Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பெண்கள் 

ஒரு தோழியின் எண்ணங்களில்...

பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும்  அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது.  இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட அரசியலில் ஆர்வம் காட்டத் தயங்குகிறார்கள்.  இலங்கையின் வரலாற்றில் பல திறமையும் ஆளுமையும் உள்ள பெண்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்.

இதில் பலராலும் அனுபவம் சார்ந்து எடுத்துரைக்கப்பட்ட சில விடயங்கள் நிச்சயமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பொது வெளிக்கு, அதுவும் குறிப்பாக அரசியலுக்கு வரும் பெண்களை இழிவு படுத்துபவையாக வும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஆண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்களை விட அதிகமான சிக்கல்களைக் கொண்டதாகவும்  அமைந்துள்ளது.  இந்தப் பதிவில் நான்  எழுதுகின்றவை இக்கலந்துரையாடல் மூலம் கிடைத்த தகவல்களோடு எனது தனிப்பட்ட கருத்துக்களையும்  அடக்குகின்றன.  இவ்வுரையாடலில் கலந்து கொண்டவர்களின்  பெயர்கள்  தவிர்க்கப்பட்டாலும்,   இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை  மேற்கொண்டவர்களின் பெயர்கள் இதன் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

சிக்கல் 1

ஆண்கள் போலல்லாது ஒரு பெண்ணானவள் பொது வெளிக்கு சேவை செய்ய வருவதற்கு முன்னரும் சரி அல்லது சேவை செய்யும் போதும் சரி, சமையல், குழந்தைகள் பராமரிப்பு, பொருளாதாரத் தேவைகள்  எனப் பலவகையான  குடும்பச் சுமைகளை சுமந்தவாறே தான் வர வேண்டியுள்ளது. அதிகமான பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகவேஅமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிக்கல் 2

அநேகமான கட்சிகளில் ஒரு பெண் வேட்பாளர் தனக்காக சேர்க்கும் வாக்குகளை  தனது கட்சிக்கு வளங்குவதற்காகவே  பயன்படுத்தப்படுகிறார், அது மட்டுமல்ல ஒருவாறு அவர் அந்த கட்சியில் சேர்ந்து இயங்குகின்ற சந்தர்ப்பம் கிடைத்தாலும்  அவர் தான் மக்களுக்கு செய்ய வேண்டும் என முயற்சிக்கின்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார். அனேகமான திட்டங்கள் ஆண் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.  தமது குடும்ப அமைப்பிலிருந்து பல சவால்களை முறியடித்து, பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து பொது வெளிக்கு வந்து, அதன் பின்னர் அரசியலில் காலூன்றும் போது,  பெண்கள் தமது குரலை இங்கு இழந்து விடுகிறார்கள். பெண்கள் வெறும்  பொம்மைகளாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம் பல கட்சிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது.

 சிக்கல் 3

அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்களை அரசியலுக்கு வராமல் தடுப்பதும் தான் எமது சமூகத்தில்  பெரும்பான்மையான அரசியல் சார்ந்து நிற்கும் ஆண்களின்  தந்திரங்களில் பிரதானமானதாக இருக்கிறது.   எமது சமூகம் என்று சொல்கின்ற போது முக்கியமாக ஆண் ஆதிக்கங்களும் ஊடகங்கங்களும் சேர்ந்தே இப்படியான இழி செயலைச் செய்வது என்பது கவலைக்குரியது. இலண்டனிலுள்ள பி சி ஒளி / ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தின் 'டீக்கடை' நிகழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வெறுமே அரசியல் நையாண்டிகள் போல அல்லாது ஊடக தர்மம் மீறி இப்படியான ஒரு ஒளிபரப்பு செய்தவர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள்  தாம் நையாண்டி செய்த  இக்குறிப்பிட்ட பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது அவசியம்.  அரசியலுக்கு வரும் பெண்களின் குரல் வளையை நசுக்கப் பார்ப்பது அநாகரீகமானது மட்டுமல்ல பெண்களுக்கான அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கப் பார்க்கும் சட்ட விரோத செயலுமாகும். 

அரசியல் ரீதியான கருத்துக்களை அல்லது அவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனங்களை கிண்டல் பண்ணுவது வேறு அப்பெண்களை தனிப்பட்ட ரீதியில், பாலியல் ரீதியான அவதூறுகளைப்  பரப்பி அதன் மூலம் அவர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, தனி நபர்

தாக்குதல் நடத்துவது வேறு என்பது புரியாத ஒரு ஊடகம் கூட இருக்கிறது அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகத்தை, அதன் விழுமியங்களை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லும்?

சிக்கல் 4

தனது கட்சியின் கொள்கைகளுக்கெதிரான ஒரு சிந்தனை எழும் போது  அதைத் தைரியமாக எதிர் கொள்ளும் பெண்கள் இல்லாமல் இருப்பது மாத்திரமல்ல, அப்படியான கேள்விகள் எழுப்பும்  பட்சத்தில் அப்பெண்களும் தமது கட்சிலிருந்து விலக வேண்டுமென திரை மறைவிலிருந்து உள்கட்சியின் பயமுறுத்தல் அப்பெண்ணின் மீது விழுகிறது.  

அனேகமாகப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எந்தக் கட்சியிலும் தொடர்ச்சியான முற்போக்கான சிந்தனைகள் திட்டமிடப்படுவதில்லை. இப்படியான கட்சிகளில் இணைந்து கொள்ளும் பெண்களுக்கு கட்சிகளுக்குளேயே அவர்களுக்கான  சம உரிமைகளோ ஜனநாயகமோ பேணப்படுவதில்லை. இவர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகள் வரும் போது கூட, அப்படி அவதூறு செய்தவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் யாருமில்லாமல் போவதும் ஒரு பெரிய சவாலே.

சிக்கல்: 5

சில பெண்களே பெண்களுக்கு எதிராக ஆண்களின் திறமைகளையும் அரசியல் அனுபவங்களையும்  மட்டுமே வெளிக்கொணர வேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்களாக இருப்பதும் வருந்தத் தக்கது.

இது அரசியலில் அல்லது  மக்கள் உரிமை சார்ந்த சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்த சில பெண்களின் கசப்பான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கல்: 6

அறிவும்,ஆளுமையும், திறமையும் கொண்ட பல பெண்கள் எமது சமூகத்தில் இருந்தாலும் கூட அவர்கள் தாமாகவே அரசியலுக்கு வரத்  தயங்குகிறார்கள் அல்லது அரசியல் பற்றிய சிந்தனை இல்லாது இருக்கிறார்கள். இப்படியானவர்களில் சிலர்  தமது கணவர், தந்தை அல்லது சகோதரர்கள் அரசியலில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். இது தாம் சுயமாகச் சிந்திக்காது வெறும் அனுதாபத்தை மூலதனமாக்கியே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பெயரையே இவர்களுக்கு கொடுக்கிறது.   பெண்களை உற்சாகமூட்டி அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்காமல் அவர்களுக்கு அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஆளுமை போதவில்லை எனக்குற்றம் சாட்டி அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் தமக்கு தேவை என வரும் போது, தமது கட்சிலிருந்து யாராவது ஒருவரின் உறவையோ நட்பையோ வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுப்பதும் நடக்கிறது. 

இத்தனை சவால்களையும் தாண்டி ஒரு பெண் அரசியலுக்கு வந்து அல்லது வரும் போது, அவளால் என்ன சாதிக்கப்பட்டாலும் அது பெண்களுக்கான ஒரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.  புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பெண்கள் தமது அரசியல் அனுபவங்களையும் திறமைகளையும் தாயகத்திலுள்ள பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். 

கட்சிகளுக்குள் ஆண் ஆதிக்கம், சம உரிமைகளும் , ஜனநாயகமும்   பேணப்படுவதில்லை போன்ற உள்கட்சி சிக்கல்களால் அதிகமான அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே பிளவுபட்டிருப்பதால்,பல சுமைகளைத் தாண்டி வரும் பெண் வேட்பாளர்களுக்கு   இது எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியே.  பெண்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியாமல் இருப்பதுடன் தான்  சேர்ந்த கட்சிகளில் உள்ள ஆண்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை, தமது விருப்பு இல்லா விட்டாலும் கூட அமைதியாகவே ஆதரிக்கவும்   வேண்டிவருகிறது.

தேர்தல் காலத்துக்கு மாத்திரமல்லாமல் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான பயிற்சிகளும் அது குறித்த சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும். சில ஊடகங்களில்ப்  பெண்களை பாலியல் போகப் பொருளாகச் சித்தரிக்கும் வேளைகளில் உடனடி எதிர்ப்பை தெரிவிப்பது போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பெண்களுக்கான ஒரு தனியான கட்சி ஒன்றே இப்படியான ஆண் ஆதிக்கம் நிறைந்த ஏனைய கட்சிகளிலிருந்து விடுபட்டு பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உதவும் என்ற கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : உமா ஷானிக்கா, விஜியுடன் ஆனந்தி பாலசூரியன் ) 

 

- அன்புடன் தோழி

 

 

Edited by தோழி
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

116869924_3317599765132661_4262968825577

நானும் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டேன்.     

இதுதானா அது தோழி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

116869924_3317599765132661_4262968825577

நானும் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டேன்.     

இதுதானா அது தோழி

நன்றி தோழி! நீங்களும் கலந்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி! 🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணாதிக்கத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எம் சமூகத்தில் பெண்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் மட்டமாகவே இருக்கின்றது. பெண்களுக்குச் சாதகமான  சட்டவரைபுகள் உள்ள மேற்கத்தைய நாடுகளில் கூட முற்று முழுதான சுதந்திரம் இல்லாதிருக்கும்போது இலங்கையில் அத்தனை அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் அச்சரியம் அல்ல. ஆனாலும் அத்தனையிலும் துணிவுடன் நின்று தம்மை அரசியலிலும் பொது வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள் பாராட்டிடப்படவேண்டியவர்கள். அன்று சிலர் கூறியதுபோல பெண்களுக்கான ஒரு கடைசியை ஸ்தாபித்து பெண்கள் மட்டுமாக அடுத்த தேர்தலுக்கு அதில் போட்டியிடுவதுபோன்று ஒரு நிலையை அங்கு உருவாக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் தமக்கு வேண்டியதை கூறவும் பெற்றுக்கொள்ளவும் ஓரளவு முடியும்.

தோழி நீங்கள் ஒரு பத்திவைப் போடும்போது இடைவெளிகள் இல்லாதவாறு போடுங்கள். அப்பதான் வாசிக்க ஆர்வம் வரும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆணாதிக்கத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எம் சமூகத்தில் பெண்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் மட்டமாகவே இருக்கின்றது. பெண்களுக்குச் சாதகமான  சட்டவரைபுகள் உள்ள மேற்கத்தைய நாடுகளில் கூட முற்று முழுதான சுதந்திரம் இல்லாதிருக்கும்போது இலங்கையில் அத்தனை அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் அச்சரியம் அல்ல. ஆனாலும் அத்தனையிலும் துணிவுடன் நின்று தம்மை அரசியலிலும் பொது வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள் பாராட்டிடப்படவேண்டியவர்கள். அன்று சிலர் கூறியதுபோல பெண்களுக்கான ஒரு கடைசியை ஸ்தாபித்து பெண்கள் மட்டுமாக அடுத்த தேர்தலுக்கு அதில் போட்டியிடுவதுபோன்று ஒரு நிலையை அங்கு உருவாக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் தமக்கு வேண்டியதை கூறவும் பெற்றுக்கொள்ளவும் ஓரளவு முடியும்.

தோழி நீங்கள் ஒரு பத்திவைப் போடும்போது இடைவெளிகள் இல்லாதவாறு போடுங்கள். அப்பதான் வாசிக்க ஆர்வம் வரும். 

சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி! நீங்கள் கூறியது போல் பெண்களுக்கான, உட்பூசல்களற்ற  ஒரு கட்சி இருந்தால் மேற்சொன்ன சிக்கல்கள் கணிசமான அளவு குறையும் அல்லது இல்லாமல்ப் போகும் என எதிர்பார்க்கலாம். 

நிற்க, பத்தியில் ஏன் இடைவெளி காட்டுகிறது எனத்தெரியவில்லை. நான் Google input இல் தமிழில் தட்டச்சு செய்து, அதை ஒரு word document இல் சேமித்து (save) பின் அதை யாழ் இணையத்தில் copy & paste செய்கிறேன். எனக்கு யாழில் வாசிக்கும் போது, எனது கண்ணியில் எந்த இடைவெளியும் தெரியவில்லை. என்ன செய்யலாம்?? 🤔🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது என்பதை நன்றாக சொல்லிவிட்டு சென்றுள்ளது.. ஆக மொத்தம் 8 பெண் வேட்பாளர்களே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தென்னிலங்கையை சேர்ந்த பெண்மணிகள் என்பதும் ஒரு தழிழ் பெண் வேட்பாளர்கூட தெரிவு செய்யப்படவில்லை என்பதும் கசப்பான உண்மை.

எங்களது சமூகத்தில் பெண் என்பவள் மட்டுமே குடும்பம், பிள்ளைகள் என்பதை கவனிக்கவேண்டும் என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது.. ஆனால் இன்றைய நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் நிலை என்பதால் குடும்பம், பிள்ளைவளர்ப்பு என்பது இருவரது(கணவன்/மனைவி) சேர்ந்தே செய்யவேண்டிய ஒன்று எனபதை மறந்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளின் போது ஒருவர், பெரும்பாலும் பெண்/மனைவியே விட்டுக்கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பு மேலோங்கிநிற்பதால் பிரச்சனைகள் முற்றி விவாகரத்தில் முடிந்துவிடுகிறது.. அப்பொழுதும் விவாகரத்தான பெண்ணின் மீதுதான் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு முகம்கொடுக்க விரும்பாத, பெண்கள் சமூகத்திற்காக, குடும்பத்திற்காக விட்டுகொடுத்து மனம் ஒன்றாத வாழ்க்கையை வாழ தலைப்படும் பொழுது தேவையற்ற பிரச்சனைகளையும் எதிர்நோக்கவேண்டி உள்ளது. 

மேலும், அரசியல் என்று வரும் பொழுது இலங்கையை பொறுத்தவரை அதிலும் தமிழ் பெண்அரசியல்வாதிகளை அனுதாபவாக்கிற்காக மட்டுமே கொண்டுவரப்படுகிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த தேர்தல் சொல்லியுள்ளது.. தமிழ பெண் வாக்காளர்கள் தங்களுக்கும் பெண் வேட்பாளர்களுக்கும் எந்தவித சம்பந்தமில்லாதது போலவும், ஏதோ வாக்கு போட்டுவிட்டு வந்தால் போதும் என்ற நிலையிலும் இருந்துள்ளார்கள். 
இனி இன்றைய தேர்தலில் தோற்ற பெண் வேட்பாளர்கள் அடுத்தமுறை காணாமல் போகாமல் இருப்பதற்கான வழிகளை ஆராயவேண்டும்..

புலம்பெயர் தேசத்து தமிழ் பெண் அரசியல்வாதிகள், இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் எங்களில் அனோகமானோர் பிள்ளைகள் வைத்தியர், பொறியிலாளர், கணக்காளர் என்ற வட்டத்தைவிட்டு வெளியேறி ஒரு அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், சமூக அலுவலர், சுயதொழில் முயற்சி என்ற பரந்தளவில் யோசித்து பிள்ளைகளை வளர்ப்பதும் இல்லை. சமூகத்திலுள்ள மற்றைய தேவைகளையோ, வளங்களையோ, சொல்லிக்கொடுப்பதும் குறைவு. இனிவரும் மூன்றாவது தலைமுறையில் அரசியலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நினைக்கிறேன். 

அதே போல மாற்றங்கள் நிகழவேண்டுமாயின், பெண்கள்(புலம்பெயர்ந்த, தாயக) தங்களுக்கிடையிலான உறவை பலப்படுத்தவேண்டும். காலத்திற்கேற்ற சிந்தனைகளுடன் முயற்சிகளை  முன்னெடுக்கவேண்டும். 

அத்துடன், அரசியலில், பொது வாழ்க்கையில. ஈடுபட விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமாயின், முதலில் அவர்களை சுற்றியுள்ள ஆண்கள்/பெண்கள் மதிப்பு கொடுக்கவேண்டும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் தைரியமாக இவற்றில் ஈடுபடமுடியம். 

 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.