Jump to content

பௌத்தமும் தமிழரும் - களப்பிரர்கள் காலம்


Recommended Posts

தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையே ஆகும். இம்முந்நூறு ஆண்டுகள் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் மிகவும் சொற்பம். இதன் நிமித்தமே இக்காலப்பகுதி தமிழக வரலாற்றின் இருண்ட பகுதி என பொதுவாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இப்பெயரிடலுக்கு பின்புறம் இன்னொரு காழ்ப்புணர்ச்சி மிக்க வரலாறும் அடங்கியுள்ளது என்பதை பின்பு நோக்கலாம். இருண்டகாலமான இந்த பெருங்குகையை ஊடறுத்துச்செல்ல சில ஒளிக்கீற்றுக்களே உறுதுணை செய்கின்றன. அவற்றுள்ளும் பெருவாரியானவை ஊகங்களை அடிப்படியாகக்கொண்டதும், கவித்துவம் மிக்கதும், பிறநாட்டு வரலாறுகளுடனும் தொடர்புடையதே ஆகும்.

ஒரு வரலாறு குறித்து அறிந்துகொள்ள இருவகையான மூலங்கள் பயன்படும். உள்வாரி மூலங்கள் (ஒருவரின் கைபேசியை போல) மற்றையது வெளிவாரி மூலங்கள் (சமூகவலைதளங்கள் போல). இவை இரண்டில் உள்ளக மூலங்களே பிரதானமானதும், பெரிதும் விரும்பப்படுவதும் ஆகும். ஆனால் இருண்ட காலத்தில் இத்தகைய உள்வாரி மூலங்கள் மிகவும் குறைந்த அளவே கிடைக்கின்றன.

  • 1979 இல் கண்டுபிடிக்கப்பட்ட பூலங்குறிச்சி (பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர்)கல்வெட்டுகள் சங்கம் மருவிய காலத்தை அறிந்து கொள்ளப்பயன்படும் மிகப்பிரதான மூலாதாரம்.
  • கொங்குநாடு(அரசலூரில்) கண்டறியப்பட்ட கற்பலகை
  • கரூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டப்பாறை கல்வெட்டு
  • புத்ததத்தர் எழுதிய அபிதாமாவதாரம்
  • வச்சிரதந்தி அமைத்த திரமிளசங்கம்
  • ரோமநாணயங்கள், மட்பாண்ட சிதைவுகள்

வெளிவாரி மூலங்கள் என நோக்கும் போது சமகாலத்தில் கிடைக்கும் பிறநாட்டு ஆதாரங்களும், பிற்காலத்தில் கிடைக்கும் உள்நாட்டு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவை

  • வேள்விக்குடி செப்பேடுகள். இவையே சங்கம் மருவிய காலத்தை குறித்து முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆதாரம்.
  • திருஞானசம்பந்தரின் திருவையாற்றுப்பதிகம்
  • கால்லாடம், யாபெருங்கோல் விருத்தி, சில தனிப்பாடல்கள்
  • பெரியபுராணப்பாடல்கள்
  • சாதவாகன கல்வெட்டுக்கள்
  • சின்னமனூர் செப்பேடு
  • பல்லவர்கால செப்பேடுகள்
  • அபிச்சத்திரா, மதுரா, பிருந்தாவனம், புத்தகயா, வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைத்த அகழாய்வு படிமங்கள்

இங்ஙனம் இந்தியா முழுவதும் கிடைத்துள்ள ஆதரங்களைக்கொண்டு மு.அருணாசலம் உள்ளிட்டோர் சங்கம் மருவிய காலம் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுவும் இருண்டகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. சீவகசிந்தாமணி, மணிமேகலை ஆகிய காவியங்களை ஆதரமாகக்கொண்டு சங்கமருவிய காலம் குறித்த வாழ்க்கை முறைகளை ஒருவாறு ஊகிக்கவும் முடியும். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பயன்படுத்தி ஒரு எடுகோள் ரீதியான ஆக்கமாக இது உருவாக்கப்படுகிறது. ‘பேக் கிரௌண்ட்’ தெரியாமல் எந்த விடயத்தை ஆய்வு செய்தாலும் முழுமையான விளக்கம் கிடைக்காது. எனவே மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரான சங்ககாலத்தில் நிலவிய பேக் கிரௌண்ட் குறித்து முதலில் காணலாம்.

கங்கை - வைகை

வேதகாலம் என அறியப்பட்ட காலத்தில் இருந்தே ஆரியர்களின் குடிபெயர்வுகள் வட இந்தியா முழுவதும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. ஆரிய பிராமணர்கள் உள்நுழையும் இடங்கள் யாவும் ஆரியமயப்ப்டுத்தபட்டன. சுதேச வழிபாட்டு முறைகளை ஆரியத்துடன் இணைத்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களை வைதீக கோட்பாடுகளுக்கு உட்படுத்தி பிராமணர்கள் வயிறு வளர்த்தனர் என்பது பொதுவான வரலாற்று கருத்து. வைதீக கோட்பாடு, வர்ணாசிரம பிரிவு என்ற அடித்தளத்தில் அமைக்கப்பட்டது. கடுமையான சாதிப்பாகுபாடும், அடக்குமுறைகளும் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவாக பௌத்தம், சமணம் ஆகிய வேத எதிர்ப்பு(நாஸ்திக) மதங்கள் தோன்றி மக்களின் ஆதரவை பெற்றன. அதிகாரம் மிக்க பிராமண சமூகத்துக்கு எதிராக உருவான இந்த தன்மை ஒரு தாழ்த்தப்பட்ட ஹீரோ அதிகாரம் நிறைந்த வில்லனை எதிர்க்கும் தற்கால மசாலப்படம் போன்றது இல்லை. மாறாக கருணையற்ற வில்லனை கொண்ட கொரிய பேய்ப்படங்கள் போல இருந்தன. ஒன்றை ஒன்றும் விஞ்சும் போது சிலவேளைகளில் மனிதத்தின் எல்லைக்கோடுகள் மறக்கப்பட்டன.

கடலோரங்களில் வாழும் ஒரு புல் குறித்து நாம் பெரிதும் கேள்வியுற்றிருப்போம். ராவணன் மீசை. ஒரு இடத்தில் தன்னை நிலையாக பற்றிக்கொண்ட பின்பு தன் ஓடி வேர்களை ஒட்டி, கரைகளை முழுவதுமாய் கட்டிவிடும். ஒரு இடத்தில் தான் அழிந்தாலும் பிறிதிடத்தில் தன்னை வளர்த்துக்கொண்டே போகும். அங்ஙனமே பிராமண சமூகமும் தனக்கு வரப்போகும் ஆபத்தை முன்பே உணர்ந்தாற்போல் பாரதம் முழுவதும் தங்களை பரப்பிக்கொண்டனர். கங்கையின் கரைகளில் இருந்த பிராமண மீசை, வைகையின் கரைகள் வரை வேர்களை ஒட்டியது.

தோற்றுவாய்

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலவிய காலமது. மக்கள் இயற்கையில் இறைவனை கண்ட காலம். பாலைமக்கள் கொற்றவையையும், குறிஞ்சிமக்கள் குமரனையும், நெய்தல்மக்கள் வாலியையும், முல்லைமக்கள் மாயோனையும், மருதநில மக்கள் வஞ்சிக்கோவையும் வழிப்பட்டகாலம். ஈஸ்வரனும்,நாராயணனும் தமிழகத்தில் உள்நுழையாத காலம். அக்காலத்தில் தமிழகம் தன்னிறைவான பொருளாதார முறைமையை கொண்டிருந்தது. தம்முடைய தேவை போக எஞ்சியது அரசுக்கு வரியானது. சங்ககாலத்தில் சிற்றரசர்களின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் இன்னொரு பெருநாட்டை போரில் வெல்ல இயலாத நிலை காணப்பட்டது. போர்களின் மூலம் போதுமான செல்வங்களை திரட்டிக்கொண்ட அரசுகள், அச்செல்வங்களை தன் சிற்றரசுகளுடன் பகிர்ந்து கொண்டது.பரதவர்கள் ஆழியை ஆட்சி புரிந்தனர்.  திறைகடல் ஓடி திரவியம் தேடிய வணிகர்கள் அரசுக்கு முதுகெலும்பென உதவி நல்கினார்கள்.

வடநாடுகளுடன் ஏற்பட்ட பொருளாதார தொடர்பு என்ற இழையை பற்றிய படி வேதியர்கள் தமிழகம் அடைந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். வேதியர்களின் ஆதிக்கத்தால் அரசன், வணிகன், வேளிர் என்ற பிரிவினை மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. வடநாட்டில் உருவான சாதிய அடக்குமுறைகள் போன்ற ஒரு சம்பவம் மெல்ல மெல்ல தமிழகத்தில் உருவாக ஆரம்பித்தது. அசோகர் காலத்தில் பௌத்தமும், சமணமும் கூட தமிழகத்தை அடைந்து அமைதியாக தம் வழியில் சென்றுகொண்டிருந்தன. இந்த நாஸ்திக(வேத எதிர்ப்பு)மதங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றிருந்தன.

யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என கனியன் பூங்குன்றனார் பாடியதில் சமணம் மற்றும் பௌத்தத்தின் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்தது. பூம்புகார், காஞ்சி ஆகிய இடங்களில் விகாரைகள் மெல்ல முளைத்தெழுந்தன. மீண்டுமொரு வைதீக எதிர்ப்பு போராட்டத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. ‘இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழப்பழகு’ என்பது எப்போதும் வாய்மொழியுடனே கடந்து போகிறது. ஏதோ ஒன்று நம்மில் இருந்து வேறுபட்டு, கவரும் வண்ணம், உயர்ந்தது உள்ளது போல மனதின் ஒரு மூலையில் தோன்றிவிட்டால் போதும். அது உடனே நம்மிடையே ட்ரெண்டிங் ஆகிவிடும். சிறிது நாளில் ஃபாஷான் ஆகிப்போகும். பின்னர் நம் லைஃப் ஸ்டைல் என்றாகி நீண்ட இடைவெளியில் நம் கலாசாரமும் ஆகிப்போகும். நமக்கு இந்த பரந்த மனம் உருவாகிப்போக காரணம் நம்மூதாதைகள் காட்டிச்சென்ற வழி தான். தனித்தன்மையுடன் விளங்கிய ஆதித்தமிழ் மரபுகளை மறந்து வெள்ளைத்தோல் ஆரியர்கள் கடைப்பிடித்தவற்றை நம்மவரும் கைக்கொண்டனர்.

தமிழர்கள் தெய்வமான கொற்றவையும், குமரனும் வைதீகர்களின் பூசனைகளில் இடம்பெற்றனர். மக்களின் ஆதரவு வைதீகத்தை சேர்ந்தது. பார்ப்பனர்கள் தம்முடைய வேத வேள்விகள் குறித்து மன்னர்களுக்கு தெளிவுபடுத்த ஆரம்பித்தனர். போர்களில் வெல்வதற்காக யாகங்களை செய்யுமாறு மன்னனுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

வேத வேள்விகளை பிராமணர்கள் மட்டுமே செய்யவேண்டும் எனவும், வேதத்தை பிறர் கற்பது மஹாபாவம் எனவும் மக்களை நம்பசெய்தனர். வடக்கே பௌத்தமும், சமணமும் சமாதானத்தை போற்றி மக்களின் மனதை வென்றமையால் வேதவேள்விகள் மங்கிப்போயின. எனினும் தமிழகம் அப்போது தான் அதை கைக்கொள்ள தொடங்கியது.  போர்களுக்கு முன்னராக வேள்விகள் ஆற்றும் வழக்கத்தை மன்னர்கள் கைக்கொள்ள தொடங்கினார்கள். ராஜசூயம் வெட்ட பெருநற்கிள்ளி, பலயாகசாலை முதுகுடுமி பெருவழுதி ஆகிய மன்னர்கள் அதீத எண்ணிக்கையில் வேத வேள்விகளை செய்தனர்.

அவர்களின் பெயர்களே அதற்கு சான்று பகர்ந்து நிற்கிறது.  வேள்விகளை தொடர்ந்து போர்கள் வெற்றி பெறுமாயின் அவ்வேள்வியை நடாத்தி தந்த பிராமணர்களுக்கு பிரம்மதேயம் என்ற பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டன. சிலநேரங்களில் கிராமங்களும், கிராமத்தொகுதிகளும் கூட இத்தகைய தானங்களாக்கப்பட்டன. அந்நிலங்களில் வேளாளர்களை பணிக்கமர்த்தி விளைச்சலை பெற்று சுகபோகமான வாழ்க்கையை பிராமணர்கள் வாழத்தொடங்கினார்கள். போர்களில் படை தந்து உதவிய குறுநில மன்னர்களை காட்டிலும் பிராமணர்கள் உயர் அந்தஸ்த்தை பெற்றனர். மேலும் வேளாளரின் உழைப்பை கொண்டு வாழ்க்கை நடாத்தும் பிராமணர்கள் வேளாளரை சமூகத்தின் கீழ்நிலை பிரிவாக கண்ணுற்றனர். இந்நிலையால் சிற்றரசர்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலே பிணக்கம் ஏற்பட ஆரம்பமானது. 

வந்தார்கள் வென்றார்கள்

வெறுமனே வேதங்களை ஒப்புவிப்பதற்கு விலையாக வளமான நிலங்களை பெற்று சுகபோக வாழ்க்கை நடாத்தும் பிராமணர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தந்த மூவேந்தர்களுக்கும் மக்கள் மத்தியில் இருந்த நற்பெயரும் கௌரவமும் சரிந்தவண்ணம் சென்றன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தென் கர்நாடக பகுதியை சேர்ந்த ஒரு குலத்தை சேர்ந்த சிலர் மூவேந்தர்களை வென்று தென்னகத்தில் வலுவான ஒரு ராஜ்யத்தை அமைத்தனர். அவர்கள் களப்பிரர் என அறியப்பட்டனர். சங்ககாலத்தில் போர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த சிற்றரசர்கள் மூவேந்தர்களுக்கு எதிராக களப்பிரருக்கு படையுதவிகளை செய்தனர். மக்களின் ஆதரவும் மூவேந்தர்களுக்கு சாதகமாக அமையாது போனதால் களப்பிரர்களின் வெற்றி மிகவும் எளிதாகிப்போனது. அண்ணளவாக கி.பி 250 இல் ஸ்தாபிக்கப்பட்ட களப்பிரர் அரசானது மூன்று நூற்றாண்டுகளாக கி.பி 550 இல் சிம்மவிஷ்ணு பல்லவரால் படையெடுக்கப்படுவது வரை தென்னிலம் முழுவதும் ஆட்சி செய்தது.

தமிழ்மன்னர்கள் வைதீகத்தை ஏத்திப்பிடித்து தங்களின் சுயத்தை இழந்து போன வேளையில். களப்பிரர் தங்களின் சுயமான தாய் மொழியை விடுத்து, தமிழை தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு மான்புடன் செயலாற்றினர். கல்வியும், கலைகளும், ஆட்சியும் புத்தாகம் பெற்றுவந்தன. எதிர்ப்புகளை ஒடுக்கிவிட்டு தம்பால் ஆதரவு நல்கிய மக்களுக்காகவும், குறுநில வேந்தர்களுக்காகவும் முடிந்த மட்டும் நலன்களை செய்து முடித்தனர். அவர்கள் நிகழ்த்திய புத்தாக்க மறுமலர்ச்சி தமிழகத்தில் நிலையான ஒரு மாற்றத்தினை உண்டு பண்ணியது. மூவேந்தரால் முடியாத எதனை இவர்கள் செய்தனர் என்பதை காண்போம் இனி.

 

https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-1

 

கோன்(ண்)மை

தென் கருநாடாகத்தின் மைசூருக்கு அருகே ஒரு சிறு இனக்குழுவாக வாழ்ந்துவந்த களப்பிரர் தக்கதருணம் பார்த்து தென்னகத்தை தங்கள் ஆளுமையின் கீழ் கொனர்ந்தனர். களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தாங்கள் மைனோரிட்டி ஆட்சியை நிகழ்த்துவது சிறந்த முடிவாக அமையாது என்பதை நன்கு உணர்ந்தனர். வேற்று மொழியுடனும், மதத்துடனும் ஒரு நாட்டை ஆள்வது கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் விழுவது போன்றது என்பதை புரிந்துகொண்ட களப்பிரர்கள் தனியாட்சி முறையை கைவிட்டு, முடிமன்னர்களை எதிர்த்த சிற்றரசர்கள், புலவர்கள், எண்பேராய மற்றும் ஐம்பெருங்குழு உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாட்சியை உருவாக்கினார்கள். இவர்களில் பின்வரும் சிற்றரசர்கள் முக்கியமானவர்கள்.

  • தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்
  • கொடும்பாளூர் இருக்கு வேளிர்கள்
  • பழுவூர் பழுவேட்டரையர்
  • களக்குடி நாட்டு அரையர்கள்
  • குண்டூர் சிற்றரசர்கள்

இருண்டகாலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை.  கி.பி 470 இல் வச்சிரதந்தி தன்னுடைய அபிதாமாவதாரம் நூலை பூம்புகாரில் இயற்றும் போது உறையூரை தலைநகராக கொண்டு அச்சுதன் (அச்சுதக்களப்பாளன்) என்பவன் ஆட்சி செய்ததாக கூறுகிறார். பெரிய புராணத்தில் கூறப்படும் கூற்றுவ நாயனார் ஒரு களப்பிர அரசர் ஆவார். கூற்றுவர் சோழர்களின் மணிமுடியை அணிந்து சோழநாட்டை ஆட்சி செய்வதற்கு எண்ணி மணிமுடியை வேண்டினார். சோழர்களின் மணிமுடியானது தில்லைவாழ் அந்தணர்களிடம் காலம்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. கூற்றுவன் சோழநாட்டின் அரசனாக இருந்தாலும் ஒரு வந்தேறி என்பதால் சோழமணிமுடியை மன்னனிடம் தரமறுத்தனர். சிறிது காலத்தின் பின்னர் அவ்வந்தணர்கள் சேரதேசம் சென்றுவிடவே கூற்றுவன் சோழமணிமுடியை குறித்தான தன் எண்ணத்தை கைவிட்டான்.

களப்பிரர்கள் பாண்டியர்களின் இரட்டை கயல் சின்னம், சோழர்களின் வேங்கை சின்னம், சேரர்களின் விற்ச்சின்னம் ஆகியவற்றையே தங்களின் சின்னங்களாக ஏற்று நாட்டை ஆட்சி செய்தனர். பூம்புகார், மதுரை உக்கிரன் கோட்டை ஆகிய நகரங்கள் தலைமை நகரங்களாக விளங்கின. மேலும் விஜயமங்கை, புல்லமங்கை, பூதமங்கை ஆகிய நகரங்கள் முக்கிய  ஸ்டார்ட்டேஜிக் சென்டர்களாக அமைந்தன. முக்கியமான படைப்பிரிவுகள், அரசநிறுவனங்கள் என்பன இங்கேயே அமைந்திருக்க வேண்டும். நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த காஞ்சிபுரம் களப்பிரர்கள் ஆட்சியின் மணிமுடியென ஒளிவீசியது. முதன்முதலில் தமிழ் வட்டெழுத்து கொண்ட கல்வெட்டுக்களை உருவாக்கி தந்தவர்கள் களப்பிரர்களே. அதுவரை இருந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் வழக்கொழிந்து தமிழ் வட்டெழுத்துக்கள் உருவானது. இவ்வட்டெழுத்துக்களே தற்போது தமிழ் எழுத்துக்களுக்கான அடிப்படையாக உள்ளது. இவர்களின் கல்வெட்டு முறையை அடியொட்டியே பல்லவர்களுக்கு, பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் கல்வெட்டுக்களை அமைத்துக்கொண்டனர்.

அத்தி கோசம் யானைப்படையும், நாற்பாத்தினை, உள்முனையர், வலைஞ்சியர் ஆகிய காலாட்படைகளும் களப்பிர அரசில் விளைந்த வீரப்படைகளாகும். கடாரம் கொண்ட சோழர்களுக்கு முன்னோடியாகவும், சங்ககால வழக்கத்தை தொடரும் வண்ணமாகவும் வலுவான கடற்படையை களப்பாள அரசு பேணிவந்தது. களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் நாடிழந்த பாண்டிய அரசர்கள் சில கிளர்ச்சிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். எனினும் அவற்றை களப்பிர அரசு வெற்றிகரமாக முறியடித்து. சோழ அரசர்கள் தங்கள் முடியை தில்லைவாழ் அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு பதுங்கிவாழ தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். சங்ககாலத்தில் பிரம்மதேயங்கள் என்ற பெயரில் மக்களின் விளைநிலங்களையும் குடித்தன பூமியையும் கையகப்படுத்தி வாழ்ந்துவந்த பிராமணர்களின் பிரம்மதேயங்களை பறிமுதல் செய்து மீண்டும் மக்களின் பாவனைக்கு வழங்கினார்கள். இந்தியா முழுவதும் அக்காலத்தில் பரவியிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிகரமான செயலாக இது அமைந்தது. வெள்ளைத்தோல் பிராமணர்களை எதிர்த்து களப்பிரர்கள் மேற்கொண்ட இந்த ஹீரோயிசம் மக்களை அவர்கள் பால் ஈர்த்துக்கொண்டது. மக்களின் மத்தியில் களப்பிரரின் கோன்மை புகழ் பெற்ற அதேவேளையில், பார்பனரின் பார்வையில் இது மிலேச்சனின் கோண்மை என ஆனது.யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்  என வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

வாழ்வியல்

மக்களின் வாழ்வு முறைகளில் பெரும் மாற்றங்கள் என எதுவும் நிகழவில்லை. தன்னிறைவான பொருளாதார முறை தொடர்ந்துவந்த நிலை இருந்தது. வைதீக மதத்தின் வீச்சம் சோபையற்று போக பௌத்தமும், சமணமும் அதை நிரப்பலாகின. வர்ணாசிரம முறையை உட்புகுத்துவதன் மூலம் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த திட்டமிட்ட பிராமண சித்தாந்தத்தால் அதிருப்தி கொண்டிருந்த தென்னகத்தோரை, யாவரும் சமம் என்ற நோக்கும் எளிமையும் நிரம்பியிருந்த பௌத்தமும் சமணமும் அதிகமாக கவர்ந்தன. எனினும் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் பெறவில்லை. குடும்பப்பெண்கள் வெறுமனே குழந்தைகள், கணவன் ஆகிய நிலைகளோடு இருந்து விட்டனர்.  மனைவியரிடம் மனம் நிறையாத ஆண்கள் விலைமகளிரை அணுகும் பழக்கமும் தொடர்ந்தது.

தற்காலத்தை போல மஜெஸ்டரேட் நீதிமன்றாகளோ, காவல் நிலையங்களோ அக்காலத்தில் இருக்கவில்லை. அரசனே நீதியின் காவலனாக இருந்தான். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட், தொட்டதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் செல்ல முடியாது என்பதால் கிராமங்கள் ரீதியாக பஞ்சாயத்து சபைகள் இருந்தன. பெரிய ஆலமரம், வெற்றிலையை குதப்பிக்கொண்டிருக்கும் முறுக்கு மீசை நாட்டாமை, நாட்டாமைக்கு ஒரு செம்புதூக்கி, நாலு பெரியமனுஷர்கள், இரண்டு வழக்காடிகள், இருநூறு வெட்டிப்பயலுகள் என பாரதிராஜா படத்துக்கு நிகராக கற்பனை செய்வது பொருந்தாது. பஞ்சாயத்து இடங்கள் கிராமத்தில் அமைந்த கோவில்களே. அவைகள் சபை எனப்படும், சபையின் தலைமையாக கிராம தேவதையே நின்றது. சங்ககாலத்தில் சாஸ்தா எனப்பட்ட ஐயனார் சபாபதியாக சேவையாற்றினார். களப்பிரர் ஆட்சியில் சாஸ்தாவுக்கு சப்போர்ட்டாக தாரா தேவி என்றொரு தெய்வம் வந்தது. இவ்வாறு கிராமங்கள் தோறும் சபைகள் செயல்பட்டு வந்தது.

கடல் வணிகத்தை பொறுத்தமட்டும் பௌத்தர்களே அதிகம் ஈடுபடலாயினர். கிழக்கே சீனதேசம் முதல் மேற்கே ரோமானிய சாம்ராஜ்யம் ஈறாக அனைத்து அரசுகளுடனும் விரிவான வணிகம் நடைபெற்றது. மட்பாண்டங்களும், மதுக்குடுவைகளும் களப்பாளர் நாட்டிற்க்கு இறக்குமதியாயின. சமணத்தின் கோட்பாட்டின் படி கடல் தாண்டுவது பாதகம் என்பதால் தரைவழி வணிகத்தில் சமணர்கள் செழிப்புற்றனர். சமகாலத்தில் நிலவிய சாதவாகன பேரரசுநாத்திக கொள்கைகளை ஆதரித்தமையால் தரைவழி வணிகர்களான சமணர்களால் அதிகம் லாபத்தை காணமுடிந்தது.

நாத்திகம்

நாஸ்திகம் (नास्तिक) என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளானது ‘வேத எதிர்ப்பு’ என்பதாகும். வைதீக கொள்கைகளால் கட்டுண்டு துன்புற்ற சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் சித்தார்த்த கௌதமரால் பௌத்தமும், இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் வழியே சமணமும் நிறுவப்பட்டன. களப்பிரர்கள் ஆட்சியில் இவை தென்னகம் முழுவது மிகவும் சிறப்புற்றன. சமணத்தை காட்டிலும் பௌத்தம் அதிக செல்வாக்குடன் திகழ்ந்தது. தியானத்தையே அடிப்படையாக கொண்ட தேரவாத பௌத்தம் ஆரம்பகாலத்தில் வேகமாக பரவியபோதும், பிற்காலத்தில் தெய்வம் இல்லாத ஒரு மார்க்கத்தை பின்பற்ற மக்கள் தயக்கம் காட்டினர். எனவே புத்தருக்கான சிலைகளும், போதிசத்துவர் சிலைகளும் ஆசியாமுழுவதும் தோற்றம் பெற்றன. இவ்வுருவ வழிபாடு மகாயானம் எனப்பட்டது.  மகாயான பௌத்தம் தமிழகத்தில் தலைதூக்கியதும் இந்நாட்களிலேயே. அக்காலத்தில் தமிழகத்தில் அமையப்பெற்ற விகாரைகள் ‘தேவகுலம்’ என அறியப்பட்டன. புத்தர் அல்லது அவரது முக்கிய சீடர்களின் அஸ்தியின் மீது விகாரைகளை கட்டுவதே பௌத்த மரபாக இருந்தது. களப்பிர ஆட்சியில் விளங்கிய விகாரைகளில் சிறப்புற்றன சில

  • பூலாங்குறிச்சி தேவகுலம், இது களப்பிரரின் கடற்படை தலைவனால் உண்டாக்கப்பட்டது.
  • கரூர் அருகில் அமைக்கப்பட்ட தேவகுலம்
  • கொங்குநாட்டின் முத்தூற்றுகூட்டம் அமைந்த தேவகுலம்
  • மதுரை நகரில் அமைந்த தேவகுலம்
  • சங்ககால தேவகுலமான புகார் தேவகுலம்
  • நாகைப்பட்டினம் சூடாமணி விகாரம்

சமணர்கள் பெரும்பாலும் மலைஉச்சிகளில் வாழ்வதையே நெறியாக கொண்டவர்கள். அவர்களின் வானியல் ஆய்வு, கருத்தாக்கம், மருத்துவம் ஆகிய தேடல்களுக்கு மலைகள் தேவையானது. எனவே சமணர்கள் இருப்பிடங்கள் மலைகளில் அமைந்தன.

  • மதுரைக்கு வடக்கே உள்ள அரிட்டாப்பட்டி மலை, இங்கு சமண தீர்த்தங்கர்களில் ஒருவரான அரிட்டநேமி(நேமிநாதர்) தங்கியதாக நம்பிக்கை
  • தூத்துக்குடி அருகே வெட்டுவான் கோயில் பகுதியில் அமைந்த மலைக்குன்று.
  • ஆனைமலை
  • மதுரை அழகர் மலை, தற்கால கள்ளழகர் கோவில்
  • பரங்குன்றம், தற்கால திருப்பரங்குன்றம்
  • கழுகு மலை
  • தமிழகத்தின் எல்லோரா என வர்ணிக்கப்படும் சித்தன்னவாசல்

ஆகிய பகுதிகள் களப்பிரர் காலத்தில் சமணர்களின் முக்கிய மையங்களாக திகழ்ந்தன. கி.பி 470 இல் வச்சிரதந்தி என்ற சமணர் திரமிளசங்கம் அமைத்தது தமிழகத்தில் சமணத்தின் எழுச்சியை உண்டாக்கியது.

கல்வி:கேள்வி:கலை

பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னைய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டு அவற்றுக்கு பிரதியீடாக வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். வெறும்5 ஆண்டு ஆட்சியிலேயே திட்டங்கள் புதிது புதிதாக தோன்றும் போது, நிலையான ஒரு அரசை உருவாக்கிய களப்பிரர்கள் பல மாற்றங்களை உருவாக்கிச் சென்றது இயல்பே.  களப்பிரர்கள் ஆட்சியில் மதுரையில் கொழுவீற்றுரிந்த கடைச்சங்கம் பொலிவிழந்து போகலானது. பாண்டியர்களின் குலஉரிமை போன்றான சங்கத்தை களப்பிரர்கள் கைவிட்டது ஆச்சரியத்துக்குரியது அல்ல. களப்பிரர் தாய் மொழி பிராகிருதம் அல்லது பாலி மொழியாக இருந்தது. எனினும் களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும்,தமிழ் கலைகளும் புனர்ஜென்மம் பெற்றன. கல்விக்கண் திறந்தனர் களப்பிர அரசர்கள். தமிழை தங்கள் தாய்மொழியாக ஏற்றனர்.

‘எழுதறிவித்தான் இறைவனாவான்’ என்ற வாக்கு மெய்யெனில் களப்பாளர் அனைவரும் மக்களின் கண்கண்ட தெய்வங்களே. சங்கம் வளர்த்து மூவேந்தர்கள் தமிழ்வளர்த்த போதும் மக்களிடையே நிலவிய கல்வியறிவு எத்தகையது என்பது வரையறைப்பதற்கு கூடியதாக இல்லை. ஆனால் களப்பிரர் ஆட்சியில் இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி கிடைக்குமாறு வகைசெய்யப்பட்டது. இதற்கான பிரதான உந்துதல் களப்பிரர் கைக்கொண்ட பௌத்தமும் சமணமுமே. கருத்தியல், வாதம், வானியல், வைத்தியம் என அனைத்து துறைகளிலும் பௌத்த பிக்குகளும், சமண துறவிகளும் அறிவும் ஆர்வமும் கொண்டிருந்தனர். பௌத்த பிக்குகள் கடல்வழி பிரயாணம் மூலம் கிழக்கு தேசங்களுக்கு சென்று புதிய சித்தாந்தங்களையும், அறிவியலையும் கோணர்ந்த வண்ணம் இருந்தனர். சமணர்கள் தம்மிடையே இருந்தவண்ணம் ஆலோசனைகள் கூட்டி புதிய கண்டுபிடிப்புகளில் மூழ்கினார்கள். கச்சி என அறியப்பட்ட காஞ்சிமாநகர் கல்வியின் உச்சமாக திகழ்ந்தது. பௌத்த ஆராமைகளும், சமணப்பள்ளிகளும் காணும் திசையெங்கும் விரிந்தவண்ணம் சென்றன. வாதமும், ஞானமும், கலைகளும், கல்வியும் செழிப்புற்றன. காஞ்சிக்கடிகை நிகரில்லா செல்வாக்குடன் திகழ்ந்த பௌத்த கல்விக்கூடமாக இருந்தது. தற்கால யூனிவேர்சிட்டி, கேம்பஸ் ஆகியவற்றுக்கு திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது போல நாடளாவிய ரீதியில் திறம் மிக்க மாணவர்கள் அனைவரும் கடிகைக்கு அனுமதி பெற்றனர். களப்பிர அரசின் ஆலோசனைக்கூடமாக திகழ்ந்த இது, பிற்காலத்தில் பல்லவர்களின் வாரிசுரிமையை தீர்மானிக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது. தற்கால ஆட்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிப்பது போல, அக்காலத்தில் கல்விமான்கள் தெரிவு செய்தனர் போலும்.  உலகப்புகழ் பெற்ற குங்-ஃபூ தமிழனான போதிதர்மர் வாழ்ந்து சீனதேசம் சென்றதும் இக்காலத்தில் நடைபெற்றதே. தின்னனார், தர்மபாலர், சூனியவாதத்தின் ஸ்தாபகரான நாகர்ஜுனர் ஆகியோரும் காஞ்சியில் தங்கி போதனைகளை செய்தனர்.

தமிழ்த்தாய் சிலம்பை மட்டும் அணிந்திருக்கையில் அவளுக்கு மேகலையும், சிந்தாமணியும் சூட்டி அழகுபார்த்தவர்கள் களப்பிரர்கள். இரட்டை காப்பியங்கள் என அறியப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பிந்தையது களப்பிரர் ஆட்சியில் எழுதப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியும் இக்கால சமணர்களின் கைவண்ணமாக உதித்ததே. மேலும் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம், பெருங்கதை ஆகிய இலக்கியங்கள் சமைக்கப்பட்டதும் இந்நாட்களிலேயே. கி.பி 407 இல் புத்ததத்தர் எனும் பிக்கு கூத்தமங்களத்தில் இருந்து அபிநயவிதாரம், புகாரில் இருந்து அபிதாம அவதாரம் ஆகிய இரு இலக்கண நூல்களை வடித்தார். நந்ததத்தம், காக்கைபாடனியம், பல்காப்பியம், பல்காயம் ஆகிய இலக்கண நூல்களும் எழுதப்பட்டது. விருத்தம், தாளிசை, துறை ஆகிய செய்யுள் வடிவங்களை தந்து தமிழ் மொழியை புதியபாதைக்கு இட்டுச்சென்றவர்களும் இவர்களே.

கலைமகள் நிச்சயம் களைப்பிரர் ஆட்சியில் களிகூர்ந்திருப்பாள். காணும் திசையெல்லாம் கானமும், ஆடலும் நிறைந்து மக்களின் மனதை நிரப்பியது. பரத்தையர்கள் என அறியப்பட்ட விலைமகளிரே நடனம் முதல் பாடல் வரை தேர்ச்சிபெற்றிருந்தனர். எனவே குலப்பெண்கள் நடனமும் கானமும் கற்பதற்கு தடை விதிக்கப்படலானது. பிற்காலத்தில் சம்பந்தர் தன் பதிகத்தில் திருவையாறின் ஒவ்வொரு வீட்டிலும் சதங்கை ஒலியும், பாடலொலியும் கேட்கும் விந்தைக்குறித்து பாடலானர். அங்ஙனம் திருவையாறு தென்னக கலைகள் கருவறையாக மாறியதற்கான அடித்தளம் களப்பிரர்கள் இட்டுச்சென்றதே. கொங்குநாட்டின் (அரசலூர்) பகுதிகளில் ஆடப்படும் கூத்துவடிவங்களின் சொற்கட்டுகளில் ஒன்றான “தா-தை” என்ற கட்டு, மணிவக்கன் தேவன் சாத்தான் என்றவாரல் ஆக்கப்பட்டது. இதுதவிர்த்து இன்னும் சிலக்கூத்து வடிவங்களும் எழலாகின.

https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-2

 

களப்பிரர் ஆட்சியை தென்னகம் ஏற்றதற்கு பிரதான காரணமாக அமைந்தது பிராமணர்களின் போக்கு. வேள்விகளுக்காக விலைநிலங்களுடன் கூடிய கிராமங்களை பிரம்மதேயமாக பிராமணர்கள் பெற்று மக்களின் உழைப்பை சுரண்டியது மன்னர்க்கும், மக்களுக்குமான தொடர்பையே அறுத்தது. வேளாளரும் வணிகரும் வியர்வை சிந்தியுழைத்ததை, விரயம் செய்யும் விஷமிகளை களப்பிரர்கள் எதிர்த்தது, மக்களின் மனதை கவர்ந்தது. காலப்போக்கில் களப்பிரர்கள் ஆட்சியும் அதே அவலத்தை மீண்டும் நிகழ்த்திகாட்டியது மக்களின் முகத்தை சுளிக்கவைத்தது.

சமணர்கள் புறஉலகில் இருந்து தங்களை விடுத்துக்கொண்ட அளவுக்கு பௌத்தர்கள் செய்யவில்லை. தாங்கள் வேரூன்றும் நாடுகளில் தங்களை அசைக்கமுடியாத சக்திகளாக மாறும் உத்தியை அவர்களின் மூளை கொண்டிருந்தது.

சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரம் என்ற புகழ்பெற்ற நூலில் பௌத்தர்களை கூறியதாவது

‘அரசே! பௌத்தர்களை நாட்டிற்கு வெளியே உள்ள புறம்பாடிகளில் மாத்திரமே தங்குவதற்கு அனுமதி வழங்கு. அவர்கள் தங்கும் விகாரைகளில் சொத்துக்களை சேரவிடாதே. அவ்வாறு சொத்துக்கள் சேருமெனில் அவற்றை நீ பறிமுதல் செய்துகொள்’  காரணம் இல்லாமல் இங்ஙனம் கூறுவதற்கு வாய்ப்பில்லை. பௌத்தர்கள் குறித்து அவர் ஏதோ ஒன்றை அறிந்தமையாலேயே அரசனை எச்சரித்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் அந்த எதிர்வுகூறல் உண்மையானது. ‘மழைக்காலங்களில் ஒதுங்குவதற்காக விகாரைகளை கட்டிக்கொள்ளுங்கள்’ என கௌதம புத்தர் கூறிச்சென்றார். அவரின் காலத்துக்கு பின்னர் விகாரைகள் அரசின் நிலவுடைமை நிறுவனங்களாகின. அளவில்லா செல்வமும், படைகளும், அதிகாரமும் விகாரைகளை நிரப்பின. மன்னரும் கையேந்தும் அளவுக்கு விகாரைகள் நுணுக்கமாகவும், செல்வசெழிப்புடனும் விளங்கின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரைக்கு பாண்டிநாட்டில் இருந்தும், கொங்குநாட்டில் இருந்தும் திரட்டப்பட்ட மொத்த வரியும் சென்று சேர்ந்தன. பிரம்மதேய நிலங்களை பறித்து மக்களிடம் ஒப்படைத்து போலவே விகாரைகளுக்கும் நிலங்களை வழங்கினார்கள்.

மனம் எனும் மாயக்குரங்கு மீண்டும் பழைய கிளைக்கே தாவிற்று. எளிமையின் மறுவுருவமாக வெளியே காட்டிக்கொண்டு, உள்ளே நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியுடனும், செல்வத்துடனும் நடந்த தன்மை மக்களின் மனதிலும், சிற்றரசர்கள் மத்தியிலும் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. ‘புறத்தியான் ஒருவன் நம்செல்வங்களை இங்ஙனம் உரிமைகொண்டாடுவதற்கு, நம்மன்னர்களே ஆண்டுவிட்டு போகட்டும்’ என நினைக்கலாயினர் குடிகள்.

இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை. மேலும் இயல்புவழிப்பாட்டில் இருந்து நிறுவனமயப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையை களப்பிரர்கள் உட்புகுத்தியதால் மக்கள் மனதில் அச்சத்துடன் கூடிய எதிர்ப்பு ஒன்று உருவானது. இது களப்பிர அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

சனாதன சீர்திருத்தம்

வடக்கிலும்,தக்காணத்திலும் பௌத்தமும் சமணமும் பல அரசுகளால் போஷிக்கப்பட்டன. கி.மு 4ம் நூற்றாண்டு முதலே அசோகரின் ஆதரவால் முன்பு எப்போதும் இல்லாத பெருமையை பௌத்தம் அடைந்தது. இலங்கையிலும், சீனத்திலும் பௌத்தம் வைரஸ் காய்ச்சல் போல வேகமாக பரவியது. பௌத்தத்தின் கொள்கைகளுக்கு நிகரான கொள்கைகளையும், ஆகம முறைகளையும் கொண்டிருந்த சமணமும் மிகவேகமாக பரவியது. இதன் விளைவால் வைதீகம் தன்னை தானே புனருத்தாரனம் செய்துகொண்டது.

வேதகாலத்தில் ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த தருணத்தில் இமாலய பழங்குடிகளுடன் பலபோர்கள் நிகழ்ந்தன. இந்த இமாலய பழங்குடிகள் தங்கள்மீது சாம்பலை பூசிக்கொண்டும், மிருகத்தோலை உடுத்திக்கொண்டும், சடைமுடியுடனும் இருந்த மூர்க்கர்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. இவர்களின் இறைவனே சிவன். பொதுவான எதிரியொருவன் தோன்றும் போது பிறர் அனைவரும் கூட்டுசேர்ந்துக்கொள்வது இயல்பே. அதன் பிரகாரம்  வைதீக கடவுள்களான இந்திரனும் அக்னியும், வருணனும் தம் புகழை இழக்க இமாலயபழங்குடி மக்களின் தலைவரான சிவனும், வேத நாயகர்களாக உருவாக்கப்பட்ட நாராயணனும், பிரம்மனும் முதன்மை பெறலாகினர். பௌத்தமும் சமணமும் போற்றிய ஜீவகாருண்யமும், சாத்வீகமும் புதிய சனாதன மதத்தின் அடிப்படை கொள்கைகளாயின. திருவிழாக்கள், உருவ வழிபாடு, பக்தி இயக்கம் என மக்களுக்காக தன்னை எளிமையாக்கிக்கொண்டது வைதீகம். சிவனுக்கென பலியாக்கப்பட்ட உயர்தர காளைகள் சிவனின் வாகனமாக்கப்பட்டது. அந்த அளவுக்கு சனாதன மார்க்கம் தன்னை சீர்திருத்திக்கொண்டது.

இவ்வாறு வேததர்மம் தன்னை சனாதன தர்மமாக சீர்திருத்திக்கொண்ட சமயத்தில் பௌத்தர்கள் கலையில் மறுமலர்ச்சி செய்த  குஷணர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. பலமான பௌத்த அரசு வீழ்ச்சியடைந்தது பிராமணர்களுக்கு வசதியானது. குஷணர்களை தொடர்ந்து ஆட்சியமைத்த பாரசிவர்கள்,வாகடகர்கள் ஆகியோர் சிவனை ஏற்றுக்கொண்டு தீவிரமாக சைவத்தை பின்பற்றினார்கள். வடக்கே மெல்லமெல்ல நாத்திக கோட்பாடுகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் லகுலீசார் என்பவரால் உருவாக்கப்பட்ட பாசுபதம்என்ற சைவப்பிரிவு சமணர்களையும், பௌத்தர்களையும் அழிப்பதையே நோக்காக கொண்டு செயற்பட்டன. லகுலீசரின் சீடர்கள் காளாமுகம், கபாலிகம் என மேலும் இரண்டு பிரிவுகளை உருவாக்கி நாத்திக வாதங்களை அறுத்தனர்.

களப்பிரர்கள் தமிழகத்தில் ஆட்சியமைத்த வேளையில் வடக்கே இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் பார்ப்பனிய ஆட்சியான குப்தர்கள் காலம் தொடங்கியது. ‘வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு’ என்றது களப்பிரர் வரலாற்றில் உண்மை. களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏதோ ஒரு வகையில் துணைசெய்த குப்தர்களும், களப்பிரர் ஆட்சி உருவான அதே காலத்தில் உருவானவர்களே. வலுமிக்க குப்த அரசர்களால் சனாதன தர்மம் தழைத்தத்து. மேலும் களப்பிரர்கள் ஆட்சியமைத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலான பின்னர் (கி.பி 4ம் நூற்றாண்டின் இறுதி) பல்லவர்கள் என்ற புதிய மன்னர்குலம் தோற்றம் பெற்று வளர்ந்தது. நெல்லூர் பகுதியில் ஆட்சியமைத்த இவர்களில் மூத்தவரான ஸ்கந்தவர்மர் களப்பிரர்களின் மணிமுடியென விளங்கிய காஞ்சிநகரை கைப்பற்றினார். கல்வியில் சிறந்த காஞ்சியை இழந்தமையே களப்பிரர் அரசின் முதல் சரிவாக அமைந்தது. எனினும் பிற்காலத்தில் களப்பிரர் மீண்டும் காஞ்சியை கைப்பற்றினர். காஞ்சி ஒரு இழுபறிநிலையில் இருந்தது. பல்லவர் விஷ்ணுகோபர் காஞ்சியை ஆண்ட வேளையில், 1ம் சமுத்திரகுப்தர் காஞ்சியை தாக்கி வெற்றிக்கொண்டார்.

குப்தர்களின் ஆதிக்கம் இந்தியா முழுவதும் உயர்ந்தது. தமிழகத்திலும் நாத்திகவாதிகளான களப்பிரர்களுக்கு எதிரான ஒரு மனோநிலை உருவாகி வலுப்பெற்றது. நிலவிய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பல்லவர்கள் தலைவரான சிம்மவிஷ்ணு களப்பிரர் ஆட்சியில் இருந்த வடக்கு தமிழகம், சோழநாடு ஆகியவற்றை தாக்கினார். களப்பிரர் ஆட்சியால் மனக்கலக்கம் கொண்ட சிற்றரசர்கள் தஞ்சாவூர் முத்தரையர் தலைமையில் பாண்டிய அரசன் கடுங்கோனின் படைகளுடன் அணிவகுத்து பாண்டியநாட்டையும் அதன் சுற்றுவட்டத்தையும் விடுவித்தனர். பல்லாண்டு வஞ்சத்தை தீர்க்கும் வண்ணமாக களப்பிரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். ஆனால் அழிக்கப்படவில்லை. காவேரிக்கரையில் ஒரு சிற்றரசென வாழுமாறு பாண்டியர்களும், பல்லவர்களுக்கு விட்டுச்சென்றனர். எண்ணம் தோன்றும் போதெல்லாம் அவர்களை தாக்கி மகிழ்வுறுவதற்கு போலும். மரணத்தை காட்டிலும் கொடுமையானது உரிமைகளும், கௌரவமும் பறிக்கப்படுவது. அத்தகைய குரூரநிலையை நம்மன்னர்கள் களப்பிரருக்கு விட்டுச்சென்றனர்.

வஞ்சம் தீர்த்தல்

களப்பிரர் ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்த பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்ததும் களப்பிரர் புகழ்ப்பாடிய அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரை தடம் தெரியாது அழிக்கப்பட்டது. புத்தசிலைகள் உடைத்தெரியப்பட்டன. சமணம், பௌத்தம் ஆகியவற்றால் அதிகம் பாதிப்புற்ற பிராமணர்களின் கைங்கரியமாகவே இவைகள் நிகழ்த்தப்பட்டன. காஞ்சி பல்லவர்கள் ஆட்சிக்குள் வந்த பின்னும் அங்கு இருந்த பௌத்த விகாரைகள், கடிகைகள் எல்லாம் தன்னியல்புடன் செயற்பட்டன. எனினும் அவற்றிடையே புதிய வேத கல்விக்கூடங்களும், சமஸ்கிருத மொழி கடிகைகளும் தோற்றம் பெற்றுவந்தன. காஞ்சிக்கடிகையில் பிராமணர்களும், பல்லவ அரசகுடியில் பிறந்த பீமவர்மரின் வாரிசுகளும் உறுப்பினர்களாயினர். மெல்ல மெல்ல பௌத்தவாதம் நீக்கப்பட்ட வண்ணம் சென்றது.

களப்பிரர்களால் நிலம் இழந்த பிராமணர்கலின் வாரிசுகள் பலர் பிற்கால பாண்டிய பல்லவர்களிடம் முறையிட்டு வேண்டி அந்நிலங்களை மீண்டும் வசப்படுத்திக்கொண்டனர். இந்நிலங்களை மீட்டு பிராமணர்களுக்கு ஒப்படைப்பது பெரும் புண்ணியமாக கருதினர் மன்னர்கள். ஐடில வர்மன் என்ற பாண்டியன், காமாக்கினி நற்சிங்கன் எனும் பிராமணனுக்கு பிரம்மதேயத்தை மீட்டளித்ததன் முகமாக வேள்விக்குடி செப்பேடுகளைவெளியிட்டான். தமிழக வரலாற்றில் இது இன்னும் முதன்மை செப்பேடாக உள்ளது. தொடர்ச்சியாக பல பாண்டிய அரசர்கள் இங்ஙனம் பிரம்மதேயங்களை மீட்டு பிராமணர்களுக்கு கொடுத்தவண்ணம் சென்றனர். களப்பிரர் ஆட்சியில் ஸ்டராடெஜிக் மையங்களாக விளங்கிய கூதமங்கை, புல்லமங்கை, விஜயமங்கை ஆகிய ஊர்கள் முழுவதும் பிராமணர்களுக்கு சமர்ப்பணமாகின. அதைதொடர்ந்தே அவ்வூர்கள் மங்களம் என்ற புதிய சேர்க்கையுடன் கூதமங்களம், விஜயமங்களம் என பெயர் மாற்றம் பெற்றன. சமணர்களும் பௌத்தர்களும் தங்கிய மடங்கள் கோவில்களாக்கப்பட்டன. அழகர்மலையை விஷ்ணுவும், பரங்குன்றதை முருகனும், அரிட்டாபட்டியை சிவனும் பங்கிட்டுக்கொண்டனர்.

சிற்றரசர்களாக சிறுமையுடன் வாழ்ந்த களப்பிரர் தம் எழுச்சிக்காக குண்டலகேசி, வளையாபதி உள்ளிட்ட காவியங்களை உருவாக்கினர். எனினும் அவ்வெழுச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தாற்போல் அக்காவியங்களுடன் சேர்த்து களப்பிர படைகளும் அழிக்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைகள் பற்றிப்பேசும் நம்மவர்கள் ஒரு விடயத்தை அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள். இவற்றின் உச்சகட்டமாக 7ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம் மதச்சுத்திகரிப்பை தமிழகத்தில் உண்டுபண்ணியது. நாவுக்கரசரால் பல்லவன் 1ம் மகேந்திர வர்மரும், சம்பந்தரால் நின்றசீர் நெடுமாறனும் சைவ சமயத்தை தழுவினர். இதன் விளைவாக தமிழகத்தில் எஞ்சிய சமணமும், பௌத்தமும் கூட நலிந்து போனது. நன்னூல் எழுதி தமிழ்வளர்த்த சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவேற்றி கொலைசெய்யப்பட்டனர் நின்றசீர் நெடுமாறனின் ஆட்சியில் அதுவும் உமையாளிடம் பாலுண்ட சம்பந்தரின் கண் முன்னே!

இருண்டது காலம்

களப்பிரர்; சங்கத்துடன் சுருங்கிப்போன தமிழ்த்தாய்க்கு ஐம்பெருங்காப்பியம் என அணிசெய்து அழகு பார்த்தவர்கள். நன்னூல் என இலக்கணம் அமைத்து தமிழை காத்தவர்கள். எண்ணில்லா தமிழ் பொக்கிஷங்களைக்கொண்டு தமிழ்க்கருவூலத்தை நிறைந்தவர்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்திப்பாசுரம் பாட இசைக்களத்தை வலுவூட்டிவிட்டு சென்றவர்கள். கல்விக்கண் திறந்து அறிவை போற்றியவர்கள். முடியுடை மூவேந்தரையும் ஒற்றைக்களத்தில் வென்றவர்கள். மக்களின் நிலங்கள் மக்களையே சாரும் என முழக்கமிட்டு கூறியவர்கள். சாதிப்பாகுபாடு என்ற சாத்தானை அழித்தவர்கள். அட்டைகள் போல தான் உழைக்காமல் பிறரின் உழைப்பில் வயிறுவளர்த்த கயவர்களுக்கு பாடம் புகட்டியவர்கள். சங்ககால மன்னர்களை முதன்முறை வென்ற புறதேசத்தவர்கள். தாய்மொழி வேறாகினும் தமிழ்வளர்த்த மாந்தர்கள். கைக்கொண்டது வேற்று மதம் என்ற போதும் பிறதை ஒறுக்காத தன்மைகொண்டவர்கள்.

வரலாறு தோறும் வென்றவர்கள் தோற்றவர்களின் பெருமையை அழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் களப்பிரர் வரலாற்றுக்கு இணையாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறு உலகில் மிகச்சொற்பமே. களப்பிரர் எழுதிய காவியங்கள் எரியூட்டப்பட்டும், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டும், வழிபாட்டுதளங்கள் தடம் மாற்றப்பட்டும் போனது. பல்லவ பாண்டிய வெற்றி எனும் வேள்வியில் பார்ப்பனியத்தால் களப்பிரர் வரலாறு ஆகுதியாக்கப்பட்டது. அதன் கரிப்புகை அவர்களின் ஆட்சியை இன்றளவும் இருண்ட காலம் என்ற பெயரை தாங்கவைத்துவிட்டது. வைதீகத்தை அவர்கள் போற்றியிருந்தால் இந்நேரம் தமிழக வரலாற்றின் பொற்காலமாக அறியப்பட்டு இருப்பார்களோ என்னவோ?

முடிவாக…

எந்த ஒரு விடயத்தையும் நாம் நேசிக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. எல்லையற்று நாம் செய்யும் அன்பும், பற்றும் நிச்சயம் பிரிதை அழிக்கும். தமிழ் மீது தமிழர்களாக நாம் வைத்திருக்கும் அளவற்ற பற்று சோழர்களையும், பாண்டியர்களையும், சேரர்களையும் மீறி நம் வரலாற்றை பார்ப்பதற்கு விடுவதில்லை. பல்லவர்கள் நம் வரலாற்றுக்கு செய்துவிட்டு போனதையே நாம் அலட்டிக்கொள்ளாத போது களப்பிரரை கண்டுகொள்ளாதது வியப்பில்லை. சமகாலத்தில் பல அறிஞர்கள் தமிழக வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஒளியூட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றால் தமிழர் வரலாற்றின் மெய்யான சிறப்பு இலகுவில் விளங்கும்.

 

வரலாறு என்ற தலைப்பை நாம் அணுகும் போதும் நடுநிலையும், நேர்மையும் நிச்சயமாக அவசியம். அப்போதே திருத்தமான வரலாற்றை அறிய இயலும். ஏனெனில் வரலாறு ஒரு சமூகத்தின் அத்திவாரங்கள்.

https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-3

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.