Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலக்கிய வாசகனின் பயிற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய வாசகனின் பயிற்சி

ஜெயமோகன்

August 20, 2020

onaay.jpg

அன்புள்ள ஜெ,

முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன்.

“ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது.

பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை.

அடுத்தாதாக ஒரு மாற்றத்திற்கு பாலகுமாரன் அவர்களின் “அகல்யா” எடுத்தேன். முன்பு பதினைந்து வருடங்களுக்கு முன்பு அகல்யாவை வாசித்திருந்தேன். அன்று என்னை மிகப் பாதித்த கதை. இன்றும் சிவசு, அகல்யாவின் காதலும் அவ்வப்போது வரும் மோகமும் என்னை வசீகரித்தது.

ஆனால் இப்போது சிவசு மற்றும் அகல்யாவின் கதை  கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கனவுத்தன்மையுள்ள உறவை சிவசு அகல்யாவின் மூலம் நாவலில் காட்டுகிறார் என்று பட்டது.

ji.jpg

பொய்த்தேவில் சோமசுந்தரம் முதலியார் மளிகை மெர்ச்செண்டாக மாறும் பரிணாமம் கொஞ்சம் நாடகத் தன்மையாக தெரிந்தது (எனது பலசரக்கு கடையின் பின்புலம் காரணமாக இருக்கலாம்).  நீங்கள் குறிப்பிட்டிருந்ததனாலேயே அந்த கோவில் மணியை கவனித்தேன்.

ஓநாய் குலச்சின்னம் நாவலில் இருக்கும் நுண்மையான சித்தரிப்புகளும், வர்ணனைகளும் வாசிக்கும் பொது கொஞ்சம் களைப்பாக இருந்தாலும், வாசித்து முடித்தவுடன், ஒரு புதிய விஷயத்தை, நிலப்பகுதியை தெரிந்துகொண்டது போல பட்டது. மேலும் சீனர்களின் குணங்களில் அதன் பாதிப்பு இருக்கிறதா என்று மனம் தற்போது தேடுகிறது.

வாசிப்பு எளிதாகவும் ஆர்வமாகவும் இருந்தது என்றால் அது அகல்யா தான்.

இந்த நாவல்களில் “அகல்யா”வை உங்களது தளத்தில் தேடித் பார்த்தேன். நீங்கள் அதைப் பற்றி எழுதவில்லை (நான் தேடிய அளவில்). “பொய்த்தேவு”ஐ நிறைய இடங்களில் குறிப்பிட்டு இருப்பீர்கள்.

ஒரு வளரும் தொடக்கநிலை வாசகனாக எதை கவனிக்க வேண்டும். எதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாவலில், ஒரு படைப்பில் எந்த அம்சம் அதை முக்கியமானதாக மாற்றுகிறது. எது வகைப்படுத்துகிறது.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

அன்புள்ள பழனிவேல்,

ஒரு சூழலில் இருவகை வாசகர்கள் உள்ளனர். இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள், இலக்கியப் பயிற்சி அற்றவர்கள். இலக்கியப் பயிற்சி உடையவர்களை இலக்கியவாசகர்கள் என்றும் பிறரை பொதுவாசகர்கள் என்றும் சொல்கிறோம். இலக்கியப்பயிற்சி என்பது என்ன? ஒரே வரியில் சொல்லப்போனால் இலக்கியப்பயிற்சி என்பது இலக்கியப்படைப்பை பொருள்கொள்ளும் பயிற்சிதான்.

இப்படி இலக்கியப்படைப்பை பொருள்கொள்வதற்கு வகுக்கப்பட்ட நெறிகளோ வழிமுறைகளோ இல்லை. அதை எழுதிவைக்கவோ வகுப்புகளில் கற்பிக்கவோ முடியாது. கற்பித்தாலும் அடுத்தபடியாக வரும் படைப்பு அந்தப் பாடங்களைக் கடந்த ஒன்றாகவே இருக்கும். இலக்கியம் புதிய பாதை கண்டு முன்பிலாதபடி நிகழ்ந்துகொண்டே இருப்பது

அந்தப் போருள்கொள்ளும் பயிற்சி என்பது ஒருவகையான அகப்பயிற்சி. ஒவ்வொரு வாசகனும் தன்னுள் தானே அடைவது. வாசகருக்கு வாசகர் வேறுபடுவது.

அப்பயிற்சி இரு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று, முந்தைய இலக்கியங்கள் வழியாக. ஒரு சூழலின் இலக்கியத்தின் அடிப்படையாக நிலைகொள்பவை முந்தைய படைப்புகளே. செவ்வியல்படைப்புக்களே இலக்கிய அளவுகோல்களை உருவாக்குகின்றன. அவற்றை பயில்வதே இலக்கியப் பயிற்சியின் முதல்பாடம்

அந்தப் படைப்புகளை வாசிக்கையில் அதுவரை அவை வாசிக்கப்பட்ட முறையை அறிவதும், சூழலில் இருக்கும் சிறந்த வாசிப்புகளுடன் உரையாடுவதும் நம் வாசிப்பை மேம்படுத்துகிறது. அது இரண்டாவது பாடம்.

kana.png

இதற்கும் அப்பால் வாசகனின் சொந்தவாழ்க்கையின் அனுபவங்கள், அவற்றை அறிவதற்குரிய நுண்ணுணர்வும் கற்பனையும் போன்றவையே அவன் வாசிப்புப் பயிற்சியை தீர்மானிக்கின்றன. வாழ்வனுபவங்கள் முற்றாக இல்லாமலிருப்பவர்கள் இல்லை. ஆனால் அவற்றை கற்பனையில் விரித்தெடுக்கமுடியவில்லை என்றால் இலக்கியப்படைப்பை நாம் அறியமுடியாது.

இந்தப் பயிற்சி இல்லாதபோது நாம் வாசிப்பதில் சில இயல்புகள் ஓங்கியிருக்கும். இரண்டைக் குறிப்பாகச் சொல்லலாம்

ஒன்று, ‘மேலே என்ன?’ என்ற கேள்வியுடன் கதையாகவே புனைவுகளைப் படிப்போம். அது கிட்டத்தட்ட வம்புகளையோ உலகநிகழ்வுகளையோ தெரிந்துகொள்வதிலுள்ள ஆர்வம் போன்றதே. இத்தகைய வாசகர்கள் சரசரவென புரட்டிப் படிப்பார்கள். நிகழ்ச்சிகளை மட்டுமே கருத்தில்கொள்வார்கள். இவர்களுக்கு வர்ணனைகள், தகவல்கள், மனஓட்டங்கள் போன்றவை தேவையற்றவையாக படும். அவற்றை தவிர்த்துவிட்டு படிப்பார்கள். கதையாக மட்டுமே படைப்பை நினைவில் வைத்து விவாதிப்பார்கள். கொஞ்ச நாள் கடந்ததும் கதாபாத்திரங்களாக மட்டும் படைப்புக்களை நினைவில் வைத்திருப்பார்கள்.

இரண்டு, தங்களால் அடையாளப்படுத்திக்கொள்ள இயன்ற வாழ்க்கையை மட்டுமே இவர்களால் ரசிக்கமுடியும். எந்த கதையானாலும் அதை ஏற்கனவே தாங்கள் அறிந்த வாழ்க்கையைக் கொண்டு மதிப்பிடுவார்கள். அவ்வண்ணம் அறியாத வாழ்க்கை என்றால் அன்னியமாக உணர்வார்கள், வாசிப்பு ஓடாது. தகவல்களை தவறவிடுவார்கள். கதாபாத்திரங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள்

இத்தகைய வாசகர்களின் பொதுவான விமர்சனங்கள் சில உண்டு. பாராட்டு என்றால் ‘கதை சரசரவென்று போகுது. ‘நம்ம பக்கத்துவீட்டிலே நடக்கிற மாதிரி இருக்கு’ ‘இமோஷனலா இருக்கு’. கதையுடன் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றால் ‘நம்புற மாதிரி இல்லை’ ‘செயற்கையா இருக்கு’ என்பார்கள். இவர்கள் படைப்பை கதையாக மட்டுமே வாசிப்பதனால் ‘முடிவை ஊகிச்சுட்டேன்’ ‘நடுநடுவே இழுக்குது’ ‘நீட்டி நீட்டிச் சொல்றார்’ ‘முடிவு வலிஞ்சு செய்றது மாதிரி இருக்கு’ போன்ற விமர்சனங்கள் வரும்.

பயிற்சி கொண்ட வாசகனின் இயல்புகள் சில உண்டு. அவற்றை இலக்கணமாகவோ அவசியத் தேவை என்றோ சொல்லவரவில்லை. வாசிப்பில் அவை பொதுவாகக் காணக்கிடைக்கின்றன என்று நினைக்கிறேன்.

முதலாவதாக, ஓர் இலக்கியப்படைப்பு கதைச் சுவராசியத்துக்காக எழுதப்படுவதில்லை என்னும் உணர்வு இலக்கியவாசகனின் முதல் அறிதல். அது வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, வாழ்க்கையின் மேல் கேள்விகளை எழுப்பிக்கொள்கிறது, அரசியல்ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் ஆன்மிகமாகவும் அதற்கான விடையைத் தேடுகிறது என்னும் புரிதல் அவனிடம் இருக்கும்

ஆகவே கதையாக இலக்கியப்படைப்பைப் பார்த்துச் சொல்லப்படும் எந்த விமர்சனத்தையும் அவன் சொல்லமாட்டான். தன் சுவாரசியத்துக்காக ஆசிரியன் எழுதவேண்டும் என நினைக்கமாட்டான். அந்தப்படைப்பின் ஆசிரியன் உருவாக்கவிரும்புவது என்ன, அவன் கூறவருவது என்ன என்று மட்டுமே பார்ப்பான். அதை அறிய தன் தரப்பிலிருந்து முழுமுயற்சியை எடுத்துக்கொள்வான்

ஆகவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வகையானது என்பதை அவன் உணர்ந்திருப்பான். ஒரு படைப்பு முதல்வரியிலேயே தொடங்கிவிடும். ஒருபடைப்பு பலப்பல பக்கங்களுக்குப்பின்னரே தொடங்கும். முன்னதற்கு தல்ஸ்தோயின் அன்னா கரீனினா உதாரணம், பின்னதற்கு தாமஸ் மன்னின் புட்டன்புரூக்ஸ் உதாரணம். இரண்டுமே பேரிலக்கியங்கள்தான். ஓர் ஆசிரியன் ஒரு புறயதார்த்தத்தைச் சொல்ல விரும்புகிறான் என்றால் அவன் விரிவாக வர்ணிப்பான். மிகயீன் ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடுகிறது உதாரணம். புறவுலகம் முக்கியமே அல்ல என்றால் மனஓட்டங்களையே சொல்லிச் செல்வான். காஃப்காவின் உருமாற்றம் உதாரணம்.

bala.jpg

பொதுவாசகன் சொல்லும் ‘இழுத்திட்டே போகுது’ ‘வர்ணனை ஜாஸ்தி’ போன்றவை வாசகன் தன்னை படைப்புக்கு ஒப்புக்கொடுக்காமல் படைப்பை தன்னை நோக்கி இழுப்பதன் விளைவான சலிப்பில் இருந்து எழுபவை. முடிவை ஊகிச்சிட்டேன் என்று ஒரு நல்ல வாசகன் சொல்லவே மாட்டான், ஊகிக்காத முடிவை அளிக்கும் விளையாட்டு அல்ல புனைவு. அம்முடிவின்வழியாக அந்த ஆசிரியன் காட்ட, உணர்த்த விரும்புவது என்ன என்பதே இலக்கியத்தில் உள்ள கேள்வி.

இரண்டாவதாக, இலக்கியவாசகன் படைப்பு கூறப்பட்டவற்றால் மட்டும் ஆனது அல்ல, கூறப்படாதவற்றாலும் ஆனது என்று அறிந்தவன். உணர்த்தப்படுவது, வாசகனே கற்பனைவழியாகச் சென்றடையவேண்டியது படைப்பின் உள்ளடக்கம். ஆசிரியன் வாசகனின் பயணத்தை தொடங்கிவைப்பவன், அவ்வளவுதான். இலக்கிய வாசகன் படைப்பின் ஆழ்பிரதியை [subtext] கண்டடைபவன்

ஆழ்பிரதியைக் கண்டடைவதில் பொதுவாக மூன்று தளங்கள் உள்ளன

அ. படைப்பின் நிகழ்வுகளுக்கு நடுவே சொல்லப்படாத பகுதிகள் ஆழ்பிரதியை உருவாக்குகின்றன. அவற்றை வாசகன் தன் கற்பனையால் நிறைவுறச் செய்யவேண்டும். உதாரணமாக சோமு முதலியின் வாழ்க்கையில் உதிரி நிகழ்ச்சிகளையே க.நா.சு சொல்கிறார். அவர் கடைசியில் சாமியாராக ஆனதற்கான காரணம் அந்நிகழ்ச்சிகளின் நடுவே உள்ளதா?

ஆ.படைப்பில் கூறப்பட்ட தகவல்கள் மேலும் பலவ்ற்றை குறிப்புணர்த்தி படிமங்களோ குறியீடுகளோ ஆக திகழலாம். ஓநாய்குலச்சின்னம் நாவலில் ஓநாய்கள் புல்வெளியின் பிரதிநிதிகள், புல்வெளியின் காவலர்கள். ஓநாய் எப்படியெல்லாம் அந்நாவலில் குறியீடாக உள்ளது என்று வாசகன் பார்க்கவேண்டும்

இ.படைப்பு நாம் நன்கறிந்த உலகியலுண்மைகளைச் சொல்லும் பொருட்டு எழுதப்படுவதில்லை. அல்லது ஏதாவது அரசியலுண்மையை மதக்கருத்தை சொல்வதற்காகவும் அது எழுதப்படுவதில்லை. அதற்கு அப்பால் ஒரு தனியுண்மையை அது சொல்லியாகவேண்டும். அந்தப்படைப்பு உருவாக்கும் உண்மை அது. அந்தப்படைப்பு அதை வெளிப்படையாக விவாதிக்கலாம், அல்லது உணர்த்திச் செல்லலாம். வாசகன் அந்த உண்மையை உணர்ந்து அதை அந்த ஆசிரியனுடன் மானசீகமாக உரையாடி வளர்த்துச் செல்லவேண்டும்

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். பாலகுமாரனின் அகல்யா நாவலை நான் வாசிக்கவில்லை, அது எப்படி இருக்குமென ஓரளவு என்னால் ஊகிக்கமுடிகிறது. அதனிடம் இக்கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

அ. அது அந்தப்படைப்பு மட்டுமே முன்வைக்கும் ஒரு புதிய வாழ்க்கைப்பார்வையை, தரிசனத்தை முன்வைக்கிறதா அல்லது வழக்கமான வாழ்க்கைப்பார்வையை முன்வைக்கிறதா?

ஆ. அதன் விவரிப்புகள், செய்திகள் நேரடியாகச் சொல்வதற்கு அப்பால் குறியீடாக மேலும் பலவற்றை உணர்த்துகின்றனவா?

இ. அதன் நிகழ்வுகளுக்கு நடுவே சொல்லப்படாத பல இடைவெளிகள் உள்ளனவா? வாசகனின் பார்வையில் அவை விரிகின்றனவா

ஆம் என்றால்தான் அது இலக்கியப்ப்படைப்பு. இந்த மூன்றுக்கும் ஓநாய்க்குலச்சின்னம், பொய்த்தேவு ஆகிய இருநாவல்களும் ஆம் என்ற பதிலையே அளிக்கின்றன இல்லையா? ஆகவேதான் அவை இலக்கியம் ஆகின்றன

ஆனால் பொய்த்தேவு கதைச்சுவாரசியம் இல்லை. சோமு முதலி சாமியாராக ஆவதில் திடுக்கிடும் திருப்பம் இல்லை. அந்நாவலில் அவரைத்தவிர எந்த கதாபாத்திரமும் முழுமையாக இல்லை. எந்த தீவிரமான நிகழ்வும் இல்லை. கதைமுடிச்சே இல்லை. ஓநாய்குலச்சின்னம் புல்வெளி, ஓநாய் பற்றிய செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

ஏனென்றால் அந்த ஆசிரியர்களின் நோக்கம் வாசகனை மகிழ்விப்பது அல்ல. அவர்கள் சிலவற்றைச் சொல்லவருகிறார்கள். வாசகன் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும். அகல்யாவை வாசிப்பது எளிதாகவும் ஆர்வமாகவும் இருந்தது  என்று சொல்கிறீர்கள். ஏனென்றால் அது உங்களுக்கு தெரிந்ததை உங்களுக்குப் பிடித்தவகையில் சொல்கிறது.

நீங்கள் எட்டாம் வகுப்பு பாஸாகிவிட்டீர்கள் என்றால் ஒன்பதாம் வகுப்புப் பாடம் கஷ்டமாக இருக்கும், எட்டாம் வகுப்புப் பாடம் எளிதாக இருக்கும். எட்டாம் வகுப்புப் பாடமே மேல், அதுவே பிடித்திருக்கிறது, அது எளிதாக இருக்கிறது என்று சொல்வீர்களா என்ன? ஒன்று கவனியுங்கள். ஒரு படைப்பு உங்களுக்கு எவ்வளவு தடையை அளிக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் அதனுடன் உரையாடுகிறீர்கள், அதை உள்வாங்கிறீர்கள், அத்தகைய படைப்புக்களையே நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்.

ஆகவே கடைசியாகச் சொல்லவேண்டியது இது. ‘வணிக இலக்கியம் வாசகனை நோக்கி வரும், இலக்கியத்தை நோக்கி வாசகன் செல்லவேண்டும்’

ஜெ
 

 

https://www.jeyamohan.in/137687/

 

Link to post
Share on other sites
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.