புரட்சிகர தமிழ்தேசியன் பதியப்பட்டது September 16, 2020 Share பதியப்பட்டது September 16, 2020 வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.! பெரிய பரந்தன் கதை இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் “ஒரு பேப்பர்” பத்திரிகை தொடர்ந்து பிரசுரித்தது. வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வந்ததை வாசித்து அதனை ரசித்த அப்போதைய “சுடரொளி வாரமலர்” ஆசிரியர் மூன்று கிராமங்களின் கதை என்ற தலையங்கத்தை “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்ற பெயரில் மாற்றி தொடராக வெளியிட்டார். எனது தந்தையும் நானும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ” பெரிய பரந்தன்” கிராமத்தைத் பற்றி முழுமையாக எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு இருந்தது. எனவே பெரிய பரந்தன் வரலாற்றை ஒரு கதை வடிவில் எழுதி மூன்று கிராமங்களின் கதையை விரும்பி இரசித்த வாசகர்களுக்கு வழங்கலாம் என்ற எனது விருப்பத்தை ” வணக்கம் லண்டன்” இணையத்தளத்தின் இயக்குனரிடம் தெரிவித்தேன். அவரும் மனமுவந்து சம்மதித்தார். இதோ “பெரிய பரந்தன்” கதை மேற்கே கொல்லனாறு, தெற்கே எள்ளுக்காடு, கிழக்கே நீலனாறு, வடக்கே வடக்குக் காடு என்பவற்றிற்கிடையே அமைந்திருந்த காடு, மீசாலையிலிருந்து வந்த தம்பையராலும், அவரது உறவினர்களாலும், தம்பையரின் உறவினர்களும் இணைபிரியாத நண்பர்களாகவுமிருந்த ஆறுமுகம், முத்தர் என்பவர்களாலும் வெட்டப்பட்டு கழனியாக்கப்பட்டு பின்னர் வளம் கொழிக்கும் கிராமம் ஆக மாறிய இடமே பெரிய பரந்தன் ஆகும். 1900 ஆம் ஆண்டளவில் ஒருநாள்…. தம்பையர், ஆறுமுகம், முத்தர், தம்பையரின் நெருங்கிய உறவினர்களாகிய ஐந்து பேர் அடங்கிய இளைஞர் குழு காடு வெட்டத் தேவையான கத்தி, கோடரி, மண்வெட்டி அலவாங்கு, சுட்டியல், முதலியவற்றையும் இரண்டு கிழமைக்கு சாப்பாட்டிற்கு தேவையான அரிசி, மா, பருப்பு, சீனி, உப்பு, தூள், புளி என்பவற்றையும் பொதிகளாக கட்டிக் கொண்டு இரண்டு மாட்டு வண்டில்களில் மீசாலையிலிருந்து அதி காலையில் புறப்பட்டு கச்சாய் துறைமுகத்தை அடைந்தனர். இவர்களில் சிலர் தமது வளர்ப்பு நாய்களையும் வண்டியின் பின்னால் ஓடிவரச் செய்தனர். கச்சாய் துறைமுகத்தில் செருக்கன் கிராமத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு தோணிகளுடன் காத்திருந்தனர். தம்பையரும் குழுவினரும் இரண்டு பிரிவாக இரண்டு தோணிகளிலும் ஏறினர். ஆறுமுகமும் முத்தரும் தம்பையர் ஏறிய தோணியிலேயே ஏறினர். சில நாய்கள் தோணிகளில் ஏறி இருந்தன. சில உரிமையாளர்கள் கயிற்றால் கழுத்தில் கட்டி பிடித்திருக்க தோணியுடன் நாய்கள் நீந்திவர தோணிகள் புறப்பட்டு சுட்டதீவு துறையை நோக்கி பயணத்தை தொடங்கின. நாய்கள் களைத்த போதும் குளிரில் நடுங்கிய போதும் உரிமையாளர்கள் அவற்றைத் தூக்கி தோணியில் விட்டனர். வெய்யில் சுள்ளென்று சுடத் தொடங்க தோணிகள் சுட்ட தீவு கரையை அடைந்தன. நாய்கள் சுட்டதீவின் சுடு மணலில் உருண்டு பிரண்டு தம்மை சூடேற்றிக் கொண்டன. எல்லோரும் பொதிகளை இறக்கி சுட்டதீவு பிள்ளையார் கோயிலின் அருகே இருந்த ஒரு வேப்பமர நிழலில் கொண்டு போய் வைத்தனர். ஆறுமுகம் கோவில் பூசாரிகள் வெட்டி பயன் படுத்திய பூவலில் (பழைய நூல்களில் “கூவல்” என்றும் கேணி போல வெட்டப்பட்ட கிணறுகளை அழைத்தனர்) நீரை அள்ளி ஒரு பானையில் கொதிக்க வைத்தான். அதனுள் தேயிலைத் தூளை போட்டான். பின்புறம் செருக்கப்பட்ட சிரட்டைகளில் தேனீரை வார்த்து ஒவ்வொரு பனங்கட்டி துண்டுடன் எல்லோருக்கும் பரிமாறினான். தேனீர் குடித்து களையாறிய தம்பையருடனும் குழுவினருடனும் பிடித்த மீன்களுடன் கரை சேர்ந்திருந்த செருக்கன் மக்கள் உரையாடினார்கள். குழுவினர் தாம் காடு வெட்டி கழனியாக்கி வாழ வந்ததாக கூறினார்கள். செருக்கன் மக்கள் மிகவும் மகிழ்ந்து நல்ல விடயம் என்று பாராட்டினார்கள். தாம் அயற்கிராமமாகிய செருக்கனில் வசிப்பதாகவும் அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள். சிறிது தூரம் தெற்கே நடந்து ஒரு சிறிய மரத்தில் ஏறி பார்த்தால் தெற்கில் ஒரு மிகப்பெரிய புளியமரம் தெரியும் என்றும் அப்புளிய மரத்தை நோக்கி போனால் பெரிய பரந்தன் காடு வரும் என்றும் கூறினார்கள். குஞ்சுப்பரந்தன், செருக்கன் மக்கள் காட்டில் திசை மாறி தவிக்கும் போது அந்த புளியமரம் தான் வழிகாட்டி உதவும், அதனால் தாங்கள் அப்புளிய மரத்தை “குறிப்பம் புளி” என்று அழப்பதாகவும் கூறினார்கள். தம்பையரும் குழுவினரும் பொதிகளை சுமந்தபடி காட்டுப்பாதையில் நடந்தனர். வழியில் மான்கள், மரைகள், குழுமாடுகளைக் கண்ட நாய்கள் குரைத்தபடி அவற்றை துரத்திப் பார்த்துவிட்டு களைத்தபடி மீண்டும் வந்து குழுவினருடன் இணைந்துகொண்டன. குழுவினரைச்சுற்றி ஓடியபடி வந்த நாய்கள் ஒரு பெரிய உடும்பைக் கண்டன. எல்லாமாக அதை சுற்றி வளைத்தன. அது பயந்து போய் அருகே இருந்த ஒரு புற்றுக்குள் புகுந்தது. முழுவதுமாக உள்ளே நுழைய முடியவில்லை. நாய்களோ விடாது குரைத்தன. ஆறுமுகம் தனது பொதியை இறக்கி வைத்து விட்டு உடும்பை லாவகமாகப் பிடித்து வாலைச்சுற்றி கட்டி கூட வந்த ஒருவரிடம் கொடுத்தான். மதியம் நல்ல சாப்பாடு என்று எல்லோரும் மகிழ்ந்தனர். தம்பையரும் இன்னொருவரும் மச்சம் சாப்பிடுவதில்லை. மற்றொருவர் உடும்பு இறைச்சி மட்டும் சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு பருப்புக்கறி மட்டும் தான் இன்று. ஏனைய ஐந்து பேருக்கும் பொதிகளை சுமந்து நடந்த களைக்கு முறையான சாப்பாடு காத்திருந்தது. சூரியன் உச்சத்தில் வரவும் குழுவினர் குறிப்பம் புளியை அடைந்தனர். புளிக்கு அண்மையாக ஒரு நீர்நிலை நீர்நிறைந்து காணப்பட்டது. அருங்கோடைக்கு காட்டு விலங்குகளும் அங்குதான் நீர் அருந்த வரும் என்பதை குழுவினர் புரிந்து கொண்டனர். நீர் நிலைக்கு கிட்டிய தூரத்தில் காணப்பட்ட காய்ந்த யானை லத்திகள் அது உண்மை தான் என பறை சாற்றின. குறிப்பம் புளிக்கும் நீர்நிலைக்கும் இடையில் காணப்பட்ட ஒரு வெளியான இடத்தில் பொதிகளை வைத்து விட்டு அந்த இடத்தில இருந்த புற்களை செருக்கியும் சிறு பற்றைகளை வெட்டியும் துப்பரவாக்கத் தொடங்கினர். ஆறுமுகம் உடும்பை உரித்து துப்பரவு செய்தான். தம்பையர் மண்ணிலே இரண்டு அடுப்புக்களை எவ்வாறு வெட்டுவது என்று ஒருவருக்கு காட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவர் நீர்நிலைக்கு அருகே ஒரு சிறிய பூவல் வெட்டினார். அதில் நீர் ஊறி சிறிது நேரத்தில் பூவல் நிரம்பிவிட்டது. ஆறுமுகம் பூவலிலிருந்து நீர் கொண்டுவந்து உடும்புக்கறியைக் காய்ச்ச, முத்தர் ஒரு பானையில் சோறும் ஒரு சிறிய சட்டியில் பருப்புக் கறியையும் காய்ச்சி விட்டார். ஒருவர் காவலிருக்க ஏனையவர்கள் நீர்நிலைக்குச் சென்று தம்மை சுத்தம் செய்து கொண்டு வந்தனர். காவல் இருந்தவர் போய் சுத்தம் செய்து வரும் வரை எல்லோரும் வட்டமாக இருந்து மறு நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டனர். சாப்பிட்டபின் எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தனர், ஒரே காடு தான் தென்பட்டது. பின் இருவர் மூவராக பெரியபரந்தன் காட்டை சுற்றி பார்க்க சென்றனர். எசமான்கள் கொடுத்த சாப்பாட்டை உண்ட நாய்களும் அவர்களுக்கு துணையாக சென்றன. முயல்கள், நரிகளைக் கண்ட நாய்கள் குரைத்த சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. இரவு வந்ததும் தாம் துப்பரவு செய்த வெளியின் நான்கு பக்கமும் பட்ட காட்டு மரங்களைக் போட்டு நெருப்பு எரித்தனர். நெருப்பு வெளிச்சத்திற்கும் சூட்டிற்கும் பயந்து காட்டு விலங்குகள் வரமாட்டா என்பதை குழுவினர் அறிந்து வைத்திருந்தனர். இரவு வந்ததும், மதியம் எஞ்சியிருந்த சோறு கறியைக் குழைத்து தாமும் பகிர்ந்து உண்டு நாய்களுக்கும் வைத்தனர். பிரயாணக் களைப்பு, நடந்த களைப்பு, பொதிகளை சுமந்த களைப்பு, வெளியைத் துப்பரவாக்கிய களைப்பு எல்லாம் சேர பொதிகளைச் சுற்றி வைத்து நாய்களையும் காவல் வைத்து வெளியின் நடுவிலே எல்லோரும் படுத்து உறங்கினர். நாய்கள் சுற்றி சுற்றி வந்து காவல் காத்தன. சிறுத்தைகள் தூரத்தில் உறுமிய சத்தமோ, யானைகள் பிளிறிய சத்தமோ, ஆந்தைகள் அலறிய சத்தமோ, ஏனைய விலங்குகளும் பறவைகளும் போட்ட சத்தமோ அவர்களின் காதுகளில் விழவில்லை. வானமே கூரையாக எல்லோரும் உலகத்தை மறந்து தூங்கினார்கள். முதல் நாள் பொழுது இவ்வாறு கழிந்தது. (பெரிய பரந்தன் உருவாகிய வரலாறு கதை வடிவில் தொடரும்) மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வு நிலை அதிபர், குமரபுரம், பரந்தன். https://vanakkamlondon.com/stories/2020/09/83463/ 4 3 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted September 18, 2020 தொடங்கியவர் Share Posted September 18, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம் ( இது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய மரம். யுத்த காலத்தில் ஷெல் அடிகளால் கிளைகளை இழந்து, காயம் பட்ட போதும், இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.) கதை தொடர்ச்சி .. எல்லோரும் நித்திரை விட்டு எழுந்தனர். காட்டுக்குள் சென்று காலைக் கடன் கழித்து விட்டு வந்து நீர்நிலையில் கால், கை கழுவிக் கொண்டனர். வேப்பம் தடிகளை முறித்து பற்களை விளக்கிக் கொண்டனர். வாய் கொப்பளித்து, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் வந்தனர். காட்டுச் சேவல்கள் கூவிய சத்தத்திலும் கௌதாரிகள் கத்திய சத்தத்திலும் முதலே எழுந்து விட்ட முத்தர் ஏனையவர்கள் தயாராகி வரும் போது கஞ்சி காய்ச்சி முடித்து விட்டார். எல்லோரும் தமது அழகாக செருக்கப்பட்ட சிரட்டைகளில் கஞ்சியை வார்த்து ஊதி ஊதி குடித்தனர். தம்பையர் சிறு வயதில் தந்தையாருடன் பொறிக்கடவை அம்மன் கோவிலுக்கு வரும் போதெல்லாம் செழிப்பான குஞ்சுப்பரந்தன் வயல்களையும் தென்னஞ்சோலைகளையும் பார்த்து மகிழ்வார். அந்த மக்கள் மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், சங்கத்தானை போன்ற இடங்களில் மிகவும் வசதியாக வாழ்வதை அவர் அவதானித்திருக்கின்றார். நீலனாறு, கொல்லனாறு என்பவற்றிற்கிடையே இருக்கும் காட்டையும் பார்த்திருக்கின்றார். இந்தக் காட்டை வெட்டி கழனியாக்கி பெரிய பரந்தன் என்று பெயரும் சூட்டி, தாமும் தனது நெருங்கிய உறவுகளும் செல்வத்துடனும் செல்வாக்காகவும் ஏன் வாழ முடியாது? என்ற எண்ணம் அடிக்கடி வரும். முதலில் இருந்தது குஞ்சுப் பரந்தன் என்பதால் பிறகு வருவதை பெரிய பரந்தன் என்று அழைக்கும் முடிவை நண்பர்கள் எடுத்திருந்தனர். தனது நெருக்கமான நண்பர்களான முத்தருடனும் ஆறுமுகத்துடனும் இது பற்றி அடிக்கடி கதைப்பார். முத்தரும் தம்பையர் போல மட்டுவில் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சிறுவயதில் படித்தவர். ஆறுமுகம் அதிகம் படிக்காதவராயிருந்தாலும் அனுபவ அறிவு நிரம்ப பெற்றவர். தம்பையரின் கனவு அவர்களையும் தொற்றிக் கொண்டது. தம்பையர் ஒருமுறை தனது தந்தையாராகிய தியாகருடன் காட்டைச் சுற்றிப் பார்க்கும் போது ஒரு மேட்டுக் காணியையும் அதனருகில் பள்ளக்காணியையும் அவதானித்தார். இப்போது காட்டை சுற்றிப் பார்த்த போது, அது தான் சிறுவயதில் தந்தையாருடன் வந்து பார்த்த இடம் என்பதை புரிந்துகொண்டார். அந்தக் காணியை அவர் தனக்கென தெரிவு செய்து கொண்டார். ஏனையவர்களும் தமக்கு விருப்பமான பகுதியை தெரிந்தெடுத்துக் கொண்டனர். தம்பையருடைய காணியை துப்பரவு செய்து, தாங்கள் யாவரும் தங்கியிருக்க கூடிய ஒரு பெரிய கொட்டில் போடுவது என்பது ஊரில் இருந்து வரும் போதே தீர்மானித்த விடயம். எனவே மூன்று பேர் கொட்டில் போடும் காணியை துப்பரவு செய்ய, ஏனையவர்கள் வடக்கு காட்டில் கப்புக்கள், வளைத்தடிகள், பாய்ச்சுத்தடிகள் வெட்ட சென்றனர். முத்தர் ஓரளவு தச்சு வேலை தெரிந்தவர் என்பதால் அவர் காட்டிற்கு சென்றவர்களுடன் சேர்ந்து சென்றார். தம்பையரும் ஆறுமுகமும் இன்னொருவரும் தம்பையருடைய காணியை துப்பரவு செய்ய சென்றனர். ஆறுமுகத்தாருக்கு இவர்கள் எல்லோருக்கும் சமைக்கும் பொறுப்பும் அன்று வழங்கப்பட்டது. சுழற்சி முறையில் ஒவ்வொருவரும் சமைப்பது என்பதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் தான். ஆறுமுகம் அன்று சற்று முன்னரே சமைக்கச் சென்று விட்டார். அவர் போகும் வழியில் தான் முன்னரே பார்த்து வைத்த, பற்றைகளின் மேல் படர்ந்திருந்த தூதுவளைச் செடியில் சில இலைகளையும் பறித்துச் சென்றார். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பருப்புக்கறியும் தூதுவளைச் சம்பலும், ஏனையவர்களுக்கு மேலதிகமாக கருவாட்டுக் கறியும் வைத்தார். மத்தியான வேளை தம்பையரும் மற்றவரும் வந்ததும் அவர்களை சாப்பிடும்படி கூறிவிட்டு, ஆறுமுகம் தனது நாயை துணையாக வைத்துக் கொண்டு ஏனையவர்களுக்கான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வடக்கு காட்டிற்குள் சென்றார். வேறு யாரும் அந்த பகுதியில் இல்லாத படியால் நாய்களின் குரைக்கும் சத்தத்தை வைத்து மற்றவர்களை கண்டு பிடிக்கலாம் என்றும், தவறினாலும் தனது நாய் தன்னை அவர்களிருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதும் ஆறுமுகத்தாருக்கு தெரியும். அந்த நாளில் நாய்கள் தான் மனிதனுக்கு தோழனாக, இருந்து பல தடவைகள் உதவியிருக்கின்றன. சிறிது தூரம் சென்றதும் ஆறுமுகம் கையை வாயில் வைத்து சத்தமாக விசிலடித்தார். உடனே நாய்கள் குரைக்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து அவர்களில் யாரோ ஒருவர் பதிலுக்கு சீக்காயடிக்கும் சத்தமும் கேட்டன. வெட்டிய மரங்களையும் தடிகளையும் ஓரிடத்தில் வைத்துவிட்டு, அருகே காணப்பட்ட நீர்நிலையில் மேல் கழுவி ஆறி இருந்தவர்களுக்கு ஆறுமுகத்தின் சாப்பாடு அமிர்தம் போன்று இருந்தது. ஆறுமுகமும் அவர்களோடு சாப்பிட்டார். எல்லோரும் முதல் நாளின் உடும்புக்கறியைப் பற்றி ஆர்வத்துடன் கதைத்தனர். மரங்களையும் தடிகளையும் வெட்ட இன்னும் ஒருநாள் தேவைப்படும் என்று கணித்த ஆறுமுகம் மறுநாள் அவர்களுக்கு ஏதாவது சுவையான கறி வழங்க வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார். சாப்பாடு கொண்டு செல்லும் போது பாதுகாப்புக்கு ஒரு நன்கு கூராக்கப்பட்ட கத்தியை ஆறுமுகம் கொண்டு சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில் கட்டுவதற்கு ஏற்ற கொடிகளை வெட்டி எடுத்துக் கொண்டார். நான்கு அடி நீளமான தடிகள் சிலவற்றையும் வெட்டித் தூக்கிக் கொண்டார். அன்று இரண்டு “டார்” அமைப்பதென்று முடிவெடுத்து விட்டார். டார் அமைத்தல் ஆறுமுகம் நான்கு தடிகளைச் சதுரமாக தான் கொண்டு சென்ற தாவரத்தின் கொடியினால் கட்டினார். குறுக்காக அரை அடி இடைவெளியில் தடிகளைக் கட்டினார். பின் அவற்றிற்கு செங்குத்தாக அரை அடி இடைவெளியில் தடிகளைக் கட்டினார். இதே போன்று இன்னொரு சதுர அமைப்பையும் கட்டிக்கொண்டார். கொடிகள் மிகவும் பலம் மிக்கவை. இரண்டு மூன்று கொடிகளை திரித்துவிட்டால் மாடுகளையும் கட்டி வைக்க கூடிய இன்னும் பலமான கயிறு கிடைத்து விடும். கௌதாரிகளும் காட்டுக் கோழிகளும் வரக்கூடிய இரண்டு இடத்தை தேர்ந்தெடுத்தார். சதுரமாக கட்டிய அமைப்பை இரண்டு இடத்திலும் ஒவ்வொன்றாக கொண்டு சென்று வைத்தார். குழைகளை வெட்டி அந்த சதுரத்தின் மேல் பரப்பி கட்டினார். பின் ஈரமான களி மண்ணை குழைகளின் மேல் போட்டு மெழுகி விட்டார். இப்போது “டார்” தயார். இனி அதனை பொறிவாக கட்டுவதிலே தான் நுட்பம் உண்டு. ஒரு தடியை சற்றே வெளிப்புறம் சாய்வாக, தட்டி விட்டவுடன் வெளியே விழத்தக்கதாக நட வேண்டும். டாரின் ஒரு பக்கத்தை நிலத்தில் வைத்து எதிர்ப் பக்கத்தின் நடுப்பகுதியை முன்னரே நட்ட தடியுடன் கட்ட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கப்பலில் பாயை கம்பத்துடன் கட்டுவது போல. ஆறுமுகம் தான் அமைத்த டாரை தடியில் கட்டி விட்டார். ஆறுமுகம் ஏற்கனவே சிறிது அரிசியை மடியில் கட்டி வந்திருந்தார். அவற்றை இரண்டு பகுதியாக பிரித்து இரண்டு டார்களின் கீழும் தூவி விட்டார். இனி வாய்ப்பைப் பொறுத்தது. கால்களால் கௌதாரிகளோ, காட்டு கோழிகளோ நிலத்தைக் கீறி மேயும் போது அந்த அதிர்வில் தடி வெளிப் புறம் விழ, டார் அவற்றின் மீது விழுந்து விடும். ஆறுமுகத்தார் சற்று தாமதித்தே வந்ததை அவதானித்த தம்பையர் அவர் மரம் வெட்டுபவர்களுக்கு உதவி விட்டு வருகிறார் என்று எண்ணிக் கொண்டார். காட்டிலுள்ளவர்களோ ஆறுமுகம் உடனே திரும்பி தம்பையருக்கு உதவப் போயிருப்பார் என நினைத்துக் கொண்டனர். ஆறுமுகம் “டார்” பொறி வைத்ததை ஒருவருக்கும் கூறவில்லை. அடுத்தநாள் காலை கஞ்சி குடித்துவிட்டு காட்டுக்கு போபவர்கள் போய் விட்டார்கள். ஆறுமுகம் தம்பையரிடம் தான் நீர்நிலையின் அருகே வல்லாரைக் கீரை படர்ந்திருக்கக் கண்டதாகவும் அவற்றுடன், முடக்கொத்தான் இலைகளையும் பிடுங்கி வந்தால் இரவில் இரசம் வைத்துக் கொடுக்கலாம் என்றும் வேலை செய்பவர்களின் உடல் உழைவுகள் பறந்தோடி விடும் என்றும் கூறி விட்டு காட்டுக்குள் சென்றார். தான் சொன்னது போல வல்லாரை இலைகளையும் முடக்கொத்தான் இலைகளையும் சேகரித்துக் கொண்டார். ஆறுமுகம் சற்று பதற்றத்துடனேயே முதலாவது டார் இருக்கும் இடத்தை அடைந்தார். டார் விழுந்திருந்தது. காற்றிற்கும் விழுந்திருக்கும். விசப் பாம்புகள் நடமாடியும் விழுந்திருக்கலாம். பறவைகளாலும் விழுந்திருக்கலாம். பறவைகளாயிருந்தால் டாரை தூக்க உயிருடன் இருப்பவை ஓடிவிடக் கூடும். விச ஜந்துக்களாய் இருந்தால் கையை விட்டுப் பார்க்க கடித்து விடக் கூடும். ஆறுமுகத்தார் டாரின் மேலேறி நின்று நன்கு மிதித்தார். ஆறுமுகம் உயரம் பெருப்பமான மனிதர். அவரின் மிதியில் எந்த விலங்கும் இறந்து விடும். ஆறுமுகம் டாரைத் தூக்கினார். அங்கே மூன்று கௌதாரிகள் விழுந்திருந்தன. அடுத்த டாரிலும் இரண்டு கௌதாரிகள் விழுந்திருந்தன. மதியம் வந்து டாரை திருத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். விறு விறுவென்று நடந்து தம்பையர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று நடந்ததைக் கூறி, தான் விரைவில் சென்று சமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, இலைகளையும் கௌதாரிகளையும் பத்திரமாக வைத்துவிட்டு பற்றைகளை வெட்டத் தொடங்கினார். தம்பையரோ ஆறுமுகம் கூறியதைக் கேட்டு புன்முறுவலுடன் தலையை ஆட்டினார். தம்பையர் கண்டபடி கதைக்க மாட்டார். ஆனால் அவர் ஒரு விடயத்தைச் சொன்னால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆறுமுகம் வேளையுடன் சென்று கௌதாரிகளை துப்பரவு செய்து கறி காய்ச்சி, வல்லாரைச் சம்பல் அரைத்து, ஈரச்சேலையில் சுற்றி வைத்திருந்த முருக்கங்காயை சைவர்களுக்காக காய்ச்சி முடிய தம்பையரின் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அவர்களைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, ஆறுமுகம் முதல் நாளைப் போலவே காட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடு கொண்டு போனார். இன்று கௌதாரிக் கறி என்று அறிந்ததும் அவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தாங்களும் வந்து உதவி செய்து இன்னும் மூன்று டார்களை அமைப்போம் என்று உற்சாகமாக கூறினார்கள். தொடரும்.. https://vanakkamlondon.com/stories/2020/09/84232/ 4 Link to comment Share on other sites More sharing options...
theeya Posted September 22, 2020 Share Posted September 22, 2020 முக்கியமான பதிவுகள் தொடருங்கள். Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted September 23, 2020 தொடங்கியவர் Share Posted September 23, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம் மூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை “தியாகர் வயல்” என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார். உடனே இன்னொருவர் “குழந்தையன் மோட்டை” என்று தனது மூதாதையரின் பெயரையும் தனது காணியில் இருந்த நீர் நிலையையும் இணைத்து பெயரிடப் போவாக சொன்னார். மற்றொருவர் “பொந்து மருதோடை” என்று தனது காணியில் நின்ற பொந்துள்ள பெரிய மருத மரத்தையும் தனது காணிக்கு அருகே ஓடிய ஓடையையும் சேர்த்து அழைக்க விரும்பினார். இப்போது இரவில் இவ்வாறு பெயர் வைப்பதுடன் தமது காணியை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்ற சிந்தனை ஏற்படக்கூடியதாக தம்பையர் ஏதாவது கூறி உற்சாகப் படுத்தி கொண்டேயிருந்தார். பனைகள் வந்த விதம் தெரியவில்லை. ஆனால் தம்பையர் குழு வந்த போது பனங்கூடல்கள் இருந்தன அடுத்த நாள் மூவர் குறிப்பம் புளிக்கு அருகே இருந்த பனங்கூடலில் சில பனை மரங்களில் ஏறி ஓலைகளை வெட்டிப் போட கீழே நின்ற மற்றவர்கள் அவற்றை பாடாக மிதித்து அடுக்கி வைத்தனர். பனை ஓலைகள் கொட்டில்களை வேய்வதற்கு பயன் படும். இன்று சமையல் பொறுப்பு சைவ உணவு உண்பவருக்கு வந்தது. அவர் சுட்டதீவிலிருந்து நடந்து வந்த போது வழியில் காட்டில் விளையும் வட்டுக் கத்தரிக்காய்களையும் குருவித் தலைப் பாகற்காய்களையும் கண்டிருந்தார். பாகற்காய் சிறிதாக குருவியின் தலை போன்றிருந்தபடியால் அந்தப் பெயர். அவர் பாகற்காய் குழம்பையும், வட்டுக்கத்தரிக்காயை அடித்து விதைகளை அகற்றி, பின் தேங்காய் எண்ணெயில் பொரித்தும், காட்டில் பறித்த மொசுமொசுக்கை வறையும் ஆக்கியிருந்தார். எல்லோரும் ரசித்து உண்டனர். இப்போது காடு பற்றிய பயம் அவர்களுக்கு போய் விட்டது. இடைக்கிடை சிறுத்தைகள் உறுமிய சத்தம் தூரத்தில் கேட்கத் தான் செய்தது. யானைகளும் மனித வாடையை நுகர்ந்து விலகி விட்டன. காடு, தன்னை அறிந்த மக்களுக்கு நீர், உணவு வழங்கி காப்பாற்றும் என்பதையும் உணர்ந்து விட்டனர். செருக்கன் மக்களும் தாம் வாக்களித்த படி உதவ முன் வந்தனர். இவர்களின் கோரிக்கைப்படி மூன்று மாட்டு வண்டில்களைக் கொண்டு வந்தனர். வரும்போது அன்று பிடிபட்ட உடன் மீன்களுடன் வந்திருந்தனர். இருவர் அவர்களுக்கும் தங்களுக்கும் சேர்த்து சமையல் செய்ய ஆரம்பித்தனர். ஏனைய ஆறு பேரும் கப்புக்கள், வளைகள், பாய்ச்சுத்தடிகள், பனை ஓலைகள் முதலியவற்றை ஏற்றி தம்பையரின் காணிக்கு கொண்டு வந்தனர். மத்தியானம் சாப்பிடும் போது தான் சற்று ஓய்வு. முழுவதையும் ஏற்றி முடிய பொழுதும் சாய்ந்தது. செருக்கன் உறவுகளை நன்றி கூறி அனுப்பி வைத்தனர். வெட்டி ஏற்றிவந்த கப்புகள், வளைகள், பாய்ச்சுத்தடிகள் தம்பையரது காணியில் கொட்டில்களை போட்டு, மிகுதியில் இன்னும் மூவரின் காணிகளில் கொட்டில்களை போடப் போதுமானவை. அடுத்த நான்கு நாட்களும் தம்பையரின் காணியில் யாவரும் படுத்து உறங்கக் கூடிய பெரிய கொட்டில் ஒன்றும், சமைப்பதற்கான கொட்டில் ஒன்றும் போடத் தேவைப்பட்டது. கொட்டில் போட்டு, வேய்ந்து, உள்ளே மண் போட்டு சமன்படுத்தி அடித்து இறுக்கி, மெழுகி முடித்தார்கள். அன்றிரவு அவர்களின் பொருட்கள் எல்லாம் கொட்டிலுக்கு வந்து சேர்ந்தன. இப்போது ஒரு வீட்டில் வாழுகின்ற பாதுகாப்பு உணர்வு ஏற்பட யாவரும் நிம்மதி அடைந்தனர். இப்போது தான் தாங்கள் வெளியில் படுத்த பொழுது பயந்த கதைகளை ஒவ்வொருவரும் கூறினர். இரவில் சரசரத்த சத்தத்தைக் கேட்டு பாம்பு தான் கடிக்க வருகுது என்று ஒருவர் பயந்திருந்தார். கரடி வந்து கண்களைத் தோண்டி எடுத்து விடுமோ என்று இன்னொருவர் பயந்திருந்தார். தாங்கள் பயந்து நடுங்கியதை வெளிக் காட்டாது தாம் பயப்படவே இல்லை என்று வீரம் பேசியவர்களும் இருந்தார்கள். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. காலை கை, கால், முகம் கழுவி திருநீறு பூசும் போது தாங்கள் கோவிலுக்கு போய்க் கனநாளாகின்றது என்று சிலர் முணுமுணுத்தார்கள். இத்தக் குறை அவர்கள் மனதில் வந்து விடக்கூடாது என்பதில் தம்பையரும், முத்தரும், ஆறுமுகத்தாரும் கவனமாக இருந்தார்கள். முத்தர், பிள்ளையார் கோவிலுக்கு என்று ஒரு இடமும் காளி அம்மன் கோவிலுக்கு என்று ஒரு இடமும் தனது காணிக்கு அருகே பார்த்து வைத்திருந்தார். அடுத்த நாள் தம்பையர் தான் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, கோயில்களுக்கு பார்த்து வைத்த இரு இடங்களையும் பற்றைகளை வெட்டி, செருக்கி துப்பரவாக்க அனுப்பி வைத்தார். அவர்கள் யாவரும் உற்சாகமாக அன்று முழுவதும் அந்த வேலையைச் செய்து முடித்தார்கள். ஆற்றிலே ஆண்டாண்டு காலமாக கிடந்து ஆற்று நீரினால் உருமாறி முக்கோண வடிவில் இருந்த ஒரு பெரிய கல்லை ஆறுமுகத்தின் தோளில் தூக்கி வைத்து தம்பையரும் முத்தரும் பிள்ளையாருக்கென ஒதுக்கிய காணிக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு பெரிய பாலை மரத்தின் கீழ் முத்தர் அதனை நாட்டி வைத்தார். வணங்குவதற்காக பிள்ளையார் கோவில் உருவாயிற்று. இளைஞர்களில் இருவர் திருமணம் செய்யாதவர்கள். ஒருவருக்கு திருமணம் முற்றாகி இருந்தது இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். மற்றவர் தனக்கு என்று ஒரு காணியை வெட்டி, வாழ்வதற்கு அந்த காணியில் ஒரு கொட்டிலையும் போட்ட பின்னர் தான் அதைப் பற்றி யோசிக்கப் போவதாக கூறினார். தம்பையருக்கு விசாலாட்சியுடன் திருமணமாகி கணபதிப்பிள்ளை என்ற ஒரு மகனும் இருக்கின்றான். ஆறுமுகத்தார் திருமணம் செய்து இரண்டு வருட வாழ்க்கை நிறைவு பெற முன், அவர் மனைவி காய்ச்சலில் மூன்று நாள் தவித்து பரியாரியாரின் வைத்தியம் பலனின்றி இறந்து விட்டா. அவருக்கு இன்னும் அந்த துக்கம் மறையவில்லை. சகோதரிகளுக்காக மனதைத் தேற்றிக் கொண்டு நடமாடுகிறார். முத்தரின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். பிள்ளைப் பேறுக்கான நாளும் நெருங்கி விட்டது. முத்தர் ஒரு முறை ஊருக்குப் போய் வரத் தீர்மானித்தார். தம்பையர் அவருடன் திருமணமான மற்ற மூவரையும் போய் வருமாறு கூறினார். உணவுப் பொருட்களும் முடிந்து விட்டன. அவற்றையும் எடுத்து வருமாறு கூறினார். திருமணம் முற்றாக்கப்பட்ட இளைஞன் தானும், போய் தாய் தகப்பனைப் பார்த்து வருவதாகக் கூறினான். மற்ற இளைஞன், அவன் தனக்கு முற்றாக்கி வைத்த பெண்ணைப் பார்க்கத் தான் அவசரப்படுகிறான் என்று கேலி செய்தான். தம்பையர் வழமை போல ஒரு புன்முறுவலுடன் அவனையும் போகுமாறு கூறினார். தம்பையரும் ஆறுமுகமும் இளைஞனுமாக மற்ற ஐவரையும் வழி அனுப்பி வைத்தனர். ஏற்கனவே செருக்கன் நண்பர்களிடம் சொல்லி வைத்ததால், அவர்களை சுட்டதீவு துறையிலிருந்து கச்சாய் துறைக்கு அழைத்துப் போக தோணிகள் காத்திருக்கும். தம்பையரும் குழுவினரும் காடழிப்பதற்கு உடலுழைப்புடன், அக்கினி பகவானையும் பயன் படுத்த தீர்மானித்திருந்தனர். வெட்டிய பற்றைகளையும் மரங்களையும் பெரிய பற்றைகளின் மேல் படினமாக போட்டு வைத்தனர். அவை காய்ந்த பின்னர் நெருப்பு வைத்தால் வெட்டிப் போட்ட பற்றைகளுடன் பெரிய பற்றைகளும் சேர்ந்து விளாசி எரியும். காடு வெட்டுவதன் அரைவாசி வேலையை தீ செய்துவிடும். தம்பையரும் ஆறுமுகமும் இளைஞனும் நன்கு காய்ந்திருந்த பற்றைகளை எரிக்கத் தொடங்கினர். அவை விளாசி எரியத்தொடங்கின. எங்கும் தீ. ஒரே புகை மண்டலம். பற்றைகளில் மறந்திருந்த முயல்கள், உடும்புகள், அணில்கள், கௌதாரிகள், கானாங்குருவிகள் முதலிய விலங்குகள் பதறியடித்துக் கொண்டு உயிரைத் காப்பாற்ற ஓடின. ஐந்தாம் நாள் போனவர்களில் மூன்று பேர் மட்டும் திரும்பி வந்தனர். அவர்களுடன் போன ஐவரும் கூறிய புதினங்களால் துணிச்சல் பெற்ற, மேலும் நான்கு புதியவர்களும் வந்திருந்தனர். முத்தரின் மனைவிக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டது. வைத்திய சாலை நிர்வாகம் உடனே பெயர் வைக்குமாறு கூறியதால், முத்தர் தன்மகனுக்கும் கணபதிப்பிள்ளை என்ற தம்பையரின் மகனது பெயரையே வைத்தார். அவர்களது நட்பு அவ்வளவு இறுக்கமானது. முத்தர் சில நாட்கள் கழித்து வருவார். மற்றவரின் குழந்தைக்கு சுகயீனம். பிள்ளைக்கு ஓரளவு சுகமாக முத்தருடன் தானும் வருவதாக கூறி நின்று விட்டார். ஏற்கனவே தங்கியிருந்த மூவருடன் இப்போது வந்த ஏழு பேரும் சேர்ந்து பத்துப் பேரும் முதலில் வந்து காடு வெட்டிய எட்டுப் பேரின் காணிகளை நோக்கினர். அவை பெரும்பாலும் துப்பரவாக்கப்பட்டு வெளியாக தெரிந்தன. புதிதாக வந்த நால்வரும் தாங்களும் தொடக்கத்திலேயே வந்திருக்கலாமே என்று ஆவலுடன் பார்த்தனர். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன். https://vanakkamlondon.com/stories/2020/09/85016/ 3 1 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted October 1, 2020 தொடங்கியவர் Share Posted October 1, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 4 .. வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின் இறைச்சி. அந்த காலத்தில் அரிய உயிரினங்களை பாதுகாக்கும் சட்டம் கடுமையாக இல்லை. தாவர உணவு உண்போருக்கு குருவித்தலைப் பாகற்காய், வட்டுக் கத்தரிக்காய், பிரண்டைத் தண்டு, மொசுமொசுக்கை இலை, தூதுவளை, வல்லாரை, முடக்கொத்தான் இலை முதலியன. பழ வகைகளுக்கு பாலைப் பழம், ஈச்சம் பழம், கருப்பம் பழம், விளாம்பழம், நாவற் பழம், துவரம் பழம், புளியம் பழம் முதலியன. சுட்ட தீவு கடற்கரையில் தானாக விளைந்த, வைரம் போல ஒளிரும் உப்பு. சுட்டதீவிற்கும் குறிப்பம் புளிக்குமிடையில் உள்ள காட்டில் நிறைய புளியமரங்கள் காணப்பட்டன. தம்பையரும் குழுவினரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புளியம்பழங்களை பிடுங்கினர். இரவு நேரங்களில் கோதை உடைத்தனர். கொட்டைகளை அகற்றினர். சிறிது உப்புத்தூளை கலந்து உருண்டையாக்கினர். ஒரு வெய்யிலில் காய வைத்து எடுத்தனர். ஊர் போகும் போது எல்லாம் கொண்டு சென்று உறவினர்களுக்கு கொடுத்தனர். இயற்கை உப்பளத்தில் அள்ளிய உப்பையும் கொண்டு சென்றனர். தேனைக் கொண்டு சென்று, தேவை போக மிகுதியை சாவகச்சேரிக்கு கொண்டு சென்று விற்றனர். மயில் இறகு, மான் தோல், சிறுத்தைப் புலியின் தோல், பற்கள், நகங்கள் நல்ல விலை போயின. உறவினர்களுக்கு இறைச்சி வத்தல்களை கொண்டு சென்று கொடுத்தனர். மனைவியின் பிள்ளைப் பேற்றிற்காக சென்றிருந்த முத்தர் முப்பத்தொரு நாட்களின் பின்னர் மற்ற தோழருடனும், சில புதிய உறவினர்களுடனும், இரண்டு வண்டில்களில் பழைய கண்டி வீதியால் பெரிய பரந்தன் வந்து சேர்ந்தார். இப்போதைய A9 வீதியால் அல்ல. பழைய கண்டி வீதி என்பது இயக்கச்சியால் வேளர் மோட்டை, பிள்ளை மடம், வெளிறு வெட்டி, அடையன் வாய்க்கால், பாணுக்காடு, ஊரியான், முரசு மோட்டை, பழைய வட்டக்கச்சி, கல்மடு, கொக்காவில் என்று தொடர்ந்து செல்லும். முத்தர் முரசுமோட்டையிலிருந்து குறுக்கு வழியால் வந்தார். ( யாழ்ப்பாண வீதி இயக்கச்சியில் தென் திசையில் திரும்பி பின் ஆனையிறவு சந்தை ஊடாக வேளார் மோட்டை சென்று முரசுமோட்டை செல்லும் பழைய கண்டி வீதி இது. இப்போதைய A9 வீதி அல்ல.) முத்தர் வரும் போது சில மண் வெட்டிகளை வாங்கி வந்து இல்லாதவர்களுக்கு கொடுத்தார். மண் வெட்டிப் பிடியை அவரவர் காட்டில் வெட்டி போட்டுக் கொண்டனர். புதியவர்கள் தாம் தேர்ந்தெடுத்த காணியில் காடு வெட்டி எரித்தனர். மழைக்கு சில நாட்கள் இருந்த படியால் முதல் வந்தவர்கள் வேறு காணிகளையும் வெட்டிக் கொண்டனர். முதல் மழையும் வந்தது. எரித்த சாம்பலுடன் புதிய மண் மழை ஈரத்திற்கு வாசனை வீசியது. இதனைத்தான் மண்வாசனை என்று சொல்வார்களோ. கட்டை பிடுங்காத காணி, மாடுகளில் கலப்பை பூட்டி உழ முடியாது. எல்லோர் காணிகளிலும் ஒரு சிறிய பகுதியை விட்டு விட்டு, நெல் விதைத்து மண் வெட்டியால் கொத்தினார்கள். எல்லோருக்கும் எல்லோரும் கூட்டாகவே விதைப்பு நடந்தது. இனி களை எடுத்தலும், அருவி வெட்டலும், சூடு வைத்தலும், சூடு அடித்தலும் கூட்டாகவே நடக்கும். உழவு இயந்திரம் வந்து சேரும் வரை இந்த ஒற்றுமை உணர்வும், கூட்டாக வேலை செய்தலும் தொடர்ந்தது. பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. இனித்தான் தம்பையர் குழுவிற்கு பிரதான வேலை இருந்தது. பச்சைப் பசேலென்று பயிர்கள் காட்சியளித்த படியால் அவற்றை மேய்வதற்கு மான்கள், மரைகள், குழுவன் மாடுகள் என்பன வரும். அவற்றை விரட்டி காவல் காக்க வேண்டும். நெற் கதிர் பால் பிடிக்கும் போது அதனைக் குடிக்க கிளிகள் வரும். கதிர் முற்றிச் சாயும் போது யானை, பன்றி, கௌதாரி, மயில், காட்டுக் கோழி என்பன வரும். அவற்றையும் விரட்ட வேண்டும். சுழற்சி முறையில் காவல் காப்பார்கள். இப்போது தான் நாய்களின் உதவி அவசியமாகும். அந்த முறை எல்லோருக்கும் நல்ல வேளாண்மை. நெல்மூட்டைகள் நிரம்பிய வண்டில்கள் அடிக்கடி சுட்டதீவு கடற்கரையை அடைந்தன. அங்கிருந்து தோணிகள் கச்சாய் துறைக்கு ஏற்றிச் சென்றன. தம்பையர் குழுவினர் வீடுகளில் செல்வம் கொழித்தது. கடன்கள் முழுமையாக அடைக்கப்பட்டன. தம்பையரின் மகன் கணபதிப்பிள்ளை, மட்டுவிலிலிருந்த பண்டிதரின் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு கல்வி கற்க செல்வதற்கு ஒரு கிழவனாரின் வண்டி ஒழுங்கு படுத்தப்பட்டது. அந்த வண்டியில் தம்பையரின் உறவினர்களின் பிள்ளைகளும் சென்றனர். காலை செல்லும் பிள்ளைகளை மாலை வரை நின்று, அந்த ஐயா பொறுப்புடன் கூட்டி வருவார். பிள்ளைகள் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் சென்றனர். தம்பையரின் கனவு பலிக்கத் தொடங்கியது. விதைக்காது விட்ட காணியின் பகுதியில் இருந்த மரங்களின் அடிக்கட்டைகளை மாரி மழை பெய்யப் பெய்ய மண்வெட்டி, கோடரி பயன்படுத்தி அப்புறப் படுத்தி விட்டனர். அரிவி வெட்டிய கையோடு விதைத்த பகுதியிலும் அடிக்கட்டைகள் பிடுங்கப் பட்டன. இனி கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுது கொள்ளலாம். தம்பையரிடம் எருத்து மாடுகள் இல்லை. மன்னாருக்கு சென்று ஒரு சோடி எருதுகள் வாங்க முடிவு செய்தார். மாடுகள் இல்லாத இன்னும் சிலரும் தாங்களும் வேண்ட விரும்பி அவருடன் இணைந்து கொண்டனர். தட்சினாமருதமடு பகுதியில் உள்ள மாட்டுத் தரகரை தம்பையர் அறிவார். அவரிடம் போய் மாடுகளை, அவர் மூலம் வாங்க எண்ணினார்கள். தரகரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவர் மூலம் எருதுகள் வாங்க வருபவர்களை பல பட்டிகளுக்கும் கூட்டிச் செல்வார். மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு கூட்டி வருவார். நன்கு கள்ளு வாங்கி குடிக்கப் பண்ணி விட்டு, இரவுச்சாப்பாட்டையும் கொடுத்து படுக்க விடுவார். பிரயாணக்களை, மாடு பார்க்க அலைந்த களை, கள்ளினால் உண்டான வெறி மயக்கம் எல்லாம் சேர வந்தவர்கள் மெய் மறந்து தூங்குவார்கள். தரகர் நடு இரவு போனவர்களில் ஒருவர் இருவரின் மடியைத் தடவி காசை எடுத்துவிடுவார். ஒருவரும் அவரை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் ஏனையவர்கள் யாவரின் பணமும் அப்படியே இருக்கும். வரும் வழியில் இந்த விடயத்தை தனது தோழர்களிடம் கூறி எச்சரிக்கை பண்ணி விட்டார். இரவு படுக்கப் போகும் போது, எல்லோரும் பற்றை மறைவில் ஒதுங்கினர். எல்லோரும் தமது கோவணத்தைக் கழற்றி பணத்தை அதனால் சுற்றி பற்றைக்குள் மறைத்து வைத்தனர். பின் போய் படுத்து நிம்மதியாக படுத்து உறங்கினர். தம்பையர் மது அருந்தாதவர். என்ன நித்திரை என்றாலும் சிறு அசுமாத்தத்திற்கும் எழுந்து விடுவார். நடுச்சாமத்தில் யாரோ அவரது இடுப்பை தடவுவதனை உணர்ந்தார். நித்திரை போல பாசாங்கு செய்தார். தமக்குள் புன்னகை புரிந்து கொண்டார். மற்றவர்கள் அருகேயும் நடமாட்டம் தெரிந்தது. சில நிமிடங்களில் நடமாட்டம் நின்று விட்டது. அதிகாலை காலைக் கடன்கழிக்கச் சென்ற போது அவரவர் உள்ளங்கியையும் பணத்தையும் மீட்டுக் கொண்டனர். தரகர் குளித்து திருநீறு பூசிக் கொண்டு, இவர்களை அழைத்துக் கொண்டு பட்டிகளுக்கு சென்று இவர்கள் பார்த்த வைத்த எருதுகளை விதானையார் வீட்டிற்கு ஓட்டி வரும்படி உரிமையாளரிடம் கூறினார். அது தான் முறை. விதானையார் முன்னிலையில் இன்ன குறியுள்ள, இன்ன நிற எருதுகளை, இவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு, இன்னாருக்கு முழுச் சம்மதத்துடன் விற்கின்றேன் என்று எழுதி ஒப்பமிட்டார். தரகர் சாட்சிக்கு கையெழுத்து இட்டார். விதானையார் அங்கீகரித்து ஒப்பமிட்டு தமது பதவி முத்திரையைப் பதித்தார். இந்தக் கடிதத்துடன் வாங்கியவர்கள் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் போகலாம். இவ்வாறான கடிதம் இல்லாதவிடத்து திருட்டு எருதுகள் என்று பொலிசாரால் கைது செய்யப்படும் அபாயம் உண்டு. தம்பையரும் தோழர்களும் தரகரிடம் தரகுக் காசைக் கொடுத்து விட்டு எருதுகளை ஓட்டிச் சென்றனர். போகும் போது சாமத்தில் நடந்ததைக் கூறி யாவரும் சிரித்தார்கள். தம்பையருக்கு தமது பணத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்கள். சங்கத்தானையில் தச்சு வேலை செய்பவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு கலப்பைகளும் வந்து சேர்ந்தன. இப்போது யாவரும் தம் தம் காணிகளில் கொட்டில்களை போட்டுக் கொண்டனர். அவரவர் காணிகளை வெட்டிய போதும் அவர்களுக்கு கப்புகள், தடிகள் கிடைத்தன. காணிகள் எரித்த பின் எஞ்சிய தடிகளையும் மரங்களையும் விறகுக்காக அடுக்கி வைத்திருந்தனர். இப்போது சிலர் தமது கொட்டிலில் சமைத்தார்கள். முத்தரும் ஆறுமுகமும் இன்றும் தம்பையருடன் தான் சமைத்தார்கள். சாப்பிட்டபின் தமது கொட்டில்களை கதவிற்காக கட்டி வைத்த தட்டிகளை கட்டிவிட்டு வந்து, தாய் மனையான தியாகர் வயல் கொட்டிலிலேயே படுத்துக் கொள்வார்கள். நித்திரை வரும்வரை ஆடு புலி ஆட்டம், தாயம் முதலிய விளையாட்டுக்களை விளையாடுவார்கள். சில வேளைகளில் நேரம் பிந்தியும் விளையாடுவார்கள். தம்பையர் அவர்களை அதட்டி படுக்க வைக்க வேண்டும். அடுத்த கால போகத்திற்கு அவர்கள் கலப்பைகளில் எருதுகளைப் பூட்டி உழுது விதைத்தார்கள். இம்முறையும் அவர்களுக்கு பொன் போல நெல் விளைந்தது. இப்போது காணிகளின் உயரம், பள்ளம் பார்த்து வரம்புகளும் கட்டினார்கள். வாய்க்கால்களும் அமைத்து விட்டார்கள். நீலனாறு, கொல்லனாறுகளை மறித்து வாய்க்கால்களில் நீர் பாய்ச்சுவார்கள். நீலனாறு, கொல்லனாறுகளை மட்டும் நம்பி சிறுபோக வேளாண்மையில் ஈடுபடுவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று தம்பையர் அடிக்கடி கூறுவார். எட்டாம் வாய்க்காலை நாங்களே வெட்டி, நீர் பாய்ச்ச அனுமதி பெற்று விட்டால் பின்னர் சிறுபோகத்தை தொடர்ந்து செய்யலாம் என்று தம்பையர் விளக்கினார். எட்டாம் வாய்க்காலை வெட்டி இரணைமடு குளத்திலிருந்து வரும் நீரை பாய்ச்சுவது என்று உறுதி கொண்டார்கள். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/09/85782/ 1 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted October 6, 2020 தொடங்கியவர் Share Posted October 6, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 5 கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிக ள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும், காட்டாறுகளின் நீரும் தாராளமாக கிடைத்தது. சிறு போகத்தின் போது சில வேளைகளில் பாய்ந்து ஓடி வரும் நீர், சில சமயம் ஊர்ந்தும் வரும். ஆனபடியால் ஒரு பகுதி வயலில் தான் சிறுபோகம் செய்ய முடிந்தது. இரணைமடு குளத்திலிருந்து வரும் நீரை பாய்ச்சுவதாயின் இது வரை வெட்டப்படாதிருந்த எட்டாம் வாய்க்காலை இவர்கள் வெட்டித் துப்பரவு செய்ய வேண்டும். எட்டாம் வாய்க்கால் திருத்தப்பட்டால் முழுக் காணிகளிலும் சிறு போக வேளாண்மை செய்ய முடியும். மாரி காலத்தில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடி காட்டினூடாகப் பாய்ந்து கடலில் சேரும். தம்பையரும் முத்தரும் சில காலம், மட்டுவிலில் உள்ள ஒரு ஆசிரியரிடம் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஒன்றாக கற்றவர்கள். இவர்களின் இளமைக் காலத்தில் தமிழ் பாடசாலைகள் தோன்றவில்லை. கற்றவர்கள் தமது வீட்டுத் திண்ணைகளில் வைத்து சில பிள்ளைகளுக்கு கற்பிப்பார்கள். அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்கப்பட்டன. அக்காலக் கல்வி முறையை ஓரளவு அறிய, இவர்களுக்கு முற்பட்டவரான ஆறுமுகநாவலர் கற்ற முறையை உங்களுக்கு தருகின்றேன். ஆறுமுக நாவலர் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி நல்லூரில் பிறந்தார். 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 05 ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார். தனது 57 வருட வாழ்கையில் அவர் தமிழையும் சைவத்தையும் வளர்க்க செய்தவைகள் ஏராளம். நாவலர் தனது ஐந்தாம் வயதில் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் தமிழையும் நீதி நூல்களையும் கற்றார். ஒன்பது வயதில் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும், பின்னர் அவரது குருவான சேனாதிராச முதலியாரிடமும் உயர் கல்வி கற்றார். பன்னிரண்டு வயதில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றார். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த “வெஸ்லியன்” ஆங்கிலப்பட பாடசாலையில் ஆங்கிலம் கற்று, தனது இருபதாவது வயதில் அதே “வெஸ்லியன்” ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராக கடமைக்குச் சேர்ந்தார். அப்பாடசாலை தான் தற்போது “யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி” (Jaffna Central College) என்று அழைக்கப்படுகிறது. தம்பையரும், முத்தரும், ஆறுமுகத்தாரும் உறவினர்கள். மீசாலையிலேயே ஒன்றாக வளர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் நல்ல நண்பர்களும் கூட. தம்பையர் பெரியபரந்தன் கிராமக் கனவு பற்றி கதைக்கும் போது, அவரது மனைவி விசாலாட்சியும் சம்பாசனையில் அவர்களுடன் பங்கு பற்றுவார். தம்பையர் விசாலாட்சியின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நேரில் போய் பார்க்காவிட்டாலும் இவர்கள் மூவரும் கதைக்கும் விடயங்களிலிருந்து பெரிய பரந்தன் பற்றிய ஒரு படம் விசாலாட்சியின் மனதில் விழுந்து விட்டது. பெரிய பரந்தன் பூரண வசதி அடைந்து விட்டது. பலர் வண்டிலும் எருதுகளும் வாங்கி விட்டனர். மீசாலையில் புல்லும் வைக்கலும் இன்றி மெலிந்ததிருந்த பசுமாடுகளை இங்கு கொண்டு வந்து விட்டார்கள். பெரிய பரந்தனுக்கு காணி வெட்ட வராத உறவினர்களும், தங்கள் பசுக்களையும் நாம்பன்களையும் கொண்டு வந்து தங்களுக்கு பொருத்தமான உறவினர்களிடம் வளர்ப்பிற்காக ஒப்படைத்தனர். குறி சுடும் காலத்தில் இங்கு வருவார்கள். ஈன்று இருக்கும் கன்றுகளில் அரைவாசிக்கு உரிமையாளரின் குறியும் மிகுதி அரைவாசிக்கு வளர்ப்பவர்களின் குறியும் இடப்படும். மாடுகளிற்கு குறிசுடுதல் என்பது மிகவும் கொடுமையான செயற்பாடு. மனிதன் ஐந்தறிவு மிருகங்களை தனது என்று உரிமை கொண்டாடுவதற்காக இந்த பாவத்தை செய்தான். குறி சுடாமல் விட்டாலும் பிரச்சினையே. ஒரே மாட்டிற்கு பலர் உரிமை கொண்டாட, அது பெரிய சண்டையாக போய் விடும். சிலர் பூனகரியிலும் சில பசுக்களை வாங்கிக் கொண்டனர். வலிமை உள்ள இளைஞர்கள் தடம் போட்டு குழுவன் மாடுகளை பிடித்து விடுவார்கள். அவற்றிற்கு குறிசுட்டு விட்டு தமது பட்டியிலிலுள்ள வலிமையான மாடுகளுடன் பிணைத்து விடுவார்கள். சில நாட்களில் அவை நன்கு பழகிவிடும். அந்தக் காலத்தில் காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த மாடுகளை பிடிப்பது குற்றமல்ல. இன்னும் சொல்லப் போனால் ஆதியில் காட்டில் சுதந்திரமாக திரிந்த மாடுகள், ஆடுகள், எருமைகளை பிடித்து ஆதி மனிதன் பழக்கி வளர்த்தவற்றின் வழி வந்தவையே இன்றைய வீட்டு விலங்குகள். மாடுகளை காட்டில், ‘காலைகள்’ அமைத்து இராப்பொழுதுகளில் பாதுகாப்பின் நிமித்தம் அடைத்து வைத்தார்கள். பெரியபரந்தனில் மோட்டைகள், பள்ளங்கள், நீர்நிலைகள், சிறு குளங்கள் காணப்பட்டன. அதனால் சிலர் எருமைகளையும் வாங்கி வளர்த்தார்கள். எருமைகள் நீர் நிலைகளில் விரும்பி வாழும் இயல்புடையவை. இந்த எருமைகளை உழவுக்கும், பிரதானமாக சூடு அடிக்கவும் பயன் படுத்தினார்கள். சிலர் எருமைப் பாலையும் கறந்து பயன்படுத்தினார்கள். எருமைத் தயிருக்கு பனங்கட்டி கலந்து சாப்பிட்டவர் அந்த சுவையை வாழ்நாளில் மறக்க மாட்டார். சூடு அடிக்க மதுரையில் யானைகளைப் பயன்படுத்தியதாக வரலாறு உண்டு.” மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை” என்று தொடங்கும் பாடல் பழம் தமிழ் இலக்கியத்தில் உண்டு. உழவுக்கு ஆண் எருமைகளை மட்டும் பயன் படுத்தினர். உழவு இயந்திரம் வந்து சேரும் வரை பெரிய பரந்தன் மக்கள் மாடு கட்டியே போரடித்தனர். போர் என்பது சூடு. வெட்டிய நெற்பயிரிலிருந்து நெல்லை பிரித்தெடுக்கும் வரை மழையில் நனையா வண்ணம் குவித்து வைப்பதையே சூடு என்பார்கள். குஞ்சுப் பரந்தனுக்கு பெண்கள், நெல் விதைக்கும் போதும், அரிவி வெட்டி சூடு அடிக்கும் போதும், பொறிக்கடவை அம்மன் பொங்கல், திருவிழாவின் போதும் மட்டும் பிள்ளைகளுடன் வந்து நின்று விட்டு போய் விடுவார்கள். செருக்கனில் இளம் குடும்பங்களிலும், பிள்ளைகள் படிக்கும் வயதை தாண்டி விட்ட குடும்பங்களிலும் தான் பெண்கள் வந்திருந்தார்கள். ஏனைய குடும்பங்களின் பெண்கள், பிள்ளைகளின் படிப்பிற்காக ஊரிலேயே தங்கி விடுவார்கள். அவ்வாறில்லாமல் ஆண்டு முழுவதும் பெண்களையும் பெரிய பரந்தனிலேயே தங்கி வாழச் செய்ய வேண்டும் என்பது தம்பையரினதும் நண்பர்களினதும் கனவாக இருந்தது. இதனை நன்கறிந்திருந்த விசாலாட்சி தானும் முழு விருப்பத்துடன் தயாராக இருந்தாள். ஏனையவை யாவும் திட்டமிட்டது போல நடந்து விட்டன. மனைவியை அழைத்து வந்து பெரிய பரந்தனில் வாழ்வது என்ற தம்பையரின் எண்ணம் நிறைவேற முன்னர் ‘காய்ச்சல்’ என்ற பெயரில் இயமன் தம்பையரின் உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். தம்பையருக்கு காய்ச்சல் என்றதும் ஆறுமுகம், முத்தர் மற்றும் உறவினர்கள் உடன் அவரை ஊருக்கு அழைத்துச் சென்று, பரியாரியார் வீட்டில் விட்டு, தாமும் நின்று வைத்தியம் பார்த்தனர். பரியாரியாரும் மூன்று வேளையும் மருந்து கொடுத்து கவனமாக வைத்தியம் செய்தார். விசாலாட்சியும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் பரியாரியார் சொன்னபடி பத்திய உணவு சமைத்து எடுத்து வந்து தம்பையருக்கு ஊட்டி விடுவாள். பரியாரியார் கைராசியானவர். எந்த காய்ச்சலையும் தனது மூலிகை வைத்தியத்தினால் குணப்படுத்தி விடுவார். ஆனால் எல்லோரையும் ஏமாற்றி விட்டு காலன் அவரது உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். எல்லோரும் திகைத்து விட்டனர். விசாலாட்சி தனது உலகமே அழிந்து விட்டதனால் பெருங்குரல் எடுத்து அழுதாள், கதறினாள். ஆறுமுகத்தாரும் முத்தரும் அழுதனர். ஏனையவர்களும் அழுதனர். யார் அழுதென்ன? மாண்டார் மீண்டு வருவாரோ? ஆறுமுகத்தாரும் முத்தரும் முன்னின்று செத்தவீட்டு ஒழுங்குகளைச் செய்தனர். தம்பையரை வருத்தம் பார்க்க வந்தவர்களில் சிலர் சென்று, பெரிய பரந்தன் உறவுகள் யாவரினதும் பொருட்களுக்கு காவல் நிற்க, ஏனையவர்கள் யாவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டனர். விசாலாட்சி கதறி அழுதபடியே இருந்தாள். தாய் அழுவதைக் கண்ட ஏழு வயதே நிரம்பிய மகன் கணபதிப்பிள்ளை என்ன நடக்கிறது என்று தெரியாது திகைத்துப் போய் இருந்தான். தம்பையரைத் தூக்கிச் செல்ல, துயர் தாங்கமுடியாத விசாலாட்சி மயங்கி விழுந்து விட்டாள். தனது தலையை ஏன் மொட்டை அடிக்கிறார்கள், தகப்பனுடன் கூட்டிச்சென்று ஏன் கொள்ளிக்குடம் தூக்க வைக்கிறார்கள், ஏன் கொள்ளி வைக்கச் செய்கிறார்கள் என்பது தெரியாமலேயே கணபதி பெரியவர்கள் சொன்னபடி எல்லாம் செய்தான். தம்பையர் நெருப்புக்கு இரையாவதை பார்க்க சகிக்காத ஆறுமுகம், கணபதியைத் தூக்கி தோளில் வைத்தபடி வீடு நோக்கி நடந்தான். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/10/86606/ 1 2 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted October 6, 2020 Share Posted October 6, 2020 ஒரே மூச்சில் இணைத்த பாகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டேன்... பகிர்வுக்கு மிக்க நன்றி புரட்சி! வாசிக்க வாசிக்க ஆனந்தமாக இருந்தது. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted October 7, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 7, 2020 மிக அருமையான பதிவு பொக்கிஷமாய் பாதுகாக்க படவேண்டியது .பகிர்வுக்கு மிக்க நன்றி 1 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted October 13, 2020 தொடங்கியவர் Share Posted October 13, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 6 தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி கண்ட கனவுகளை நினைத்துப் பார்த்தாள். அவனுக்காக தன் மனதை தேற்றிக் கொண்டு செயற்படத் தீர்மானித்தாள். ஒருவரின் மரணத்துடன் வாழ்வு முடிவதில்லை. எட்டுச் செலவு வரை முத்தரும் ஆறுமுகமும் நின்று எல்லா ஒழுங்குகளையும் முடித்துவிட்டு பெரிய பரந்தனை நோக்கிச் சென்றனர். பெரிய பரந்தனில் எல்லோரும் தம்பையரை தமது வழிகாட்டியாகவும், தலைவனாகவும், பிரச்சனைகள் வந்த போது தோழனாகவும் நினைத்து அவர் காட்டிய வழியிலேயே நடந்தவர்கள். அவரது இழப்பு அவர்களை சோர்வு அடையச் செய்தது. தம்பையரின் இடத்தை நிரப்பி பழையபடி எல்லோரையும் இயங்கச் செய்ய முத்தரினதும் ஆறுமுகத்தாரினதும் கூட்டுத் தலைமை தேவைப்பட்டது. தமது கவலையை வெளிக்காட்டாமல் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். விசாலாட்சி ஒரு நிரந்தர முடிவு எடுக்கும் வரை வண்டிலையும் எருதுகளையும் பராமரிக்கும் பொறுப்பை முத்தர் எடுத்துக் கொண்டார். பசுமாட்டு மந்தையை தான் பார்த்துக் கொள்வதாக ஆறுமுகம் விசாலாட்சியிடம் கூறினார். காணியையும் விதைத்து இலாபத்தை கொடுப்பதற்கு இருவரும் தயாராக இருந்தனர். ஆனால் அதை அவர்கள் விசாலாட்சியிடம் கூறவில்லை. அதை அவளின் தீர்மானத்திற்கு விட்டு விட்டனர். விசாலாட்சி, முத்தரும் ஆறுமுகத்தாரும் உதவி செய்வார்கள் என்பதை அறிவாள். ஆனால் அவர்களிடம் அளவிற்கதிகமாக கடமைப்படுவதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவளது தம்பி முறையான இருவர் அவளிடம் வந்தனர். தாங்களும் பெரியபரந்தனில் காணி வெட்டப் போவதாகவும், அது வரை அத்தான் தம்பையரின் தியாகர் வயலில் தங்கியிருந்து, அந்தக் காணியையும் செய்து குத்தகை தருவதாகவும் கூறினர். விசாலாட்சிக்கும் இது நல்ல ஏற்பாடாகப் பட்டது. முத்தரையும் ஆறுமுகத்தையும் கஷ்டப்படுத்தும் தேவை இல்லை. தம்பிமாருக்கு உதவியதாகவும் இருக்கும். ஆகவே விசாலாட்சி அதற்கு சம்மதித்தாள். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெரியபரந்தன் புறப்பட்டுச் சென்றனர். இளங்கன்று பயமறியாது. அவர்களுக்கு கூட்டாக வேலை செய்வது, முத்தரினதும் ஆறுமுகத்தாரினதும் ஆலோசனைகளைப் பெறுவது எல்லாம் தேவையற்ற விடயமாக இருந்தது. காடு கூட தன்னோடு இணைந்தவர்களுக்கு தான் ஒத்துழைக்கும். ஏனையவர்களைப் புறக்கணிக்கும். தம்பையர் குழுவினர் தமது தேவைக்கு மட்டுமே மரங்களை வெட்டினர். உண்பதற்காக மட்டுமே விலங்குகளைக் கொன்றனர். காலபோக வேளாண்மை வெற்றியடைய வேண்டும் என்றால் மழை நீரின் முகாமைத்துவம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இளைஞர்கள் காணி விதைப்பதற்கும் காடு வெட்டுவதற்கும் சம்பளம் பேசி, தமது நண்பர்களான மூன்று பேரை அழைத்துச் சென்றனர். அந்த நண்பர்களும் கமச் செய்கையில் அனுபவமற்றவர்கள். இவர்கள் வரும் வரை முத்தரும் ஆறுமுகமும் தியாகர் வயலிலேயே சமைத்து, உண்டு, இரவு படுத்தும் உறங்கினர். தம்பையரின் வீடு கேட்பாரற்று போய் விடக்கூடாது என்று கருதியிருந்தனர். இளைஞர்கள் வந்த அன்றே அவர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு, தமது வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆம், இப்போது வீடு என்று சொல்லக் கூடியதாக எல்லோர் காணிகளிலும் சமையலுக்கு ஒரு சிறிய கொட்டில், மண்சுவர் வைத்து மேலே தட்டி கட்டிய பெரிய வீடு, வருபவர்கள் படுத்து எழும்ப ஒரு பெரிய தலைவாசல் என்பன வந்து விட்டன. தம்பையர் உயிருடன் இருந்த பொழுதே, பிள்ளையார் மழை வெய்யிலில் பாதிக்கப்படாது இருக்க ஒரு கொட்டிலும், காளிக்கு மூன்று பிரிவாக பிரிக்கப் பட்ட ஒரு மண்டபமும் அமைத்து விட்டனர். பனை ஓலைக் கூரை தான். ஒரு வருட மழையை பனை ஓலைகள் தாங்கின. பின்னர் பனை ஓலையின் மேல் வைக்கலை படினமாக அடுக்கி வேய்ந்து விடுவர். அது மேலும் இரண்டு மழைகளைத் தாங்கும். காளியின் முதலாவது சிறிய அடைப்பில் பிள்ளையாருக்காக ஒரு முக்கோண வடிவக் கல் வைக்கப் பட்டது. இறுதியாக உள்ள சிறிய அடைப்பில் காளிதேவியின் கையிலுள்ள சூலத்தைக் குறிக்க ஒரு பெரிய சூலம் நடப்பட்டது. நடுவிலுள்ள பெரிய இடைவெளியில் கிராம மக்கள் வணங்கிய தெய்வங்கள் பலவற்றைக் குறிக்க கற்களும் சிறிய சூலங்களும் நடப்பட்டன. முத்தர் பிரதான பூசாரி. ஆறுமுகம் உதவிப் பூசாரி. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிள்ளையாருக்கு பொங்கல் வைக்கப்படும். காளி அம்மனுக்கு விளக்கு வைக்கப்படும். சுட்டிகளில் திரிகள் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும் சுட்டிகள் வைத்து கற்புரமும் கொழுத்தப் படும். அப்போது முத்தர் கலை வந்து ஆடுவார். பெரிய பரந்தனிலுள்ள அனைவரும் கோவிலுக்கு வருவார்கள். செருக்கனிலிருந்தும் சிலர் வருவார்கள். அவர்களில் சிலர் நன்கு உடுக்கு (மேளம் போன்ற ஒரு சிறிய தோல் கருவி) அடிப்பார்கள். உடுக்கு அடிக்க அடிக்க முத்தர் வேகம் கொண்டு ஆடுவார். காளி கோவில் கொல்லன் ஆற்றங்கரையில் இருந்தது. காளி கோவிலின் அருகே கிழக்குப் பக்கத்தில் ஒரு மேடான பகுதி இருந்தது. தம்பையரின் ஆலோசனைப்படி வண்டில்களில் மண் ஏற்றிப் பறித்து ஒரு மேடை போல அமைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் இருக்கும் பகுதி “கூத்து வெட்டை” என்று அழைக்கப்பட்டது. பெரிய பரந்தனில் அரிவி வெட்டி முடிய, சிறு போகத்திற்கு இடையில் வரும் இடை நாட்களில் பளையிலிருந்து ஒரு அண்ணாவியார் வந்து தங்கியிருந்து கூத்து பழக்குவார். பெரிய பரந்தன், செருக்கன் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாவியாரிடம் கூத்து பழகுவார்கள். அண்ணாவியார் சம்பளமாக நெல்லை வாங்கி செல்லுவார். விசாலாட்சியின் தம்பிமார் தமக்கென்று காணியைத் தெரிந்தெடுத்து வெட்டினர். அவர்களால் அக்கினி பகவானின் உதவியைப் பெற முடியவில்லை. தம்பையர் குழுவினரைப் போல அரைவாசியை வெட்டி மிகுதிப் பற்றைகள் மேல் பரவி எரிக்க முடியவில்லை. அவர்கள் வெட்டிக் கொண்டிருக்கும் காணியின் மூன்று பக்கமும் முன்னர் வந்தவர்களின் காணிகள் இருந்தன. அவர்கள் சூடு அடித்த பின்னர் வைக்கலை சூடு போல குவித்து வைத்திருந்தனர். புற்கள் இல்லாத பொழுது மாடுகளுக்கு வைக்கல் தான் உணவு. ஒவ்வொரு சூடும் சிறு மலைகள் போல காட்சியளிக்கும். அது மட்டும் அல்ல, அடுத்த போகத்திற்குரிய விதை நெல்லையும் சூடு அடிக்காது சிறு குன்றுகள் போல மழை போகாத வண்ணம் சூடாக வைத்திருப்பார்கள். இந்த சூடுகள் அடியில் பெரிய வட்ட வடிவமாகவும், மேலே செல்லச் செல்ல குறுகிச் சென்று முடி கூரானதாகவும் இருக்கும். சூடு வைப்பதும் ஒரு கலை தான். நீர் உள்ளே செல்லாதவாறு இந்த சூடுகள் அமைக்கப்பட வேண்டும். உள்ளே நீர் சென்றால் விதைநெல் மடிநெல் ஆகி விடும். மடிநெல் கறுத்து இருக்கும். சாப்பிடவும் முடியாது. விதைக்கவும் முடியாது. நெல்லை வெட்டிய உடன் விதைக்கக் கூடாது. அதற்கு ஒரு உறங்கு காலம் உண்டு. உறங்கு காலம் கழிந்த பின்னரே எந்த தானியத்தையும் விதைக்க வேண்டும். வெளியே மழை பெய்தாலும் சூட்டின் உள்ளே எப்போதும் வெப்பம் சீராக இருக்கும். முதலே சூடு அடித்து சாக்கில் போட்டு வைக்கும் நெல்லின் வெப்ப நிலை மாறுபடும். எனவே முளைதிறன் குறைந்து விடும். சூடு வைத்து தேவை ஏற்படும் போது அடித்து எடுத்து விதைத்த நெல்மணிகள் யாவும் ஒத்தபடி முளைத்து விடும். இளைஞர்களுக்கு பிரச்சினை இது தான். அரைவாசி பற்றைகளை, வெட்டாத பற்றைகள் மேல் போட்டு காய்ந்த பின்னர் எரித்தால் அவை விளாசி எரிய, நெருப்புப் பொறி அயலவர்களின் சூடுகளின் மேல் விழுந்தால் அவையும் பற்றி எரிந்து விடும். அதனால் சிறு சிறு குவியலாக குவித்து, அவதானமாக கொஞ்சம் கொஞ்சமாகவே எரிக்க முடிந்தது. ஆகவே காணி வெட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. மழையும் வந்தது. பள்ளப் பக்கமாக முதலில் விதைக்க வேண்டும், பிறகு மேடான காணியை விதைக்கலாம் என்று முத்தர் முதலியோர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு பக்கத்தில் தொடங்கி ஒழுங்காக விதைத்து வந்தனர். அவ்வாறு விதைத்து வந்து, பள்ளக்காணியை அடைந்த போது மழை நீரால் பள்ளங்கள் நிரம்பி விட்டன. இப்போது மழை நீரை வாய்க்கால் வெட்டி கடத்தும் வேலை மேலதிகமாக வந்து சேர்ந்தது. முத்தர் சொன்னபோது பள்ளக் காணியை விதைத்திருந்தால் அங்கு பயிர்கள் முளைத்து நீர் மட்டம் உயர உயர நெற்பயிர்களும் உயர்ந்து வளர்ந்திருக்கும். “வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயர்வான்” என்று ஔவையார் சொன்னதையும் இளைஞர்கள் ஞாபகம் வைத்திருக்கவில்லை. மழை பெய்யப் பெய்ய நீரை கடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பயிர்கள் முளைத்து நீரின் மேல் நீட்டிக் கொண்டிருக்கும் வரை நீரைக் கடத்த வேண்டும். இனி இரவு ஆரம்பிக்கும் பொழுதும் அதி காலையிலும் ஆமைகள் பயிரை வெட்டும். அப்போது மின் விளக்கு (Torch Light) இல்லை. இலாந்தர் வெளிச்சத்தில் ஆமைகளைக் காண முடியாது. அனுபவம் மிக்கவர்கள் ஊரில் இருந்து வரும் போது தென்னம் பாளைகளை கட்டி எடுத்து வருவார்கள். ஓய்வாக இருக்கும் போது, சிறிய கீலம் கீலமாக நுனியிலிருந்து அடி வரை வெட்டுவார்கள். பின்னர் நுனியிலிருந்து ஒவ்வொரு அங்குல இடைவெளியில் இறுக்கி கட்டி விடுவார்கள். இவை நன்கு காய்ந்த பின்னர் நுனியில் நெருப்பு வைத்தால் பிரகாசமாக எரியும். இதனைச் சூழ் (torch) என்று கூறுவார்கள். கடலில் மீன் பிடிக்கவும் இத்தகைய சூழ்களைக் கொண்டு செல்வார்கள். சூழ் வெளிச்சத்தில் ஆமைகளை இனங்கண்டு பிடிக்கலாம். பயிரை வெட்ட இரண்டு விதமான ஆமைகள் வரும். ஒரு ஆமை பிடித்ததும் எதிரியிடமிருந்து தப்ப ஒரு வித கெட்ட நாற்றமுள்ள வாயுவை வெளிவிடும். அது சிராய் ஆமை. உடனே வெட்டி வரம்பில் தாட்டு விடுவார்கள். மற்ற ஆமை, பாலாமை எனப்படும். சிலர் அதை உண்பார்கள். ஆனால் பெரிய பரந்தன் மக்கள் சாப்பிடுவதில்லை. அதனையும் வெட்டி தாட்டு விடுவார்கள். தொடர்ந்து பல விலங்குகள் பயிர்களை அழிக்கவும் வரும். நெற் கதிர்களைச் சாப்பிடவும் வரும். பெரிய பரந்தன் மக்கள் குழுக்களாக பிரிந்து இரவுக்கு காவல் காப்பார்கள். காட்டோரம் உள்ள எல்லைக் காணிகளின் வேலியின் வெளியே பட்டமரக் குற்றிகளைப் போட்டு நெருப்பு வைப்பார்கள். விலங்குகள் வருகின்ற போது, சத்தமிட்டும், தாரை தப்பட்டை அடித்தும் அவற்றை விரட்டுவார்கள். எல்லோருடனும் இணைந்து விலங்குகளை விரட்ட இளைஞர்கள் பழக வேண்டும். அவ்வாறு இல்லாது இளைஞர்கள் நித்திரை கொண்ட ஓரிரவு பன்றிகள் வந்து அவர்களின் பயிரின் ஒரு பகுதியை உழக்கி அழித்து விட்டன. பன்றிகள் மக்கள் சத்தமிடாத ஆற்றங்கரையால் வந்துவிட்டன. எல்லோருடனும் சேர்ந்து காவல் காத்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம். யானைகளும் பன்றிகளும் எப்போதும் கூட்டமாகவே வரும். கூட்டமாக வரும் அவை உண்பதை விட உழக்கி அழிப்பது அதிகம். “சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது” என்ற பழமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் பெரும் நட்டம் அடைந்தனர். அவர்களால் விசாலாட்சிக்கும் குத்தகை நெல் கொடுக்க முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு போகத்திலும் ஒவ்வொரு விதமான அழிவு. விசாலாட்சியிடம் தம்பையர் கொண்டு வந்து வைத்திருந்த நெல் மணிகளும் முடிந்து விட்டன. விசாலாட்சி தம்பையர் இருந்த போதும், அவர் பெரிய பரந்தனுக்கு போய்விட கேணியிலிருந்து இரு கைகளிலும் பட்டைகளில் நீர் சுமந்து வந்து மரவள்ளி, கத்தரி, பயிற்றை, பாகல் முதலிய பயிர்களைச் செய்கை பண்ணுவாள். ஆழமான கேணியிலிருந்து இரண்டு கைகளிலும், பனை ஓலையினால் ஆன பட்டைகளில் நீர் நிரப்பி அவள் சுமந்து வரும் அழகே தனி தான். இப்போது தோட்டத்தினால் வரும் வருமானமே அவளுக்கு பிரதானமான வருமானமாகிவிட்டது. அவ்வப்போது தேங்காய், மாம்பழம், பலாப்பழம் விற்றும் சிறு வருமானம் வந்தது. அவற்றை வைத்துக் கொண்டு கணபதியை மட்டுவில் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். முத்தரும் ஆறுமுகமும் தம்பிமாருக்கு வேளாண்மை சரிவராது என்று தெரிந்து விசாலாட்சியை நினைத்து கவலை கொண்டனர். ஆனால் தாங்கள் ஏதாவது சொல்லப் போக குடும்பத்திற்குள் பிரச்சினை வந்துவிடும் என்று பயந்தனர். மற்ற நண்பர்கள், தம்பிமாரின் பொறுப்பற்ற தன்மையை விசாலாட்சியிடம் வந்து கூறி விட்டனர். தம்பையர் காலத்தில் பொன் விளைந்த பூமியை அவர்கள் சீரழிப்பதாக முறையிட்டனர். விசாலாட்சி, ஆறுமுகத்தாரையும் முத்தரையும் அழைத்து விசாரித்தாள். அவர்களும் ஏனையவர்கள் சொல்வது உண்மை தான் என்று கூறினர். இப்போது விசாலாட்சி தம்பிமாரை எவ்வாறு காணியிலிருந்து அகற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினாள். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/10/87711/ 1 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted October 22, 2020 தொடங்கியவர் Share Posted October 22, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 7 தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது முடிந்து ஏழாவது வயது ஆரம்பம். தம்பையர் இறந்த பின்னர், விசாலாட்சியின் வாழ்க்கை எப்படி போகப் போகின்றது? என்றும், மிக இளம் வயதில் கணவனை இழந்த அவள், சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றாள்? என்றும் விசாலாட்சியின் உறவினர்களும், சினேகிதிகளும் கவலை கொண்டனர். தம்பையரின் ஆண்டுத் திவசம் முடியும் மட்டும் ஒருவரும் ஒன்றும் கதைக்கவில்லை. ஓராண்டின் பின் சினேகிதிகள் மறுமணம் செய்வதைப் பற்றி, விசாலாட்சியுடன் கதைக்க ஆரம்பித்தனர். உறவினர்கள் சிலரும் அதைப் பற்றி கதைத்தனர். விசாலாட்சிக்கு தம்பையருடன் வாழ்ந்த போது அவரின் அன்பான செயல்கள், பெண்களை மதிக்கும் பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, தானும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ வழிகாட்டல்கள் வேண்டும் என்ற எண்ணம், எண்ணத்திலும் செயலிலும் காணப்பட்ட தூய்மை என்பவற்றை நினைக்கும் தோறும், வேறு ஒருவருடன் வாழும் நினைப்பு அறவே வரவில்லை. காலம் ஓடியது. தம்பிமாரால் வயலை விதைத்து லாபம் பெற முடியவில்லை. முத்தரும் ஆறுமுகமும் தம்மால் ஆன சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். முத்தர், பூனகரியில் மொட்டைக் கறுப்பன் நெல் வாங்கி ஊருக்கு கொண்டு வருவார். அவர் மனைவி அதனை அவித்துக் குத்தி, கைக்குத்தரிசியென்று விசாலாட்சிக்கு அனுப்பி வைப்பாள். முத்தர் வரும் போதெல்லாம் உப்பு, புளி போன்ற பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பார். ஆறுமுகம், தம்பையரின் பசுக்களின் பாலைக் காய்ச்சி, உறைய வைத்து தயிராக்கி, கடைந்து எடுத்த நெய்யை கொண்டு வருவார். தேன் கொண்டு வந்து கொடுப்பார். வரும் போதெல்லாம் கணபதிப்பிள்ளைக்கு ஏதாவது தின்பண்டங்கள் கொண்டு வருவார். கணபதிக்கும் ஆறுமுகத்துடன் கதைப்பது மிகவும் பிடிக்கும். தந்தையாருக்கு அடுத்த படி அவனுக்கு ஆறுமுகத்தைப் பிடிக்கும். ஆறுமுகமும், கணபதி காட்டைப்பற்றி, மிருகங்களைப் பற்றி, பெரிய பரந்தனைப் பற்றி, தோணியில் பிரயாணம் செய்வது பற்றி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சலிப்பில்லாமல் பதில் சொல்வார். விசாலாட்சியின் தம்பிமார் வயலைச் சீரழிப்பதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் இப்போது “விசாலாட்சி, ஆறுமுகத்தை ஏன் மறுமணம் செய்யக்கூடாது” என்று அவளைக் கேட்டனர். முத்தரும் இதைப் பற்றி விசாலாட்சியிடம் கதைத்தார். “ஆறுமுகம் உண்மையிலேயே நல்லவன். தம்பையரை சொந்த அண்ணனாகவே நினைப்பவன். கணபதியின் மேல் பாசம் உள்ளவன். அவனுக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை. கலியாணம் செய்தால் உன்னையும் கணபதியையும் நல்லாய்ப் பார்ப்பான்.” என்று முத்தர் எடுத்துக் கூறினார். ஆறுமுகத்தின் மனைவி இறந்து மூன்று வருடங்கள் முடிந்து, நான்காவது வருடம் தொடங்கி விட்டது. 24 வயதில் மனைவியை இழந்தவர், இப்போது 28 வயதை நெருங்குகின்றார். நல்ல மனிதன், உழைப்பாளி, கடவுள் பற்று உள்ளவன். எப்போவாவது களைத்த நேரத்தில் பனையிலிருந்து உடன் இறக்கிய பனங்கள் கிடைத்தால் குடிப்பார். தென்னங்கள் குடித்தால் வாதம் வரும் என்று அதனைத் தொடுவதில்லை. சாராயத்தை நினைத்துப் பார்ப்பதே இல்லை. உறவினர்களொடும் ஊர் மக்களோடும் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் பழகுவார். மற்றவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வார். கணபதிக்கும் அவரைப் பிடிக்கும். அவரையே மறுமணம் செய்தால் என்ன? என்று உறவினர்கள் ஒருவர் மாறி ஒருவர் கேட்கலாயினர். “அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” அல்லவா? விசாலாட்சி தம்பையர் இறந்து மூன்று வருடங்களில் பின் தான் மறுமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள். தனக்கும் 26 வயது நெருங்குகின்றது. நெடுக தனியே உழைக்க முடியாது. தம்பையரின் கனவு அழிந்து போவதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கணபதிக்காக, தம்பையர் தனது கடுமையான உழைப்பினால் தேடிய சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். தம்பிமாரை காணியை விட்டு எந்த மனவருத்தமும் இல்லாமல் வெளியேற்ற வேண்டும். ஆறுமுகத்தாரை மறுமணம் செய்தால், தம்பையரின் கனவையும் நிறைவேற்றலாம். கணபதியையும் ஒரு ஒழுக்கமான, மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துபவனான, பண்பான இளைஞனாக வளர்த்து விடலாம். ஆண் தலைமை அற்ற குடும்பங்களில் பிள்ளைகள், தாயாரின் செல்லத்தினால் கெட்டுப் போவதையும் விசாலாட்சி கண்டிருக்கிறாள். உறவினர்களிடம் “நான் ஆறுமுகத்துடன் நேரில் சில விடயங்கள் கதைக்க வேண்டும். அதன் பிறகு தான் அவனுடன் மறுமணம் செய்வது பற்றி நான் தீர்மானிப்பேன்” என்று உறுதியாக கூறி விட்டாள். முத்தர் ஆறுமுகத்திடம் “ஆறுமுகம் விசாலாட்சி தனிய இருந்து கணபதியை வளர்க்க கஷ்டப்படுகிறாள். கணபதியிலும் உனக்கு பாசம் தானே. நீ அவளை கலியாணம் செய்தால் என்ன?” என்று கேட்டார். ஆறுமுகம் பலர், முன்னர் கேட்ட போது “யோசிப்பம்” என்றவன் முத்தர் கேட்டவுடன் “விசாலாட்சிக்கும் சம்மதம் என்றால் நான் செய்கிறேன்” என்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் வீட்டிற்கு வந்து, குந்தில் அமர்ந்து கொண்டார். தம்பையர் உயிருடன் இருந்த போது, அடிக்கடி அந்தக் குந்தில் வந்திருந்து அவருடன் உரையாடியிருக்கிறார். விசாலாட்சியின் கையால் பலமுறை சாப்பிட்டிருக்கிறார். அப்போது அவளது நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, எதனையும் யோசித்து நிதானமாகப் பேசும் முறை எல்லாவற்றையும் கண்டு அவளின் மேல் மட்டற்ற மரியாதை வைத்திருந்தார். இப்போது ஒரு வித பயத்துடனும் பதட்டத்துடனும் விசாலாட்சி என்ன சொல்லப் போகின்றாவோ? என்று காத்திருந்தார். விளையாடிக் கொண்டிருந்த கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தி அணைத்துக் கொண்டார். வீட்டிற்கு வெளியே வந்த விசாலாட்சி ஆறுமுகம் கணபதியை அணைத்தபடி இருந்ததை அவதானித்துக் கொண்டாள். நேரடியாக விடயத்திற்கு வந்தாள். “ஆறுமுகம்” என்றே வழமை போல பெயர் சொல்லி அழைத்தாள். “இஞ்சை பார் ஆறுமுகம், எனக்கு இப்ப கலியாணம் முக்கியமில்லை. கணபதியை நன்றாய் வளர்க்க வேண்டும். தம்பையர் தமது உயிரையும் மதிக்காது, அந்த யானைக் காட்டில் வெட்டி உருவாக்கிய காணியையும் அழிய விடமுடியாது. அதற்கு நீ உதவி செய்வாய் என்று நம்பித்தான் உன்னை கலியாணம் செய்ய யோசித்தேன். நீ, நான் கேட்கும் இரண்டு விடயத்திற்கு சம்மதிக்க வேண்டும். உனக்கென்று பிள்ளைகள் பிறந்தாலும், எனது மகன் கணபதியை வேறுபாடு காட்டாது உன்னுடைய மூத்த மகனாக வளர்க்க வேண்டும். மற்றது உன்னை கலியாணம் செய்த மறு நாளே நான் பெரிய பரந்தன் சென்று, தியாகர் வயலில் தம்பையர் கட்டிய வீட்டில் தான் குடியிருப்பேன். நீயும் இங்கேயும் அங்கேயும் அலையாமல் பெரிய பரந்தனிலேயே இருந்து விடலாம். இதற்கு என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள். ஆறுமுகத்திற்கு கணபதி மேல் அளவு கடந்த பிரியம். தியாகர் வயலை தான், தனது தாய் மனை என்று எண்ணியிருக்கிறான். கரும்பு தின்ன கூலி வேண்டுமா? ஆறுமுகம் உடனேயே தனது சம்மதத்தை தெரிவித்தான். ஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் நாட்சோறு கொடுப்பதாக உறவினர்கள் தீர்மானித்தார்கள். அப்போது திருமணம் என்பது நாட்சோறு கொடுத்து, பின் தம்பதிகளைத் தனியே விடுவதாகும். உறவினர் உடனேயே எல்லா ஒழுங்குகளையும் செய்தனர். நல்ல நாள் பார்க்கப்பட்டது. விசாலாட்சியையும் ஆறுமுகத்தையும் குளித்து வரச் செய்தனர். ஆறுமுகம் வேட்டியைக் கட்டி தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். விசாலாட்சி புதிதாக வாங்கிய சேலையை கட்டியிருந்தாள். விசாலாட்சியை சோறும் இரண்டு கறிகளும் காய்ச்ச செய்தனர். முன் விறந்தை மெழுகப்பட்டது. அதில் நிறைகுடம் வைக்கப்பட்டது. சாணகத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் ஒரு அறுகம்புல் செருகி விட்டனர். சிட்டிகளில் விபூதி, சந்தனம் வைத்தனர். ஒரு சிட்டியில் தேங்காய் எண்ணை ஊற்றி விளக்கு தயாராக இருந்தது. நிறைகுடத்தின் மேல் மஞ்சள் பூசி, நடுவே ஒரு மஞ்சள் கட்டிய கயிறு வைக்கப்பட்டது. ஒரு பனை ஓலைப் பாய் விரித்து ஆறுமுகத்தையும் விசாலாட்சியையும் இருத்தினர். குடும்பத்தில் வயதில் மூத்த ஒருவர் தீபம் ஏற்றினார். மணமக்களுக்கு வீபூதியைப் பூசி, சந்தனத்தை வைத்து விட்டார். தேவாரம், திருவாசகங்கள் பாடினார். மஞ்சள் கயிற்றை எடுத்து ஆறுமுகத்தின் கையில் கொடுத்தார். கணபதி ஓடி வந்து ஆறுமுகத்திற்கும் விசாலாட்சிக்கும் பின்னால் இருவரினதும் தோள்களைப் பற்றியபடி நின்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு கட்டி விட்டான். கணபதிக்கு, ஆறுமுகம் தான் புது தகப்பன் என்று உறவினர்கள் முதலே கூறிவிட்டனர். அவனுக்கு அதில் முழுச் சம்மதம். விசாலாட்சியை தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறச் செய்து, ஆறுமுகத்தை சாப்பிட வைத்தனர். ஆறுமுகம் கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தினார். அவனுக்கும் தீத்தி தானும் சாப்பிட்டார். பின் அதே இலையில் உணவு பரிமாறி விசாலாட்சியையும் சாப்பிட வைத்தனர். திருமணம் இனிதே நிறைவேறியது. உறவினர்களை பந்தியில் இருத்தி உணவு பரிமாறினர். எல்லோரும் சென்ற பின்னர் ஆறுமுகம் விறாந்தையின் ஒரு பக்கத்தில் பனை ஓலைப் பாயில் படுக்க, கணபதி அவனைக் கட்டிப் பிடித்த படி உறங்கிக் போனான். விசாலாட்சி பொருட்களை ஒதுக்கி வைத்து, மறு நாள் பெரிய பரந்தன் செல்வதற்காக சாமான்களை மூட்டையாக கட்டினாள். அந்த நாட்களில் திருமணம் என்பது, செலவில்லாமல் ‘நாட்சோறு’ கொடுத்தலுடன் நிறைவேற்றப்பட்டது. மேடை இல்லை. அலங்காரம் இல்லை. ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. தங்கம் இல்லை. சீதனம் இல்லை. இரு மனம் கலந்தால் போதும். அந்த பொற்காலம் மீண்டும் வருமா? தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/10/88350/ 1 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted October 28, 2020 தொடங்கியவர் Share Posted October 28, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி.! - 8 திருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும் எழுப்பி குளித்து விட்டு வரச் சொன்னாள். ஆறுமுகம், கணபதியைக் குளிக்க வார்த்து, தானும் குளித்து விட்டு வந்தான். இருவருக்கும் சிரட்டைகளில் கஞ்சி வார்த்து குடிக்கச் செய்தாள். அப்போது கணபதியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லும் கிழவர், மாட்டு வண்டியில் வந்தார். அவருக்கும் கஞ்சி வார்த்துக் குடிக்கச் செய்து தானும் குடித்தாள். குடித்த பின் பாத்திரங்களை கழுவி அடுக்கினாள். ஆறுமுகமும் கிழவரும் விசாலாட்சி முதல் நாள் கட்டி வைத்த பொதிகளை வண்டியில் ஏற்றினார்கள். கணபதி சிறு பொதிகளை ஓடி ஓடி எடுத்துக் கொடுத்தான். விசாலாட்சி வீட்டை கூட்டி ஒழுங்குபடுத்தினாள். விசாலாட்சி வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்தாள். தானும் தம்பையரும் ஏழு ஆண்டுகள் குடித்தனம் செய்த வீடு. இனி இந்த வீட்டுக்கு வருவாளோ.. தெரியாது. வீட்டை அழிய விடுவதில்லை என்று தீர்மானித்திருந்தாள். தனது நெருங்கிய சினேகிதி ஒருத்தியை வீட்டை அடிக்கடி கூட்டுவதற்கும் மாதமொருமுறை மெழுகுவதற்கும் ஒழுங்கு செய்திருந்தாள். வேய்தல் போகத்திற்கு ஆறுமுகத்தாரை அனுப்பி வேயச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவர்களை வழியனுப்ப உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அவர்கள் விசாலாட்சியிடம் “வன்னியில் பாம்புகள், கரடிகள், சிறுத்தைகள், யானைகள் இருக்குதாம். கவனமாக இருந்து கொள்” என்று உண்மையான கரிசனையுடன் கூறினார்கள். ஆண்கள் “ஆறுமுகம், தனியாக ஒரு பெண் பிள்ளையையும் சிறுவனையும் அழைத்துச் செல்கின்றாய். கவனமாக பார்த்துக் கொள்.” என்று சொன்னார்கள். விசாலாட்சி வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆறுமுகம், கணபதியை வண்டியில் ஏற்றி விட்டு தானும் ஏறி அவனருகில் இருந்து கொண்டான். விசாலாட்சி திரும்பி ஒரு முறை வீட்டைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி விட்டன. மற்றவர்கள் அறியாது கைகளால் துடைத்துக் கொண்டாள். வண்டில் சலங்கைகள் ஒலியெழுப்ப வேகமாக ஓடத்தொடங்கியது. விசாலாட்சி தங்கள் மூவரினதும் வாழ்க்கை எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற கவலையில் இருந்தாள். கணபதி மிகவும் மகிழ்ச்சியாக பயணம் செய்தான். ஆறுமுகம் நான்கு வருடங்கள் தனியாக கழிந்த வாழ்க்கையில் இப்போது கிடைத்த இந்த சுகமான சுமையை தான் பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். வண்டில் கச்சாய் துறையை அடைந்தது. செருக்கன் நண்பன் தோணியை கொண்டு வந்திருந்தார். விசாலாட்சி தோணியில் ஏறி முன் பக்கமாக இருந்து கொண்டாள். கணபதி தாயாரின் அருகே இருந்து கொண்டான். ஆறுமுகமும் கிழவரும் பொதிகளை வண்டிலால் இறக்கி, தோணியில் ஏற்றினார்கள். ஆறுமுகம், கிழவருக்கு நன்றி கூறி காசைக் கொடுத்தார். விசாலாட்சியும் கணபதியும் நன்றி கூறி அனுப்பினர். ஆறுமுகம் தோணியில் ஏறி கணபதியின் பக்கத்தில் இருந்தான். கணபதி அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்து கொண்டான். செருக்கனுக்கு போக வந்தவர்களும் தோணியில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் பெரிய பரந்தன் சென்று முதல் முதல் வாழப்போகும் பெண்ணை அதிசயமாக பார்த்தனர். தோணி ஓடத் தொடங்கியது. ‘ஆலா’ப் பறவைகள் தோணியைத் தொடர்ந்து பறந்து வந்தன. கணபதி அவற்றை அண்ணாந்து பார்த்தான். “கணபதி, தோணியுடன் பயணம் செய்யும் இவை ‘ஆலாக்கள் ‘ சிலர் இவற்றை ‘கடல் காகம்’ என்றும் கூறுவர்” என்று ஆறுமுகம் சொன்னார். சிறிது தூரம் செல்ல, மிகப் பெரிய பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன. அந்த பெரிய பறவைகள் மீன்களை பிடித்து அண்ணாந்து வாயை பெரிதாக திறந்து விழுங்கின. கணபதிக்கு அது வேடிக்கையாக இருந்தது. ஆறுமுகம் “கணபதி, அந்த பெரிய பறவைகளின் பெயர் கூழைக்கடா” என்றார். இன்னும் சிறிது தூரம் செல்ல தூரத்தில் கூட்டமாக நீந்தும் பறவைகளை கணபதி கண்டான். அவை நீரில் மூழ்கி மீனைக் கவ்விக் கொண்டு மேலே வந்தன. தோணி ஓட்டி “தம்பி, அவை ‘கடல் தாராக்கள்’. நாங்கள் வீட்டில் வளர்க்கும் தாராக்களை விட சிறியவை. அதனால் தான் அவை தூர இடங்களுக்கும் பறக்கின்றன” என்று கணபதிக்கு கூறினான். அப்போது அவர்களை விலத்திக்கொண்டு சுட்டதீவிலிருந்து புறப்பட்ட தோணி ஒன்று சென்றது. அந்த தோணியிலிருந்தவர்கள் ஆறுமுகத்தாரையும் குடும்பத்தவர்களையும் மகிழ்ச்சியுடன் நோக்கி கைகளை ஆட்டியபடி சென்றனர். தோணி சுட்டதீவு துறையை அடைந்தது. எல்லோரும் இறங்கினார்கள். 1910 ஆம் ஆண்டு விசாலாட்சியும் கணபதியும் முதல் முதலாக இக்கரையில் கால் பதித்தார்கள். முத்தர், தம்பையரின் எருத்து மாட்டு வண்டிலில் வந்திருந்தார். ஆறுமுகமும் முத்தரும் பொதிகளை இறக்கி வண்டிலில் ஏற்றினார்கள். எருதுகள் இரண்டையும் முத்தர் ஒரு மரத்தின் நிழலில் கட்டியிருந்தார். முத்தர் “ஆறுமுகம் முதல் முதல் விசாலாட்சியும் கணபதியும் வந்திருக்கின்றார்கள். கூட்டிச் சென்று கோவிலைச் சுற்றி கும்பிட்டு விட்டு வா.” என்றார். ஆறுமுகம், விசாலாட்சியையும் கணபதியையும் கோவில் பூவலுக்கு அழைத்துச் சென்று கை, கால், முகம் கழுவிக் கொள்ளச் செய்தார். தனது தோளில் இருந்த துண்டைக் கொடுத்து துடைக்கச் செய்தார். மூவரும் கோவிலைச் சுற்றி வந்து சேர, முத்தரும் வந்து சேர்ந்தார். முத்தர் தான் கொண்டு வந்த கற்பூரத்தை ஏற்றினார். நால்வரும் கண் மூடி கும்பிட்டனர். எல்லோரும் திருநீறு பூசி சந்தனப் பொட்டும் வைத்தனர். ஆறுமுகம் கணபதிக்கு திருநீறு பூசி ஒரு வட்ட வடிவ சந்தனப் பொட்டும் வைத்துவிட்டான். தாயும் மகனும் முத்தருக்கும் ஆறுமுகத்திற்கும் பின்னால், கடலையும் காட்டையும் ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந்து வண்டிலை அடைந்தனர். வெள்ளை நிற எருது நின்று கொண்டு அசை போட்டது. மயிலை படுத்திருந்து அசை போட்டது. முத்தர் எருதுகளை தடவி விட்டார். கணபதி ஓடிச்சென்று தானும் எருதுகளை தடவி விட்டான். “கணபதி, இந்த எருதுகளை உன்ரை ஐயா பார்த்து பார்த்து வளர்த்தவர்” என்று முத்தர் சொன்னார். கணபதி மயிலையின் தோளில் முகத்தை வைத்து அணைத்துக் கொண்டான். விசாலாட்சி வண்டிலின் முன் பக்கத்தில் ஏறி இருந்து கொண்டாள். ஆறுமுகம், கணபதியை ஏற்றி விட்டு தானும் பின்னால் ஏறி அமர்ந்தான். கணபதி தாயையும் தகப்பனையும் அணைத்தபடி அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்தான். முத்தர் வண்டிலில் எருதுகளைப் பூட்டி விட்டு, முன்னால் ஏறி இருந்து வண்டிலை ஓட்டினார். வண்டில் காட்டின் நடுவே ஓடியது. வழியில் மயில்கள், மான்கள், மரைகள், குழுவன் மாடுகள் என்பன வண்டிலைக் கண்டு பயந்து சிறிது தூரம் ஓடி, பின் நின்று திரும்பி குறு குறுவென்னு பார்த்தன. “ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பெண்ணொருத்தி இந்த மண்ணில் வாழ வந்து விட்டாளே” என்று அவை பார்க்கின்றனவோ? என விசாலாட்சி எண்ணிக் கொண்டாள். குரங்குகள் அவர்களைக் கண்டதும் மரத்திற்கு மரம் தாவி ஏறின. கணபதி,ஆறுமகத்திடமும் முத்தரிடமும் கேள்விகள் கேட்டபடி மகிழ்ச்சியுடன் பயணம் செய்தான். முத்தரும் ஆறுமுகமும் விலங்கியல் ஆசிரியர்களாக மாறி வழியில் கண்ட எல்லா மிருகங்களின் பெயர்கள்களையும் அவற்றின் இயல்புகளையும் கணபதிக்கு கூறிக் கொண்டே வந்தனர். கணபதி வழியில் ஒரு பெரிய பாம்பைக் கண்டான். “அதன் பெயர் ‘வெங்கிணாந்தி’ என்றும், அது ஒரு சிறிய வகை மலைப் பாம்பு என்றும், அது ஆட்டுக் குட்டிகள், கோழிகள், மான் குட்டிகள, முயல்கள் என்பவற்றை உயிருடன் விழுங்கி விடும்” என்றும் முத்தர் கூறினார். வழியில் நீலனாற்றின் கிழையாறு ஒன்று குறுக்கிட்டது. வண்டில் ஆற்றில் இறங்கி மறு கரையில் ஏறியது. வண்டில் இறங்கி ஏறிய சத்தத்திற்கும் சலங்கைகளின் சத்தத்திற்கும் பயந்து, மறு கரையில் வெய்யில் காய்ந்து கொண்டிருந்த முதலை ஒன்று பாய்ந்தோடி ஆற்றுக்குள் குதித்தது. கணபதி பயந்து தாயை கட்டிப் பிடித்தான். வண்டில் குறிப்பம் புளியை அணுகியது. ஆறுமுகம், விசாலாட்சியிடமும் கணபதியிடமும் புளிக்கும் நீர் நிலைக்கும் இடைப்பட்ட வெளியைக் காட்டி “தம்பையர், நான், முத்தர், ஏனையவர்களுடன் முதல் முதல் தங்கியது இந்த வெளியில் தான்” என்று கூறினார். கணபதி புளியை அண்ணாந்து பார்த்து “எவ்வளவு உயரம்” என்று அதிசயப் பட்டான். ( இப் படத்தில் காணும் நீர்நிலை இன்று வரை காணப்படுகின்றது. மாடுகள், ஆடுகள் தங்கள் தாகம் தீர்க்க இந் நீர்நிலைகளை உபயோகப்படுத்துகின்றன..) கணபதி பசு மாடுகளை ஒத்த, சற்று பெரிய தோற்றமுள்ள சில மிருகங்கள் நீர் நிலையில் நின்றும், படுத்தபடியும் இவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். அந்த மிருகங்கள் எல்லாம் சேற்றில் புரண்டு எழுந்ததால் சேற்றின் நிறத்தில் இருந்தன. அவற்றை கணபதி ஆவலுடன் பார்ப்பதைக் கண்ட முத்தர் “அவை எருமை மாடுகள். சேற்றில் உழுவதற்கும், பிரதானமாக சூடு அடிப்பதற்கும் அவற்றை நாங்கள் பயன் படுத்துவோம்” என்று விளங்கப்படுத்தினார். வண்டில் ‘ தியாகர் வயலை’ அடைந்தது. விசாலாட்சியும் கணபதியும் முதல் முதலாக தியாகர் வயலில் இறங்கினர். எங்கிருந்தோ நான்கு நாய்கள் வால்களை ஆட்டியபடி ஓடி வந்து அவர்களின் கால்களை நக்கின. அந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு அவர்கள் தான் தங்கள் புதிய எசமானர்கள் என்பது புரிந்து விட்டது போலும். பின்னர் கணபதி எங்கு சென்றாலும் அவை அவனுடனேயே திரிந்தன. விசாலாட்சியும் கணபதியும் வீட்டையும் வளவையும் சுற்றிப் பார்த்தனர். மூன்று கொட்டில்களை கொண்ட தொகுதி. ஒரு பெரிய அறை, மண் குந்துகள் வைத்து, மேலே ஓலையால் அடைக்கப் பட்டிருந்தது. தனியாக ஒரு சிறிய சமையலறை. வருபவர்கள் தங்குவதற்காக ஒரு தலைவாசல். யாவும் அண்மையில் மெழுகப் பட்டிருந்தன. வளவு புற்கள் செருக்கப்பட்டு, துப்பரவாக கூட்டப்பட்டிருந்தது. இரண்டு புதிய பனையோலைப் பாய்கள் கழுவி காயப் போடப்பட்டிருந்தது. விறகுகள் ஒரே அளவில் வெட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஒரு மண் குடத்திலும் ஒரு சருவக் குடத்திலும் நீர் நிறைத்து மூடப்பட்டிருந்தது. முத்தர் தனது தம்பிமாரின் உதவியுடன் யாவற்றையும் செய்துள்ளார் என்பதை விசாலாட்சி விளங்கிக் கொண்டாள். ஆறுமுகத்தார் பொதிகளை இறக்கி அறையினுள் வைத்தார். முத்தர் எருதுகளை அவிட்டு தண்ணீர் குடிக்க வைத்து கட்டினார். வண்டிலை அதற்குரிய கொட்டிலினுள்ளே தள்ளி நிறுத்தினார். விசாலாட்சி கணபதியை அழைத்துக் கொண்டு பூவலுக்கு போய் கணபதியையும் கை, கால், முகம் கழுவச் செய்து, தானும் கழுவி விட்டு வந்தாள். ஆறுமுகமும் முத்தரும் சுத்தம் செய்து வந்ததும் மூவருக்கும் கட்டுச்சோறு சாப்பிடக் கொடுத்து, தானும் சாப்பிட்டாள். நாய்களுக்கும் சாப்பாடு வைத்தாள். மாலை நேரம் வந்த போது தம்பிமார் முதலில் வந்தனர். பின்னர் ஏனைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்தனர். தம்பிமார் “அக்கா, நீங்கள் வருவதாக அறிந்ததும் நாங்கள், எங்கள் வீட்டிற்கு போய் விட்டோம். ஆனால் இரவில் இங்கு தான் வந்து படுப்போம். இனியும் உங்களுக்கு ஊர் பழகும் வரையும் இரவில் இங்கு வந்து, தலைவாசலில் படுத்து விட்டு செல்வோம் “என்றனர். விசாலாட்சிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. தம்பிமார் எந்த குறையும் இன்றி தங்களது வீட்டிற்கு போனது ஆறுதலாகவும் இருந்தது. வந்தவர்கள் யாவரும் கணபதியுடன் விளையாடினர். எல்லோருக்கும் தேனீர் ஆற்றி ஒவ்வொரு பனங்கட்டி துண்டுகளுடன் கொடுத்தாள். வந்தவர்கள் விடை பெற்றுச் சென்றனர். விசாலாட்சிக்கு அன்று இனி வேலை ஒன்றும் இல்லை. இரவுச் சாப்பாட்டிற்கும் கட்டுச்சோறு இருந்தது. இரவும் வந்தது. எல்லோரும் சாப்பிட்ட பின்னர் படுக்கச் சென்றனர். கணபதிக்கு இனி பள்ளிக்கூடம் இல்லை. அவன் தன் வயது நண்பர்களுடன் இனி விளையாட முடியாது. ஆறுமுகத்தின் வழிகாட்டலும் புதிய மண்ணும் தான் அவனுக்கு அனுபவ அறிவை கொடுக்க வேண்டும். தானும் அவனது வளர்ச்சியில் கரிசனையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் விசாலாட்சி நித்திரையானாள். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/10/88893/ 2 Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted November 3, 2020 தொடங்கியவர் Share Posted November 3, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - 9 பெரிய பரந்தனில் இறங்கிய மறு நாளிலிருந்து விசாலாட்சியும் கணபதியும் ஊர் வாழ்க்கையுடன் ஒன்றி விட்டனர். காலை எழுந்தவுடன் விசாலாட்சி வீடு கூட்டி, முற்றம் கூட்டி விட்டு, ‘பூவலுக்கு’ போவாள். பனை ஓலைப் ‘பட்டை’ யில் தண்ணீர் அள்ளிக் கொண்டு, அருகில் இருந்த பனங்கூடலுக்கு ஒதுங்குவதற்கு செல்வாள். தூய்மைப் படுத்திக் கொண்டு, கூடலில் நின்ற வேப்ப மரத்தில் ஒரு குச்சியை முறித்து பல் துலக்கிக் கொள்வாள். வாயெல்லாம் கைக்கும். பூவலுக்கு வந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவிக் கொள்ளுவாள். அவளுக்கு தம்பையர் இருக்கும் மட்டும் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்ற மூத்தோர் கூற்றை ஞாபகப் படுத்துவதுண்டு. ஆலங் குச்சியிலும் வேலங்குச்சியிலும் உள்ள கைப்புத் தன்மை வாய்க்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி விடும் என்று கூறுவார். ஆனாலும் அவளால் இப்போது தொடர்ந்து வேப்பம் குச்சியினாலோ (வேல்), ஆலங் குச்சியினாலோ பல் துலக்க முடியவில்லை. கணபதி எவ்வாறு சமாளிப்பான் என்றும் அவள் கவலைப்பட்டது உண்டு. ஆனால் அவன் ஆறுமுகத்தாரைப் பார்த்து சர்வ சாதாரணமாக குச்சியால் பல் துலக்க பழகி கொண்டான். தந்தைமார்களை முன் மாதிரியாக கொண்டு தான் ஆண் பிள்ளைகள் எதையும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டு நிம்மதி அடைந்தாள். கால போக சூடு அடித்தபின் வரும் சப்பி நெல்லை எரித்து தனக்கு மட்டும் என்றாலும் உமிச்சாம்பல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். விசாலாட்சி பூவலில் தனது சருவக் குடத்தை நீரால் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு வரவும், ஆறுமுகமும் கணபதியும் காட்டிலே காலைக் கடன் முடித்து, வாய் துலக்கி, நீர் நிலையில் முகம் கழுவி, பின் ‘காலை’ சென்று ஒரு செம்பில் பால் கறந்து கொண்டு, மாடுகளை காட்டில் மேய்வதற்கு கலைத்து விட்டு வரவும் சரியாக இருந்தது. சிறிய கன்றுகளை காட்டில் விடுவதில்லை. ‘காலையில்’ அடைத்தே வைத்திருப்பார்கள். காலையும் மாலையும் ஒவ்வொரு பசுவிலும் சிறிதளவு பால் மட்டும் கறந்து விட்டு, மிகுதியை கன்றுகள் குடிக்க விட்டு விடுவார்கள். கன்றுகள் வாயில் நுரை தள்ள தள்ள குடித்து விட்டு வாலைக் கிளப்பி கொண்டு ஓடி விளையாடுவினம். விசாலாட்சி அளவான சூட்டில் பால் காய்ச்சி சிரட்டைகளில் ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொடுத்து, தானும் குடிப்பாள். பனங்கட்டி கொடுப்பதில்லை. பசுக்கள் காட்டிலே புற்களை மேயும் பொழுது மூலிகைச் செடிகளையும் சாப்பிடுகின்றன. அதனால் பால் சுவையாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கின்றது. ஊரிலே புற்களுக்கே பஞ்சம். வைக்கோலும் தவிடும் புண்ணாக்கும் தான் வைக்கிறார்கள். பாலில் மணம் குணம் ஒன்றும் இருக்காது. பனங்கட்டி இல்லாமல் குடிக்க முடியாது. ‘காலை’ மாடுகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காட்டிலே அடர்ந்த மரங்கள் சில உள்ள மேடான இடத்தை தெரிவு செய்வர். மரங்களைச் சுற்றி இருபத்தைந்து அடி ஆரையுடன் பட்டமரங்களை வட்ட வடிவில் அடுக்குவார்கள். மாடுகள் போய் வருவதற்கு ஒரு பாதை விடுவார்கள். வெட்டிய அலம்பல்களால் அந்த வட்ட வடிவ மரங்களை நரிகள் நுழையாதவாறு அடைத்து விடுவார்கள். ‘காலை’ தயார். இரவில் மாடுகளை ‘காலையில்’ அடைத்து விடுவார்கள். மாடுகள் வெளியே போக மாட்டா. நரிகள் உள்ளே வந்து கன்றுகளைக் கடிக்க மாட்டா. சிறுத்தைகள் உள்ளே வருவதை தடுக்க முடியாது. அதனால் வெளியே மூன்று நான்கு இடங்களில் பட்டமரக் குற்றிகளை குவித்து எரித்து விடுவார்கள். மேலதிக பாதுகாப்பிற்காக பெரிய பரந்தன் மக்கள் மிக நெருக்கமாக ‘காலைகளை’ அமைப்பார்கள். பொதுவாக மாரி காலத்தில் தான் காலையை அடைப்பார்கள். அலம்பல் தட்டிகள் பல செய்து முடித்த பின்னர் பயிர்ச் செய்கை இல்லாத போது வயலில் பட்டிகளில் அடைக்க முடிவு செய்துள்ளார்கள். எருவை விட மாட்டுச் சலத்தில் தான் தளைச் சத்து கூடுதலாக இருக்கும். கணபதி, ஆறுமுகத்தாரின் வழி காட்டலால் பல விடயங்களை கற்றுக் கொண்டு விட்டான். ஆறுமுகம் வரம்பு புல் செருக்க, கணபதியும் ஒரு சிறிய மண் வெட்டியால் செருக்குவான். விசாலாட்சி செருக்கிய புற்களை கூட்டி அள்ளி வயலுக்குள் சிறிய சிறிய குவியலாக குவிப்பாள். ஒரு வெய்யிலில் காய்ந்த பின் எரித்து விடுவாள். ஆறுமுகம் வேலியில் நின்று வயலுக்கு நிழல் தரும் பூவரசு மரங்களில் ஏறி கிளைகளை வெட்டி வீழ்த்துவார். கணபதி கீழே நின்று, அவற்றை கழித்து தடிகளை புறம்பாகவும் இலைகளைப் புறம்பாகவும் போடுவான். விசாலாட்சி இலைகளை அள்ளிக் கொண்டு போய் வயலில் பரவி விடுவாள். விசாலாட்சி சமைக்கும் போது, ஆறுமுகமும் கணபதியும் வண்டிலில் எருதுகளைப் பூட்டிக் கொண்டு ‘காலைக்கு’ போவார்கள். ஆறுமுகம் அங்கு ஒவ்வொரு நாள் மாலையும் குவித்து வைக்கும் எருக்களை கடகங்களில் நிறைத்து, வண்டிலின் மேலே வைப்பார். கணபதி கடகங்களை இழுத்து உள்ளே சமனாக பரவுவான். நிரம்பிய பின் வண்டிலை தமது வயலை நோக்கி செலுத்துவார்கள். இப்போது கணபதியும் நன்கு வண்டில் ஓட்டப் பழகி விட்டான். எருக்களை கொண்டு சென்று வயலில் பரவுவார்கள். கணபதி, ஆறுமுகத்தாரை பார்த்து மச்சம், மாமிசம் சாப்பிடப் பழகி விட்டான். விசாலாட்சி அதனை பொருட்படுத்தவில்லை. தான் மட்டும் தனியே சைவ சாப்பாடு செய்து சாப்பிடுவாள். அதுவும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. சில காலங்களில் பெரிய பரந்தனில் மரக் கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மெல்ல மெல்ல தானும் மாற வேண்டி வரும் என்பது அவளுக்கு புரிந்தது. ஆறுமுகத்தார், ‘சிராய் ஆமை’, ‘பாலாமை’ என்பவற்றை சாப்பிட மாட்டார். “அவை அழுக்குகளை சாப்பிடுகின்றன” என்று சொல்லுவார். ஆனால் ‘கட்டுப்பெட்டி’ ஆமையை விரும்பி உண்பார். “கட்டுப்பெட்டி ஆமைகள் புற்களை மட்டும் தான் சாப்பிடுகின்றன” என்று சொல்லுவார். ஆறுமுகத்தார் கட்டுப் பெட்டி ஆமையை மிகவும் சுவையாக சமைப்பார். அவரைப் பார்த்து கணபதியும் சாப்பிடுகின்றான். “நல்ல சுவையான கறி அம்மா” என்று தாயிடம் சொல்லுவான். ‘கட்டுப்பெட்டி’ ஆமைகள் மிக அழகானவை என்று விசாலாட்சியும் அறிவாள். அழகான நிறத்தில் பெட்டி பெட்டியாக இருக்கும். பறங்கி அதிகாரிகள் இந்த வகை ஆமைகளைக் கொன்றுவிட்டு, உள்ளே இருப்பவற்றை நீக்கிவிட்டு கழுவி காயவைத்து, தமது கந்தோர்களில் மேசைகளின் மேலே அழகிற்காக வைத்திருக்கிறார்களாம் என்று தோழிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆறுமுகம் மிகவும் உயரம் பெருப்பமான மனிதர். அவருடன் சமனாக மற்றவர்களால் நடக்க முடியாது. கணபதி துள்ளி துள்ளி ஓடி ஓடித் தான் அவருடன் கதைத்தபடி வருவான். இப்போது கணபதியும் ‘டார்’ வைக்கப் பழகி விட்டான். ஆறுமுகமும் கணபதியும் மான்கள், மரைகள் நடமாடும் இடங்களை நோட்டமிடுவார்கள். மாடுகள் மேய்வதற்கு செல்லாத, மனிதர்கள் போகாத இடமாக தெரிவு செய்வார்கள். மான்கள், மரைகள் போகும் பாதையில் ஆழமான சதுர வடிவ குழியை வெட்டி விடுவார்கள். குழியின் மேல் உக்கிய, மெல்லிய தடிகளை குறுக்கும் நெடுக்குமாக போடுவார்கள். அதன் மேல் குழைகளை பரவி விடுவார்கள். கிடங்கு வெட்டியது தெரியாதவாறு தடிகளின் மேலே மண் போட்டு பரவி விடுவார்கள். விலங்குகளுக்கான மரணப் பொறி தயார். ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் போய் பார்ப்பார்கள். சில வேளைகளில் மான், மரை, பன்றி விழுவதுண்டு. கஷ்டகாலமாயின் கரடியும் விழுந்து விடும். ஒருவரும் கரடி இறைச்சி சாப்பிட மாட்டார்கள். தோல் மட்டும் பயன்படும். ஆனால் அது போடும் சத்தத்திற்கும், அதனைக் கொல்வதற்கும் எல்லோரும் அஞ்சுவார்கள். ஏனைய விலங்குகள் என்றால் விழுந்த அன்று பெரிய பரந்தனில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். அந்த இடத்தில் பொறி வைத்திருக்கிறது என்று எல்லோருக்கும் முதலே அறிவித்து விடுவார்கள். பொறி இருப்பது தெரியாது விட்டால் ஆட்களும் விழுந்து விடுவார்கள். வளர்ப்பு மிருகங்களும் விழுந்து விடக்கூடும். பெரும்பாலும் ஊரே கூடித் தான் இவ்வாறு பொறி வைப்பார்கள். யாராவது ஒருவர் தூரத்தில் ஒரு மரத்தில் ஏறி நின்று அவதானிப்பார். அவர் ஆபத்து ஒன்றும் வராதவாறு தடுத்து விடுவார். மழை பெய்யத் தொடங்கியது. இரண்டு கலப்பைகளில் எருதுகளை பூட்டினார்கள். ஆறுமுகத்தார் முன்னே உழுதுகொண்டு போக, கணபதி பின்னே உழுது கொண்டு போனான். இரண்டே நாட்களில் கணபதி உழவு பழகி விட்டான். இது முதல் மழை. விதைக்கும் நிலத்தை பண்படுத்தும் உழவு. இந்த உழவு ‘நில எடுப்பு’ எனப்படும். அவசரம் இல்லை. அவரவர் காணியை தாமே உழுவார்கள். விதைப்புக் காலம் நெருங்கியது. விதை நெல் சூடுகளை அடித்தார்கள். இதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். விதைப்பு இரண்டு வகைப்படும். புரட்டாதி மாதம் புழுதியாக விதைப்பார்கள். நிலத்தில் ஈரம் இருக்காது. மழை வரும்வரை காத்திருந்து, மழை வந்ததும் நெற்கள் முளைக்கும். மற்றது, ஈர விதைப்பு. நிலம் மழைக்கு நனைந்து ஈரமான பின்னர் விதைப்பார்கள். நெல் உடனேயே முளைவிடும். விதைப்பின் பொழுது கூட்டாக வேலை செய்வார்கள். இது வரை ஒருவரை சமைப்பதற்கு என்று ஒழுங்கு செய்வார்கள். அவரும் எதையோ அவித்து வைப்பார். பசிக்கு சுவை தெரியாது. ஊருக்கு போனால்தான் ஒழுங்கான சாப்பாடு கிடைக்கும். விசாலாட்சி வந்த மூன்றாம் நாள் ஆறுமுகத்தாரைக் கொண்டு எல்லோரையும் அழைப்பித்து சாப்பாடு கொடுத்தாள். எல்லோரும் உறவினர்கள் என்பதாலும், தம்பையர், ஆறுமுகத்தார், விசாலாட்சி மேலுள்ள அன்பாலும் எல்லோரும் வந்தனர். சாப்பாடு அமிர்தமாக இருந்தது. உறவினர்கள் யார் வந்தாலும் விசாலாட்சி சாப்பாடு கொடுக்காமல் அனுப்ப மாட்டாள். எல்லோரும் பல சந்தர்ப்பங்களில் விசாலாட்சியின் சமையலை சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கூட்டு விதைப்பு. விதைப்பு காலத்தில் எல்லாருக்கும் தான் சமைத்து தருவதாக, விசாலாட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் யாவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வயல் வேலைகளின் போது அந்த கால மக்கள் சைவ உணவு தான் சமைப்பது வழக்கம். இரணைமடு குளத்தின் பத்தாம் வாய்க்கால் குஞ்சுப்பரந்தன் மக்களால் பயன் படுத்தப்படுகின்றது. தம்பையர், பிள்ளையார் கோவில் முன்றலில் எல்லோரும் கூடியிருந்த ஒரு தருணத்தில், “நாங்கள் காட்டாறுகளான கொல்லனாற்றையும், நீலனாற்றையும் மட்டும் நம்பி சிறுபோகச் செய்கையில் ஈடுபட முடியாது. இரணைமடுவிலிருந்து வரும் நீரை, எட்டாம் வாய்க்காலை திருத்தி பயன் படுத்தினால் மட்டுமே சிறுபோகம் செய்ய முடியும்” என்று கூறியிருந்தார். அதன் படி எட்டாம் வாய்க்காலை வெட்டி துப்பரவாக்க அனுமதி கேட்பது என பெரிய பரந்தன் மக்கள் தீர்மானித்தனர். பின் முத்தரும் ஆறுமுகத்தாரும் இன்னும் சில உறவினர்களையும் அழைத்துக் கொண்டு இரணைமடுவிற்கு சென்று சம்பந்தப்பட்ட் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆறுமுகத்தார், முத்தர் அம்மான் தலைமையில் எல்லோரும் சேர்ந்து எட்டாம் வாய்க்காலை வெட்டி, துப்பரவு செய்தனர். தம்பையர் இறந்த பின்னர், இது தான் பெரிய பரந்தன் மக்கள் செய்த முக்கியமான சாதனையாகும். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/11/89715/ 2 Link to comment Share on other sites More sharing options...
Kavallur Kanmani Posted November 3, 2020 Share Posted November 3, 2020 மிகவும் அருமையான பதிவு. எமது மக்கள் கடந்து வந்த பாதைகளின் சுவடுகள். மிக நன்றாக எழுதப்பட்டுள்ளன. பகிர்வுக்கு நன்றிகள் புரட்சி. தொடந்தும் பதியுங்கள். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். நன்றிகள் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted November 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted November 5, 2020 இன்றுதான் கவனித்தேன், ஒரே மூச்சில் படித்து முடித்தாயிற்று......எனக்கும் நிறைய காட்டு அனுபவங்கள் இருந்தபடியால் சுவாரஸ்யம் சுப்பராய் இருந்தது......நன்றி தோழர்......! Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted November 10, 2020 தொடங்கியவர் Share Posted November 10, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 10 பெரிய பரந்தன் காடாக இருந்த போது பனை மரம் எப்படி வந்தது? என்று பலர் கேட்டார்கள். பெரிய பரந்தன் காட்டை வெட்டும் போது பனை மரங்கள் இருந்தது உண்மை. ஆயினும் ஒரு சிறிய ஆய்வு செய்தேன். 1. மூன்று கிராமங்களுக்கு அருகே காடாக இருந்த சிவநகர் இப்போது வளர்ச்சியடைந்த கிராமமாக உள்ளது. அது காடாக இருந்த போது காட்டில் சிதிலமடைந்த செங்கல் கட்டிடம் காணப்பட்டது. வேலாயுதசுவாமி என்னும் சாமியார் சிவநகர் குளத்தின் அருகே ஒரு பிள்ளையார் கோவில் கட்ட சென்ற போது ஒரு மாடு மேய்க்கும் இளைஞன் அதனை கண்டு அவருக்கு சொன்னான். சாமியுடன் வடிவேல்சாமியும் சென்று பார்த்த பொழுது அங்கே அந்த சிதிலமடைந்த செங்கல் கட்டிடத்தினுள்ளே ஒரு சிவலிங்கத்தின் சிலையை கண்டனர். அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தான் இப்போதைய உருத்திரபுரீஸ்வரன் கோவிலை கட்டியுள்ளார்கள். ஆகவே முன்னரும் மக்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். 2. தொண்ணூறுகளில் பல்கலைக் கழக பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் பல்கலைக் கழக மாணவர்களுடன் சென்று செருக்கன், குஞ்சுப்பரந்தன் அருகே ஒரு முதுமக்கள் தாழியை கண்டெடுத்தார். மண்ணால் செய்யப்பட்ட பெரிய சாடி போன்ற தாழியினுள்ளே இறந்தவர்களின் உடலையும் உடமைகளையும் வைத்து ஒரு மூடியினால் மூடி மண்ணினடியில் தாழ்ப்பார்கள். அது முதுமக்கள் தாழி எனப்படும். மக்கள் பழங்காலத்தில் அங்கு வாழ்ந்ததால் தான் பனை மரங்கள் அங்கு வந்திருக்க வேண்டும். கணபதி வேலை முடிந்ததும் எருதுகளை தந்தையாருடன் சேர்ந்து குளிப்பாட்டுவான். ஆறுமுகத்தார் அவன் மீது காட்டிய அன்பு அவனை வேறு விதமாக சிந்திக்க விடவில்லை. ஆறுமுகத்தாரை “ஐயா” என்று தம்பையரை அழைத்தது போலவே அழைத்தான். ஆறுமுகத்தார் கணபதி, தன்னை ஒத்த சிறுவர்களுடன் விளையாட முடியவில்லையே என்று ஏங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இரவில் அவனுடன் ‘நாயும் புலியும்’, ‘தாயம்’ முதலிய விளையாட்டுகளை விளையாடுவார். அவனுக்கு உப கதைகளைச் சொல்லுவார். ‘முருகன்’ மாம்பழத்திற்காக ‘பிள்ளையாருடன்’ போட்டி போட்ட கதையை’ கூறுவார். ‘காத்தான் கூத்தை’ பாடிக் காட்டுவார். பெரிய பரந்தன் மக்கள் தாடியுடனும், மீசையுடனும் வேடர்கள் போலவே இருந்து விட்டு, ஊர் போகும் சமயங்களில் தலைமுடியை வெட்டி, முகம் வழித்து வருவார்கள். அவர்களது தலையையும் முகத்தையும் விசாலாட்சி அவதானித்தாள். ஆறுமுகத்தாரிடம் “பெரிய பரந்தன் கிராமத்திற்கு என ஒரு முடி வெட்டுபவரை ஒழுங்கு செய்தால் என்ன?” என்று கேட்டாள். ஆறுமுகத்தார் “முத்தரிடமும் ஏனையவர்களுடனும் கதைத்த பின்னர் முடிவு செய்வோம்” என்றார். அவர்களும் சம்மதித்து ஆறுமுகத்தாரிடம் பொறுப்பைக் கொடுத்தனர். ஆறுமுகத்தாரும் ஒரு உறவினருடன் ஊர் சென்று, மட்டுவிலிலிருந்து மாதம் ஒருமுறை வந்து, ஒரு கிழமை நின்று எல்லோருக்கும் முடி வெட்டி விட்டு திரும்பிப் போகும் ஒழுங்குடன் ஒரு வயோதிபரை அழைத்து வந்தார். அவருக்கு போகத்திற்குப் போகம் எல்லோரும் நெல்மணிகளையே கூலியாக கொடுப்பது என்று பேசியிருந்தார். அந்த வயோதிபரும் ஊர் பொறுப்புகளை மகன்மாரிடம் பகிர்ந்து கொடுத்துவிட்டு வந்திருந்தார். அவருக்கு காலை தேனீரும் உணவும் விசாலாட்சி கொடுப்பாள். மதியமும் இரவும் முடி வெட்டச் செல்லும் இடங்களில் கொடுப்பார்கள். இரவு வந்து தியாகர் வயலில் படுத்திருப்பார். அவருக்கு பல உப கதைகள் தெரிந்திருந்தது. அவர் வந்து நிற்கும் நாட்களில் கதை சொல்லும் பொறுப்பு அவருடையது. அவரிடம் கதை கேட்டபடி கணபதி உறங்கி விடுவான். ஆறுமுகத்தார் வந்து அவனை தூக்கி சென்று தங்களுடன் படுக்க வைப்பார். காலபோக விதைப்புக்கு உரிய காலம் வந்தது. பிள்ளையார் கோவில் முன்பாக பெரியபரந்தன் மக்கள் யாவரும் ஒன்று கூடினர். வழக்கம் போல முத்தரும் ஆறுமுகத்தாரும் தலமை தாங்கினார்கள். யார் யாருடைய காணிகளில் பள்ளக் காணிகள் உண்டு என யோசிக்கப்பட்டது. அந்த பள்ளப் பகுதிகளை முதல் விதைப்பது என்று தீர்மானித்தார்கள். முத்தரின் காணியிலும் ஆறுமுகத்தாரின் காணியிலும் பள்ளங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் தங்கள் காணிகளில் இருந்த பள்ள பகுதிகளை மற்றவர்களின் பள்ளங்கள் விதைத்த பின்னர் விதைப்பது என்று முடிவு செய்தனர். அடுத்து எல்லோர் காணிகளிலும் உள்ள நடுத்தர காணிகளை விதைப்பது என்றும் பேசிக் கொண்டனர். யாவரினதும் மேட்டுக் காணிகளை இறுதியில் விதைக்கத் தீர்மானித்தார்கள். இப்போது தம்பிமாரும் கூட்டங்களில் கலந்து மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டனர். விதைப்பு முடியும் மட்டும் எல்லோருக்கும் மதியம் சாப்பாட்டை, விசாலாட்சி தானே சமைத்து தருவதாகவும், தேங்காய் திருவுவதற்கு மட்டும் யாரேனும் ஒருவர் உதவி செய்தால் போதும் என்றும் சொல்லியிருந்தார். ஒரு நல்ல நாளில் விதைப்பு ஆரம்பமாகியது. எல்லோரும் எருதுகளுடனும் கலப்பைகளுடனும் முதலில் விதைப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவரின் வயலுக்கு காலை வேளையில் வந்து சேர்ந்தனர். இருவர் விதை கடகங்களில் நெல் நிரப்பிக்கொண்டு, பிள்ளையார் கோவில் இருக்கும் திசையை பார்த்து கும்பிட்ட பின் விதைக்க ஆரம்பித்தனர். விதைப்பது என்பது ஒரு கலை. வயலின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவு நெல் விழுதல் வேண்டும். அவர்களின் கடகத்தில் நெல் முடிய முடிய, சிறியதொரு கடகத்தில் நெல் எடுத்துக் கொண்டு ஓடி ஓடிச் சென்று கணபதி அவற்றை நிரப்பி விட்டான். ஒவ்வொரு வயலிலும் நெல் விதைத்தவுடன் அந்த வயலை உழத் தொடங்கினர். இவ்வாறு முதலில் ஒவ்வொரு முறை உழுதனர். எல்லா வயல்களும் விதைத்து, உழுத பின்னர் மறுபடியும் அந்த வயல்களை மறுத்து உழுதனர். முன்னர் உழுத திசைக்கு செங்குத்தாக உழுவதை ‘மறுத்தல்’ என்று கூறுவார்கள். மறுத்து உழுவதனால் கமக்காரனுக்கு மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும். முதல் உழவில் மாடுகள் குழப்படி செய்தால் சில இடங்களில் உழுபடாத கள்ள இடைவெளிகள் ஏற்பட்டு விடும். மறுத்து உழுத போது அந்த இடமும் உழுபட்டு விடும். மறுத்து உழும் போது விதைத்த நெல் எல்லா இடங்களுக்கும் சீராக பரவி விடும். இரண்டாம் முறை உழுவதனால் மண் நன்கு உழப்பட்டு நெற்பயிர் வேரோடுவதற்கு ஏற்ப மண் இலகுவாகும் விடும். எருது பூட்டிய கலப்பைகளால் வயல்களின் மூலைகளை உழவு செய்ய முடியாது. ஆகையால் நெல்லை விதைத்தவர்கள், ஒவ்வொரு வயல்களினதும் நான்கு மூலைகளிலும் மேலும் சிறிது நெல்மணிகளை தூவி மண்வெட்டியினால் கொத்தி விடுவார்கள். விதைத்து முடிந்ததும் கணபதி தாயாருக்கு சமையல் வேலையில் உதவுவதற்காக ‘தியாகர் வயல்’ நோக்கி ஓடிவிடுவான். தாயாருக்கு பூவலில் தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பான். கிராமத்தவர்கள் முழுப் பேரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். எல்லோர் வயல்களையும் தமது வயல்கள் போல எண்ணி வேலைகளில் பங்கு பற்றுவார்கள். சமையல் முடிந்ததும் விசாலாட்சி ஒரு பெரிய மூடல் பெட்டியில் சோற்றைப் போட்டு மூடுவாள். இரண்டு சிறிய மூடல் பெட்டிகளில் கறிகளைப் போட்டு மூடி, அந்த இரு மூடல் பெட்டிகளையும் ஒரு பனை ஓலைப் பையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பாள். மூன்று, சிரட்டைகளினால் செய்த அகப்பைகளையும் பையினுள்ளே வைப்பாள். சோற்று பெட்டியை, தலையில் ஒரு சேலைத்துணியினால் செய்த திருகணை மேல் வைத்து ஒரு கையால் பிடித்துக் கொள்வாள். கணபதி கறிகள் உள்ள பனை ஓலைப் பையை கையில் தூக்கிக் கொள்வான். இருவரும் விதைப்பு நடக்கும் இடம் நோக்கி நடப்பார்கள். கணபதி பாரம் தாங்காமல் அடிக்கடி கைகளை மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு நடப்பான். விசாலாட்சி ‘தியாகர் வயலை’ விட்டு வருவதைக் கண்டதும், முத்தர் கத்தியை எடுத்துக் கொண்டு பனங்கூடலுக்கு செல்வார். வடலிகளில் குருத்தோலைகளாகப் பார்த்து வெட்டி, கொண்டு வருவார். வந்திருந்து ‘தட்டுவங்கள்’ கோல தொடங்குவார். மறக்காமல் கணபதிக்கு என்று ஒரு சிறிய ‘தட்டுவமும்’ கோலுவார். ஒருவர் பானையையும் மற்றொருவர் ‘தட்டுவங்களையும்’ தூக்கிக் கொண்டு அண்மையிலுள்ள பூவலுக்கு செல்வார்கள். தட்டுவங்களை கழுவிய பின்னர் பானையில் நீர் நிரப்பிக் கொண்டு திரும்பி வருவார்கள். கணபதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தட்டுவம் கொடுத்த பின், தனது சிறிய தட்டுவத்தை எடுத்துக் கொண்டு வருவான். விசாலாட்சி ஒரு வசதியான இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு ஒவ்வொருவராக போக, சோற்றையும் கறிகளையும் அகப்பைகளால் போட்டு விடுவாள். அவர்கள் தமக்கு வசதியான இடத்தில் போயிருந்து சாப்பிடுவார்கள். கணபதிக்கு போட்ட பின்பே ஆறுமுகத்தார் தனக்கு வாங்கிக் கொள்வார். தமிழன் கண்டு பிடித்த ஒருநாள் பாத்திரங்கள் இரண்டு. ஒன்று வாழை இலை, சில சமயங்களில் தாமரை இலை. மற்றது பனை ஓலை ‘தட்டுவம்’. பறங்கிகளைப் (Burghers) போல ஒரே தட்டை (Plates) பல காலங்களுக்கு கழுவி கழுவி பாவிக்கும் தேவை இல்லை. ( அதிகம் பேர் சாப்பிட வேண்டிய சந்தர்ப்பத்தில் பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவம்..) விதைப்பு முடியும் மட்டும் விசாலாட்சியே சமைத்தாள். இவ்வளவு காலமும் விதைப்பு காலத்தில் ஆண்களின் சமையலை சாப்பிட்டவர்களுக்கு விசாலாட்சியின் சாப்பாடு அமிர்தமாக இருந்தது. யாவரும் உறவினர்கள் என்பதனால் ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் எதனையும் எதிர் பார்க்கவில்லை. ஊருக்கு மாறி மாறி சென்று வந்த உறவினர்கள், தேங்காய்களையும் காய் கறிகளையும் கொண்டு வந்து கொடுத்தனர். வேண்டாம் என்று மறுத்த போதும் முத்தர் வற்புறுத்தி அரிசி கொண்டு வந்து கொடுத்தார். நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கின. அந்த முறை மழை அளவாக பெய்தது. பயிர்கள் வளரத் தொடங்கின. இப்பொழுது வயல்களில் நீர் சேர்ந்தது. நீர் உயர உயர பயிர்களும் உயர்ந்து வளர்ந்தன. இப்போது பயிர்களை வெட்ட’ பாலாமைகளும்’, ‘சிராய்’ ஆமைகளும் வரத் தொடங்கின. “சிராய் ஆமைகளையும்,பாலாமைகளையும் பிடித்து வெட்ட வேண்டும்.” என்று ஆறுமுகத்தார் கூறினார். உடனே கணபதி “வேண்டாம் ஐயா, ஆமைகளைப் பிடித்து சாக்கில் போட்டு, காட்டில் கொண்டு போய் விடுவோம்” என்றான். விசாலாட்சியும் “கணபதி சொல்லுவது தான் சரி. வீணாக கொல்லுவது பாவம்” என்றாள். இருவரும் சொல்வதைத் கேட்ட ஆறுமுகத்தாரும் சம்மதித்தார். ஆறுமுகத்தாரின் கதையைக் கேட்ட முத்தரும் மற்றவர்களும் தாங்களும் சாக்கில் போட்டுக் காட்டில் விடுவதென தீர்மானித்தார்கள். இரண்டு மூன்று வருடங்களாக அந்த ஆமைகளை வெட்டி தாட்டு வந்த மக்கள், கணபதியின் கருத்தைக் கேட்டு அந்த செயலைச் செய்யாது விட்டனர். கணபதி தனது கதைகளாலும், செயல்களாலும் தம்பையரை நினைவூட்டிக் கொண்டிருந்தான். அந்த வருடம் ஆமைகள் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன. அந்த கால போகத்தின் போது பன்றிக்காவல், யானைக் காவலுக்கு கணபதியையும் ஆறுமுகத்தார் கூட்டிச் சென்றார். கணபதியும் வயல் வேலை முழுவதையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆறுமுகத்தார் விரும்பினார். அந்த நாட்களில் தம்பிமாரில் ஒருவர் விசாலாட்சிக்கு துணையாக வந்து நின்றார். மற்றவர் எல்லா கிராம மக்களுடனும் சேர்ந்து காவல் கடமைக்கு சென்றார். தியாகர் வயல் காட்டின் எல்லையில் இருந்தது. அதனால் கணபதியும் ஆறுமுகத்தாரும் பட்டமரக் கட்டைகளை தூக்கி வந்து பல இடங்களில் குவித்து வைத்தனர். இரவு வந்ததும் அந்த குவியலைக் கொழுத்தி விட்டனர். அவை விடியும் வரை எரிந்து, தணல் ஆக இருக்கும். விலங்குகள் அவற்றை விட்டு விலகி ஓடி விடும். ஆனால் யானைகளும் பன்றிகளும் கூட்டமாக வேறு வழியால் வயலுக்குள் புகுந்து விடும். தாரை தப்பட்டை அடித்தும், தீப்பந்தங்களைக் காட்டியும், கூக்குரல் இட்டும் அவற்றைக் கலைத்தார்கள். கிராமத்தவர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பல இடங்களில் நின்று கலைத்தார்கள். யானைகள் இலகுவில் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டா. கலைத்தவுடன் காட்டினுள் சென்று சற்று தூரத்தில் முகாமிட்டு விடுவினம். அவை நின்ற படியே நித்திரையும் கொள்ளுவினம். தலைவனான ஆண் யானை சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும். பகலில் ஈச்சமரங்களை பிய்த்து சாப்பிடுவினம். மறுபடியும் மறுபடியும் இரவில் வயலினிலுள்ளே போக பார்ப்பினம். பெரிய பரந்தன் மக்களும் விடாது போராடினார்கள். கடைசியில் யானையிறவில் இறங்கி வடமராட்சி கிழக்கிற்கு போவினம். அங்கே நீர் நிலைகளின் அருகே அவைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரப்பம் மரங்கள் காத்திருக்கும். பிரப்பம் மரங்களின் தண்டுப் பகுதியை பிரித்து உள்ளே இருக்கும் குருத்தை சாப்பிடுவதை யானைகள் பெரிதும் விரும்பின. அந்த வருடம் யானைகளும் பன்றிகளும் பெரிய பரந்தனில் பயிர்களை அழிக்கவில்லை. வயல்களுக்கு இயற்கை பசளைகளான எரு, காய்த்த இலை, குழை என்பனவே போடப்பட்டன. ‘பச்சைப் பெருமாள்’, ‘சீனட்டி’, ‘முருங்கைக் காயன்’, ‘மொட்டைக் கறுப்பன்’ முதலிய பல வகை நெற்கள் விதைக்கப்பட்டன. ‘சீனட்டி’ என்பது குறைந்த கால வயதுடைய நெல். மேட்டுக் காரணிகளுக்கு இதனை விதைப்பார்கள். ‘மொட்டைக் கறுப்பன்’ நெல் கூடிய கால வயதுடையது. வரட்சியை தாங்க கூடியது. இவற்றை நீர் வளம் குறைந்த, வானம் பார்த்த பூமிகளிலேயே விதைப்பார்கள். பூனகரியில் பரவலாக ‘மொட்டைக்கறுப்பன்’ நெல் விதைத்தனர். பூனகரியில் விளைந்த ‘மொட்டைக் கறுப்பன்’ நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியில் சமைத்த சோறு, காய்ச்சிய கஞ்சி என்பன மிகவும் சுவையானவை. அந்த அரிசியை இடித்து பெறப்படும் மாவிலிருந்து அவிக்கப் படும் ‘பிட்டு’ அதிக சுவையுள்ளது. பயிர்கள் ஓரளவு வளர்ந்த போது களைகளைப் பிடுங்க வேண்டும். எல்லோரும் எல்லோரினதும் வயல்களையும் சுற்றிப் பார்ப்பார்கள். ஒவ்வொருவரின் வயல்களிலும் சில வயல்களில் மிக அதிக அளவில் புற்கள், களைகள் காணப்படும். நெல் வயலில் நெல்லை விட, முளைக்கும் வேறு பயிர்கள் களைகள் எனப்படும். களைகள் அதிகமுள்ள வயல்களில் களை பிடுங்கல் கூட்டாக நடை பெறும். களைகளைப் பிடுங்கும் போது வயல்கள் உழக்கப்படும். இவ்வாறு உழக்குவதால் பயிர்கள் மேலும் செழித்து வளரும். எல்லோருமாகச் சேர்ந்து எல்லோர் வயல்களிலும் உள்ள களைகளைப் பிடுங்கி முடித்து விட்டார்கள். களைகள் பிடுங்கிய வயல்களில் சில இடங்களில் பயிர்கள் அடர்த்தியாகவும், சில இடங்களில் ஐதாகவும் காணப்படும். அடர்த்தியாக உள்ள இடத்தில் உள்ள பயிர்களை களைந்து பிடுங்கி, ஐதான இடத்தில் நட்டு விடுவார்கள். களை பிடுங்குபவர்களுக்கும் விசாலாட்சியே மதியம் சாப்பாடு கொடுத்தாள். அனைவரும் உறவினர்கள். தியாகர் வயலை தாய் மனையாக நினைப்பவர்கள். இப்போது அவர்கள் வேலை செய்து களைத்திருக்கும் போது, வயிறாற உணவளித்த விசாலாட்சியை தமது தாயாக மதித்தார்கள். களை பிடுங்கும் போது வயது வேறுபாடின்றி எல்லோரும் பாட்டு பாடுவார்கள். நல்ல நாட்டார் பாடல்கள் பலவற்றை அவர்கள் பாடுவார்கள். கூட்டமாக பாடும் போது களைப்பு வருவதில்லை. முத்தர் அம்மான் குரல் வளம் உள்ளவர். அவர் பல பாடல்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர் தனியே பாடும் போது எல்லோரும் அதனை மிகவும் ரசிப்பார்கள். உறவு முறை வேறாக இருந்தாலும், எல்லோரும் முத்தரை ‘அம்மான்’ என்றே மதிப்புடன் அழைத்தனர். மனைவிமாரை பிரிந்திருந்த இளைஞர்கள், இணையை பிரிந்திருக்கும் துயரங்கள் கூறும் பாடல்களைப் பாடுவார்கள். விசாலாட்சிக்கு கேட்கக் கூடியதாக பாடமாட்டார்கள். ஆனால் கணபதி கேட்டு விடுவான். தாயாரிடம் போய் “அம்மா, ஏன் அப்படி பாடுகின்றார்கள்?” என்று கேட்பான். விசாலாட்சி அவனிடம் எதையோ சொல்லி சமாளித்து விடுவாள். ஆறுமுகத்தார் வந்ததும் “இவர்கள் ஏன் மனைவிகளை ஊரில் விட்டு விட்டு வந்து இப்படி கஷ்டப்பட வேணும்?” என்று கேட்பாள். “இவங்களில் சில பேருக்கு இந்த மாரி முடிந்து, தை மாதம் பிறக்க பெண்சாதிகளை கூட்டி வரும் எண்ணம் இருக்கு” என்று ஆறுமுகத்தார் பதில் சொல்வார். ‘கிடைச்சி’, ‘கோரை’, ‘கோழிச்சூடன்’ முதலியவை பொதுவாக காணப்படும் களைகள். கிடைச்சி மரமாக வளர்ந்து பசளையை உறிஞ்சிவிடும். கோரை பெரிதாக பூக்கள் பூத்து நெற்பயிருக்கு சூரிய ஒளி கிடைக்காது தடுத்துவிடும். நெற்பயிருக்கும் இளம் கோழிச்சூடன் புல்லிற்கும் வித்தியாசம் காண்பது கஷ்டம். எவ்வளவு தான் களை எடுத்தாலும் சில களைகள் தவறி விடும். சமையல் வேலை இல்லாத போது, விசாலாட்சி ஆறுமுகத்தாரிடம் கேட்டு அறிந்து, தங்கள் காணியில் தப்பி நிற்கும் களைகளைப் பிடுங்குவாள். கணபதியும் தாயாருடன் சேர்ந்து பிடுங்குவான். விசாலாட்சி எல்லா வகையிலும் ஆறுமுகத்தாருக்கு துணையாக இருப்பதை அவதானிக்கும் மற்றவர்கள், தை மாதம் அரிவு வெட்டு, சூடு அடித்தலின் போது தமது மனைவிகளை அழைத்து வருவது என தீர்மானித்துக் கொண்டனர். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/11/90530/ 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted November 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted November 10, 2020 நல்ல பதிவு தொடருங்கள் புரட்சிகர தமிழ்தேசியன் Link to comment Share on other sites More sharing options...
புரட்சிகர தமிழ்தேசியன் Posted November 17, 2020 தொடங்கியவர் Share Posted November 17, 2020 வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 11 பெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து குடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி வேறு சிறுவர்கள் இல்லாமல், வயதில் பெரியவர்களுடன் மட்டும் பழகுவதால் தனது இளமைக்குரிய சந்தோசங்களை இழக்கிறானே? என்று கவலைப்பட்டதுண்டு. மார்கழி மாதம் கதிர்கள் முற்றி நெற்பயிர்கள் தலை சாய்க்கத் தொடங்கின. முதலில் முத்தர் தனது மகன் கணபதிப்பிள்ளையையும் மனைவியையும் அழைத்து வந்தார். இப்போது அவனுக்கு பள்ளிக்கூடத்தில் விடுமுறை. அவன் வந்ததிலிருந்து “அண்ணா”, “அண்ணா” என்று கணபதியுடனேயே திரிந்தான். தைப்பொங்கல் முடிய அவனை கூட்டிச் சென்று, அவனது பள்ளிக்கூடம் விடும் பொறுப்பை மனைவியின் பெற்றோரிடம் விடுவதற்கு ஒழுங்கு செய்து கொண்டு வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து தான் காணி வெட்டி, வீடு கட்டிய பின், கல்யாணம் செய்து அந்த வீட்டிற்கு தனது மனைவியை கூட்டி வந்து வாழ்வது என்று முடிவு செய்திருந்த இளைஞன் தனது மனைவியை அழைத்து வந்தான். அவன் கல்யாணம் செய்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. இப்போது தான் அவனது எண்ணம் நிறைவேறியது. அடுத்ததாக தம்பையரின் ஒன்று விட்ட தமையன்மார் இருவரும், ஒன்று விட்ட தம்பியார் ஒருவரும் அவ்வாறு அழைத்து வந்தனர். ஒரு தமயனின் ஒரே மகள் பொன்னாத்தை. பொன்னாத்தை, கணபதியையும் விட மூன்று வயது மூத்தவர், கணபதிக்கு ‘அக்கா’ முறை. நல்ல சூடிகையான பெண். இன்னொரு தமையனின் மகன் வீரகத்தி, கணபதியையும் விட மூத்தவர். அதனால் ‘அண்ணன் ‘ முறை. வீரகத்தி மட்டும் தான் தகப்பனுடன் வந்திருந்தான். அவனது தாயார் சொந்த காரணத்தால் அவனுடன் வரமுடியவில்லை. தம்பையரின் தம்பியாரின் மகன் செல்லையா கணபதிக்கு ‘தம்பி’ முறை. கணபதி முதலில் பெரிய பரந்தனுக்கு வந்ததாலும், வயதில் மூத்தவர்களுடன் பழகியதால் ஏற்பட்ட பெரிய மனித தோரணையாலும், இயல்பாகவே தம்பையரிடமிருந்து வந்த தலைமை தாங்கும் பண்பினாலும் வந்த மூவருக்கும் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் மாறினான். இவர்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். மாலை நேரத்தில் அவர்களுடன் தட்டு மறித்தல், ஒழித்து பிடித்தல் முதலிய விளையாட்டுக்களை விளையாடினான். வேலை நேரத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவி செய்வதை மறக்கவில்லை. கணபதியைப் பார்த்து அவர்களும் தமது வீட்டிலும் வயலிலும் பெற்றோருக்கு உதவுவதில் ஊக்கம் காட்டினர். கணபதியில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஆறுமுகத்தார் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இளங்கன்று பயம் அறியாது. ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடும் என்று பயந்தார். எனவே கணபதி, பொன்னாத்தை, வீரகத்தி, செல்லையா நால்வரையும் அழைத்து “பிள்ளைகளே, வரம்புகளில் பாம்புகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். காட்டிற்குள் பெரியவர்கள் துணையில்லாமல் போக கூடாது. தனியன் யானை, தனியன் பன்றி மிகவும் ஆபத்தானவை. அவை தமது கூட்டத்தினால் விரட்டப்பட்டு தனியாக வாழ்பவை. காண்பவர் யாவரையும் தாக்கும் இயல்பு உள்ளவை. சில வேளைகளில் சிறுத்தைகளும் வரும். தற்செயலாக நீங்கள் காட்டிற்குள் தனியாக அகப்பட்டுவிட்டால் பயப்படக் கூடாது. பற்றைகள் இல்லாத வெளியில் உள்ள ஒரு சிறிய மரத்தில் ஏறி எல்லா திசைகளிலும் பாருங்கள். குறிப்பம் புளி மரம் தெரியும். அதை நோக்கி நடந்து வந்தால் கிராமத்திற்கு வந்து விடலாம்.” என்று கூறினார். ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்று பார்த்த முத்தர் மகனைப் பார்த்து “சின்னக்கணபதி, நீயும் கவனமாக இருக்க வேண்டும் ராசா” என்றார். முத்தர் தனது நண்பரிடம் “ஆறுமுகம், எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் எப்போது வரப் போகிறது? அப்படி ஒரு பள்ளி வந்தால் எவ்வளவு நல்லது. என்னைப் போல இன்னும் சிலருக்கு பெண்சாதிகளை கூட்டி வருவதற்கு விருப்பம். பிள்ளைகளின் படிப்பை நினைத்து தயங்குகிறார்கள்.” என்றார். தம்பையர் இருந்த போது கலியாணம் பேசி முற்றானவர், இப்போது இரண்டு சிறிய பிள்ளைகளுக்கு தகப்பன். அவரால் மனைவியை அழைத்து வர முடியவில்லை. பெண்கள் எல்லாரும் காலை தமது குடும்ப வேலைகளைச் செய்து, மத்தியான சாப்பாடு சமைத்து எல்லோரும் சாப்பிட்டு முடிய, விசாலாட்சியிடம் வந்து விடுவார்கள். விசாலாட்சி பெட்டி, நீத்துப் பெட்டி, கடகம், பாய் முதலியவற்றை பனை ஓலையில் இழைக்க பழக்குவார். அவர்களில் சிலருக்கும் சில பன்ன வேலைகள் தெரிந்திருந்தது. பொழுது பயனான முறையில் போனதோடு, தமது வீட்டிற்கு தேவையான பொருட்களையும் செய்து எடுத்துச் சென்றனர். கணபதி, வீரகத்தியுடனும் செல்லையாவுடனும் நெற்கதிர்களை சாப்பிட பகலில் வரும் காடை, கௌதாரி, புறா, மயில் முதலியவற்றை விரட்டச் செல்வான். சின்னக்கணபதியும் அவர்களின் பின்னால் ஓடுவான். ஓடி ஓடி எல்லோர் காணிகளிலும் பறவைகளை மணி அடித்தும், சத்தம் போட்டும் கலைப்பார்கள். போகும் இடங்களில் பெண்கள் இவர்களைக் கூப்பிட்டு மோர் அல்லது எலுமிச்சம் கரைசல், புழுக்கொடியல் முதலியவற்றை கொடுப்பார்கள். சிறுவர்கள் ஓட, அவர்களுக்குப் பின்னால் அவர்களது நாய்களும் குரைத்தபடி ஓடும். சிறுவர்களின் மகிழ்ச்சி பெரியவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும். இவர்களை அவதானித்த முத்தர் “இப்போது தான் எமது கிராமத்துக்கு உயிர் வந்திருக்கிறது. தம்பையர் விரும்பிய விடயங்கள் எல்லாம் நடக்கின்றன” என்று ஆறுமுகத்தாரிடம் கூறி மகிழ்வார். பெண்கள் எந்த தேவைக்கும் விசாலாட்சியிடம் வருவார்கள். தாம் ஆற்றுத் தண்ணீரில் குளித்தல் பிரச்சினை இல்லையென்றும், ஆனால் எவ்வளவு தான் தோய்த்தாலும் ஆடைகளில் ஒரு மங்கல் நிறம் நிரந்தரமாகவே வந்து விடுவதாகவும் சொன்னார்கள். ஊரில் என்றால் இடைக்கிடை ‘சலவை தொழிலாளி’ யிடம் கொடுத்தால் அவர் நல்ல வெள்ளையாக வெளுத்து வருவாரென்றும் கூறினார்கள். விசாலாட்சி இந்த பிரச்சினையை ஆறுமுகத்தாரிடம் கலந்து பேசினாள். “பெரிய பரந்தனுக்கென்று ஒரு சலவைக் தொழிலாளி குடும்பத்தை அழைத்து வந்தால் என்ன?” என்று கேட்டாள். ஆறுமுகத்தாரும் “கொல்லனாறு ஓரிடத்தில் வளைந்து பாய்கிறது. அந்த இடத்தில் அது ஆழமாகவும் அகலமாகவும் உள்ளது. அவ்விடத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அதன் தெற்கு பக்கத்தில் குஞ்சுப் பரந்தன் பகுதியில் ஒரு பற்றைக் காடு இருக்கிறது. அந்த காட்டை வெட்டி அதில் இரண்டு கொட்டில்கள் போட்டுவிட்டால் வரும் சலவைத்தொழிலாளி ஒன்றில் தங்கி, மற்றதில் உடுப்புகளை தோய்க்கலாம். அவர் காணியைத் துப்பரவாக்கி வயலும் செய்யலாம், ஆற்றில் உடுப்புகளையும் தோய்க்கலாம். காணி அவருக்கே சொந்தமாகி விடும். குஞ்சுப் பரந்தன், செருக்கன் மக்களுக்கும் அந்த இடம் கிட்ட உள்ளது. அவர்களும் அவரிடம் வருவார்கள். எதற்கும் நான் முத்தரிடமும் மற்றவர்களிடமும் கதைத்துப் பார்க்கிறேன்.” என்றார். முத்தருக்கும் மற்றவர்களுக்கும் இந்த யோசனை நன்கு பிடித்து விட்டது. முத்தருக்கும் மகனை கூட்டிச் சென்று மாமனார் வீட்டில் படிக்க விடும் வேலை இருந்தது. அது போல இன்னும் இருவருக்கும் ஊரில் வேலை இருந்தது. முத்தர் “நாங்கள் போய் எங்கள் அலுவல் முடிய, மூன்று பேரும் கல்வயலுக்கு போய் கதைத்து வருகிறோம். முடிந்தால் ஒருவரை அழைத்து வருகிறோம்” என்று சொன்னார். இளைஞர் ஒருவர், கள்ளுக் குடிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர் “என்ன முத்தர் அம்மான், எல்லோரையும் கூட்டி வருகிறீர்கள். ஒரு சீவல் தொழிலாளியையும் ஒழுங்கு செய்தால் என்ன?” என்று கேட்டார். அவருக்கு ஆதரவாக பலர் கதைத்தனர். எல்லோரும் வாய் விட்டு சிரித்தனர். அந்த இளைஞரின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முத்தர் முன்பு கட்டுப்பாடாக கள்ளு குடித்தவர் தான். இப்போது கோவிலில் பூசை செய்வதால் கள்ளு குடிப்பதையும் மச்சம், மாமிசம் சாப்பிடுவதையும் படிப்படியாக குறைத்து விட்டார். முத்தர் “சலவைத் தொழிலாளிக்கும், சீவல் தொழிலாளிக்கும் காணியை வெட்டி துப்பரவாக்குங்கள். நாங்கள் எப்படியும் யாரையாவது அழைத்து வருவோம்” என்றார். முத்தர் ஊருக்கு சென்று முதலில் தன் மகனை மாமனார் வீட்டில் விட்டார். பின் நண்பர்களுடன் மட்டுவிலுக்கும் வரணிக்கும் சென்றார். ஒரு சலவைத் தொழிலாளியையும் சீவல் தொழிலாளியையும் கண்டு கதைத்தார். முத்தர் அவர்களிடம் “உங்களுக்கு நாங்கள் குடியிருக்கப் பொருத்தமான காணிகள் பார்த்து வைத்திருக்கிறோம். காணிகளை வெட்டுவதற்கும் கொட்டில்களைப் போடுவதற்கும் உதவி செய்வோம். காணி துப்பரவாக்க தொடங்கி விட்டார்கள். உங்களுக்கு கூலியாக போகத்திற்கு போகம் நெல் தருவோம். நீங்களும் காணியைத் திருத்தி வயல் செய்யலாம்” என்று கூறினார். அவர்களும் சம்மதித்து முத்தர் திரும்ப போகும் போது, உடன் வருவதாக கூறினார்கள். அவர்கள் கூறியபடியே முத்தர் புறப்படும் நாளில் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு முதலில் வண்டில் பயணமும், பின்பு தோணி பயணமும், சுட்டதீவு துறையிலிருந்து மீண்டும் வண்டில் பயணமும் முன் எப்போதும் செய்யாத பயணங்களாக அமைந்தது. அவர்கள் பெரிய பரந்தனுக்கு போய் சேர்ந்த போது அந்த ஊர் மக்கள் எல்லோரும் கூடி நின்று அன்புடன் வரவேற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன் https://vanakkamlondon.com/stories/2020/11/91230/ Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts