாள். நிறைய கதைக்கலாம். நிறைய பாடலாம், இறுதியில் சின்னதாக நீந்திப் பின்னர் கோவில் கிணற்றில் குளிக்கலாம் எனவும் திட்டம் போடப்பட்டிருந்தது. 

இவளைக் கண்டதும் வீட்டுக்கார அம்மாவும் ஐயாவும் பழையபடி இவளைத் தாங்கள் தம்முடன் வெளிநாட்டுக்கு கூட்டிப்போவதற்கான ஆதரவு விண்ணப்பம் கொடுப்பது சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததில் இவள் வீட்டிலிருந்து கோவிலடிக்குப்  போவதற்கு சிறிது தாமதமாகி விட்டது.

 பால் மணலில் கால்கள் புதையப் புதைய ஓடி நடந்தவளுக்கு மூச்சு வாங்கிற்று. கோவிலடியை அடைந்த போது எவரையும் காணாதது அவளுக்கு பெரியதொரு ஆதங்கத்தையும் சின்னதாய் கோபத்தையும் தோற்றுவித்தது.  இப்படித்தான் கடந்த மாதத்தில் ஒரு தடவையும் வருவதாகச் சொல்லிவிட்டு இரண்டு பேருமே வராமல் விட்டிருந்தார்கள். சங்கரியின் தாய் சிறிது காலமாகவே படுத்த படுக்கையாய் இருப்பதில் அவள் அப்பா வேலையாள் வர பிந்தினால் அவள் தாயை தனியே விட்டுவிட்டு வரமாட்டாள்.  லதா அவளுடைய சிறிய தங்கை. அக்கா வராவிட்டால் அவளும் வர மாட்டாள். அவர்களைக் குறை சொல்ல முடியாது.

என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு திடீரென அவர்கள் வீடு ஒரு இருபது நிமிட நடையில் போய் விடலாம் என்பது ஞாபகம் வர, நீச்சல் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் வீட்டுக்கு நடக்க எத்தனித்த வேளை திடீரென யாரோ அவளை பின்புறம் இருந்து கட்டிப்பிடிக்க அவள் நிலை தடுமாறினாள். அதிர்ச்சியை உள்வாங்கிப் பின் சுதாகரித்து தன் பையிலுள்ள குட்டிக்கத்தியை எடுக்க எத்தனித்த போது தன் முகத்தை யாரோ முழுவதுமாக ஒரு சாக்கைப் போட்டு கட்டுவதை உணர்ந்து கொண்டாள். 

அந்த உருவம் அவளை பற்றைக்கு பின்னால் இழுத்து செல்ல முற்படுவதை உணர்ந்து தன்  பலம் எல்லாம் சேர்த்து மனப்பலத்தையும் உபயோகித்து ஒருவாறு தன் குட்டிக்கத்தியை கையில் எடுத்துக் கொண்டாள். அம்மாவை ஒரு கணம் அவள் மனதில் இருத்தியபோது அவளுக்கு வந்த அந்த அசுர பலத்தில் அவள் கைகள் தாமாகவே அந்த உருவத்தை குட்டிக்கத்தியால் ஓங்கிக் குத்தியது.

அதை அங்கு எதிர்பார்க்காத அந்த உருவத்தின் வலி மிகுந்த குளறல் ஒரு காட்டு விலங்கின் அவலமாக கோவில் வளவெங்கும் எதிரொலிக்க. தன் முகம் முழுவதுமாகக் கட்டப்பட்ட நிலையில் அவளுக்கு அதிர்ச்சியும் பயமும் கலவையாய் எழுந்து, அம்மா அம்மா என்று கத்த  முயற்சிக்க, எந்த சத்தமுமே அவள் தொண்டையிலிருந்து வர மறுத்தது.

மீண்டும் மீண்டும் சில தடவைகள் குத்திய போது அவ்வுருவம் அவளைத் தள்ளி விட்டுவிட்டு பற்றையின் பின் பக்கமாக விழ அவள் அதைத் திரும்பிப் பார்க்காமல்,  தன் முகத்திலிருந்த சாக்கைக் கூட எடுக்க மறந்து கால் போன திசையில் ஓடினாள் .

 பல அடிகள் ஓடிய பின், சிரமத்தின் மத்தியில் தான்சாக்கை எடுத்துவிட்டுப் பார்த்த போது  தான் அவளுக்குத்  தான் இன்னொரு தென்னம் வளவின்  பின்புறம் நிற்பது தெரிந்தது.  மூச்சிறைக்க மூச்சிறைக்க நின்றவளுக்கு அம்மா தேடுவாள் என்ற ஆதங்கமும் எழுந்தாலும், அவளுக்கிருந்த அதிர்ச்சியில் அயர்ந்து போனாள்.  சூரியன் மங்கி மறையும் போது, பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க வந்தவர்கள் அடித்த மணிச்சத்தம் கேட்டு விழித்த போது தான் அவளுக்கு வீட்டை நோக்கி நகர முடிந்தது. கையிலிருந்த இரத்தம் தோய்ந்த கத்தியை அந்தத் தென்னம் வளவின் அடியிலிருந்த கேணிக்குள் வீசி எறிந்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினா ள் .

ஏன் இவ்வளவு கூட்டம் வீட்டில் என்று அதிர்ந்தவளுக்கு, அதை விடப் பெரிய அதிசயம் ஒன்று காத்திருந்தது .வேப்பம் மரத்தின் கீழே வீட்டுக்கார ஐயாவை சாக்குக் கட்டிலில்  கிடத்தி இருந்தார்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் இருக்க யாரோ கார் பிடித்து வர போயிருப்பதாய் கதைப்பது இவளுக்கும் கேட்டது.  அவர் கைகளிலிருந்து வடிந்த இரத்தத்தைப் பார்த்து அவர் மனைவியான வீட்டுக்கார அம்மா மயங்கிச் சாய்ந்து விழுந்து விட்டதாய் சொன்ன பவளம் மாமி இவளைக் கண்டதும் குரலெடுத்து திட்டத் தொடங்கினாள்.

 "இந்தக் குமரியும் அந்த அத்துவானாக் காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு நீச்சலடிக்க போறதெல்லோ!  சொல்வழி கேட்க மாட்டாள்! இங்க பாத்தியே கோயிலுக்கு தனியாய்க் கும்பிடப் போன இந்த ஐயாவை எப்பிடி முனியடிச்சிருக்கு! முனியெண்டால்அடிச்சிப் போட்டு போயிருக்கும் இது வேற ஒண்டு, இன்னும் மோசமானது. இரத்தக்காட்டேரி!"

 அம்மாவும் மாமியுடன் சேர்ந்து கொண்டாள், "நல்லவைக்கு காலமில்லை, என்ன ஒரு அருமையான சீவன் தெரியுமே?  இந்தப் பிள்ளையைத் தத்தெடுத்துக் கொண்டு போய்  வளர்க்கப் போறன் எண்டு வாய் வாயாய் சொல்லி மாளும்!"

அதிர்ச்சியில் உறைந்து திரும்பியவளுக்கு வீட்டுக்கார ஐயாவின் கட்டிலோடு விழுந்திருந்த ஒரு மண் நிறத்தொப்பியும் இரத்தத்தில் தோய்ந்திருந்தது எல்லா வினாக்களுக்கும் விடை சொன்னது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியுள்ளீர்கள் தோழி என்னால் உங்களைப்போல் எழுத முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கு. மிக நன்று.

Link to comment
Share on other sites

25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையாக எழுதியுள்ளீர்கள் தோழி என்னால் உங்களைப்போல் எழுத முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கு. மிக நன்று.

மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் தாமே எழுதுபவர்களுக்கு பலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கை தேர்ந்த எழுத்துகாரர் மாதிரி இருக்கு, தெய்வில்லாமல் போகின்றது, இடைவிடாமல் வாசிக்க தூண்டுகின்றது.

நீச்சல் அடிப்பது அப்படியே கண் முன்னே விரிகின்றது நேரில் பார்ப்பது போல், தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கு நீச்சலென்றால் காணும்

Link to comment
Share on other sites

12 minutes ago, உடையார் said:

நீங்கள் கை தேர்ந்த எழுத்துகாரர் மாதிரி இருக்கு, தெய்வில்லாமல் போகின்றது, இடைவிடாமல் வாசிக்க தூண்டுகின்றது.

நீச்சல் அடிப்பது அப்படியே கண் முன்னே விரிகின்றது நேரில் பார்ப்பது போல், தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கு நீச்சலென்றால் காணும்

நன்றி உடையார் ! எனக்கும் நீச்சல் என்றால் போதும்.  சிறு வயதில் அம்மா இல்லாது போன காரணத்தால் அப்பா தான் கீரிமலைக் கடலில் நீந்தும் போது நானும் சேர்ந்து நீந்திப் பழகி விட்டது. இன்று அதுவும் என்னுடைய மனத்தையும் உடலையும் நெறிப்படுத்த உதவுகிறது என்றால் மிகையாகாது.  தொடர்ந்து நீந்துவோம் !😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தக்காட்டேரி நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.......தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தாருங்கள்.......!   😁

Link to comment
Share on other sites

மிக சிறப்பாக கதை கருவை நகர்த்தி இருக்கிறீங்கள். 

ஒரு குறும்படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்துகளால் வடிவமைத்து இருக்கிறீங்கள்.

வசன நடையும் காட்சி விபரிப்பும் அருமை.

Link to comment
Share on other sites

காட்ச்சிகளை விபரித்த விதமும் சுவாரிசியமாக கதையை நகர்த்தியுள்ளதும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் தோழி.

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழினி said:

காட்ச்சிகளை விபரித்த விதமும் சுவாரிசியமாக கதையை நகர்த்தியுள்ளதும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் தோழி.

 

 

நன்றி ! காத்திரமான பாராட்டுக்கள் எழுத்திற்கு பலம் சேர்க்கும் .

4 hours ago, suvy said:

இரத்தக்காட்டேரி நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.......தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தாருங்கள்.......!   😁

நன்றி ! நிச்சயமாக  முயற்சி செய்வேன்.  காத்திரமான பாராட்டுக்கள் எழுத்திற்கு பலம் சேர்க்கும் 

1 hour ago, தமிழினி said:

காட்ச்சிகளை விபரித்த விதமும் சுவாரிசியமாக கதையை நகர்த்தியுள்ளதும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் தோழி.

 

 

நன்றி ! நிச்சயமாக  முயற்சி செய்வேன்.  காத்திரமான பாராட்டுக்கள் எழுத்திற்கு பலம் சேர்க்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழி,
அருமையான குட்டிக்கதை. நல்ல தலைப்பு.
உங்கள் முதல் பந்தியிலே கைதேர்ந்த எழுத்தாளரின் பக்குவம் தெரிகிறது.
"சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன"
மிகவும் மென்மையான ரசனை உள்ள வரிகள். 
வாழ்க்கையின் இப்படியான சின்ன சின்ன விஷயங்கள், மிகவும் ரம்மியமானவை இவற்றை பெரும்பாலானோர் காணத் தவறுகின்றனர். இதை பதிவு செய்த உங்களுக்கு நன்றிகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
யாழ்களம் நல்ல பல புதிய எழுத்தாளர்களை உள்வாங்கிக்கொண்டு பரிணாமிப்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

விமர்சனத்திற்கு அன்பும் நன்றியும். தொடர்ந்து எழுத உங்கள் பாராட்டுக்கள் உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

வணக்கம் தோழி,
அருமையான குட்டிக்கதை. நல்ல தலைப்பு.
உங்கள் முதல் பந்தியிலே கைதேர்ந்த எழுத்தாளரின் பக்குவம் தெரிகிறது.
"சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன"
மிகவும் மென்மையான ரசனை உள்ள வரிகள். 
வாழ்க்கையின் இப்படியான சின்ன சின்ன விஷயங்கள், மிகவும் ரம்மியமானவை இவற்றை பெரும்பாலானோர் காணத் தவறுகின்றனர். இதை பதிவு செய்த உங்களுக்கு நன்றிகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
யாழ்களம் நல்ல பல புதிய எழுத்தாளர்களை உள்வாங்கிக்கொண்டு பரிணாமிப்பதில் மகிழ்ச்சி.

கைதேர்ந்த எழுந்தாளர் யாழுடன் இணைத்துள்ளார்👍

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

கைதேர்ந்த எழுந்தாளர் யாழுடன் இணைத்துள்ளார்👍

நன்றியும் அன்பும் !

Link to comment
Share on other sites

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.நல்ல மொழிநடை.விறுவிறுப்பான கதையோட்டம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்....

Link to comment
Share on other sites

On 31/7/2020 at 16:32, nige said:

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.நல்ல மொழிநடை.விறுவிறுப்பான கதையோட்டம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்....

பாராட்டுகளும் காத்திரமான விமர்சனங்களும் எழுதத் துடிக்கும் என் போன்றவர்களை நிச்சயம் மேலும் மேலும் எழுதத் தூண்டும். மிக்க நன்றி !🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் உருவாக்கமோ உண்மையோ யானறியேன் உங்கள் எழுத்து நடை மூச்சுவிடாமல் வாசிக்க வைத்தது. ரத்தக் காடடேறி .  யாழ் களத்துக்கு நல்ல ஒரு  திறமையான  தோழி ..கிடைத்துள்ளார் . .ரொம்ப பொருத்தமான தலைப்பு "ரத்தக் காடடேறி  ".  அந்தப் பெண்ணின் துணிச்சல்  அருமை

Link to comment
Share on other sites

1 hour ago, நிலாமதி said:

சம்பவம் உருவாக்கமோ உண்மையோ யானறியேன் உங்கள் எழுத்து நடை மூச்சுவிடாமல் வாசிக்க வைத்தது. ரத்தக் காடடேறி .  யாழ் களத்துக்கு நல்ல ஒரு  திறமையான  தோழி ..கிடைத்துள்ளார் . .ரொம்ப பொருத்தமான தலைப்பு "ரத்தக் காடடேறி  ".  அந்தப் பெண்ணின் துணிச்சல்  அருமை

அழகான விமர்சனத்திற்கு நன்றி சகோதரி. இது புனைவு தான், இருந்தாலும் இப்போது இப்படியான விடயங்கள் நடப்பது புதிதல்லவே. இது குறித்த, குழந்தைகளுக்கான விழிப்புணர்வு, ஆண் பெண் வேறுபாடின்றி வழங்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 17:44, தோழி said:

 

ஒரு கிழமையாக காணவில்லை, நலமாக இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி என்னைத் தேடிப் பார்த்தமைக்கு! வேறு சில காரணங்களால் யாழ் இணையத்துடன் இணைய முடியவில்லை. நீங்களும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலத்திற்கு அழைத்துச் சென்ற விவரணைகள்.👍🏾
மோசமான கிழவர்கள் நல்லவர்கள் மாதிரி வேஷம் போட்டு செய்யும் துஷ்பிரயோகங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றது.

இரத்தக்காட்டேரி உயிரையும் எடுத்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

தங்கள் விமர்சனத்துக்கு நன்றி! இவை எம் சமுதாயத்தின் பேசாப்பொருட்கள், இலை மறை காயாக சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறவே செய்கின்றது. விழிப்புணர்வுகள் கொண்டு வரப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 03:51, தோழி said:

 

 

 

சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை  வரைந்திருந்ததைப் பார்த்த  அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன.  மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள்  பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள்  என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத்  தவறவில்லை. 

 

 

 

எல்லாம் ஓகே அக்கா 
இந்த பந்தி அப்படியே மருதங்கேணியை அச்சடித்து பதிந்த மாதிரி இருக்கு 
நாங்கள் சொந்தகாரர்கள் என்று நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள்."

அசத்தலான வரிகள். 

 

Link to comment
Share on other sites

15 hours ago, Maruthankerny said:

எல்லாம் ஓகே அக்கா 
இந்த பந்தி அப்படியே மருதங்கேணியை அச்சடித்து பதிந்த மாதிரி இருக்கு 
நாங்கள் சொந்தகாரர்கள் என்று நினைக்கிறன் 

😀நன்றி !அப்பிடி இருக்குமோ ?  நாங்கள் சாவகச்சேரிப் பக்கம், தெல்லிப்பளை, நீர்கொழும்பு என பல பகுதிகளிலும் இருந்திருக்கிறேன். மருதங்கேணியும் இப்படியான அழகான இடங்களில் ஒன்றாக இருக்கலாம்.

48 minutes ago, theeya said:

"இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள்."

அசத்தலான வரிகள். 

 

நன்றி தீயா!  சில விடயங்களை உரத்துச் சொல்வது வழக்கம்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தோழி said:

😀நன்றி !அப்பிடி இருக்குமோ ?  நாங்கள் சாவகச்சேரிப் பக்கம், தெல்லிப்பளை, நீர்கொழும்பு என பல பகுதிகளிலும் இருந்திருக்கிறேன். மருதங்கேணியும் இப்படியான அழகான இடங்களில் ஒன்றாக இருக்கலாம்.

 

நீங்கள் எழுதிய எந்த சூழலும் அழகும் நீங்கள் குறிப்பிடும் 
சாவச்சேரி தெல்லிப்பளை நீர்கொழும்பில் இல்லையே? 

மருதங்கேணியின் அழகை அப்படியே வர்ணித்து உங்கள் எழுத்து இருக்கிறது 
அதுவும் குறிப்பாக சோழகாற்றை குறிப்பிடறீர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.