Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உமிழ்நீரால் கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உமிழ்நீரால் கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது

உமிழ்நீரால் கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி, நமது உடலில் புகுந்திருக்கிறதா என்பதை கண்டறிய தற்போது 2 விதமான பரிசோதனைகள் வழக்கத்தில் உள்ளன.

1. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை. 2. ஆன்டிஜன் கோவிட்-19 பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு மாதிரிகளை சேகரிப்பது சற்றே வலியானது. செலவும் சற்றே அதிகம். முதல் பரிசோதனையில் முடிவு வர பல மணி நேரம் ஆகும். 2-வது பரிசோதனையில் முடிவு வர சில நிமிடங்கள் ஆகும். ஆனால் பெருமளவு சோதனை செய்ய கருவிகள் கிடைப்பதில் சிக்கல்.

 
இந்த சூழலில்தான் கொரோனாவை சாதாரணமாக உமிழ்நீரைக் கொண்டே கண்டறியும் ‘சலிவா டைரக்ட்’ என்ற பரிசோதனை முறையை அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தி இருக்கிறார்கள்.

இந்த முறையில் அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு எப்.டி.ஏ. என்று சொல்லப்படுகிற அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது அனுமதியை அளித்துள்ளது.

இந்த பரிசோதனை எளிமையானது, மலிவானது என்பதால் இந்திய விஞ்ஞானிகளின் பார்வையும் இந்த பரிசோதனையின் மீது திரும்பி உள்ளது.

தற்போதைய 2 பரிசோதனை முறைகளுக்கும் மாற்றாக இந்த பரிசோதனை முறை அமையும். இதில் பொதுமக்களிடம் இருந்து உமிழ் நீர் மாதிரிகளை சேமிக்க சுகாதார ஊழியர்கள் உயிரைக்கொடுக்க தேவையில்லை. அவர்கள் ஆபத்தோடு கைகுலுக்கவும் அவசியமில்லை. சோதனைக்கு உட்படுத்தப்படுகிற நபர், வெறுமனே ஒரு சோதனைக்குழாயில் உமிழ்நீரை துப்பினால் போதும். அதை மூடி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி விடலாம்.

சென்னை எல் அண்ட் டி மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரான விஞ்ஞானி ஏ.ஆர்.ஆனந்த் இந்த பரிசோதனை பற்றி இப்படி சொல்கிறார்-

இந்த பரிசோதனை தனித்துவமானது. பிரித்தெடுக்க நியுக்ளிக் அமிலம் (ஆர்.என்.ஏ.) தேவையில்லை. மற்ற பரிசோதனைகளில் கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட அனுபவத்தை சந்தித்திருக்கிறோம். இந்த சலிவா டைரக்ட் பரிசோதனை எளிமையானது. இதற்கு ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரம் மட்டுமே தேவை.

நமது நாட்டில் இந்த பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்துவதற்கு சலிவா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை, நாசோபார்னீஜியல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையுடன் ஒப்பிட்டு ஒரு விரைவான ஆய்வு மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

தவிரவும் இந்த பரிசோதனைக்காக எந்த நிறுவனத்தையும் நாம் சார்ந்திருக்க தேவையில்லை என்பதால் செலவும் குறைவு. நாசோபார்னீஜியல் ஸ்வாப்சுடன் ஒப்பிடுகையில் உமிழ்நீரை சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்து எளிதாக சேகரித்து விட முடியும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி ஒருவர் இதுபற்றி கூறுகையில், “தற்போது இதற்காக எந்த கருவியும் இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதற்கான வாய்ப்புகள் பற்றி கண்டறியப்பட வேண்டும்” என்கிறார்.

இந்த உமிழ்நீர் பரிசோதனைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருப்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவாவிடம் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டபோது அவர், “கொப்புளிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் இருந்து பரிசோதனை செய்வது குறித்து ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது. இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்” என கூறி உள்ளார்.

டெல்லி தேசிய நோய் எதிர்ப்பு இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த சத்யஜித் ராத் கருத்து தெரிவிக்கையில், “இதில் மாதிரியை சேகரிக்க ஸ்வாப்ஸ் போன்ற பொருட்கள் இல்லை. மாதிரியை சேகரிக்கிற நபருக்கும் பெரிதான பயிற்சி ஏதும் தேவையில்லை” என்கிறார்.

புனே இந்திய அறிவியல், கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் வினீதா பாலும், சலிவா பரிசோதனைகள் எளிதாக அமையும். ரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தக்கூடிய காகித துண்டு பரிசோதனையை போல இது எளிதானது. இதன்மூலம் கொரோனா பரவலுக்கு முந்தைய இயல்பான நிலைக்கு நாம் திரும்பவும் முடியும் என்கிறார்.

ஆக, இந்த சலிவா பரிசோதனை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசீலித்து விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பெருந்திரளான மக்களுக்கு எளிதான வகையில் கொரோனா பரிசோதனை செய்ய வழி பிறக்கும். இதன்மூலம் கொரோனாவை பரவ விடாமல் விரட்டியடிப்பதுவும் சுலபமாக அமையும்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/23003019/1812045/Covid19-saliva-diagnosis-cheaper-faster-alternative.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.