Jump to content

எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.!

1467283555-8887.jpg

தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு?

"19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை ஹாரிங்டனிடம் ஒப்படைக்க, அவர் அதை அப்போது சென்னை மாகாண வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த எல்லீஸிடம் ஓப்படைக்க அப்படி நமக்குக் கிடைத்த நூல்தான் திருக்குறள்.

இன்று நாம் தமிழர்களின் அடையாளமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிலப்பதிகாரத்துக்காக `தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்படும் உ.வே.சா நடக்காத நடை இல்லை. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக `ஓலைச்சுவடிகள் திருட்டு’, `ஆன்லைனில் விற்பனை’ என இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகும் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

குறிப்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன், `தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு இணைந்து 2010-ம் ஆண்டில் நடத்திய ஓலைச்சுவடி சேகரிப்பையொட்டி ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் உலாவருகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளையின்மீது பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. வெளிநாட்டு முகவரிகளிலும், ராஜஸ்தான் போன்ற வெளி மாநில முகவரியிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் விற்கப்படுவதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு இது சர்ச்சையாக வெடிக்கக் காரணம். இதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஓலைச்சுவடிகள் குறித்த சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

காகிதங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, ஒவ்வோர் இனமும் தங்களிடமிருக்கும் மருத்துவம், இலக்கியம், இலக்கணம், ஜோதிடம், கட்டடக்கலை, கணிதம், வானியல் போன்ற அரிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்த சில வழிமுறைகளைக் கண்டறிந்தன. பாறைகளில், கற்களில் எழுதிவைப்பது, களிமண் சிலேட்டில் எழுதிவைப்பது, ஓலைச்சுவடிகளில் எழுதிவைப்பது எனப் பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தபட்டுவந்த நிலையில், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான மற்றும் நவீனமான ஒரு வழிமுறைதான் ஓலைச்சுவடிகளில் தகவல்களை பத்திரப்படுத்துவது.

குறிப்பாக இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் இப்படி ஓலைச்சுவடியில் எழுதிவைத்து, தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் இருந்துள்ளது. கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரை இந்தமுறை கடைப்பிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஓலைச்சுவடிகளில் தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. காரணம், அன்று தமிழர்களிடம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் இலக்கியப் படைப்புகளும் இருந்துள்ளன. இன்று `உலகப் பொதுமறை’ எனப் போற்றப்படும் திருக்குறள், சிலப்பதிகாரம் முதல் அனைத்து நூல்களும் நமக்கு ஓலைச்சுவடிகளின் வாயிலாகத்தான் கிடைத்திருக்கின்றன.

தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்து உ.வே.சா., சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு போன்ற அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் நூல்களை அச்சிட்டு, புதிப்பித்து பாதுகாத்தார். அப்படி அவர் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின், கையெழுத்தேடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம்.

அவருடைய சேகரிப்புகளெல்லாம் சென்னை உ.வே.சாமிநாதய்யர் பொது நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அதேபோல, காலின் மெக்கன்ஸி, லேடன், சி.பி.பிரௌன் ஆகிய வெளிநாட்டினரின் சேகரிப்புகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளன. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளைக் கொண்ட 72,748 சுவடிக் கட்டுகளும் உள்ளன. இவற்றில் அனைத்து மொழிச் சுவடிகளும் அடக்கம்.

அடுத்ததாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிச் சுவடிகளையும் சேர்த்து, கிட்டத்தட்ட 8,000 ஓலைச்சுவடிகள் சேகரித்துவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல மொழிகளில் எழுதப்பட்ட 39,000 ஓலைச்சுவடிகள், 69,000 புத்தகங்களுடன் தஞ்சை சரஸ்வதி மகால் இயங்கிவருகிறது.

இங்கு மட்டுமல்ல, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் எனத் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்ச்சுவடிகள் மட்டும், தோராயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுவடிகள் தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கிறார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி. ஆனால், தமிழ் மக்களிடம் இன்னும் சேகரிக்கப்படாத பல்லாயிரக்கணக்கான சுவடிகள் இருப்பதாகவும் ஓலைச்சுவடிகள் சேகரிப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு சில தமிழ் ஆர்வலர்களைத் தவிர, தொன்மை வாய்ந்த ஓலைச்சுவடிகள் குறித்து தமிழர்களிடம் எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்துவருகிறது. ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. தஞ்சை சரஸ்வதி மகாலில், ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் உருவாக்கப்பட்ட, முதலாம் வேத ஆகமம் எனும் நூல் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களால் திருடப்பட்டது. அது 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது.

இந்தநிலையில்தான் தமிழ் ஓலைச்சுவடிகள் ஆன் லைனில் விற்பனை செய்யப்படும் தகவல்கள் வெளியாகி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு.?

பழங்கால ஓலைச் சுவடிகளை மீட்பதற்காக, 'நேஷனல் மிஷன் ஃபார் மேனுஸ்கிரிப்ட்ஸ்' (National Mission for Manuscripts (NAMAMI)) எனும் அமைப்பை கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது இந்திய அரசாங்கம். பழங்கால ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து, அவற்றைச் சேகரித்து, பாதுகாப்பதே இந்த அமைப்பின் பணி. அதன்படி தமிழகத்தில், சென்னை அண்ணா சாலையிலுள்ள பொது நூலக இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் பொது மக்களிடமிருக்கும் ஓலைச்சுவடிகள் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தத் தகவல்களை, பொது நூலக இயக்கத்திடமிருந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பெற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

அவர்களுடன் `தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு, `திரட்டப்பட்ட சுவடிகளை மின்னாக்கம் செய்துதருகிறோம்’ எனச் சேர்ந்துகொண்டது. அதன்படி, `தமிழகம் முழுவதும், கிட்டத்தட்ட 86,257 ஓலைகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மருத்துவம், இலக்கியம், கதைகள், ஓவியங்கள், இலக்கண நூல்கள், ஆன்மிக நூல்கள் உள்ளிட்ட பலவகைப்பட்ட அரிய தகவல்களை உடைய ஓலைச்சுவடிகள் அடக்கம். அவற்றில், மாவட்டவாரியாக எவ்வளவு ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன’ என்பதுவரை தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன.

இந்த ஓலைச்சுவடிகள் எங்கே என்பது குறித்துதான் கடந்த சில நாள்களாக சர்ச்சைகள் வெடித்தன.

"சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் எதுவும் எங்களிடம் இல்லை. அனைத்தும் பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்தில் அவ்வப்போது ஒப்படைக்கப்பட்டுவிட்டன’’ என்று தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை... இந்தநிலையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக, கடந்த ஒன்றாம் தேதி, அறிக்கை ஒன்று வெளியானது. அதில், `சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் அனைத்தும் எங்களிடம்தான் இருக்கின்றன’ எனத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

DTT8VsNX4AECMTj.jpg

தொடர்ந்து நாம் நேரடியாக பல்கலைக்கழகத்துச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது `சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு இன்னும் நம்பர் போடவில்லை. அதனால், அந்தச் சுவடிகளை மட்டும் தனியாக பிரித்துக் காட்ட இயலாது. மொத்தமாக வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்’ என ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி கூறினார். தொடர்ந்து நாம் மொத்தமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

 பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர், கோவை மணியிடம் பேசினோம்,

"ஓலைச்சுவடிகள் சேகரிப்பு இரண்டுகட்டமாக நடைபெற்றது. அதில் முதன்முறை தேடும்போது நானும் சென்றிருந்தேன். அப்போது நான்தான் நேரடியாக ஓலைச்சுவடிகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவது முறை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவர் சென்றார். தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் இந்தப் பணியில் அமர்த்தப்பட்ட, அண்ணாமலை சுகுமாரன்தான் சேகரித்தார். அவர் பட்டியல் கொடுத்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் எங்களிடம்தான் இருக்கின்றன.

தேவையற்ற சர்ச்சைகளில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தின் பெயர் அடிபடவும்தான் நாங்கள் அறிக்கை கொடுத்தோம். ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நாலடியார், சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி போன்ற நூல்களெல்லாம் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

அப்போது சேகரிப்பட்ட சுவடிகளில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்பது குறித்து நாங்கள் இன்னும் பார்க்கவே இல்லை. அதற்குள்ளாகவே அவர்கள் எப்படி அப்படிப் பதிவு செய்யலாம். ஒருவேளை அந்த நூல்களெல்லாம் அவர்களுக்குக் கிடைத்திருந்தால், அவை எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர்கள் பதிவு செய்திருப்பது குறித்து நாங்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவிருக்கிறோம். கண்டிப்பாக அதன்மீது நடவடிக்கை எடுப்போம்.

தவிர, ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணி என்பது சாதாரணமானது அல்ல. பல அடுக்கு வேலைகளுக்குப் பிறகு கடைசிக் கட்டமாகத்தான் அது நடைபெறும். எங்களிடம் ஆள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாகச் செய்ய முடியவில்லை. இது தெரியாமல்தான் பலர் `பல்கலைக்கழகம் எதுவும் செய்யவில்லை’ என அவதூறு பரப்புகின்றனர்’’ என்றார் கோபமாக.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக, இந்த ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை சுகுமாரனிடம் பேசினோம்.

``இரண்டு கட்டமாக ஓலைச்சுவடிகள் தேடும் பணி நடைபெற்றது. முதற்கட்ட சேகரிப்பில் பல்கலைக்கழகத்தின் சார்பில் வந்திருந்த கோவை மணிதான் சுவடிகளைப் பெற்றுக்கொண்டார். இரண்டாம்கட்ட ஓலைச்சுவடிகள் தேடுதல் பணியின்போது அவர் வரவில்லை. நான்தான் அப்போது சேகரித்தேன். அப்போது சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை, `திருப்பித்தர வேண்டியவை’, `திருப்பித் தர வேண்டாதவை’ என இரண்டாகப் பிரித்து பல்கலைக்கழகத்தில் ஒப்ப்டைத்துவிட்டேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் இன்னும் சுவடிகளைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. நான் சேகரித்த சுவடிகளில் என்ன இருக்கிறது என்றுகூட எனக்கு இன்னும் தெரியாது. சுவடிகளைக் கேட்டு பலர் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்கள். அதன் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு பலமுறை நடந்தேன். ஆனால், எந்தப் பயனுமில்லை. இதன் காரணமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்.

இந்தநிலையில், கடந்த வாரம் பல்கலைக்கழக துணைவேந்தர் அழைத்து, `திருப்பித் தர வேண்டியவர்களிடம் ஒப்ப்டைத்துவிடலாம்’ என்றார். இவ்வளவு காலம் நான் கேட்டபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில நாள்களாக இந்த விஷயம் சர்ச்சையான பிறகுதான் கண்டுகொள்கிறார்கள். சுவடியில் என்ன இருந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது... சுபாஷினி, அவரின் இணையதளத்தில் ஏன் அப்படிப் பதிவு செய்தார் என எனக்குத் தெரியவில்லை’’ என்கிறார் சந்தேகத்தோடு.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓலைச்சுவடிகளைச் சேகரித்த அண்ணாமலை சுகுமாரன் மற்றும் ஓலைச்சுவடிகள் துறைத்தலைவர் கோவை மணி இருவருமே சுவடிகளில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை எனச் சொல்லும்போது, இன்னின்ன நூல்கள் கண்டறியப்பட்டன என எதன் அடிப்படையில் அறக்கட்டளையின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி, 1995 முதல் தற்போது வரை ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் பணியைச் செய்துவருவதாக ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார். 75 ஆண்டுகால பழங்காலப் பொருள்களை எடுத்துச் செல்வது அல்லது பிரதியெடுப்பது சட்டப்படி தவறு. இதற்கு அவர் யாரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்... இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன... ஆன் லைனில் விற்பனை செய்யப்படும் ஓலைச்சுவடிகள் குறித்து சுபாஷினியின் பார்வை என்ன... ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்கு குறித்து தொடர்ச்சியாகப் பேசியும், டென்மார்க்கிலுள்ள அவரின் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்ததாகவும் கூறிவரும் சுபாஷினி, அவரால் அச்சடிக்கப்பட்ட முதல் வேக ஆகமம், தஞ்சை சரஸ்வதி மகாலிலிருந்து ஜெர்மானியர்களால் திருடப்பட்டது குறித்து என்ன பதில் தரப்போகிறார்... தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிதான் என்ன... அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது.?

17862315_1948589798717741_35557866692917

தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினியின் முன் கேள்விகளை வைத்தோம்.

``சிலப்பதிகாரம், நாலடியார் போன்ற நூல்கள் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக உங்கள் வலைப் பக்கத்தில் உள்ளது. பல்கலைக்கழகம் இதை மறுக்கிறது. அது குறித்து உங்கள் பதில் என்ன?’’

'``பல்கலைக்கழகத்தோடு இணைந்து களப்பணி ஆற்றிய நேரத்தில் அண்ணாமலை சுகுமாரன் உடனுக்குடன் கொடுத்த மின்னஞ்சல் தகவல்களைத் தொகுத்து நாங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை இணைய பக்கத்தில் பதிவேற்றினோம். அந்த மின்னஞ்சல் தகவல்களில் சிலப்பதிகாரம், நாலடியார் ஆகிய சுவடிப் படிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.’’

``அண்ணாமலை சுகுமாரன், தான் கொடுத்ததில் என்ன இருந்தது என்றே தனக்குத் தெரியாது என்கிறாரே..?’’

(பதில் இல்லை) முதல் கேள்விக்கு சொன்ன பதில்தான் என்றார்.

''1995 முதல் தற்போது வரை ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் பணியைச் செய்துவருவதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். சட்டப்படி இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்... இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன?’’

``1995-ம் ஆண்டு நான் ஓலைச்சுவடி சேகரிக்க ஆரம்பித்தேன் என்று ஏதாவது ஒரு பத்திரிகையில் நான் பேட்டி அளித்தேன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. ஏனெனில், 1998-ம் ஆண்டு வரை நான் எனது ஆரம்பநிலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டம். 2001-ம் ஆண்டுதான் `தமிழ் மரபு அறக்கட்டளை’ என்ற ஓர் அமைப்பையே தொடங்குகிறோம். நான் கூறியதாகச் சொல்லப்படும் அந்த அவதூறுச் செய்தியில் உண்மையில்லை.''

உங்களின் வலைப்பக்கத்தில் நீங்கள் பதிந்திருக்கும் ஒரு பத்திரிக்கைச் செய்தியில்தான் (குறிப்பிட்ட ஆதாரத்தைக் காட்டி) நீங்கள் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்...’’

''நீங்கள் அனுப்பிய பக்கத்தை இப்போது முழுமையாக வாசித்தேன். அது ஒரு மிக நீண்ட பேட்டி. அதனால் நிறைய சுருக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். அப்படி சுருக்கப்பட்டதில் தகவல் பிழைகளோடு சில கருத்து பிழைகளும் ஆங்காங்கே தெரிகின்றன. பத்திரிகையின் பக்க இடம் கருதி சுருக்கப்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். அதே நேரத்தில், மிக முக்கியமான தகவல் பிழை ஒன்றை உறுதியாகச் சுட்டிக்காட்ட வேண்டும். `தோராயமா ஒரு லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டது, இங்கே இரண்டு லட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது நிச்சயமான பிழை.

அதுமட்டுமன்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெயரும் விடுபட்டுள்ளது. மேலும், இனிமேல்தான் பல்கலைக்கழகம் மின்னாக்கத்தைத் தொடங்க உள்ளது என்ற பல்கலைக்கழகத்தின் அறிக்கை செய்தியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.''

''இதுவரை எவ்வளவு ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்திருக்கிறீர்கள்?''

''311 சமணச் சுவடி, ஓலைகள் கொண்ட சுவடிகள் - நஞ்சு முறிவு, அடிமை ஓலைகள் ஆகியவை தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டவை.

ஐரோப்பாவில் : கோப்பன்ஹாகன் மின்னாக்கத் திட்டம்; பிரான்ஸ் நூலகம், ஜெர்மனி ஹாலே ஓலைச்சுவடி ஆய்வுத்திட்டம் ஆகியவை வெளிநாடுகளில் மின்னாக்கம் செய்யப்பட்டவை.''

''தமிழகத்தில் சமணச்சுவடிகள் உள்ளிட்ட சுவடிகளை மின்னாக்கம் செய்வதற்கான அனுமதியை யாரிடம் வாங்கினீர்கள்?''

''ஓலைச்சுவடிகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தனிநபர்களின் ஜோதிடக் கணிப்பு மற்றும் குடும்ப விவரங்கள் அல்லது கோயில்களின் விவரங்கள். இவற்றையெல்லாம் அத்தகைய சுவடிகளை வைத்திருப்போர் பெரும்பாலும் யாருக்கும் காண்பிக்க மாட்டார்கள். இரண்டாவது வகை, படியெடுக்கப்பட்ட நூல்கள்... அதாவது சுவடிகள்.

அப்படி, தனிநபர் பாதுகாக்கும் ஓலைச்சுவடிகள், அதாவது இன்று நம்மிடம் புத்தகங்கள் எப்படி தனிநபர் சேகரிப்பில் உள்ளனவோ அப்படிச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓலைச்சுவடிகள் பலரது இல்லங்களில் பாதுகாக்கப்பட்டன. எனவே, தனிநபர் பாதுகாப்பிலுள்ள ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து, அவை உடைந்து அழிவதற்கு முன்னர் மின் படிவமாகப் பாதுகாக்க முயற்சி எடுக்கும்போது அதற்கு உரிமையாளரின் அனுமதி இருந்தால் போதும்.''

''தமிழ் மரபு அறக்கட்டளையின் பணி என்ன... அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது?''

''தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு தன்னார்வ அமைப்பு. பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் `தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும்’ என்ற எண்ணத்தோடு தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், தங்களது சொந்தச் செலவில் இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். இணையத்திலேயே அதிகமாக நாங்கள் இயங்குவதால் பெரிய செலவு எங்களுக்கு இல்லை. இத்தகைய பணிகளுக்கு தன்னார்வலர்களின் உழைப்பும் திறனும் மட்டுமே தேவைப்படுகின்றன.

இந்த அமைப்போடு இயங்குபவர்கள் பெரும்பாலும் நல்ல வேலையில் உள்ளவர்கள். உயர் ஊதியம் பெறுபவர்களாகவே இருக்கிறோம். எனவே, நிகழ்ச்சிகளுக்குத் தேவையான செலவினங்களை எங்களுடைய பங்களிப்பின் மூலமே நாங்கள் ஈடுகட்டிக்கொள்கிறோம்.

கல்வெட்டுப் பயிற்சிகள் மற்றும் மரபு பயணங்களில் பங்கெடுப்பவர்களுடைய செலவை ஈடுகட்டிக்கொள்ளும் வகையில் சிறிய தொகை வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகையும் அவர்களுக்கே செலவிடப்படுகிறது. இவற்றில் பங்கெடுக்கும் எளிய மாணவர்களுக்கு இலவசமாகவே அந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.''

தமிழ் ஓலைச்சுவடிகள் இணையத்தில் விற்கப்படுவது குறித்துத் தெரியுமா, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''தமிழ் ஓலைச்சுவடிகள் இணையத்தில் விற்கப்படுவதைப் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளைமீது சில அவதூறுச் செய்திகள் வந்ததற்குப் பின்னால்தான் நாங்களும் இணையத்தில் தேடிப்பார்த்தோம். இது அனைவருக்கும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் செய்திதான். அவ்வாறு, ஒருவேளை ஓலைச்சுவடிகள் ஏதும் தவறான முறையில் யாராலும் விற்கப்படுகிறதென்றால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் அரசுக்கு உள்ளது. ஏனென்றால் இது தமிழ் மரபு பாதுகாப்பு சார்ந்த ஒன்று.''

'' ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் அச்சடிக்கப்பட்ட முதல் வேக ஆகமம், தஞ்சை சரஸ்வதி மகாலில் ஜெர்மானியர்களால் திருடப்பட்ட விஷயத்தில் உங்களைத் தொடர்புபடுத்தி வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஜெர்மானியர்கள் என்பதற்காகவே என்னுடன் தொடர்புபடுத்துவது எப்படிச் சரி... இந்த விஷயம் குறித்தே நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.''

''சமூக வலைதளங்களில் உங்கள் அறக்கட்டளை மீதும், உங்களின் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழிக்கு தமிழர்கள் என்ற முறையில் சிறு அளவிலாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முனைப்பை தவிர வேறு எந்த நோக்கமும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு இல்லை. `அவதூறு பரப்புவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முடிவு செய்தோம். இது தொடர்பாக தமிழக காவல்துறையிடம் ஏற்கெனவே புகாரும் அளித்திருக்கிறோம். ஓலைச்சுவடி மின்னாக்கம் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள் குறித்தும் ஒரு திறந்த விசாரணையை உரிய துறையினர் நடத்த வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம். அப்படியாவது உண்மை வெளிச்சம் பெறும் என்று நம்புகிறோம்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது... தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைத் தொடர்புகொண்டோம். ``பிறகு பேசுகிறேன்’’ என்றவர் மறுமுறை அழைத்தபோது அழைப்பை எடுக்கவில்லை.

நன்றி

ஜீனியர் விகடன்

https://www.vikatan.com/news/controversy/controversy-over-the-theft-of-tamil-manuscripts

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.