Jump to content

ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
10 ஆகஸ்ட் 2020, 07:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜராஜ சோழன் - கங்கை கொண்ட சோழபுரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் முதல் கட்டுரை.)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த மகத்தான பேரரசர்களில் ஒருவர். இந்திய துணைக் கண்டத்தின் பிற மன்னர்கள் நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தியவர்.

சோழர்களின் வரலாற்றில் ராஜராஜ சோழனின் இடம் மிக முக்கியமானது என்றாலும், கடல் தாண்டிய அவருடைய வெற்றிகள் என்பவை இலங்கையோடு முடிந்துவிடும் நிலையில், ராஜேந்திரச் சோழன் இந்தியா மட்டுமல்லாமல், கடல் தாண்டிச் சென்று பல நாடுகளை வென்று, புதிய தலைநகரை நிர்ணயித்து தமிழர் வரலாற்றில் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றவர்.

ராஜராஜசோழனின் மகனான முதலாம் ராஜேந்திரன், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், 1012லேயே இணை அரசனாக (Co - regent) அறிவிக்கப்பட்டான். மதுராந்தகன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த அவன், அன்றுதான் அபிஷேக நாமமாக ராஜேந்திரன் என்ற பெயரைப் பெற்றான்.

தந்தை பேரரசனாகவும் ராஜேந்திரன் இளவரசனாகவும் இரண்டு - இரண்டரை ஆண்டுகள் செயல்பட்டனர். இதற்குப் பிறகு, 1014-1015ல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு, சோழ நாட்டின் மன்னனாக முடிசூடிக்கொண்டான் ராஜேந்திரச் சோழன். அப்போதிலிருந்து 1044வரை ராஜேந்திரச் சோழனின் ஆட்சியே நடைபெற்றது. ராஜராஜ சோழன் மறைந்தபோது தற்போதைய தமிழ்நாடு, ஆந்திராவின் சில பகுதிகள், மைசூர் ராஜ்ஜியத்தின் சில பகுதிகள், இலங்கை உள்ளிட்ட பகுதிகளை ராஜேந்திரச் சோழனுக்கு விட்டுச் சென்றான்.

"சோழர் வரலாற்றில் முதலில் மகத்தான மன்னனாக அறியப்பட்ட ராஜராஜ சோழனின் சாதனைகளுக்குப் பின்னணியாக இருந்தவன் ராஜேந்திரச் சோழன்தான். பஞ்சவன் மாராயன் என்ற பெயருடன் ராஜராஜசோழனின் மாதண்ட நாயகனாக இருந்து, படையெடுப்புகளை நடத்தி, எதிரிகளை கட்டுக்குள் வைத்திருந்தான். இன்றைய குடகு பகுதிகளில் தங்கியிருந்து சாளுக்கிய நாடு, கேரள நாடுகளை அடக்கினான். அதனால்தான் ராஜராஜ சோழன் அமைதியாக தஞ்சையில் ஆட்சி செய்ய முடிந்தது. ஆகவே, ராஜேந்திரனின் சாதனைகள் ராஜராஜசோழன் காலத்திலிருந்தே துவங்குகின்றன" என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

மூன்று பெரும் சாதனைகள்

ராஜேந்திர சோழன், மன்னனாக முடிசூடிய பிறகு தன் முன்னோர்களின் தலைநகரான தஞ்சாவூரில் இருந்தபடி பத்து ஆண்டுகள்தான் அதாவது 1014 முதல் 1024வரைதான் ஆட்சி செய்தான். தன்னுடைய மகத்தான சாதனைகள் அனைத்தையும் இந்த பத்து ஆண்டுகளிலேயே செய்து முடித்தான் அவன். அவனுடைய சாதனைகளில் மூன்று சாதனைகள் மிக முக்கியமானவை.

"ராஜேந்திர சோழனின் முதல் சாதனை இந்தியா முழுவதையும் வெற்றிகொண்டது. ராஜராஜசோழனின் காலத்திலேயே சோழநாட்டுக்குத் தெற்கேயும் மேற்கேயும் உள்ள அனைத்து நாடுகளையும் தந்தையும் மகனும் வென்றிருந்தார்கள். தான் மன்னனாக முடிசூடிய பிறகு வடநாடுகளை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான். மேலைச் சாளுக்கியர்கள்தான் அப்போது சோழர்களுக்குப் பெரிய தொல்லையாக இருந்தார்கள். முதலில் அவர்களை வெற்றிகொண்டான். பிறகு, இன்றைய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், வங்கதேசம் வரை சென்று அவர்களை வெற்றிகொண்டான். இதனால் பெரும் செல்வம் கிடைத்ததோடு அவனுடைய ஆளுமையும் இந்தியா முழுக்க தெரியவந்தது. நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்வது அவன் நோக்கமாக இருக்கவில்லை" என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம்.

இந்தப் படையெடுப்பின்போது ராஜேந்திரனின் தளபதிகளே பெரும்பாலான இடங்களுக்குச் சென்று வெற்றிகொண்டார்கள் என்றாலும் ராஜேந்திரன் தற்போதைய ஒடிஷா வரை தன் படைகளுடன் சென்றான். அங்குள்ள மகேந்திரகிரீஸ்வர் கோவில் கல்வெட்டில் அவனுடைய வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன.

ராஜேந்திர சோழனின் இரண்டாவது சாதனை, புதிதாக ஒரு தலைநகரை நிர்ணயம் செய்தது. வளமான தஞ்சாவூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் வறண்ட பகுதி ஒன்றில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தான் ராஜேந்திரச் சோழன். இப்படிச் செய்ததற்குக் காரணம் இருந்தது என்கிறார் பாலசுப்ரமணியம். "ராஜேந்திரச் சோழனின் காலத்தில் தஞ்சாவூர் ஒரு ராணுவக் கேந்திரமாக உருவெடுத்திருந்தது. படைகள் பெருகியிருந்தன. இவ்வளவு பெரிய படைகளை வளமான காவிரியின் வடிநிலப் பகுதியில் வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதனால் கொள்ளிடத்திற்கு வடகரையில் ஒரு வறண்ட பெரும் பகுதியைத் தேர்வுசெய்து புதிய தலைநகரமாக உருவாக்கத் திட்டமிட்டான் ராஜேந்திரச் சோழன்.

எந்த தலைநகருக்கும் நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு ஏரியை வெட்டினான். அதன் கரையில் ஒரு பெரிய தலைநகரை உருவாக்கினான். அங்கு தஞ்சை அரண்மனையைப் போலவே ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டினான். அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போலவே ஒரு கோவிலை உருவாக்கினான். இப்படியாகத்தான் 1025ல் கங்கை கொண்ட சோழபுரம் உருவானது. தஞ்சையிலிருந்த அனைத்தையும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான்" என்கிறார் அவர். அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது.

கங்கை கொண்டசோழபுரம். ராஜேந்திர சோழன் நிறுவிய சோழப்பேரரசின் தலைநகரம் இது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கங்கை கொண்டசோழபுரம். ராஜேந்திர சோழன் நிறுவிய சோழப்பேரரசின் தலைநகரம் இது.

அந்த காலகட்டத்தில் மரக்கலங்கள் கொள்ளிடம் ஆற்றில் சிறிது தூரம் வரை உள்ளே நுழையும் வகையில் இருந்தது. இதனால், வெளிநாட்டுப் படையெடுப்புகளில் கிடைத்த செல்வத்தை மரக்கலங்களின் மூலம் தலைநகர் வரை கொண்டுவர முடிந்தது. இதுவும் தலைநகரம் மாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

ராஜேந்திரச் சோழனின் மூன்றாவது மகத்தான சாதனை அவனுடைய கடல்கடந்த படையெடுப்புகள். ராஜேந்திரச் சோழனின் கப்பற்படை, அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கப்பல் படையாக இருந்தது. இந்தக் கடற்படையின் மூலம் மலேசிய தீபகற்கம், இந்தோனீசியத் தீவுகள் உட்பட கிழக்காசிய நாடுகளின் பெரும்பகுதியை ராஜேந்திரச் சோழன் வெற்றிகொண்டான்.

தமிழ் மன்னர்களில், ஏன் அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராஜேந்திர சோழனுக்கு முன்பாக, ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று மாலத்தீவை வென்றிருக்கிறான். ஈழ மண்டலப் படையெடுப்பையும் நடத்தியிருக்கிறான்.

ஆனால், ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனீசியப் பகுதி) வென்றான். கடாரத்திற்கு (தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி) பல கப்பல்களை அனுப்பி ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகள் கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களைக் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன்னாட்டோடு இணைத்து ஆட்சி செய்யவில்லை. மாற்றாக செல்வங்களைச் சேர்ப்பது, வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன.

அந்த காலகட்டத்தில் ஐகோலே ஐநூற்றுவர், மணிநகரம் ஆகிய வணிகக் குழுவினரின் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்த வெற்றிகளின் மூலம் அந்தந்த நாட்டு மன்னர்கள் இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் துவங்கினர். 1017-18ல் நடந்த ஈழப் போரில் வெற்றிபெற்ற ராஜேந்திரச் சோழன், ஈழ நாட்டு மன்னர்களின் முடியையும் பாண்டிய மன்னர்கள் கொடுத்துவைத்திருந்த இந்திர முடியையும் கைப்பற்றியதாக கரந்தைச் செப்பேடுகள் கூறுகின்றன.

படையெடுப்புகள் மட்டுமல்ல ராஜேந்திரச் சோழனின் காலத்தில் நிர்வாகமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. "அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டது. நிலப்பிரபுக்கள், விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகியோரது நலனைப் பாதுகாக்கும் மன்னனின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதிகார வர்க்கம் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட படை ஒன்று உருவாக்கப்பட்டு, நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்ததோடு, புதிதாக கைப்பற்றப்படும் நாடுகளில் எதிர்ப்புகளையும் அடக்கியது" என்கிறார் வரலாற்றாசிரியரான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அந்த காலகட்டத்தில், இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே சிறந்தாக அவர் ஆண்ட நாடு இருந்தது என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

இது தவிர, நீர் மேலாண்மையில் ராஜேந்திரச் சோழன் பெரும் கவனம் செலுத்தினான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் சுதந்திரமாக, அமைதியாக இருந்தார்கள். வணிகர்களுக்கு கடற்கொள்ளையர்களின் தொல்லை நீங்கியது. பெண்கள் அதிகாரிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு நிலவுடமை இருந்தது.

ராஜராஜசோழன் - ராஜேந்திர சோழன் ஆகியோரின் மகத்தான சாதனைகளால்தான் பிற்காலச் சோழர்களின் ஆட்சி 430 ஆண்டுகள் நீடித்தது. இந்தியாவில் எந்த ஒரு இந்திய பேரரசனை எடுத்துக்கொண்டாலும் ஏதோ ஒரு விஷயத்தில்தான் மகத்தான சாதனையைப் படைத்திருப்பார்கள். ஆனால், ராஜேந்திர சோழன் எல்லா விதத்திலும் சாதனை படைத்தவன்.

https://www.bbc.com/tamil/india-53718719?at_custom3=BBC+Tamil&at_medium=custom7&at_campaign=64&at_custom1=[post+type]&at_custom2=facebook_page&at_custom4=8DAC69E8-DADE-11EA-9ECE-297B4D484DA4&fbclid=IwAR0PzmWGEHCv9Zto9w9QDqx36pvKLs0zz1nIXHc_ji9QREENXMWmsLh0ASk

Link to comment
Share on other sites

இருபது மைல் தூரத்திற்கு பிரம்மிக்கதக்கவகையில் ஏரியை வெட்டி இருக்கிறான் ராஜேந்திர சோழன்...

இப்பொழுதிருக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாத்தையும் ப்ளாட் போட்டு கபளீகரம் செய்திருக்கும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.