Jump to content

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும்

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஓகஸ்ட் 10

தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்‌ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல் செய்து, ‘மொட்டுக் கட்சி’ என்று விளிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது.   

இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.   

இலங்கையின் அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுனவின் இந்த வளர்ச்சியிலிருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக, கட்சி ஒழுங்கமைப்பு என்று பார்க்கும் போது, இன்று, பொதுஜன பெரமுன அளவுக்கு வினைதிறன் மிக்க ஒழுங்கமைப்பைக் கொண்ட கட்சிகள் எதுவும் இல்லை.   

ஒரே இடத்தில் இருந்துகொண்டு, எல்லாத் தேர்தல் வட்டாரங்களையும் நேரடியாகக் கண்காணிக்கும் வினைதிறன் மிக்க கட்சியைக் கட்டமைப்பது, இலகுவானது அல்ல. அதுவும், பொதுஜன பெரமுன கட்சியானது, ராஜபக்‌ஷக்கள், ஆட்சி அதிகாரம் இழந்திருந்த போது உருவான கட்சி ஆகும்.   

அண்மையில், கருத்துரைத்த பசில் ராஜபக்‌ஷ “பொதுஜன பெரமுன கட்சியை, சீன கொம்யூனிஸ்ட் கட்சியைப் போலவும் இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியைப் போலவும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.  இதன் அர்த்தம், சீன கொம்யூனிஸ்ட் கட்சிபோன்று கட்டுக்கோப்பும் கட்டமைப்பும் கொண்டமைந்ததாகவும் பாரதிய ஜனதாக் கட்சி போன்று தேசியவாதக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சியாகவும் பொதுஜன பெரமுன வளர விரும்புகிறது என்பதாகும்.   

சர்வாதிகாரக் கட்டமைப்பைக் கொண்ட இனத்தேசிய-பெருந்திரள்வாதக் கட்சியாக பொதுஜன பெரமுன உருவாகி, இன்று, அதிகாரக் கட்டிலில் திடமாக உட்கார்ந்து கொண்டுள்ளது. இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.  

பொதுஜன பெரமுன என்ற கட்சி, கட்டியெழுப்பப்பட்ட விடயத்தைச் சுட்டிக்காட்டியதற்கு, இன்னொரு காரணமுண்டு. ராஜபக்‌ஷக்களின் வெற்றி என்பது, அதிர்ஷ்டம் சார்ந்ததோ, காலச்சூழலின் சாதகத்தால் கிடைத்த வெற்றி என்றோ, குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மிகத் திறமையாகத் திட்டமிடப்பட்டு, அடையப்பெற்ற வெற்றியாகும். அதிர்ஷ்டமும் காலச்சூழலும் கைகொடுத்திருக்கலாம்; ஆனால், முயற்சி உள்ளவனுக்கு மட்டுமே, அதன் பயனை அறுவடை செய்ய முடியும்.   

பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட 145 ஆசனங்களோடு, யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொண்ட ஓர் ஆசனம், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்ட இரண்டு ஆசனங்கள், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலா ஒவ்வோர் ஆசனங்களையும் சேர்த்தால் 150 ஆசனங்களைப் பெற்றுவிடலாம்.  எதிர்க்கட்சிக்காரர்களை விலைகொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லாமல், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே, பொதுஜன பெரமுன இருக்கிறது. இந்தப் பெரும் பலத்துடன், ‘கோலியாத்’தைப் போல, பெரும் பலத்துடன் ராஜபக்‌ஷக்கள் நிற்கிறார்கள்.  

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியாக, சிலர் இந்தத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இது கவனமாக ஆராயப்பட வேண்டிய விடயம்.  

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐந்து ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. இம்முறை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றன.   

ஆகவே, தமிழ்த் தேசியம் சார்ந்த ஐந்து ஆசனங்களும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கே போயிருக்கின்றன. ஆயினும், ஐந்தில், இரண்டு ஆசனங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைக் காட்டிலும் தீவிர தேசியம் பேசும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்குக் கிடைத்திருக்கின்றன. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தாராளவாத சாய்வின் விளைவாக, ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியா என்றும், சிந்திக்க வேண்டியுள்ளது.   

2015ஆம் ஆண்டு தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட ஆசனம், இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ளது. வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூட, ஐ.தே.கக்கும் ஸ்ரீ ல.சு.கக்கும் 2015இல், 12.43% வாக்குகள் கிடைத்திருந்த அதேவேளை, 2020இல் 15.87% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது கணிசமான அதிகரிப்பு என்று கூறக்கூடியதொன்றல்ல. ஆயினும், தமிழ்த் தேசிய கட்சிகள் இந்தச் சமிக்ஞையை உதாசீனம் செய்துவிட முடியாது. அங்கஜன் இராமநாதனின் வெற்றியானது, வடமாகாணத் தமிழர்களுக்கு வாழ்வாதரத் தேவைகளும் இருக்கின்றன என்பதை, தமிழ்த் தேசிய கட்சிகள் மறந்துபோனதை இடித்துரைப்பதாகவே இருக்கின்றது.   

கிழக்கைப் பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, திருகோணமலை மாவட்டத்தின் வாக்குவீதத்தில் சிறு வீழ்ச்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தித்திருந்தாலும் ஓர் ஆசனத்தைத் தக்கவைத்திருக்கிறது.   மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் தலா ஓர் ஆசனத்தை இழந்துள்ளது. தமிழ்த் தேசிய கட்சிகள், கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அவர்களுக்கே உரித்தான பிரச்சினைகள் தொடர்பில், அக்கறைகாட்டாததன் விளைவு இது எனலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு, 2018ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ராஜபக்‌ஷக்கள் தரப்புக்குச் சென்ற வியாழேந்திரன், தமிழ்த் தேசிய பரப்பில் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டபோதும், ராஜபக்‌ஷக்களின் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, 22, 218 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றமை, தமிழ்த் தேசிய கட்சிகள், கிழக்கு மாகாணம் சார்ந்து ‘out of touch’ ஆக இருப்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.   

வன்னியை எடுத்துக்கொண்டால், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் ஆசனத்தை இழந்துள்ளது. கிட்டத்தட்ட 20,000 வாக்குகளை இழந்துள்ளது. அதில், கிட்டத்தட்ட 17,000 வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் கிடைத்திருக்கின்றன. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்த ஆசனத்தை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. ஆகவே, அந்த ஆசனம் நேரடியாக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குப் போகாவிட்டாலும், நடைமுறை யதார்த்தத்தில் அது ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவான ஆசனம் என்பதுதான் நிதர்சனம்.  

ஒட்டுமொத்தத்தில், இன்று தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளாகக் கருதக்கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் மொத்த நாடாளுமன்றப் பலம் 13 ஆசனங்கள் மட்டுமே. ராஜபக்‌ஷக்கள் என்ற மாபெரும் ‘கோலியாத்’துக்கு முன்னால், ‘சின்னப்பெடியனான’ ‘டேவிட்’டைப் போல, தமிழ்த் தேசியம் நின்று கொண்டிருக்கிறது.   

இங்கு, ‘டேவிட்’டின் பிரச்சினை, கோலியாத்தைவிடச் சிறியதாகவும் பலமற்றும் இருப்பது மட்டுமல்ல; இருக்கும் பலத்தைக்கூட ஒன்றுபடுத்தி, ‘டேவிட்’டால் இயக்க முடியாமல் இருப்பதுதான். த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.தே.கூ என்று பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகளும் அவற்றின் நட்புசக்திகளாகக் கருதக் கூடிய கட்சிகளும் ஒரு தளத்தில் இயங்கினால் மட்டுமே, ‘கோலியாத்’தை எதிர்கொள்ள முடியும் என்பது பற்றி, ‘டேவிட்’ சிந்திக்க வேண்டும்.   

அப்படியானால், இன்னொரு ‘கூட்டமைப்பை’ உருவாக்குவதா என்று கேட்கலாம். அது நடைமுறைச் சாத்தியமில்லாத விடயம். இந்தக் கட்சிகள் பிரிந்து நிற்பதே, அவர்களால் ஒரு கட்சியாகவோ, கூட்டணியாகவோ இயங்க முடியாது என்பதால்தான். ஆனால், தமிழ் மக்களின் பொதுப்பிரச்சினைகள் சார்ந்து, அவர்கள் ஒன்றுபடுவதற்கான தளமொன்று அவசியம். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய ‘Parliamentary Caucus’ (நாடாளுமன்ற கோகஸ்) ஒன்றைக் கட்டியெழுப்புதல் நல்ல ஆரம்பமாகும்.   

அது என்ன, நாடாளுமன்ற ‘கோகஸ்’?  

அமெரிக்காவின் சட்டவாக்க சபையான அமெரிக்க காங்கிரஸில், சட்டமன்ற நோக்கங்களை முன்னிறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கள் ‘congressional caucus (காங்கிரஸ் கோகஸ்) எனப்படுகிறது. இதில் கட்சி சார்ந்த குழுக்கள், சித்தாந்தம் சார்ந்த குழுக்கள் எனப் பல குழுக்களுண்டு.   

அதுபோலவே, கட்சிகளைக் கடந்து, இனம் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுக்களும் உண்டு. இவை இனக்-கோகஸ்கள் எனப்படுகின்றன. அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினர்களாகக் கறுப்பினத்தவரை உள்ளடக்கிய கறுப்பின கோகஸ், ஹிஸ்பானிய இனத்தவர்களைக் கொண்டமைந்த ஜனநாயகக் கட்சியின் ஹிஸ்பாகிக் கோகஸ், ஆசிய-அமெரிக்கர்கள், பசுபிக் தீவுகளிலிருந்து வந்த அமெரிக்கர்களைக் கொண்ட ஆசிய பசுபிக்-அமெரிக்க கோகஸ் என்பவை, இங்கு குறிப்பிடத்தக்கது.  குறித்த, இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், சட்டவாக்க சபையில் ஒன்றிணைந்து இயங்க, இந்தக் கோகஸ்கள் வழிசமைக்கின்றன.   

இதுபோலவேனும், தமிழ் மக்கள் சார்ந்த, தாம் ஒன்றுபடக்கூடிய அடிப்படை விடயங்களிலேனும் நாடாளுமன்றத்தில் ஒரு ‘கோகஸ்’ ஆகச் செயற்பட முடியுமானால், அது ‘கோலியாத்’தை எதிர்கொள்வதில் ‘டேவிட்’டின் முதல் வெற்றியாக அமையும். இந்த முதல் வெற்றியாவது, அடையப்பெறுமா என்பதுதான், தொக்கி நிற்கும் கேள்வியாகும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷ-எனும்-கோலியாத்-தும்-தமிழ்த்-தேசியம்-எனும்-டேவிட்-டும்/91-254111

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இதுபோலவேனும், தமிழ் மக்கள் சார்ந்த, தாம் ஒன்றுபடக்கூடிய அடிப்படை விடயங்களிலேனும் நாடாளுமன்றத்தில் ஒரு ‘கோகஸ்’ ஆகச் செயற்பட முடியுமானால், அது ‘கோலியாத்’தை எதிர்கொள்வதில் ‘டேவிட்’டின் முதல் வெற்றியாக அமையும். இந்த முதல் வெற்றியாவது, அடையப்பெறுமா என்பதுதான், தொக்கி நிற்கும் கேள்வியாகும்.  

கொள்கைகள் சார்ந்தும் தனித்துவமான  "தன்முனைப்பு" ச்சார்ந்தும்  கூட்டமைப்புத் துண்டாடப்பட்டுள்ளபோதும் குறைந்தபட்சம் நாடாளுமன்றத் தமிழர் பிரதிநிதிகள் பிரிந்துநிற்காது "தன்முனைப்பு"களைக் களைந்து வெளிப்படையாக  உளத்தூய்மையோடு  ஒன்றிணைந்து செயற்படுவதே தமிழர் நலன்சார்ந்த சிந்தனையாக இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.