Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் சரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் சரிவினை அந்த அணி பன்முகங்களிலும் இறங்கி பழுதுபார்க்கவேண்டியிருக்கிறது. அந்தப்பணி ஆரோக்கியமாக நடைபெறும் என்பதற்கு - இப்போதிருக்கின்ற - ஒரே நம்பிக்கை, அந்த அணியிலிருந்து சில "வேண்டாதவர்கள்" மக்களால் தூக்கி கடாசப்பட்டிருப்பதுதான்.

நடந்து முடிந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான மொத்த எதிர்ப்பென்பது சுமந்திரனுக்கு ஊடாகவே குறிவைக்கப்பட்டது. அதுவும் பல தளங்களில். கட்சிக்கு உள்ளே - வெளியே - மேலே - கீழே என்று அத்தனை பக்கங்களினாலும் அவரை தோற்கடிக்கவேண்டும் என்று பெரும் பணச்செலவில் "தொழில் முயற்சிகள்" மேற்கொள்ளப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்து மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு என்று மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிலும் பார்க்க, சுமந்திரனுக்கு குழி வெட்டுவதற்கு பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் பலர். சுமந்திரனும் இதை ஓரளவுக்கு கடைசி நேரத்தில் உணர்ந்து, DAN Tv செவ்வியில் கோடி காட்டியிருந்தார். 

கடைசியில், இவற்றையெல்லாம் தாண்டி அவருக்கு விழுந்த வாக்குகளில் அவர் வெற்றிகண்டிருக்கிறார்.

மறுபுறத்தில், கூட்டமைப்பின் வாக்குவங்கியை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதில் ஏற்பட்டிருக்கும் சரிவென்பது கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா இடங்களிலும் மெகா இழப்புக்கள். அதுவும் வெவ்வேறு காரணங்களுக்காக. சிலது என்னவென்றே இன்னமும் புரியாத மர்மமான காரணங்களோடு.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், குட்டிமணி, தங்கதுரை, பண்டிதர், முதல் மாவீரர் சங்கர், கிட்டு, சூசை போன்றவர்கள் வரிசையில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய பலரால் புகழடைந்த வடமராட்சி மண், இன்று தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சியொன்றின் அங்கத்தவரை அள்ளி அணைத்திருக்கிறது. 
சரி, கூட்டமைப்பைத்தான் நிராகரித்தார்கள் என்றால், கஜேந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்களுக்குக்கூட அந்த மக்கள் அங்கஜனுக்கு அளித்தளவு வாக்கை கொடுக்கவில்லை.

இன்னொருபுறத்தில், ஒட்டுக்குழுக்கள் என்றும் ஒத்தோடிகள் என்றும் அதிகாரத்தின் தொங்கு தசைகள் என்றும் பன்னெடுங்காலமாக தங்களின் மத்தியில் கட்டியமைக்கப்பட்ட ஈ.பி.டி.பி மற்றும் பிள்ளையான் குழுவினருக்கு மக்கள் - தமிழ் தேசியக்கட்சிகளைவிட - அதிகளவு ஆதரவளித்து கை குலுக்கியிருக்கிறார்கள். டக்ளசுக்கு மேல் இருப்பவர் சிறிதரன் ஒருத்தர்தான். கஜன் உட்பட அனைவரும் அவருக்கு கீழேதான். கிழக்கில் பிள்ளையான் பற்றிச்சொல்லவேண்டியதில்லை. 

மைத்திரி - ரணில் பிளவின்போது கூட்டமைப்பிலிருந்து அரசுப்பக்கம் தாவிய வியாழேந்திரன் அப்போது ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களாலும் துரோகியாக முத்திரை குத்தப்பட்டார். சிங்கள "அதிகாரத்தின் கைக்கூலி" என்று சபிக்கப்பட்டார். ஆனால், இரண்டு வருடங்களில் தனது சொந்த தொகுதியில்போய் வாக்குக்கேட்டு வென்றுகாட்டியிருக்கிறார். தான் செய்தது துரோகமில்லை என்று மக்களின் ஆணையினாலேயே தன்னை புனிதப்படுத்தி நிரூபித்திருக்கிறார்.  

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பொறிமுறையை மாகாணசபை என்றும் வேறு வழிவகைளிலும் நம்பிக்கொண்டிருந்த - செயற்பாட்டில் மெத்தனம் காண்பித்த - காலப்பகுதிக்குள், மக்கள் தங்கள் ஆதரவுத்தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தொடங்கியிருக்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால், வடக்கு - கிழக்கு மக்கள் சிங்கள அரசியல் சிந்தனை கொண்டவர்களாக தங்களை மாற்றத்தலைப்பட்டுள்ளார்கள்.

சிங்கள மக்கள் போர் முடிந்த பிறகு தங்களுக்கு சரிவரவில்லை என்றவுடன் மகிந்தவை தூக்கிவிட்டு ரணிலைக்கொண்டுவந்தார்கள். பிறகு, மகிந்தவே பரவாயில்லை என்றவுடன், மீண்டும் அவரை ஏகோபித்த ஆதரவோடு சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். பெருங்கட்சிகளுக்கான ஆதரவு என்பது அவர்களைப்பொறுத்தவரை - தங்களது மேம்பாட்டை முன்வைத்து - சடுதியாக மாற்றக்கூடியதாக இருந்தது. 

ஆனால், தமிழ் மக்கள் அப்படியானவர்கள் அல்லர். தாங்கள் தெரிவு செய்தவர்களை இலகுவில் மாற்றிவிடமாட்டார்கள். தாங்கள் எதிர்த்தவர்களையும் இலகுவில் ஏற்றுக்கொண்டுவிடமாட்டார்கள். கடந்தகாலங்களில் அரசின் மீதான அச்சத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பின்னால் - நீண்டகாலமாக - நின்றுகொண்டிருந்தார்கள். கூட்டமைப்பு தங்களுக்கு சகலதும் தரும் என்று நம்பினார்கள். ஆனால், இந்த தேர்தலில், அந்த அரசிடமே அபயமடைய தொடங்கிவிட்டார்கள்.

இந்த பின்னணியில் இன்னொன்றையும் இங்கு பார்க்கவேண்டியிருக்கிறது.

இம்முறை தேர்தலில் தென்னிலங்கை மக்கள் தாங்கள் இனிமேலும் பெருங்கட்சிகளின் சின்னங்களுக்கு அடிமையானவர்கள் அல்லர் என்பதை சிம்பிளாக நிரூபித்திருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்குள் அமைக்கப்பட்ட "மொட்டு" ஆட்சியமைக்கிறது. இரண்டு மாதங்களுக்குள் புதிதாக முளைத்த "டெலிபோன்" எதிர்க்கட்சியாக உட்காரப்போகிறது. பாரம்பரிய கட்சிகளின் சின்னங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு குத்திப்போட்டு வருகின்ற மக்களது மடத்தனம் அங்கு முற்றாக மாறத்தொடங்கியிருக்கிறது. 

இனி இந்த மாற்றம் தமிழர்கள் மத்தியிலும் தொற்றக்கூடும். முற்றிலும் புதியதை நாடுகின்ற தமிழ் வாக்குகள் புதிய சின்னங்களின் பின்னால் போகக்கூடும். 

இந்த அரசியல் கலாச்சார பரவல் தமிழ் மக்களை படிப்படியாக பிராந்திய அரசியலில் இருந்து அகற்றி, தேசிய அரசியலை நோக்கி நகர்த்தும் ஆபத்து கைக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது. இதற்கான வெற்றிடத்தை, உள்ளுராட்சி சபை தேர்தலுடன் ஓரளவுக்கு கணித்துக்கொண்ட மகிந்த - கோத்தா தரப்பு ஜனாதிபதி தேர்தலில் பதம் பார்த்து, இந்த தேர்தலில் அழகாக goal அடித்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இதற்கெதிரான சரியான 
கூட்டு அரசியல் பொறிமுறைகள் அமையாவிடின், வீட்டுக்குள் விகாரைகள் வருவதைக்கூட தடுக்கமுடியாமல் போய்விடும்.

உடனடியாக, மூடப்படாத ஒவ்வொரு குழிகளும் தமிழர் தரப்பு தங்களை தாங்களே இட்டு மூடுகின்ற குழிகளாக மாறும். அதற்கு வீடு, சைக்கிள் எதுவும் விதிவிலக்கில்லை.

அந்தவகையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு முன்னாலிருக்கின்ற சவால்கள் முன்னரைவிட பெரியவை.

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.