Jump to content

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்: பகுதி 1


====================================
கொரோனாவுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதற்காக தமது உயிரையும் பணயம் வைத்து அரசியல்வாதிகள் பலர் பல லட்சங்கள், கோடிகளை செலவு செய்து ஒரு வழியாகத் தமது பாராளுமன்ற ஆசனத்தை உறுதி செய்து விட்டார்கள. சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் சிலர்  இனி மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கலாம் அல்லது காத்திருக்கும் கொக்காக 2025 பாராளுமன்றத் தேர்தலுக்குக் காத்திருக்கக்கூடும்.

இந்த முறை நடைபெற்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2010 க்குப் பின்னர் மகிந்தவிற்கு மீண்டும் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் அவர் புதிய கட்சியை உருவாக்கிய பின்னர் கிடைத்த ஐந்தே வெற்றி அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மறுபுறத்தில் எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட வரலாறு கொண்ட இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தனிக் கட்சிகளாக போட்டியிட்டு தலா ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளன. இன்னொரு வகையில் சொன்னால் பிரதான கட்சிகளாக வலம் வந்த இரண்டு கட்சிகளும் பெரும் அமைப்பழிவுக்கு உள்ளாகி உள்ளன.

ஆனாலும் சுதந்தரக் கட்சி உறுப்பினர்களில் பதினான்குபேர் மகிந்தவின் கூட்டணியோடு ஒட்டியிருந்து வெட்டியாடி ஆசனங்களைப் பெற்றுவிட்டார்கள். சுதந்திரக் கட்சி தனியே போட்டியிட்டு பெற்ற ஒரேயொரு ஆசனமும் தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்தில் கிடைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியோ மொத்த வாக்குகளின் அடிப்படையில் போனசாக வந்த ஆசனத்தையே தனதாக்கியுள்ளது.
மறுபுறத்தில் அதேபோன்ற நீண்ட வரலாறு கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியும் பின்னடைவைக் கண்டுள்ளது. இம்முறை அது பத்து ஆசனங்களையே பெற்றுள்ளது. 
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் போன்ற நிலைதான் இன்று வடக்கிலும் கிழக்கிலும். மன்னிக்கவும் இம்முறையும் பல கூறுகளாகி நின்றது என்பதுதான் உண்மை. இந்தத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அவற்றைப் பார்க்க முன்னர் தேர்தலோடு தொடர்புபட்ட சில விடயங்களைப் பார்த்துவிடலாம்.

முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பானவை:
இம்முறை இந்தக் கட்சியின் சில பிரதான வேட்பாளர்கள் சில சூட்சுமமான விடயங்களைச் செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்.
1. இது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, சம்பந்தன் ஐயா மாறுபட்ட கருத்தைத் தெரிவித்து வந்திருக்கிறார். இவ்வாறான மாறுபட்ட பரப்புரைகள் எதற்காகச் செய்யப்பட்டன?
2. இந்தக் கட்சியின் விளம்பரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் கீழே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றும் அச்சிட்டிருந்தனர். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நீர்த்துப் போக செய்து எதிர்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும் முன்னிறுத்தும் முயற்சியா? அல்லது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் காரணமா? இந்தக் கட்சியும் தந்தை செல்வா வளர்த்தெடுத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தையே புதிய கட்சிப் பெயருடன் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

3. வாக்கு வங்கியை உறுதிப்படுத்தவே மாமனிதர் ரவிராஜின் மனைவி உள்ளே கொண்டு வரப்பட்டார் என்று நம்பப்படுகிறது. அவரைக் கொண்டு வந்த நோக்கம் அவரைப் பாராளுமன்றம் அனுப்புவதல்ல என்றும் கடந்த காலங்களில் அனந்தியும் அவ்வாறு பயன்படுத்தப்பட்டார் என்று பரவலாகவே பேசப்பட்டது.

4. இறுதியாக, தனது சொந்தத் தொகுதிக்கும் தனது கட்சிக்காரர்கள் நிற்கும் இடத்துக்கும் பலத்த STF பாதுகாப்புடன் வந்த ஒரே அரசியல்வாதி சுமந்திரன் மட்டும்தான். இவர் தனது மண்ணான யாழ்ப்பாணம் போகும்போதெல்லாம் ஏன் விசேட அதிரடிப்படை பாதுகாப்புடனேயே வலம் வருகிறார்? சொந்த மக்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்?

ஏனைய கட்சிகளை ஒன்றாகப் பார்த்து விடலாம். 
1. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் அவற்றின் பெயரைப் போலவே பெருமளவு ஒத்துப் போகும் தன்மையிலானவை.சின்னங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கட்சிகள் இரண்டையும் வேறுபிரித்துப் பார்ப்பது ஒரு சாதாரண வாக்காளருக்கு கடினமாகவே இருக்கும்.

2. இரண்டு கட்சிகளுமே தமிழ் தேசியம், சர்வதேச விசாரணை போன்ற விடயங்களை உள்ளடக்கி அத்துடன் தமிழ் தேசியக் கூட்டணி செய்யத் தவறிய விடயங்களையும் தாம் செய்யப் போவதாகவே கூறி வந்திருக்கிறார்கள்.

3. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தங்கள் விளம்பரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்றும் அதன் கீழே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்றும் அச்சிட்டிருந்தனர். இவர்களுக்கும் தமது முன்னணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், அதனால் தாய்க் கட்சியின் பெயரையும் போட்டுவிடுவோம் என்ற எண்ணம் இருந்ததா தெரியவில்லை. இங்கு இவர்களும் புதிய கட்சிப் பெயரில் கேட்டாலும் நீண்ட வரலாறு கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சின்னத்தையே பயன்படுத்தியுள்ளனர்.

4. விக்னேஸ்வரன் ஐயாவும் மீன் சின்னத்தைக் கையில் எடுத்துள்ளார். அது பாண்டிய மன்னனின் சின்னம் என்று பரப்புரை செய்யப்பட்டதையும் நாங்கள் பார்த்தோம்.

5. ஒப்பீட்டளவில் இரண்டும் புதிய கட்சிகள் என்பதால் பழைய சாதனைகள், குறைபாடுகள் என்று குறிப்பிட அதிகமில்லை என்பதே இவர்களுக்கு அனுகூலமான விடயம். அதேநேரம், விக்கி ஐயாவை தனது கட்சிக்குத் தலைமை தாங்க கஜேந்திரகுமாரும் ஒரு கட்டத்தில் அழைத்தார். ஆனால் அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேர்தலின்போதும் இருவரும் சேர்ந்து கேட்கும் சூழலும் ஏற்படவில்லை. 

6. . மறுபுறத்தில் விநாயகமூர்த்தி முரளீதரனும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்டாலும் கடந்த காலங்களில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் மகாசபா கட்சியின் சின்னமான கப்பல் சின்னத்தையே பயன்படுத்தியுள்ளார். 

7. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இம்முறை தனித்துப் போட்டியிட்டிருகிறார்கள்

(தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்கக் கசடற – மக்களும் கட்சிகளும்: பகுதி 2
====================================

விருப்பு வாக்கு தொடர்பான சர்ச்சைகள்
-----------------------------------------------------
வழமையாக தெற்கில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் தேர்தல் முறைகேடு, விருப்புவாக்கு தொடர்பான சண்டைகளைப் பார்த்து ரசித்த வடபுல தமிழர்களுக்கு தமிழ் கட்சிக்குள் நடைபெற்ற சண்டையை பார்க்கும் சந்தர்ப்பம் கடந்த 2015 க்குப் பின்னர் மறுபடியும் இம்முறையும் ஏற்பட்டுள்ளது. இருதடவைகளும் சுமந்திரனின் விருப்பு வாக்குகள்தான் பேசுபொருள் என்பது குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் மட்டுமே இம்முறை விருப்புவாக்கு அறிவிப்பதில் இழுபறி இருந்ததாக தெரிகிறது. ஆனாலும் திருகோணமலை சர்ச்சை விரைவில் அடங்கிவிட்டது. ஆனால் சசிகலாவின் விருப்பு வாக்கெடுப்பு தொடர்பாக இன்னமும் இழுபறி முடியவில்லை. அவரின் வாக்குகளை சுமந்திரன் திருடினாரா இல்லையா என்பதற்கு யாரிடமும் ஆதாரமில்லை. ஆனால் முடிவுகளை தெரிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதம், நடைபெற்ற இழுபறி என்பன பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளது. 

சசிகலா ரவிராஜ் தெரிவுசெய்யப்பட்டாரா இல்லையா என்ற விவாதம் எழுவதற்கு இன்னொரு காரணமாக இருந்தது, அவரின் பெயரில் இருந்த Facebook போலிக்கணக்கில் இருந்து தொடர்ந்து போடப்பட்ட பதிவுகள் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பக்கத்தில் சொல்லப்பட்ட விடயங்களை பின்னர் சசிகலாவே மறுத்துள்ளார். அத்துடன் அது போலிக் கணக்கு என்றும் பொலிசாருக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாகவும் சொல்லியுள்ளார். அப்படியானால் அதை இயக்குவது யார்? இந்தப் பக்கத்தின் நோக்கம் என்ன? அதை Facebook நிர்வாகத்துக்கு முறையிட்டு ஏன் உடனேயே தடை செய்யவில்லை?

வாக்குகளை என்னும் நிலையத்தில் மோசடிக்கு சந்தர்ப்பம் இல்லை என்று அரச அதிகாரிகள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஆனால் வாக்களிப்பு நிலையங்களில் கள்ள வாக்குப் போடுவதற்கு சந்தர்ப்பம் உண்டா இல்லையா என்று அவர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. இலங்கையில் வாக்கு / தேர்தல் மோசடி என்பது புதிய விடயமும் இல்லை. Transparency International தரப்படுத்தலில் இலங்கை 38 புள்ளிகள் பெற்று 93 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனை நாம் இந்தியாவோடு ஒப்பிடலாம் (இந்தியா பெற்ற புள்ளிகள் 41, தரப்படுத்தலில் 80 ஆவது இடத்தில் இருக்கிறது). 

எனினும் இறுதித் தீர்ப்பு தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதேநேரத்தில் இந்த இழுபறியின்போது நடைபெற்ற சில கசப்பான விடயங்களை மக்கள் இன்னும் சிலகாலம் பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வருந்தி அழைக்கப்பட்டு வந்த ஒரு பெண் வேட்பாளர் அதுவும் மறைந்த ஒரு மாமனிதரின் மனைவி, தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று கலங்கி நின்றபோது அங்கு நின்ற அவரது கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். குறிப்பாக கட்சித் தலைமையை ஏற்கத் தயாராகும் சிறிதரனும் சுமந்திரனும் அதைச் செய்திருக்கலாம். தேர்தல் அதிகாரியோடு ஒன்றாகவே சென்று கதைத்திருக்கலாம். அவர்கள் அதைச் செய்யத் தவறியதன்மூலம் இனிவரும் நாட்களில் இது தொடர்பாக பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

சாதுர்யமான அரசியல்வாதியாக இருந்தால் சுமந்திரன் மறுநாள் ஊடகங்களைச் சந்திக்க முன்னர் சசிகலாவைக் கட்சித் தலைவருடன் சென்று சந்தித்துப் பேசி பின்னர் ஊடகங்களை இருவரும் ஒன்றாகச் சந்தித்திருந்தால் பிரச்னைக்கு அன்றே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். 

அதேநேரம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வகையிலான சிவாஜிலிங்கம், அனந்தி, அங்கஜன் ஆகியோரின் அணுகுமுறையும் ஆரோக்கியமானதில்லை. விக்கினேஸ்வரன் ஐயா அனந்தியும் சிவாஜிலிங்கமும் சசிகலா வீட்டிற்கு சென்று இப்படி அரசியல் செய்ய அனுமதித்திருக்கக் கூடாது. 

இத்தனை சர்ச்சைக்குப் பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து சசிகலா கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இனிவரும் நாட்களில் சசிகலா தான் விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறந்த அரசியல்வாதியாக பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

(தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்கக் கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 3
==========================================
தேர்தல் பெறுபேறுகளும் சில அவதானிப்புகளும்.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எதிர்பார்த்த சிலருக்கு சந்தர்ப்பம் தவறிப் போனது. குறிப்பாக பல பொதுமக்கள் பெரிதும் ஆதரவளித்த இளம்தலைமுறையினரோ புதிய முகங்களோ எந்த ஆசனங்களையும் கைப்பற்ற முடியவில்லை. 

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இதே நிலைதான். தலைவர்கள் மட்டுமே வெற்றிபெற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிலர் தெரிவாகவில்லை. 

 இந்த மூன்று தமிழ்க் கட்சிகளிலும் புதியவர்கள் வெற்றி பெறமுடியாமல் போனது அவர்களை ஆதரித்தவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனாலும் அவர்களில் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்று தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபித்துள்ளனர்.

இம்முறை தேர்தல் முடிவுகளை கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு இதனைக் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இன்னும் சுவாரசியமான விடயங்களை நாம் அவதானிக்க முடியும். 

பொதுவான புள்ளிவிபரங்கள்  
• வடக்கிலும் கிழக்கிலும் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தபோதும், யாழ்மாவட்டத்தில் 69 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 177,710 பேர் வாக்களிக்கவில்லை. (ஏனைய தேர்தல் மாவட்டங்களில் 75% க்கு மேலானவர்கள் வாக்களித்துள்ளனர்)

• வாக்குகள் அதிகம் நிராகரிக்கப்பட்டதும் யாழ் தொகுதியில்தான் – 8.88% (35,006 Votes). அம்பாறையில் நான்கு வீதமான வாக்குகளே (16,347) நிராகரிக்கப்பட்டன. நாட்டின் சராசரி நிராகரிக்கப்பட்ட வாக்குவீதம் – 6.03%. இலங்கையிலேயே கற்ற சமூகம் என்று "பெருமைகொள் தமிழர்" வாழும் யாழ்ப்பாணத்தில் இத்தனை நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிர்ச்சி தருகின்றது. வாக்களிக்காதோர் தொகை, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இரண்டையும் சேர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் இரண்டு இலட்சம் வாக்குகள் வீணாக்கப்பட்டுள்ளன.

• இலங்கை முழுவதுமான தரவுகளைப் பார்க்கும்போது கூட்டமைப்பு கடந்த முறையைவிட 36.6% குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் தேசிய முன்னணி மூன்றரை மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. EPDPயும் இம்முறை 83.6% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 

• மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சியும் அது 2010  இல் தனித்துப் போட்டியிட்டபோது பெற்றதைவிட இம்முறை மூன்று மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேர்தல் மாவட்டங்கள் அடிப்படையில் பார்த்தால் அதிக இழப்பைச் சந்தித்த தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பே விளங்குகிறது.

• யாழ் மாவட்டதில் கூட்டமைப்பு கடந்த வருடம் பெற்ற வாக்குகளைவிட  45.5% குறைவாகவே பெற்றுள்ளது. இவர்கள் இழந்த வாக்குகளின் பெரும் பகுதியை கூட்டணியும் முன்னணியும் கவர்ந்து கொள்ள, கணிசமான பங்கை அங்கஜனும் பெற்றிருக்கிறார்கள்.

• வன்னியைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு 22.2% வாக்குகளை இழந்துள்ளது. இங்கும் அந்த வாக்குகளை கூட்டணியும் முன்னணியும் பெற்றுள்ளன என்று கூறலாம். இரண்டு கட்சிகளுமே தனித்தனியே 8000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளன.

• திருகோணமலையில் கூட்டமைப்பு 13.8% வாக்குகளை இழந்துள்ளது. அதில் ஒருபகுதியை மட்டுமே த.ம.தே.கூட்டணியும் த.தே.ம.முன்னணியும் பெற்றுள்ளன.

• மட்டக்களப்பில் கூட்டமைப்பு இழந்த வாக்குகள் வீதம் 37.5%. இங்கு கணிசமான வாக்குகளை  கூட்டமைப்பு வளர்த்தெடுத்து மகிந்தவுக்கு வழங்கிய வியாழேந்திரனும் மறுபுறம் சிவநேசதுரை சந்திரகாந்தனும் பெற்று ஆளுக்கொரு ஆசனத்தையும் பெற்றுவிட, சிறு தொகை வாக்குகளை முன்னணியும் கூட்டணியும் பெற்றுள்ளன.

• அம்பாறையைப் பொறுத்தவரை கூட்டமைப்பின் வாக்கிழப்பு 44.4%  ஆகும். இங்கு அந்த வாக்குகளைக் கவர்ந்தது கருணா தலைமை தாங்கிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியாகும். இம்முறை இங்கு போட்டியிட்ட கஜேந்திரகுமாரின் கட்சி மிகச் சொற்ப வாக்குகளையே (283) பெற்றுள்ளது.

வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை அடிப்படையில் பார்க்கும்போது,
• யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்று முதல் ஐந்து இடங்களில் அங்கஜன், ஸ்ரீதரன், டக்ளஸ், கஜேந்திரகுமார் மற்றும் சுமந்திரன் இருந்தபோதிலும் தமது கட்சிக்கு போடப்பட்ட வாக்குகளுள் அதிக வாக்குகளைத் தமக்கான விருப்பு வாக்குகளாக மாற்றியவர்களுள் முதல் ஐந்து இடங்களில் அங்கஜன் (74.7%), டக்ளஸ் (70.2%), விக்னேஸ்வரன் (59.9%), கஜேந்திரகுமார் (57.2%), மற்றும் கஜேந்திரன் (44.8%) ஆகியோரே இருக்கிறார்கள். 

• ஸ்ரீதரன், தனது கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் 31.8 வீதத்தை (35,884) தனக்காக விருப்பு வாக்காக மாற்றியுள்ள வேளை சுமந்திரன் 24.6% வாக்குகளையே (27,834) தனக்கான விருப்பு வாக்காக மாற்ற முடிந்துள்ளது. கடந்த தடவை  ஸ்ரீதரன் 72,058 விருப்பு வாக்குகளையும் சுமந்திரன் 58,043 விருப்பு வாக்குகளையும் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. 

• கடந்த தடவை சுமந்திரனைவிட 700 வாக்குகள் அதிகம் பெற்ற மாவை சேனாதிராஜா இம்முறை 20,358 வாக்குகளை மட்டுமே பெற்று ஐந்தாம் இடத்திற்குப் பின்னடைந்துள்ளார். சித்தார்த்தனும் இம்முறை பின்னடைவு அடைந்திருந்தாலும் சசிகலவைவிட சில நூறு வாக்குகள் அதிகம் பெற்று  ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிட்டார்.

• தேர்தல் களத்திற்கு புதிய வரவான அங்கஜன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளர்களையும் விட அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ள அதேநேரம் கடந்த தேர்தலில் அவர் சார்ந்த கட்சி பெற்ற வாக்குகளையும் இந்தத் தடவை இரு மடங்கு ஆக்கியுள்ளார். 

• டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த முறை அவர் பெற்றதை விட இருமடங்கு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
(தொடரும்...... )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 4
======================================


மாவட்ட மட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் கட்சிகளின் ஆதிக்கமும்
• யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நாம் பகுதி மூன்றில் குறிப்பட்டது போன்று கூட்டமைப்பு பெருமளவு வாக்குகளை இழந்துள்ள நிலையில் த.தே.ம. முன்னணியும் சுதந்திரக்கட்சியும் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளன. அதேபோல EPDP யும் ஐம்பது வீத வாக்கு அதிகரிப்பைப் பெற்றுள்ளது. UNP யும் சஜித்தின் கட்சியும் தனித்தனியாகக் கேட்டதில், கடந்தமுறை பெற்ற 20,000 வாக்குகள் இரண்டு கட்சிகளுக்கும் பிரிந்து சென்றுள்ளன. இம்முறை மகிந்தவின் கூட்டணி இங்கு கேட்காமல் தவிர்த்ததில் சுதந்திரக் கட்சி சுளையாக 49,373 வாக்குகளைப் பெற்றதில் ஒரு ஆசனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

• வன்னி மாவட்டத்தில் இம்முறை EPDP கடந்த முறையைவிட 9,190 வாக்குகள் அதிகம் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. இங்கு த.தே.ம. முன்னணியும் த.ம.தே.கூட்டணியும் தனித்தனியே எட்டாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தாலும் ஒரு ஆசனம் வெல்ல அது போதுமானதாக இருந்திருக்கவில்லை. இந்த இரு கட்சிகளில் ஒன்று புரிந்துணர்வு அடிப்படையில் வன்னியில் போட்டியிடாது மற்றைய கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தால் மாவட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்து ஒரு ஆசனத்தையும் வென்றிருக்கலாம். 

• திருக்கோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றாம் இடத்தையும் EPDP நான்காம் இடத்தையும் பிடிக்க, த.தே.ம. முன்னணி ஐந்தாம் இடத்திலும் த.ம.தே.கூட்டணி எட்டாம் இடத்திலும் உள்ளன. சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தமிழர்கள் உள்ள இந்த மாவட்டத்தில் இப்படியே போட்டியிடும் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் இருக்கும் 4 ஆசனங்களையும் இரண்டு தேசியக் கட்சிகளே பெற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படலாம்.

• மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தரும் அமைப்பாகவே இருந்து வந்துள்ளது. இது தமிழர்கள் 72% ஆக உள்ள மாவட்டமாகும். இருப்பினும் இம்முறை 45,000 வாக்குகளை இவர்கள் இழந்துள்ளார்கள். மகிந்தவின் கட்சியும் (வியாழேந்திரன்) சஜித்தின் கட்சியும் கடந்த தேர்தலில் அவர்கள் முன்பு சார்ந்திருந்த கட்சிகள் பெற்ற வாக்குகளை இம்முறையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் சிறு பின்னடைவுடன் (4,000 வாக்குகள்) தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது.

• அதேநேரம் மட்டக்களப்பில் . 2010 இல் தனித்து போட்டியிட்டு 16,886 வாக்குகள் மட்டும் பெற்றிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை கூட்டமைப்பின் கணிசமான வாக்காளர்களை தம்பக்கம் திருப்பி 67,692 வாக்குகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் த.ம.தே.கூட்டணி எட்டாம் இடத்திலும் த.தே.ம. முன்னணி பத்தாம் இடத்திலும் உள்ளன. இவர்கள் இந்த மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையேனும் பெறுதல் அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை.

• திகமடுல்ல தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவும் திருக்கோணமலையைப் போலவே மூவின மக்களும் வாழும் இடமாகும். அதிலும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் பதினெட்டு வீதம் மட்டுமே இருக்கிறார்கள். இங்கு கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி வலுவான கட்சியாக இருந்திருக்கிறது. ஆனால் இம்முறை கருணா அகில இலங்கை தமிழ் மகசபாவின் கீழ் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்ததில் இம்முறை கூட்டமைப்பு ஆசனம் பெறும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ளது. இங்கு போட்டியிட்ட த.தே.ம முன்னணி 283 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

பொதுவான அவதானிப்புக்கள் 
• என்னதான் தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்துவோர்  டக்ள்ஸ், பிள்ளையான், கருணா ஆகியோரை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என்று வகைப்படுத்தி தூற்றி வந்தாலும் அவர்கள் சில பிரதேசங்களில் மிகவும் செல்வாக்காக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் பெற்ற வாக்குகளும் பாராளுமன்ற ஆசனங்களும் தெரிவிக்கின்றன.

• மக்கள் இம்முறை நூறுவீதம் ஒரு கட்சி அபிமானிகளாகவோ அலது நூறுவீதம் தனிநபரை நம்புவோராகவோ இருந்திருக்கவில்லை. ஒருசாரார் சில கட்சிகளுக்கு விசுவாசமாக வாகளித்துள்ள அதேவேளை, மறுசாரார் வேட்பாளரின் கடந்த காலச் செயற்பாடுகள், அவர்களை சமூகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டும் வாக்களித்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

• மக்கள் முன்புபோல ஒரு கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதில்லை. பலநேரங்களில் குறித்த வேட்பாளர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையிலோ அல்லது மற்றைய வேட்பாளரின் கடந்தகால செயற்பாட்டின்மை காரணமாக ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவோ அல்லது தமது வேலைவாய்ப்புக்காகவோ வாக்களிக்கும் போக்கும் இப்போது காணப்படுகிறது. 

• கடந்த காலங்களில் “உரிமை பெறாமல் மக்களுக்குச் சலுகை பெற்றுத் தரமாட்டோம்” என்று வீரவசனங்கள் பேசிக்கொண்டு தங்கள வசதிகளையையும் பாதுகாப்பையும் பார்த்துக்கொண்ட காலத்தில் அங்கஜன், டக்ளஸ், பிள்ளையான் போன்றோர் அரசிடம் சலுகைகளைப் பெற்று அவற்றில் கொஞ்சம் தாம் சார்ந்த தொகுதி மக்களுக்கும் கொடுத்து நல்ல பெயர் சம்பாதித்துக் கொண்டனர் எனபதுதான் உண்மை.

• சிவநேசதுரை சந்திரகாசனின் கட்சியில் இம்முறை போட்டியிட்டவர்களில் பலர் மட்டக்களப்பில் ஓரளவு செல்வாக்குள்ளவர்கள். அதேநேரம் கடந்த காலங்களில் கிழக்கில் தமிழர்களின் பிரதிநித்துவம் பேணப்படவேண்டும் என்ற பிள்ளையானின் கொள்கையும் குற்றப்பின்னணியை புறக்கணித்து மக்கள் ஆதரவளிக்க ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

• இந்தத் தேர்தலில் இலங்கை முழுவதும் இருந்து நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 8 பெண்களே தேர்வாகியிருக்கிறார்கள். இரத்தினபுரி – 3, கம்பஹா – 2, மாத்தளை, காலி, கேகாலை மாவட்டங்களிலிருந்து முறையே ஒவ்வொரு பெண்களும். வடக்குக் கிழக்கில் இருந்து ஒரு பெண் வேட்பாளர்கூடத் தெரிவு செய்யப்படவில்லை. 

• இலங்கையில் பெண்கள் சனத்தொகை ஆண்களைவிட அதிகமாக இருந்தபோதும் நாமெல்லாம் அம்மா, அக்கா செண்டிமெண்ட்டில் வெளுத்து வாங்கினாலும், அரசியலுக்கு பெண்கள் வருவதை விரும்புவதில்லை; வந்தாலும் வாக்களிக்க மாட்டோம். அது மட்டுமில்லாமல் அவமானப்படுத்தி இழிவுபடுத்தி மறுமுறை அந்தப் பக்கமே வராதபடி செய்து விடுவோம்.

• இம்முறை வடக்கில் சாதியடிப்படியில் ஒரு சுயேட்சைக் குழு தேர்தலில் நின்றுள்ளது. அதேபோல இந்து, கிறிஸ்தவ வாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளனர் என்பது ஆறுதல் தரும் விடயமாகும்.

(தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 5
-------------------------------------------------------------

தேர்தலின் பின்னரான காட்சிகள்
************************************

• தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே (Aug 07), சுமந்திரன் தனது கட்சியின் தலைவரும் செயலாளரும் படுதோல்வி அடைந்து விட்டதாலும் அவர்களின் தவறான நடவடிக்கைகளால் கட்சி பின்னடைந்து விட்டதாலும்  கட்சி மறுசீரமைப்பு விரைவில் செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார். 

• முதல்நாள் சுமந்திரன் கட்சியைச் சீரமைப்போம் என்கிறார். மறுநாள் (Aug 08), ஸ்ரீதரன் தான் தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்கத் தயார் என்று சொல்கிறார். 

• சுமந்திரன் தேர்தலுக்கு ஒருவாரம் முன்னதாக கொடுத்த ஊடக பேட்டி ஒன்றில் கட்சியில் உள்ள வயதானவர்கள் பற்றி “அவர்கள் வயதானவர்கள்....! என்று குறிப்பிட்டு பின்னர் பூடகமாக சிரித்தார். அந்தப் பேட்டியின் பின்னர் ஸ்ரீதரனும் சுமந்திரனும் கட்சியைக் கைப்பற்ற காய் நகர்த்துகிறார்கள் என்று பலர் ஊகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

• ஆனால் மறுபடியும் சுமந்திரன் தானும் சிறிதரனும் கட்சித் தலைமையை கைப்பற்ற முயற்சிக்கவில்லை என்றும் ஊடகங்களே தாங்கள் சொன்னவற்றை திரித்துக் கூறியதாகக் கூறுகிறார். இருந்த போதிலும்  சுமந்திரனும் ஸ்ரீதரனும் அவர்களின் வாயாலேதான் நாம் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் குறிப்பிட்டிருந்தனர் என்பதுதான் உண்மை.

• தேர்தலின் பின்னர் சம்பந்தன் ஐயா, நடந்தது ஜனநாயகத் தேர்தல் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஆளும் கட்சி கிழக்கில் மதுவும் பணமும் கொடுத்து மக்களை திசை திருப்பியதாகக் குற்றம் சொல்கிறார். ஆனால் அவரே பிறிதொரு சமயம் ஆளும் கட்சியுடன் சேர்ந்து செயற்படத் தயார் என்கிறார். இவர்தான் தேர்தலுக்கு முன்னர் “தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிடும்” என்று இதே அரசை மிரட்டியது உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

• அதேநேரம் கூட்டமைப்பு மீது திருகோணமலையிலும் வன்னியிலும் மது வழங்கியதாக ஏனைய தமிழ் கட்சிகள் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்தது இங்கு குறிப்பிடத் தக்கது.

• கூட்டமைப்பு தொடர்பாக தேர்தலுக்குப் பின்னர் இவ்வளவு விடயங்கள் நடந்தபோதும், தேசியப் பட்டியல் ஆசன விடயத்தில் ஆசனம் எதுவும் கிடைக்காத அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி ஒருவாறு சமாளித்து விட்டனர். உண்மையில் கலையரசன் நல்ல ஒரு தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் கடந்த காலங்களில் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் பெரும் பங்களிப்பு செய்த ஒருவர். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

• எனினும் இதன்போது ஏற்பட்ட இழுபறி, முன்னுக்குப் பின்னான விவாதங்கள், சுமந்திரனின் கடந்த கால மற்றும் நிகழ்கால செயற்பாடுகள் தொடர்பாக பல சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன. 

• கூட்டமைப்பின் தோல்விக்கு ஒருபுறம் சுமந்திரன் கட்சித் தலைவரையும் செயலாளரையும் குற்றம் சாட்டும் அதேநேரம் கூட்டமைப்பில் பலர் சுமந்திரனின் அண்மைக்கால நடவடிக்கைகள், பேச்சுக்களே காரணம் என்று பதிலுக்குக் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது சுமந்திரனைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்ற குரல் கட்சிக்குள்ளே முன்னைவிட அதிகம் கேட்கத் தொடங்கியுள்ளது.

• கஜேந்திரகுமார் தனது கட்சிக்குக் கிடைத்த மேலதிக ஆசனத்தை கிழக்குக்கு கொடுத்து தமிழ் தேசியக் கொள்கையில் தனது உறுதியை வெளிப்படுத்துவதோடு கிழக்கு மாகாண மக்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் அவர் தன் தளபதி கஜேந்திரனுக்கே அதை வழங்கியுள்ளார். கஜேந்திரன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

• கஜேந்திரன் நியமனம் இனிவரும் நாட்களில் சர்ச்சையை ஏற்படுத்துமா இல்லையா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே கஜேந்திரன்  ஒரு ஊடக சந்திப்பில் தன்னிடமிருந்த துரோகிகள் பட்டியலை தூசு தட்டி வாசித்திருக்கிறார். தாங்கள் மட்டுமே தூயவர்கள், தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்ல வருகிறார் என்றே நினைக்க வேண்டியுள்ளது.

• கஜேந்திரனின் அறிக்கைப்படி டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் துரோகிகள். சுரேஷ் பிரேமச்சந்திரன் இருப்பதால் விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியும் தள்ளி வைக்கப்படவேண்டிய கட்சி. அதேபோல, சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் இருப்பதால் கூட்டமைப்பும் தள்ளி வைக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தலைப்படுவதாகத் தெரிகிறது. 

• எதிர்பார்த்தபடி த.ம.தே.கூட்டணி, த.தே.ம. முன்னணி ஆகியவற்றுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காததாலும் டக்ளஸ், அங்கஜன் மற்றும் சந்திரகாந்தனுக்கு மக்கள் வழமையைவிட அதிகளவு வாக்களித்ததாலும் பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். த.ம.தே.கூட்டணித் தலைவர் விக்னேஸ்வரன் ஐயாவும் மக்கள் சலுகைகளுக்காக உரிமைகளை மறந்துவிட்டனர் என்று குறைபட்டிருந்தார்.

• தமிழ் அரசியல்வாதிகளின் உட்பூசல்களும் ஆரவாரங்களும் இப்படியிருக்க, தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு பசில் ராஜபக்ஸ தமிழ் தேசிய கூடமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் இல்லையென்று சொல்லத் தலைப்பட்டுள்ளார். 

• நாட்டின் பிரதமரோ வடக்குக் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடத் தனது கட்சியும் தேசியக் கட்சியும் அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதாக பெருமைப்படுகிறார். 

• தமிழ் கட்சிகளோ பத்திரிகைகளில் அறிக்கை விட்டுக் கொண்டும் ஆளாளுக்கு மைக் பிடித்து, ஊடகங்களுக்கு தீனி போட்டுக் கொண்டும் இருக்கின்றன.

 (தொடரும்)
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 6
================================

மூவர் முன்னுள்ள சவால்கள் 
-------------------------------------
தென்னிந்தியாவில் சேர, சோழ, பாண்டியன் ஆகிய மூன்று தமிழ் மன்னர்கள் நீண்டகால வரலாற்றுடன் ஆண்டு வந்தார்கள். இவர்கள் மூவரும் வெவ்வேறு காலங்களில் செல்வாக்கானவர்களாக இருந்தார்கள். அதற்கு ஏற்ப அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நிலப்பரப்புகள் தொடர்ந்தும் மாறிக்கொண்ட இருந்தன. இதற்கு அவர்களிடையே இருந்த அதிகார ஆசையும் யார் பெரியவன் என்ற போட்டியுமே காரணமாக இருந்தது,

மறுபுறத்தில் இவர்களை சுற்றியிருந்த சிற்றரசர்கள் இவர்களுக்கு அடங்கியவர்களாக இருந்தபோதிலும் இவர்கள் பலவீனமாக இருந்த காலங்களில் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த மூவரும் தங்களுக்குள் போரிடுவதை நிறுத்தவேயில்லை. 

அதைபோன்ற ஒரு காட்சிதான் இன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நாங்கள் பார்க்கிறோம்.  அடம்பன் கொடியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலில் இரண்டாகப் பிரிந்து இப்போது மூன்றாகப் பிரிந்து அந்நாள் மூவேந்தர்கள் போலவே முட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மறுபக்கத்தில் மற்றைய கட்சிகள் மெல்ல மெல்ல வளர்கின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன.

இம்முறை நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்த ஆசனங்களை த.தே.ம. முன்னணியும் த.ம.தே.கூட்டணியும் ஆளுக்கொன்றாகக் கைப்பற்றின.

ஆனால் வன்னியில் கூட்டமைப்பு இழந்த ஆசனம் வாக்குகள் பிரிந்ததால் அரசு ஆதரவுக் கட்சிக்குச் சென்று விட்டது.

அதேபோல மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் கூட்டமைப்பு இழந்த வாக்குகள் மற்றைய இரண்டு தமிழ் கட்சிகளுக்கும் போகவில்லை. மாறாக அரசோடு சேர்ந்தியங்கக்கூடிய பிராந்திய தமிழ் கட்சிகளுக்குப் போய்விட்டது. 

கிழக்கு மாகாணத்தில் த.தே.ம. முன்னணியும் த.ம.தே.கூட்டணியும் செல்வாக்குப் பெறவும் ஆசனங்களை வெல்லும் அளவிற்கு வளர்வதற்கும் இன்னும் கொஞ்சக் காலம் பிடிக்கலாம். இந்த முயற்சியின்போது கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் மூன்று கட்சிகளுக்குமிடையில் பிரிவதனால் எந்த ஒரு கட்சிக்கும் ஆசனங்கள் கிடைக்காமல் போகக்கூடிய சூழலும் உருவாகலாம்.

மூன்று தமிழ் கட்சிகளுமே இனிவரும் ஐந்து வருடங்களுக்குள் தம்மை நிரூபிக்கவேண்டிய தேவையுள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய மூன்றுமே வாக்களித்தவற்றுள் முக்கியமான சில விடயங்களையாவது நிறைவேற்ற முயற்சித்தாக வேண்டும். இவற்றுள் கூட்டமைப்புக்குத்தான் கடந்த பத்து வருடங்களாக சொல்லிக் கொள்ளும்படியாக தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் எதுவும் செய்யவில்லை என்ற நெருக்கடி உள்ளது. 

பெரும்பான்மைக் கட்சியின் ராஜதந்திரம்
-------------------------------------------------------
• இம்முறை மகிந்தவின் புதிய கட்சி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து  வடக்கிலும் கிழக்கிலும் தமது சாம, பேத, தான முறைகளைப் பயன்படுத்தி கணிசமான வாக்குகளையும் பெற்று நேரடியாக ஏழு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. தோழமைக் கட்சி மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 

• ஒவ்வொரு பிரதேசத்திலும் தமக்கு சாதகமான விடயங்களை தமது பிரச்சாரத்தில் பயன்படுத்தியதோடு தமிழ் கட்சிகளுக்கு பாதகமான விடயங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தவும் தவறவில்லை.

• தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவு மக்கள் மத்தியில் செல்வாக்காக இருந்த தமிழ் தேசியக் கட்சியும் த.தே.ம. முன்னணியும் த.ம.தே.கூட்டணியும் பிரதான கொள்கையாக தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்வதைப் புரிந்துகொண்ட மகிந்த தரப்பும் அதையே தமது ஆயுதமாக இம்முறை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

• வடக்கில் அங்கஜன் தானும் தமிழ் தேசியத்தை ஏற்பதாகக் கூறியே பிரச்சாரம் செய்தார். கிழக்கில் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான வியாழேந்திரனும் தமிழ் தேசியதிற்காகத்தான் போராடுவதாகக் கூறியிருக்கிறார்.

• இப்படி வடக்கு-கிழக்கில் போட்டியிடும் பெரும்பான்மையினக் கட்சியின் தமிழ் உறுப்பினர்களும் சார்புக் கட்சிகளும் சொல்லிவைத்தது போல தேசியம் பேசுவது உண்மையிலேயே திட்டமிட்டு மக்களைக் குழப்பவும் வாக்குகளைச் சிதறடிக்கவும் செய்யப்பட்ட ஒரு தந்திரமான செயலாகவே பார்க்க வேண்டும்.

• இப்போது எதிரணிகள் பயன்படுத்துவது தந்திரோபாய அரசியல் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தமிழ் தேசியக் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டியுள்ளது. 

• ஆளும் தரப்பு இன்னமும் தங்கள் தந்திரோபாய நடவடிக்கைகளை தொடர்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள், பிரதான தமிழ் கட்சிகளில் நம்பிக்கை இழந்துவிட்டதாக கிழக்கு ஆளுநர் சொன்னதும், இனியும் த.தே. கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் இல்லையென்று பசில் ராஜபக்ச சொன்னதும் மகிந்த ராஜபக்ஸ, வடக்குக் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடத் தனது கூட்டணிக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளதாக சொல்லுவதும் இதன் நீட்சியாகவே தெரிகிறது. 

(தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 7
===================================

கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
--------------------------------------------------------------

எந்த ஒரு தமிழ் கட்சியையோ எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியையோ விமர்சிப்பது எமது நோக்கமல்ல. சில நேரங்களில் அது அவரவர் கட்சி விவகாரம், நாம் மௌனமாக இருப்பது நல்லதென்று நினைக்கின்ற போதிலும்  சில நேரங்களில் மனதை உறுத்தும் விடயங்களைச் சொல்லிவிடுவதே நல்லது.

• கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களிடையே முரண்பாடு ஏற்படும்போதும் கட்சிக்கு சவாலான பிரச்சனைகள் வரும்போதும் அவற்றைத் திறமையாகக் கையாண்டு தீர்க்கும் திறமை கட்சித் தலைமைகளுக்கு இருத்தல் வேண்டும். சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப சரியான முடிவெடுப்பதும் கட்சி சார்ந்தவர்களை அரவணைத்து செல்வதும் தலைமையின் பொறுப்பாகிறது.

• உள்ளகப் பிரச்சனைகள் ஏற்படும் சூழலில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு மேலும் பிரச்சனையை வளர்க்காமல் சுமூகமாக பேசித் தீர்க்கும் வகையிலான தலைமைத்துவமே இன்று தமிழ் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது. இங்கு தலைமைத்துவம் என்பது தலைவருக்கு மட்டும் உரியதன்று. செயற்குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவருக்குமே இந்தத் தலைமைத்துவப் பண்பு அவசியமாகிறது. 

• கட்சிகளிடையே கருத்து பேதம், கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடு ஏற்படுவது வழமை. அப்படிக் கருத்தாடல் ஏற்பட்டால்தான் அது ஜனநாயக முறையில் செயற்படும் கட்சி. மாற்றுக்கருத்தை மறுப்பதும், தலைமையின் கருத்தை அனைவரும் ஏற்க வலியுறுத்துவதும், துரோகிகள் என்று அடையாளப்படுத்துவதும் சில தமிழ் கட்சிகளிடையே கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இது ஆரோக்கியமான அரசியல் பாதை இல்லை என்பதை தமிழ் கட்சிகள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். 

• தமிழ் கட்சிகள் ஒன்றாகச் செயற்படுவது இன்றைய சூழலில் அவசியமாகிறது.  இணங்கிச் செல்லுதல் உங்கள் பலவீனமாகவோ மற்றைய கட்சியிடம் சரணடைவதாகவோ நினைக்க வேண்டியதில்லை. உண்மையில் ஒரே மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடும் கட்சிகள் ஒன்றாக செயற்பட்டால் மட்டுமே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

• பாராளுமன்றம் சென்றால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்று நம்பும், மக்களை நம்ப வைக்கும் அரசியல்வாதிகள்  மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் கட்சியை பொறுப்பெடுத்த பின்னர் 1977, 1989 மற்றும் 1994 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றுவிட்டாலும் 1990 களில் அவர் முன்னெடுத்த தமிழ் தேசிய, விடுதலைப் போராட்ட ஆதரவை அவர் கொல்லப்படும்வரை கைவிடவில்லை. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சென்று தமிழர்களின் விடுதலை முயற்சிகளுக்கு ஆதரவு சேர்த்தார். 

• உண்மையில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க  பாராளுமன்றம் சென்றுதான் அதனைச் செய்யவேண்டும் என்பதில்லை. களத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பயணித்தபடி ஆரம்பிக்கக்கூடிய  எத்தனையோ பணிகள் களத்தில் உள்ளன. இம்முறை பாராளுமன்ற ஆசனம் கிடைக்காதவர்கள் தம்மை முழுமையாக சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்த முடியும். 

• நீங்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கும்போது அவர்கள் உங்களை உறுதியாக நம்புகிறார்கள் அதனால்தான் உங்களை நம்பி வாக்களிக்கிறார்கள், உங்கள் பின்னால் அணி திரள்கிறார்கள் என்பதை என்றும் நினைவில் வைத்துக்  இலட்சியங்களை முன்னிறுத்துங்கள். இலட்சியங்களை அடைந்தபின்னர் அவரவர் இலட்சினைகளைப் பொறித்துக் கொள்ளலாம்.

• நீங்கள் எதிர்காலத்தில் தேர்தலில் வெல்ல சக்கர வியூகம், பத்ம வியூகம் எல்லாம் அமைத்து கஷ்டப்பட வேண்டியதில்லை. மக்களோடு சேர்த்து பயணியுங்கள். மக்களின் உரிமைக்காக போராடும் அதேநேரம் அவர்களின்  அடிப்படைத் தேவைகள் நிறைவேற உங்களால் ஆற்றக்கூடிய பணிகளையும் சமாந்தரமாக முன்னெடுங்கள்.
• கடந்த கால தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எமது நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் சிங்களக் கட்சிகளுடன் நட்பை ஏற்படுத்த வேண்டும்.இக்கருத்தை பல தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மிதவாத மற்றும் உண்மையான இடதுசாரி சிந்தனையாளர்களான அரசியல்வாதிகளுடன் நல்லுறவைப் பேணுவதும் தமிழர்களின் நியாயங்களை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல உதவக்கூடும். 

• தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இன்னமும் பதிவு செய்யப்படாத கட்சிகளாகவே இருப்பதுடன் தமது கூட்டணியில் உள்ள பிரதான கட்சியை மட்டும் பிரபலப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனவா என்று மக்கள் ஊடகங்களில் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இனிவரும் நாட்களில் நேரடியாகவே கேட்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த இரண்டு கூட்டணிக் கட்சிகளும் தம்மை முறைப்படி பதிவு செய்து சரியான பதிலைச் சொல்லுவார்கள் என்று நம்புகிறோம்.

• தேர்தலுக்கு நிதி தேவைப்படும்போது புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் நீங்கள் அதை விடுத்து வடக்குக் கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்ள அவற்றில் முதலிட அதே புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடக்கூடாது? அரசிடம்தான் மக்களுக்குத் தொழில் வாய்ப்பும் சலுகைகளும் கேட்கக்கூடாது. நீங்களே தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் அல்லவா?

• வடக்கிலும் கிழக்கிலும் மண்வளம், நீர்வளம் கூட்ட உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சூழல் மாசடைவதைத் தடுக்கும் வேலைகளைச் செய்ய முடியும். உங்கள் தொண்டர்களைக் கொண்டு மரநடுகை இயக்கம், குளங்கள், கால்வாய்கள் புனரமைப்பு, போன்று பல சமூகப்பணிகளைச் முன்னெடுக்க முடியும்.
(தொடரும்........)

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 8
==============================

உட்கட்சி ஜனநாயகமும் மக்கள் மயப்படுத்தலும்
-----------------------------------------------------------------
உலகில் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும் அனைத்து நாடுகளிலும் இயங்கும் கட்சிகளுக்குள் எவ்வளவு தூரம் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது கேள்விக்குரியதே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கில்லை என்பதே யதார்த்தம். 

தெற்கில் இயங்கும் கட்சிகளாகட்டும், வடக்கு/கிழக்கில் இயங்கும் கட்சிகளாகட்டும், தேசியக் கட்சிகளாகட்டும் அனைத்துமே இந்த விடயத்தில் ஒரேவகையில்தான் இயங்குகின்றன. கட்சியின் தலைவரோ செயலாளரோ இலகுவில் மாற்றப்படுவதில்லை. தேர்தல் தோல்வியின் பின்னர் அதற்குப் பொறுப்பேற்று தலைவர் பதவி விலகுவதுமில்லை. அதுமட்டுமில்லாமல் பல கட்சித் தலைவர்கள் தமது குடும்ப வாரிசை தன்னிடத்தில் இருத்திவிட்டு ஓய்வுபெறவே விரும்புகிறார்கள்.

கடந்த காலங்களில் இதுபற்றி இலங்கை மக்கள் பெரிதாகப் பேசாதபோதும், அண்மைக் காலமாக வெளிப்படையாகவே சில கட்சியின் தலைவர்கள், செயலாளர்கள் பதிவி விலகி திறமையும் தகுதியும் கொண்ட இளையவர்களுக்கு இடம்விட வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இதனை மனதில் கொண்டு இனியாவது ஒவ்வொரு தமிழ் கட்சியும் உட்கட்சி ஜனநாயக முறையை கட்சிக்குள் அறிமுகப்படுத்தி பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

• கட்சிகள் உள்ளக தேர்தல் மூலமே தலைவர், செயலாளர், போன்ற பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்க முயற்சி எடுங்கள். 
 
• அரசியல்வாதிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஆனால் மூத்த அரசியல்வாதிகள் தாமாகவே குறித்த வயதின் பின்னர் தகுதியான இளையவர்களுக்கு பதவிகளிலும் சரி பாராளுமன்றம் செல்வதற்கும் சரி, இடம் கொடுத்து தாம் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களாகவும் ஆலோசகராகவும் செயற்படலாமே?

• இலங்கை சனத்தொகையில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள். பெண்கள் எல்லாத் துறைகளிலும் தமது திறமையை வெளிக்காட்டும் காலம் இது. ஆனால் அரசியலில் தமிழ் பேசும் பெண்களுக்கு மட்டும் பிரகாசிக்க சந்தர்ப்பம் தரப்படுவதில்லை. இனியாவது அனைத்துக் கட்சிகளும் தேர்தலின்போது குறைந்தது நாற்பது வீதமான இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குங்கள். 

• ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அந்த மாவட்டத்திற்கான நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள். அதேபோல பிரதேச மட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் கட்சிகளுக்கான உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்துங்கள். 

• எதிர்காலத்தில், கட்சியின் தலைமையை ஏற்க தகுதி வாய்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் சம சந்தர்ப்பம் கிடைக்கும் சூழலை கட்சி யாப்பின் ஊடாகவும் யாப்பை முறையாகப் பின்பற்றுவதனூடாகவும் உறுதி செய்யுங்கள். 

• மாவட்ட மட்டத்தில் வேட்பாளர்களை அவர்களின் செயற்பாடுகள், களப்பணிகள், மக்கள் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யுங்கள். முடிந்தால் மேற்கு நாடுகளில் செய்வதுபோல வேட்பாளர்களை அந்தந்த மாவட்ட கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தித் தெரிவு செய்யுங்கள். இது எதிர்காலத்தில் சிறந்த ஆளுமையுள்ள, தலைமைத்துவப் பண்புள்ள, மக்களை கவர்ந்திழுக்கும் தன்மையுள்ள தலைவர்கள் உருவாகுவதற்கான சூழ்நிலை உருவாக வழிவகுக்கும். 

• மீண்டும் மீண்டும் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு மேல்த்தட்டு சமூகத்திலிருந்தும் தலைநகரில் இருந்தும் வேட்பாளர்களை இறக்குமதி செய்வதையும், முன்னாள் அரசியல்வாதி அல்லது செல்வாக்கான தலைவரின் மனைவி, பிள்ளைகளை நேரடியாகக் களமிறக்கும் வாரிசு அரசியலை முன்னெடுப்பதையும் தவிர்த்து கட்சிக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கு உரிய சந்தர்ப்பத்தை தலைமை வழங்க வேண்டும். 

சமூக அமைப்புகளின், ஊடகங்களின் பங்கு
----------------------------------------------------------
• போருக்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கையின் கிராமங்களில் பல சமூக இயக்கங்களும் சமூக அமைப்புகளும் மக்களுக்கு சமூக அறிவூட்டல், அரசியல் அறிவூட்டல் என்பவற்றோடு சமூக வேலைத் திட்டங்களில் மக்களை ஈடுபடுத்துவதிலும் ஈடுபட்டன.

• அதன் பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் மற்றும் இடப்பெயர்வுகளுடன் இவ்வாறான அமைப்புகளின் செயற்பாடுகள் குன்றிப் போக, மக்கள் தகவல்களைப் பதிப்பு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் தங்கியிருந்தனர். ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவற்றை விடவும் சமூக வலைத்தள ஊடகங்கள் மக்களின் தகவல் ஊடாட்டங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

• ஆனால் துரதிஷ்டவசமாக சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் பக்கச் சார்பாகவும் தவறான தகவல் வழங்குபவையாகவுமே இருக்கின்றன. இதற்கு உள்ள ஒரே தீர்வு, பக்கச் சார்பற்ற சமூக அமைப்புகள் மீண்டும் மக்களுக்கு அறிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதேபோல அரசியல் கட்சிகள் பொது தளத்தில் ஒன்றிணைவதற்கான அழுத்தத்தையும் இந்த அமைப்புகள் கொடுக்க வேண்டும்.

• இப்போதுள்ள அனுபவமும் திறனுமுள்ள ஊடகவியலாளர்கள் பலரும் உதிரிகளாகவே செயற்படுகிறார்கள். அவ்வாறு இல்லாது சமூக அக்கறையுள்ள ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான அழுத்தக் குழுக்களாகவும் மக்களை அறிவூட்டும் அமைப்பாகவும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

(தொடரும்........)

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 9 (இறுதிப் பகுதி)
================================

மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை
----------------------------------------------------

• சலுகைகள், வேலைவாய்ப்புகளுக்காக அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாதீர்கள். பெரும்பாலான வேலைவாய்ப்புகள் அரசினால் வழங்கப்படுகின்றனவேயன்றி உங்கள் பிரதேச அரசியல்வாதி உங்களுக்காக வேலைகளை உருவாக்கி உங்களுக்கு உதவுவதில்லை என்பதை புரிந்து செயற்படுங்கள். உங்கள் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் அவ்வாறே முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

• ஒரு அரசியல் தலைவர் உண்மையாகவே சேவை மனப்பான்மை உள்ளவர், நேர்மையானவர் என்றால் கொள்கையடிப்படையில் அவருக்கு ஆதரவு வழங்குவதில் தவறில்லை. அதேநேரம் தனிநபர் வழிபாடு, கண்மூடித்தனமான விசுவாசம் போன்றன ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டே அரசியல் ஆதரவாளராக செயற்படுங்கள்.

• ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ செயற்படுவதற்காக ஏனைய கட்சி ஆட்களை வசைபாடுவதும், இழிவுபடுத்திக் கதைப்பதும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதும் அவசியமற்றது. பலநேரங்களில் இவ்வாறு எதிர்த்தரப்பை விமர்சிப்பது எதிர் தரப்புக்கு ஒருவகையில் விளம்பரம்தான் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

• பெண்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிப்பதில்  மக்களின் பங்கும் இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு வழங்குவதை விடவும் அவமானப்படுத்தியும் இழிவுபடுத்தியும் அரசியலில் இருந்து அவர்களை துரத்தியடிக்காமல் இருப்பது எம்மால் செய்யக்கூடிய முதல் பங்களிப்பாகும். 

• உங்கள் பிரதேசத்தில் உள்ள ஆளுமையுள்ள, அரசியல் ஆர்வமுள்ள, அதேநேரம் தகுதி வாய்ந்த பெண்கள் அரசியலுக்கு வருவதை ஊகுவிப்பவர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள், மாறாக அவர்களை ஒடுக்க நினைக்காதீர்கள்.  

புலம்பெயர் சமூகத்தின் கவனத்திற்கு !
---------------------------------------------------
• இலங்கையிலிருந்து 30 – 40  வருடங்களுக்கு முன்னரே இடம்பெயர்ந்தாலும் எண்பதுகளின் பிற்பகுதிகளிலிருந்தே இலங்கைத் தமிழர்களில் சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் புலம்பெயர் சமூகம் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்திருக்கிறது. 

• இலங்கை மக்கள் போரினால் பாதிக்கப்பட்டபோதும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டபோதும் கேட்குமுன்பே தனது உதவிக்கரத்தை நீட்டியதும் இந்த புலம்பெயர் சமூகம்தான். அதனாலேயே தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவின் பின்னரும் அங்குள்ள பல குடும்பங்கள் தலை நிமிர்ந்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

• ஆனால் அதனாலேயே புலம்பெயர் சமூகத்தின் ஒருசாரார் இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அபிப்பிராயங்கள், முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. அண்மையில் நடந்த தேர்தலின் முன்பும் பின்பும் புலம்பெயர் தமிழர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்தக் கேள்விக்கு வலுச் சேர்க்கின்றனவாக இருக்கின்றன.

• தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010 இல் முதல்முறையாகப் பிளவடைந்தபோதும், பின்னர் 2018 இல் இரண்டாம் முறை பிளவடைந்தபோதும் புலம்பெயர் சமூகமும் அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் அணிகளாக பிளவடைந்து நின்றது. 

• ஒருவகையில், இவ்வாறாக புலம்பெயர் சமூகம் பிளவடைந்த அணிகள்  சார்பான ஆதரவு நிலையெடுத்ததும் கட்சியை வளர்க்க நிதியுதவிகளையும் செய்யத் தலைப்பட்டதும், கருத்து முரண்பாடுகளால் பிரிந்து வந்தவர்கள் தனியே சென்று கட்சியொன்றை உருவாக்கும் முயற்சிக்கு வலுச் சேர்த்தது என்பததை யாரும் மறுக்க முடியாது.  

• உண்மையில் தமிழர்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு அரசியல் நடவடிக்கைகள்தான் இன்றுள்ள நிலையில் சாத்தியமான பாதை என்று முடிவுக்கு வந்திருந்தால் புலம்பெயர் சமூகம் கட்சிகள் பிளவுபடுவதை தடுக்கும் சக்தியாகப் புலம்பெயர் சமூகக் கட்டமைப்புகள் தொழிற்பட்டிருக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது புலம் பெயர் சமூகம் சிறுசிறு வேறுபாடுகளை மறந்து ஓரணியாக செயற்பட முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

• இவ்வாறு புலம்பெயர் சமூகம் அணிகளாகப் பிரிந்து நிற்பதற்கு தமிழர்கள் வாழும் தேசங்களில் இயங்கும் பல தமிழ் ஊடகங்களும் வழிசமைக்கும் வகையில்தான் தொழிற்படுகின்றன. புலம்பெயர் தேசத்து தமிழ் ஊடகங்கள் சில நேரடியாகவே ஒரு அணியை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்கின்றன. 

• இவை ஒருபுறம் இருக்க, புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் நடந்துகொள்ளும் விதமும் ஆரோக்கியமானதல்ல. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் பலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தொடர்ச்சியாக அங்குள்ள தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள். உண்மைகள் சிலர் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

• தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் தாம் எதிர்பார்த்த அணி வெல்லாத சூழலில் குறித்த சில பிரதேச மக்களைக் குறிவைத்து  இழிவுபடுத்தும் வகையில் சிலர் சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை மட்டுமல்ல, இது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

• இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கிடையே ஏற்கனவே பிரதே அடிப்படையிலும் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் இடைவெளிகள் இருக்கும் நிலையில், மேலும் இடைவெளிகளை அதிகரிக்கும் வகையில் புலம் பெயர் தமிழர்கள் எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றும் வகையில் செயற்படக்கூடாது.

முற்றும் !
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.