Jump to content

ஜனநாயகமும் கொரொனாவும்


Recommended Posts

ஜனநாயகமும் கொரொனாவும்

 

வி. சிவலிங்கம்

நாம் இன்று வரலாற்றின் திருப்பு முனையில் நிற்கின்றோம். எமது மக்கள் உலகத்தினை உலுக்கிய முதலாம், இரண்டாம் உலகப் போர் அனுபவங்களைத் தற்போது நூல் வழியாகவே அறிய முடிகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் துன்பங்களைச் சுமந்தவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். அவர்கள் ஆண்டுகள் பல கடந்த போதிலும் அந்த அனுபவங்களைப் பகிரும்போது கண்ணீரைக் காண முடிகிறது. அவ்வளவு ஆழமான துன்பங்களை அவர்கள் அனுபவித்தார்கள். இவை ஒரு வகையில் போர் அனுபவங்கள் என்ற போதிலும் இப் போர் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை.

அதேபோலவே தற்போது எமது இன்றைய வாழ்வும் பாரிய மாற்றத்திற்குள் சென்றுள்ளது. ‘கொரொனா’ தொற்றுநோயின் தாக்கம் ஆயுதப் போரைவிட அதிகளவு பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டுள்ளதால் உற்பத்திப் பற்றாக்குறை வறுமைக்குள் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது. இந்தக் கொடிய நோய் எப்போது கட்டுப்படுத்தப்படலாம்? வீடுகளுக்குள் முடங்கிய வாழ்விற்கு எப்போது விடுதலை கிடைக்கும்? மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள், போக்குவரத்துகள், கடைகள் என மனித தேவைகளை நிறைவேற்றும் துறைகள் திறக்கப்படுமா? இவ்வாறான கேள்விகளுக்கு மத்தியில் குறைந்த பட்சம் தத்தமது வாழ்வு நிலைக்குமா? உயிரைக் காப்பாற்ற முடியுமா? கொடிய நோயின் தாக்கத்திலிருந்து கடந்து செல்ல முடியுமா? எனத் தம் ஏக்கங்களை ஆலயங்களில், மசுதிகளில்,  தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வோர் பலர்.

நோய்ப் பரவலின் வேகம் குறித்த நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் தமது எதிர்காலம் குறித்த கவலைகள் அச்சமூட்டுகின்றன. நோயின் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு சுகாதார செயற்பாடுகள் ஆரம்பத்தில் ஆலோசனைகள் என வழங்கப்பட்ட போதிலும் தற்போது அவை படிப்படியாக சட்ட ஏற்பாடுகளாக மாற்றமடைகின்றன. தூர விலகி நிற்றல், முக கவசங்கள் அணிதல் என்பன கட்டாய செயல்களாக உள்ளன. நோயின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள சுமார் மூன்று வாரங்கள் ஆவதால் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்குவது, முகக் கவசம் அணியாவிடில் அவரைத் திட்டித் தீர்ப்பது, அரகில் நெருங்கவிடாமல் தடுப்பது  என சமூகத்தின் கலாச்சாரங்கள் மாற்றமடைகின்றன.

இந் நோயின் தாக்கங்கள் குறித்து அசட்டையுடன் செயற்படுபவர்கள் இந் நோய் விரைவில் ஊசி மருந்துகளால் கட்டுப்படுத்தப்படலாம் என்பதால் தாம் இதுவரை பின்பற்றிய பழக்க வழக்கங்களைத் தொடரலாம் என எண்ணிச் செயற்படுவோரும் உள்ளனர். ஆனால் ‘கொரொனா’ இன் தாக்கங்கள் ஏற்கெனவே பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எமது அரசியல் தீர்மானங்கள், கலாச்சார செயற்பாடுகள், மற்றும் சமூக விதிகளைப் பின்பற்றுதல் போன்றவற்றில் மாற்றங்கள் எமது கடந்தகால செயற்பாடுகளைத் தடுத்துள்ளதை நாம் காணலாம்.

தொழில் வளம் நிறைந்த மேற்கு நாடுகளில் இம் மாற்றம் மிக வெளிப்படையாகவே உணரப்படுகிறத. இந் நாடுகளில் வறுமை அதிகளவில் காணப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் சில கொடுப்பனவுகளால் அவற்றின் தாக்கங்கள் மறைக்கப்பட்டிருந்தன. ஆனால் ‘கொரொனா’ நோயின் தாக்கங்கள் முதலாளித்துவ தொழிற்துறை வளர்ச்சியில் காணப்பட்ட பாரிய குறைபாடுகளை மிகவும் அப்பட்டமாகவே வெளிப்படுத்தின. ஏற்கெனவே பற்றாக்குறை நிலவும் சுகாதாரத்துறை அதுவும் பிரித்தானியாவில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குவதாகவும், உலகிலேயே மிகவும் சிறந்த வைத்திய சேவை எனவும் கூறும் நாட்டில் விளையாட்டு மைதானங்களில் கூடாரம் அமைத்து வைத்திய சேவை வழங்கும் அளவிற்கு வைத்தியசாலைகள் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவிலும் காணப்படுகிறது.

நகர்ப்புறங்களிலுள்ள அடுக்கு மாடி வீடுகளில் மிகவும் ஒடுங்கிய அறைகளுக்குள் நெருக்கமாக வாழும் தொழிலாள மக்கள் ஒரு புறமும், வசதிபடைத்த விடுதிகளில் தனி அறைகளை எடுத்து அல்லது கிராமப் புறங்களில் விடுதிகளை அமர்த்தி நோய்த் தொற்றிலிருந்து தம்மைக் காப்பாற்றும் பணக்கார மக்களுமாக சமூகம் பிளவுபட்டுள்ளது. ஒடுங்கிய அறைகளுக்குள் வாழும் மக்கள் எவ்வாறு இடைவெளி விட்டு வாழ முடியும்? இப் பிரச்சனை சாதாரண காலங்களில் பேசப்பட்ட போதிலும் பலரும் அதில் கரிசனை செலுத்தவில்லை. ஆனால் தற்போது இந் நோய் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் தாக்கும்போது பாதிப்பு பல தரப்பாருக்கும் விளங்குகிறது. துன்பம் புரிந்துகொள்ளப்படுகிறது.

இதன் விளைவாக சமத்துவமற்ற பொருளாதார செயற்பாடுகள், கட்டுப்பாடற்ற விதத்தில் இயற்கை வளங்களைச் சூறையாடுதல், படிப்படியாக சமூகத்தை உறிஞ்சும் ஊழல்கள் என்பன மிகவும் அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியுள்ளன. இதற்கான பிரதான காரணம் என்ன? நாம் வாழும் சமூக, பொருளாதாரக் கட்டுமானம் மிகவும் பலவீனமானதாக உள்ளதை இத் தொற்றுநோய் அடையாளம் காட்டியுள்ளது.

இதற்கான அடையாளங்கள் உலக அளவில் வெளிப்படுகின்றன. அமெரிக்கா முதல் இலங்கை வரை பிரச்சனைகள் ஒரே விதமாக உணரப்படுகின்றன. தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நோய்ப் பரம்பலைக் காட்டி நாடுகளின் எல்லைகள் மூடப்படுகின்றன. விமான மற்றும் தரைவழிப் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து வகைகள் பற்றாக்குறை எழுந்தள்ளன. உற்பத்தி, விநியோகம் என்பனவற்றின் பாதிப்பு உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ளதால் உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கி விரைந்து செல்கிறது. ஏற்கெனவே பற்றாக்குறையும், ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வுகளும் சமூகங்களுக்குள் பெரும் போராட்ட நிலமைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய நிலமைகள் பிரச்சனைகளை மேலும் உக்கிரப்படுத்தியுள்ளன.

உலக நாடுகள் பல தத்தமது பொருளாதாரங்களை மூடிய நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. ‘அமெரிக்காவிற்கு முதன்மை இடம்’,  அமெரிக்க பொருளாதார உற்பத்திக்கே அதிக வாய்ப்பு என அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி தனது பொருளாதாரத்தை மூடிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது. கடந்த காலங்களில் தடையற்ற வர்த்தகம் அல்லது திறந்த பொருளாதாரம் எனக் கூறி சகல நாடுகளின் சந்தைகளையும் திறந்து வைத்திருக்கும்படி கோரிய இந்த  நாடுகள் தற்போது தமது பொருளாதாரங்களை மூடிச் செல்கின்றன.

கடந்த காலங்களில் இவ்வாறான மாற்றங்கள் படிப்படியாக எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் தற்போது ‘சீனா’ இறக்குமதிகளை அமெரிக்கா தடை செய்கிறது. ஐரோப்பிய நாடுகளும் இறக்குமதிகளைக் குறைத்துள்ளன. இங்கு பொருளாதார நடவடிக்கைகள் மட்டுமல்ல, சமூக கட்டுமானங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் தாமதங்களை மேற்கொண்ட அரசுகள் உதாரணமாக வருமானப் பற்றாக்குறையில் வாழும் சமூகங்களின் பராமரிப்பு, வீட்டு வசதியற்ற மக்களின் தேவைகள் என்பன விரைவாக நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை அவதானிக்கும்போது ‘கொரொனா’ நோயின் தாக்கங்கள் அரசுகளின் பலவீனங்களை மிகவும் அப்பட்டமாகவே வெளிப்படுத்தின எனலாம். இதனால் அவை மாற்றங்களையும் துரிதப்படுத்தியுள்ளன.

இப் பின்னணியில் ஆட்சிக் கட்டுமானங்களில் இந் நோய் ஏற்படுத்தி வரும் தாக்கங்களை நாம் அவதானித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவருவதைக் காணலாம். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐ நா சபையின் தேவை அதிகமாக உணரப்பட்டது. இன்னொரு பாரிய போர் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் பல ஒன்றிணைந்து சமூக ஜனநாயகப் பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்.

காலப் போக்கில் நவ தாராளவாத கொள்கைகள் உலகம் முழுவதிலும் பின்பற்றப்பட்டன. இக் கொள்கைகள் புதிய கோட்பாட்டு விவாதத்தை முன்வைத்தன. அதாவது மனிதர் யாவரும் தனி மனிதர்கள் எனவும், அவர்கள் சுயநலத்தில் அக்கறையுடைவர்கள் எனவும், அதன் காரணமாக தமது சுய தேவைகளை நிறைவேற்றுவதே அவர்களின் பிரதான இயக்குவிசை எனவும் கூறி தனி மனித அவாவுகளை நிறைவேற்றுவதற்குத் தனி மனித சுதந்திரம் அவசியம் எனவும், இதன் அடிப்படையில் தனிமனித உரிமை உறுதி செய்யப்படவேண்டும் என்ற கருத்துக்கள் பலமடைந்தன.

தனிமனித அபிலாஷைகளை வற்புறுத்திய நவதாராளவாத செயற்பாடுகள் சந்தைச் செயற்பாடுகளுடன் தனிமனித செயற்பாடுகளை இணைத்தனர். இதன் விளைவாக தனி மனிதனில் காணப்படும் அளவில்லாத ஆளுமைகளை வெளிப்படுத்துவதற்கு அரசுகள் தடைகள் எதுவும் விதிக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் ஒரு தேசத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளை சந்தைச் செயற்பாடுகளே தீர்மானித்தன. அங்கு அரசு என்பது சந்தைச் செயற்பாடுகள் இடரில்லாமல் செயற்படுவதற்குத் தேவையான சட்டவிதிகளை மட்டும் தீர்மானிப்பதாக வரையறுக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் சந்தைச் செயற்பாடுகள் செயற்பட்ட வேளையில் அந்தந்த நாடுகளில் வாழ்ந்த மக்களின் நிலை எவ்வாறிருந்தது?

ஏற்கெனவே காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், பற்றாக்குறைகளும் கணிசமான மக்கள் தொகையினரை வறுமைக்குள் தள்ளியிருந்தது. பணக்காரர்- ஏழை இடைவெளி அதிகரித்தது இதனால் அந்தந்த அரசுகள் வறுமையின் கோரங்களைத் தணிக்க மானியங்களை வழங்கி வந்தனர். ஆனால் நவதாரளவாத பொருளாதார அறிமுகத்தின் பின்னர் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் தளர்த்தப்பட்டன. ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. ஊழைத்து வாழ்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் சுயாதீனமாக சந்தைச் செயற்பாடுகளில் இணைந்து முன்னேற முடியும் என உணர்த்தப்பட்டன.  அத்துடன் படிப்படியாக தொழிற்சங்கங்களின் கூட்டுச் செயற்பாடுகள் பலவீனப்படுத்தப்பட்டன.

இம் மாற்றங்கள் என்பது இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் உலக அளவில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள மாற்றங்களில் சிலவாகும். இப் போர் ஐரோப்பாவிற்குள் இடம்பெற்ற போதிலும் அதன் தாக்கம் உலகமெங்கும் உணரப்பட்டது. மாற்றம் ஏற்பட்டது. அவ்வாறாயின் ‘கொரொனா’ நோயின் தாக்கம் என்பது அவ்வாறான உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழலாம். ஆம் என்பதே எமது பதிலாகும்.

ஏற்கெனவே அதன் தாக்கங்களின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் காட்டியுள்ளேன். இருப்பினும் அமெரிக்காவிலும், இலங்கையிலும் உலகின் சில பாகங்களிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் சிலவற்றை நாம் அவதானிக்கலாம்.

வளர்ச்சியடைந்த மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் ‘கொரொனா’ நோயின் தாக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களையே அதிகளவில் தாக்கியுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல தொற்று நோயின் தாக்கம் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி தடைப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைப்பது நிச்சயமற்ற நிலையை நோக்கிச் செல்கிறது. அரசின் கொடுப்பனவுகள் படிப்படியாக நிறுத்தப்படுகின்றன. ஏற்கெனவே வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பொருளாதாரப் பாதிப்புக் காரணமாக உளவியல் தாக்கங்களுக்குள் சிக்கியுள்ளதால் குடும்பச் சச்சரவுகள் அதிகரித்துள்ளன.

ஏற்கெனவே இந் நாடுகளில் காணப்பட்ட சமத்துவமற்ற நிலமைகள் மிகவும் வெளிப்படையாகவே தோன்ற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வெள்ளையர் அல்லாத நிறத்தவர் மத்தியில் இவை மிகவும் துலாம்பரமாக உள்ளன. மிக நீண்ட காலமாக அமெரிக்க சமூகத்தில் அலட்சியப்படுத்தப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வு, நிறத்தவர் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலமைகள், ஆர்ப்பாட்டங்கள், ஏற்கெனவே கொதிநிலையிலிருந்த நிற வேற்றுமைப் பிரச்சனைகள், நீண்டகால உடல்  நோய்களுடன் வாழும் மக்களின் தொகை அதிகரிப்பு என்பன யாவும் நிறத்தவர் மத்தியில்தான் பெரும் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன. அமெரிக்க சுகாதாரத்துறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நிறத்தவர்களையே அதிகம் பாதித்துள்ளது. இந் நோயின் காரணமாக நிறத்தவர்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவ்வாறாயின் நோய் நிறத்தவர்களை அதிகளவில் தாக்குவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. வருமானப் பற்றாக்குறை காரணமாக மக்கள் வயிற்றை நிரப்புகிறார்களே தவிர ஆரோக்கியமான உணவுகளை உண்பதில்லை. எனவே உடல் காத்திரமான போஷாக்கு அற்ற நிலை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளது. உள்ளது. இதனால் நோய்கள் பரம்பரையாக கடத்தப்படுகிறது. இதனால் அவர்களே நோய்த் தாக்குதலுக்கான ஆரம்ப இலக்காக உள்ளனர்.

இவற்றின் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை அமெரிக்காவில் இதுவரை 188,044 ( 01-09-2020) மக்கள் இக் கொடிய நோயால் இறந்துள்ளனர். இவர்களில் பலர் நிறத்தவராகும். இதனால் நிறத்தவர் மத்தியில் பெரும் அமைதியின்மை காணப்படுகிறது. ஒரு புறத்தில் பொலீசார் நிறத்தவர்களை சட்டம், ஒழுங்கு மீறல் எனக் கூறி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்கின்றனர். இதனால் மக்கள் அமைதியற்று வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல, கடைகளைச் சூறையாடும் சமூக விரோதிகள் எனக் கூறித் துப்பாக்கிப் பிரயோகம், கண்ணீர்ப்புகை எனத் தாக்குதலைத் தொடுக்கின்றனர்.

இங்கு நாம் நோயின் பின்னணியில் அரசுகள் அல்லது அரசியல் கட்சிகள் எவ்வாறு சமூக நெருக்கடிகளை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் பெற முயற்சிக்கின்றன என்பதை நாம் காண முடிகிறது. இவ்வாறான நிலமைகளை சிறிய நாடான இலங்கை எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பதை நாம் அவதானித்தால் சமீபத்தில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் சுமார் 8 மாத இடைவெளியில் இடம்பெற்றன. முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற வேளையில் அதற்கு முன்பதாக சுமார் 6 மாதங்களுக்கு (2019)முன்னர் ஈஸ்ரர் ஞாயிறு தினத்தன்று சில முஸ்லீம் தீவிரவாதிகளால் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு 400 மேற்பட்ட பொதுமக்களும், 1000 இற்கு அதிகமானவர்கள் காயமடைந்தனர். இப் பயங்கரவாத செயல் இடம்பெற்றுச் சில நாட்களுக்குள்ளாகவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ராணுவ முன்னாள் அதிகாரியுமாகிய கோதபய ராஜபக்ஸ அவர்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதாகவும், தம்மால் மட்டுமே பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் எனக் கூறித் தேர்தலில் வெற்றி பெற்றார். தமது தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் விதத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவையும் நியமித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சில மாதங்களில் ‘கொரொனா’ நோய் இலங்கையைப் பற்றிக்கொண்டது. நோயின் பரவலைத் தடுக்கவேண்டுமாயின் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நோயின் தாக்கம், அதன் பாதிப்பு, அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றைப் பற்றி மக்களுக்கு அறிவூட்டாமல் ராணுவ வழிகள் பயன்படுத்தப்பட்டன. அடிக்கடி ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மிக அதிகளவிலான கூலி உழைப்பாளர்களை அல்லது நிரந்தர வருமானமற்ற தினக் கூலிகளைக் கொண்டிருந்த நாட்டில் அவர்களின் வருமானம் பற்றிய எவ்வித ஏற்பாடுகளுமில்லாமல் அடிக்கடி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வறுமைப்பட்ட மக்களே பாதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவிலுள்ள நிறத்தவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனரோ அதே நிலை இலங்கையிலும் ஏற்பட்டது. ஒரு பறத்தில் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை முடக்கிய அரசு மறு புறத்தில் மரண வீதம் குறைவாக காணப்பட்டதால் நோயை வென்றுவிட்டதாகவும், ஜனாதிபதி விவேகமாகச் செயற்பட்டதாகவும் அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் புகழ் பாடின. ஆனால் நோயின் தாக்கத்தால் மரணமடைபவர்களை விட வறுமையாலும், உளவியல் தாக்கங்களாலும் தற்கொலை மரணங்கள் எற்படப்போவதை அவர்கள் உணரவில்லை.

இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானம் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் வழியாகவும், அதன் அடிப்படையில் உருவாகிய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை காரணமாகவும் நாட்டின் ஜனநாயகம் குற்றுயிராக்கப்பட்டிருந்து. ஏற்கெனவே கொதிநிலையில் காணப்பட்ட தேசிய இனப் பிரச்சனை அரசின் ராணுவ உத்திகளாலும், சிங்கள பௌத்த தீவிரங்களாலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் உள்நாட்டுப் போரிற்கு வித்திட்டது. இந்த உள்நாட்டுப் போரின் விளைவுகளால் நாட்டின் தேசிய இனங்களிடையே நல்லிணக்கம் என்பது மறைந்து சமூகங்கள் எதிரி நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. ராணுவ உபாயங்களும், சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையும் கொண்டிருந்த ஆட்சியாளரும், ராணுவமும் தமது உள்நாட்டுப் போரின் வெற்றியை நாட்டின் தேசிய இனங்களின் ஜனநாயகக் கோரிக்கையை பயங்கரவாதம் என வர்ணித்து வெற்றி கொண்டுள்ளதாக வர்ணித்தனர்.

இப் பின்னணியில் தமிழ் பயங்கரவாதத்தினைத் தோற்கடித்த தம்மால்  முஸ்லீம் பயங்கரவாதத்தினையும் தோற்கடிக்க முடியும் எனக் கூறி  ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தரும்படி மக்களைக் கோரிய ஜனாதிபதி அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரசியல் யாப்பினை முற்றாக மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தரும்படி கோரினார். தற்போது மக்களும் அப் பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.                     

இலங்கையில் பயங்கரவாதத்தினைத் தோற்கடித்த வரலாற்றினை முன்வைத்து பிரச்சாரங்களை மேற்கொண்ட அவர்கள் அவ்வாறே ‘கொரொனா’ நோயையும் தோற்கடிக்க முடியும் என்ற ராணுவ வாதம் இலங்கையின் அரசியலைக் கௌவ்விக்கொண்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பயங்கரவாதம் என அடையாளப்படுத்தி ராணுவ வாதத்தனை முன்னெடுத்து நாடு முழுவதிலும் ராணுவ ஆட்சிக் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள வேளையில் ‘கொரொனா’ நோயைக் கட்டுப்படுத்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமைக்குள் மேலும் நுழைவதற்கான ஆரம்பமாகும்.

தற்போது உலகம் முழுவதிலும் கண்காணிப்பு கமராக்கள், கணனிகளில் மறைமுகமான கண்காணிப்பு, பகிரங்க இடங்களில் மனித முகங்களைப் பதிவு செய்யும் கமராக்கள், ஒருவரின் உடல் வெப்பத்தைக் கண்காணிக்கும் கமராக்கள் பொது இடங்களில் பொருத்துதல் என்பன வெகு விரைவில் இலங்கையின் முக்கிய நகரங்களில் பொருத்தப்பட்டுச் சாமான்ய மக்களின் மேல் கண்காணிப்பு அதிகரிக்கும். இதற்கான ஏற்பாடுகளே ‘மிலேனியம் சலஞ்ச்’ என்ற அமெரிக்க ஒப்பந்தத்தில் காணப்படுவனவாகும். ஏற்கெனவே குறிப்பிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை இலங்கையில் பொருத்தலாம். ஆனால் அதனை இயக்குவது யார்? இலங்கையர்களுக்கு அவ்வாறான தொழில்நுட்ப அறிவு தற்போது உண்டா? அவ்வாறாயின் இலங்கை மக்கள் தொடர்பான சகல தரவுகளும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் ஒரு வர்த்தகமாக அவை மாறும்.

ஏற்கெனவே குறிப்பிட்ட அம்சங்களை ஆழமாக நோக்கும்போது ‘கொரொனா’ இற்குப் பின்னதான உலகம் என்பது முற்றிலும் வேறுபட்டதாகவும், மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு என்ற பெயரில் அவை அதிகார வர்க்கத்தினரின் ஒடுக்கும் ஆயுதமாக மாறும் நிலையும் காணப்படும். இன்று அமெரிக்காவின் சுய பாதுகாப்பு, சுயபொருளாதாரம், தடையற்ற போக்குவரத்து என்பன எவ்வாறு மக்களை ஒடுக்கும் உட்பொருளைக் கொண்டிருக்கின்றனவோ அவ்வாறான ஏற்பாடுகள் இலங்கை போன்ற சிறிய தேசத்திற்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன. இதுவே நாட்டின் பாதுகாப்பு என்ற பாரிய கோஷத்திற்குள் உள்ளடக்கப்படும் ஜனநாயக விரோத ஏற்பாடுகளாகும்.

எனவே மக்கள் அறிவூட்டப்படுவது அவசியமாகிறது. இன்று அறிவியல் என்பது மிகவும் லாபம் தரும் விற்பனைப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. இன்றைய சீனாவின் குறுகிய கால வளர்ச்சிக்கு அதன் அறிவியல் வளர்ச்சியே காரணமாகும். சுமார் 30 வருட காலத்தில் அமெரிக்காவின் நூறாண்டு வளர்ச்சியை விட சகல வழிகளிலும் சீனா வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் அந் நாட்டின் ஒற்றை ஆட்சிமுறைக்குள் நாட்டை இழுத்துச் செல்கிறார்களே தவிர அதன் பொருளாதாரக் கோட்பாட்டின் பாதையில் செல்வதற்குத் தயாராக இல்லை என எண்ணத் தோன்றுகிறது.

முற்றும்.

http://sdptnews.org/2020/09/02/ஜனநாயகமும்-கொரொனாவும்/

Sivalingam.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.