Jump to content

தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 ஆகஸ்ட் 2020
புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2020
முத்துலட்சுமி ரெட்டி
 

இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர்.

யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி?

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886 ஜூலை 30ஆம் தேதி மகாராஜா கல்லூரியின் முதல்வர் நாராயணசாமி அய்யருக்கும் சந்திரம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். சந்திரம்மாள் இசைவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

வீட்டிலேயே வைத்து இவருடைய தந்தையும், வேறு சில ஆசிரியர்களும் கல்வி கற்பித்தனர். மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார் முத்துலட்சுமி. இருந்தபோதிலும் பெண்ணாக இருந்த காரணத்தால் மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு இடம் தரப்படவில்லை. அவரை பள்ளிக்கூடத்தில் சேர்க்கக் கூடாது என பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கல்வியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா கல்வி உதவித் தொகையுடன் உயர்நிலைப் பள்ளியில் படிக்க இடம் அளித்தார். அந்த காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரே மாணவியாக அவர் இருந்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில் படித்த ஒரே இந்திய மாணவியாகவும் அவர் இருந்தார். அந்தக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதலாவது மாணவியாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கமும் பெற்றார் முத்துலட்சுமி.

பல துறைகளில் முதலாவது பெண்மணியாக இருந்தார் என்பதோடு, பெண்களின் மீட்சிக்காகவும், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் போராடியவராகவும் இருந்தார் என "முத்துலட்சுமி ரெட்டி - ஒரு சகாப்தம்" என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் டாக்டர் வி. சாந்தா.

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)

டாக்டர் டி. சுந்தர ரெட்டி என்பவரை 1914ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய சமூக சேவை தொடர்பான செயல்பாடுகளிலும், உதவி தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி அளிப்பதிலும் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை முத்துலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு அனுப்ப அவருடைய பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு ஓராண்டுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவரான தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பனகல் அரசர் உத்தரவு பிறப்பித்தார்.

மருத்துவம் மட்டும் போதாது என்று நினைத்த முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசன்ட் அம்மையாரின் வழிகாட்டுதலின் கீழ் பெண்களுக்கான இயக்கங்களில் பங்கேற்றார். இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் 1926ல் சென்னை சட்டமன்ற கவுன்சிலுக்கு அவர் நியமிக்கப்பட்டார். 1926-30 காலத்தில் அவர் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார்.

மருத்துவப் பணிக்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, ஆரம்பத்தில் கவுன்சில் உறுப்பினர் பொறுப்பை ஏற்க அவர் தயக்கம் காட்டினார். இருந்தபோதிலும் பெண்கள் தங்களது வீட்டைக் கட்டிக் காப்பாற்றும் திறனை நாட்டை கட்டமைப்பு செய்வதிலும் காட்ட வேண்டுமென அவர் கருதினார்.

குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம், கோவில்களில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசார தடுப்பு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் சட்டம் போன்றவற்றை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

பெண்களின் திருமண வயதை 14 ஆக உயர்த்தக் கோரும் மசோதா குறித்து சட்டமன்றக் கவுன்சிலில் விவாதம் நடந்தபோது, ``உடன்கட்டை ஏறும் பழக்கத்தால் ஏற்படும் துயரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பழக்கத்தால், பெண் குழந்தைகள் பிறப்பு முதல் மரணம் வரையில் தொடர்ந்து துயரமான வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் நிலை உள்ளது, குழந்தைப் பருவ மனைவி, குழந்தைப் பருவ தாய், பல சமயங்களில் குழந்தை பருவத்திலேயே விதவை என துயரங்கள் தொடர்கின்றன'' என்று பேசினார். ``சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்'' என்ற தனது புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிக்கக் கோரும் மசோதா குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, பழமைவாதிகள் பொதுவெளியிலும், பத்திரிகைகள் மூலமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழக பட்டதாரிகளும்கூட அதை எதிர்த்தனர் என்று முத்துலட்சுமி ரெட்டி குறிப்பிடுகிறார்.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கக் கூடிய தேவதாசி நடைமுறையை ஒழிக்கும் சட்டத்தை நிறைவேற்றியதில் முத்துலட்சுமி ரெட்டி முன்னோடியாக இருந்தார். அடிப்படைவாத சிந்தனையாளர்கள் பலரின் எதிர்ப்பை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. அந்த மசோதா சென்னை சட்டமன்ற கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், 1947ல் தான் அது சட்டமாக அமலுக்கு வந்தது.

தேவதாசி நடைமுறைக்கு எதிரான தனது முன்மொழிவை சட்டமன்றத்தில் வைத்துப் பேசிய அவர், ``தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது என்றும், "மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச் செயல்'' என்றும் கூறினார்.

யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி?

பட மூலாதாரம், Google doodle

 

அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களால் அவர் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருந்தார்.

``முத்துலட்சுமி ரெட்டி: ஒரு சமூகப் புரட்சியாளர்'' என்ற தலைப்பில் திருச்சியைச் சேர்ந்த வரலாற்றுத் துறை ஆய்வாளர் எம்.எஸ். ஸ்னேகலதா எழுதிய புத்தகத்தில், ``உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டபோது, சென்னை சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து முத்துலட்சுமி ரெட்டி விலகினார்'' என்று பதிவுசெய்துள்ளார்.

தேவதாசிகளைப் பாதுகாப்பதற்காக, அடையாறில் தனது இல்லத்தில் 1931ல் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார் முத்துலட்சுமி ரெட்டி. தங்கை புற்றுநோயால் மரணம் அடைந்ததால் முத்துலட்சுமி ரெட்டி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து 1954ல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார். நாடு முழுவதிலும் இருந்து வரும் புற்றுநோயாளிகளுக்கு இப்போதும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் சிறந்த பங்களிப்புகளுக்காக 1956ல் அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 1947ல் தில்லி செங்கோட்டையில் சுதந்திர இந்தியாவின் முதலாவது கொடி ஏற்றம் நடந்தபோது அதில் சேர்ப்பதற்கு இவருடைய பெயர் தேர்வு செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் விடுதலைக்கு பங்காற்றியதற்காக அந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டை ஒட்டி 1986ல் தமிழக அரசு தபால் தலை ஒன்றை வெளியிட்டது. தன்னுடைய 81வது வயதில் 1968ல் அவர் காலமானார். அவருடைய பிறந்த நாளில் அவருக்காக doodle ஒன்றை கூகுள் உருவாக்கியது.https://www.bbc.com/tamil/india-53838329

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிழம்பு said:

தேவதாசி நடைமுறைக்கு எதிரான தனது முன்மொழிவை சட்டமன்றத்தில் வைத்துப் பேசிய அவர், ``தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது என்றும்

பொட்டு கட்டுதல் கூட இந்த தேவதாசி நடைமுறையில் உள்ளதுதானே. இந்தப்பழக்கம் இப்பொழுதும் இந்தியாவில் மிகமிக பின்தங்கிய கிராமங்களில் முன்னைப்போல இல்லாவிட்டாலும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளதாக வாசித்த நினைவு.. 

கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

இன்று (ஜூலை 30-ந் தேதி) இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.

 
1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 1933-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவிலும் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் 1925-ம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சில புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். அவற்றில் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆணாதிக்கமிக்க அந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பின்னர் 1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கென நிதி திரட்டி 1952-ம் ஆண்டு அடையாறில் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பெற்று 1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும். 1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.

இவரது நினைவை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம்’ ஏழை கர்ப்பிணிகளுக்காக தொடங்கப்பட்டது. தற்போது, 2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி பிறந்தநாளான ஜூலை 30-ந் தேதியை அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பல்வேறு மருத்துவ சேவைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!’

என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். வாழ்க்கையில் எத்திசையில் திரும்பினாலும் கஷ்டமும், பிரச்சினையும் உங்களுக்கு வந்தாலும் டாக்டர் முத்துலட்சுமியை நினைத்து கொள்ளுங்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு தானாக வரும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.

டாக்டர் எஸ்.ஆறுமுகவேலன், உறைவிட மருத்துவ அதிகாரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.

https://www.maalaimalar.com/news/district/2019/07/30091804/1253609/Dr-Muthulakshmi-Reddy-India-first-woman-Doctor.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.