Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்மையாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? – தமிழக, ஈழ அரசியல் பரப்பில் ஓர் ஆய்வு- முத்துச்செழியன்-


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.kaakam.com/?p=1814

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ விடுதலை, தமிழின விடுதலை, தமிழினவெழுச்சி போன்ற சொற்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துவனவாக அரசியல் அரங்கில் இடைவிடாது ஒலிக்கப்பட்டு வந்தன. தமிழிய சிந்தனைத்தளத்தில் செயலாற்றும் முனைப்புக்கொண்ட புரட்சிகரமானோர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை, தமிழ்த்தேசிய மீட்சி போன்ற சொல்லாடல்கள் வெகுமக்களிடத்தில் பேசப்படும் நிலைக்கு எட்டாவிட்டாலும் பேசுபொருளாக இருந்தமையை இங்கு சுட்ட வேண்டும்.

மகாவம்ச மனப்பிறழ்வின் உச்சத்தில் நின்று வெறிபிடித்தாடிய சிங்கள பௌத்த பேரினவெறியின் நேரடி நரபலி வெறியானது தமிழர்களைக் கொன்றொழித்துத் தமிழர் தாயகநிலங்களை வன்கவர்ந்து, தமிழர்தேசத்தை இல்லாதொழித்து, முழு இலங்கைத்தீவினையும் சிங்கள பௌத்த நாடாக்கும் முனைப்பானது, பிரித்தானிய வல்லாண்மையாளரிடமிருந்து சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஆட்சியதிகாரம் ஒற்றையாட்சி வடிவமாக கைமாறப்பட்ட நாள்முதல் நடந்தேறி வந்ததால், தமிழர் அரசியலானது ஒரு தற்காப்பு நிலையில் அறவழியில் ஒப்பந்தங்கள் எனத் தொடங்கி அமைதிவழியில் போராட்டங்கள் என்றாகிப் பின் அமைதிவழியில் ஒத்துழையாப் போராட்டங்களாக வடிவமாற்றத்திற்குட்பட்டு, ஈற்றில் இலங்கைத்தீவில் தமிழினம் உளதாயிருப்பதற்கு பிரிந்துசென்று தன்னாட்சிகொண்ட தனியரசை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று அமைதிவழிப் போராட்டத் தலைமை 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலைப் பயன்படுத்தி மக்களாணையையும் பெற்றுக்கொடுத்ததோடு, ஒட்டுமொத்த தமிழர்களும் இனித் தனிநாடு அமைப்பதொன்றே வழியென ஏற்றுக்கொண்டு தமிழர்களின் அரசியல் போராட்டமானது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற வழிமுறையேற்ற வரலாற்று முன்னகர்வு தமிழீழ அரசியலில் நடந்தேறியது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பாக, இலங்கைத்தீவில் தமிழர் அரசியலில் ஓரளவுக்கு நம்பிக்கையைப் பெற்றவர்களாக தமிழ்மொழிப் பற்றாளர்களோ அல்லது தமிழின உணர்வாளர்களோ தான் இருந்தார்கள். தமிழ்த்தேசியப் பற்றாளர்களோ அல்லது தமிழ்த்தேசிய அரசியற் பண்பாடோ வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பு இருக்கவில்லை.

வேறுபடுத்தி உணர்க- தமிழ்மொழிப்பற்று, தமிழினப்பற்று, தமிழ்த்தேசியப்பற்று

தமிழ்மொழிப்பற்றுக் கொண்டோர் எல்லோரும் தமிழினப்பற்றுடன் இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. தமிழினப்பற்றுக் கொண்டோர் தமிழ்த்தேசியக் கருத்தியலை உள்வாங்கியவர்கள் என்று முடிவு செய்வது மிகத் தவறானது.  “எனது மொழி தமிழ்” என்ற பெருமித உணர்வாலோ, அல்லது தமிழ்மொழி சார்ந்த புலமையாலோ, மொழி குறித்த உணர்வாலோ, அல்லது தனது தாய்மொழியென்பதால் ஏற்பட்ட பற்றோ அல்லது மொழிகளுக்கெல்லாம் தாய் என்பதால் ஏற்பட்ட சிலிர்ப்பின் விளைவாலோ என்னவோ தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டோர் எல்லோரிடமும் தமிழினப்பற்று இருக்குமென்றில்லை.

எடுத்துக்காட்டாக, சைவத்தமிழ் என்று வாயாரத் தமிழ்பேசி, தம்மை நன்கே இறைவன் படைத்ததே நன்கே தமிழ்செய்யுமாறே என தமிழை உயிராய் நேசித்து, கோயில் வீதிகளில் மேடை போட்டுத் தமிழ்மொழிப்பற்றை வெளிப்படுத்திய எத்தனையோ மொழிப்பற்றாளர்கள், அதே கோயிலுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படாத “பஞ்சமர்” என்ற ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தமிழில் புலமையடைந்தாலோ அல்லது தமிழை வளர்த்தாலோ அதைக்கண்டு வெறுப்படைந்தவர்களாகவும் அவர்களிடத்தில் தமிழ் வளரக்கூடாதென்றும் சிந்தை கொண்டார்கள் என்பதை மறைக்க முடியாது. அப்படியாக, அவர்களின் தமிழ்மொழிப்பற்று என்பது இனத்துடன் எந்தவொரு தொடர்புமின்றி இருந்தது. தமிழினம் எழுச்சிகொள்ளல் என்ற சிந்தை அவர்களிடம் இருக்கவில்லை. தாம் பற்றுக்கொண்டிருக்கும் தமது தாய்மொழி தமிழால், அதே தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அதே இனத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பெருமைகொள்ளக் கூடாது என்ற வஞ்ச உணர்வுகொண்ட, இனவுணர்வற்ற தமிழ்மொழிப் பற்றாளர்கள் இருந்துள்ளார்கள். இருக்கிறார்கள்.

தமிழினப்பற்றுக் கொண்டோரெல்லாம் தமிழ்த்தேசியர்கள் என்று சொல்ல முடியாது. பலருக்கு “நாம் தமிழர்கள்”, “நமது இனம் தமிழினம்” என்ற இனவுணர்வு இருக்கும். தமிழினப்பெருமை பேசுவார்கள். தமிழினம் தான் அறத்துடனும் மறத்துடனும் வாழ்ந்த தொன்மையான வரலாற்றினைக்கொண்டது எனவும் சிலாகிப்பார்கள். ஆனால், அவர்கள் தாம் இலங்கைத் தமிழர்கள் என்றும் இந்தியத் தமிழர்கள் என்று விளிப்பதைப் பற்றி சற்றும் கவலைகொள்ளார்கள். இலங்கைத்தீவில் வாழும் அத்தகைய தமிழினப் பற்றாளர்கள் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணி போட்டியில் வெல்ல வேண்டுமென காலையில் கோயிலுக்குப் போய்த் தேங்காயும் உடைப்பார்கள். சிறிலங்காவின் அறிவிக்கப்படாத தூதுவர்களாகச் செயற்படும் துடுப்பாட்ட வீரர்களை படமாகத் தமது வீட்டுச் சுவர்களில் மாட்டி அழகும் பார்ப்பார்கள். சிறிலங்காவுக்கு உலகளவில் புகழ்சேர்த்து “இனப்படுகொலை சிறிலங்கா” என உலகளவில் அறியப்படவேண்டிய சிறிலங்காவை “சிறிலங்கா கிரிக்கெட்” என மடைமாற்ற உதவும் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதையிட்டு சிறிதளவும் நாண மாட்டார்கள். முள்ளிவாய்க்காலில் வந்து விளக்கும் ஏற்றுவார்கள். இவர்களின் வர்க்கப் பண்பு, அரசியல் பண்பு, வாழ்நிலைப்பண்பு என்பன சார்ந்து இவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்களாக வாழுவதில் எந்தவொரு சிக்கலும் இவர்களுக்கில்லை எனத் திடமாக நம்புகிறார்கள். இவர்களால் இலங்கைத்தீவில் தமிழர்களாக மகிழ்வுடன் வாழ இயலுமென மனதார நம்புகிறார்கள். ஆனால், புரட்சி வேசத்திற்காக அதனை வெளியே சொல்லாமல் தமிழீழம் தான் தமக்கு வேண்டுமெனக் கதைவிடுவார்கள். இவர்களிடம் தமிழினப் பற்று அல்லது தமிழினவுணர்வு இருக்கலாம். ஆனால், தமிழ்த்தேசிய உணர்வு இருக்காது.

அதேபோல், தமிழ்நாட்டில் வாழும் தமிழினவுணர்வாளர்களில் பலர் சீனா- இந்தியா, பாகித்தான் – இந்தியா எல்லையில் பதட்டம் என செய்தி வந்த மறுகணமே இந்தியப் பற்றில் மூழ்கிவிடுவார்கள். இந்தியத் துடுப்பாட்ட அணியை வெறித்தனமாக நேசிப்பார்கள். அவர்களிடம் இந்தியப் பற்று இருக்கும். இப்படியான தமிழினவுணர்வாளர்கள் அதிகம் பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் தமிழ்த்தேசியர்கள் அன்று.

தமிழினவுணர்வாளர்களின் இந்தியப்பற்றிற்கு மூலம் எது?

பிரித்தானியர்கள் இந்தியத்துணைக் கண்டத்திற்கு வரும் வரை இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை என்பதால் இந்தியப் பற்று என்பது தமிழர்களிடத்தில் எப்படித் தோன்றியது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது ஆட்சி நிருவாக நலன்களுக்காகவும் சந்தை நலனுக்காகவும் பிரித்தானிய இந்தியா என்பதை ஒரு நாடாகக் கட்டியாண்டார்கள். உண்மையில், இன்று இந்தியா எனக் குறிப்பிடப்படும் நாட்டு எல்லைக்குள் தமக்கெனத் தனித்த மொழியுடன் தேசிய இனங்களாக வளர்ச்சி பெற்ற பல தேசிய இனங்களும், தேசிய இனமாக வளர்ச்சியடையாத மரபினங்கள் மற்றும் பழங்குடிகள் போன்றோரே மக்கள் சமூகமாக வாழ்ந்து வந்தார்கள். அப்படியாக, பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பிரித்தானிய, தமது முகவர்களான பிராமணிய- பனியா கும்பலிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். பிரித்தானியர் இந்தியாவை உருவாக்கும் போது அதற்குள் சிறைப்படுத்தப்பட்ட பல்வேறு தேசிய இனங்களுக்குள் தமிழ்த்தேசிய இனம் மட்டுமே ஒரு தேசமாகத் தன்னை வரலாற்றின் போக்கில் வளர்த்தெடுத்த வரலாற்றினைக் கொண்டிருந்தது. தமிழர்தேசத்தின் எல்லைகள் வரையறுப்பு, தமிழகம் என்ற சொற் பயன்பாடு என்பன ஏலவே தமிழர்களின் தொன்மையான இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது.

ஆட்சிப்புல அடிப்படையில் தமிழர் நாடுகளாக எல்லைகள் மாறி வந்தாலும், தமிழர்கள் ஒரு தேசத்திற்குரிய பண்புகளைப் பெருமளவு கொண்டிருந்தார்கள். எனவே, “வெள்ளையனே வெளியேறு” என தமிழர்கள் போராடியது இந்தியப் பற்றால் அல்ல. மாறாக, வன்வளைத்த மாற்றாரை விரட்டியடிக்கும் தேசப் பற்றினாலேயே. பூலித்தேவன், வென்னிகாலாடி, வேலுநாச்சியார், மருது இருவர், அழகுமுத்துக் கோனார், தீரன் சின்னமலை போன்ற முன்னோர்கள் வெள்ளையனை எதிர்த்து மிகத்தீவிரமாக போராடியதோடு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவுவதற்கு அடித்தளமிட்டு அதனைச் சாத்தியமாக்கியவர் செண்பகராமன்பிள்ளை என்ற தமிழரே. இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து வெள்ளையனை விரட்ட செருக்களமாடித் தமது இன்னுயிர்களை நீத்தவர்களில் தமிழர்களே அதிகம். அக்களத்தில் தமிழர்களில் ஆதிக்கநிலையிலிருந்த சாதிச் சமூகங்கள் முதல் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த சாதிச் சமூகங்கள் என எந்தவொரு வேறுபாடும் அந்த விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் இல்லாதவாறு தமிழினம் போர்க்கோலம் கொண்டது. இதனாலேதான், இன்னொரு பிறவியெடுத்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என நேதாஜி சுபாஸ் சந்திரபோசே கூறியுள்ளார். இவ்வாறாக, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வெள்ளையனை விரட்டியடித்ததில் தமிழர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பதனால், தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களிடத்தில் இந்தியப் பற்றுக் குடிகொண்டு விட்டது. உண்மையில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து ஆட்சியதிகாரம் தமிழரின் வரலாற்றுப் பகையான ஆரிய- பிராமணிய அதிகாரக் கும்பலிடம் கைமாறியதை இந்திய விடுதலைக்காக உயிரைக்கொடுத்துப் போராடிய தமிழர்கள் உணராமையினால், இந்தியாவினைத் தாம் குருதி சிந்திப்பெற்ற தமது நாடு என தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்பித் தொலைத்துவிட்டார்கள். அதனால், எவ்வளவுதான் இனவுணர்வு மேலிட்டு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் பெரும்பாலானோரிடம் எல்லையில் பதட்டம் என்ற செய்தியைக் கண்டவுடன் இந்தியப் பற்று வந்துவிடுகிறது. இந்த மாயையானது, தமிழ்நாடு விடுதலை என்ற தேச விடுதலைப் பயணத்தில் இன்று வரை முட்டுக்கட்டையாகத் தொடர்கின்றது.

எனினும், பிரித்தானியரிடமிருந்து தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் ஆட்சியதிகாரம் ஆரிய பிராமணிய- பனியாக்களிடம் கைமாறிய பின்பாக, அவர்கள் கைக்கொண்ட இந்து- இந்தி- இந்தியா என்ற அரசியலில், இந்தியா என்ற ஒற்றைச் சந்தைச் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாத தமிழர்களும், தமிழர் மெய்யியலை மடைமாற்றி வைத்திருக்கும் வைதீகக் குளறுபடிகளைப் புரிந்துகொள்ளாத தமிழர்களும் கூட, தமது தமிழ்மொழி மீதான இந்தியின் மேலாதிக்கத்தை உணர்ந்து அதனால் கொதிப்படைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை தமிழ்மொழிப் பற்றின் மேலீட்டால் எதிர்த்து உயிர்கொடுத்துப் போராடினார்கள். அந்த மொழியுணர்வை இனவுணர்வாக மெலெழ விடாமல், திராவிட வாக்குப் பொறுக்கும் அரசியலானது இல்லாத ஒன்றான திராவிடம் என்ற மாயையில் தமிழர்களை விழச் செய்து, தமிழ்நாடு என்ற தேசஅரசு அமைக்கும் அரசியலில் தமிழர்கள் அரசியல்மயப்படுவதை மடைமாற்றி திராவிட பொய்மைக்குள் தமிழர்களின் அரசியலை செயலற்றுப்போகச் செய்தது.

அத்துடன், அரசறிவியலில் நல்ல புரிதல்கொண்ட தமிழறிவர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை என்பதை வெற்று முழக்கமாக இல்லாமல் ஒரு தேச விடுதலையாக விளங்கி அந்த அரசியலை முன்னெடுக்கும் முனைப்பு இருந்தும் அது வெறும் பேச்சுகளுடன் கலைந்துவிட்டது. ஆனால், 1980 களின் தொடக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் போன்ற தமிழறிவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழ்நாடு விடுதலைப்படையானது தோழர் தமிழரசன் தலைமையில் உயிரீகம் செய்யத் துணிந்து மறவழியில் போராட எடுத்த முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் வெகுமக்களிடத்தில் தமிழ்நாடு தேசவிடுதலை பற்றிய தேவை உணரப்படாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களில் மொழி, இன உணர்வு கொண்டோரும் கூட தமிழ்த்தேசிய உணர்வு பெறாமல் வாழ்ந்தமை எனலாம்.

இதனாலேயே, ஆயிரங்குறைகள் கண்டும், தமிழீழத்தில் தந்தை செல்வா தலைமையிலான அமைதிவழிப் போராட்டத்தின் இயங்கியல் வளர்ச்சியானது, தமிழர் அரசியலை முன்னோக்கிக் கொண்டு சென்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தன்னாட்சியுரிமைகொண்ட நிகரமைத் தனிநாடு அமைப்பதென்பதே தமிழர்களுக்கான தீர்வு என்ற தெளிவு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் அதற்கு மக்களாணையும் கொடுத்தனர். அதனாலே தான், ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் மேற்கொண்ட வங்கிக்கொள்ளைகளை, தமிழீழ தேசிய இனவிடுதலைக்கான பொருண்மிய அடித்தளத்தை அமைக்கும் அரசியற் செயற்பாடு என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் மொழிப்பற்றை தமிழினவுணர்வாகவும் அதைத் தொடந்து தமிழ்த்தேசிய உணர்வாகவும் வளர்க்காமல், எடுத்ததிற்கெல்லாம் பார்ப்பானைத் திட்டிவிட்டுக் கலைந்து செல்லும் திராவிட மாயை அரசியலில் தமிழர்கள் வீழ்த்தப்பட்டதால், தோழர் தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படை மேற்கொண்ட வங்கிக்கொள்ளையானது பொதுமக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படும் அவலம் நிகழ்ந்தது. ஏனெனில், தமிழீழத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை முன்சென்ற அரசியலானது தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படாமல் போனதால் தமிழ்நாட்டில் வெகுமக்களிடத்தில் தமிழ்நாடு தேசவிடுதலை குறித்த புரிதல் ஏற்படவில்லை.  எனவே, தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலர வேண்டுமெனின், தமிழீழத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை முன்சென்ற அரசியல் போன்றொரு அரசியல் இலக்கையாவது நோக்கிப் பயணிக்கும் அரசியலானது தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன?

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்தேசங்களை விடுதலையடையச் செய்வதற்கான கருத்தியல் என வரையறுக்கலாம். அதாவது, தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழர்தேசங்களினை இறைமையுடைய தன்னாட்சியுரிமை உடைய தேச அரசுகளாக நிறுவுவதனை இலக்காகக்கொண்டு பயணிப்பவர்களினை வழிநடத்தும் கருத்தியல் தமிழ்த்தேசியக் கருத்தியல் எனலாம்.

எனின், உலகம் தழுவி வாழும் தமிழர்கள் எல்லோரும் ஒரே அரசியற் பண்பும் அரசியற் தேவையும் கொண்டோரா எனத் தெளிந்து கொள்ளல் வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் வேரானது தமிழீழத்திலேயோ அல்லது தமிழ்நாட்டிலேயோ தான் இருக்கும். தமிழர்கள் வெறுமனே ஒரு மரபினமோ அல்லது கலப்பினமோ அல்லது மதச் சிறுபான்மையினரோ அன்று. தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்பினர்கள் என்ற புரிதல் இன்றியமையாதது.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அடிப்படையில் உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என்பதற்கமைவாக, தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர்கள் தேசமாக வாழ்கிறார்கள். எனவே, தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரு தமிழர்களின் தேசங்கள் தன்னாட்சியுரிமைக்கு இயல்பாகவே உரித்துடையவையாகின்றன. எனவே, இந்தியத்தின் நேரடி ஒடுக்குமுறையில் இருந்து தமிழ்நாடும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நேரடி ஒடுக்குமுறையிலிருந்து தமிழீழமும் தமது அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து தமிழ்நாடு, தமிழீழம் என்ற தேசஅரசுகளை நிறுவ வேண்டும்.

இலங்கைத்தீவில், மலையகத்தில் வாழும் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு உறுப்பு. அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களெனினும் மலையகத் தமிழர் ஒரு தேசமாக இன்னமும் அரசியற் கட்டுறுதியைப் பெறவில்லை. அவர்கள் ஒரு தேசிய இனமாகத் தாம் வாழும் நாட்டின் எல்லைப் பரப்பிற்குள் அதிகாரப்பரவலாக்கம் வேண்டித் தம்மைக் கட்டுறுதியான அரசியற்சமூகமாக வளர்த்தெடுத்து தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு உறுப்பென தலைநிமிர்ந்து வாழும் வகையிலான அரசியலை உலகத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் மொழிச்சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் அவர்கள் கொள்வினை, கொடுப்பினை கொண்டு உள்ளத்தால் பிணைந்திருக்கும் தமது தேசவிடுதலைக்குப் (தமிழீழம்/ தமிழ்நாடு) பாடுபட வேண்டும். தாம் வாழும் நாடுகளில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைத் தன்னும் உச்ச அளவில் பயன்படுத்தித் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்புகளாகத் தாம் வாழுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

வெள்ளையர் காலத்தில் மொரீசியஸ், பிஜித்தீவு, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா எனப் புலம்பெயர்ந்து தலைமுறைகளாக அங்கு வாழ்வதால் தமது தாயகத்துடன் தொடர்பறுந்து போன தமிழர்கள் தம்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்பாக அரசியற் கட்டுறுதி செய்து அந்தந்த நாடுகளில் இருக்கும் அதிகாரங்களைத் தம்மாலியன்றளவு பெற்று தமிழினவுணர்வு பெற்று வாழ வேண்டும். இப்படியாக உலகம் தழுவி வாழும் தமிழர்கள் வெவ்வேறு அரசியற் பண்பினைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணை பிரியாத உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தமிழர்கள் அரசியற் பார்வை பெற வேண்டும்.

2009 இன் பின்பாக தமிழீழத்தில் நிகழ்வது என்ன வகையான அரசியல்?

தமிழீழதேசத்தை சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையின் வன்கவர்வில் இருந்து மீட்டு தன்னாட்சியுரிமையுடன் தேச அரசமைப்பதில் கூடுதலான படிக்கட்டுகளில் ஏறிச்சென்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இயங்கியலே தமிழ்த்தேசிய அரசியல் வழிப்பட்டது. மறவழியில் முன்னெடுக்கப்பட்ட அந்த தேசிய இனவிடுதலைப் போராட்டமானது தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் அரசியல் நலன்கட்காகவும் மற்றும் அதன் தமிழினப் பகைமையினாலும், உலக வல்லாண்மைகளின் சந்தை நலன்களுக்காகவும் அவர்களின் ஒத்துழைப்பால் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படையான தமிழினவழிப்பானது 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சத்தைத் தொட்டது. அப்படியொரு கொடிய இனவழிப்பைச் செய்து சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழீழதேசத்தை வன்கவர்ந்த பின்பு, தமிழினம் உளதாயிருப்பதற்கு தனியரசை நிறுவுதல் ஒன்றே அறம். வேறு தீர்வுகளில் இனப்படுகொலைக்குள்ளான இனம் நம்பிக்கைகொள்வதானது அந்த இனம் தற்கொலைசெய்துகொள்வதற்குச் சமம்.

எனவே, மறவழிப்போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் ஆற்றல்வளம் கொண்ட தேசிய இயக்கம் தமிழர்களிடத்தில் இப்போதைக்கு உருவாக முடியாமலிருக்கின்றதெனின், அறவழியில் அந்த அரசியல் இலக்கை நோக்கித் தொடர்ந்து இயங்கும் தொடர்ச்சியைப் பேண 6 ஆம் திருத்தம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டம் இடந்தராது எனின், சிங்கள அரச நிருவாகங்களை முடக்கிப்போடும் ஒத்துழையாப் போராட்டங்களாயாவது முன்னெடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டை மீறமாட்டேன் என உறுதிமொழி எடுத்து சிங்களப் பாராளுமன்றம் போய் கூச்சலிடுவதை அரசியலாக முன்னெடுக்க முனைவோர், வாக்குப் பொறுக்கதமிழ்த்தேசியம்என்ற சொல்லை மலினமாகப் பயன்படுத்தி அந்த உயரிய தேச அரசமைக்கும் விடுதலைக் கருத்தியலை பொருட்கோடல் செய்கின்றனர். தமிழ்மொழி உணர்வு, தமிழினவுணர்வு அரசியலைக் கூட சரியாக முன்னெடுக்க முடியாத கொழும்பு மேட்டுக்குடிகளைத் தலைமையாகக் கொண்ட கட்சிகள்தமிழ்த்தேசியம்என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

உண்மையில்…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது இலங்கைத் தமிழரசுக் கட்சியே

தமிழ்த்தேசியம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலே தான் தமிழ்த்தேசிய அரசியல் செய்வதாக நம்ப வைக்கும் விக்கினேசுவரன் என்ற அட்டைக் கத்தி ஒரு பொய்மையே

இவ்வாறாக, தமிழ்த்தேசியம் எனும் சொல்லைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இந்த வாக்குப் பொறுக்கிகள் செய்துவரும் அரசியல் என்பது சிறிலங்காவிற்குள் தமிழர்களுக்கும் அதிகாரப்பரவல் கோருவதான தமிழர்தேச விடுதலையைக் காயடிக்கும் அரசியலே. தமிழர்தேசத்தை விடுதலையடையச் செய்யும் கருத்தியலான தமிழ்த்தேசியம் என்ற சொல்லை இந்த வாக்குப் பொறுக்கிகள் முறைகேடாகவே பயன்படுத்துகிறார்கள். தமிழர்தேச விடுதலையை நோக்கி முனைப்புடன் செயலாற்ற வேண்டிய இளையோரை துண்டறிக்கை கொடுக்கவும், பதாகை வைக்கவும் தமக்கு வாக்குப் பொறுக்கவுமே பயன்படுத்தி அவர்களைக் குழுப்பிரித்து தமிழர்தேச விடுதலையை முன்னோக்கிச் செல்ல விடாமல் இடையூறு செய்யும் அரசியலையே தமிழ்த்தேசியத்தின் பெயரில் இந்த வாக்குப் பொறுக்கிகள் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுவது தமிழ்த்தேசிய அரசியலா?

தமிழ்நாட்டில் மறவழியில் தமிழர்தேச விடுதலை அரசியலை முன்னெடுத்து தமிழ்நாடு விடுதலை என்ற பெருங்கனவைச் சுமந்து போராட முனைந்த தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்த்தேசிய மீட்சிப்படை போன்றவை முளையிலே கருகியமைக்கு, தமிழீழத்தின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஒத்த நிலைக்கு தமிழ்நாட்டின் அரசியல் வளர்த்தெடுக்கப்படாமையைக் காரணமாக மீள மீள வலியுறுத்திச் சுட்டுகிறோம்.

தமிழீழத்தில் தமிழினப்படுகொலை அதனது கோர வடிவத்தை 2009 இல் எடுக்கும் வரை தமிழ்நாட்டு அரசியல் திராவிட மாயையில் மூழ்கிக்கிடந்ததோடு, அந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் தில்லி அரசின் கங்காணிகளாகச் செயற்பட்டு வருவது தொடர்பில் பெரிய விழிப்பேதுமின்றித் தமிழ்நாட்டு அரசியல் தொடர்ந்தது. 2009 இல் தமிழீழத்தில் வெளிப்படையாக நடந்த இனவழிப்பின் சாக்காடுகளையும் குருதி வெள்ளத்தையும் கண்டு தமிழ்த்தேசிய மற்றும் தமிழினவுணர்வு கொண்டோர், தமிழினப்படுகொலையைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று அங்கலாய்த்துக் கடைசியில் தமது இயலாமையை உணர்ந்துகொண்டார்கள்.

பழ. நெடுமாறன் போன்ற தமிழினவுணர்வாளர்கள் “இந்திய அரசே! உடனடியாகத் தலையிட்டு, எமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை காப்பாற்று” என முழங்கும் போது, அதனை சிறிலங்கா மீதான மேலதிக்கத்தினை செய்யும் நோக்கிலான இந்தியாவுக்கு ஒரு நியாயப்படுத்தலுக்குத் தேவைப்படும் கோரிக்கையாக இந்தியா பயன்படுத்தி, சிறிலங்கா சென்று தமிழினப்படுகொலையின் பின் நடக்கவிருக்கும் மீள் கட்டுமான ஒப்பந்தங்களில் தமக்கான ஒப்பந்தங்கள் பற்றி பேசிவிட்டு சிறிலங்காவின் இனக்கொலைக்கு வாழ்த்தி விடைபெறும். “இந்திய அரசே! உனது தமிழினப்படுகொலையைத் தொடர நாம் அனுமதியோம்” என விடுதலை முழக்கம்  எழுப்புவதே தமிழ்த்தேசிய அரசியல்.

தமிழ்நாட்டில் இருந்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக கள மருத்துவப் பொருட்கள், உணவு, உடை, எரிபொருள் போன்றவற்றை அனுப்பி உதவுதல் என்ற செயற்பாட்டை நெருக்கடிகளுக்குள் நடுவிலும் தொடர்ந்தார்கள். ஆனல், தமிழீழ விடுதலைக்கான உதவி என்பது தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவது தான் என்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசியர்கள் புரிந்துகொண்டாலும், அதனை முன்னெடுக்க முடியாமல் அவர்கள் கையறு நிலையில் இருந்தனர்.

உண்மையில் தமிழீழ விடுதலை இயக்கங்களை 1980 களின் தொடக்கத்தில் வளர்த்த தாய்மடி தாய்த்தமிழ்நாடே. விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டில் இயங்கிய போது, ஊரிலுள்ள ஒரு அம்மா பயிற்சியில் ஈடுபடும் போராளிகளுக்கு முட்டைகள் கொண்டுவந்து கொடுப்பதும், இன்னொரு அம்மா வீட்டிலுள்ள பலாப்பழத்தைக் கொண்டு வந்து கொடுப்பதும், போராளிகள் பயணித்தால் பேருந்தில் பணம் வாங்காமல் பயணம் செய்ய அனுமதிப்பது என தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை இயக்கங்களின் பயிற்சி முகாம்கள் அமைந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் உணர்வால் உயிரிழையான உறவைத் தமிழீழ விடுதலையுடன் வைத்திருந்தார்கள். ஆனால் ராசீவ் காந்தி செத்த பின்பாக ஏற்பட்ட சூழல் மாற்றங்களால் அந்த உணர்வை அந்த மக்கள் வெளிப்படுத்தாமல் நெஞ்சுக்குள் வைத்திருந்தார்கள். இதனை நன்கு புரிந்துகொண்ட தலைவர் பிரபாகரன் தமிழகப் பேராசிரியர் ஒருவருடன் தனிப்படப் பேசும் போது “தமிழ்நாட்டில் மக்களிடம் உள்ள தமிழ் உணர்வு என்பது நீறு பூத்த நெருப்பு. ஊதி விட்டாலே பற்றி எரியும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தழல்ஈகி முத்துக்குமாரன் தனது உடலை வைத்து இளைஞர்களையும் மாணவர்களையும் அரசியற்படுத்தி, இனவெழுச்சிகொள்ளச் செய்து தமிழினப்படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு தன்னை எரியூட்டித் தன்னுயிர் மாய்த்தமையுடன், தமிழ்நாட்டிலுள்ள அரசியற்படுத்தப்படாத, எந்தவொரு அரசியல் ஈடுபாடோ அல்லது பொது அறிவோ அற்ற எண்ணற்ற மக்கள் ஈழத்தில் நடந்தேறும் தமிழினப்படுகொலைகள் குறித்த செய்திகளையும் காணொளிகளையும் பார்த்து அங்கு கேட்கும் அவலக்குரல் “அம்மா! முருகா! காப்பாற்று” என்று கேட்கும் போது சாவதும் கொல்லப்படுவதும் என்னினம் எனக் கொதித்தெழ, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் கதையாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் உணர்வலை எழுந்தது. அப்போது கொதித்தெழுந்த இனவுணர்வலைகள் அமைப்பு வடிவம் பெறவோ அல்லது அதை முன்னெடுத்து சரியான அரசியலாகக் கொண்டு செல்லக்கூடிய ஆளுமையான தமிழ்த்தேசிய அமைப்போ தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், புகழ்வெளிச்சம் கொண்ட திரையுலகத்தினர் போன்றோர் அங்கங்கு ஒன்று கூடி உணர்ச்சியாகப் பேசும் போது உலகக் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்படியாகவே இராமேசுவரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசும் போது சீமான் அவர்கள், அதுவரை தமிழர்களின் உணர்வில் கொந்தளித்த நிலையிலிருந்த மனக்குமுறல்களை தமிழின உணர்வுமொழியில் வடித்த போது, தமது உள்ளக்கொதிப்பை ஒருவன் பேசுகிறானே என உணர்வால் உந்தப்பட்டு சீமான் அவர்கள் பின் ஒரு பெருங் கூட்டம் அவர்மீது நம்பிக்கை வைத்து அணிதிரள்கிறது.

தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்திய அப்போதைய காங்கிரசு அரசாங்கமும் அதனது தமிழ்நாட்டுக் கங்காணி அரசான கருணாநிதி தலைமையிலான தி.மு.க வும் இனி வரலாற்றில் எப்போதும் ஆட்சிக்கட்டிலில் ஏற விட மாட்டேன் என பரப்புரை முழக்கம் செய்த சீமான் அவர்கள் இயக்க அரசியலாகத் தனது அரசியலைத் தொடராமல் தேர்தல் சேற்றில் தனது காலை நனைக்க தேர்தல் அரசியல் கட்சியாக “நாம் தமிழர்” எனும் கட்சியைப் பதிவுசெய்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டுச் செயலாற்ற வேண்டிய வரையறைக்குள் தன்பின்னே அணிதிரண்ட தமிழினவுணர்வாளர்களை இழுத்து வந்தார். உண்மையில், சீமானின் பரப்புரை முழக்கத்தைக் கேட்டு தமிழினவுணர்வெழுச்சியுடன் திரண்ட கூட்டத்தைத் தமிழ்த்தேசிய உணர்வுகொள்ளுமாறு அரசியற்படுத்தி அவர்களை தமிழ்த்தேசியத்தின் வழியில் முன்செல்லத் தலைமையேற்கும் ஆற்றலோ அத்தகைய அரசியலுக்காக ஈகம் செய்யும் உணர்வோ சீமான் அவர்களிடம் இருக்கவில்லை. அதனால் அவர் “நாம் தமிழர்” என்ற இயக்கத்தை அரசியற் கட்சியாகப் பதிவுசெய்து தேர்தலில் இறங்கித் தனது பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டார்.

சீமான் செய்யும் அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் இல்லையா?

தமிழ்த்தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்கும் திடம் சீமான் அவர்களிடம் இல்லாமையால், அவர் தமிழின உணர்வைப் பேசும் தேர்தல் அரசியலை இந்தியத்திற்குட்பட்டு முன்னெடுத்து வருகின்றார். ஆனால், தமிழ்நாட்டை அதுவரை பீடித்திருந்த திராவிட அரசியற் பித்தலாட்டத்தைத் தோலுரித்து, தமிழர்களுக்கு தமிழினவுணர்வூட்டும் தொடர்பரப்புரைகளில் ஈடுபட்டு இளையோர்களிடத்தில் பெரும் தாக்கத்தைச் சீமான் ஏற்படுத்தினார். அதுவரை, ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் ஆட்சியதிகாரம் இழந்து மாற்றார்களின் ஆட்சியில் வாழ நேர்ந்ததால் தமிழர்களிடத்தில் ஏற்பட்ட அடிமை உளவியலும், திராவிட புரட்டர்களால் தமிழர்களுக்குத் தம்மீது குற்றவுணர்வு ஏற்படும் படியிலான கருத்துப்புரட்டுகளிலான தாக்கமும் தமிழர்களிடத்தில் தமது சொந்தப் பெருமைமிகு தொன்மையான அறிவுமைய வாழ்வியல் வரலாறு பற்றிய அறிவின்றி தாழ்ந்த உளவியற் சிக்கலுக்குள்ளாகி, தம்மால் எதுவுமே செய்ய முடியாதென்ற மனநிலையோடு ஆரிய- திராவிட கூட்டாட்சியில் அடிமையாக வாழப் பழகிக்கொண்டார்கள். ஆனால், சீமான் முழுநேர அரசியலுக்குள் வந்த பின்னர், தமிழரின் தொன்மை, நீண்ட நெடிய முன்னோரின் வரலாறு, மெய்யியல், கலை, பண்பாடு, அறம், மறம், உயரிய வாழ்வியல் நெறி என தமிழ்த்தேசிய அறிவர்கள் அரங்கக் கூட்டங்களிலும் ஆய்வு மாநாடுகளிலும் பேசிய விடயங்களைத் தொகுத்து மக்கள் மொழியிலும் செந்தமிழிலுமென மேடைகளின் முழங்கி, வெகுமக்களிடம் இவை குறித்து அறிவைப் புகுத்தி தமிழிளையோர் மனதில் எழுகை உளவியலை ஏற்படுத்தினார். இது உண்மையில், தேர்தல் அரசியலில் ஒரு கட்சி செய்யக்கூடிய இனவுணர்வு அரசியல் என குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இவரால் இனவெழுச்சிகொண்ட இளையோர்கள் தமிழர்தேசத்தை விடுதலையடையச் செய்ய வேண்டும் என்ற உறுதியான முனைப்பில் தமிழ்த்தேசிய உணர்வுகொள்ளும் போது, அந்த இளைஞர்கள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், ஓரங்கட்டப்பட்டார்கள். இந்தியதேசியக் கொடியை எரிக்க வேண்டுமென வெஞ்சினம் கொண்டெழுந்த இளைஞர்களிடத்தில் இவர் தான் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்றார். இவற்றைக் கேள்விக்குட்படுத்த முனையும் இளைஞர்களை சீமான் காயடிக்கச் செய்ததோடு, துண்டறிக்கை கொடுக்கவும், பதாகை வைக்கவும், வாக்குப் பொறுக்கவும், முகநூலில் பரப்புரை செய்யவுமே இளையோர்களைப் பழக்கப்படுத்தலானார்.

அத்துடன், எழுகை உளவியலை உருவாக்கப்பயன்பட்ட சொந்தப் பெருமை பேசுவதானது, தமிழ்த்தேசிய இனவுணர்வாக செயலுறுதி கொள்ளாமல், சமூகவலைத்தளங்களில் சொந்தப் பெருமை பேசி வெற்றுக்கூச்சலிடும் முகநூல் கூட்டமாகவே இளைஞர்களை ஆக்குவதில் சீமான் அவர்கள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குச் செல்லாமல் தொடர்ந்த அரசியல் வந்து நிற்கிறது.

அத்துடன் தான் செய்யும் இந்தியத்திற்குட்பட்ட தமிழின, மொழி உணர்வு அரசியலை தமிழ்த்தேசிய அரசியலென திரிபுசெய்வதைத் தொடர்ந்த சீமான், தமிழர்தேச விடுதலையை மறவழியில் முன்னெடுக்க முனைந்து உயிரீகம் செய்த முன்னோர்களின் வழி எல்லாம் தோல்வியான வழிமுறை என தன்னைச் சூழவுள்ள இளையோரிடம் ஒரு கருத்தூட்டத்தையும் செய்யலானார்.

தனது தமிழினவுணர்வு பேசும் அரசியலைக் கூட சரியான அமைப்பியல் வடிவம் கொடுத்து வளர்த்தெடுக்காமல், தனது ஒற்றைத் தலைமையில் கேள்விகேட்போரையெல்லாம் விலக்கிவைத்து சரியான பொருண்மிய நிருவாகம் இல்லாமல் நம்பி வந்த இளையோர்களை சீமான் அவர்கள் சோர்வுக்குள்ளாக்கினார்.

தி.மு.க போன்ற கொள்ளையடிக்கும் நிதி மூலதனக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் (கொள்ளையடிப்பில் அ.தி.மு.க வும் அத்தகையதே. ஆனால் அதனிடம் அப்படியொரு கருத்தியல் பின்புலம் இல்லை. அது பச்சோந்தியாக கருத்தியல் மாற்றம் செய்யும் என்பதோடு தானாகவே அழிந்துபோகக் கூடியது) திராவிட மாயையில் மீண்டும் தமிழர்களை வீழ்த்தி, எழுந்துவரும் தமிழினவுணர்வு என்றுமே மேலிடாதவாறு செய்யக்கூடிய பேராபத்து இருப்பதால், இன்னும் இரண்டு ஆட்சிகளுக்கு அவர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறாமல் பார்த்துக்கொண்டால், தமிழினவுணர்வு அரசியலைத் தன்னும் முன்னெடுக்கும் கட்சிகளே தமிழ்நாட்டின் மாநில அரச அதிகாரக் கட்டிலில் வருங்காலங்களில் ஏறுவார்கள். அதனால், தி.மு.க இனை ஆட்சிக்கு வராமல் செய்வதற்கு சீமான் அவர்கள் தலைமை தாங்கும் “நாம் தமிழர்” கட்சியின் தேர்தல் அரசியல் பயன்படுகிறது என்பதைத் தாண்டி சீமானின் அரசியலால் இனிச் சொல்லுமளவுக்கு எந்தப் பயனும் விளையாது எனக் கூற முடியும்.

அத்துடன், தமிழ்நாட்டுக்கு ஓரளவு மாநில அரச உரிமைகள் இருந்தாலும், கட்சி வேறுபாடின்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநரின் கையெழுத்திடாமல் எந்தவொரு சட்டசபைத் தீர்மானமும் சட்டமாகாது. தேர்தல் அரசியலில் அள்ளி வழங்கும் வாக்குறுதிகளான அதைத் தடுப்பேன்… இதைத் தடுப்பேன்.. எல்லாம் ஆளுநரின் கையெழுத்தைத் தாண்டி நடக்காதவையே. ஆளுநர் கையெழுத்திடாமல் குடியரசுத் தலைவரிடம் அனுப்பிவைத்து விட்டால் அதன் நிலை குறித்துக் கேள்வி கேட்கும் அதிகாரம் கூட மாநில அரசுகளிடம் இல்லை. அதுக்கு மேல் இந்திய நடுவண் அரசுடன் மோதினால், ஆளுநர் ஆட்சியைக் கலைத்துவிடுவார். எனவே, தமிழுணர்வு அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்தேசம் மீதான இந்தியத்தின் வன்வளைப்பை எதுவும் செய்துவிட முடியாது.

எனவே, 100% உள்ளத்தூய்மையுடன் தமிழினவுணர்வுக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், 1976 இல் ஈழத்தமிழர் அரசியலில் நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை தமிழ்நாட்டு மக்களை அழைத்துச் சென்று தமிழ்த்தேசிய அரசியலை, தேர்தல் அரசியலுக்கு வெளியே செய்யும் அரசியலுக்கான அறைகூவல் வரையே செல்லலாம். அப்படிச் செய்தால் தான், தமிழ்நாடு தேச விடுதலை என்பது வெகுமக்களிடம் எடுபடும் அரசியலாக இருக்கும். ஆனால், அப்படியொரு நிலைக்குச் செல்லக்கூடியவாறு நாம் தமிழர் கட்சி ஆளுமைமிக்க கட்சியாக இல்லை என்பதே உண்மை. நிலைமை அப்படியிருக்க, தேர்தலில் வாக்குப் பொறுக்குவதையே தமிழ்த்தேசிய அரசியல் எனக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்தாமல், தமிழ்த்தேசியம் நோக்கிய அரசியலை மடைமாற்றாமல், தமிழினவுணர்வைத் தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பதில் தமிழ்த்தேசியர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இது குறித்து சீமான் அவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒப்பாக அரசியல் செய்யப்போவதாக சிலாகித்துக்கொள்ளும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினர் தமிழின, மொழி உணர்வைக் கூட முன்னெடுக்க முடியாத வாக்குப் பொறுக்கும் அரசியல் சாக்கடைகள் என்பதை நாம் இங்கு சுட்ட வேண்டும்.

இறுதியாக,

தேர்தல் அரசியலில் வாயடித்து வாக்கு வாங்குவோர் செய்யக்கூடிய ஆகப் பெரிய அரசியல் தமிழினவுணர்வு அரசியலே. அந்த அரசியல் தமிழ்த்தேசிய உணர்வைக் காயடிக்காத, மடைமாற்றாத வரைக்கும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதுடன் ஓரளவு வலுச் சேர்க்கவும் கூடியது.

தமிழர் தேசங்களை விடுதலையடையச் செய்யும் தமிழ்த்தேசிய அரசியல் என்பது இன்னமும் முன்னெடுக்கப்படாமல் வெற்றிடமாகவே உள்ளது. அறிவுத்தளத்தில் அதைப் பேசுவோரும் செயல் முனைப்பில் இல்லை. எனில், தமிழ்த்தேசிய அரசியலை ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் முன்னெடுப்பது எப்போது?

-முத்துச்செழியன்-

2020-09-12

http://www.kaakam.com/?p=1814

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவேண்டிய ஆய்வு. நன்றி இணைப்புக்கு தம்பியன்.

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.