Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஓகஸ்ட் 16

தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல. 

தமிழ் மக்கள் எக்குரலுக்கும் வஞ்சனை செய்யாமல் அனைவரையும் நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். இது முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் வரவேற்புக்குரியதா இல்லையா என்பதை அடுத்துவரும் 5 ஆண்டுகள் தீர்மானிக்கும். அம்பாறையில் கருணா (விநாயகமூர்த்தி முரளிதரன்) வென்றிருந்தால் தமிழ் மக்களது  நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ வரிசை முழுமையடைந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஆனாலும் இம்முறை நாடாளுமன்றில் களம் காணும் தமிழ்ப் பிரதிநிதிகளைப் பார்த்தால் அதன் பன்மைத்துவம் விளங்கும். சம்பந்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்), சித்தார்த்தன், அங்கஜன் மற்றம் வியாழேந்திரன். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அரசியல் செல்நெறியில் பயணிப்பவர்கள். ஒவ்வொரு குரலில் பேசுபவர்கள். இந்தப் பன்மைத்துவம் வரவேற்கப்பட வேண்டியதா என்ற வினா பலர் மனதில் உண்டு. மொத்தமாக அனுப்பி எதைக் கண்டோம் என்ற பதில் கேள்வியும் எழாமல் இல்லை. 

இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கியுள்ள முடிவை அனைவரும் ஏற்றாக வேண்டும். தமிழ்த்தேசியவாதிகள் இந்த முடிவை ஏற்பதாகத் தெரியவில்லை. ஒரே குரலில் பேசிப் பழகிப் போனவர்களுக்கு மக்களின் தெரிவுகள் சங்கடமானவை. தமிழ்த்தேசியத்தை உரத்துப் பிடிப்போரே மூன்று அணிகளாக இருக்கிறார்கள். அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்ய விரும்புபவர்களும் மூன்று அணிகளாக இருக்கின்றார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் தங்கள் அரசியல் சாய்வை சிக்கலின்றி எட்டுவதற்கு இந்தப் பன்மைத்துவம் பயனுள்ளதாக இருக்கும். 

வெறும் ‘கோஷ’ அரசியல் பலன் தராது என்பதை வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிடும் கட்சிகள் இப்போது உணர்ந்திருக்கும். அது முக்கியமானதொரு செய்தி. ‘சோறா... சுதந்திரமா’ போன்ற உப்புச்சப்பற்ற கேள்விகளைத் தின்றது செமியாமல் கருத்துரைப்பவர்கள், புலம்பெயர்ந்த கருத்துரிமைக் கந்தசாமிகள் கேட்டுக் கொள்ளட்டும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மக்கள் பதிலை அளித்துள்ளார்கள். 

தமிழ் மக்களது தெரிவுகளுக்குப் பின்னால் ஆழமான ஆராயப்பட வேண்டிய காரணிகள் உள்ளன. அது கஜேந்திரகுமார் அணிக்கும், விக்னேஸ்வரன் அணிக்கும் கிடைத்த ஆசனங்களும் அல்லது பிள்ளையான், அங்கஜன், டக்ளஸ், வியாழேந்திரன் ஆகியோருக்குக் கிடைத்த ஆசனங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இதில் கஜேந்திரகுமாருக்கும் விக்னேஸ்வரனுக்கும் கிடைத்த ஆசனங்களை தமிழ்த்தேசியத்துக்கு கிடைத்த ஆசனங்கள் என்றோ மறுபுறம் அரசு சார்பானவர்களுக்குக் கிடைத்த வாக்குகளை அபிவிருத்திக்குக் கிடைத்த வாக்குகள் என்றோ ஒற்றைப்பரிமாணத்தில் விளங்கிக் கொள்ளக் கூடாது.

தமிழ்த் தேசியவாதம் என்பது தமிழர் விடுதலையை வென்றெடுக்கச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக பாதகமான செயற்பாடுகளையே முன்னிறுத்தி வளர்ந்து வந்துள்ளது. தமிழ் மக்களின் வெகுஜன பங்களிப்பைத் தொடர்ச்சியாக மறுத்து தலைவன்-தொண்டன் அரசியலை முன்னிறுத்தியது இதன் பகுதியே. 

ஒடுக்கும் பெரும் தேசியவாதத்தையும் ஒடுக்கப்படும் மக்களது தேசியவாதத்தையும் ஒரே நிலையில் வைத்து நோக்கவியலாது. ஆனால், ஒடுக்கும் பேரினவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு தேசியவாதத்தின் குறுகிய எல்லைகளைக் கொண்ட போராட்டத்தினால் இயலாது என்பதை தமிழர்கள் இப்போதாவது உணர வேண்டும். தேசியவாதத்துக்கு இருக்கும் எல்லைகளையும் அதனால் எந்தளவு தூரத்துக்குச் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக்கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதை தூர நோக்குடன் கண்டு கொள்வது தேவையாகின்றது. இதற்கான வாய்ப்பை இந்தத் தேர்தல் முடிவுகள் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கியுள்ளது. 

மூன்று அடிப்படையான வினாக்களை இங்கு எழுப்புதல் தகும். எதிர்வரும் நாடாளுமன்றில் அமரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசப் போவதில்லை. அதில் இன்னும் அதிவிஷேசமாக ஒரே கொள்கையுடையவர்களும் ஒரே குரலில் பேசப்போவதில்லை. 

அடிப்படையில் இம்முறை நாடாளுமன்றத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இரண்டு அந்தங்களில் இயங்கப் போகிறது. ஒன்று அரசை எதிர்க்கின்ற தமிழ்த்தேசியவாத எதிர்ப்பரசியல் நிலைப்பாடு. இன்னொன்று அரசுக்கு ஆதரவு வழங்குகின்ற இணக்கவரசியல் நிலைப்பாடு. இதில் எந்தவொரு நிலைப்பாடும் குறித்த ஒரு தளத்தில் காலூன்றி நிற்கவில்லை. எதிர்ப்பரசியல் நிலைப்பாட்டில் ஒரு பொதுத்தளம் இல்லை. கஜேந்திரகுமாரின் நிலைப்பாடும் சுமந்திரனின் நிலைப்பாடும் ஒன்றல்ல. இணக்கவரசியல் நிலைப்பாட்டிலும் இதே வேறுபாடுகள் நிலவுகின்றன. 

இந்த வேறுபாடுகளும் வெவ்வேறுபட்ட நிலைப்பாடுகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க வல்லன. ஒரே நிலைப்பாட்டின் வெவ்வேறு தளத்தில் நிற்பவர்கள் தமக்குள் ஒன்றுபட்டு செயற்படத் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி பிரதானமானது. குறைந்தபட்சம் எதிர்ப்பரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தரப்புகள் தமக்குள் இணைந்து செயற்படத் தயாரா? 

இதேபோலவே இணக்க அரசியலை முன்னெடுப்பவர்களும் தமக்குள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறார்களா என்பதும் முதற் கேள்வியாகிறது. இது சாத்தியமாகின்ற போது குறைத்தபட்சம் இரண்டு வலுவான குரல்கள் தமிழ் மக்கள் சார்பில் நாடாளுமன்றில் ஒலிக்கக்கூடும். 

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மிகவும் வலுவானதாக இருக்கின்றது. தேர்தல் பரப்புரைகளில் பொதுஜன பெரமுன கோடுகாட்டியபடி தமிழ் மக்களின் இருப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நிகழ்வுகள் மெதுமெதுவாக நடந்தேறும் வாய்ப்புகள் அதிகம். அதன் தொடக்கமே கிழக்குத் தொல்லியல் செயலணி.

இது போன்ற தமிழ் மக்களின் இருப்பையே அசைக்கும் செயற்பாடுகளுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். அதற்கு திறந்த மனதோடு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தயாராக இருக்கிறார்களா என்பது இரண்டாவது கேள்வி.

இவ்விரண்டு வினாக்களுக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளின் நடத்தையே பதிலாக அமையும். இம்முறை தெரிவாகியுள்ள பலகுரல்கள் ஒரு விடயத்தை உறுதிபடத் தமிழ் மக்களுக்கு உணர்த்தும். இணக்க அரசியல் என்பது வெறுமனே அரசுடன் இணங்கிப் போவதல்ல. மாறாக உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதே. இதை இணக்க அரசியல் செய்யும் பிரதிநிதிகள் விரும்பாவிட்டாலும் வலுவான அரசாங்கம் மேற்கொள்ளும் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடுகள் நெருக்கடியைக் கொடுக்கும். 

மறுபுறம் எதிர்ப்பு அரசியல் என்பது உங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தராது. உரிமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை அனுபவிப்பதற்கு அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும். எனவே வரட்டுக் கோட்பாட்டுவாதம் பலனளிக்காது. இம்முறைத் தேர்தல் முடிவுகள் கோடுகாட்டிய அம்சங்களில் அதுவும் ஒன்று. 

ஈழத்தமிழ் அரசியல் மெதுமெதுவாக நடைமுறைக்கேற்ற அரசியலுக்கு (Pragmatic Politics) நகர வேண்டும். கடந்தகாலம் என்ற அந்தகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்காமல் காலச்சூழல், யதார்த்தம், களநிலைவரம் போன்றவற்றைக் கணிப்பில் எடுக்க வேண்டும். இது இணக்க அரசியல், எதிர்ப்பு அரசியல் ஆகிய இரண்டையும் செய்கின்றவர்களுக்கும் பொருந்தும். நடைமுறைக்குத் ஒத்துவராத கோட்பாட்டாலும் கோட்பாட்டுத் தெளிவில்லாத நடைமுறையாலும் விளையும் பயன் எதுவுமல்ல. 

நாடாளுமன்ற அரசியல் என்பது வரையறைகளுக்கு உட்பட்டது என்பதை முன்னெப்பபோதையும் விட இப்போது தமிழ் மக்கள் உணர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இதை இன்னும் கொஞ்சக் காலத்திலேயே தமிழ் மக்கள் உணர வேண்டி வரலாம். ஒரு சின்ன உதாரணம்: சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகியோர் கொண்ட இந்த நாடாளுமன்றம் சிறுபான்மையினருக்கு எதிரான ஓர் அரசியல்யாப்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அவ்வாறானதொரு நிலை வந்தால் செய்ய இயலுமானது என்ன என்ற கேள்வியை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். 

இனி மூன்றாவது வினா: நாடாளுமன்றுக்கு வெளியே ஒரு பொதுத்தளத்தில் மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி உரிமைகளுக்காகப் போராட நாம் தயாராக இருக்கிறோமா?

தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய கேள்வியிது. நாடாளுமன்றால் இயலுமானது சொற்பமே என்பதை உணரும் போது மாற்றுவழிகள் கண்ணுக்குப் புலப்படா. ஏனெனில் நாடாளுமன்றம் என்ற ஒற்றைப்பரிமாண அரசியலுக்குள் ஈழத்தமிழ் அரசியல் முடக்கப்பட்டு விட்டது. முன்னெப்போதையும் விட தமிழ் மக்களின் இருப்பும் நிலைப்பும் கேள்விக்குள்ளாகியுள்ளது. பெருந்தேசியவாத அகங்காரம் முழுவீச்சில் வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை. அது வெளிப்படும் போது அதற்கு முகங்கொடுக்க நாம் தயாரா, அதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறோமா, குறைந்தபட்சம் அதற்கான உரையாடலையாவது தொடக்கியிருக்கிறோமா?

அரசியலை அரசியல்வாதிகளின் கைகளில் விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. அதை நாம் உணராவிட்டாலும் காலம் அதை நமக்குக் கட்டாயம் உணர்த்தும். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடாளுமன்றில்-பலகுரல்களில்-பேசுதல்-சாத்தியங்களும்-சவால்களும்/91-254366

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.