Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ராசா அண்ணை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். 

தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. 

அந்த வகுப்பில்த்தான் எனது உற்ற நண்பனை நான் சந்தித்தேன். மாநிறம், அழகன், மலையாள நடிகர்கள் போன்ற முக வசீகரமும், ஆண்மையான குரலும் கொண்டவன். வகுப்பிற்க்கு வரும்போது, செல்லும்போது அவனுடன் பேசுவேன். பழகுவதற்கு இனிமையானவன் என்பதால், அவனைச் சுற்றி எப்போதுமே ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். என்னிலும் ஒரு வயது கூடியவன், இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தயாராவதற்கு எங்களுடன் வகுப்பிற்கு வந்துகொண்டிருந்தான். 

வெள்ளவத்தை ஹம்ப்ட்டன் லேனில், முன்னாள் ராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் அவர் வாடகைக்குக் கொடுப்பதற்குக் கட்டியிருந்த "லயன்களில்" நானும் அடைக்கலமாகியிருந்தேன். என்னைத்தவிர அங்கே குடியிருந்தவர்கள் எல்லாருமே ஒன்றில் கொழும்பில் வேலைபார்த்துவந்தர்கள் அல்லது வெளிநாடு போகும் கனவில் உறவுகள் அனுப்பும் பணத்தில் வெள்ளவத்தைத் தெருக்களில் பகலெல்லாம் சுற்றிவிட்டு, இரவுகளில் தூங்குவதற்கு மட்டுமே லயன்களுக்கும் திரும்பும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். அவர்களில் படித்துக்கொண்டிருந்தது நான் மட்டும்தான். இடைக்கிடையே ஏதாவது ஒரு லயன் அறையில் "படம்" ஓடும். என்னையும் ஒருநாள் அதற்கு அறிமுகப்படுத்தினார்கள். அட கடவுளே, இதையெல்லாம் கூடவா கூடியிருந்து கூட்டமாகப் பார்ப்பார்கள் என்று வியந்துகொண்டே அவ்வப்போது நான் சென்று அமர்ந்துகொள்வேன். பாடசாலை, வகுப்புக்கள் என்று நாள்முழுதும் அலைந்து திரியும் எனக்கு, தனி லயனில் தனிமை வாட்டும். சிலவேளை முகட்டைப் பார்த்துக்கொண்டே தூங்குவேன். சீமேந்துத்தரை, வெற்றுப்பாய், உறையிலாத தலையணை, நானும் கவலைப்பட்டதில்லை, எவருமே கேட்டதில்லை. 

எனது லயன் வாழ்க்கை பற்றி ஒருநாள் எதேச்சையாக எனது நண்பனிடம் கூறினேன். என்னை ஆச்சரியமாகப் பார்த்த அவன், "ஏண்டா இவ்வளவுநாளும் சொல்லவில்லை?" என்று கேட்டான். "நீ, வா எங்கட வீட்டிற்கு, எனக்கும் படிக்கத் துணையில்லை, நாங்கள் பாஸ்ப்பேப்பர் செய்யலாம்" என்று ஒருநாள் சொல்லவும், மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டேன்.

கொள்ளுப்பிட்டியில் காலிவீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு வீதியில் அவனது வீடு. சிங்கப்பூர் பிஸிநெஸ்காரரான அவனது தந்தையின் பணச்செழிப்பில் வாங்கப்பட்ட அந்த வீட்டில், அவனும், அவனது பெற்றோர், இரு தங்கைகள் மற்றும் "பெரியம்மா" வும் வாழ்ந்துவந்தனர். இந்தப் பெரியம்மா பற்றியும் பேச வேண்டும். முதலில் அவரை எனது நண்பனின் தாயாரின் அக்காள் என்றுதான் எண்ணினேன். பிள்ளைகளுடனும், அவனது பெற்றோர்களுடனும் அவர் காட்டிய பாசமும் அக்கறையும் அலாதியானது. ஒருநாள் அவனிடமே கேட்டேன், "அவவுக்குக் குடும்பம் இல்லையோ, ஏன் அவ உங்களோட இருக்கிறா? என்று நான் கேட்டதற்கு, "அவதானடா எங்கட அப்பாவின்ர முதல்த் தாரம், அவவுக்குப் பிள்ளைகள் ஒண்டும் பிறக்கவில்லையெண்டதற்காக அப்பாவின்ர ஆக்கள் வாரிசு வேண்டும் எண்டு அம்மாவைக் கலியாணம் செய்துவைச்சவையள், அவ எங்களோடதான் இருக்கிறா" என்று சொன்னான். தன் கண்முன்னேயே தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், திருமணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்வதைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டில் தானும் வாழ்ந்துவரும் அந்தப் பெரியம்மா மீது எனக்கு இனம்புரியாத இரக்கமும், மரியாதையும் ஏற்பட்டது. இதுவல்லவா தியாகம்?! ஆனால், அவரைத் தமது சொந்தத் தாய்போல அக்குடும்பம் பார்த்துக்கொண்ட விதம் இப்படியும் வித்தியாசமான மனிதர்கள் எம்முடன் வாழ்கிறார்கள் என்பதையும் எனக்கு உணர்த்தியது. 

 • Like 18
 • Thanks 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • Replies 101
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அற

ரஞ்சித்

ராசா அண்ணையின் திருமணமோ அல்லது திருமண முறிவோ அல்லது வன்னிக்கு அவர் திரும்பிச் சென்றதோ நான் அங்கிருக்கும் வரையில் அறியாதது. நான் சிட்னிக்கு வந்து 5 வருடங்களின் பின்னர் எனது நண்பனின் சகோதரியை காணும

ரஞ்சித்

அநேகமான வார விடுமுறைகளில் அவன் வீட்டில்த்தான் தங்குவேன். இரவு 12 அல்லது 1 மணிவரை படிப்போம். அவன் முதலில் தூங்குவான், சிலவேளைகளில் 4 அல்லது 5 மணிவரை இருந்து படித்துவிட்டு நான் எனது லயனுக்குச் சென்றுவிட

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். 

தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. 

அந்த வகுப்பில்த்தான் எனது உற்ற நண்பனை நான் சந்தித்தேன். மாநிறம், அழகன், மலையாள நடிகர்கள் போன்ற முக வசீகரமும், ஆண்மையான குரலும் கொண்டவன். வகுப்பிற்க்கு வரும்போது, செல்லும்போது அவனுடன் பேசுவேன். பழகுவதற்கு இனிமையானவன் என்பதால், அவனைச் சுற்றி எப்போதுமே ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். என்னிலும் ஒரு வயது கூடியவன், இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தயாராவதற்கு எங்களுடன் வகுப்பிற்கு வந்துகொண்டிருந்தான். 

வெள்ளவத்தை ஹம்ப்ட்டன் லேனில், முன்னாள் ராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் அவர் வாடகைக்குக் கொடுப்பதற்குக் கட்டியிருந்த "லயன்களில்" நானும் அடைக்கலமாகியிருந்தேன். என்னைத்தவிர அங்கே குடியிருந்தவர்கள் எல்லாருமே ஒன்றில் கொழும்பில் வேலைபார்த்துவந்தர்கள் அல்லது வெளிநாடு போகும் கனவில் உறவுகள் அனுப்பும் பணத்தில் வெள்ளவத்தைத் தெருக்களில் பகலெல்லாம் சுற்றிவிட்டு, இரவுகளில் தூங்குவதற்கு மட்டுமே லயன்களுக்கும் திரும்பும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். அவர்களில் படித்துக்கொண்டிருந்தது நான் மட்டும்தான். இடைக்கிடையே ஏதாவது ஒரு லயன் அறையில் "படம்" ஓடும். என்னையும் ஒருநாள் அதற்கு அறிமுகப்படுத்தினார்கள். அட கடவுளே, இதையெல்லாம் கூடவா கூடியிருந்து கூட்டமாகப் பார்ப்பார்கள் என்று வியந்துகொண்டே அவ்வப்போது நான் சென்று அமர்ந்துகொள்வேன். பாடசாலை, வகுப்புக்கள் என்று நாள்முழுதும் அலைந்து திரியும் எனக்கு, தனி லயனில் தனிமை வாட்டும். சிலவேளை முகட்டைப் பார்த்துக்கொண்டே தூங்குவேன். சீமேந்துத்தரை, வெற்றுப்பாய், உறையிலாத தலையணை, நானும் கவலைப்பட்டதில்லை, எவருமே கேட்டதில்லை. 

எனது லயன் வாழ்க்கை பற்றி ஒருநாள் எதேச்சையாக எனது நண்பனிடம் கூறினேன். என்னை ஆச்சரியமாகப் பார்த்த அவன், "ஏண்டா இவ்வளவுநாளும் சொல்லவில்லை?" என்று கேட்டான். "நீ, வா எங்கட வீட்டிற்கு, எனக்கும் படிக்கத் துணையில்லை, நாங்கள் பாஸ்ப்பேப்பர் செய்யலாம்" என்று ஒருநாள் சொல்லவும், மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டேன்.

கொள்ளுப்பிட்டியில் காலிவீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு வீதியில் அவனது வீடு. சிங்கப்பூர் பிஸிநெஸ்காரரான அவனது தந்தையின் பணச்செழிப்பில் வாங்கப்பட்ட அந்த வீட்டில், அவனும், அவனது பெற்றோர், இரு தங்கைகள் மற்றும் "பெரியம்மா" வும் வாழ்ந்துவந்தனர். இந்தப் பெரியம்மா பற்றியும் பேச வேண்டும். முதலில் அவரை எனது நண்பனின் தாயாரின் அக்காள் என்றுதான் எண்ணினேன். பிள்ளைகளுடனும், அவனது பெற்றோர்களுடனும் அவர் காட்டிய பாசமும் அக்கறையும் அலாதியானது. ஒருநாள் அவனிடமே கேட்டேன், "அவவுக்குக் குடும்பம் இல்லையோ, ஏன் அவ உங்களோட இருக்கிறா? என்று நான் கேட்டதற்கு, "அவதானடா எங்கட அப்பாவின்ர முதல்த் தாரம், அவவுக்குப் பிள்ளைகள் ஒண்டும் பிறக்கவில்லையெண்டதற்காக அப்பாவின்ர ஆக்கள் வாரிசு வேண்டும் எண்டு அம்மாவைக் கலியாணம் செய்துவைச்சவையள், அவ எங்களோடதான் இருக்கிறா" என்று சொன்னான். தன் கண்முன்னேயே தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், திருமணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்வதைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டில் தானும் வாழ்ந்துவரும் அந்தப் பெரியம்மா மீது எனக்கு இனம்புரியாத இரக்கமும், மரியாதையும் ஏற்பட்டது. இதுவல்லவா தியாகம்?! ஆனால், அவரைத் தமது சொந்தத் தாய்போல அக்குடும்பம் பார்த்துக்கொண்ட விதம் இப்படியும் வித்தியாசமான மனிதர்கள் எம்முடன் வாழ்கிறார்கள் என்பதையும் எனக்கு உணர்த்தியது. 

பகிர்விற்கு நன்றி தோழர்.. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அநேகமான வார விடுமுறைகளில் அவன் வீட்டில்த்தான் தங்குவேன். இரவு 12 அல்லது 1 மணிவரை படிப்போம். அவன் முதலில் தூங்குவான், சிலவேளைகளில் 4 அல்லது 5 மணிவரை இருந்து படித்துவிட்டு நான் எனது லயனுக்குச் சென்றுவிடுவேன். இப்படிப் பல மாதங்கள் கடந்துவிட்டன. ஒருநாள், வழமைபோல ஒரு வார விடுமுறைக்கு அவன் வீட்டிற்குப் போனேன். அன்றுதான் முதல்முறையாக அவரைப் பார்த்தேன். எனது நண்பனின் மூத்த அண்ணா, அக்கராயனில் கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர், தனது குடும்பத்தைப் பார்க்கவென்று கொழும்பிற்கு வந்திருந்தார். அவர்தான் இக்கதையில் நான் கூறும் ராசா அண்ணை. 

எமது முதற்சந்திப்பிலேயே அவரது முகம் பளிச்சென்று ஒட்டிவிட்டது. அமைதியான பேச்சு, பல்வேறுபட்ட விடயங்களில் அவருக்கு இருந்த ஆளுமை, சாந்தமான முகம், எமது கலைக், கலாசார தொல்லியல்க் விடயங்கள் பற்றி அவருக்கு இருந்த ஈடுபாடு, எமது போராட்டத்தின் நியாயத்தன்மை மீது அவர்கொண்டிருந்த அசைக்கமுடியாத உறுதிப்பாடு....இவை எல்லாமே எனக்குப் பிடித்துப் போயிற்று. படிப்பதற்கென்றில்லாமல் ராசா அண்ணையுடன் கதைப்பதற்கே அங்கு வரத் தொடங்கினேன். புலிகள் பற்றியும், போராட்டம்பற்றியும் பயந்து பயந்து பேசி வந்த எனக்கு, ராசா அண்ணையுடன் அவர்கள் பற்றி மணிக்கணக்கில் அலசுவது பிடித்தது. பல நேரங்களில் அவர் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். இந்த மனிதர் எங்கேயிருந்தார்? பள்ளிப்படிப்பினை நிறைவுசெய்யாத இந்த மனிதருக்குள் இருக்கும் அறிவு எங்கிருந்து வந்தது? ஒரு விடயத்தினை, கேட்பவர் விரும்பிக் கேட்கவும், அதற்கு தர்க்கரீதியான நிறுவுதலை வழங்கவும் இவருக்கு எப்படி முடிகிறது? நாட்செல்லச் செல்ல ராசா அண்ணை எனக்கு ஒரு சகோதரனாக, வழிகாட்டியாக மாறிப்போனார். 

சில தடவைகளில் புத்தகங்களைக் கொண்டுவந்து தருவார். எமது விடுதலைப் போராட்டம் முளைவிட்டு, ஆரம்பித்த காலங்களில் எழுதப்பட்ட புத்தகங்கள் அவை. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் ஆரம்பம், வளர்ச்சி, சம்பவங்கள், எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மை என்று பல்வேறு விடயங்களை அலசிய புத்தகங்கள். கொழும்பில் புலிகள் பற்றிப் பேசினாலே ஆபத்து என்கிற அந்தக் காலத்தில் ராசா அண்ணை எங்கேயிருந்துதான் இவற்றைக் கொண்டுவந்தாரோ என்று எண்ணுவேன். புலிகளின் தாக்குதல் வெற்றிகளை மட்டுமே போராட்டம் என்று அன்றுவரை நம்பியிருந்த எனக்கு, அது ராணுவ விடயம் அல்ல, மக்களின் சமூக ரீதியிலான, அரசியல் ரீதியிலான, கலாசார பண்பாட்டு ரீதியிலான பன்முகத்தன்மை வாய்ந்த போராட்டமே என்று புரியவைத்தவர் ராசா அண்ணை. புலிகள் பற்றி எனக்கு அதுவரை இருந்த புரிதலை மாற்றி, அவர்களின் போராட்டம்பற்றிய தெளிவை ஊட்டியவர் அவர்.

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கண்டதும், "வாரும், தேத்தண்ணி கொண்டுவாரன், இப்பிடி இரும்" என்று அன்பாக உபசரிக்கும் ராசா அண்ணையின் கனிவுடன் எமது அரசியல் சம்பாஷணைகள் ஆரம்பிக்கும். மணிக்கணக்கில் பேசுவோம். "உவருக்கும் வேற வேலையில்லை, உனக்கும் வேற வேலையில்லை" என்று செல்லமாகக் கடிந்துகொள்ளும் நண்பனை அசட்டை செய்துகொண்டு எமது சம்பாஷணை தொடரும். 

ஒருநாள் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவனது வீட்டிற்கு அருகில் இருந்த பிரிட்டிஷ் கவுன்ஸில் பற்றிய பேச்சும் வந்தது. வருடத்திற்கு சுமார் 3000 ரூபாய்கள் கட்டி அங்கத்துவமாகும் அந்த வெளிநாட்டு நூஉலகத்தில் அவனது தங்கைகளும் சேர்ந்திருந்தனர். எனக்கும் அங்கே போக ஆசை, ஆனால் பணமில்லை. ஆகவே அவனது தங்கைகள் வீட்டிற்குக் கொண்டுவரும் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன். ஆங்கில அறிவு அவ்வளவு இல்லாததால், பெரும்ம்பாலும் அப்புத்தகங்களில் வண்ணங்களில் பதியப்பட்டிருக்கும் படங்களைப் பார்ப்பதிலேயே நேரம் கழியும். ஆகவே, எனது அவாபற்றி நான் நண்பனுடன் பேசுவதைக் கவனித்த ராசா அண்ணை, "நீங்களும் சேரப்போறியளோ?" என்று கேட்டார். "ஓமண்ணை, ஆசைதான், ஆனால் சரியான காசாய்க் கிடக்கு" என்று நான் சொல்லவும், "பாப்பம்" என்றுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்தவாரம், என்னையும் கூட்டிக்கொண்டு எனது நண்பன் பிரிட்டிஷ் கவுன்சிலுக்குப் போனான். என்னை ஏன் அழைத்துவந்தான் என்று நான் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவேயில்லை. ஒருவேளை இடம்காட்டக் கூட்டிக்கொண்டுவந்தானோ என்று நினைத்துக்கொண்டே அவனுடன் நூலக பதிவிடத்தில் வரிசையில் நின்றேன். எமது தவணை வந்தது, "உன்ர ஐடென்ட்டிக் காட்டைக் குடு" என்று சொன்னான். எனக்குப் புரியவில்லை. நூலக அனுமதி அறையில் அமர்ந்திருந்த பெண் எனது அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு பதிவைத் தொடங்கினாள், நண்பன் தான் மறைத்துக்கொண்டுவந்த 3000 ரூபாய்களை அவளிடம் கொடுத்துவிட்டு என்னையும் இணைத்துவிட்டான். "இது என்ர காசில்லை, ராசா அண்ணையின்ர, நீ அவரோட கதைச்சுக்கொள் " என்று கூறிவிட்டுச் சிரித்தான். எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. ராசா அண்ணைமீதான மதிப்பு எனக்குக் கூடிக்கொண்டே போனது. யார் எவரென்று தெரியாமல் ஒருவருக்கு உதவ முடியுமா? இதை எப்படி மீளச் செலுத்தப்போகிறேன் என்று எண்ணிக்கொண்டேன்.

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சில காலத்திற்குப்பிறகு, அவருக்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் வந்தும் நான் சுயநலத்துடனும், கோழைத்தனத்துடனும் நடந்துகொண்டதால் இன்றுவரை அதைச் செலுத்தமுடியாமலேயே போய்விட்டது. 

சரி, அவரின் கதைக்கு வரலாம்.

கொழும்பிற்கு வந்துசென்றபோதும்கூட, அவர் அடிக்கடி தனது கமத்தைப் பார்க்க அக்கராயனுக்குச் சென்று வந்தார். இப்படி ஒவ்வொருமுறையும் அவர் சென்றுவரும்போது வன்னியில் இருக்கும் நிலைமைகள் பற்றிப் பேசுவார். மணித்தியாலக் கணக்காக அவர் விபரிக்கும் வன்னி வாழ்வுபற்றிக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அங்கு வாழமுடியாது போனதுபற்றி சிலவேளைகளில் வருத்தப்பட்டதுமுண்டு.

இப்படியே சில வருடங்களில் நான் பல்கலைக் கழகத்திற்குச் சென்றுவிட்டேன். நண்பனும் கணக்கியல் படித்து முடித்துவிட்டுச் சொந்தமாக வாகன வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டான். எமக்குள் சில வருடங்கள் தொடர்பில்லாமலேயே சென்றுவிட்டது. ஒருநாள் அவனின் தந்தையாருக்கு சுகயீனமாகியிருக்க, பெருமளவு ரத்தம் தேவைப்பட்டது. ரத்த வங்கிக்கு வரமுடியுமா என்று அவனது தாயார் கேட்டபொழுது, அக்குடும்பத்திற்கு என்னால் உதவிசெய்ய கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை நான் தவறவிடவில்லை. மகிழ்வுடனேயே சென்று ரத்ததானம் செய்துவிட்டு வந்தேன். ஆனால், துரதிஷ்ட்டவசமாக அவனது தந்தையாரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணவீட்டில் அவனது தாய் என்னைக் கண்டபோது "நீங்களெல்லாம் இரத்தம் குடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல்ப் போய்விட்டதே" என்று தேம்பியழுதது இன்னும் நினைவிலிருக்கிறது. 

இந்தச் சில வருடங்களில் நிறைய மாற்றங்கள் அங்கு நடந்துவிட்டன. தந்தையாரின் மறைவின் பின்னர் நண்பனே வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கியிருந்தான்.

 ராசா அண்ணனுக்கு தமிழ் வைத்தியப் பெண்மணி ஒருவரைக் கட்டிவைத்திருந்தார்கள். அதுவரை அமைதியாகவும், மகிழ்வாகவும் போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. அவரது திருமணம் மாற்றுச் சம்பந்தம் என்பதற்காகவே நடத்தப்பட்டது. வைத்தியராகப் பணிபுரிந்த அப்பெண்ணிற்கு ராசா அண்ணாவின் தகைமைகள் ஒத்துவரவில்லை. அப்பெண்ணும், அவரது பெற்றோரும் ராசா அண்ணாவை ஒரு எடுபிடியாகவே பார்க்கத் தொடங்கினர். தமது மகளின் கணவர் என்கிற சிறு கரிசணை கூட இல்லாமல் அவர் நடத்தப்பட்டார். தனது மனைவியினதும், மனைவியின் பெற்றோரினதும் கேலிகளையும், வசைகளையும் தனது தங்கையின் வாழ்வு பாதிக்கப்பட்டு விடக்கூடாதெனும் ஒற்றைக்காரணத்திற்காகப் பொறுத்துக்கொண்டார். ஆனால், அவர்களோ விடாமல் அவர்மீது குற்றம் குறைகளைச் சுமத்திக்கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அவரது மனைவி அவரைவிட்டுப் பிரிந்து தனது பெற்றோருடன் வாழப் போய்விட்டார். ராசா அண்ணை மீண்டும் தனிமையானார். தனது பிள்ளைகளைப் பார்க்க அவர் எடுத்த முயற்சிகளையெல்லாம் அவரது மனைவியும் பெற்றோரும் தடுத்துவிடவே மனமுடைந்துபோன அவர் மீண்டும் வன்னிக்கே சென்றுவிட்டார். 

 • Thanks 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ராசா அண்ணையின் திருமணமோ அல்லது திருமண முறிவோ அல்லது வன்னிக்கு அவர் திரும்பிச் சென்றதோ நான் அங்கிருக்கும் வரையில் அறியாதது.

நான் சிட்னிக்கு வந்து 5 வருடங்களின் பின்னர் எனது நண்பனின் சகோதரியை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனது நண்பன் பற்றியும், ராசா அண்ணை பற்றியும் அறிந்துகொண்டேன். சில நாட்களிலேயே எனது நண்பனுடன் தொலைபேசியில் நீண்டநேரம் உரையாடினேன், ராசா அண்ணைபற்றிக் கேட்டபோது, "அவர் வன்னியில மச்சான், பொடியளோட இருக்கிறார் எண்டு நினைக்கிறன்" என்று சொன்னான். 

வன்னியில் இறுதியுத்தக் காலத்தில் ராசா அண்ணை தமிழீழ தொல்பொருள் அமைப்பில் இருந்திருந்தார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்ணுற்றவர்கள் அவரது பெற்றோருக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நண்பனின் வீட்டார் நம்பிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால், தெய்வாதீனமாக, தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. தான் வெளியேறிவிட்டதை நண்பனுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் அக்கராயனுக்கே சென்றுவிட்டார். அவர் தப்பிவிட்ட செய்தி அவரது தங்கைமூலம் எனக்கு அறியக் கிடைத்தது. அவரது உடல்நலம் பற்றிப் பேசிவிட்டு, "தலைவர் பற்றித் தெரியுமா" என்று கேட்டபோது, "அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

சுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்ப எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அங்குசென்று சந்திக்கப்போகும் மனிதர்களில் ராசா அண்ணை முக்கியமானவர் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆரியகுளத்திற்கு அருகிலிருக்கும் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்திக்கொண்டிருந்த ராசா அண்ணையை இரவு 8 மணிக்குச் சந்தித்தேன். அதே புன்முறுவல், அதே உபசரிப்பு, அதே கனிவு, ஆனால் உடல்மெலிந்து, வயதானவர் போன்று தெரிந்தார். "எப்படி இருக்கிறியள் அண்ணை" என்று கேட்டபோது, "ஏதோ இருக்கிறம், வாழ்க்கை எனக்கெண்டு என்ன வைச்சிருக்கிதோ, அதைச் செய்துகொண்டிருக்கிறன்" என்று சொன்னார். அவருடன் பேசிக்கொண்டே அவரின் மோட்டார் சைக்கிள் நிலையத்தைப் பார்வையிட்டேன். பல இளைஞர்கள், படித்துவிட்டு வேலையில்லாமல்த் திண்டாடியவர்களை தன்னுடன் சேர்த்து தன்னால் முடிந்த வேலைகளைக் கொடுத்திருந்தார். குறைந்தது 8 அல்லது 10 பேர் வரையில் இருக்கும், சுறுசுறுப்பாக  , மகிழ்வுடன் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். கட்டைக்கை சேர்ட்டும், வேட்டியும் அணிந்து, மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த  அவரைப் பார்க்கும்போது அனுதாபமும், கூடவே கவலையும் ஏற்பட்டது. ஆனால், அதுதான் அவரது வாழ்க்கை. வாழ்வைத் தொலைத்து, பிள்ளைகளைப் பிரிந்து, மனைவியாலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு, ஊரில் உதவி தேவைப்பட்டவர்களை அரவணைத்து இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

எனக்குக் கிடைத்த அந்த 30 நிமிட நேரத்தில் அவருடனான எனது பழைய நினைவுகளில் சிலவற்றைப் பகிர்ந்துவிட்டு மனமில்லாமல் பிரிந்து வந்தேன்.

நான் எனது வாழ்நாளில் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ராசா அண்ணைக்கு என்றும் ஓரிடம் இருக்கும். புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

Edited by ரஞ்சித்
spelling
 • Like 9
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமை யான  கதை நடை. "நல்லவர்களுக்கு காலமில்லை என்று சொல்வார்கள் ". எல்லோருடைய வாழ்வும்  ஒரு வரையறைக்குள் எழுதப்பட்டு விடுகிறது பகிர்வுக்கு நன்றி

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

மிக மிக அருமை யான  கதை நடை. "நல்லவர்களுக்கு காலமில்லை என்று சொல்வார்கள் ". எல்லோருடைய வாழ்வும்  ஒரு வரையறைக்குள் எழுதப்பட்டு விடுகிறது பகிர்வுக்கு நன்றி

மிக்க நன்றி நிலாமதி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு  பதிவுக்கும் நேரத்துக்கும்...

தமது செயல்களால்

தமது பேச்சால்

தமது வாழ்வால் எம்மை  கவர்ந்த இப்படி  பல  மனிதர்களை  நாம் சந்தித்தோம்

சந்திப்போம்

இவர்களது  வாழ்வும் அதனூடாக அவர்கள் எமக்குள் இறக்கிய பணிகளும் தொடரவேண்டும்

அதை  நாம் மற்றவர்களுக்கு கடத்தணும்

ஏதோ ஒரு  வகையில்  இன்னொருவர்  எம்மையும் இவ்வாறு ஒரு நாள் பதிந்த  செல்லக்கூடும்

Edited by விசுகு
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நன்றி ரகு  பதிவுக்கும் நேரத்துக்கும்...

தமது செயல்களால்

தமது பேச்சால்

தமது வாழ்வால் எம்மை  கவர்ந்த இப்படி  பல  மனிதர்களை  நாம் சந்தித்தோம்

சந்திப்போம்

இவர்களது  வாழ்வும் அதனூடாக அவர்கள் எமக்குள் இறக்கிய பணிகளும் தொடரவேண்டும்

அதை  நாம் மற்றவர்களுக்க கடத்தணும்

ஏதோ ஒரு  வகையில்  இன்னொருவர்  எம்மையும் இவ்வாறு ஒரு நாள் பதிந்த  செல்லக்கூடும்

பச்சை இல்லையண்ணை, உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான அனுபவப் பகிர்வு ரஞ்சித் .....நல்லவர்கள் பலரின் வாழ்க்கையில்  சோகங்கள் நிழலாகத் தொடர்வது வழமைதான்......நன்றிக்கடன் பட்ட குடும்பத்துக்கு ரத்தம் ஈந்த உங்களின் நல் இதயம் பாராட்டத் தக்கது.....!   😁

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முழுக்க வாசிக்க வைத்துவிட்டீங்கள் அண்ணே. நிஜத்துக்கு ஒரு வலியும் அழகும் இருக்கும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் அடையாளமாக வழிகாட்டியாக மீள நினைக்கும் நபர்களாக ஒருசிலரே இருப்பார்கள். அதில் ராசா அண்ணையும் ஒருவர்.

சில மனிதங்களால் மட்டுமே பூமி இன்னும் வாழுது.

நன்றி உங்கட கதைக்கும் பகிவுக்கும் அண்ணை.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப் பகிர்வு.. அனுபவம் தரும் அறிவை எந்த ஆசானும் தர முடியாது ...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, முதல்வன் said:

முழுக்க வாசிக்க வைத்துவிட்டீங்கள் அண்ணே. நிஜத்துக்கு ஒரு வலியும் அழகும் இருக்கும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் அடையாளமாக வழிகாட்டியாக மீள நினைக்கும் நபர்களாக ஒருசிலரே இருப்பார்கள். அதில் ராசா அண்ணையும் ஒருவர்.

சில மனிதங்களால் மட்டுமே பூமி இன்னும் வாழுது.

நன்றி உங்கட கதைக்கும் பகிவுக்கும் அண்ணை.

நன்றிகள் முதல்வன்

15 minutes ago, nige said:

நல்ல அனுபவப் பகிர்வு.. அனுபவம் தரும் அறிவை எந்த ஆசானும் தர முடியாது ...

உங்கள் கருத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

      வணக்கம் ரஞ்சித்
உங்கள் வாழ்க்கையை அப்பப்ப எழுதிக் கொண்டே வருகிறீர்கள்.ஒவ்வோரு தடவை அதை வாசிக்கும் போதும் இன்னும் இன்னும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள்.
       யாழில் மதிப்பும் மரியாதையும் பேரன்பும் வைத்திருக்கிறவர்களில் நீங்களும் ஒருவர்.
        ஒரு தடவையாவது உங்களை சந்தித்ததையிட்டு மகிழ்சியும் பெருமையும் அடைகிறேன்.
        இதை கதை என்று எழுதினாலும் உங்கள் வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத பாத்திரங்களாக வந்தார்கள்.அதை நீங்கள் எழுதிய விதம் ரொம்பவும் பிரமாதம்.
நன்றி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றியண்ணா

எனக்கு எப்போதும் ஆதரவாகவும், ஊக்குவிப்பாளராகவும் இருக்கும் சிலரில் நீங்களும் ஒருவர், மிக்க நன்றி

Link to comment
Share on other sites

நல்லதொரு எழுத்து நடையில் எழுயிருக்கின்றீர்கள் ரகு.

சமூக பிரக்ஞையும், அக்கறையும், சக மனிதர்கள் மேல் அன்பும் ,நேர்மையும் கொண்ட மனிதர்களுக்கு பொதுவாக எம் சமூகத்தில் நல்ல மண வாழ்வு வாய்ப்பதில்லை, சமூகமும் "பிழைக்க தெரியாத இழிச்ச வாயன்" என்று மட்டம் தட்டி ஒரு மூலையில் வீசி விட்டுவிடும். அப்படி வீசப்பட்ட ஒருவராக ராசா அண்ணை இருந்தாலும் அவர்  சமூகத்துடன் சமரசம் செய்து தன் இயல்பை விட்டுக் கொடுக்காமல்  இன்றும் பிறருக்கு உதவி செய்து கொண்டிருப்பதை காண அவர் மேல் மேலும் மரியாதை கூடுகின்றது.

8 hours ago, ரஞ்சித் said:

1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். 

தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. 

நானும் 1993 இல் பிரேம்நாத் மாஸ்டரிடம் வெள்ளவத்தை இன்ரமொட்டில் கணிதம் படித்தவன் தான். சிலவேளை உங்களுடன் சேர்ந்து படித்து இருப்பன் என நினைக்கின்றேன். என்னை "பாண்" என்ற பட்டப் பெயர் வைத்து அழைப்பார் (சுண்டிக்குளி - பாண்டியந்தாழ்வு பேக்கரி என் பக்கத்து வீடுகளில் ஒன்று என்பதால் இந்தப் பட்டப் பெயர்)

என்னை பாதித்த மனிதர்களுக்குள் பிரேம்நாத் சேர் ரும் ஒருவர். அவரது பாதிப்பால் நான் பிரம்மகுமாரிகள் சபை / அமைப்பில் சேர்ந்து கொஞ்ச காலம் தியானம் பயின்றும் இருக்கின்றேன். கடவுள் பற்றிய தர்க்கம் ஒன்றில் ஈடுபட்டதால் பிரம்மகுமாரி ஆன்மிக சபையால் வெளியேற்றப்பட்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நல்லதொரு எழுத்து நடையில் எழுயிருக்கின்றீர்கள் ரகு.

சமூக பிரக்ஞையும், அக்கறையும், சக மனிதர்கள் மேல் அன்பும் ,நேர்மையும் கொண்ட மனிதர்களுக்கு பொதுவாக எம் சமூகத்தில் நல்ல மண வாழ்வு வாய்ப்பதில்லை, சமூகமும் "பிழைக்க தெரியாத இழிச்ச வாயன்" என்று மட்டம் தட்டி ஒரு மூலையில் வீசி விட்டுவிடும். அப்படி வீசப்பட்ட ஒருவராக ராசா அண்ணை இருந்தாலும் அவர்  சமூகத்துடன் சமரசம் செய்து தன் இயல்பை விட்டுக் கொடுக்காமல்  இன்றும் பிறருக்கு உதவி செய்து கொண்டிருப்பதை காண அவர் மேல் மேலும் மரியாதை கூடுகின்றது.

நானும் 1993 இல் பிரேம்நாத் மாஸ்டரிடம் வெள்ளவத்தை இன்ரமொட்டில் கணிதம் படித்தவன் தான். சிலவேளை உங்களுடன் சேர்ந்து படித்து இருப்பன் என நினைக்கின்றேன். என்னை "பாண்" என்ற பட்டப் பெயர் வைத்து அழைப்பார் (சுண்டிக்குளி - பாண்டியந்தாழ்வு பேக்கரி என் பக்கத்து வீடுகளில் ஒன்று என்பதால் இந்தப் பட்டப் பெயர்)

என்னை பாதித்த மனிதர்களுக்குள் பிரேம்நாத் சேர் ரும் ஒருவர். அவரது பாதிப்பால் நான் பிரம்மகுமாரிகள் சபை / அமைப்பில் சேர்ந்து கொஞ்ச காலம் தியானம் பயின்றும் இருக்கின்றேன். கடவுள் பற்றிய தர்க்கம் ஒன்றில் ஈடுபட்டதால் பிரம்மகுமாரி ஆன்மிக சபையால் வெளியேற்றப்பட்டேன்.

அட நம்ம 'பாணா' நீங்கள்?

இவ்வளவு நாளும் தெரியாமல் போட்டுதே?

சுந்தரி இப்ப எங்க எண்டு தெரியுமே? ஆஸ்திரேலியா எண்டார்கள்.... இல்லை வேற இடம் எண்டார்கள்.... விசயம் தெரியுமே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

St. Annes lane பக்கமா அல்லது வாகை மரம் இருக்கும் ஒழுங்கையா 😂😂

கிட்ட வந்துவிட்டேனோ 😀

ரன்ஜித்

எழுத்து நடை மிக இயல்பாக வருகிறது உங்களுக்கு. கட்டாயம் தொடர்ந்து எழுதுங்கள். 👍

1 hour ago, Nathamuni said:

அட நம்ம 'பாணா' நீங்கள்?

இவ்வளவு நாளும் தெரியாமல் போட்டுதே?

சுந்தரி இப்ப எங்க எண்டு தெரியுமே? ஆஸ்திரேலியா எண்டார்கள்.... இல்லை வேற இடம் எண்டார்கள்.... விசயம் தெரியுமே?

சுந்தரி ?

Dr. ? அண்ணாமலை ? 🤔

Edited by Kapithan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரஞ்சித்
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படியான ஒரு சந்தர்ப்பம் , சந்திப்பு , மறக்க முடியாத மனிதர்கள் என ஒருவர் அல்ல பலர் இருப்பார்கள்
அதைக்கதையாகச் சொல்லிய விதம் அருமையாக இருந்தது .

தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவுகளையும் ஆவலுடன் தேடி வாசிப்பவர்களின் நானும் ஒருவன் .

உங்கள் கதையில் தற்சமயம் எனது வசிப்பிடமும் சைக்கிள் கடையும் வந்து செல்வதில் மகிழ்ச்சி
ராசா அண்ணையை நான் பல முறை சந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்
ஆனால் இந்தப்பின்னணி எனக்குத் தெரியாது 

2 hours ago, நிழலி said:

(சுண்டிக்குளி - பாண்டியந்தாழ்வு பேக்கரி என் பக்கத்து வீடுகளில் ஒன்று என்பதால் இந்தப் பட்டப் பெயர்)

எப்போதாவது ஒரு நாள் ஊரில்,,, பக்கத்து வீட்டில்... சந்திப்போம் 😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

St. Annes lane பக்கமா அல்லது வாகை மரம் இருக்கும் ஒழுங்கையா 😂😂

கிட்ட வந்துவிட்டேனோ 😀

ரன்ஜித்

எழுத்து நடை மிக இயல்பாக வருகிறது உங்களுக்கு. கட்டாயம் தொடர்ந்து எழுதுங்கள். 👍

சுந்தரி ?

Dr. ? அண்ணாமலை ? 🤔

சுந்தரி.... அதுவும் ஒரு பட்டப்பெயரே. 👌

பாண் பதுங்கீட்டார்.

இவரை எங்கடா பார்திருகிறமே எண்டு யோசிக்கிறனான்.

இப்ப விளங்கீற்றுது. எப்பவும் இரண்டுடொரு பேரோட வருவார். நல்லா நியாயம் பிளப்பார்.

சைற் அடிப்பார்... ஒரு சி பெட்டைக்கு சைட் அடித்ததா, நிணைவு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நல்லதொரு எழுத்து நடையில் எழுயிருக்கின்றீர்கள் ரகு.

சமூக பிரக்ஞையும், அக்கறையும், சக மனிதர்கள் மேல் அன்பும் ,நேர்மையும் கொண்ட மனிதர்களுக்கு பொதுவாக எம் சமூகத்தில் நல்ல மண வாழ்வு வாய்ப்பதில்லை, சமூகமும் "பிழைக்க தெரியாத இழிச்ச வாயன்" என்று மட்டம் தட்டி ஒரு மூலையில் வீசி விட்டுவிடும். அப்படி வீசப்பட்ட ஒருவராக ராசா அண்ணை இருந்தாலும் அவர்  சமூகத்துடன் சமரசம் செய்து தன் இயல்பை விட்டுக் கொடுக்காமல்  இன்றும் பிறருக்கு உதவி செய்து கொண்டிருப்பதை காண அவர் மேல் மேலும் மரியாதை கூடுகின்றது.

மிக எளிமையான மனிதர். வசீகரமான பேச்சு. பேசும் விடயம் பற்றிய ஆளுமை. எல்லோரிலும் இரக்கப்படும் சுபாவம். இவையெல்லாம் சேர்ந்தவராகத்தான் அவரை நினைவில் வைத்திருக்கிறேன். மனம்போல் வாழ்வென்று சொல்வார்கள், அவரில் அது சாத்தியப்படவில்லை. 

3 hours ago, நிழலி said:

நானும் 1993 இல் பிரேம்நாத் மாஸ்டரிடம் வெள்ளவத்தை இன்ரமொட்டில் கணிதம் படித்தவன் தான். சிலவேளை உங்களுடன் சேர்ந்து படித்து இருப்பன் என நினைக்கின்றேன். என்னை "பாண்" என்ற பட்டப் பெயர் வைத்து அழைப்பார் (சுண்டிக்குளி - பாண்டியந்தாழ்வு பேக்கரி என் பக்கத்து வீடுகளில் ஒன்று என்பதால் இந்தப் பட்டப் பெயர்)

என்னை பாதித்த மனிதர்களுக்குள் பிரேம்நாத் சேர் ரும் ஒருவர். அவரது பாதிப்பால் நான் பிரம்மகுமாரிகள் சபை / அமைப்பில் சேர்ந்து கொஞ்ச காலம் தியானம் பயின்றும் இருக்கின்றேன். கடவுள் பற்றிய தர்க்கம் ஒன்றில் ஈடுபட்டதால் பிரம்மகுமாரி ஆன்மிக சபையால் வெளியேற்றப்பட்டேன்.

உங்களை நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும். உங்களின் செல்லப்பெயர் பிரபலமானதொன்று. நீங்கள் அரியக்குட்டி, புஷ்பநாதன், அஜந்தன்  மற்றும் குன்ஸி ஆகியோருடன் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

பிரேம்நாத் மாஸ்ட்டரின் பாதிப்பு என்னில் இருக்கிறது. முத்து முத்தாக அவர் எழுதுவதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவர் பேசும் சில சொற்கள், "விளங்கேல்லத்தானே, உனக்கு விளங்காது, இந்தா சோக் சாப்பிடு" இப்படிப் பல. அவரிடம் படித்தபடியினால்த்தான் பல்கலைக் கழக்ம் செல்லமுடிந்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எனது வாழ்வில் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றிற்கு பிரேம்நாத் மாஸ்ட்டரும் காரணம். ஆளுமையும், அறிவும் கொண்டவர்.

1 hour ago, வாத்தியார் said:

வணக்கம் ரஞ்சித்
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படியான ஒரு சந்தர்ப்பம் , சந்திப்பு , மறக்க முடியாத மனிதர்கள் என ஒருவர் அல்ல பலர் இருப்பார்கள்
அதைக்கதையாகச் சொல்லிய விதம் அருமையாக இருந்தது .

தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவுகளையும் ஆவலுடன் தேடி வாசிப்பவர்களின் நானும் ஒருவன் .

உங்கள் கதையில் தற்சமயம் எனது வசிப்பிடமும் சைக்கிள் கடையும் வந்து செல்வதில் மகிழ்ச்சி
ராசா அண்ணையை நான் பல முறை சந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்
ஆனால் இந்தப்பின்னணி எனக்குத் தெரியாது 

நான் ஆரியகுளம் என்று சொன்னவுடனேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ராசா அண்ணாவை மட்டுமல்லாமல், எனது நண்பனையும் நீங்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள். 

நான் எழுதுவதற்கு ஊக்கம் தரும் உங்களுக்கு எனது உளம்கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி அனுபவ பகிர்வுக்கு. இப்படி பல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் பலர் வாழ்கின்ளறார்கள்... உங்களை கண்டிருப்பேன் என நினைக்கின்றேன்.... 🤔

என் வாழ்விலும் ஒரு ராசாண்ணையிருந்தார் .. அவரும் அவர் குடும்பமும்  இல்லையெனில் நான் இப்ப இல்லை.... இங்கு பெரியம்மா, அங்கு ராசாண்ணையின் சின்னம்மா.. கல்யாணம் கட்டாமலே தமக்கையின் பிள்ளைகளை வளர்த்து வந்தார்.. இன்னும் அவர்களுடன் தான் இருக்கின்றார்... இப்படிப்பட்டவர்கள் உலகில் வாழும் தெய்வங்கள்... ராசாண்ணையும் பல வருடம் குடும்பத்தை பிரிந்திருந்து விசா இல்லாமல் இப்ப கனடவாவில் போய் ஒன்றாக சேர்ந்துவிட்டார்... சந்தோஷமாக இருக்கின்றார் கடவுளே என்று

மனம் பழைய வாழ்க்கையை அசை போட வைத்துவிட்டீர்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

நான் கூறும் ராசா அண்ணையும், நீங்கள் கூறும் ராசா அண்ணையும் ஒன்றாக இருக்கலாம் என்கிறீர்களா? அவரது மனைவியும் பிள்ளைகளும் கொழும்பில் இருந்ததாகத்தான் நினைவு. ஆனால், ராசா அண்ணையின் சகோதரி கனடாவில் இருக்கிறார். 

2018 வரை, ராசா அண்ணை தனியாகவே யாழ்ப்பாணத்தில் இருந்தார். சிலவேளை அவரின் குடும்பத்துடன் சேர்ந்திருக்கலாம். ஆனால், கனடாவிலா என்று தெரியவில்லை. 

என்னை எங்கே கண்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? பிரேம்நாத் மாஸ்ட்டரின் வகுப்பில்? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

நான் கூறும் ராசா அண்ணையும், நீங்கள் கூறும் ராசா அண்ணையும் ஒன்றாக இருக்கலாம் என்கிறீர்களா? அவரது மனைவியும் பிள்ளைகளும் கொழும்பில் இருந்ததாகத்தான் நினைவு. ஆனால், ராசா அண்ணையின் சகோதரி கனடாவில் இருக்கிறார். 

2018 வரை, ராசா அண்ணை தனியாகவே யாழ்ப்பாணத்தில் இருந்தார். சிலவேளை அவரின் குடும்பத்துடன் சேர்ந்திருக்கலாம். ஆனால், கனடாவிலா என்று தெரியவில்லை. 

என்னை எங்கே கண்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? பிரேம்நாத் மாஸ்ட்டரின் வகுப்பில்? 

இல்லை இருவரும் வேறு வேறானவர்கள்...

உங்களை பல்கலையில் சந்தித்து இருக்கலாம் மொறட்டுவவில் படித்திருந்தால்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.