Jump to content

சிங்கள அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா.?

samakaalam-3-620x330.jpg

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது.

அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் தனமான ஆட்சிகள் நிகழ்ந்த காலங்களில், ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், அரசியலமைப்பு பற்றி அறிஞர்கள் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினர். மக்களுக்கான ஆட்சி மக்களுக்காக அமைய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூக அரசியல் அறத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பற்றிய அறிஞர்களின் பங்களிப்பு அமைந்தது.

ஆனாலும் அதிகாரத்தில் உள்ளவர்களால் எழுதப்படுகின்ற  அரசியல் சட்டம், சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உரிமைகளை மறுக்கின்ற நிலையும் காணப்பட்டிருக்கின்றது. இலங்கையின் அரசியலமைப்பு அனுபவம் அப்படித்தான் இருக்கின்றது. உலகில் மிக நீண்ட அரசியலமைப்பு எனப்படும் இந்திய அரசியலமைப்பு, தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களுக்குமான இடங்களை சமூக நீதி நோக்கில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பாகுபாடு நிறைந்த உலகில் அரசியலமைப்பு சட்டம் வாயிலாக மனித உரிமைகளை வலுப்படுத்துவது அவசியமானது.

அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகப் பேசியிருந்தார். ஆனாலும் இந்த தீவில் தமிழர்களுக்கு ஒரு சட்டமும் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறையில் இருப்பதனால், ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. மாறாக  இது தமிழர்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டுகிற திட்டமா என்ற அச்சத்தையே விதைத்திருக்கிறது என்பதே உண்மை நிலவரமாகும்.

இலங்கையில் 1978இல் புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 வரை இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது. கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன  மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 19 ஆவது அரசியல் திருத்தம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு சிறிதளவில் பகிர்ந்தளித்தமை மற்றும் ஆணைக்குழுக்களை உருவாக்கியமை இதன் விசேட அம்சங்கள் எனச் சொல்லப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோத்தபாய தரப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் போவதாக கூறி வருகின்றது. குறிப்பாக 19 ஆவது அரசியல் திருத்தத்தை அகற்றுகின்ற விதமாக இந்த திருத்தம் அமையும் என்பதை ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் இராணுவத் தன்மையான ஆட்சி இயல்புகளை கொண்டுள்ள  கோத்தபாய அவர்களின் இந்த திருத்த முயற்சிகள், குறிப்பாக சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையில் அமையும் என்பதும் அம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பௌத்தத்திற்கு முன்னுரிமை போன்ற காலம் காலமான இயல்புகளை இப்போதே ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே நீதி, ஒரே சட்டம்  என்பது குறைந்த பட்சம், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளின் உரிமைகளைக் கூட பறித்துவிடுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உண்மையில் இலங்கைக்கு முற்றிலும் புதுமையான ஒரு அரசியல் திருத்தமே தேவைப்படுகின்றது. நவீன காலத்திற்கு ஏற்பவும், இனங்களை சமத்துவமாகவும் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் புதிய அரசியல் சட்டம் அமைய வேண்டியது கால அவசியமாகும்.

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம், புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். கடந்த காலத்தில் இத்தகைய கருத்து கணிப்புக்கள் இடம்பெற்ற சமயத்தில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் மாநிலத்தில் சுயாட்சியை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியதும் கவனிக்க வேண்டியது. இந்த வேண்டுகோளை உள்ளடக்க தவறிய இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு என்பது மிகவும் பழமையான ஒரு அரசியலமைப்பாகவே உருவாகும்.

இலங்கைக்கு முற்றிலும் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று தேவை என அரசு கருதினால், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் என்று கருதினால் புதிய அரசியலமைப்பு அதனை தெளிவாகவும் உறுதியாகவும் தீர்க்கும் விதிகளை கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து வெறுமனே அரசியலமைப்பு திருத்தத்தினால் மாத்திரம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை உருவாக்க முடியாது. கடந்த கால தேர்தல்கள் வாயிலாக இத் தீவில் தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது தேசங்களை தெளிவாக வரைந்தே வருகின்றனர். தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை தேர்தல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ltte_5_181102.jpg

விடுதலைப் புலிகளை அழித்து விடுவதனால் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது என்ற உண்மையைப் போலவே, சிங்கள பௌத்த பேரினவாத கருத்துருவாக்கம் கொண்ட அரசியலமைப்பாலும் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது. தென்னிலங்கை மக்களின் இறைமைக்கு அளிக்கப்படும் மதிப்பு போலவே வடக்கு கிழக்கு மக்களின் இறைமைக்கும் அளிக்கப்பட வேண்டும். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் அரசியலமைப்பு என்பது வெறும் சொற்களினாலும் பெயரினாலுமே ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்றாகும். இராணுவத்தால், ஆயுதங்களால், அரசியலமைப்பால் இனவாத அரசியல் பேச்சுக்களினால் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்ட சூழலில், உண்மையிலேயே வடக்கு கிழக்கு மாநிலம் என்பது அரசியலமைப்பும் ஆட்சித் தலைவனும் இல்லாத ஒரு மாநிலமாகவே இருக்கின்றது. இலங்கை அரசின் யாப்பும் அதன் ஆட்சி பீடமும் இந்த மாநிலத்தை பிரதிபலிக்கவும் இல்லை, உள்ளடக்கமும் இல்லை என்பதே உண்மை. வெறுமனே இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு நிலமாக இருக்கின்றதே தவிர, இலங்கை அரசின் ஆட்சியில் இருக்கவில்லை. ஆக்கிரமிப்பை உணரக்கூடிய மக்கள் தம்மை ஆளுவதை உணர முடியாது. ஒரு இனக்கூட்டத்தை நிராகரித்து, அழித்து ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பு, அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொண்டதல்ல என்பதுதான் வெளிப்படை அர்த்தம்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை அநீதியினாலும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட சுய உரிமைகளினாலும் இந்த தீவு இரண்டுபட்டே இருக்கின்றன. உண்மையில் கடலால் சூழப்பட்ட இந்த தீவின் நிலப்பரப்பு என்பது பன்னெடுங்காலமாக இரண்டுபட்டே இருக்கின்றது. இதனை ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கக்கூடிய அரசியலமைப்பு என்பது, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மாத்திரமே இருக்க முடியும். அதனை மறுத்து, சிங்கள பௌத்த பேரினவாத கருத்துவருக்காத்தின் அரசியலமைப்பை தோற்றுவித்தால், இத் தீவு அரசியலமைப்பு யாப்பின் வெற்றுச் சொற்களினால் மாத்திரம் ஒரு நடாக சொல்லப்படலாம்.  நிலத்தால் தெளிவாக பிரிவுக் கோடுகள் வரையப்பட்ட இரண்டு நாடுகளாகவே இருக்கும்.

தமிழ்க்குரலுக்காக கவிஞர் தீபச்செல்வன்

https://thamilkural.net/thesathinkural/views/64314/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.