Jump to content

தேர்தல் களத்தில் தமிழ்ப் பெண்களின் வகிபாகம் அரசியற் கொள்கையா? அனுதாப இலக்கா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

தேர்தல் களத்தில் தமிழ்ப் பெண்களின் வகிபாகம் அரசியற் கொள்கையா? அனுதாப இலக்கா?

August 1, 2020
  • எஸ்தி

Thiru-3-249x300.jpg
 

லங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் – 1931ல் சட்டசபை உருவாக்கப்பட்டபோதே ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் இப்போது பெண்களாக இருக்கின்றபோதிலும் இவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு.

முக்கியமாக கடந்த நாடாளுமன்றத்தில் 5.3 வீதமானவர்களே பெண்களாக இருந்தனர். சர்வதேச புள்ளிவிபரத்தின்படி இவ்விடயத்தில் 190 நாடுகளில் இலங்கைக்கு 180வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலாவது சட்டசபைத் தேர்தல் 1931ல் இடம்பெற்றபோது இந்திய வம்சாவளிப் பிரமாண தமிழ்ப் பெண்ணான லீலாவதி அசரப்பா பலாங்கொட தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தாராயினும், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தந்தையின் சகோதரி போட்டியிட முன்வந்தபோது அவர் அதிலிருந்து விலகிக் கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இரண்டு இடைத்தேர்தல்களே முதன்முதலாக சட்டசபையில் இரண்டு பெண்களை இடம்பெறச் செய்தது. ஒருவர் அற்லீன் மொலமூர், மற்றவர் நேசம் சரவணமுத்து. இவரே இலங்கை அரசியலில் முதலில் தெரிவான தமிழ்ப் பெண். கொழும்பு மேயராகவிருந்த மருத்துவர் பி. சரவணமுத்துவின் மனைவி. 1931ம் ஆண்டுத் தேர்தலிலும் 1936ம் ஆண்டுத் தேர்தலிலும் வென்று 1947வரை கொழும்பு வடக்கின் பிரதிநிதியாக இவர் இருந்தார்.

1947ல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரே சிங்கள உயர்மட்ட மற்றும் அரசியல் பின்னணிகளைக் கொண்ட பல பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்கள். பல அரசியல்வாதிகளின் மனைவிமார், பிள்ளைகள், சகோதரிகள் என சுமார் நாற்பதுக்கும் அதிகமான சிங்கள பெண்கள் 1947 முதல் 2020 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

 

004.png
 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பெண் வேட்பாளர்களுக்கான கூட்டம் ஒன்றின் பின்னர் எடுக்கப்பட்ட படம்

 

பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின்னர் 1960ல் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது மகள் சந்திரிகா அவரது கணவர் கொல்லப்பட்ட பின்னர் இலங்கையின் பிரதமராகி, முதலாவது பெண் ஜனாதிபதி என்கின்ற மகுடம் சூட்டிக் கொண்டார். பல பெண் உறுப்பினர்கள், அமைச்சர், பிரதியமைச்சர், ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.

ஆனால், 1989ம் ஆண்டுவரை தமிழ் பெண்கள் எவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்வரவில்லை. தேர்தலில் போட்டியிடாமலே ஒரு பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினராது ஒரு வரலாற்று நிகழ்வு. 1977ம் ஆண்டுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது எம்.பி.யாக திரு. எம். கனகரத்தினம் தெரிவானார். சில மாதங்களில் இவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அமைச்சரானார். கொழும்பில் வைத்துச் சுடப்பட்ட இவர் 1980 ஏப்ரலில் மரணமாக அந்த வெற்றிடத்துக்கு இவரது சகோதரி ரங்கநாயகி பத்மநாதன் நியமனமானாகி 1989வரை அப்பதவியில் இருந்தார்.

1989ம் ஆண்டுத் தேர்தலில் வவுனியா தொகுதியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ராசமனோகரி புலேந்திரன் வெற்றி பெற்று கல்வி இராஜாங்க அமைச்சரானார். 1994இலும் அவர் மீளத்தெரிவானார். இவரே இலங்கையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவது பெண். இலங்கை சுதந்திரமடைந்து 42 ஆண்டுகளின் பின்னரே இது இடம்பெற்றது.

ஏனோ தெரியாது அதன் பின்னரான மூன்று பொதுத்தேர்தல்களிலும் தமிழ்ப் பெண்கள் எவரும் போட்டியிட முன்வரவில்லை. 2000ம் ஆண்டுத் தேர்தலில் பேரியல் அஸ்ரப் (ஹெலிகப்டர் விபத்தில் மரணமான இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரபின் மனைவி), ஜே.வி.பி.இல் போட்டியிட்ட அன்ஜன் உம்மா ஆகியோர் தெரிவாகி முஸ்லிம் சமூகத்தில் முதலில் தெரிவான பெண்கள் என்ற இடத்தைப் பெற்றனர். 2001ம் ஆண்டுத் தேர்தலிலும் இவர்கள் வெற்றி பெற்றனர்.

2004ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இரண்டு பெண்களும் வெற்றியைத் தழுவினர். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து முதலில் தெரிவான பெண் என்ற பெருமையுடன் தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான முதலாவது பெண் என்ற பெயருடன் தங்கேஸ்வரி கதிரமனும் தெரிவாகினர். ஆனால் அதன் பின்னர் எந்தவொரு பெண்ணும் கூட்டமைப்பிலிருந்து தெரிவாகவில்லை.

2010, 2015ம் ஆண்டுத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன்; யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவானார். சிங்கள தலைமைக் கட்சியொன்றில் போட்டியிட்டு குடாநாட்டில் வெற்றிபெற்ற முதலாவது தமிழ்ப் பெண் இவர். ராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2015ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுடாக முன்னாள் போராளி என அறிமுகமான வன்னியைச் சேர்ந்த சாந்தி சிறீஸ்கந்தராஜா நியமனமானார்.

ஆகஸ்ட் 5ல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்ப் பெண்களின் வகிபாகம் கூடுதலானது. பிரதான கட்சிகளான சம்பந்தனின் கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் கூட்டணி, கஜேந்திரகுமாரின் முன்னணி உட்பட வடக்கு கிழக்கில் போட்டியிடும் சகல கட்சிகளும் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் இயலுமானவரை ஒரு பெண் வேட்பாளரையாவது தங்கள் பட்டியலில் இணைத்துள்ளனர்.

இவர்களுள் மூவர் ஏதோ ஒரு வகையில் நன்கு அறிமுகமானவர்களாகவும், மக்களின் கரிசனையைப் பெற்றவரர்களாகவும் உள்ளனர்.

மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் விஜயகலாவின் கணவர் மகேஸ்வரன் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராகவிருந்தவர். கொழும்பில் வைத்து அவர் கொல்லப்பட்ட பின்னர் தாமதமின்றி அக்கட்சி விஜயகலாவுக்கு இடம் கொடுத்ததால் இலகுவாக அவர் வெற்றியைத் தட்டிக் கொண்டார்.

விக்னேஸ்வரன் அணியில் போட்டியிடும் அனந்தி சசிதரன் வடமாகாணசபைத் தேர்தலில் எண்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்தவர். அமைச்சராகவும் இருந்தவர். விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியற் பொறுப்பாளராகவிருந்து முள்ளிவாய்க்காலில் ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட எழிலனின் மனைவி இவர் என்பது இவருக்கான சிறப்பு அடையாளம்.

கொழும்பில் வைத்து பட்டப்பகலில் கொல்லப்பட்ட கூட்டமைப்பின் எம்.பி.யாகவிருந்த ரவிராஜின் மனைவி சசிகலா இத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். சரிந்து நிற்கும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை நிரப்புவதற்காக இவர் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேற்சொன்ன மூவரும் ஒருவகையில் ஒரேவகையான தகுதியைக் கொண்டவர்கள் என்பதைக் கவனிக்கலாம்.

இவர்கள் போட்டியிடும் அணிகளின் வாக்குகளை அதிகரிக்கவே பயன்படுத்தப்படும் இவர்கள், விருப்பு வாக்குகள் மூலம் வெற்றிபெறும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை அவர்களின் தலைவர்களால்கூட கூறமுடியாது. இவ்வேளையில் 1960ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க முதன்முதலாக தேர்தலில் மேடையேறியபோது இடம்பெற்ற சில விடயங்கள் இங்கு கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். கணவர் இறந்தபின்னர் வெண்ணிற ஆடையுடன் மேடைகளில் தோன்றி (விதவைக் கோலம்), கணவரின் கொலையைக் குறிப்பிட்டு உரையாற்றுகையில் கண்ணீர் சிந்தியவாறு தோற்றமளித்து வந்தார். ஒரு ஆங்கிலப் பத்திரிகை அப்போது இவரை ‘அழும் விதவை’ (Weeping Widow) என்று நையாண்டி பண்ணியது. அதாவது, அனுதாப அலையினூடாக தேர்தலில் வெற்றிபெற முனைகிறார் என்பது.

இதே பின்னணியில் அனந்தி, விஜயகலா, சசிகலா ஆகிய மூவரையும்; மேடையேற்றி அனுதாப வாக்குகளைப் பெறுவதுதான் அவர்களின் அணிகளின் இலக்கா என்ற கேள்வி முனைப்புப் பெற்றுள்ளது. அரசியல் கொள்கை, மக்கள் நலன் சார்ந்த சேவை, காலத்தின் தேவை என்பவற்றுக்கு அப்பால் அனுதாபம் ஒன்றே வாக்கைப் பெற்றுக்கொடுக்குமென அவர்களின் தலைமை கணக்குப் போட்டிருக்கிறது. அனந்தி, சசிகலா ஆகியோரின் சில உரைகள் (கறிவேப்பிலைக் கதை, ஆணாதிக்க நிலை) இதனை மறைமுகமாக வெளிப்படுத்தத் தவறவில்லை.

  • இக்கட்டுரையாளர் இலங்கையின் அதிமூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர். 1980களில் யாழ்ப்பாணத்தில் இரண்டு தினசரிகளின் பிரதம ஆசிரியராகவிருந்தவர்.

http://thinakkural.lk/article/59362

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.